27 February 2019

என் இனிய தமிழ் மக்களே




என் இனிய தமிழ் மக்களே!

வானம்பொய்த்துக் கொண்டுபெய்யும்போல் இருந்தது. கீழ்வானத்தில் மேகம் கரிக்கடை சுவர்போல இருண்டு கிடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மனைவிக்கு காலையில் இருந்து  இலேசாக இடுப்பு வலி இருந்ததால்,மேய்ச்சலுக்கு லட்சுமியை அழைத்துச் செல்லாமல், அறுவடைதான் முடிந்து பூமி எல்லாம் சும்மாதானே கெடக்கு என்ற தைரியத்தில் அப்படியே கழட்டிவிட்டுவிட்டான் சுந்தரம். அதுதான் இப்போது வினையாக தோன்றியது. வீட்டு கூரையின் கீழே உட்கார்ந்து கொண்டு  வானத்தை அண்ணாந்து பார்த்தவனின் மூக்கின் நுனியில் ஒரு மழைத்துளி பொட்டு வைத்தது.
‘‘வானம் நல்லா பொழியும்போலிருக்கே… இந்தநேரம் பார்த்து லட்சுமியை கழற்றி விட்டிருக்க கூடாது… இப்போ அது எங்கேபோய்மேயுதோ…’’ கவலையுடன் அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினான்.
‘‘ஏலே… சண்முகம்… நீ அண்ணிக்கூடவே இரு. நான் லட்சுமியை பத்திட்டு வந்துடுறேன்.வேத்தாள்போன அது முட்டுது…’’ என்று சொல்லிவிட்டு, கிழக்கே பசு மாட்டைதேடி ஓடினான்.
அதுவரை இங்கொன்றும், அங்கொன்றுமாக தூவிக்கொண்டிருந்த வானம், கண்டக்டர் விசிலுக்கு கிளம்பும் பஸ்போல‘ஜோ’வென்றுபெய்ய ஆரம்பித்தது.
வயலில் ஓடிக்கொண்டிருந்த சுந்தரத்துக்கு நிற்பதற்கு நேரமில்லை. இடுப்பில் புல்லருக்கும் அறுவாளை கட்டியிருந்த துண்டை எடுத்து தலையில் முண்டாசு போட்டுக் கொண்டான். பிறை அறுவாளை எடுத்து இடுப்பில்சொருகிக்கொண்டு விரைந்தான்.
‘‘ஏற்கனவே சளிப்பிடித்து ஒழுகிக்கிட்டு இருந்தது. மழையில நனைஞ்சா அப்புறம்ரெண்டு நாளைக்கு பால் தராது. சனியன் எங்கேபோய் நிக்குதோ…’’ முனகிக்கொண்டே ஓடினான்.
பெய்யாமல்பெய்த மழையுடன் காற்றும் கை கோர்த்திருந்ததால், சுழன்று, சுழன்று அடித்தது. பத்தடி தூரம் கூட சரியாக தெரியவில்லை.
‘‘லட்சுமி… லட்சுமி…’’ குரல் கொடுத்து கொண்டே ஓடினான்.
மலையின் கீழ் ஈச்சமரத்தின் ஒன்றின் அடியில் ஒதுங்கியிருந்த லட்சுமி, எஜமானனின் குரலைக்கேட்டதும், ‘‘ம்..ம்மே…’’ என்று கத்தியது.
‘‘இங்க ஒதுங்கியிருக்கியா… வா… வா…’’ என்று மூக்கணாங்கயிற்றை பிடித்து இழுத்தான்.
அவன் இழுப்புக்கு லட்சுமி வராமல் நின்றதை கண்டுகோபமடைந்த சுந்தரம், ‘‘என்ன சனியனே… சீக்கிரம் வா… வீட்டுக்குபோகணும்…’’ என்று மறுபடியும் இழுத்தான்.
லட்சுமி காலை எடுத்துவைக்க முடியாமல் மீண்டும் ஈனஸ்வரத்தில் ‘அம்ம்ம்மே…’ என்று கத்தியது.
அப்போதுதான் அதன் காலில் அடிபட்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
காலில் யாரோ அடித்ததைபோன்று, நல்ல அடி பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம், மழை நீருடன் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்த மாத்திரத்தலேயே பதறிவிட்டான்.
‘‘அய்யோ… இது எப்படி ஆச்சு, எவன்தோட்டத்திலாவது போய் மேஞ்சியா…’’ அதற்கு புரியுமா, புரியாதா என்ற கவலை எல்லாம் இல்லாமல் சஜகமாக பேசினான். ஈச்ச மரத்தின் கீழ் நன்கு ஒதுங்கி நிறுத்தி, அதன் காலை மெதுவாக துடைத்துவிட்டான். மெல்ல கை வைத்ததற்கே லட்சுமி கத்தினாள்.
‘‘அடி பலமாத்தான் இருக்கும் போலிருக்கு…’ மனதில் நினைத்துக் கொண்டான். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, அதன் காலில் கட்டாக கட்டிவிட்டான்.
