ஏ பார் ஆட்டம் - 2


ஏ பார் ஆட்டம் – 2


நாள் நவம்பர் 24. காலையில் இருந்து மழை தூறிக் கொண்டிருந்தது.
மும்பை நாரிமன் பாய்ண்ட் விஸ்வேஷ் பிளாட்ஸ் காலையிலேயே பரபரப்பாகி இருந்தது. தூதரகங்களில் வேலை பார்ப்பவர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், அரசு துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வசிக்கும் பிளாட் அது.
காலை 8 மணிக்கே பெரிய, பெரிய கார்கள் வருவதும் போவதுமாக இருந்தன.
‘‘டேய் ராகவா இன்னுமா ரெடியாகாம இருக்க… ஸ்கூலுக்கு வெளியே நிக்க வைக்கப்போறாங்கடா… சீக்கிரம் கிளம்பு…’’ என்று தாய் கோமதி சமையலறையில் இருந்து கத்தினாள்.
ரெயின்கோட் போட்டுக் கொண்டு ஸ்கூல் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு, ‘‘வீட்டை விட்டு விரட்டிவிர்றதே இந்த அம்மாவுக்கு வேலையா போச்சு…’’ என்று மனதில் நினைத்துக் கொண்டே, ‘‘இந்தா கிளம்பிட்டேன்மா…’’ என்றான் ராகவன்.
டி14ல்தான் இந்த கூத்து என்றால், எதிர்பிளாட்டில் இருந்த ரஹீம் வீட்டிலும், அதே உத்தரவு வந்து கொண்டிருப்பதை கேட்டான் ராகவன்.
‘‘பாவம் அப்துலும் அம்மாவால பாதிக்கப்பட்டிருக்கிறான்’’ என்று நினைத்துக் கொண்டே வெளியே வர, அப்துலும் எதிர்பிளாட்டில் இருந்து வெளியே வர சரியாக இருந்தது.
‘‘காதை தடவி சேம் பிளட்டா ?’’ என்று சைகையில் கேட்டான் ராகவன்.
ஆம் என்பதுபோல் தலையாட்டினான் ரஹீம்.
ஒவ்வொரு பிளாட்டில் இருந்தும் அவனது ஸ்கூல் பிரண்ட்ஸ் ஒவ்வொருவராக வந்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் செவந்த். பிளாட்டில் ரவுக்கும்பல் என்று ‘விருது’ வாங்கியவர்கள்.
ராகவன், ரஹீம், ரஞ்சனி, ரவி, கார்த்திக், அஸ்வின் என்று குழுவில் அனைத்து உறுப்பினர்களும் வண்ண, வண்ண ரெயின் கோட்டில் ஸ்கூல் பஸ்சுக்காக ஆஜராகி இருந்தார்கள்.
‘‘புரோ… டெய்லி ஸ்கூலுக்கு போறது ரொம்ப போறா இருக்கு… நம்ம பிளாட்டிலதான் இத்தனை பசங்க இருக்கோமே… பேசாம நாம எல்லோரும் ஸ்கூலுக்கு போறதுக்கு பதிலா… மிஸ் ஒரு ஆள் தானே… அவங்களை இங்க வரச்சொல்லிடலாமே?’’ ரஞ்சனி கேட்டாள்.
‘‘கரெக்ட் ரஞ்சனி… நானும் அதைத்தான் நினைச்சேன். ஆனா, இதைச் சொன்னா… நம்மள அதிகப்பிரசங்கி என்பாங்க… எதுக்கும் நான் சி.எம். கிட்டே இதப்பத்தி பேசுறேன்’’ என்றான் கார்த்திக்.
அவனை குத்துவது போல் பாசாங்கு விட்டான் அஸ்வின்.
‘‘டேய் பேசாம உருப்படுற வழியப்பாருங்கடா… நல்லா படிச்சு…எங்க அப்பா மாதிரி ஐஏஎஸ் ஆகணும்… அப்பத்தான் நமக்கெல்லாம் மரியாதை’’ என்றான் ரஹீம்.
‘‘ஐஏஎஸ்… எல்லாம் கைக்கட்டி நிற்கணும் பாஸ்….  பேசாம நாம டைரக்ட்டா பிஎம்மாவாவோ இல்லாட்டி சிஎம்மாவோ ஆயிடலாம்… என்ன புரோஸ் நான் சொல்றது?’’ என்றான் ராகவன்.
அனைவரும் கொல்லென்று சிரிக்கவும், ஸ்கூல் பஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
பஸ்சில் இருந்து எட்டிப்பார்த்த டிரைவர், ‘‘பசங்களா இன்னைக்கு மழையால ஸ்கூலுக்கு லீவு விட்டுட்டாங்களாம். அதனால யாரையும் கூட்டிட்டு வரவேணாம்னு சொல்லிட்டாங்க… உங்க பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிடுங்க’’ என்று கூறிவிட்டு, பஸ்சை எடுத்துக் கொண்டு விரைந்தார்.
ஒட்டுமொத்த டீமும், முஷ்டியை காட்டி, ஊ… ஊ… ஊ… என்று கத்திவிட்டு, தத்தமது பிளாட்களுக்கு மகிழ்ச்சியுடன் விரைந்தார்கள்.
எல்லோரும் பையை போட்டுவிட்டு, மீண்டும் பிளாட்டின் கீழே வந்தார்கள்.
‘‘புரோ இன்னைக்கு புதுசா ஏதாவது விளையாடலாம்… அதுவும் டிரடிஷனலா’’ என்றான் அஸ்வின்.
‘‘ஆமா புரோ… எனக்கு அஸ்வின் சொல்றது சரின்னு படுது’’ என்றான் ரஹீம்.
‘‘அப்போ குக்கிங் போவோமா’’ என்றான் ரஞ்சனி.
எல்லோரும் வானத்தை பார்த்து யோசித்தனர். பின்னர் ஓகே என்பது போல் அனைவரும் கட்டை விரலை தூக்கி காண்பித்தனர்.
பின் பிளான் போட்டுக்கொண்டு ஆளாளுக்கு ஒரு பொருளை எடுத்து வர ஓடினார்கள்.
பிளாட்டின் பின்பகுதியில் சும்மாக்கிடந்த இடத்தில் மூன்று கல்லை வைத்து ஒரு பானையை வைத்து பாலை ஊற்றினார்கள்.
‘‘பால் பொங்கி வந்த பின்னாடி எல்லோரும், வாயால குலவை போடணும் சரியா… எங்க கிராமத்தில அப்படித்தான் பண்ணுவாங்க’’ என்றாள் ரஞ்சனி.
‘‘சரிங்க கிராண்ட்மா…’’ என்றனர் அனைவரும்.
மழை பெய்து ஈரமாக இருந்ததால், கல்லுக்கு கீழே போட்டிருந்த காகிதங்கள், சுள்ளிகள் அனைத்தும் சரியாக எரியவில்லை. பலமுறை அதை தீப்பெட்டியால் பொருத்திவிட்டார்கள்.
அதைப்பார்த்துக் கொண்டிருந்த ராகவன், ‘‘புரோஸ்…. அடுப்பு எரிய ஹீட் தானே தேவ… இதோ வர்றேன் இருங்க…’’ என்று கூறிவிட்டு விட்டை நோக்கி ஓடினான்.
அடுத்த சில நிமிடங்களில் கைகளில் எதையோ எடுத்துக் கொண்டு ஓடிவந்தான்.
‘‘இப்போ பாருங்க புரோ… அடுப்பு சும்மா எப்படி எரியுதுன்னு’’ என்று கூறிவிட்டு கையில் வைத்திருந்த பாம்பு மத்தாப்பு, மெர்க்குரி பட்டாசு, நாலைந்து மத்தாப்பு பெட்டிகளில் இருந்த குச்சிகள் என்று அனைத்தையும் அடுப்பில் போட்டான்.
ரெண்டு நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். கல்லுக்கு இடையில் இருந்து பெரும் புகை கிளம்பியது. அதைத் தொடர்ந்து பெரும் நெருப்பு பற்றியது. சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தவளைப்போன்று படாரென்று பின்னால் தாவினார்கள். மெர்க்குரி மற்றும் மத்தாப்புகளின் ஹீட்டால் மேலே வைக்கப்பட்டிருந்த சின்ன சில்வர் பானையின் அடிப்புறம் உருகி, அதில் இருந்த பால், எதுவோ நிற்காமல் ஓடுவதுபோல் அடுப்பில் ஓடி, அடுப்பு முழுவதுமாக அணைந்தது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அடுப்பு அணைந்ததை பார்த்ததும், ஓட்டுமொத்தமாக ராகவனை அடிக்க பாய, அவன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தான்.
(தொடரும் 2)
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks