11 February 2019

புளியோதரையும், பாலகுமாரனும்

ஊருக்கு போகணுமா, காலையில இருந்து ஷாப்பிங் கிளம்பணுமா, பொருட்காட்சிக்கு போகணுமா..... வை புளியோதரை என்பார்கள்.
எல்லாவற்றுக்கும் கைக்கொடுக்கும் இந்த புளியோதரையை தரமாக ருசித்தவர்கள், வாழ்நாளில் வேறு எந்த சாதத்தையும் விரும்ப மாட்டார்கள். முதல் காதலியைப்போல்.டீக்கு மட்டுமல்ல, புளியோதரைக்கும், மணம், நிறம், திடம் உண்டு.
புளிக்காய்ச்சலின்போதே தெரிந்துவிடும், வீட்டுக்குள் ‘டைகர் ரைஸ்’ உருவாகிறது என்று. சும்மா... அதிருதுல்லெ... என்ற பாணியில், புளியுடன், தனியா, பெருங்காயம் காயும் வாசனைக்கு முன்னால், டைகர் பாம் எல்லாம் ‘உள்ளேன் ஐயா’தான்.
ஸ்டாலின் பாணியில் சொல்வதென்றால், ஆக.... புளியோதரைக்கும் மணம் உண்டு.
அடுத்ததாக நிறம்.புளியோதரைக்கு நிறம் மிக முக்கியமானது.
மனிதர்களில் வேண்டுமானால் சிவப்பு தோலுக்கு மவுசு இருக்கலாம். ஆனால், திருவாளர் புளிக்கு, கருப்புதான் மகா லட்சணம் பொருந்திய சாதத்துக்கான நிறம்.
சிலர் வெள்ளை யானை என்று, வெளிறிய இளஞ்சிவப்பு நிறத்திலான யானையை காட்டுவார்கள். எம்.ஆர்.ராதா பாணியில்.... டேய்... அப்பா... உங்க தொல்லை தாங்க முடியலடா என்று தான் சொல்லத்தோன்றும்.
அதுபோன்றுதான், புளியோதரை என்றால், அது அடர் மஞ்சள் மற்றும் ஆங்காங்கே புளிக்கரைசல் ஒட்டிய கருப்பும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், அது புளியாக இருக்காது. பூனையாக இருக்கும்.
இதற்கு மிக முக்கியமானது. புளி தேர்வு. புதுப்புளி வெள்ளை சாதத்துக்கு வெளிறிய மஞ்சள் நிறத்தை கொடுக்கும். அது பார்வையை சுண்டி இழுக்காது. கருப்பாய் இருக்கும் பழைய புளிதான், சும்மா கும்முன்னு.... நாட்டுமல்லி கணக்காய் பார்வையை சுண்டியிழுக்கும்.
அடுத்ததாக புளியோதரையில் சிலர் நிலக்கடலை சேர்ப்பார்கள். சிலர் கடலைப்பருப்பை சேர்ப்பார்கள். என்னைப் பொருத்த வரையில், இரண்டுமே மிகச்சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது புளியோதரையின் சுவையை எந்தவிதத்திலும் பாதிப்பதாக இருக்கக்கூடாது. கடலை மிட்டாய் சாப்பிட்டு முடித்தபின் பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் சின்னத் துகளை நோண்டு, துழாவி எடுத்து சாப்பிடும் சுவையைப் போன்று இருக்க வேண்டும்.
புளியோதரையில் எண்ணெய்யை சிலர் கூடுதலாக சேர்த்துவிடுவார்கள். அது ருசியை சேர்ப்பதற்கு பதில் கையில் வழுவழுப்பைத்தான் கூட்டும். இதுவும் அளவோடு இருக்க வேண்டும்.
‘ஆக....’ மணம், நிறம், திடத்துடன் இருக்கும் புளியோதரை உருண்டையாக அமுக்கி, பிசக்காமல், பால் சாதம் போன்று, அழுங்கல், குலுங்கல் இல்லாமல் சாப்பிட வேண்டும்.
புளியோதரைக்கு சைடீஸ்..... சில பேர் தேங்காய் சட்னி என்பார்கள். சில பேர் சுண்டல் என்பார்கள், மேலும் சிலர் தேங்காய் பத்தை என்பார்கள். என்னை பொருத்த வரையில், சுண்டல்தான், புளியோதரைக்கு பெஸ்ட் ஜோடி. அதுவும் சுண்டல் நச, நச என்றில்லாமல், கொஞ்சம் திக்காக வேகவைத்து சாப்பிட்டால், அட, அட..... இதற்கு நிகர் வேறு என்ன வேணும்?
ஈரேழு லோகத்திலும் தேடினாலும், லட்சத்தெட்டு ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், நல்ல புளியோதரை ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கும்.
பங்குனி மாதம், மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில், சாமி ஆற்றில் இறங்கும் வைபத்தின்போது, ஜானகி வகையறா மண்டபத்தில் விநியோகிக்கப்படும் புளியோதரை அந்த ஜாதியைச் சேர்ந்தது. முடிந்தால், மதுரைக்கு டிக்கெட் போடுங்கள். புளியோதரை ரசிகர்கள் மன்றத்தில் இணையுங்கள். - ஜே.எஸ்.கே.பாலகுமார்.