வச்சக்குறி தப்பாது 1


இந்திய விமானம் கந்தகாருக்கு கடத்தப்பட்டபோது, பயணிகளை காப்பாற்றுவதற்காக தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று, இந்திய சிறைகளில் இருந்த பயங்கர தீவிரவாதிகளான மசூத் அசார் உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகளை விடுதலை செய்து, பத்திரமாக அவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டு, பயணிகள் மீட்டு வரப்பட்டனர். ஆனால், இதேபோன்று ஒரு சம்பவம் இஸ்ரேலிலும் நடந்தது. இஸ்ரேல் விமானம் பயணிகளுடன் கடத்தப்பட்டு சென்றபோது, உலகிலேயே மிகச்சிறந்த உளவு நிறுவனமான ‘மொசாத்’ எப்படி அதி அற்புதமாக செயல்பட்டு, அடுத்த நாட்டின் மண்ணில், அதன் அனுமதி இல்லாமலேயே சென்று இறங்கி பயணிகளை மீட்டு வந்தது என்பது பலருக்கு தெரியாத விஷயம். அந்த சம்பவம் சற்றும் சுவாரசியம் குறையாமல், சற்றே கற்பனை கலந்து கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.
-    ஜே.எஸ்.கே.பாலகுமார்.


                                                
வச்சக்குறி தப்பாது!

இஸ்ரேல், டெல் அவிவ் நகரன் பென் குரியன் சர்வதேச விமான நிலையம்.
1976 ஜூன் 27.
நேரம் மதியம் 1.20.
உலகின் மிக பாதுகாப்பான விமான நிலையம் என்று பெயர் பெற்ற, அந்த விமான நிலையத்தில், பயணிகள் அனைவரும் பரபரப்பாக காணப்பட்டார்கள்.
‘‘என்னங்க நீங்க மட்டும் தனியா போறீங்க…. பத்திரமா இருங்க… வெளியே சுத்தாதீங்க… ஹாட் டாக் நிறைய சாப்பிட்டுட்டு அப்புறம்… வயிறு வலிக்குது, கால் வலிக்குதுன்னு சொல்லாதீங்க….’’ ஐம்பதை தொட்டுக் கொண்டிருந்த கணவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார் அவரது மனைவி.
‘‘டார்லிங்…. நைட் வேலைய முடிச்சுட்டு உனக்கு போன் பண்றேன். இந்த முறை டீலிங் நல்லபடியா முடிஞ்சுடும்….’’ இளம் தொழிலதிபர் ஒருவர், மார்பில் சாய்ந்து கொண்டிருந்த மனைவியின் தாடையை தூக்கி அவளது நெற்றியில் கொஞ்சலாக முத்தமிட்டு சொல்லிக் கொண்டிருந்தார்.
‘‘யப்பா இன்னைக்கு என்ன…. வெயில் இவ்வளவு அதிகமா இருக்கு….’’ டாக்சியில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவர், சில்லரை எண்ணி வாங்கியபடியே புலம்பினார்.
பயணிகளை போலவே, விமான நிலைய ஊழியர்களும் பரபரப்பாக காணப்பட்டார்கள்.
‘‘ஏம்மா… கண்ணு… விண்டோ சீட்டா போட்டு குடுமா….’’ ஒரு ஆசாமி, விமான நிறுவன கவுன்டரில் 2 இன்ச் அலங்காரத்தில் இருந்த பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
பயணிகள் செக்கிங் கவுன்டரில் வரிசையாக நின்று தங்கள் கைகளை தூக்கி காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் உலோக பாகங்கள் இருந்தால், பீப்… பீப்…. சத்தம் எழுப்பும் கருவியை சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்.
அந்த நேரத்தில் கூம்பு ஸ்பீக்கர் அலறியது.
‘‘ஏதென்ஸ் வழியாக பிரான்ஸ் வரை செல்லும் ஏர் பிரான்ஸ் 139 விமானம் புறப்பட தயாராக உள்ளது. பயணிகள் 10ம் எண் வாசல் வழியாக செல்லலாம்’’ என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் இளம்பெண் கெஞ்சினாள்.
