10 June 2019

ஆப்ரேஷன் சக்சஸ்… பட்…



வீட்டில் கேடிவி பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
ஜாக்கிஷானை பார்க்க விடாமல், ரிமோட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, கமல் நடித்த ‘டிக்… டிக்… டிக்..’’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்  அம்மா.
‘‘அம்மா… ஜாக்கிஷான் போடுமா… போரடிக்குது’’ என்றான் ஆகாஷ்.
‘‘டேய்… சும்மா… நொய்… நொய்ன்னாத… பேசாம படத்த பாரு…. இல்லாட்டி உன் பிரண்ட்சுங்க கூட விளையாடு. எப்ப பார்த்தாலும் நீ போடுறதான் நாங்க பார்க்கணுமா… இன்னைக்கு நான் பார்க்கிறத, நீயும் பாரு… ஒரு படத்தை பார்க்க விடுறீயா? எப்ப பாரு… ஜாக்கிஷான், ஜொக்கிஷான்னுட்டு’’ சலித்துக் கொண்டு, கமலின் அம்மா பல்பு போடுவாளா, இல்லையா என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆகாஷின் அம்மா.
வேறு வழியின்றி, அம்மாவின் விருப்பப்படி கேடிவியையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆகாஷ்.
அப்போதுதான் காலிங் பெல் அடித்தது. ஓடிச்சென்று கதவை திறந்தான்.
நண்பன் ஜெய் தான் நின்றிருந்தான். ‘‘வாடா விளையாடலாம்’’ என்றான்.
‘‘அம்மா நான் வெளியே போறேன்’’ என்று கதவை டமால் என்று சாத்திவிட்டு போனான் ஆகாஷ்.
அதற்குள் பிளாட்டின் அடிவாரத்தில், ரோசியும், அதர்வாவாவும் கூட வந்திருந்தனர்.
‘‘டேய்… யாராவது பர்கர் வாங்கி தாங்களேன்டா’’ ஆகாஷ் தான் ஆரம்பித்தான்.
‘‘புரோ… மாசக்கடைசி. என் கிட்ட காசு இல்ல’’ முதலில் சொன்னாள் ரோசி.
‘‘ஆமா… இங்கேயும் ஒரே டிரை… இந்த அப்பாக்கள் ஏன்தான் இப்படி இருக்காங்களோ தெரியல… பசங்க சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் வந்துட்டா ஒரு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி, ஒரு டென் தவுசண்ட்ஸ் டெபாசிட் பண்ணணும் தெரியுதா… நாங்களே அதில் இருந்து எடுத்துக்குவோம்ல… எப்பவுமே இவங்க எப்பத்தருவாங்கன்னு காத்துக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு’’ சலித்துக் கொண்டான் அதர்வா.
‘‘அதேதான் புரோ… வெறும் 500 ருபீஸ் குடுக்கிறாங்க… இது ரெண்டு தடவை பீசா சாப்பிட கூட பத்தமாட்டேங்குது… நம்ம கஷ்டத்தை எப்பத்தான் இவங்க புரிஞ்சுப்பாங்களோ… கேட்டா… எங்க காலத்துலன்னு ஒரு புராணத்தை ஆரம்பிச்சுடுறாங்க’’ என்றாள் ரோசி.
‘‘ஆமா… ஆமா… எங்க டேடி குடுத்தாலும் எங்கம்மா தடுத்திடுவாங்க…’’ புலம்பினான் ஆகாஷ்.
அதை ஆமோதித்தான் ஜெய்.
‘‘கய்ஸ்… இன்னைக்கு பர்கர் சாப்டே… ஆகணும்’’ என்ன பண்ணலாம் சொல்லுங்க என்றான் ஆகாஷ்.
‘‘எங்க அண்ணன்கிட்ட ஒரு டென் ருபீஸ் கேட்டேன்… அதுக்கே அவன் திட்டிட்டு போய்ட்டான். சோ… வீட்ல இருந்து எதுவும் பெயராது’’ ஜெய் கூறினான்.
‘‘ஆமாம் கய்ஸ், இது மாசக்கடைசி. அதனால வீட்டுல கேட்கிறது, ரொம்பக் கஷ்டம். நாமளே சம்பாதிச்சாத்தான் உண்டு’’ என்றாள் ரோசி.
என்ன செய்யலாம் என்று அனைவரும் அதிதீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.
திடீரென பல்பு எரிந்தவனாக, ‘‘கய்ஸ்… சூப்பர் ஐடியா… போன மாசம். நம்ம பிளாட் கிரவுன்ட் புளோர்ல இருந்த லைட் பியூஸ் ஆச்சே ஞாபகம் இருக்கா?’’ கேட்டான் ஆகாஷ்.
‘‘ஆமா புரோ… மேல் வீட்ல இருக்கிற செகரட்டரி அங்கிள்க்கிட்ட கூட போய் சொன்னோமே’’ ரோசி கூறினாள்.
‘‘அப்போ அவர் என்ன சொன்னார், ஞாபகம் இருக்கா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘புள்ளைங்களா நீங்க எல்லாம் வளர்ற பசங்க… இப்போ இருந்தே நிர்வாகத்தை கத்துக்கிடணும். அதனால பிளாட்ல இருக்கிற எட்டு வீட்டிலேயேயும் நீங்களே போய் பைசா வசூல் பண்ணி. பல்ப வாங்கி மாட்டுறீங்களான்னு சொன்னார். அதனால நாமளே ஒரு பிளாட்டுக்கு டுவெல் ருபீஸ் வசூல் பண்ணி சிஎப்எல் வாங்கி மாட்டினோம்’’ என்றான் அதர்வா.
‘‘கரெக்ட் அதை மறுபடியும் செய்யப்போறோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரியலையே புரோ…’’ என்றான் ஜெய்.
‘‘மரமண்டை. பர்ஸ்ட் புளோர் ஜெயராமன் அங்கிள் வீட்டிலேயும், குப்புசாமி அங்கிள் வீட்டிலேயும் வேலைக்கு போறவங்க அவங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க… சோ அவங்க புளோர்ல இருக்கிற பல்பை வேணும்னு பீஸ் ஆக்குறோம். அதுக்காக எல்லார் வீட்டிலேயும் பைவ் ருபீஸ் எக்ஸ்ட்ரா வசூல் பண்றோம்’’ என்றான் ஆகாஷ்.
‘‘புரோ எய்ட் பிளாட்டுல வசூலிச்சா கூட பார்ட்டீ ருபீஸ்தான் கிடைக்கும்… ஒரு பர்கர் பிப்டி ருபீஸ் தெரியும்ல’’ என்றாள் ரோசி.
‘‘அதுக்குத்தான் ஒரு சூப்பர் பிளான் என்கிட்ட’’ என்றுக்கூறி, அருகில் இருந்த ரோசி மற்றும் ஜெய்யின் தோள் மீது கை போட்டான். அதேபோல் மற்றவர்களும் செய்ய, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வியூகத்தை வகுப்பது போன்று ரகசியத்தை கூறினான் ஆகாஷ்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்து ஒரு சிஎப்எல்.லுடன் ஆஜரானான் ஆகாஷ்.
ராணுவ வீரர்கள் எதிரிகள் இடத்தில் சைகை பாஷையில் பேசிக் கொள்வதுபோல், தன்னுடைய கண்ணை இரு விரல்களை தொட்டு ரோசியை கீழே போகுமாறு கூறினான் ஆகாஷ். அதேபோல், ஜெய்க்கு மேலே போய் கண்காணிக்குமாறு கட்டளையிட்டான். கீழே இருந்தும், மேல இருந்தும் சிக்னல் கிடைக்கவே, படிக்கட்டு கைப்பிடியின் மீது ஏறி, நடைபாதை பொதுலைட்டில் பொருத்தப்பட்டிருந்த சிஎப்எல்லை எடுத்து, கீழே நின்றிருந்த அதர்விடம் கொடுத்தான்.
அவன் ஏற்கனவே ஆகாஷ் வீட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்திருந்த சிஎப்எல்லையும், ஒரு ஐம்பது பைசா நாணயத்தையும் கொடுத்தான்.
சிஎப்எல் மீது ஐம்பது பைசா நாணயத்தை வைத்து அதை அப்படியே ஹோல்டரில் பொருத்தினான் ஆகாஷ். பின் அதர்வாவிடம் வெற்றிச்சின்னத்தை காண்பித்துவிட்டு படியில் குதித்தான்.
எல்லோருக்கும் வெற்றிச் சின்னம் பரிமாறப்பட்டது.
அடுத்த சில விநாடிகளில் மேலே இருந்து ஆட்கள் வருவதாக செல்போனில் கூறினான் ஜெய்.
உஷாரடைந்த ஆகாஷூம், அதர்வாவும் தாங்கள் மற்றவர்களுக்கு தெரியாதபடி கிரவுண்ட் புளோருக்கு ஓடினார்கள்.
மாலை நேரத்தில் யார் முதலில் இறங்குகிறார்களோ, அவர்கள் பொது லைட்டை போட்டுக் கொண்டே செல்வது வழக்கம். அதன்படி, மூன்றாவது மாடியில் இருந்து இறங்கிய இளம்வாலிபன் கமல் பர்ஸ்ட் புளோர் பொது லைட்டை போட்டான். போட்ட மாத்திரத்தில் ஒரு வெளிச்சப் பொட்டு மட்டும் வந்துவிட்டு பல்பு அணைந்துவிட்டது. இதனால் மீண்டும், மீண்டும் சுவிட்ச்சை போட்டுப்பார்த்தான் கமல்.
அந்த நேரத்தில் சரியாக கமலை பார்த்தபடி நின்றிருந்தார்கள் ஆகாஷூம், அதர்வாவும்.
‘‘ஓ… புரோ… நீங்கத்தான் இப்படி அடிக்கடி சுவிட்சை போட்டு, போட்டு லைட்டை பீஸ்ஸாக்கிறதா… இந்த மாசத்தில இது நாலாவது தடவை. ஒவ்வொரு தடவையும் நாங்கத்தான் பிளாட், பிளாட்டா வசூல் பண்ணி லைட்டை வாங்கி போட்டுட்டு இருக்கிறோம். இப்படி கொஞ்சம் கூட அவேர்னஸ் இல்லாம பல்பை பீஸ்ஸாக்கிட்டீங்களே’’ என்றான் கோபத்துடன் ஆகாஷ்.
‘‘டேய்… நான் பீஸ் ஆக்லடா… லைட்ட போட்டேன் ஆப் ஆயிடிச்சு… அதனால மறுபடியும் போட்டு பார்த்துட்டு இருந்தேன். அவ்வளவுதான்’’ என்றான் அப்பாவியாக கமல்.
‘‘இல்லே… புரோ நீங்கதான் லைட்டை பீஸ்ஸாக்கிட்டீங்க… இருங்க நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட போய் சொல்றோம்’’ என்று மேலே ஏற ஆரம்பித்தான் அதர்வா.
‘‘டேய்… என்னடா இப்படி அராஜகம் பண்ணுறீங்க… இருங்கடா…’’ என்று யோசித்தவாறு, தன் பர்சில் இருந்து 10 ரூபாயை எடுத்து, ‘‘டேய் சாக்லேட் வாங்கி சாப்பிடுங்க… தயவு செஞ்சு செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லாதீங்கடா… ஏற்கனவே அவருக்கும் எனக்கும் ஆகாது’’ என்றான் கமல்.
‘‘அய்யய்யே… என்ன புரோ இப்படி சம்திங் எல்லாம் கொடுத்து சின்னப்பசங்கள கெடுக்க பார்க்கிறீங்க… இதெல்லாம் வேலைக்கு ஆகாது. நாங்க செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லியே ஆவோம். நாங்க எல்லாம் நல்ல பசங்க தெரியுமா?’’ என்றான் ஆகாஷ்.
என்ன செய்வது என்று யோசித்த கமல், ‘‘சரிடா… சிஎப்எல் எவ்வளவுடா?’’ என்றான் கமல்.
‘‘புரோ போன தடவை நாங்க ஒன் பார்ட்டி ருபீஸூக்கு வாங்கினோம்… இப்போ வெலவாசி எல்லாம் ஏறிடிச்சுல்ல… அதனால ஒரு ஒன்பிப்டி ஆயிருக்கும்னு நினைக்கிறேன்’’ என்றான் ஆகாஷ்.
‘‘சரி… இந்தாங்க’’ என்று ஒரு 100, 50 நோட்டுக்களை பர்சில் இருந்து எடுத்துக் கொடுத்து, ‘‘செகரட்டரி அங்கிள்கிட்ட சொல்லிடாதீங்க… நீங்களே பல்ப வாங்கி போட்டுடங்க… இந்த உங்களுக்கு ஆளுக்கு 10 ருபிஸ்’’ என்று அதுக்கு தனியாக 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினான்.
‘‘சரி…சரி… நீங்க தெரியாம தப்பு செஞ்சீங்கன்றதாலத்தான் உங்களை விடுறோம்… ஆனா இனிமே இப்படி எல்லாம் சின்னப்புள்ளைத்தனமா சுவிட்சை போட்டுட்டே இருக்காதீங்க… பல்பு பீஸ்ஸாயிடும். புரியுதா?’’ என்றான் ஆகாஷ்.
‘‘எல்லாம் என் தலையெழுத்துடா…’’ என்று தலையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றான் கமல்.
அவன் தலை மறைந்ததும், அங்கு
ஒன்றுக்கூடிய நால்வர் அணி, கையை மடக்கி, ‘‘ஹூர்ரே’’ என்று கத்தியது.
எல்லோரும் சேர்ந்து தேர்ட் புளோரில் வசிக்கும் செக்ரட்டரி வீட்டிற்கு சென்றனர். டோர் பெல் அடித்தபோது, காதில் போன் பேசியபடி எட்டி பார்த்தவரிடம், ‘‘அங்கிள் பர்ஸ்ட் புளோர் லைட் எரியல. போன தடவை மாதிரி எல்லார் வீட்டிலேயும் வசூல் பண்ணிடலாமா?’’ என்றான்.
அவர், ‘‘ஓகே. பசங்களா, நல்லா செய்யுங்க’’ என்று கூறிவிட்டு, ‘‘நீங்க வந்துடுங்க… சாப்பிட்டுக்கிட்டே பிராப்ளம் பத்தி பேசி முடிச்சுடலாம்’’ என்றார்.
எல்லோரும் ஒவ்வொரு வீடாக போய் வசூல் செய்தார்கள். பின்னர், ஒரு அரைமணி நேரம் பார்க்கில் விளையாடிவிட்டு மீண்டும் பிளாட்டுக்கு திரும்பினர். அப்போது தான் செகரட்டரி வெளியே சென்று கொண்டிருந்தார். கூடவே, டிரசரர் லேடி என்றழைக்கப்படும் சிவகாமியும், பிரசிடென்ட் ராமசாமியும் சென்று கொண்டிருந்தனர்.
