07 March 2020

பாதை

‘‘அண்ணே நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்’’ என்றான் கேசவன்.
‘‘ஏம்ப்பா… உனக்கு என்ன குறைச்சல்… அவனவன் கவர்ன்மென்ட் வேலை கிடைக்கலயேன்னு வருத்தத்தில இருக்கான்… நீ என்னடான்னா ரயில்வேயில வேலை கிடைச்சும்… அதை விட போறேன்னு சொல்றே?’’ என்றார் மூத்த ரயில் டிரைவரான விநாயகம்.
‘‘அண்ணே… நானும் அப்படித்தான் நினைச்சு இந்த வேலைக்கு வந்தேன்…’’ என்றான் இளம் ரயில் டிரைவான கேசவன்.
‘‘அப்புறம் என்ன?’’ என்றார் விநாயகம்.
‘‘தினம், தினம் என் கண் முன்னாடி பல பேர் தற்கொலை செய்துக்கிறதை பார்த்தா… உயிர் போய், உயிர் வருதுன்னே… துக்கம் தொண்டை அடைக்குது… முந்தாநேத்து… நாமதான் பார்த்தோமே… நம்ம கண் முன்னாடி பிஞ்சுக் குழந்தையோட ஒரு இளம்பெண், நம்ம ரயில்ல விழுந்து செத்தாளே… நம்மளால என்ன பண்ண முடிஞ்சது… ரயில நிறுத்தக்கூட முடியல… அந்த பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சுனே?’’ என்று விசும்பலுடன் கூறினான் கேசவன்.
அவன் தோள் மீது கைவைத்தார் விநாயகம்.
‘‘என் கண் முன்னாடி ஸ்கூல் பசங்க, வயசானவங்க, போன் பேசிட்டு போறவங்க, வண்டியில திடீர்னு குறுக்கே பாயுறவங்க இப்படி எத்தனை, எத்தனை உயிர் போகுது… வெளியில இருந்து பார்க்கிறப்போ… எல்லோருக்கும் ரயில் டிரைவர் வேலைன்னா ஒரு சேர்ல உட்கார்ந்துட்டு ஹாயா பாதைய பார்த்துட்டே போகிறதுன்னுதான் நினைச்சிருப்பாங்க… நானும் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா, இந்த வேலை, தூக்கு கயித்தில தொங்குறவனை துடிக்க, துடிக்க கொல்லுற லிவர் லிப்டர் மாதிரியாத்தான்னே எனக்கு தெரியுது…’’ என்று விசும்பினான் கேசவன்.
அவனை கட்டி அணைத்துக் கொண்டார் விநாயகம்.
‘‘நானும் இந்த வேலைய ரொம்ப லவ் பண்ணி வந்து சேர்ந்தேண்ணே… ஆனா, தினம், தினம் உயிர்கள் என் கண் முன்னாடி துடிக்க, துடிக்க பலியாகிறப்போ… கத்தியால நெஞ்சத்தை குத்திக்கிழிக்கிற மாதிரி ஒரு வேதனை வாட்டுதுனே… ராத்திரியில கூட சரியா தூங்க முடியல… நடுராத்திரி எந்திரிச்சு… தண்டவாளத்தில விழுந்திராதே… போ… போன்னு கத்துறதப் பார்த்து என் அம்மா கூட ரொம்ப பயந்துட்டங்கண்ணே…
‘‘போன வாரம் உங்களுக்குத்தான் ஞாபகம் இருக்குமே… ஒரு காதல் ஜோடி திடீர்னு நம்ம ரயில் முன்னால பாய்ஞ்சு உயிர விட்டாங்களே… நாமதான் இறங்கி பார்த்தோமே… அவங்களுக்கு எல்லாம் வாழ வேண்டியது வயசுண்ணே… தண்டவாளத்தில கை, கால் சிதறி கோரமா செத்து கிடந்தாங்கண்ணே… அதப்பார்த்து ரெண்டு நாள் சாப்பிட கூட இல்லேண்ணே… இன்னைக்கு பேப்பர்ல பாருங்க யானைங்க, ரயில் மோதி இறந்திருக்கு… இப்படி நம்ம ரயில்லயும் நடந்திருக்கே… இன்னும் இந்த வேலையில இருந்தா, எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்… அதுக்கு முன்னாடி நிம்மதியா ஒரு கிளார்க் வேலையிலாவது போய் சேர்ந்திடுறேன். மனசுக்காவது  நிம்மதி மிஞ்சும்’’ என்றான் கேசவன்.
‘‘சரி உனக்கு டூயூட்டி முடிஞ்சதில்ல, இன்னைக்கு உன்னோட நானும் வர்றேன். பெங்களூர் எக்ஸ்பிரஸ்ல போகலாம்’’ என்றார் கேசவன்.
இருவரும் பெங்களூர் எக்ஸ்பிரசில் ஏறினார்.
இரவு மணி 10.30.
பெரும்பாலான பயணிகள் படுக்கையை விரிக்க ஆரம்பித்திருந்தனர்.
ஒரு பெட்டியில் வயதான ஒரு ஜோடிகள் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
அங்கு பக்கவாட்டில் இருக்கும் ரெண்டு சீட் காலியாக இருந்தன. அதில் இருவரும் அமர்ந்துக் கொண்டனர்.
‘‘எல்லா பெட்டியையும் பார்த்தியா? வயசானவங்க, குழந்தைங்க, உன்ன மாதிரி சின்னப்பசங்க எல்லாம் எவ்வளவு நிம்மதியா தூங்குறாங்க…’’ என்றார் விநாயகம்.
‘‘ஆமா… தூக்கம் வருது தூங்குறாங்க…’’ என்றான் கேசவன் சாதாரணமாக.
‘‘தப்பு… இந்த ரயில் டிரைவர் மேல அவங்க வச்சிருக்கிற நம்பிக்கை. ஆனா, அது நேரடியா தெரியாது. ரயில் உரிய நேரத்தில போய் சேர்ந்திடும்றது அவங்களோட கணக்கு. அதாவது டிரைவர்கள் சரியாக தங்களை நேரத்துக்கு கொண்டு போய் கூட்டிக்கொண்டு போய் உரிய இடத்தில விட்டுடுவார்ங்கிற நம்பிக்கையில தூங்குறாங்க. நீ சொன்னா மாதிரி இருந்தா, டூவீலர்ல போறப்போ பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு தூக்கம் வந்தாலும் தூங்குவாங்களா? கார்ல நைட் டிராவல் பண்றப்போ, எத்தனைப் பேர் முழிச்சிட்டு போவாங்க தெரியுமா? அதுக்காக பஸ்ல தூங்க மாட்டாங்களான்னு கேட்ப… அதுவும் சரிதான். ஒரு டிரைவர் தாறுமாற ஓட்டிப்போறார்னு வை… அந்த பஸ்ல யாராவது தூங்குவாங்களா? பஸ் நிதானமா… அலுங்காமா, குலுங்காமா போனாத்தான் அதில் உள்ள பயணிகளுக்கு டிரைவர் மேல நம்பிக்கை வரும். நிம்மதியா தூங்குவாங்க… பிளைட்ல கூட இதே நிலைமைதான்…
‘‘அதனாலத்தான் ராத்திரி ரயில ஓட்டுறப்போ கூட ஒரேடியா ஓங்கி பிரேக்க போடாதேன்னு உன்னை திட்டுறது… நம்ம மேல பயணிகளிடம் இருக்கிற நம்பிக்கைய, அது குறைக்கும். ஒரே சமயத்தில ரெண்டாயிரம் பேரோட நம்பிக்கைய நாம சுமந்துட்டு போறோம். அது எவ்வளவு கர்வமான விஷயம் தெரியுமா? யாருக்காவது இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கா? இதுல எல்லா வயசுக்காரங்களும் அடக்கம். அப்புறம் நீ புலம்புறீயே…. நீயா… யாரையாவது போய் கொல்றீயா?’’ என்று கேட்டார் விநாயகம்.
‘‘இல்ல…’’ என்று இழுத்தான் கேசவன்.
‘‘நம்ம வழியில நாம போய்ட்டு இருக்கோம்… தானே வந்து விழுந்தா நாம என்ன பண்ண முடியும்? அதுவுமில்லாம நம்மளால காப்பாத்தக்கூடிய அளவு தூரம் இருந்தா நாம பிரேக் போடத்தானே செய்றோம்? இல்லே செத்தா, செத்துட்டு போறாங்கன்னு அப்படியே, மனசாட்சி இல்லாம ஏத்திட்டு போறோமா? வளைவுகள்ல யாரும் குறுக்கே வந்துடக்கூடாதுன்னு ஹாரனும் அடிக்கிறோம். ஆனா, அப்படியும் மீறி வர்றப்போ… அது கடவுள் விட்ட வழியாகத்தான் இருக்கும். ஏன் போனமாசம் ஒரு பொம்பளை கைக்குழந்தையோட ரயில்ல பாய்ஞ்சாளே ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்… ஆனா, அவ மட்டும்தானே செத்தா… குழந்தை என்ன அழகா தண்டவாளம் நடுவில விழுந்து சிரிச்சிட்டுத்தானே இருந்தது? இந்த வேலை வெறும் சம்பளத்துக்கானது மட்டும் இல்ல… ஒரு ஆத்மார்த்தமான சேவை… தினம், தினம் நீ ஆயிரக்கணக்கான மக்களை அவங்கவங்க போக வேண்டிய இடத்துக்கு கொண்டுப் போய் சேர்க்கிற…  இதுவும் கூட எல்லையில காவல் காக்கிற வீரர்களோட பணிக்கு சமமானதுதான். அவங்க நாட்டை காக்கிறாங்க… நாம நம்மள நம்பி பயணம் செய்யுறவங்களை பாதுகாப்பாக கூட்டிட்டு போறோம். அதே மாதிரி இந்த வேலை ஒரு அப்பாவுக்கு சமமானது. என்னைக்காவது நம்ம அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தணும்னு சங்கப்பட்டிருப்பாரா?
‘‘ஆரம்பக்காலத்தில உன்ன மாதிரிதான் நானும் தவிச்சேன். ஆனா, குடும்பச் சூழ்நிலை எனக்கு பாடம் கத்து தந்தது. உனக்கு நான் என் அனுபவத்தை சொல்றேன். ஒரே சமயத்தில 2 ஆயிரம் பேரோட நம்பிக்கைய பெறுகிறது பெருசா… விட்டில் பூச்சி மாதிரி தானே விளக்குல வந்து விழுந்து உயிர விடுறவங்க பெருசா…. நீயே முடிவு பண்ணிக்க…’’ என்றார் விநாயகம்.
ரயில் அரக்கோணத்தில் நின்றது.
இருவரும் இறங்க வேண்டிய இடம்.
‘‘நான் காலையில 5.30க்கு டூயூட்டிக்கு வந்துடறேண்ணே’’ என்று புன்னகை மலர சொன்னான் கேசவன்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks