03 March 2019

அது, அதுக்கு ஒரு வழி!

குழந்தை அழுதுக் கொண்டே இருந்தது.
‘‘டேய் ராகவா… குழந்தை எதையோ பார்த்து பயந்திருக்குடா… சின்னக்கடை மசூதியில போய் மந்திரிச்சுட்டு வாடா. அப்பத்தான் குழந்தையோட அழுகை நிற்கும்’’ அம்மா கத்தாத குறையாக கூறினாள்.
‘‘அட போம்மா… இந்தக்காலத்தில கூட இன்னமும் மாந்திரீகம்… பாய்ன்னுட்டு’’ சலித்துக் கொண்டேன், 
‘‘அப்படியில்லடா… ஒரு சிலது, அதுக்குன்னு இருக்கிற வழியில போனாத்தான் கட்டுப்படும். உன்னை சின்னப்புள்ளையில எத்தனை தடவை பாய்கிட்ட தூக்கிட்டு போயிருக்கேன் தெரியுமா?’’
‘‘ஏன் இங்கன இருக்கிற காளிக்கோயில்ல போய் மந்திரிச்சா… சரியாகாதா?’’ குதர்க்கமாக கேட்டேன்.
‘‘டேய்… உன் விதண்டாவாதத்தை எல்லாம் தூக்கி குப்பையில போடு… காளின்னாலும், அல்லான்னாலும், ஏசுன்னாலும் எல்லாம் பொம்பைளைங்களுக்கும் ஒண்ணுதான். ஏன், எத்தனை முஸ்லிம் பெண்கள் காளிக்கோயிலுக்கு குழந்தையோட வர்றாங்க… எங்களுக்கு குழந்தை நல்லாயிருக்கணும் அவ்வளவுதான். அது எந்த கடவுளா இருந்தாலும் எங்களோட குழந்தையை சரி செஞ்சா போதும்… ஏன் உனக்கு உடம்பு முழுக்க திடீர் கட்டி, கட்டியா வந்தப்போ சிங்குக்கிட்ட போய் மந்திரிச்சுட்டு வரல? அதுக்கு முன்னாடி எத்தனை டாக்டர்கிட்ட காட்டியிருப்ப ஏதாவது சரியாச்சா?’’
‘‘சரி… சரி… உன் புராணத்த ஆரம்பிக்காதே… நான் கூட்டிட்டு போறேன்’’ என்று குழந்தையை வாங்கிக் கொண்டு, சின்னக்கடை மசூதிக்கு கிளம்பினேன்.
அங்கே ஏற்கனவே டோக்கன் வாங்கிக் கொண்டு ஏகப்பட்ட பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.
நான் போனபோது 10வது டோக்கன்தான் கிடைத்தது.
5 ரூபாய் கொடுத்துவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றிருந்தேன்.
பாய் எனப்படும் முஸ்லிம் பெரியவர், தொழுகையை முடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தார்.
குழந்தை இன்னமும் அழுதுக் கொண்டிருந்தது.
‘‘பார்வதி இருந்திருந்தா… அவளை அனுப்பியிருக்கலாம். அவ எக்ஸாம்னுட்டு பெங்களூரு போய்ட்டா… அம்மாவால நடக்கவும் முடியாது… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவன் ரொம்ப படுத்துறானே…’’ மனதில் முனங்கிக் கொண்டே வரிசையில் முன்னேறினேன்.
என் முறை வந்தபோது, கையில் இருந்த டோக்கனை எடுத்து பாயிடம் குடுத்தேன்.
என்னை ஏறெடுத்து ஒரு கனம் பார்த்தார்.
‘‘எல்லாத்துக்கும் சந்தேகப்படாதே… நமக்கும் மேல ஒருவன் இருக்கிறான்… ’’ என்று கூறிவிட்டு, குழந்தையை பார்த்து ஏதோ மவுன பாஷையில் கூற ஆரம்பித்தார். பின்னர் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து குழந்தையின் முகத்தில் சடாரென அடித்தார். சாம்பல் போன்றிருந்த ஒன்றை எடுத்து அவன் நெற்றில் தழும்பில் இட்டார்.
இவ்வளவு நேரம் ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்த குழந்தை, அழுகையை நிறுத்திவிட்டது.
‘‘இன்ஷா அல்லாஹ்’’ என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு கனம் பார்த்துவிட்டு என்னைப்பார்த்துவிட்டு, அடுத்த டோக்கன்காரரை கவனிக்க ஆரம்பித்தார் பாய். அவரது பார்வையின் பின்னால் பல அர்த்தம் இருப்பதாக பட்டது.
குழந்தையை இடது கையில் இருந்து வலது கைக்கு மாற்றினேன்.
விடாமல் அழுதுக் கொண்டிருந்த அவன், இப்போது என்னைப்பார்த்து சிரித்தான். அம்மா சொன்னது சரிதான். அது, அதுக்குன்னு ஒரு வழி இருக்கிறது நிஜம்தான்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.