மழை கொஞ்சம் கூட நிற்காமல், சித்தியிடம் சூடுபட்டபெண் அழுவதுப்போல பொல,பொலவென்று பெய்துக் கொண்டே இருந்தது. லட்சுமியை மரத்தில் கொஞ்சம் கயிற்றை இழுத்துவிட்டு கட்டிவிட்டான். தந்தியடித்துக் கொண்டிருந்த பல்லுடன்,தோளில் கை வைத்து குத்த உட்கார்ந்தான்.
தூரத்தில் ஒரு உருவம் ஓடி வந்துக் கொண்டிருப்பது நிழலாக தெரிந்தது. அருகில் நெருங்க,நெருங்க, அது சித்தப்பன் மகன் சுடலை என்று தெரிந்தது.
இவன் எதுக்கு இந்த மழையில இப்படி ஓடியாரான் என்று நினைத்துக்  கொண்டிருந்த நேரத்தில், ‘‘ஏலா… சுந்தரா, உன் மேட்டு நிலத்து வரப்பை வொடைச்சு, மாரியப்பய தன் நிலத்துக்கு தண்ணீரை எறக்கிட்டு இருக்காம்லே, சீக்கிரம் போய் பாருலே’’ என்று சொல்லிவிட்டு சுடலை மூச்சு வாங்கினான்.
‘‘அட வேசி மவனே… அவனுக்கு அவ்வளவு தைரியம் ஆகிப்போச்சா… சுடலை லட்சுமி எங்கோ கால ஒடிச்சுட்டு வந்து நிக்கு. அதை பார்த்து வீட்டுக்கு பத்திட்டுப்போ. நான் மாரியப்பயல ஒரு கை பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு நிலத்துக்கு விரைந்தான்.
‘‘மழையில்லாம காஞ்சு கிடக்கிற பூமியில, வராம வந்த மழையில ஒரு எத்து எடுத்துரலாம்னு பார்த்தா, கொள்ளியிலபோற மாரி, தண்ணீய தன் நிலத்துக்கு எடுத்துட்டுபோறானாமே! அது பார்த்துட்டு நிற்கிறதுக்கு நான் என்ன கேணக்கிறுக்கனா…’’ மனதில் புலம்பியபடியே ஓடினான்.
சுடலை சொன்னபடியே,மேட்டில் இருந்த தன்னுடைய நிலத்தில் விழுந்த மழை நீரை வரப்பை  உடைத்து தன்னுடைய நிலத்தில் திருப்பிக் கொண்டிருந்தான் மாரி. பார்த்தவுடனேயே பற்றிக்கொண்டு வந்தது.
‘‘எல… மாரி நீயெல்லாம் உங்கப்பன் ஈத்துக்கு பிறந்த பய தானா? என் நிலத்தில வடியிற மழையை உன் நிலத்துக்கு  எடுத்துக்கிறியே… இது பதிலாக உன் பொஞ்சாதி முந்தாணய விருந்தாளிக்கு  விரிச்சு சம்பாதிக்க வேண்டியது தானே?’’ வாயிலிருந்து தீப்பிழம்புகளை தடவிய வார்த்தைகளை கொட்டினான் சுந்தரம்.
‘‘ஏண்டா…கொண்ணப்பயல, எங்கப்பன் ஈத்தையா பேசுர, உங்காத்தா தாண்டா உன்ன அப்படிபெத்திருப்பா. அதனாலத்தான் வார்த்த அப்படி வருது…’’ தப்புசெய்ததும் இல்லாமல் எதிர்த்து பேசினான் மாரி.
வந்த ஆத்திரத்தில் இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்து மாரியை வெட்டச்சென்றான் சுந்தரம். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மாரி, அவனது அரிவாளை எடுத்து சுந்தரத்தின் கழுத்துக்குபோட்டான். அதை தடுக்க முயன்றதில், சுந்தரத்தின் கையில் பெரும் வெட்டு விழுந்தது. அங்கிருந்து ரத்தம் குபீர் என்று பீறிட்டு கிளம்பியது. ரத்தத்தை பார்த்த மாரி, விழுந்தடித்து ஓடினான்.
சிறிது தூரம் வரை அவனை துரத்திக்கொண்டு ஓடிய சுந்தரத்துக்கு, தலையில் கிர்ர்ர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. கிறக்கத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
அந்த சோர்விலும் ஒடிக்கப்பட்டிருந்த வரப்பை ஒற்றை கையால் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். தொடர்ச்சியான மழையில் அவன் ஏற்றிவிட்ட மணல் கரைந்து ஓடியது. மயக்கத்தில் கிறங்கினான்.
எங்கிருந்தோ, ‘‘அண்ணே… அண்ணே…’’ என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் சண்முகம்.
சுந்தரத்தின் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தையும், அவனது நிலையையும் பார்த்து, ‘‘அண்ணே… என்னாண்ணே… இது கையில ரத்தம் ஆறா ஓடுது…’’ பதறினான்.
‘‘ஒண்ணுமில்லடா… ஒரு மாரியப்பயலோட சின்னத்தகராறு... அது சரி, உன்ன அண்ணிக்கு துணையாத்தானே இருக்கச் சொன்னேன், நீ எதுக்கு வந்தே?’’
‘‘அதச்சொல்லத்தாண்ணே வந்தேன்… அங்க அண்ணி பிரசவ வலியால துடிச்சிட்டு இருக்காங்க… உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்தேன். பக்கத்துவீட்டு பாட்டிய உட்கார வச்சுட்டு வந்தேன்’’ என்றான்.
சுந்தரத்தின் கையில் வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இன்னமும் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
‘‘சரி நீ முன்னாலபோய், ஆத்தாவை வீட்டுக்கு கூட்டியாந்துடு… நான் வீட்டுக்குப் போறேன்’’
‘‘அண்ணே… உன்ன இப்படியே விட்டுட்டுபோறதா, வாண்ணே… உன்னை வீட்டு விட்டுட்டு, நான்போய் ஆத்தாவை கூட்டியாரேன்’’
‘‘நீபோடா முதல்ல… நான் எந்திரிச்சு போயிருவேன். சீக்கிரம் நீ போய் ஆத்தாவை கூட்டியா’’ என்று விரட்டிவிட்டான்.
திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனான் சண்முகம்.
கையை மடக்கிக் கொண்டு, நிலத்து நீரை  தடுக்க அவகாசம் இல்லாததால், அப்படியே எழுந்து வரப்போரத்திலேயே வீட்டை நோக்கி நடந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், கண்கள் இருண்ட மாதிரி இருந்தது.
மழை நின்றுபோய் இருந்தது.
தூரத்தில் வீடு தெரிந்தது. இதோ எட்டு தூரம்… போய்விடலாம் என்று நம்பிக்கையுடன் நடையில் கொஞ்சம் வேகம் காட்டினான். வீட்டுக்கு சிறிது தள்ளி தார்பாய் போட்டு மூடி வைத்திருந்த வைக்கோல் போரில் இருந்து புகு, புகுவென்று புகை வந்துக் கொண்டிருந்தது.
மனதில் பக் என்றாகிவிட்டது சுந்தரத்துக்கு. ‘வைக்கோல் போர் பற்றிக் கொண்டுவிட்டதோ’ பதற்றத்துடன் இன்னும் வேகமாக நடந்தான்.
நிஜம்தான்.வைக்கோல் போர் பற்றிக்கொண்டு எரிந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மாரி ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
‘‘எலேய் என் ஈத்தையா பேசுற, நீ எப்படிபொளப்பு நடத்துறேன்னு நானும் பார்த்திடுவேம்ல’’சொல்லிக் கொண்டே ஓடினான் மாரி.
புரிந்துவிட்டது சுந்தரத்துக்கு. அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தார்பாயை எடுத்துவிட்டு மாரி, வஞ்சத்தில் தீவைத்திருக்கான் என்று.
முன்பைக் காட்டிலும், கண்கள் மேலும் இருள ஆரம்பித்தன.கொஞ்சம் வாய்க்கு தண்ணீர் கிடைத்தால் தேவல என்பதுபோல் இருந்தது. தூரத்தில் மனைவி பிரசவ வலியால் துடிக்கும் சத்தம் கேட்டது. அப்படியே கீழே விழுந்துவிட்டான். விழுந்த சமயத்தில் காலில் சுருக்கென்று,கொள்ளிக் கட்டையை சொருகியது போன்று இருந்தது.
‘‘அம்மா… ’’என்று வலியில் துடித்துக் கொண்டே கீழே பார்த்தான். வரப்பில் ஒரு பாம்பு ஓடிக் கொண்டிருந்தது.
‘‘இறைவா… இன்னைக்கு யார் முகத்தில நான் முழிச்சேன்… என் பொஞ்சாதிய காப்பாத்து, மீண்டும் மழைபெய்ய வச்சு வக்கப்போர காப்பாத்து… கடைசியா யாரையாவது அனுப்பி என்னையும் காப்பாத்து…. காப்பாத்துப்பா… காப்பாத்து…’’ முனகிக் கொண்டே தலையை தரையில் கவிழ்த்தான் சுந்தரம்.
‘‘கட்… கட்… எழுத்தாளரே… கதை எல்லாம்ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா… கிராமத்து பக்கமா இருக்கு… அதனால, நல்லா…யோசிச்சு… ஒரு மார்டர்னா… நகரத்து கதையா கொண்டாங்க…’’சொல்லிவிட்டு ஆப்பிள் ஜூசை சாப்பிட ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.
தொண்டை தண்ணீ வற்ற, சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற ஆசையில் கதை சொல்லிய, சுந்தரம் என்கிற, துணை இயக்குநராகிய நான், குடிக்க, தண்ணீர் கூட இன்றி, நா வறண்டு அடுத்த தயாரிப்பாளர் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment

Thanks