03 June 2019

கல்யாணப்பரிசு


கல்யாணப் பரிசு

‘‘தனம்… தனம்…’’ கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார் சந்தானம்.
‘‘என்னங்க… இங்கதானே இருக்கேன்… ஏன் பத்து ஊருக்கு கேட்கிற மாதிரி கத்திட்டு வர்றீங்க?’’ பதில் கொடுத்தாள் தனம் எனும் தனலட்சுமி.
‘‘நம்ம பொண்ணு கல்யாணத்தினால, என் சித்தப்பா பொண்ணு மக கல்யாணத்துக்கு போக முடியலல்ல… இன்னைக்கு போய் ஒரு எட்டு போய்ட்டு கிப்டு குடுத்திட்டு வந்திடலாம். சீக்கிரம் ரெடியாயிடு’’
‘‘உங்க சொந்தக்காரங்கத்தானே… நீங்க மட்டும் போய்ட்டு வர வேண்டியதுதானே... என்னை ஏன் கூப்பிடுறீங்க?’’
‘‘ஏண்டி… எங்க சொந்தக்காரங்கன்ன நான் மட்டும் போகணுமா….? அப்போ உங்க சொந்தக்காரங்க கல்யாணம்னா நீ மட்டும் போக வேண்டியதுதானே? என்னை ஏன் போன மாசம் உங்க அத்தை பொண்ணு கல்யாணத்துக்கு கூப்பிட்டே?, அதுவும் உடம்பு சவுரியம் இல்லாதவன கூட கூப்டு போனே? உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா, தக்காளி சட்னியா?’’
‘‘சரி, சரி வந்து தொலைக்கிறேன். ஆரம்பிச்சுடாதீங்க, உங்க புராணத்தை…’’ என்றபடியே சேலை உடுத்த உள்ளே சென்றாள் தனம்.
அதற்குள் சந்தானமும் பட்டு வேட்டி, சட்டையுடன் தயாராகி இருந்தார்.
‘‘தனம்… அவங்க நம்ம பையன் கல்யாணத்துக்கு 500 ரூபா செஞ்சிருந்தாங்க… அதனால அதவிட கூட செஞ்சாத்தான் நமக்கு மதிப்பா இருக்கும்… போறப்போ ஏதாவது ஹாட்பேக் ஒண்ணு வாங்கிட்டு போயிடலாம்’’
‘‘அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம்… பொண்ணு கல்யாணத்தில வந்த பாத்திரங்கள்ல ஒரு குடம் பெயர் போடாம இருக்கு… அதை குடுத்திடலாம்’’
என்னடா ஹாட்பேக்குன்னு சொன்னா… இவ குடம் வரைக்கும் போறாளேன்னு யோசனையாக இருந்தார் சந்தானம்.
அதற்குள் பரணில் கவர் போட்டு கட்டி வைத்திருந்த குடத்துடன் வந்து சேர்ந்தாள் தனம்.
குடத்தை எடுத்து பார்த்தார் சந்தானம்.
அழகாக இருந்தது. இதை எப்படி குடுக்க இவளுக்கு மனசு வந்தது என்று நினைத்துக் கொண்டே, ஏதேச்சையாக கீழே திருப்பினார். அதைப்பார்த்த உடனேயே புரிந்துக் கொண்டார் சந்தானம்.
‘‘ஏண்டி… இது நியாயமா இருக்கா… இப்படி சொட்டை விழுந்த குடத்தை குடுத்தா… நம்ம மானம் போயிடாது?’’ கேட்டார் சந்தானம்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் போகாது… நான் பேசிக்கிறேன் வாங்க…’’ என்றபடி கையை பிடித்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் தனம்.
பட்டாமிராமில் இருக்கிற உறவினரின் வீட்டுக்கு சென்று சேர்ந்தபோது, மணி 12 ஆகிவிட்டது.
குசலம் விசாரித்து முடித்தபின்னர், சந்தானம் தான் ஆரம்பித்தார். ‘‘தனம் அந்த கிப்ட்டை சிவகாமிக்கு குடுத்திடு’’ என்றார்.
‘‘சரிங்க… ’’ என்று கவருடன் எழுந்த  தனம், குடத்தை சிவகாமியிடம் குடுத்தாள்.
