10 March 2019

நுாறு சாமிகள் இருந்தாலும்…


‘‘போம்மா எப்ப பார்த்தாலும் நீ இப்படித்தான் சொல்லுறே…’’ புலம்பினான் குமரன்.
‘‘இல்லப்பா… 20 தேதி ஆயிடிச்சில்ல… அம்மாவுக்கு இப்ப யாரும் பணம் தர மாட்டாங்கப்பா… உனக்கு இன்னொரு நாளைக்கு நல்ல நெய், முந்திரி போட்டு சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் செஞ்சுத்தர்றேன் என்னா…?’’ ஆற்றாமையுடன் கூறினாள் வீட்டு வேலை செய்யும் சிவகாமி.
எலக்ட்ரீஷியனா வேலை பார்த்து வந்த புருஷன்காரன் பிரபாகர், ஒரு விபத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துபோக, அன்றிலிருந்து ஆரம்பித்தது கஷ்டக்காலம். 4 வயது குழந்தையுடன் தனியாக நின்ற சிவகாமியை உறவினர்களும் கைவிட, வேறு வழியின்றி வீட்டு வேலை செய்து குழந்தையையும் தன்னையும் பாதுகாத்து கொண்டு வருகிறாள். ஒரு நாள் உடம்புக்கு முடியாவிட்டாலும் கூட, சம்பளம் கிடைக்காது. அதனால் விலா எலும்பே ஒடிகிற அளவுக்கு சுண்டி வலித்தாலும், வேலைக்கு போவதை வழக்கமாகிக் கொண்டுவிட்டாள்.
இப்போது குமரன் 4வது படிக்கிறான். பெரிய அளவில் இல்லாவிட்டால் கூட ஒரு சாதாரண மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தாள் என்றாலும் கூட, செலவு பிய்த்துக் கொண்டு போனது. வீட்டில் இருந்த கொஞ்சநஞ்ச தங்கமும் இந்த 3 வருஷத்தில பீ்ஸ் கட்ட சரியாகிவிட்டது.
குமரனுக்கு நாளைக்கு  பிறந்தநாள். வழக்கம்போல் அவன் கேட்பானே என்று கூடைப்பிண்ணிக் கொடுத்ததில் கிடைத்த தொகை மூலம் ஒரு ரெடிமேட் வெள்ளை சட்டை வாங்கியிருந்தாள். யூனிபார்முக்கு ஆச்சு, புது சட்டையும் ஆச்சு என்ற ஒரு ஆறுதல்தான்.
குடும்ப கஷ்டம் தெரியுமளவுக்கு குமரனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை.
‘‘போன வருஷம் ஒரு தடவை, அய்யர் மாமி வீட்ல இருந்து கொண்டு வந்த பாரு…. அந்த மாதிரி சர்க்கரை பொங்கலும், வெண்பொங்கலும்தானே கேட்கிறேன். பர்த்டே அன்னைக்கு என்ன ஸ்பெஷல் வீட்டுலன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் கேப்பாங்க… நீ என்னடான்னா… நாளைக்கும் அதே பழைய கஞ்சின்னு சொல்லுறியே… போம்மா என் கூட பேசாத….’’ என்று கண்ணில் நீருடன் படுக்கையில் தலையணையை சற்று போட்டுக் கொண்டு படுத்துவிட்டான்.
அவன் கண்ணில் லேசாக துளிர்த்த நீரைப்பார்த்த உடனேயே பக் என்றாகிவிட்டது சிவகாமிக்கு.
‘‘இறைவா இந்த பச்சப்புள்ளை கேட்கிற ஒரு சாதாரண உணவை கூட செஞ்சுக்குடுக்க முடியாத நிலைக்கு என்னை தள்ளிட்டீயே… நான் என்ன  செய்வேன்… கையில இருக்கிறதே, 200 ரூபாய்தான். இன்னும் பத்து நாளைக்கு இதை வச்சு சமாளிக்கணுமே…’’ மனதில் ஏற்பட்ட ஆற்றாமை கண்ணில் நீராக வழிந்தது.
துடைத்துக் கொண்டே, அரிசி பானையை எடுத்துப் பார்த்தாள். 10 நாளைக்கு வருமா, வராதா என்ற அளவில் ஒட்டிக்கிடந்தது ரேஷன் அரிசி.
‘‘ரேஷன் கடையில காலையில கூட கேட்டேனே, ஒரு கிலோ பச்சரிசி போடுய்யான்னு… மாசக்கடைசியில எல்லாம் போட முடியாது போ… போன்னு விரட்டிட்டானே… காலையில எழுந்தவுடனே புள்ளய எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே… இறைவா… அடுத்த ஜென்மத்திலாவது புள்ளைங்க கேட்கிற எல்லாத்தையும் ஆக்கிப்போடுற அம்மாவா படச்சிடு… இப்படி கொழந்த கேட்கிறத கூட வாங்கத்தர முடியாத ஜென்மமா படச்சுடாதே…’’ மனதில் பொருமினாள்.
இங்கும், நடந்து யோசித்தும் எந்த யோசனையும் பிடிபடவில்லை. குமரனுக்கு அருகில் வந்து அவனுக்கு போர்த்திவிட்டு, தனக்கு போர்த்திக் கொண்டு படுத்தாள்.
ஆனால், தூக்கம்தான் வரவில்லை.
அப்படி படுத்துக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சுவற்றில் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்த காலண்டர் கண்ணில் பட்டது. மனதில் சட்டென மின்னல் தோன்றியதுபோல், பளிச்சென்று யோசனை தோன்றியது. நிம்மதியாக தூங்கினாள்.
காலையில் 5 மணிக்கு எல்லாம் முழிப்பு வந்து எழுந்துக் கொண்டாள். அவசர, அவசரமாக வீட்டை பெருக்கி குளித்துவிட்டு கிளம்பினாள்.
திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் பிடித்து மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வந்து இறங்கினாள். காலண்டரில் பார்த்ததுபோன்றே சாய்பாபா அமர்ந்திருந்தார்.
தரிசனம் முடிந்துவிட்டு, பிரசாதத்துக்கு வரிசையில் நின்றாள். வியாழக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சர்க்கரைப் பொங்கலை, குழந்தைக்கும் என்றுக் கூறி ரெண்டு தொன்னை வாங்கிக் கொண்டாள்.
அதை அப்படியே பையில் வைத்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள். எதிர்பார்த்ததுபோலவே, எட்டு மணிக்குப்பின்னர் சர்க்கரைப் பொங்கலை நிறுத்திவிட்டு வெண்பொங்கல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதை விநியோகிக்க வேறு ஆள் உட்கார்ந்ததும், சிவகாமிக்கு தோதாக போய்விட்டது. மீண்டும் வரிசையில்போல் ரெண்டு தொன்னை வாங்கிக் கொண்டாள்.
இது குழந்தைக்கு பத்தாதே என்ற எண்ணம் தோன்றியது.
மீண்டும் ஒரு முறை வரிசையில் நின்று வாங்கப் போனாள். விநியோகித்து கொண்டிருந்த ஆள் அடையாளம் கண்டுக் கொண்டுவிட்டான். ‘‘ஏம்மா… இது பிரசாதம்னு நினைச்சியா… டிபன்னு நினைச்சியா… ஒரு தடவைதான் வாங்கணும்… போம்மா… போம்மா…’’ என்று விரட்டினார்.
அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தன்னையே பார்க்கவே கூனி, குறுகிவிட்டாள்.
பின்னால் வந்த ஒரு பெண் ரெண்டு தொன்னையில் பொங்கலை வாங்கிக் கொண்டு, முன்னே தளர்ந்து சென்றுக் கொண்டிருந்த சிவகாமியிடம் வந்தாள்.
‘‘இந்தாம்மா… இந்த பொங்கலையும் வாங்கிக்கோ…’’ என்று ரெண்டு தொன்னையையும் நீட்டினாள் அந்த பெண்.
‘‘வேண்டாம்மா…’’ என்று சங்கோஜப்பட்டாள் சிவகாமி.
‘‘நிச்சயமா நீ பொங்கலை உனக்காக வாங்கல… அது மட்டும் நல்லாத்தெரியுது… உன் குழந்தைக்கோ, இல்லாட்டி வேறு யாருக்கோத்தான் வாங்குறே… உனக்கு உதவுறதில எனக்கு சந்தோஷம் தான். வாங்கிக்கோம்மா… எந்த சங்கோஜமும் வேண்டாம்…’’ கையில் திணித்தார் அந்த பெயர் தெரியாத சகோதரி.
அப்போதைக்கு அந்த பெண் தெய்வமாக தெரிந்தார்.
‘‘ரொம்ப நன்றிம்மா…’’ மனதார கூறினாள் சிவகாமி.
பொங்கலை பையில் வைத்துக் கொண்டு அவசர, அவசரமாக மீண்டும் ரயில் பிடித்து திருவல்லிக்கேணி வந்து வழியிலேயே குப்பம்மாள் கடையில் ஒரு சாம்பார் பாக்கெட்டையும், ஒரு கப் டீயையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
மணி எட்டே முக்கால் ஆகிக் கொண்டிருந்தது.
சர்க்கரை பொங்கலையும், வெண் பொங்கலையும் பாத்திரத்தில் வைத்துவிட்டு, டீயை டம்ளரில் ஊற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் குமரனை எழுப்பினாள்.
‘‘என்னம்மா… டீ எல்லாம் வாங்கியிருக்கே…?’’ ஆச்சரியத்துடன் கேட்டான்.
‘‘உனக்கு பெர்த்டேல்லடா செல்லம்… அதனால அம்மா போய் வாங்கி வந்தேன்’’
டீயை குடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்தவனிடம், ‘‘அப்பா படத்தை கும்பிட்டுட்டு புது சட்டை போட்டுக்க கண்ணு’’ என்றாள்.
‘‘சரிம்மா… ’’ என்று துள்ளிக்குதித்து துண்டை தூக்கி எறிந்துவிட்டு, அவசர, அவசரமாக அப்பா படத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு, புது சட்டையை போட்டுக் கொண்டு வந்து சிவகாமி முன் வந்து நின்று, ரஜினி ஸ்டைலில் ‘‘இது எப்படி இருக்கு?’’ என்றான்.
அப்படியே… அவனை இரு கைகளாலும் தடவி நெட்டி முறித்தாள் சிவகாமி. ‘‘என் செல்லம் எது போட்டாலும் சூப்பர்தான்பா…’’
‘‘வா… வா… சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கு போகணும்ல’’
தயாராக வைக்கப்பட்டிந்த தட்டின் முன் உட்கார்ந்தாள்.
சிவகாமி முதல் சட்டியில் இருந்த, சர்க்கரைப் பொங்கலை எடுத்து வைத்தாள்.
‘‘அட்ரா சக்கன்னானா… எப்படிம்மா… நேத்து என்கிட்ட காசு இல்லேன்னு சொன்னே…’’
‘‘எப்படியோ வந்திடுச்சு… சாப்பிடுப்பா…’’ என்றாள்.
‘‘அட்டகாசம்மா… என்னா நெய்… என்னா நெய்… சூப்பர்ம்மா…’’
அடுத்து வெண் பொங்கலை எடுத்து வைத்தாள்.
சாம்பாரை ஏற்கனவே பாக்கெட்டில் இருந்து எடுத்து, கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்தாள். அதையும் எடுத்து ஊற்றினாள்.
‘‘வெண் பொங்கலும் சூப்பர்ம்மா…’’ சப்புக் கொட்டி சாப்பிட்டான்.
மகன் சாப்பிடுவதை ரசித்து பார்த்தாள்.
‘‘சூப்பர்ம்மா… இது மாதிரி தினமும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்லம்மா?’’
‘‘நீ சம்பாதிக்கிறப்போ… அம்மா இதே மாதிரி நல்லா ஆக்கி போடுறேன்பா… அம்மா படிக்காதவ இல்ல… அதனால கொஞ்சமாத்தான் சம்பாதிக்கிறேன். நீ படிக்கிற புள்ளயில்ல… உனக்கு கைநிறைய சம்பளம் குடுப்பாங்க… அப்ப அம்மாவ கவனிச்சுக்குவே இல்ல?’’
‘‘உன்னைத்தான்மா கவனிப்பேன்…’’ பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தம் குடுத்தான் குமரன்.
அவனது முத்தத்தில் கறைந்தது சிவகாமியின் மனது மட்டுமல்ல; தொண்டைக்குழியில் பாரமாக நின்று கொண்டிருந்த சோகமும் கறைந்து ஓடியது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks