10 March 2018

ஓரம் போ… ஓரம் போ…


ஓரம் போ… ஓரம் போ…

எல்லோருக்குமே சுய சம்பாத்தியத்தில் வாங்கும் முதல் வாகனத்தின்போது இருக்கும் மகிழ்ச்சி என்பது, பின்னாளில் கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கும்போது கூட இருக்காது. என் வாழ்க்கையிலும் அது நடந்திருக்கிறது.
பத்திரிகை துறையில் வேலைக்கு சேர்ந்து 6 மாத காலம் ஆகியிருக்கும். எப்படியாவது ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்பது பேராவலாக இருந்தது. ஆனால், என்னுடைய சம்பளம் அப்போது மாதம் ரூ.1,200. எப்படியோ மூன்று மாதங்கள் சேமித்து வைத்திருந்தேன்.
இந்த பணத்தில் ஒரு செகண்ட் ஹேண்ட் வாகனத்தைதான் வாங்க முடியும். அதுவும் பாழாகிப்போன வாகனத்தைதான் வாங்க முடியும். ஆனால், எப்படியாவது ஒரு வாகனத்தை வாங்கிவிட வேண்டும் என்பது வெறியாகவே இருந்தது.
நண்பன் சிவக்குமாரின் மொபெட் மீது எனக்கு ஒரு கண் இருந்தது. அவன் ஓட்டியது லூனா. 10 ஆண்டு பழசு என்றாலும் கூட, புத்தம் புதிது போன்று வைத்திருப்பான். ஒரு லிட்டருக்கு 20 கி.மீ.தான் கொடுக்கும். வசதியுள்ள பையன். என்னிடம் மட்டும்தான் பள்ளிக்காலத்தில் பழகுவான்.
ஒரு நாள் மெதுவாக அவனிடம் கேட்டேன். வண்டியை எனக்கு விற்கிறாயா என்று? அவன் முதலில் 4 ஆயிரம் ரூபாய் என்றால், அப்பாவிடம் பேசுகிறேன் என்றான். ஆனால், என் நிலைமை கூறி, 3 ஆயிரம் ரூபாய் என்றால் மட்டுமே என்னால் வாங்க முடியும் என்றேன்.
எனக்காக அவனது தந்தையிடம் பேசுவதாக கூறிவிட்டு சென்றான். அன்று இரவு முழுக்க தூங்கவில்லை. லூனாவில் பறந்து கொண்டிருப்பதுபோன்றுதான் கனவு.
அந்தக் காலத்தில் செல்போன் எல்லாம் இல்லை. எல்லாமே நேரில்தான். மறுநாள் சைக்கிளில் அவன் வீடு நோக்கி விரைந்தேன். எங்கேயோ சென்றிருந்தவன், சற்று தாமதமாக வந்தான்.
அவனிடம் ரிசல்ட் என்ன என்பதுபோல்…. பார்த்தேன்.
‘‘அப்பா…. 3,500 ரூபான்னா குடுக்கச் சொல்றார்’’ என்றான்.
எனக்கு அப்படியே உள்ளே நொருங்குவது போல் இருந்தது. அவன் கேட்ட தொகை வரவேண்டும் என்றால் மேலும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.
என்னுடைய கவலை அவனுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
‘‘சரி அப்பாக்கிட்ட இன்னொரு தடவை கேட்கிறேன்..... ஆனா 3000 ரூபாய்க்கு கீழே கேட்டுதாதே என்றான்.
‘‘இல்லை….. இல்லை…. கேட்க மாட்டேன்’’ சந்தோஷத்துடன் வாக்களித்தேன்.
இரண்டு நாள் கழித்து அவனே வீட்டுக்கு வந்தான்.
‘‘அப்பா குடுக்கச் சொல்லிட்டார். வந்து எடுத்துட்டு போ… ஆனா ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கி.மீ. தாண்டி ஒரு அடி கூட நகராது. தெளிவா சொல்லச் சொன்னார். அப்புறம், அது சரியி்ல்ல…. இது சரியில்லன்னு சொல்லக்கூடாது சரியா?’’ என்றான்.
லாட்டரியில் பம்பர் பிரைஸ் அடித்தது போல் இருந்தது.
உடனடியாக வீட்டில் என்னுடைய பெட்டியில் வைத்திருந்த 3,000 ரூபாயை எடுத்துக் கொண்டு அவனுடனேயே வீட்டுக்கு சென்றேன்.
அங்கு வண்டியை நன்றாக பளபளவென்று துடைத்து வைத்திருந்தான்.
அவன் அப்பா… எப்போதுமே கடுகடுவென்று இருப்பார். அதனால் நண்பனிடமே கொடுத்துவிட்டு, வண்டியை வெளியே எடுத்து வந்தேன். அப்பா… ரெண்டு லிட்டர் பெட்ரோல் போட்டு வச்சிருக்கார்…. தீர்ந்தவுடனே போட்டுக்க… இப்போ போட வேண்டியதில்லை என்றான் நண்பர்.
நண்பனின் கடுகடு தந்தையின் மனதில் இருந்த மென்மையான மனது இன்னமும் சந்தோஷத்தை அதிகரித்தது.
சாலைக்கு கொண்டு வந்து ஒரு பெடலை அழுத்தி ஸ்டார் செய்து, லூனாவில் அமர்ந்தபோது….. வந்ததே ஒரு சந்தோஷம்!
வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் வாகனம். இன்னமும் மனதில் கர்வத்தை வரவழைக்கிறது.
பெட்ரோல் போட முடியாமல் அதை ஓரத்தில் வைத்திருந்தபோதும் கூட, இன்னமும் எங்காவது லூனாவை பார்த்தால் மனது காதலியை பார்த்த காதலனாகிவிடுகிறது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்


No comments:

கபாலிடா.... நெருப்புடா....

கபாலிடா.... நெருப்புடா.... என் அப்பாவை குறிப்பிட வேண்டும் என்றால், இப்படித்தான் பாராட்ட தோன்றுகிறது. மனிதரை பார்த்தால், மிகக்கடுமையானவ...