26 April 2019

ஓடிப்போயிரலாமா?


ஓடிப்போயிரலாமா?


‘‘சிவகாமி எப்படி இருக்கே?’’ என்று கூறியபடி உள்ளே  நுழைந்தாள், அவளது தோழி  சந்திரா.
‘‘வாடி சந்திரா… நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?’’ வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த சிவகாமி கேட்டாள்.
‘‘எனக்கென்னடி… நான் என்ன உன்ன மாதிரி சென்ட்ரல் கவர்மென்ட் ஆபிஸ்ல ஆபிசரா… ஏதோ இருக்கேன்…’’ என்று இழுத்தாள் சந்திரா.
‘‘ஆமா… நீ மட்டும்தான் கொறைச்சல்… நீயும் சொல்லிட்டியா… நான் பேருக்குத்தான் ஆபிசர். வீட்டுல உன்னை மாதிரி நானும் ஹவுஸ் வொய்ஃப் தானே’’
‘‘ஆமாடி… ஏன் ஒரு வேலைக்காரிய வச்சுக்கிட வேண்டியதுதானே… இந்த வேலைகளை எல்லாம் நீ ஏன் செய்றே?’’
‘‘ஆமா… இங்க என்னத்த வாழுது… வாங்குற சம்பளத்தில பாதி மாமனார் கெழத்தோட மருந்து செலவுக்கு போயிடுது… அப்புறம் புதுசா வாங்குன லேண்ட்டுக்கு டியூ… பொண்ணு ஸ்கூல் பீஸ்… இப்படி சம்பளத்தில எல்லா கரைஞ்சிடுது… அப்புறம் எங்க வேலைக்காரிய வச்சுக்கிறது? மாசத்துக்கு ரெண்டு வாட்டி பியூட்டி பார்லர் போறதுக்கு கூட இங்க எண்ணி, எண்ணி வைக்க வேண்டியிருக்கு.  உனக்கு என்ன…  உன் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர். அவர் சம்பாதிக்கிறார் நீ என்ஜாய் பண்றே’’
உள் ரூமில் இருந்து இருமல் சத்தம் வந்தது.
‘‘உள்ள யாரு…  உன் மாமனாரா?’’ சந்திரா கேட்டாள்.
‘‘ஆமா… அந்த கெழம்தான். இருமி, இருமி உயிர வாங்குது…’’
இருவரும் தங்களது அருமை,  பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்க… உள் ரூமில் இருந்தபடி காதில் விழுந்த அவர்களின் பேச்சை, கேட்டும், கேட்காமல் புத்தகம் ஒன்றை படித்தபடி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தார் ராகவன்.
பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்தது. ஒன்றரை மணியாகியும் இன்னமும் சாப்பாட்டை செய்யும் பணிகளில் எதுவும் மும்முரம் காட்டாமல் மருமகள், தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததால், பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை குடித்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்தார். வழக்கமாக ஒரு மணிக்கே அவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, மாத்திரையை போட்டுக் கொண்டுவிடுவார்.
இன்று சனிக்கிழமை. மருமகளுக்கு விடுமுறை. ஆனால், மகன் சுந்தருக்கு வேலை நாள். அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. மற்ற நாட்களில் காலையிலேயே சாப்பாடு ஆகிவிடுவதால், தானே போட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவார். ஆனால், சனி, ஞாயிறு மருமகளுக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருப்பதால், இரு நாட்களிலும் மருமகள் செய்யும்  நேரம் வரை சாப்பாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.
இன்று அதிசயமாக 12 மணிக்கே சாப்பாட்டு வேலையை தொடங்குவதற்கான அறிகுறிகளாக பாத்திரங்கள் புழங்கும் சப்தம் கேட்டதால், சரியான நேரத்துக்கு தன்னால் மாத்திரை சாப்பிட்டு விடலாம் என்று நினைத்திருந்தார் ராகவன். ஆனால், மருமகளின் தோழி நுழைந்த சப்தத்தை கேட்டதுமே, அவருக்கு என்றுமில்லாமல், வயிறு முன்கூட்டியே பசி, பசி என்று அலற ஆரம்பித்தது.
ஹாலில் இன்னமும் சுவாரசியமாக தோழிகளின் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
மணியை பார்த்தார், இரண்டாகி 5 நிமிடம் ஆகியிருந்தது.
இப்போது போய் மருமகளிடம் சாப்பாட்டை கேட்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும், தன் மானத்தை வாங்கிவிட்டதாக வீட்டை ரெண்டாக்கிவிடுவாள்.
பொறுக்க முடியாமல் இன்னொரு முறை தண்ணீர் குடிக்கலாம் என்று பாட்டிலை எடுக்க முயன்றபோது, கைதவறி கீழே விழுந்தது. அது சில்வர் பாட்டில் என்பதால் விழுந்த வேகத்தில் பெரும் சப்தத்தை எழுப்பியது.
‘‘இந்த கெழத்துக்கு இதே வேலை… நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி வைக்கிற பொருள எல்லாம், இப்படி பொறுப்பில்லாம கீழே போட்டு உடைக்குது. இரு நான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்ற கூறிவிட்டு எழ முயன்றாள் சிவகாமி.
‘‘சரிடி… நீ போய் பாரு… நானும் வந்து ரொம்ப நேரமாச்சு… நானும் கிளம்புறேன்… பொண்ணு எங்கே?’’ என்று கேட்டாள் சந்திரா.
‘‘அவ வெளியே விளையாடிக்கிட்டு இருக்கா’’
‘‘சரி மத்தியானம் பார்லர்ல சந்திப்போம்’’ என்று அவளுக்கு விடைக் கொடுத்துவிட்டு, உள்ளே வந்தாள் சிவகாமி.
கீழே விழுந்த பாட்டிலை எடுத்து,  தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார் ராகவன்.
‘‘இதே வேலையா போச்சு… எதையாவது போட்டு உடைச்சுக்கிட்டே இருக்க வேண்டியது… ஏன் தான் என் உயிரை வாங்குறீங்களோ…  எங்கேயாவது ஹோமுக்காவது போய் தொலைய வேண்டியதுதானே…’’ எட்டிப்பார்த்தவிட்டு,  தீக்கங்குகளைவிட மோசமான வார்த்தைகளை கொட்டினாள் சிவகாமி.
காதில்  விழுந்த வார்த்தைகளை கேட்டபோது, ராகவனால் கண்களில் இருந்து தண்ணீரை கொட்ட முடிந்ததே தவிர… இயலாமை, வயது காரணமாக பேச வார்த்தை வரவில்லை. அந்த நேரத்தில்தான் பேத்தி லாவண்யா உள்ளே நுழைந்தாள். தாத்தாவை அம்மா திட்டும் வார்த்தைகள் கேட்டு,  அவளுக்கு பழகிப் போயிருந்தன.
அன்பாக அரவணைத்து, தனக்கு பிடித்த கதைகளை சொல்லும் தாத்தாவை அம்மா திட்டுவது அவளுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், அம்மாவின் குணம் அவளுக்கும் தெரிந்ததுதானே. அதனால் சத்தமில்லாமல், தாத்தாவின் கட்டிலில் உட்கார்ந்து, ‘‘தாத்தா அழாதே’’ என்று கூறினாள்.
‘‘இல்லடா லல்லி  செல்லம்… தாத்தா அழல… மேல இருந்து தூசி விழுந்துடுச்சு… அதுதான் கண்ணுல இருந்து தண்ணீ வருது…’’ என்று சமாளித்தார் ராகவன்.
‘‘நீ சமர்த்து தாத்தா… நீயும் என்னை மாதிரியே ஆயிட்டே… நானும் அம்மா திட்டும்போது இப்படித்தான் அழமாட்டேன். ஆனா கண்ணுல இருந்து தண்ணீ மட்டும் வருது தாத்தா’’ என்று தன் பிஞ்சு மொழியில் கூறினாள் லாவண்யா.
அவளை  உச்சிமுகர்ந்து முத்தமிட்டு, ‘‘சரி செல்லம்… நீ போய் படி…’’ என்று கூறிவிட்டு, புத்தகத்தில் ஆழ்ந்தார்.
சுவாரசியமாக படித்துக்  கொண்டிருந்தபோது, டேபிளில்  நங்கென்று தட்டு வைக்கப்படும் சத்தம் கேட்டது. மருமகள்தான். தட்டை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் போய்விட்டாள்.
தட்டைப்பார்த்தார். தனக்கு பிடிக்காத உருளைக்கிழங்கு பொடிமாஸ்,  உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத கருணைக்கிழங்கு காரக்குழம்பும், ரசமும் இரு கிண்ணத்தில் இருந்தன.
நேரத்தை பார்த்தார். 3 ஆகியிருந்தது. இனியும் தாங்க முடியாது என்பதால், ரசத்தை மட்டும் ஊற்றிக் கொண்டு முழுங்கினார். தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது. தண்ணீரை குடித்து சமாளித்தார். மிச்சம் வைத்தால் அதற்கும் திட்டு விழும். அதனால் மீதமிருந்த எல்லாவற்றையும் சேர்த்து ஜன்னல் வழியாக தூக்கிப்போட்டார். பேஷினில் தட்டை கழுவி ஹாலில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, மீண்டும் தன் அறையில் முடங்கினார்.
5 நிமிடம்தான் ஆகியிருக்கும்.
கிரவுண்ட் புளோரில் இருக்கும் புஷ்பம் கத்திக் கொண்டே உள்ளே வந்தாள்.
‘‘ஏய் சிவகாமி… நீ ஆபிசர்ங்கறதுக்காக எங்க வீட்டு பின்னாடியா மிச்சத்தை வீசுவியா… எங்கேடி இருக்கே…’’ என்று ஹாலில் நின்று கத்தினாள்.
உள்ளே இருந்து வெளியே வந்த சிவகாமி, ‘‘என்னக்கா என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.
‘‘ஏண்டி… உங்க வீட்டுல சாப்பிட்ட மிச்சத்தை எங்க வீட்டுக்கு  பின்னாடி ஏன் வீசுற? என்ன கொழுப்பாகி போச்சா…’’ என்று பத்து வீட்டுக்கு கேட்கும்படி கத்தினாள்.
‘‘நாங்க ஒண்ணும் வீசலேய்யக்கா…’’ என்றாள் சிவகாமி.
‘‘ஏண்டி கீழே வந்து விழுந்த மிச்சத்தை என் பசங்க பார்த்துட்டு, மேல பார்த்தப்போ உங்க வீட்டுல இருந்துதான் கை தெரிஞ்சிருக்கு. அவங்க பார்த்துட்டு இருக்கிறப்போவே… இன்னொருதடவையும் மிச்சம் வந்து விழுந்திருக்கு’’
நிலவரத்தை புரிந்து கொண்ட ராகவன் ஓடி வந்தார்.
‘‘அம்மா…   அம்மா…  என் மருமக எதையும் வீசலமா… இந்த பாவி தான் சன்ஷேடுல விழும்னு நினைச்சு வீசிட்டேன்மா… என்னை மன்னிச்சிடுங்க…’’  என்று இருகரம் குப்பி மன்னிப்பு கேட்டார்.
ஏற்கனவே ராகவனுக்கு கிடைக்கும் மரியாதை, அந்த பிளாட்டில் இருந்த அனைவருக்குமே தெரியும். ஒரு காலத்தில் பிளாட் செகரட்டரியாக கம்பீரமாக வலம் வந்தவர். அவர் செகரட்டரியாக இருந்தபோதுதான், புஷ்பத்தின் கணவர் வீடு வாங்கி வந்தார். அந்த மரியாதை கொஞ்சம் இன்னமும் மிச்சம் இருந்தது.
அந்த மரியாதையில் பின்வாங்கினாள் புஷ்பம். ‘‘சார் இந்த மாதிரி எல்லாம் கீழே வீசாதீ்ங்க…’’ என்று எச்சரித்துவிட்டு அகன்றாள்.  அதற்குள் பக்கத்து பிளாட்காரர்கள் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டதில்,  சிவகாமிக்கு அவமானமாக போய்விட்டது.
‘‘யோவ்… நீ எல்லாம் மனுஷனா? கஷ்டப்பட்டு சமைச்சுக் குடுத்தா… அதை கீழே கொட்டியிருக்கே… உனக்கு எல்லாம் மானம், ரோஷம்னு எதுவும் கிடையாதா? நீ எல்லாம்  எதுக்கு இன்னும் உயிரோட இருக்கே… ஆபிஸ்ல நான் நடந்தா எதுக்க வர்றதுக்கே பயப்படுவாங்க… அப்படிப்பட்ட என் மானத்தை எல்லார் முன்னாடியும் வாங்கிட்டியே... உன் பைய கட்டிக்கிட்டு வந்து நான் படுற பாடு போதாதுன்னு, இப்போ அக்கம், பக்கத்தில எல்லாம் மானத்தை வாங்கிட்டியே… நீ எல்லாம் இருந்து யாருக்கு என்னப் பண்ணப்போற… செத்து தொலைக்க வேண்டியதுதானே?’’ ஊரே கேட்கும் அளவிற்கு கத்தினாள் சிவகாமி.