‘‘மீண்டும் அறிவிக்கிறோம்….ஏதென்ஸ்… வழியாக……’’
கோட், சூட் போட்ட ஆசாமிகள் தங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுடன் 10ம் எண் வாசலுக்கு நகர ஆரம்பித்தார்கள்.
அனைவரது பாஸ்போர்ட், டிக்கெட் சரிபார்க்கப்பட்டு விமானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டவுடன், வாசல் மூடப்பட்டது.
பெரிய வகை விமானமான ஏர்பஸ்சின் வாசலில், மாமன் மகன், மகள், அத்தை, மாமா போன்று ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தனர், பணிப்பெண்கள்.
‘‘சார் வால்… நீங்க ஏதென்ஸ் தானே போறீங்க… நான் பாரீஸ் வரைக்கும் போறேனாக்கும்…. எனக்கு விண்டோ சீட் குடுத்தீர்னா… நன்னா இருக்கும்’’ ஒரு பெரியவர், இளவயதில் இருந்த வெள்ளைக்காரரை நோக்கிக் கேட்டுக கொண்டிருந்தார்.
‘‘யோவ்…. பேக்கை வைச்சு இப்படி இடிச்சுட்டு போறே… இது என்ன உங்க அப்பன் வீட்டு ஏரோபிளேன்னு நினைச்சுட்டியா….. ஒழுங்கா தூக்கிட்டு போக மாட்டே?’’ சொர்ணக்காவாக மாறியிருந்த வெள்ளைக்கார அம்மணி ஒருவர், அவசர கதியில் இடித்துவிட்டு பேந்த, பேந்த முழித்து கொண்டிருந்த ஒருவரை காய்ச்சிக் கொண்டிருந்தார்.
‘‘கொஞ்சம் மானர்ஸ் இல்லாம வந்துடுறானுங்க…’’ என்று சொர்ணாக்காவுக்கு சப்போர்ட் செய்தார் அருகில் இருந்த அவரது சகோதரி அம்மணி.
இவர்களின் சத்தத்தை கேட்டு ஓடிவந்த பணிப்பெண், அவரை சமாதானப்படுத்தி, இருக்கையில் அமரவைத்தார். ஆனாலும், அடங்காமல் பேசிக் கொண்டிருந்த அவருக்கு, சமயோஜிதமாக ஒரு தண்ணீர் பாட்டிலை திறந்து கொடுத்து வாயை மூட முயற்சித்தார் மற்றொரு பணிப்பெண்.
சொர்ணாக்கா தண்ணீர் குடிப்பதற்கு அவரை இடித்தவரை தள்ளிக்கொண்டு சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர் பணிப்பெண்கள்.
ஒரு வழியாக பயணிகள் அனைவரும் உள்ளே வரவும், விமானத்தின் கதவு மூடப்பட்டது. விமானம் மெல்ல ரன்வேக்கு நகர ஆரம்பிக்க, பயணிகள் அனைவரும், இருக்கைப் பட்டைகளை போட்டுள்ளார்களாக என்று சரிபார்த்து அதை போடாதவர்களுக்கு அறிவுறுத்திக் சென்றனர் பணிப்பெண்கள்.
விமானம் ஓடுபாதையில் இருந்து கிளம்பி, உயரே பறக்க ஆரம்பித்தது.
விமானத்தின் ஒலிப்பெருக்கி கிறீச் சத்தத்துடன் ஒலிக்க ஆரம்பித்தது. ‘‘நான் விமானத்தின் கேப்டன் மைக்கேல் போகோஸ் பேசுகிறேன்… இன்றைய நாள் இனிதாகுக. உங்கள் பயணமும் உற்சாகமாக அமைய வாழ்த்துக்கள். வெளியே வானிலை மிகச்சிறப்பாக உள்ளது. நாம் திட்டமிட்டபடி ஏதென்ஸ் வழியாக பிரான்ஸூக்கு சென்றடைவோம். வேறு ஏதாவது தகவல் இருந்தால் உங்களுக்கு மீண்டும் அறிவிப்போம். நன்றி’’
இணைப்பை துண்டித்தார் விமானி.
பயணிகளுக்கு துரிதகதியில் மதிய உணவை விநியோகிக்க ஆரம்பித்தனர் பணிப்பெண்கள்.
