14 February 2018

காதலர் தினம்


காதலர் தினம்இன்றைக்கு எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்பதுதான் பிளான்.
மேத்சில் வீக் என்பதலால், அந்த டியூஷன் சென்டரில் சேர்ந்திருந்தேன். என் மாமாவின் நண்பர். வங்கி உயரதிகாரியாக இருந்தாலும், மாணவர்களுக்காக ஒரு ஆர்வத்தில் டியூஷன் எடுக்க முயன்றவர் பின்னர் அதையே பழக்கமாக்கிக் கொண்டிருந்தார் அந்த மாஸ்டர்.
இருபாலர் படிக்கும் அந்த டியூஷனில், மாணவிகள் முன்புறம் அமர்ந்திருப்பார்கள். பின்புறம் நாங்கள் இருப்போம். நண்பன் வாஜ்பாயும் இந்த டியூஷனில் ஒரு மாணவராக இருந்தார். இவரது முழிதான் இவருக்கு எப்போதுமே மைனஸ். நான் மார்க் குறைவாக எடுத்தாலும் மாஸ்டர் என்னை எதுவுமே கூறியதில்லை. ஆனால், என்னை விட கூடுதலாக மார்க் எடுக்கும் வாஜ்பாயை, ‘‘நீ எல்லாம் எங்க மார்க் எடுக்கப்போற…. உன் பக்கத்தில தானே பாலகுமார் இருக்கான அவனை பார்த்து திருந்து’’ என்று எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்து கொண்டிருப்பார். அந்த நேரத்தில் ‘ஙே’ என்றுதான் விழித்து கொண்டிருப்பேன். வேற வழி?
ஒரு நாலு நாள் வீட்டில் விசேஷம் என்பதால் டியூஷனுக்கு போகவில்லை. அன்று போயிருந்தேன்.
‘ஏன் நாலு நாலா வரல?’ மாஸ்டர் கேட்டார்.
‘பங்கஷன்னால வர முடியல சார்…..’
‘சரி…. நல்லா எழுதுற ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருந்து நோட்ட வாங்கி ‘அணி’ நோட்ஸ் எழுதிக்கோ…… இதுல இருந்துதான் 10 மார்க் கேள்வி வரும்’’ மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே அனிதாவின் பெயரையும் பரிந்துரைத்தார்.
அனிதா…. எங்கள் டியூஷனுக்கு வந்து கொண்டிருந்த தமன்னா. யாரிடமும் பேச மாட்டாள், தோழிகளை தவிர.
இவளிடம்போய் எப்படி நோட்டு கேட்பது? பெண்களிடம் பேசியே வழக்கமில்லை. மேலும், வாஜ்பாயிடம் கேட்கலாம் என்றால், அவன் கையெழுத்து, பலாப்பழத்தில் மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களை போன்று இருக்கும். ஒரு எழவும் புரியாது. மற்ற மாணவர்களிடமும் அறிமுகமும் கிடையாது. யோசிக்கிறேன்….. யோசிக்கிறேன்…. தீர்வே கிடைக்கவில்லை.
இப்படியே 2 நாட்கள் ஓடிவிட்டது.
இன்றைக்கு எப்படியாவது, அனிதாவிடம் மாஸ்டர் கூறியதை சொல்லி நோட்டை கேட்டுவிட வேண்டும் என்று டியூஷன் தொடங்குவதற்கு சற்று முன்னரே சென்றுவிட்டேன்.
டியூஷன் சென்டர் ஒரு வீட்டின் மாடியில்தான் இயங்கி வந்தது. அதற்கான படிக்கட்டு ஒரு அறையின் உள்ளே செல்வது போன்று இருக்கும்.
ரோட்டில் நான் வாஜ்பாயுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அனிதா….. வழக்கம்போல் தலையை குனிந்து கொண்டே வந்தாள். வெடுக்கென்று படிக்கட்டு இருக்கும் அறையில் நுழைந்துவிட்டாள். அவளிடம் பேச வாய் எடுத்தேன். ஆனால், காற்றுதான் வந்தது. சரி போய் தொலைகிறது. வேறு யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.