எல்லோரும் சென்றுவிட்டதை உறுதி செய்துக் கொண்டவுடன், மீண்டும் சகாக்களுக்கு சைகை காட்டினான் ஆகாஷ். அவரவர் இடத்துக்கு செல்ல, பீஸ் ஆன சிஎப்எல் பல்பை எடுத்து, அதில் இருந்த 50 பைசா நாணயத்தை எடுத்து பையில் போட்டுக் கொண்டு பல்லை கீழே நின்றிருந்த அதர்வாவிடம் கொடுத்தான். அவன் ஏற்கனவே பையில் வைத்திருந்த பல்பை எடுத்து கொடுக்க, அதை ஹோல்டரில் பொருத்திவிட்டு கீழே இறங்கினான் ஆகாஷ்.
மீண்டும் ஒரு முறை எல்லோரும் ‘‘ஹூர்ரே’’ கூறிக் கொண்டார்கள்.
எல்லோரும் சேர்ந்து பக்கத்து தெருவில் இருக்கும், ‘பர்கர் ஹட்’டிற்கு சென்று, 4 பேர் அமரும் கேபினில் உட்கார்ந்து, 4 பர்கரை ஆர்டர் செய்தார்கள்.
ஜெய்தான் ஆரம்பித்தான். ‘‘புரோ, இந்த சூப்பர் ஐடியா, எப்படி உருவாச்சு?’’ என்றான்.
‘‘டிவியில கமல் படம் பார்த்திட்டு இருந்தேன்ல அதுல இருந்துதான்’’ என்றான் ஆகாஷ்.
‘‘செம புரோ…’’ என்றாள் ரோசி.
‘‘நம்ம செகரட்டரி இருக்காரே… அந்த ஓல்டு மேன். நீங்க எல்லாம் வளரணும் கய்ஸ்னு நமக்கே பாடம் சொல்றார்’’ அதர்வா கிண்டல் செய்தான்.
‘‘அந்த சொட்டையன திட்டாத புரோ… அவரும் இந்த ஐடியா ஓர்க் அவுட் ஆக ஒரு காரணம்தானே. இல்லாட்டி மினுக்கிக்கிட்டு கிடந்ததால கழட்டி வைக்கப்பட்ட பல்ப எடுத்துவந்து மாட்டி, அதை பியூசாக்கி கமல்கிட்ட காசு வாங்கினதையும், பல்பு பீஸ்னு சொல்லியே பிளாட்டுல வசூலிச்சதையும் செய்ய முடியுமா?’’ ஆகாஷ் சப்போர்ட் செய்தான்.
‘‘அந்த குந்தானி லேடி இருக்கே… அதான்பா அந்த டிரசரர் லேடி. என்னம்மா முறைக்குது. எப்பவும், அங்க விளையாடக்கூடாது, இங்க விளையாடக்கூடாதுன்னு… ஒரே கண்டிஷன். அவங்க வீட்டுலயும் ஒரு ஆப்ரேஷனை போடணும்பா…’’ என்றான் ஜெய்.
‘‘அடுத்ததடவை அந்த குந்தானி வீட்டு பல்புதான் டார்க்கெட்’’ என்று ஆகாஷ் கூறிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்த கேபினில் இருந்து ஒரு கை, அவனது காதை பிடித்து திருகியது.
‘‘ஆஆ….’ என்று கத்திக்கொண்டே பின்னால் திரும்பி பார்க்க, அடுத்த கேபினில் இருந்து வந்த கை, டிரசரர் லேடி உடையது.
அருகில் இருந்த செகரட்டரி, பிரசிடென்ட் ஆகியோரும், ஜெய், அதர்வா, ரோசியின் காதுகளை பிடித்துக் கொண்டார்கள்.
‘‘பாத்தீங்களா சார்… இந்த வயசுல இவங்க பண்ற வேலைய… பிளாட் பிரச்னையை பேச இங்க வந்தது சரியா போச்சு.. இல்லேன்னா இவங்களை பிடிச்சிருக்க முடியுமா…’இவனுங்க அப்பன்கிட்ட பேசலாம் வாங்க சார்’’ என்று கூப்பிட்டார் பிரசிடென்ட்.
இன்னமும் காசு விடுபடாத நிலையில் இருந்தான் ஆகாஷ்.
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks