16 July 2019

#சொக்கா



அலுவலகத்தில் பிசியாக இருந்த விஷ்ணுவின் செல்போன் செல்லமாக ஜெஸ்சி குரலில் சிணுங்கியது.
கான்ட்டாக்ட் லிஸ்ட்டில் இல்லாத எண்ணாக இருந்தது.
பச்சையை மேலே தள்ளிவிட்டு, ‘‘ஹலோ’’ என்றான்.
மறுமுனையில் சித்ரா எல்லாம் தோற்றுப்போவார். அவ்வளவு ஹஸ்கி குரலில் ஒரு இளம்பெண் பேசினார்.
‘‘சார் மிஸ்டர் விஷ்ணுங்களா?’’ ஹஸ்கி கேட்டது.
‘‘ஆமாம்... எங்கப்பா சூட்டின பேர் அப்படித்தான் என்று சர்டிபிகேட் சொல்லுது’’ கூறினான்.
‘‘நீங்க ரொம்ப நாட்டியாக இருப்பீங்க போல சார்...’’ செல்லமாக சிணுங்கினாள் ஹஸ்கி.
‘‘சொல்லுங்க... உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு...’’ வழிந்தான் விஷ்ணு.
‘‘சார்... நான் கிளப் நாகேந்திரால இருந்து பேசுறோம்’’ ஹஸ்கி கூற ஆரம்பித்தாள்.
‘‘அதுக்கென்னா பேஷா பேசுங்க... உங்க கிளப்புக்கு ஏதாவது டொனேஷன் குடுக்கணுமா?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘சார்... ஒரு ரெண்டு நிமிஷம் நான் பேசுறதை முழுசா கேளுங்களேன்’’ மீண்டும் செல்லம் கொஞ்சியது ஹஸ்கி.
‘‘சார் நீங்க போன வாரம் இ.யூ. போயிருந்தீங்கள்ல... அங்க எங்க கிளப் லக்கி வின்னர்ஸ் பார்மை நீங்க பில்லப் பண்ணீங்கள்ல... அதுக்கு உங்களுக்கு மெகா பிரைஸ் விழுந்திருக்கு சார்... நீங்க பெரிய அதிர்ஷ்டசாலிதான்’’ ஹஸ்கி கூறியது.
‘‘அட்ராசக்க... அட்ராசக்க... என்ன பிரைஸ் மேடம் விழுந்திருக்கு?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘சூப்பர் பிரைஸ் சார். குறைஞ்சது ஐம்பாதாயிரம் இருக்கும். உங்க வொய்ப் பார்த்தாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க... ’’
‘‘அப்படி என்னம்மா பிரைஸ்?’’
‘‘உங்களை சர்ப்பிரைஸ் பண்ண நாங்க திட்டமிட்டிருக்கிறோம். அதுவும் உங்களுக்கு பிரைஸ் மட்டும் கிடையாது சார். உங்களுக்கு விருந்து குடுத்து நாங்க பிரைஸ் குடுக்க போறோம்... ஹேப்பியா சார்?’’
‘‘என்னது விருந்துமா... நீங்க கிண்டல், கிண்டல் பண்ணலியே...’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கட்டாயாமா இல்ல... பிரைஸ் விழுந்தவங்களுக்கு எங்க சார்பில கிளப் கவுரப்படுத்திதான் அனுப்புவோம். அந்த வகையில நீங்களும் அதிர்ஷ்டசாலிதான். நீங்க உங்க வொய்ப்போட அல்லது நண்பரோட வந்து விருந்து சாப்பிட்டு, பிரைச வாங்கிட்டுப் போகலாம்’’
‘‘சரி நீங்க எதுக்கு இவ்வளவு செலவு பண்ணி பிரைஸ் தர்றீங்க?’’ (நான் எல்லாத்திலேயும் விவரமானவன்ல்ல) என்று நினைத்துக் கொண்டான் விஷ்ணு.
‘‘எங்க கிளப் விளம்பரத்துக்காக மக்களுக்கு இந்த மாதிரி பிரைஸ் குடுக்கிறோம். டிவியில விளம்பரம் போட்டா கூட நிறைய செலவு ஆகுமே... அதை நேரடியா மக்களுக்கு குடுப்போம்ன்ற நல்லெண்ணத்திலத்தான் இப்படி பண்றோம் சார்’’
‘‘ரொம்ப நல்ல மனசுமா உங்க கிளப்புக்கு. சரி எங்க வந்து விருந்து சாப்பிடணும்....? அப்படியே பிரைஸ் குடுப்பீங்கல்ல?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கட்டாயம் குடுப்போம் சார்.... நீங்க உங்க வொய்ப்போட வர்றீங்களா சார்?’’
‘‘இல்லம்மா... நான் என் பிரண்டோட வர்றேன்... எங்கே போனாலும்  நாங்க  ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவோம்’’ காலரை தூக்கிவிட்டுக் கொண்டு சொன்னான் விஷ்ணு.
எதிரே இருந்த டேபிளில் பைல் பார்த்துக் கொண்டிருந்த குமாரை பார்த்து, ‘உன்னைப்பத்தித்தான் சொல்லிட்டு இருக்கேன்’ என்பதுபோல் போனையும், அவனையும் பார்த்து சைகை காட்டினான் விஷ்ணு. குமாரும் அங்கிருந்தபடி கட்டை விரலை தூக்கி காண்பித்தான்.
‘‘சரி சார்... நீங்க வர்ற ஞாயிற்றுக்கிழமை மறக்காம விஜிபிக்கு  பக்கத்தில இருக்கிற புளூமூன் ரெசார்ட்டுக்கு வந்துடுங்க... உங்க பிரண்டையும் கூட்டிட்டு வாங்க  சார்’’
‘சரிம்மா... கட்டாயம் வந்துடுறோம்... பிரஸை் ரெடி பண்ணி வைங்க’’ என்றான் விஷ்ணு.
‘‘உங்களுக்காக ரெடியா இருக்கு சார்...  மறக்காம வாங்க.  நான் வச்சிடுறேன் சார்’’ என்று சிணுங்கிய ஹஸ்கி.
‘‘சரிம்மா’’ என்றான் விஷ்ணு.
போனை வைத்தவுடன் குமாரிடம் சென்று விஷயத்தை தெரிவித்தான்.
‘‘மச்சி இது என்னமோ பிராடு வேலை மாதிரி தெரியுது... எவனாச்சும் சும்மா நமக்கு விருந்து போட்டு ஐம்பதாயிரத்துக்கு பரிசு குடுப்பானா? வேண்டாம்டா... அப்படியே விட்டுடு’’ என்றான் குமார்.
‘‘டேய் சண்டே அன்னைக்கு ஒருத்தன் விருந்து போட்டு பரிசு குடுக்கிறேன்கிறான்... அத வாங்கிட்டு வர்றதவிட்டுட்டு நீ  என்னடா இப்படி பயப்படுறே... சண்டே போறோம்... தூக்குறோம்’’ உற்சாகமாக கூறினான் விஷ்ணு.
‘‘சரி உன் இஷ்டம்’’ என்றான் குமார்.
ஞாயிற்றுக்கிழமை  காலை.
நண்பர்கள் இருவரும் வழக்கமாக கூடும் இடத்தில் கூடினர்.
‘‘குமாரு... நாம பைக்கில போய் பிரைஸ் வாங்குறது நல்லா இருக்குமா... டிப்டாப்பா கார்ல போய்  இறங்குவோம் மச்சி. அதுவும் இல்லாத ஐம்பதாயிரம் ரூபா பிரைச பைக்கில எப்படி வச்சிட்டு வர்றது’’
‘‘டேய் பிசாத்து பிரைஸ் குடுக்கப்போறானுங்க… அதுக்கு கார்ல வேற போகணுமா?’’
‘‘விட்றா... விட்றா எவ்வளவோ செலவழிக்கிறோம்... கெத்தா போய் இறங்குவோம் மச்சி...’’ என்று கூறிவிட்டு கால்டாக்சி புக் செய்தான் விஷ்ணு.