இதுவரை, ஒருமையை மட்டும்தான் அவள் பயன்படுத்தவில்லை. இப்போது அதையும் பயன்படுத்திவிட்டாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், ‘‘என்னை மன்னிச்சுடும்மா…’’ என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.
ஆனால், தொடர்ந்து கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் சிவகாமி.
அரைமணி நேரம் ஆகியிருக்கும். ஹாலில் இருந்து மீண்டும் மெதுவாக அறைக்குள் எட்டிப்பார்த்தாள் லாவண்யா.
கண்ணில் முட்டிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டார் ராகவன்.
‘‘வாடா செல்லம்…’’
‘‘தாத்தா உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது’’
‘‘ஏண்டா…  செல்லம்  இப்படி சொல்றீங்க?’’
‘‘அம்மா இவ்வளவு திட்டுதில்ல… நீ போடி உன் வேலைய பார்த்துட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே தாத்தா?’’
‘‘அம்மா பெரியவங்க இல்ல… அவங்கள எல்லாம் அப்படி சொல்லக்கூடாதும்மா’’
‘‘அப்போ… நீயும் தானே பெரியவங்க… உன்னை மட்டும் அம்மா திட்டுது’’
‘‘புஷ்பம் ஆன்ட்டி வந்து திட்டினாங்கல்ல… அதனால அம்மாவுக்கு கோபம் வந்து நாலு வார்த்தை பேசிட்டாங்க… அதை எல்லாம் பெருசு பண்ணக்கூடாதும்மா… தாத்தாவும் தப்பு பண்ணியிருக்கேன்ல’’
‘‘தாத்தா அன்னைக்கு அம்மாவும் கூடத்தான். ஜன்னல் வழியாத்தான் மிச்ச இட்லிய தூக்கிப்போட்டாங்க… அப்போ அவங்களையும் திட்டணும்ல?’’
‘‘அம்மா தெரியாம பண்ணிருப்பாங்கடா… தாத்தா தெரிஞ்சே பண்ணேண்ல… அதனாலதான் இந்த திட்டு’’
‘‘போ …  தாத்தா…  நீ எப்பவும் இப்படித்தான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிப்பேசுற… நான் உன்கிட்ட சிக்ஸ்த் டேபிள் வரைக்கும் நல்லா ஒப்பிச்சேன்ல… ஆனா… அம்மாகிட்ட ஒப்பிக்கிறப்போ… பயத்தில தப்பு வந்திடுச்சு… அதுக்காக என்னையும் போட்டு அடி, அடின்னு அடிச்சிட்டா… அவ பேட் மம்மி…அப்பாவும் அவள எதுவும் கேட்கிறதில்ல’’
‘‘இல்லடா கண்ணு… நீ ஸ்கூல்ல போய் டீச்சர் கிட்ட அடிவாங்கக்கூடாதுன்ற நல்லெண்ணத்தில,  நீ நல்லா படிக்கணும்கிறதுக்காக அம்மா உன்னை அடிச்சிருக்காங்க… அதை தப்பாக எடுத்துக்க கூடாது செல்லம்’’
‘‘போ தாத்தா… நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுற’’ என்று அன்று அடித்த அடிக்காக தாத்தாவிடம் இன்று அழுதாள் லாவண்யா.
‘‘என் குட்டிம்மால்லே… நீங்க ரொம்ப தைரியமானவங்க இல்ல அழக்கூடாது’’ என்று கண்ணீரை துடைத்துவிட்டார் ராகவன்.
‘‘தாத்தா… என் கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்கு… உன்கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்குல்ல… நாம ரெண்டு பேரும், இந்த வீட்டை விட்டு ஓடிப்போயிருவோம் தாத்தா… நம்மகிட்ட இருக்கிற ருபீஸ்ல பெரிய வீடு ஒண்ணா வாங்கி நீயும்,  நானும் இருக்கலாம். பேட் மம்மிய சேர்க்க வேணாம். டேடி மட்டும் வந்தா ஒரு ரூம் குடுத்திடலாம்… சரியா?’’ என்று பெரிய, பெரிய, வார்த்தைகளை கூறினாள்.
‘‘உதைபடுவீங்க… இப்படி எல்லாம் பேசக்கூடாது செல்லம்’’
‘‘நீ ரொம்ப கோவர்ட் தாத்தா… போ…’’ என்று கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டாள் லாவண்யா.
அவளுடைய கோபம் உள்ளுக்குள் பயத்தைதான் ஏற்படுத்தியது ராகவனுக்கு.
சற்று நேரத்தில் லாவண்யாவை அழைத்துக் கொண்டு பார்லருக்கு கிளம்பினாள் சிவகாமி. வீட்டை வெளியே பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் வழியாகக உள்ளே வீசிவிட்டு சென்றாள். வழக்கமாக அவள் செய்வதுதான்.
சாவியை எடுத்து கொக்கியில் மாட்டிவிட்டு, சோபாவில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தபோதுதான் அந்த விளம்பரம் அவரது கண்ணில் பட்டது.
சற்று நேரம் அதையே படித்துக் கொண்டிருந்தார்.  பின் ஒரு முடிவுக்கு வந்தவராக ஒரு வெள்ளை பேப்பரில் எழுத ஆரம்பித்தார்.
‘‘அன்புள்ள மகன்  சுந்தருக்கு,
ஆசிர்வாதத்துடன் அப்பா எழுதிக் கொள்வது. நீ சிவகாமியை காதலித்து திருமணம் செய்து வந்தபோது,  உன் மணவாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனால், அதிர்ஷ்டவசத்தால் புஷ்பத்துக்கு  உயர் பதவியில் வேலை கிடைத்துவிட, அவளது உயர்வகுப்பு தோழிகளின் நட்பும், அதிகார பலமும் சேர்த்து அவளுக்கு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்த உன் மீதான காதல் சற்று குறைந்து, தனக்கு கீழே சம்பாதிப்பவன் என்பதுபோன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி, வசதியான வீட்டில் இருந்து வந்த சிவகாமிக்கு, நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்கள் பழக்கப்படாதது. இதனால் அவளது  இயலாமை உன் மீதும் என் மீதும், ஏன் குழந்தை மீதும் பாய்கிறது. நான் வீட்டில் இருப்பதால்தான் உனக்கு கூடுதல் செலவு. அதனால் நான் வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். வேலை என்றால், சாதாரண வேலை இல்லை. சர்வதேச மருந்து நிறுவனம் ஒன்று, என்னைப்போன்ற வயதானவர்களுக்கு வரும் நோய்களை கண்டறிவதற்காக வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ளப் போகிறது. அதற்கு தன்னார்வலர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்தது. குறிப்பாக ஆதரவற்றவர்கள் தேவை என்று கூறியிருந்தது.
உன் அம்மா போன பிறகு, நான் நிராதரவாகத்தானே இருக்கிறேன். அதனால் அந்த நிறுவனத்துக்கு போன் செய்து பேசினேன். அவர்கள் உடனே கிளம்பி வரச் சொல்லிவிட்டார்கள். அவர்களே வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்வார்கள். நோய் வந்தால், அவர்களே மருந்தும் தருவார்களாம். இதற்காக ஐந்து லட்சம்  ரூபாய் தருவார்களாம். அதை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
உனக்கு எந்த கஷ்டமும் இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த வீட்டை வாங்கும்போதே உன் பெயரில்தான் வாங்கினேன். அதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் வீட்டை நீ அனுபவிக்கலாம். இதற்கான கடனில் ஒரு லட்சம் மட்டும் பாக்கி இருக்கிறது. அதை கட்டிவிட்டு,  மீதமுள்ள பணத்தில் லாவண்யா பெயரில் டெபாசிட் போட்டு வைத்துக் கொள். திருமணத்தின்போது உனக்கு உதவும். இனி என்னால் உனக்கு எந்த செலவும் இருக்காது. உன் மனைவிக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. எனக்காக நீயும் மனைவியிடம் பேசி, மனஸ்தாபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. தயவு செய்து  என்னை தேடி அலையும் வேலையை செய்யாமல், உன் மனைவி,  குழந்தையுடன் அன்பான வாழ்க்கை வாழு.
லாவண்யா நன்கு படிக்கும் குழந்தை. அவளுக்கு பயம் வந்தால் திக்குகிறது. அவளிடம் அன்பாக பேசி படிக்க வை. அவள் நல்லபடியாக வருவாள். இனி என்னால், உனக்கும், சிவகாமிக்கும் எந்த சண்டையும் வராது. எனது மனமுவர்ந்த ஆசிர்வாதங்கள்!
அன்புடன்,
ராகவன்’’
கடிதத்தை முடித்துவிட்டு ஒரு முறை படித்தார். அதை அப்படியே மடித்து டேபிளில் வைத்துவிட்டு, ஒரு சின்ன பையில் தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ராகவன்.