16 January 2018

வேலைக்காரன்

வேலைக்காரன்
-    -  ஜே.எஸ்.கே.பாலகுமார்

எங்கள் கடையில் வேலை பார்த்த அந்த ஆக சிவந்த மனிதரின் நாமகரணம் குமரன். அவரது பெயருக்கு ஏற்ப, மூளை மிக பால்யமானதாகவே இருந்தது. அப்பாவி என்பதற்கும் மேலான ஒரு நிலை கொண்ட மனிதர். நாங்கள் நினைப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக வேலை செய்பவர்.
அவரை எங்கள் கடையில் வேலைக்கு சேர்த்துவிடுவதற்காக ஒரு நாள், அவரை அழைத்துக் கொண்ட வந்தார் அவருடைய தந்தை. என் தந்தை கண்டிப்புக்கு பெயர் பெற்றவர். அவரிடம், ‘‘உங்களிடம் வேலைபார்த்தால்தான் இவன் (திருவாளர் குமரன்) உருப்படுவான். எத்தனையோ இடங்களில் வேலைக்கு சேர்த்துவிட்டேன். உருப்பட மாட்டேங்கிறான்’’ என்றார்.
என் தந்தை எல்லோரிடம் கேட்பதுபோல், குமரனிடம் என்ன படித்திருக்கிறாய்? என்றார்.
‘‘எம்.ஏ.’’ என்று சர்வசாதாரணமாக பதில் வந்தது அவரிடம் இருந்து.
குமரனின் தந்தை அவரை முறைத்துக்கொண்டே.... கிழிச்சே என்று கூறியபடி, ‘‘10ம் கிளாஸ் பெயில் சார்’’ என்றார் பவ்யமாக.
அப்புறம் ஏன் பொய் சொன்னே என்று குமரனிடம் கேட்டார் என் தந்தை.
‘‘எப்படியும் எம்.ஏ. பாஸ் பண்ணிடுவேன்’’ என்றார் சற்றும் சளைக்காத தன்னம்பிக்கையுடன்.
‘‘சரி…. நாளையில இருந்து வேலைக்கு வந்திடு’’ என்றார் என் தந்தை.
அன்னைக்கு ஆரம்பித்தவர்தான். வேலையை விட்டு நிற்கும் வரையில் தினமும் அவர் என் தந்தையை வேலை (?) வாங்கிக் கொண்டுதான் இருந்தார்.
அன்று கடையில் செம கூட்டம். விசைத்தறியாளர்கள் கொடுத்த ஆர்டரின்படி, ரூ.10,000 மதிப்புள்ள உதிரிபாகங்களை ஒவ்வொன்றாக அலமாரிகளில் இருந்து சேகரித்து, எண்ண வேண்டியதை எண்ணியும், எடை போட வேண்டியதை எடைபோட்டு பிரித்து கட்டி, கோணிப்பையில் வைத்து பார்சலாக தைத்தோம். அதாவது நானும், இன்னொரு வேலையாளும். எல்லாம் முடிந்தது மணி ஏழு.
மாலை 6 மணி இருக்கும், என் உடனிருந்தவருக்கு ஒரு வேலை கொடுத்துவிட்டு அவர் வெளியே போய்விட்டார். குமரனும் ஏதோ ஒரு வேலைக்காக வெளியே அனுப்பப்பட்டிருந்தார். அவர் வரும் வரையில் இருந்துவிட்டு, பின்னர் வசூல் பணிக்கு செல்லுமாறு போகும்போது என் தந்தை கூறியிருந்தார்.
கடையில் நான் மட்டுமே இருந்தேன். குமரன் வந்தார். அவரிடம் கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு நான் வசூலுக்கு சென்றுவிட்டேன்.
இரவு 8 மணிக்கு திரும்பி வந்தேன். வந்தால், என் உடன் இருந்தவர், மற்றொரு வேலையாள், மேனேஜர் என் தந்தை என்று எல்லோருமே பரபரப்பாக அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நான் நுழைந்தவுடன், ‘‘இங்கிருந்த ஆண்டிப்பட்டி பார்சலை பார்த்தியா?’’ என்று கேட்டார் மேனேஜர்.
‘‘இங்கேதானே இருந்தது?’’ என்று பதில் கூறிவிட்டு நானும் அங்கு, இங்கு பார்த்தேன். அது காணவில்லை. அது கிட்டத்தட்ட 30 கிலோ எடை கொண்டது. சாதாரணமாக ஒருவரால் எளிதில் தூக்கிச் சென்றுவிட முடியாது.
நான் போகும்போது கூட அது இருந்தது. இந்த மானுடன் என்ன செய்துவிட்டானோ என்று குமரனை பார்த்தேன். அவர் எல்லோரையும் விட பரபரப்பாக கடை இருக்கும் சந்து முக்கு வரை ஓடி, ஓடி பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு தெரியாமல் எடுத்து சென்றுவிட்டார்களோ என்று எல்லோரும் பயந்தோம்.
அப்போது குமரனைப் பற்றி நன்கு தெரிந்த ஒரு வேலையாள் வசூல் முடித்துக் கொண்டு வந்தார். விஷயத்தை கூறியவுடன், பார்சலை யாரும் தூக்கிச் சென்றிருக்க முடியாது என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட ஒரு உதிரி பாகத்தை எண்ணிப்பார்த்தார். அது காலையில் இருந்த ஸ்டாக் அளவிலேயே சரியாக இருந்தது.
குமரனை கூப்பிட்டார் அந்த சக வேலையாள்.
‘‘டேய் குமரா… இங்க ஒரு பார்சல் இருந்ததா?’’, வேலையாள்.
‘‘ஆமா… இருந்துச்சு….’’ குமரன்.
‘‘நீ. . . . பார்த்தியா?’’
‘‘ஆமா… பார்த்தேன்’’
‘‘நல்லா பெருசா… கோணிப்பையில கட்டியிருந்துச்சே… அது தானே?’’
‘‘ஆமா… நல்லா பெருசா கோணிப்பையில கட்டி தைச்சு இருந்துச்சு’’
‘‘அதை என்ன பண்ணே….?’’
‘‘அதுதானே…. லாரி ஆபிஸ்ல இருந்து வந்ததை அப்படியே பொறுப்பில்லா எல்லோரும் போட்டுட்டு போய்டிங்களா…. நான்தான் பொறுப்பா அதை பிரிச்சு உரிய இடத்துல அடுக்கி வச்சுட்டேன்’’ கூலாக கூறினார் குமரன்.
சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு பொருட்கள் கிடைத்ததில் மகிழ்ச்சியா…. அல்லது அவர் கூறியதில் அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலையில் மீண்டும் பார்சல் போடும் மும்முரத்தில் இறங்கிவிட்டோம்.
இன்னொரு இனிய பொழுது.
வீடு மாறும் படலம்.
எங்கள் வீட்டுக்கு எதிரில் பால் பூத் இருந்தது. அன்று என்னவோ பால் பூத் காலை 6 மணியாகியும் திறக்கவில்லை.
வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு காபி போட்டுக் கொடுக்க பால் அவசியமாக இருந்தது. ஓடியாடி ‘வேலை’ செய்து கொண்டிருந்த குமரனை கூப்பிட்ட என் தாயார், ‘‘பால் பூத்துக்கு சென்று பால் எப்போ வரும்னு கேட்டு வாப்பா’’ என்றார்.
அவரை அனுப்பியதை தாயாரும் மறந்துவிட்டார். அதை கேட்ட நானும் வேலை பிசியில் மறந்துவிட்டேன்.
மாலை 4 மணி இருக்கும். விருந்து எல்லாம் முடிந்து ஹாயாக ஹாலில் உட்கார்ந்திருந்தோம்.
குமரன் வேர்த்து விறுவிறுக்க உள்ளே வந்தார்.
‘‘பால் நைட்டு 4 மணிக்கே அனுப்பிட்டாங்களாம். காலையில 6.30 மணிக்குள்ளே பால் வந்துடும்னு… பால் பண்ணையில அதிகாரிங்க சொல்லிட்டாங்க’’ என்று பதில் கூறினார்.
வீ்ட்டுக்கு எதிரில் இருந்த பால் பூத்தில் பால் ஏன் வரவில்லை என்று கேட்ட குமரனிடம், பால் பூத்காரர் போய் பண்ணையில போய் கேளு என்று எதார்த்தமாக பதில் கூறிவிட, அதையும் சிரமேற்கொண்டு, 10 கி.மீ. தொலைவில் இருந்த பண்ணைக்கு சைக்கிளில் போய், அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு, அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து, பதில் கூறிய குமரனை பாராட்டுவதா இல்லையா?
மனிதர் இன்னமும் யாரையோ வேலை வாங்கிக் கொண்டிருப்பார் என்று நம்பலாம்.

No comments:

கபாலிடா.... நெருப்புடா....

கபாலிடா.... நெருப்புடா.... என் அப்பாவை குறிப்பிட வேண்டும் என்றால், இப்படித்தான் பாராட்ட தோன்றுகிறது. மனிதரை பார்த்தால், மிகக்கடுமையானவ...