‘‘மச்சி... அப்புறம் ஒரு சின்ன ஹெல்ப். என்கிட்ட ஒரு காந்தி கூட  இல்ல... அதனால நீதான் செலவழிக்கணும். இன்னைக்கு பூரா உன் மண்டகப்படிதான்’’ என்றான் விஷ்ணு.
‘‘என்னடா இன்னைக்கு பூசாரி,  என்றைக்கு இல்லாத திருமுகமாக தலைய ஆட்டி ஆட்டி பேசுதேன்னு நினைச்சேன்...   நான் தான் இன்னைக்கு ஆடா. சரி குடுத்து தொலைக்கிறேன்’’ நொந்துக் கொண்டான்  குமார்.
‘‘அப்படி எல்லாம் சலிச்சுக்கப்படாது நண்பா...’’ என்று விஷ்ணு கூறுவதற்குள் கார் வந்து நின்றது.
இருவரும் ஏறி ரெசார்ட்டுக்கு சென்றடைந்தனர்.
வாசலிலேயே  இரண்டு இளம்பெண்கள் கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார்கள். இவர்களை பார்த்ததும், அருகில் வந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு, நெற்றியில் திலகமிட்டார்கள்.
டாகலென்று குமாரின் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து தட்டில்போட்டான்  விஷ்ணு.
‘‘தேங்க்யூ சார்’’ என்று குளோசப் புன்னகையை காட்டினர் அந்த இளம்பெண்கள்.
அவர்களை பார்த்துவிட்டு திரும்ப, குமார் முறைத்துக் கொண்டிருந்தான்.
‘‘விடு... மச்சி... ஆரத்தி எடுத்தா காசு போடனும். அதுதான் சம்பிராதாயம்’’ என்றான் விஷ்ணு.
‘‘அத உன் பையில இருந்து போட்டிருக்கனும்டா… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு... ’’ என்று நறநறவென்று பல்லைக்கடித்து காட்டினான் குமார்.
அவனை அப்படியே அணைத்தபடி உள்ளே கூட்டிச் சென்றான் விஷ்ணு.
குளிரூட்டப்பட்ட ஹாலில் வட்டமேஜைகள் போடப்பட்டு ஜோடி, ஜோடியாக உட்கார்ந்திருக்க, அவர்களிடம் ஒரே மாதிரி யூனிபார்ம் போட்ட பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த விஷ்ணுவையும், குமாரையும் பார்த்தவுடன் எங்கிருந்த ஒரு பேரர் ஓடிவந்து ஆரஞ்சு குளிர்பானத்தை கொடுத்தான். வெயிலுக்கு இதமாக இருந்த குளிர்பானத்தை குடித்து முடித்தவுடன், ஒரு அழகு தேவதை அசைந்து வந்து,  ‘‘உங்க போன்ல பிரைஸ் விழுந்ததுக்கான ஐடி வந்திருக்குமே, அந்த நம்பர சொல்லுங்க சார்’’என்றது.
விஷ்ணு நம்பரை பார்த்து சொல்ல, அந்த தேவதை யாரிடமோ பேச, அங்கு இன்னொரு தேவதை வந்தது. முதல் தேவதையை காட்டிலும் இது ரெண்டு இஞ்ச் பவுடர் கூடுதலாக அப்பியிருந்தது.
‘‘ஹூயூமர் விஷ்ணு சார்... நான் தான் உங்கக்கிட்ட போன்ல பேசினேன்’’ என்று கொஞ்சியது அந்த தேவதை.
‘‘ஓ... நீங்கதானா...  போன்லவிட நேர்ல  நீங்க ரொம்ப  அழகா இருக்கீங்க...’’ என்றான் விஷ்ணு.
‘‘சார்... போன்ல  எப்படி சார் என் முகம் தெரியும்... இருந்தாலும் நீங்க ரொம்ப நாட்டி சார்’’ என்றது தேவதை.
பேசிக் கொண்டே  குமாரை  பார்த்த தேவதை, ‘‘சார் இவர் உங்க நண்பரா?’’ என்றாள்.
‘‘சேச்சே... இது என் பிஏ. பெயர் குமார். என் நண்பர் கொஞ்சம் பிசியாக இருக்கார் அதனால வர முடியல…’’ என்றான் ஸ்டைலாக.
அந்தப்பக்கம் குமார் முறைத்துக் கொண்டிருந்ததை கண்டுக்கொள்ளாமல், தேவதையிடம், ‘‘சரிம்மா.. நீங்க ஏதோ  பிரைஸ் தர்றேன்னு சொன்னீங்களே... அதை குடுத்தா போய்ட்டே இருப்போம்’’ என்றான் விஷ்ணு.
‘‘கொஞ்சம் இருங்க சார்...’’ என்று கூறிவிட்டு, யாரையோ அழைத்தாள்.
அந்தப்பக்கத்தில் இருந்து ஒரு டை கட்டிய ஆசாமி வந்தான். இவர்களை பார்த்து, ‘‘குட்மார்னிங்  ஜெண்டில்மேன்’’ என்றான்.
‘‘குட்மார்னிங்’’ என்றான் விஷ்ணு. குமார், வந்தவனையும் முறைத்தபடி இருந்தான்.
‘‘இப்ப பார்த்தீங்க, எங்க நாகேந்திரன் கிளப்ல லைப் மெம்பர்ஷீப் இருக்கு... நீங்க வருஷத்துக்கு ரெண்டு வாட்டி காஷ்மீர்ல போய் ரெஸ்ட் எடுக்கலாம். உங்க கவலைகளை எல்லாம் மறந்து ஹாயா இருக்கலாம். சாப்பாட்டுல இருந்து டிரிங்ஸ் வரை ப்ரீ தான் சார்’’ என்றான் டை ஆசாமி.
‘‘காஷ்மீர்ல... வருஷத்துக்கு ரெண்டு வாட்டிடிடி....’’  என்று டை ஆசாமியிடம் கேட்டான் குமார்.
‘‘ஷூயூர் ஜென்டில்மேன்... ஆப்பிள் தோட்டத்துக்கு மத்தியில இருக்கிற எங்க ரெசார்ட்ல போய்ட்டீங்கன்னா... நீங்க உலகத்தையே மறந்துடுவீங்க...’’ என்றான் டை. அவனுடன் சேர்ந்து புன்னகைத்தான் தேவதை.
‘‘சார்... உங்க அழகுக்கும், அந்தஸ்த்துக்கும், நீங்க இந்த மாதிரி லைப் டைம் பிளாட்டினம் மெம்பர் ஷீப் எடுத்துக்கிட்டீங்கன்னா... அது உங்களுக்கு மட்டும் இல்ல சார் எங்களுக்கும் பெருமையா இருக்கும்’’ என்றது தேவதை.
பக்கத்தில் இருந்த குமாரிடம், ‘‘டேய் வெறும் பிளாட்டினம் கார்டு தானே போட்டுறலாம்டா... அப்புறம் பிரைஸ் கிடைச்சிடும் வாங்கிட்டு போய்ட்டே இருக்கலாம்’’ என்று முணுமுணுத்தான்  விஷ்ணு.
‘‘சரிம்மா... மெம்பர்ஷிப்க்கு எவ்வளவு கட்டணும்?’’ கேட்டான்  விஷ்ணு.
‘‘ஜஸ்ட்.... த்ரீ லேக்ஸ் பிப்டி தவுசண்ட்ஸ் மட்டும்தான் சார்’’ என்று சிணுங்கியது தேவதை.
‘‘என்னது மூன்றரை லட்சமா?’’ குமார் கிட்டத்தட்ட எழுந்துவிட்டான்.
அவனை ஆசுவாசப்படுத்தி அமர வைத்த விஷ்ணு, ‘‘மேடம்... இது எங்களுக்கு ஒத்து வராது. இன்னும் கொஞ்சம் கம்மியா இருக்கிறத சொல்லுங்க’’ என்றான்.
‘‘அடுத்தது கோல்டு கார்டு இருக்கு... அது வெறும் டூ லேக்ஸ் தான் சார்’’ என்றான் டை.
‘‘நெக்ஸ்ட்’’ என்றான் ஸ்டைலாக விஷ்ணு.
‘‘சில்வர் கார்டு ஒன் அண்ட் ஆப் லேக்ஸ் சார்’’ என்றது தேவதை.
அருகில் கொதித்துக் கொண்டிருந்த குமாரை பார்க்காமல், ‘‘பாஸ்’’  என்றான் விஷ்ணு.
‘‘அடுத்த குறைவான மெமம்பர்ஷீ்ப்புன்னா எச்பி கார்டு இருக்கு சார்.  அது வருஷத்துக்கு 50 ஆயிரம் ரூபா தான் சார்... ஆனா, உங்க தகுதிக்கும், அழகுக்கும் இந்த மாதிரியான மெம்பர்ஷீப் சரியா இருக்காது சார்... நீங்க கோல்டு கார்டு எடுத்தீங்கன்னாத்தான் நல்லா இருக்கும்’’ என்றது தேவதை.
‘‘இல்லம்மா நேத்துதான் ஒரு 3 குரோர்ல கான்ட்ராக்ட் எடுத்தோம். அதனால பயங்கர டைட்ல இருக்கோம். மினிமமா ஏதாவது இருந்தா சொல்லுங்க... நீங்க கெஞ்சுறத பார்த்து என்னால சும்மா போக முடியல...’’ என்றான் விஷ்ணு.
பக்கத்து சீட்டில் இருந்த குமாரின் கைகளில் இறுக்கப்பட்டுக் கொண்டிருந்த கிளாசை வாங்கி சற்று வைத்தான் விஷ்ணு.
‘‘ஓ.... சூப்பர் சார், த்ரீ குரோர்ல கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்திருக்கீங்க… இது என்ன பெரிய விஷயமா சார்’’ சிணுங்கியது தேவதை.
‘‘வேற வழியில்லமா… நீங்க சொல்லித்தான் ஆகணும்’’ என்றான் விஷ்ணு.
‘‘சரி சார்… இப்போதைக்கு ரொம்ப குறைவானதுன்னா... ஒரே ஒரு கார்டுதான் இருக்கு. பிரைமரி கார்டு. அது 12,500 ரூபா சார்...’’ என்றது தேவதை.
‘‘அது சரி மேடம் இப்போ என்கிட்ட காசில்லையே... நீங்க அப்புறமா வாங்கிக்க முடியுமா?’’ கேட்டான் விஷ்ணு.
‘‘கேஷ் இல்லைன்னாலும் பரவாயில்ல சார்... கார்டு கூட அக்சப்ட் பண்ணிக்குவோம்’’ என்றது தேவதை.
படாரென்னு குமாரின் பையில் இருந்த கிரெடிட் கார்டை எடுத்து குடுத்தான் விஷ்ணு.
‘‘டேய்... டேய்...  இந்த மாசம் வீ்ட்டுக்கு...’’ என்று அவன் பேச ஆரம்பிப்பதற்குள்,  அவனது வாயை பொத்திவிட்டு, ‘‘மேடம் நீங்க போய் சீக்கிரம் சுவைப் பண்ணிட்டு வாங்க’’ என்றான் விஷ்ணு.
‘‘ஷோாாா...  சுவீட்ட்ட்...’’ என்று கூறிவிட்டு எழுந்து சென்றாள் தேவதை.  பின்னாடியே டையும் கழன்று சென்றது.
‘‘மடையா கார்டுல இருக்கிற 16 ஆயிரம் ரூபாய வச்சுட்டுத்தான் இந்த மாசம் குடும்பத்த ஓட்டணும்.. அதைப்போய் தூக்கி குடுத்திட்டீயே… இப்போ பூவாவுக்கு நான் என்னடா பண்ணுவேன்?’’ கத்தாத குறையாக கேட்டான் குமார்.
‘‘விடு மச்சி… இதெல்லாம் நம்ம வரலாற்று பக்கங்கள்ல பேசப்படுறதா இருக்கும்’’ என்றான் விஷ்ணு.
தேவதை திரும்பி வந்து ஒரு ரிசிப்ட் குடுத்தது. அத்துடன் கலர், கலராக சில விளம்பர காகிதங்கள்.
‘‘சரி மேடம்… அந்த ஐம்பதாயிரம் ரூபா பிரைஸ்…’’ என்று இழுத்தான் விஷ்ணு.
‘‘ஓ… சாரி சார்…’’ என்று மீண்டும் உள்ளே சென்று அழகாக கிப்ட் பேக் செய்யப்பட்டிருந்த ஒரு பொட்டலத்தை கொண்டு வந்து குடுத்தாள் தேவதை.
‘‘இது என்ன கிப்டுமா…?’’ என்று கேட்டான் குமார்.
‘‘நீங்க எந்த ஓட்டல், ரெசார்ட், சினிமா போனாலும் யூஸ் பண்ணிக்கிறதுக்கு கிப்ட் வவுச்சர் இருக்கு சார்… ஹேப்பி தானே? கட்டாயம் சாப்பிட்டு போங்க சார்…லெப்ட்ல டைனிங்’’ என்றாள் தேவதை.
இல்லை, ஆமாம் என்று சொல்லாமல், கோணல், மாணலாக சிரித்து வைத்தான் விஷ்ணு.
தேவதை அகன்ற பிறகு பின்னால் பார்த்தான்.
கிப்ட் பேக்கை இரண்டு கைகளிலும் பிடித்தபடி, கண்கள் சிவக்க நின்றுக் கொண்டிருந்தான் குமார்.
‘‘ஷோாாாா…. சுவீட்ட்ட்ட் ’’ என்று அவனது கன்னத்தை கிள்ளி, ‘‘மச்சி நீ எப்பவுமே இப்படித்தான். எல்லாத்திலேயும் கோபப்பட்டுடுவே…’’ என்று கிப்ட் பேக்கை வாங்கிக் கொண்டு டைனிங் டேபிளுக்கு இழுத்து சென்றான் விஷ்ணு.
பிரிஞ்சி சாதத்தை பார்த்தவுடன், மீண்டும் விஷ்ணுவை பார்த்து முறைத்தான் குமார்.
‘‘டேய்… பேசாம… வீட்டில இருந்திருந்தாதா கூட பிரியாணி கிடைச்சிருக்கும்… உன்னை நம்பி வந்ததுக்கு இதுவும், இன்னணும் வேணும்டா’’ என்றான் குமார்.
‘‘இன்னும் வேணுமா…’’ என்று கேட்டுக் கொண்டே, ஒரு கரண்டியில் சிறிது பிரிஞ்சியை எடுத்து குமார் தட்டில் வைத்தான் விஷ்ணு.
‘‘டேய்…’’ என்று குமார் கத்த ஆரம்பித்தபோது, அவன் வாயில், காலி பிளவர் ரோஸ்ட் ஒன்றை வைத்தான் விஷ்ணு.
ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வர, டாக்சி டிரைவர் பவ்யமாக கதவை திறந்துவிட்டான்.
மவுனமாக இருவரும் ஏறி அமர்ந்தனர்.
‘‘மச்சி… இவ்வளவு தூரம் வந்தாச்சு… அப்படி மகாபலிபுரம் போய்ட்டு, நம்ம ரெசார்ட்டுக்கு போய் ஒரு பீர் சாப்பிட்டு சாயங்காலம் வீட்டுக்கு போவேமே… அதுதான் கிப்ட் கூப்பன் இருக்கே’’ என்றான் விஷ்ணு.
‘‘எதையாவது பண்ணித்தொலை…’’ என்றான் கோபத்தில் இருந்த குமார்.
இருவரும் மகாபலிபுரம் டைமண்ட் ரெசார்ட்டுக்கு சென்றனர்.
ரிசப்ஷனில் அழகான பச்சைநிற பட்டுடுத்தி நின்ற ஒல்லிக்குச்சி பெண்ணிடம், ‘‘கிப்ட் வவுச்சர் ஏத்துக்கிடுவீங்க இல்ல?’’ என்றான் முன்ஜாக்கிரதையாக.
‘‘சியூர் சார்…’’ என்றாள் பணிவுடன்.
ரூமில் போய் உட்கார்ந்து, பீரை ஆர்டர் பண்ணினார்கள். ஒரு வழியாக இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தான் குமார்.
இருவரும் ரூமில் டிவியை சத்தமாக வைத்துக் கொண்டு, மைக்கேல் ஜாக்சனுக்கு ஆட்டம் போட்டார்கள். அப்படியே சாப்பிட்டு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டார்கள்.
எழுந்தபோது மணி 5 ஆகியிருந்தது.
‘‘மச்சி சீக்கிரம் கிளம்பு இப்போ புறப்பட்டாத்தான் வீட்டுக்கு போறதுக்கு சரியாக 8 மணி ஆயிடும்’’ என்றான் விஷ்ணு.
ரிசப்ஷனில் வந்தபோது இன்னொரு ஒல்லிக்குச்சி சிவப்பு பட்டில் இருந்தாள்.
‘‘ரூம் நம்பர் 111. பில் எவ்வளவுமா’ ’ என்றான் விஷ்ணு.
கம்ப்யூட்டரை தட்டிப்பார்த்த  சிவப்பு பட்டு 5 தவுசண்ட் ஒன்லி சார்’’ என்றாள்.
கிப்ட் பேக்கை பிரித்து, ரெசார்ட் என்று போட்டிருந்த கூப்பனை எடுத்து ஸ்டைலாக நீட்டினான் விஷ்ணு.
அதை வாங்கிப் பார்த்த சிவப்பு பட்டு, ‘‘ஓகே சார் 4 தவுசண்ட் மட்டும் பே பண்ணுங்க’’ என்றாள்.
‘‘நல்லா பாரும்மா… அது கிப்ட் கூப்பன்… இதை குடுத்தா ஒண்ணுமே குடுக்க வேண்டிதில்லன்னு… கிளப் நாகேந்திராவில சொன்னாங்களே’’ என்றான் விஷ்ணு.
‘‘இது கிப்ட் கூப்பன் இல்ல சார்… டிஸ்கவுன்ட் கூப்பன். உங்களோட டிஸ்கவுன்ட் போகத்தான் 4 தவுசண்ட்ஸ் கட்டச் சொல்றேன்’’ என்றாள்.
‘‘அப்போ இந்தாங்க… இன்னும் 4 கூப்பன். சரியா வந்துடுச்சா’’ என்றான் விஷ்ணு. அப்படியே குமாரை ஒரு பார்வை பார்த்தபடி, நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே என்பதுபோல் ஒரு முகபாவனையை காட்டினான்.
‘‘சார் ஒரு கெஸ்ட்டுக்கு ஒரு கூப்பன்தான்’’ என்றாள்.
‘‘நாங்க ரெண்டு பேர் இருக்கோமே… அட்லீஸ்ட் ரெண்டு கூப்பனாவது எடுத்துக்கிறலாமேம்மா’’ என்றான் விஷ்ணு.
சிவப்பு பட்டு அநியாயத்துக்கு முறைத்துக் கொண்டிருந்தது.
சற்றே திரும்பிய விஷ்ணு…. இந்த முறையும் சடாரென்று பாய்ந்து குமாரின் கிரெடிட் கார்டை எடுத்து சிவப்பு பட்டிடம் நீட்டினான் விஷ்ணு.
அவன் எடுப்பதற்கும், ஒரு விநாடி தாமதமாக குமார் தன் சட்டைப்பையை பிடிக்கவும், நான் ஜெயிச்சிட்டேன்ல என்பதுபோல் பார்த்தான் விஷ்ணு.
அப்போதுதான் விஷ்ணுவின் போன் அடித்தது.
எடுத்து பேசினான். தவறுதலாக ஸ்பீக்கர் மோடில் விழுந்துவிட, போகிறது என்று அப்படியே பேசினான்.
‘‘சார்… நாங்க கிளப் மேனியாவில இருந்து பேசுறோம்… உங்களுக்கு பம்பர் பிரைஸ் விழுந்திருக்கு சார்’’ என்றது மறுமுனையில் ஒரு தேவதையின் குரல்.
கேட்ட மாத்திரத்தில், குமாரை பார்த்தான் விஷ்ணு.
ரிசப்ஷன் டேபிளில் இருந்த பிளவர்வாஷை எடுத்து விஷ்ணுவை அடிக்க பாய, விஷ்ணு தலைதெறிக்க வாசலை நோக்கி ஓடினான்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
x