மாஸ்டர் வருவதற்கு முன்பு மாணவர்கள் எல்லோம் சாலையில் நிற்க வேண்டும். மாணவிகள் என்றால், அறையின் உள்ளே இருக்கும் படிக்கட்டில் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.
அன்று, வாஜ்பாயையும், என்னையும் தவிர வேறு மாணவர்கள் யாரும் வரவில்லை.
ஆனால், மாணவிகள் ஒரு 10 பேராவது வந்திருப்பார்கள். எல்லோரும் அறையின் உள்ளே சென்றுவிட்டார்கள்.
அனிதா உள்ளே சென்ற ஒரு சில நிமிடத்தில், மாணவிகளில் ஒரு ஜண்டிராணி கூட்டத்தை சேர்ந்த ஒருவள் வந்து, உங்களை தீபா கூப்பிடுறா என்றாள்.
ஜண்டிராணி என்னை எதற்கு கூப்பிடுகிறாள் என்று ஆச்சரியப்பட்டேன். சாதாரண பெண்களிடமே பேசுவதில்லை. இதில் ஜண்டிராணியிடம் போய் எப்படி பேசுவது? அவள் கூறியதை கண்டுக்கொள்ளாதது போல் மீண்டும் வாஜ்பாயிடம் பேச ஆரம்பித்துவிட்டேன்.
ஒரு சில நிமிடம் கழித்து மீண்டும் வந்த அவள், தீபா உங்களை கூப்பிடுறான்னு சொன்னேன்ல….. வாங்க என்று அதிகாரத்துடன் கூறிவிட்டு சென்றாள்.
அய்யய்யோ… ஏழரையோ கூட்டியிருவாய்ங்களோ…. என்று மனம் பதற ஆரம்பித்துவிட்டது. யாரிடமும் நாம் வம்பு, தும்பு செய்யவில்லையே….. ஒருவேளை அனிதாவிடம் பேச எத்தனித்தது, இவர்களுக்கு தெரிந்து வம்பு வளர்க்க பார்க்கிறார்களோ…. இப்படி ஏகப்பட்ட யோசனைகள் மனதில் வந்து செல்ல ஆரம்பித்தது.
வந்தவள்… நான் வருகிறேனா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சரி வேறு வழியே இல்லை என்று நினைத்து கொண்டு, குரு ராகவேந்திரா துணை என்று மனதில் ஜபம் செய்து கொண்டே படிக்கட்டு அறையில் நுழைந்தேன். அங்கு பாவை விளக்குபோல் ஒவ்வொரு படியிலும் ஒரு பெண் நின்றிருந்தாள். அனிதா கடைசி படியில் நின்றிருந்தாள்.
கூட்டத்தின் ஜண்டிராணி, படிக்கட்டியின் பாதியில் நின்றிருந்தாள். அந்த நேரத்தில் மனம், வர்தா புயலில் ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டதுபோல் படபடவென்று அடிக்கிறது. கழுத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேர்த்து ஒழுகுகிறது. இவ்வளவு பெண்கள் ஒரு சேர என்னை பார்த்துக் கொண்டிருக்கும், என்னவாகும்?
நான் உள்ளே சென்று நின்றதும், ஜண்டிராணிதான் என்னை பார்த்து சிரித்தாள். அவள் சிரிப்பில் கிண்டல் இருப்பது போன்ற தோரணை இல்லை. நட்புடன் சிரிப்பது போன்று இருந்தது.
‘என்னங்க?’ என்றேன்.
ஜண்டிராணிதான் பேசினாள்.
‘‘ஏங்க….. சொல்றதுன்னா நேரிலேயே சொல்ல வேண்டியதுதானே….. லெட்டர்ல எல்லாம் ஏன் சொல்றீங்க?’’ கேட்டாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்லணும் என்கிறாள். என்ன லெட்டர்?
சற்று தைரியம் வரவழைத்துக் கொண்டே, ‘என்ன லெட்டர்ங்க?’’ என்றேன்.
‘‘ஒண்ணுமே தெரியாதாக்கும்… லவ் லெட்டர் அனுப்பிட்டு தெரியாததது மாதிரி முழிக்கிறதை பாரு’’ என்றாள்.