சொர்ணாக்கா… இரண்டு கூல்டிரிங்க் பாட்டில்களையும், ஓசி சாக்லேட்களையும் அள்ளிக் கொள்ள தவறவில்லை. அவரிடம் புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள் பணிப்பெண்.
‘‘அம்மா இந்த விமானம் எப்போ… பாரீஸ் போகும்?’’ ஒரு சின்னக்குழந்தை, தாயிடம் கேட்டது.
‘‘சமத்துக்குட்டி…. நீ இந்த ஆம்லேட்டையும், கட்லெட்டையும் சாப்பிடுவியாம், அதுக்குள்ள பாரீஸ் வந்துவிடும். நாம ரெண்டு பேரும் பாட்டி வீட்டுக்கு போயிடுவோமாம்….’’ என்று அவனது வாயில் திணித்தபடியே கூறிக் கொண்டிருந்தார் சாமர்த்தியமான தாய்.
பயணிகள் சாப்பிட்டு, தேநீர் குடித்து முடிப்பதற்கும், ஏதென்ஸ் விமான நிலையம் வந்து சேரவும் சரியாக இருந்தது.
ஏதென்ஸ் பயணிகள் மட்டும் இறங்க ஆரம்பித்தார்கள்.
----------
ஏதென்ஸ் விமான நிலையம்.
வழக்கம்போல் பாரீஸ் செல்லும் பயணிகளின் உடமைகள் சரிபார்க்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
தோல்பை ஒன்றுடன், நின்றிருந்த பெண்மணியின் உடமைகள் சரிபார்க்கப்பட்டு, அடுத்ததாக பெரிய கூலிங்கிளாஸ் அணிந்து தோல்பை வைத்திருந்த நபரின் முறை வந்தபோது மின்தடை ஏற்பட்டது. தோல்பை நபர் பெரிதும் சலித்து கொண்டார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த அதிகாரி, ‘‘இந்த எலக்ட்ரிக்சிட்டி டிபார்ட்மென்ட் காரனுங்களோட பெரிய தொந்தரவாபோச்சு… இதோட இன்னைக்கு ரெண்டாவது தடவையா கரண்ட் போகுது… காலையிலேயே பார்த்து தொலைங்கடான்னு சொன்னா கேட்டு தொலைச்சா தானே… இவனுங்களை கேட்கிறதுக்கு ஆள் இல்லாம போய்ட்டாங்க…’’ என்று முணங்கினார்.
பின்னர் அடுத்து என்ன செய்யலாம் என்பதுபோல் தன்னை பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் சோதனை அதிகாரியிடம், ‘‘பெரிய அளவில் சந்தேகம் இல்லை என்றால், அனுப்பிவிடு’’ என்றார்.
இதனால் தோல்பை நபர், பின்னால் வந்த சில நபர்களை, உடல் முழுக்க தடவி பார்த்து அனுப்பி வைத்தார் சோதனை அதிகாரி. அதேபோல், கை உடமைகளில் இருந்த பொருட்களை திறந்து பார்த்து அதிகாரி அனுமதி அளித்தார்.
ஒரு சில நபர்கள் சோதனையை எளிதாக கடந்து சென்ற நிலையில், மீண்டும் மின்சாரம் வந்தது. மீண்டும் சோதனை தொடர்ந்தது. ஒருவழியாக பயணிகள் அனைவரும், ஏர் பிரான்ஸ் விமானத்தில் ஏற்றப்பட்டு, மீண்டும் பயணத்தை தொடங்கியது விமானம்.
புதிதாக வந்த பயணிகளுக்கு, சாக்லேட்டையும், பின்னர் உணவு மற்றும் மதுபானத்தை பரிமாற ஆரம்பித்தார் பணிப்பெண் ஒருவர்.
‘‘அம்மா…. அவர பாரேன்…’’ என்று சிறுவன் ஒருவன் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரை தாயிடம் சுட்டிக்காட்டினான்.
‘‘கண்ணா…. இப்படியெல்லாம் அடுத்தவங்க… என்ன செய்றாங்கன்னு பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது…. சரியா….’’ சிறுவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார், பக்கத்து சீட் ஆசாமியை பார்க்காமலே தாய்.
ஆனால், அந்த சிறுவன் அந்த ஆசாமியையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தான்.
அந்த பக்கத்து சீட் ஆசாமி, நீண்ட கிருதா வைத்துக் கொண்டு ஜெர்மனி ஆசாமி போல் இருந்தான். கால்சாக்சில் வைத்திருந்த ஏதோ ஒன்றை எடுக்க முயன்றுக் கொண்டிருந்தான். அது பார்ப்பதற்கு கையங்குல அளவுக்கான பாகற்காய் போன்று தெரிந்தது. அதைத்தான் சிறுவன் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
விமானம் ஏதென்சில் இருந்து கிளம்பி 15 நிமிடம் ஆகியிருக்கும்.
திடீரென்று முன்புறம் இருந்த ஆசாமி 2 பேரும், பின்புறம் ஒருவரும், சிறுவன் பார்த்து கொண்டிருந்த அந்த ஆசாமியும் ஆயுதங்களுடன் எழுந்தனர். சிறுவன் பார்த்து கொண்டிருந்த ஆசாமி, சாக்சில் இருந்து எடுத்தது, கையெறி குண்டு, மற்றவர்கள் கைகளில் கைத்துப்பாக்கி முதல் இயந்திர துப்பாக்கி வரையில் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
‘‘நாங்கள் இந்த விமானத்தை கடத்தப்போகிறோம்…. எல்லோரும் அமைதியாக உட்காருங்கள்’’ முன்புறத்தில் இருந்து துப்பாக்கியுடன் எழுந்த ஒற்றை நாடி ஆசாமி மிரட்டினான்.
அவனது கண்ணசைவு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மற்றவர்கள், பயணிகளை தலைக்கு பின்னால் கைகளை வைக்கும்படி உத்தரவிட்டனர்.
அதிர்ச்சி அடைந்து நின்றிருந்தனர் பணிப்பெண்கள்.
‘‘என்னா பார்த்துட்டு இருக்கீங்க… பேசஞ்சர்ஸ தலையில கையை கட்டிக்கிட்டு பின்னாடி போய் உட்கார வைங்க… போங்க…’’ என்று உத்தரவிட்டான் ஒருவன்.
பணிப்பெண்கள், அங்கிருந்த பயணிகள் அனைவரையும் பின்னால் சென்று உட்கார வைத்தனர். இதேபால், முன்புறம் இருந்த சில பயணிகளையும் எழுப்பி, பின்னால் சென்று உட்கார வைத்தனர்.
‘‘நான் அப்பவே சொன்னேன்ல…. அந்த ஆள் சாக்சில வச்சிருந்தது நாங்க விளையாடுற ஹேண்ட் கிரானைட் மாதிரி இருக்குன்னு’’ சிறுவன் தன் தாயிடம், திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
‘‘அங்க என்ன சத்தம்?’’ குட்டையாக இருந்த கடத்தல் ஆசாமி மிரட்டினான்.
சிறுவனின் தாய், அவனது வாயி்ல் கைவைத்து அமைதியாக இருக்கும்படி கூறினாள்.
தன்னை மிரட்டிய குட்டை ஆசாமியையே பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
ஒற்றைநாடி ஆசாமி, விமானியின் கதவருகே சென்றான். அப்போது, விமானத்தில் பயணிகள் பகுதியில் இருந்து எழுந்த சத்தத்தினால் கதவை திறந்து வெளியே வந்த துணை விமானியை, ஒற்றைநாடி ஆசாமி, நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தான்.
விக்கித்து நின்ற அ்வரிடம், ‘‘நாங்க விமானத்தை கடத்தியிருக்கோம் பிரதர். வாங்க உங்க கேபினுக்கு போவோம்…’’ என்று விமானியை முன்னேவிட்டு பின்னே நடந்தான் ஒற்றைநாடி.
கேபினுக்குள் துணை விமானியின் தலையில் துப்பாக்கியை வைத்தபடியே ஒருவன் வந்து கொண்டிருப்பதை பார்த்தவுடன், விமானிக்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது. இதனால் தன்னை அறியாமலேயே, ‘எஸ்ஓஎஸ்எனப்படும் அவசரக்கால சமிக்கை குறியீட்டை அனுப்பும் பட்டனை தட்டிவிட்டார்.
‘‘கேப்டன் நாங்க… இந்த விமானத்தை கடத்தியிருக்கோம்….’’ ஒற்றை நாடி ஆசாமி கேப்டனிடம் பல்லவி பாடினான்.
‘‘எனக்கு விமானத்தை ஓட்ட தெரியும் பிரதர்… நீங்க எஸ்ஓஎஸ் மெசேஜ் அனுப்பிட்டீங்கிறதும் எனக்கு தெரியும்….. இனிமே என்னை கேட்காமா எந்த பட்டனையும் அமுக்கக்கூடாது…. அப்படி அமுக்கினா உங்க தலையில என் குண்டு நுழைஞ்சிடும். அதே மாதிரி நான் சொல்ற திசையிலத்தான் ஓட்டணும்…. நான் சொல்றதை மீறி… ஏதாவது ஹீரோத்தனமா செய்ய நினைச்சா…. உங்க உயிர் உங்கது இல்ல….’’ ஒற்றைநாடி தொடர்ந்து துப்பாக்கி முனையில் விமானிகளை மிரட்டினான்.
‘‘சரி நாங்க இப்ப என்ன செய்யணும்….?’’ விமானி கேட்டார்.
‘‘தென் திசை நோக்கி, விமானத்தை திருப்புங்க… போறப்போ எங்கே போறோம்னு சொல்றேன்…’’
விமானத்தை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் விமானி.
‘‘கேப்டன் நீங்க…. பயணிகள்கிட்ட பேசுறதுக்கு யூஸ் பண்ற மைக்கை, நான் கொஞ்ச நேரம் யூஸ் பண்ணிக்கிறேன்… ஓகே….?’’ என்றபடி அவரது அனுமதியை கூட எதிர்பார்க்காமலேயே மைக் எடுத்த ஒற்றைநாடி, அதை இயக்கினான
‘‘பயணிகளின் கவனத்துக்கு….. நாங்க பாலஸ்தீன மற்றும் ஜெர்மனி போராளிகள். நாங்கள் இந்த விமானத்தை கடத்தியிருக்கிறோம். எங்களுடன் ஒத்துழைப்பு அளிக்கும் வரையில் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை…. அதனால அமைதியா எல்லோரும் ஒத்துழைப்பு தரணும்…. நாங்கள் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்களுக்கு அரசாங்கம்தான் எதிரி…. அதனால எல்லோரும் அமைதியா இருக்கணும்…. உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன். யாராவது ஹீரோயிசம் பண்ண நினைச்சீங்கன்னா…. கொஞ்சம் கூட கவலைப்படாம சுட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருப்போம்… அதனால அமைதியா இருங்க….’’ என்றான்.
பயணிகள் பகுதியில் இதை கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகத்திலும் பயரேகை விரிவடைய ஆரம்பித்தது.
ஏற்கனவே இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் ஏழாம் பொருத்தம். அவர்கள் கையில் சிக்கினால் என்ன நடக்குமோ என்று ஒவ்வொருவரும் கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள்.
‘‘ஸ்பைசி… வேலைய ஆரம்பி’’ மைக்கில் ஒற்றைநாடி உத்தரவிட்டது.
ஒற்றைநாடி ஆசாமியின் உத்தரவைக்கேட்டதும், பயணிகள் பகுதியில் இருந்த அவர்களின் கூட்டாளியான ஸ்பைசி என்ற 30 வயதில் இருந்த பெண், ஒவ்வொரு பயணியிடமும் சென்று அவர்களின் பாஸ்போர்ட்டை சேகரிக்க ஆரம்பித்தாள். 
‘‘எல்லோரும் உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்து எங்காள்கிட்ட குடுங்க’’ என்று பயணிகள் பகுதியில் இருந்த குட்டை ஆசாமி பொத்தாம் பொதுவாக கத்தி சொன்னான்.
அப்போது ஒரு பெரியவர் விடுக்கென்று எழுந்து அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
(தொடரும் 1)

No comments:

Post a Comment

Thanks