சிவகாமி குடத்தை எடுத்து பார்க்க ஆரம்பிப்பதற்குள் தனம் ஆரம்பித்தாள்.
‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம்கா…அடித்து பிடிச்சு வந்து சேர்ந்தோம்.  இதுல மேல வச்சிருந்த குடம் வேற கீழே விழுந்திடுச்சு… என்ன ஆயிருக்குன்னு தெரியல…  பிரிச்சு பாருங்கக்கா…’’ என்று அப்பாவியாக முகத்தை  வைத்துக் கொண்டாள் தனம்.
சிவகாமி குடத்தை பிரித்து பார்த்து, கீழே  இருந்த சொட்டையைப் பார்த்தாள். ‘‘ஆமா தனம் நீ சொன்ன மாதிரி கீழே விழுந்ததில… ஒரு சின்ன சொட்டை விழுந்திருக்கு… பரவாயில்ல விடு.  இருங்க சாப்பாட்ட தயார் பண்ணிடுறேன்… சாப்பிட்டு போகலாம்’’ என்றாள்.
‘‘இல்லக்க… நாங்க இவரோட ஆபிஸ் பிரண்ட் வீட்டுக்கும் வர்றதா சொல்லியிருந்தோம். அதனால அவங்க செஞ்சு வச்சிருப்பாங்க… இது நம்ம வீடுதானே… எப்பவேணா வந்து சாப்பிடலாம்…   வர்றோம்கா’’ என்றபடி கிளம்பினாள்.
சந்தானமும் அவர்களிடம் விடை பெற்றுக்  கொண்டு கிளம்பினார்.
வீட்டை விட்டு ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு, தனம்  ஆரம்பித்தாள்.
‘‘என்னங்க…  இப்போ வீட்டுக்குப்போய் என்ன பண்ணப்போறோம். அப்படியே திருத்தணிக்கு போய்ட்டு அப்புறம் வீட்டுக்கு போகலாம்’’ என்றாள்.
‘‘சரி… கிளம்பு’’ என்றார் சந்தானம்.
திருத்தணி  தரிசனத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு  வரும்போது இரவு 8 மணி ஆகிவிட்டது.
வீட்டு வாசலில் யாரோ  நிற்பதுபோல் இருந்தது.
‘‘தனம்… அது யாரு… வாசல்ல’’ என்றபடி கண்ணாடியை  தூக்கிவிட்டுக் கொண்டார் சந்தானம்.
‘‘அது உங்க அண்ணாநகர் பெரியப்பா மகன்’’ என்றபடி வந்திருந்த உறவினர்களிடம் விசாரித்துக் கொண்டே  பூட்டை திறந்து வீட்டின் உள்ளே கூட்டி சென்றாள்.
‘‘என்ன ராமசாமி, பார்த்து ரொம்ப நாளாச்சு...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் சந்தானம்.
வந்திருந்த ராமசாமி, தனது மனைவியிடம், ‘‘ஏண்டி கையிலேயே வச்சிருந்தா எப்படி? அந்த கிப்ட்ட எடுத்து அண்ணிக்கிட்ட குடு…’’ என்றார்.
அவர்கள் சரவணா ஸ்டோர்சின் பெயரில் கவரில் வைத்து எதையோ கொண்டு வந்திருந்தார்கள். ராமசாமியின் மனைவி, அதில் இருந்து எடுத்தது, அதே சொட்டை விழுந்த குடம்.
ராமசாமியின் மனைவிதான் ஆரம்பித்தார். ‘‘இன்னைக்கு ரயில்ல செம கூட்டம் அண்ணி… மயிலாப்பூர் வர்றதுக்குள்ள போதும்… போதும்னு ஆயிடிச்சு.. இதுல குடம் வேற ரயில்ல மேல இருந்து கீழே விழுந்திடுச்சு… எங்க என்ன ஆயிருக்கோ தெரியல… பார்த்துக்கோங்க அண்ணி’’ என்றாள் கவலையுடன்.
‘‘சிவகாமி சாயங்காலம் வீட்டுக்கு வந்திருந்தா… எங்க கிரகப்பிரவேஷத்துக்கு அவ வரல இல்ல… அவகிட்ட பேசிட்டு கிளம்புறதுக்குல்ல லேட் ஆயிடிச்சு….’’ என்று ராமசாமியும் கூட ஒத்து ஊத ஆரம்பித்தார்.
தனத்தின் மனது அக்னிக் குஞ்சாய் மாறிக் கொண்டிருந்தது.
-        ஜே.எஸ்.கே.பாலகுமார்.