ஏ பார் ஆட்டம்


1. இந்தியப்படகு



நவம்பர் 22. நேரம் நள்ளிரவு 2 மணி.
பாகிஸ்தானின் கராச்சி நகரின் ஒதுக்கப்புறமான கடற்கரை பகுதி. கடல் அலைகள், சிறு குழந்தைப்போல் கடற்கரையை தொட்டுவிட்டு ஓடிக் கொண்டிருந்தது. சில நேரத்தில் வேகமாக வருவதும், சில நேரத்தில் மெதுவாக வருவதுமாக இருந்தது.
அப்போதுதான் அவர்கள் வந்தார்கள். 
‘‘அப்துல்லா எல்லாம் புரிஞ்சது இல்ல?. எக்காரணத்தை முன்னிட்டு எனக்கு போன் பண்ணாதீங்க… உங்க காரியம் முடிஞ்சதும் சேட்டிலைட் போன்ல பேசுங்க போதும். அதுவரைக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும் எனக்கு போன் பண்ணக்கூடாது’’ பாகிஸ்தான் உளவு அமைப்பின் பிராந்திய தளபதி இஸ்மாயில் கூறினார்.
‘‘எஸ் சார்… எல்லாம் ஞாபகம் இருக்கு. வெற்றிகரமாக செய்து முடிப்போம். நம் சகோதரர்களை கொன்று குவிக்கும் இந்தியர்களை சும்மா விடமாட்டோம். நாங்க எட்டுப்பேரும், எண்ணூறு வீரர்களுக்கு சமம். அப்படி எங்களை தயார் செஞ்சிருக்கீங்க. இந்த வாட்டி இந்தியாவை கதற வைப்போம்’’ அப்துல்லா கூறினான்.
அவனுடன் இருந்த மேலும் 9 பேரும், அப்துல்லா கூறியதுபோன்று செய்து முடிப்போம் என்ற பாணியில், தங்கள் கைகளில் இருந்த இயந்திர துப்பாக்கிகளை உயர்த்தி காண்பித்தனர்.
ஒவ்வொருவரின் முதுகிலும் டிஸ்கவரி சேனலில் ஊர், ஊராக சுற்றும் சுற்றுலாவாசி போல் பெரிய பைகள் தொங்கிக் கொண்டிருந்தன. முழுக்க, முழுக்க நவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகள், சாப்பிடும் பொருட்கள் அவற்றில் இருந்தன.
அவர்களை வழியனுப்ப வந்த இஸ்மாயில் ஒவ்வொருவரையும் கட்டித்தழுவினார். அருகில் நின்ற ராணுவ வீரர்கள் விரைப்பாக அவர்களுக்கு சல்யூட் அடித்தனர்.
அதைத்தொடர்ந்து ராணுவ வீரர் ஒருவர் ஒரு ரப்பர் படகை இழுத்து வந்தார். அதில் இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது.
அப்துல்லாவும் மற்ற 9 பேரும் அதில் ஏறிக்கொள்ள, படகை ஸ்டார் செய்தான்.
கடற்கரையில் நின்றிருந்த இஸ்மாயில் மற்றும் ராணுவ வீரர்களை பார்த்து, அப்துல்லாவும் அவனுடைய சகாக்களும் கட்டை விரலை காண்பித்து விடைபெற்றனர்.
அவர்களின் படகுகள் மறையும் வரையில் காத்திருந்த இஸ்மாயில் பின்னர் அங்கிருந்து நகர்ந்தார்.
அதிகாலை கடல்காற்று முகத்தை கிழித்துக் கொண்டு சென்றது.
படகில் இருந்த 8 பேரும் அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தனர்.
பாகைமானியில் குறிப்பிட்ட அளவீடுகள் வந்தவுடன் படகின் இஞ்ஜினை அணைத்துவிட்டு அமைதிக்காத்தனர்.
தூரத்தில் ஒரு விசைப்படகு தெரிந்தது. அதில் இருந்தவர் டார்ச்லைட்டை அடித்து காண்பித்தார். அப்துல்லா தன்னிடம் இருந்த சிவப்பு லேசர் விளக்கை எடுத்து, ஐந்து முறை அணைத்து காட்டினான். அதைத்தொடர்ந்து, விசைப்படகு அவர்களின் அருகில் வந்தது.
விசைப்படகில் இருந்தவர் அதில் இருந்து கயிறு ஏணியை எடுத்துப்போட, ஒவ்வொருவராக மேலே ஏறினர். அவர்கள் வந்த படகின் இன்ஜினை கழற்றி விசைப்படகில் போட்டுவிட்டு, ரப்பர் படகில் காற்றை இறக்கிவிட்டு மேலே இழுத்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து மீண்டும் விசைப்படகு தனது பயணத்தை தொடங்கியது.
திடீரென விசைப்படகின் ஓட்டுநர் கீழே விசைப்படகின் கீழ்ப்பகுதி வந்து, ‘‘இந்திய எல்லையை ஒட்டி இருக்கிறோம். அவர்கள் நாட்டு கடற்படையினர் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு முன்பு ஏதாவது ஒரு இந்தியப்படகை பிடித்துவிட வேண்டும்’’ என்றார்.
எல்லோரும் உஷாராக, படகின் மேல்பகுதிக்கு வந்து, இந்தியப்படகை பார்த்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அரைநாள் காத்திருப்புக்கு பின்னர் மாலையில் தூரத்தில் ஒரு விசைப்படகு வருவதை அப்துல்லாவின் குழுவைச் சேர்ந்த அம்ஜத் பார்த்து மற்றவர்களிடம் கூறினான். பைனாக்குலரை எடுத்து அந்த படகு, இந்தியப்படகுதான் என்பதை உறுதி செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, அந்தப்படகை நோக்கி விசைப்படகை செலுத்தினர். மேலும், இந்தியப்படகை நிறுத்தும்படி, படகின் விளக்கை அணைத்து, அணைத்து சிக்னல் செய்தனர்.
இந்தியப்படகில் இருந்த ராமேஷ்வர் பெருத்த யோசனையுடன் விசைப்படகை நிறுத்தினார். ஏதோ ஆபத்தில் சிக்கியிருப்பார்கள் போலும் என்று எண்ணினார். ஆனால், எதிரே வந்த விசைப்படகு அடுத்தநாட்டைச் சேர்ந்தது என்பதால், யோசனையாக இருந்தார்.
அவர் யோசிப்பதற்குள் பாகிஸ்தான் படகு நெருங்கிவிட்டது.
‘‘ஹரே பாய் சாப்… இவங்க மும்பைக்காரங்களாம். ரப்பர் போட்ல டிரைனிங்காக வந்தப்போ திசைமாறி சர்வதேச கடல்பகுதிக்கு வந்துட்டாங்க. அங்க இவங்க போட்ல ஓட்டை விழுந்து தவிச்சுட்டு இருந்தாங்க… நான் தான் காப்பாத்தினேன். இவங்களை உங்க போட்டுல ஏத்திட்டுப்போய் விட்டிர்ரீங்களா?’’ பாகிஸ்தான் விசைப்படகு ஓட்டுநர் ராமேஷ்வரிடம் கேட்டார்.
படகில் இருந்தவர்களை பார்த்தார். எல்லோருமே 18ல் இருந்து 25க்குள் இருந்த வாலிபர்கள். அவர்களை பார்த்தால் சாகச பயணத்துக்கு வந்தவர்களைப்போல்தான் இருந்தது. இதனால் பாகிஸ்தான் விசைப்படகு ஓட்டுநரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அப்துல்லாவும், மற்றவர்களும் ராமேஷ்வரின் படகில் ஏறிக் கொண்டனர். துப்பாக்கிகள் மட்டும் வயலின் பைகளில் அடைக்கப்பட்டிருந்தன. முதுகுப்பை அப்படியே இருந்தது. சுருட்டி வைக்கப்பட்டிருந்த ரப்பர் படகையும், அதன் இன்ஜினையும் ஏற்றிக் கொண்டு இந்தியப்படகில் கிளம்பினார்கள்.
‘‘தம்பீகளா… எல்லாரும் சின்னப்பசங்களா இருக்கீங்க… கடலுக்கு வர்றப்போ இவ்வளவு வயலின் எதுக்கு?’’ சந்தேகத்துடன் கேட்டார்.
‘‘அண்ணே… இதுக்கு முன்னாடி நாங்க இந்த மாதிரி சாகச பயணத்துக்கு வந்தது இல்ல. சும்மா ஜாலியா இருக்கும்னு வந்தோம்… வந்த இடத்தில திசை மாறி போயிட்டோம். நல்ல வேளை அந்த பாய் வந்து காப்பாத்தினப் பிறகுதான் நாங்க சர்வதேச கடல்பகுதியில இருக்கோம்கிறதையே தெரிஞ்சுக்கிட்டோம்’’ என்றான் அப்துல்லா.
‘‘சரி… சரி… இப்போது இருட்டிடுச்சு… இனிமே விசைப்படகுல பயணிக்க முடியாது. ராத்திரி நான் இங்கேயே வலையை விரிச்சுடுறேன். நாளைக்கு காலையில இங்க இருந்து கிளம்பலாம்’’ என்றார் ராமேஷ்வர்.
சரி என்பதுபோல் அனைவரும் தலையாட்டினர்.
ராமேஷ்வர் உள்ளே விசைப்படகின் கீழே இருந்த வலைக்கான கயிறை எடுப்பதற்காக கீழே சென்றார்.
‘‘நாளைக்கு இந்திய கடல் எல்லையை எட்டியவுடன் இவனை கொன்னுடனும்’’ என்றான் அப்துல்லா.
(தொடரும்)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks