19 May 2019

ஆ.கா.சூ சாப்பிடுவோமா?

ஆ.கா.சூ சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அது தாங்க ஆட்டுக்கால் சூப். இந்த கேள்விக்கு தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், ஓ…ஓ… என்று பதில் கிடைக்கும். தென் மாவட்டங்களில் மாலை நேரத்தில் இது சாலையோர கடைகளில் சுடச்சுட கிடைக்கும்.
ஆ.கா.சூ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சமயலறை சன்னாசியார் (?) சில விதிகளை வகுத்து வைத்துள்ளார்கள்.
அது யாரு அந்த ச.ச. என்று கேட்கப்படாது… விதிகளை சொன்னா கேட்டுக்கணும். கேள்விக் கேட்கக்கூடாது.
ஆ.கா.சூ. எடுத்து வரும்போதே, வாசனை காத தூரத்தில் இருந்து மூக்கை துளைக்க வேண்டும். அதன் நிறம் மருதாணி இலையை கழுவிய தண்ணீரைப்போன்று, பிரவுனா, பச்சையா, மஞ்சளா என்று தெரியாத அளவுக்கு ஒரு கலவையாக, ரசனையாக இருக்க வேண்டும்.
காபி, டீ போன்ற சாதாரண மக்கள் குடிக்கும் பானம் அல்ல இது. உழைக்கும் உயர்த்தட்டு மக்கள் குடிக்கும், உன்னத உற்சாக பானம். அது ஆ.கா.சூ உற்சாக பானம் ஆகும் என்று கேள்விக்கேட்கும், நடுபெஞ்சு நம்பிகளுக்கான பதில், இதை குடித்து முடித்த 10 நிமிடத்தில் உடல் முறுக்கி, உங்களை பயில்வான் போல உணர வைக்கும். அதனால்தான் அதை உற்சாக பானம் என்று ச.ச விதி 324 பிரிவு 1ல் கூறப்பட்டுள்ளது.
சரி வாசனை மூக்கை துளைத்தாகிவிட்டது, நிறம் மனதை கவர்ந்தாகிவிட்டது. அடுத்தது?
தண்ணீர் டம்பளரில் தேங்காய் எண்ணெய் கொட்டினால் எப்படி தனித்தனியாக, திட்டுத்திட்டாக எண்ணெய் தேங்கி நிற்குமோ அதுபோன்று ஆ.கா.சூ.வின் மேல், கொழுப்பு தண்ணீராக உருகி ஆங்காங்கே திட்டுத்திட்டாக மிதக்க வேண்டும். இதுதான் உடலுக்கு உற்சாகம் தரக்கூடியது. அது தரமானதாக இருந்தால்தான் நல்லது. வெறுமனே எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அது ருசியை தராது என்பதுடன், அதை குடிப்பதும் வேஸ்ட். அது ச.ச. சொன்னது அல்ல; அனுபவசாலிகள் சொல்வது.
இப்படி சுடச்சுட கொண்டு வந்து வைக்கப்படும் ஆ.கா.சூ.வை, அப்படியே விசிலடிப்பது போல் உதட்டை குவித்து, ஊதினால் டம்ளரின் மேல்பகுதியில் உள்ள ‘சூ’ கொஞ்சம் சூடு ஆறும். ஒரு நாலைந்து தடவை ஊதிவிட்டு, அதை குடித்தால், அப்படியே, ஜல, ஜல, ஜலவென தொண்டையில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்வது வரை உணர முடியும். சில நேரங்களில், ஆக மிகுதி ஆர்வத்தினால், சிலர் ஊதாமலேயே, நான் அப்படியே குடிப்பேன் என்ற ரீதியி்ல் வாயில் விட்டுக் கொண்டு, பின்னர் புகையை வெளியே விட்டு ஆசுவாசமாவது உண்டு.
ஆ.கா.சூ.வின் மேற்படலத்தில் இருக்கும் கொழுப்பு, சூடாகவும், அதே நேரத்தில் குடிக்கும் அளவுக்கும் இருந்தால்தான் டேஸ்ட். சூடு ஆறிவிட்டால், குடிக்க முடியாது. அதேசமயம், தார் பாலைவன அளவுக்கு கொதித்தால், தொண்டை எரியும்.
அதனால் முற்றிலும் ஆற்றிவிடாமல், மேற்புறம் உள்ள சூட்டை மட்டும் சூட்டை ஆற்றவே ஊதிக் குடிக்க வேண்டும் என்பது.
இந்த ஜலதரங்கம் கொஞ்சம், கொஞ்சமாக வாயில் இறங்கும்போது, இன்னொரு ஆச்சரியம் சாப்பிடுபவருக்கு காத்திருக்கும்.
அது, சின்ன, சின்ன எலும்புத்துண்டுகள், சின்னவெங்காயம் ஆகியவை தெரியும்.
அதிர்ஷ்டம் இருந்தால், சில நேரங்களில் நல்லியும் ஜாக்பாட்டாக இருக்கும்.
ஜாக்பாட் அடித்தவர்கள், வேண்டுமென்றே எதிரில் இருப்பவர்களை வெறுப்பேற்ற, டேபிளில் ரெண்டு முறை கொத்திவிட்டு, அதை உறிஞ்சும்போது வரும் வெறுப்பு இருக்கிறதே…. முதல் மார்க் வாங்கிய மாணவனை பாராட்டும்போது, வேண்டும் என்றே எங்களைப்போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களை  ரெண்டு திட்டு விழும்போது ஏற்படும் மனநிலைதான் இருக்கும். ‘நீ எல்லாம் எங்க உருப்படப்போற…’ வார்த்தைகளைப்போன்று, ‘‘உனக்கெல்லாம் இது வாய்க்காது மாமூ’’ என்ற பாணியில் காது சவ்வு கிழியும் அளவுக்கு உறிஞ்சி சாப்பிடுவார்கள். ம்ம்ம்.. அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அடித்துவிடுவதில்லையே….
ஆனால், 80களில் விற்பனைக்கு வந்த 10 பைசா பால்கோவாவின் நடுவில் இருக்கும் நாலணா எல்லோருக்கும் கிடைக்காவிட்டாலும் எல்லோருக்கும் பால்கோவா உறுதி என்பதுபோல, ஆ.கா.சூ.வை வாங்கிய அனைவருக்கும் நாலைந்து எலும்பு நிச்சயம். அதாவது 100க்கு 35 நிச்சயம்.
சூப்பை குடித்து முடித்துவிடும்போது, எப்படித்தான் அந்த சூடு அவ்வளவு சீக்கிரம் இறங்கிவிட்டது என்பதுபோன்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்படும். சூப் இல்லாத கோப்பை குப்பைக்கு சமம் என்பதுபோல், எலும்புகளை கடித்துக் கொண்டிருக்கும்போதே சூடு மிகவும் குறைந்துவிடும்.
இதனால் சில ச.ச. விதியில் 144 பிரிவை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
அதாவது ஆ.கா.சூ வந்தவுடன், ஸ்பூனை வாங்கி கீழே தூர் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது பீகார் மாணவர்கள்போல், தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வாங்கி பார்த்துவிடுவதுபோல், எலும்புகளை முதலில் எடுத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பின்னர் சூப்பை குடிப்பார்கள். ஆனால், இது தவறு என்கிறார் ச.ச.
‘‘அதனதனை அதனதன்போக்கே அதக்குபவர்களே
அச்சரசுத்த அர்த்தமான அசைவாளன்’’ என்கிறார் ச.ச.
இதன் பொருள், அதையும் நான் தானே சொல்லியாக வேண்டும். ஒவ்வொன்றையும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விதி உள்ளதோ, அதன்படி சாப்பிடுபவர்கள்தான் சிறந்த அசைவ பிரி்யர்கள் என்பது இதன் பொருள்.
இந்த விஷயத்தில் நான் சிறந்த அசைவாளன்.
அப்புறம், இந்த ஆ.கா.சூ.வை, ஆக… டேஸ்ட்டுடன் சாப்பிடுவதற்கு என்றே ஒரு சில கடைகள் இருக்கின்றன. இதில் மதுரை பனைமரத்து பிரியாணிக்கடை ஒன்று. மாலை 4 மணிக்கு மேல் இங்கு சென்றால், ஆ.கா.சூ. பிரியர்கள் வரிசைக்கட்டி நிற்பதை காணலாம். ஒரு தடவை நாக்கில் ருசி ஒட்டிக்கொண்டால், பின்னர் அதை விடமாட்டார்கள். எப்போது அந்தப்பக்கம் போனாலும் ஆ.கா.சூ.வை ஒரு கை பார்க்காமல், சாரி… குடிக்காமல் விடமாட்டார்கள்.
அப்படியே மதுரைப்பக்கம் போனீங்கன்னா, ஒரு எட்டு என்னையும் கூப்பிடுங்க… கூச்சப்படாம வந்து சேர்ந்துடுறேன். கூப்பிடாமா போனீங்கன்னா… ச.ச. விதி எண் ‘72 ஏ’யை மீறியதா ஆகிடும். அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன் பார்த்துக்கோங்க….
இப்படிக்கு ஆ.கா.சூ. வெறியன் ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks