07 May 2019

கருப்பட்டி காபி


கருப்பட்டி காபி
‘‘பில்டர் காபி என்பார், இன்டஸ்டன்ஸ் காபி என்பார்
அம்மாவின் கருப்பட்டி காபி சாப்பிடாதோர்’’
இந்த புதுமொழி இப்போதை கிட்ஸ்களுக்கு தெரியாது. ஆனால், மதுரைபோன்ற தென்னகத்தில் பிறந்து வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், மால்ட் எல்லாம் இந்த கருப்பட்டி காபி தான்.
காலையில் விவித பாரதியில், ‘‘பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போல, தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்… ஹேப்பி பெர்த்டே டூ யூ…..’’ என்று கேட்கும்போது, அம்மாவின் குரல் கேட்கும்.
‘‘கண்ணா காபி குடிச்சுட்டு குளிச்சிட்டு ரெடியாகு… பள்ளிக்கூடம் போகணும்ல’’ என்று அம்மாவின் குரல் கேட்கும்.
அதாவது மணி 7 மணி ஆகிவிட்டது என்று அர்த்தம்.
பல் விளக்குவது என்பது, ‘வீக்கான’ பல்லை கொண்டவர்களுக்கான ‘எக்ஸர்சைஸ்’ என்பது என் காலத்து பிள்ளைகளின் காபிக்கு முந்தைய ஆத்திச்சூடி.
படுக்கையை விட்டு எழுந்த கையுடன், அடுக்களைக்கு சென்றால் குண்டு பானையில் முக்கால்வாசிக்கு தயாராக இருக்கும் கருப்பட்டி காபி. இளஞ்சூட்டில் இருக்கும் அதை பெரிய டம்ளரில் ஊற்றி மடக்மடக்கென்று குடித்து, மீண்டும் ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் எடுத்து குடித்த பின்னர்தான், பெரு மூளைக்கு சிறுமூளை ‘ஓகே’ என்று சிக்னல் கொடுக்கும். கிங்பிஷர் 5000 கூட இதற்கு ஈடாகாது.
பாலை பொருத்து க.கா. கெட்டித்தன்மை மாறுபடும். வீட்டுக்கு அன்று உறவினர்கள் யாராவது வருவதாக இருந்தால், க.கா. சற்று ‘நீளமாகி’விடும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஸ்பெஷல். அன்று க.கா. திக்காக சும்மா கமகமவென்று தூக்கலாக இருக்கும். காரணம், அன்று எக்ஸ்ட்ரா ஒரு பாட்டில் பால் வாங்கப்படும் என்பதுதான்.
க.கா. டாக்டர் பிரிப்கிரிஷன் போல், காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை குண்டு பானை நிறைய செய்து வைக்கப்பட்டுவிடும்.
உறவினர்கள் வந்தாலும் சரி, விருந்தாளிகள் வந்தாலும் சரி. அதில் இருந்து ஒரு சில டம்ளர்கள் காலியாகும். மற்றவை எல்லாம் எங்களுக்குத்தான். மதியம் சாப்பாட்டிற்கு பின்னரும் கூட பல முறை, இந்த காபி எனர்ஜி பூஸ்ட்டராக பலமுறை உள்ளே இறங்கும்.
காலையில் செய்வதை விட மாலையில் செய்யப்படும் காபி, சற்று குறைவாகத்தான் இருக்கும். காரணம், பதம் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். பள்ளியை விட்டு வந்ததும், இந்த காலத்து பிள்ளைகளுக்கு மாசா, ஸ்பிரைட், கூல் காபி என்றால் எங்களுக்கு குண்டுப்பானையில் காத்திருக்கும் க.கா. தான். ஆனால், அதில் 20 மில்லி குறைந்தாலும், உடன்பிறந்தவர்களுடன் போடும் சண்டை, இரவு சாப்பாட்டுக்காக தொட்டுக் கொள்ள கொண்டு வந்த 100 கிராம் பக்கோடாவில் ஒரு பீஸ் எக்ஸ்ட்ராவாக அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் நீடிக்கும். பல சமயங்களில் அடுத்தநாள், ஒருவருக்கு முந்தி மற்றொருவர் அதே அளவை கூட எடுத்துக் கொண்டு குடிக்கும் வரையிலும் நீடிக்கும்.
க.கா.வுக்கு முக்கிய இன்கிரிடென்ஸான கருப்பட்டி பல ஊர்களில் தயாரிக்கப்பட்டாலும், நெல்லை பக்கத்தில் இருந்து வரும் சிறுவட்டு கருப்பட்டி நன்றாக இருக்கும். இதை விற்பதற்கென்றே மதுரை தேர்முட்டியில் பல செட்டியார் கடைகள் உண்டு.
ஒரு மாசத்துக்கு ஒரு முறை அம்மா, மொத்தமாக கருப்பட்டி பொட்டியை வாங்கிவிடுவார்கள்.
‘‘என்னாப்பா… வட்டு ரொம்ப ஈரமா இருக்கிற மாதிரி தெரியுது’’ என்பது, எப்போதுமே கருப்பட்டியை வாங்கும்போது அம்மா கேட்கும் வழக்கமான டயலாக்.
உடனே கடைக்காரர், ஓலைப்பொட்டியில் இருந்து ரெண்டு கருப்பட்டி வட்டை, இந்த கையில் ஒன்றும், அந்த கையில் ஒன்றுமாக எடுத்து, டமால் என இரண்டின் முனையிலும் அடிப்பார். அது உடையாமல் இறுகி இருந்தால், அதன் முனைகள் மட்டும், இப்போதை நெஸ்கபே காபியின் நிறத்தின் நொருங்கும். உடைந்துவிட்டாலும் பதம் சரியில்லை என்று அர்த்தம். வட்டு சப்பையாகிவிட்டாலும் சரியில்லை என்று அர்த்தம்.
அம்மாவின் ஒரு டயலாக்கில், ஒட்டுமொத்த வட்டின் தரமும், வெளிப்பட்டு விடும். நாசா உத்தரவு கூட இந்த அளவுக்கு துல்லியமாக இருக்காது.
வட்டு சரியாக இருந்தால், ஒலைப்பொட்டி சடம்பு அல்லது தேங்காய் நார் கயிரால் கட்டித்தரப்படும். அதன் மேல் பிளஸ் குறியில் செல்லும் கயிரை நேக்காக விரல்களின் வசத்தில் பிடித்து தோளில் தூக்கிக் கொண்டு வந்தால், 5 பைசா அம்மாவிடம் இருந்து பரிசாக கிடைக்கும். இல்லாவிட்டால், அப்பா ராஜபாளையம் போய்விட்டு வழியில் சிரிவில்லிபுத்தூரில் இருந்து வாங்கிவரும் பால்கோவாவில் போடப்படும் ஆறு துண்டில், அம்மாவின் பங்கு எனக்கு கிடைக்கும்.
அடுத்தது காபித்தூள்.
காபி கொட்டைகளை வாங்கிவந்து வறுத்து, அரைப்பது எல்லாம் எங்கள் காலத்தில் ஓல்டு பேஷனாகிவிட்டது. லேம்பியில் இருந்து பிரியாவுக்கு மாறிவிட்ட பின்னர், இதெல்லாம் சுத்த போராகிவிட்டது.
நேராக நரசுஸ் காபிக்கடைக்கு இரவு 8 மணிக்குள் சென்றால், 10 ரூபாய்க்கு 100 கிராம் காபி பவுடர், டிரேசிங் பேப்பரால் செய்த கவரில் வைத்து அடைத்து, பின்போட்டால் காபியில் கலந்துவிட வாய்ப்புள்ளது என்பதால், அந்தக்காலத்திலேயே முன்னெச்சரிக்கையாக, காகித டேப்பை தண்ணீரில் தடவி ஒட்டிக் கொடுப்பார்கள். 8 மணிக்கு பின்னர் ஒரு நிமிடம் தாமதமாக போனாலும் காபி பவுடர் கிடைக்காது. அவ்வளவு ஸ்டிரிக்ட் நரசுஸ் காபி கடைகளில். இப்போது அதெல்லாம் இல்லை.
கொண்டு வந்த வட்டுகளில் ஒன்றை எடுத்து, கல்லைக் கொண்டு அடித்தால் நான்கு துண்டுகளாக பிரியும். அதை அப்படியே தண்ணீரில் போட்டு பானையில் கொதிக்க வைப்பார்கள். அது நன்கு கரைந்து கொதிக்கும்போது ஒரு மனம் வரும். அப்போது நரசுஸ்சை எடுத்து 2 ஸ்பூன் போட்டு போட்டு மீண்டும் மூடிவைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்தால் காபி மனம், ஊரே மணக்கும்.
அந்த கலவை அப்படியே அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டால், காபித்தூள் மற்றும் செடிமண் எல்லாம் கீழே தங்கும். இந்த இடைப்பட்ட வேளையில், பாலை இன்னொரு பானையில் காய்ச்சி 1க்கு 5 என்ற ரீதியில் பானையில் எடுத்துக் கொண்டு, டிகாஷன் காபி பானையை ஆட்டாமல், அதன் மேல் உள்ள காபி வடிநீரை மட்டும் பாலில் சேர்க்க வேண்டும். ஆகா… ஆகா… இரண்டு கலக்கும்போது, புதுப்பெண்ணும், மணமகனுக்கு இடையே திருமண மேடையில் இருக்கும் குதுாகலம் குடிப்பவர்களிடமும், கலக்கும் டிகாஷன் மற்றும் பாலிலும் தெரியும்.
டிகாஷனில் கீழே கிடக்கும் வண்டல் தேவையில்லை, அதை ரோஜா செடிக்கு ஊற்றினால் நன்கு பூ கொடுக்கும். இது பாட்டி கொடுத்த டிப்ஸ். ஊற்றிவிட்டு, அப்படியே கொஞ்சம் தண்ணீரை கொட்டி கழுவிக் கொண்டு வந்து கொடுத்தால், பெரிய டம்ளரில் ஆவி பறக்கும் காபி தயாராக இருக்கும்.
இதற்கு முன்பு, ப்ரூவாவது, நெஸ்ஸாவது!
-          குடித்து பழகிய ஜே.எஸ்.கே.பாலகுமார்.


No comments:

Post a Comment

Thanks