ஓ….. அம்மணிக்கு யாரோ லெட்டர் அனுப்பி இருக்காங்க…. அதை நான் தான் அனுப்பியிருக்கேன்னு நினைச்சு பேசுகிறாள் என்று புரிந்தது.
எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது என்று தெரியவில்லை. அவளிடம், ‘‘ஹலோ…நானெல்லாம் லெட்டர் அனுப்பலை. எனக்கு அந்த பழக்கம் எல்லாம் கிடையாது’’ என்றேன்.
‘‘அப்ப இத யார் அனுப்பினது’’ என்று ஒரு லெட்டரை எடுத்து காண்பித்தாள்.
அது கிறுக்கல் எழுத்தில் ஐ லவ் யூ என்று போட்டிருந்தது.
‘‘ஹலோ இது என்னுடைய கையெழுத்து இல்லை…..’’ நீங்க மாஸ்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுங்க என்று கூறிவிட்டு, யாரையும் ஏறெடுத்து பார்க்காமல் மீண்டும் வாசலுக்கு வந்துவிட்டேன்.
நான் இல்லை என்று தெரிந்ததும் ஜண்டிராணி, அன்று டியூஷன் முடிந்ததும் மாஸ்டரிடம் கம்ப்ளைண்ட் பண்ணிவிட்டாள். தான் ஆராய்ந்து வைப்பதாக கூறிய மாஸ்டர், என்னைப்பற்றி நல்லவிதமாகவும் கூறியுள்ளார்.
அந்த லவ் லெட்டர் வந்திருந்த காகிதம் இரண்டுகோடு போட்ட ஒரு நோட்டில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம்.
அந்த காகிதத்தை பார்த்தபோது இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே… என்று நினைவுப்படுத்தி பார்த்தும் ஞாபகத்துக்கு வரவில்லை. அதனால் அந்த விஷயத்தை அப்படியே மறந்துவிட்டேன்.
சுமார் ஒரு வார காலத்துக்கு பின்னர், அதேபோல் ஜண்டிராணியும், அவளது தோழிகளும் வந்திருந்தார்கள். வழக்கம்போல் தோழி வந்து அழைத்தாள். இம்முறை சற்று தைரியம் வந்துவிட்டதால், பயமின்றி உள்ளே போனேன்.
ஜண்டிராணி தான் பேசினாள். ‘‘சாரிங்க…. நீங்க தான் எழுதியிருப்பீங்கன்னுதான் சார் கிட்ட முதல்ல கம்ப்ளைன்ட் பண்ணல. அந்த லெட்டரை என் நோட்டுல இருந்ததை பார்த்தேன். அது எழுதினது….. என் டியூஷனில் இருக்கும் ஒரு மாணவனின் பெயரை கூறினாள்’’
அப்போதுதான் பளீச்சென்று ஞாபகத்துக்கு வந்தது. அந்த மாணவன்தான் அந்த ரெண்டு கோடு போட்ட நோட்டை பயன்படுத்துவான்.
‘‘சார்தான் கரெக்டா கண்டுபிடிச்சு, அவனை பிடிச்சு சரியா திட்டிட்டார்…. அதனாலதான் அவன் டியூஷனுக்கு வர்றதில்லை’’ என்றாள்.
‘சரிங்க’’ என்றேன்.
‘‘ஆனா…. அந்த லெட்டரை நீங்க குடுத்திருக்கலாம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
அனிதாவிடம் நோட்டு வாங்குவதை கெடுத்ததும் இல்லாமல், பாவி…. மக்கா….. இவளுக்கு லெட்டர் வேறு குடுக்கணுமாம்ல……
நரநரவென்று பல்லைக் கடித்துக் கொண்டேன்.
காதலர் தினத்தில் நடந்த இந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் கொல்லென்று சிரிப்பு வந்துவிடும்.

No comments:

கபாலிடா.... நெருப்புடா....

கபாலிடா.... நெருப்புடா.... என் அப்பாவை குறிப்பிட வேண்டும் என்றால், இப்படித்தான் பாராட்ட தோன்றுகிறது. மனிதரை பார்த்தால், மிகக்கடுமையானவ...