மனிதர் உணர்ந்துக் கொள்ள…


மனிதர் உணர்ந்துக் கொள்ள…
நாங்க சந்தித்து 25 வருஷம் ஆயிடுச்சுமாச்சா… நினைச்சு பார்த்தாலே பரவசமா இருக்கு… இதோ நாளைக்கு காலையில போய் சேர்ந்துடுவேன்….
வண்டி முன்நோக்கிச் செல்ல என் மனம் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது. அவ… இப்பவும் என்னை நினைச்சிட்டு இருப்பாளா? எவ்வளவு அழகான கண்கள். என்னைப்பார்த்ததும்… அப்படியே… பார்த்தும் பார்க்காத மாதிரி, அந்தப்பக்கம் திரும்பிவிட்டு, நான் பார்க்கிறேனான்னுட்டு, மெதுவா திரும்பி பார்க்கிறப்போ…. அவளை நான் பார்த்துட்டு இருக்கிறத பார்த்தும், வெட்கத்தில் மீண்டும் திரும்பிக் கொள்வாளே…. அந்த பார்வைக்காகவே அவளை மீண்டும் பார்க்கணும் மனசு அலைபாயுறதில தப்பே…. இல்லை.
படுபாவிங்க…. இப்படி வருஷா வருஷம் சந்திக்க மாதிரி வச்சிருந்தாங்கன்னா… எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? இப்பவாவது, எல்லோரையும் ஒன்னா கூட்டணும்னு மனுசு வந்ததே… அதுக்கு அந்த பாலாஜி பெருமாளுக்குத்தான் நன்றி சொல்லணும்.
கடைசி அவளை பார்த்தது திருவிழாவிலத்தான். நான் அம்மன் விக்ரகத்தையும், அவ விநாயகர் விக்ரத்தையும் சுமந்துட்டு போனோம். எல்லோரும் எங்களை பார்த்து, சாமி கும்பிட்டப்போ, ஏதோ எங்களையே கும்பிடுற மாதிரி பெருமையா இருந்துச்சு. ஊர்வலம் முடிஞ்சு சுத்தி இருக்கிறவங்க எல்லாம் களைஞ்சிட்ட கூட்டத்தைவிட்டு விலகி நின்னுக்கிட்டு இருந்த, அவளை நோக்கி போனேன்.
நான் வர்றதைப்பார்த்ததும் வழக்கம்போல் லேசாக திரும்பிக் கொண்டாள். அவளுக்கு அதிர்ச்சிக் குடுக்கிற மாதிரி இடதுபுறமா போய் அவளை நேருக்கு நேரா பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு கனம் அதிர்ச்சி் ஆனாலும், அதிலும் ஒரு சந்தோஷம் தெரிஞ்சது….
என்ன வள்ளி சவுரியமா?
மெதுவாக தலையாட்டினாள்.
நீங்க எப்படி இருக்கீங்க?
எனக்கு என்ன ஜம்முன்னு இருக்கிறேன். நீ தான் பார்க்கிறயில்ல!
பேசிக் கொண்டிருக்கும்போதே, அவ அப்பன்காரன் வந்துட்டான்.
‘‘ஏண்டி வள்ளி உனக்கெல்லாம் ஒரு தடவை திட்டினா அறிவு வராதா….? அந்த ரவுடிப்பய கூட சேராதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….’’ சுளீரென்று ஒரு அடி குடுத்துவிட்டு அங்கிருந்து என் வள்ளியை இழுத்து கொண்டு சென்றான் அந்த ஆள்.
என்னை ரவுடின்னு சொல்றான்னே… இந்த ஆள்….
ஏதோ கோவம் வந்தப்போ…. நாலு பேரை தூக்கிப்போட்டு மிதிச்சிருக்கேன். அதுக்காக ஒரேயடியா ரவுடின்னா? மனம் திட்டிக் கொணடிருந்தது.
ஒரு நாள், வள்ளியும், அவன் அப்பனும் நிற்கிறப்போ, எங்க அப்ப…. சொல்பேச்சு கேட்கிறதில்லைன்னு சுளீர்ன்னு அடிச்சிட்டார். எனக்கு அந்த அடிகூட பெருசா தோணலை…. ஆனா.. நான் காதலிக்கிற பொண்ணு முன்னாடி அவர் அடிச்சதுதான் எனக்கு ரொம்ப அவமானமா போயிடிச்சு…. அப்போ ஒரு கோவம் வந்ததே…. அப்பன்னு கூட பார்க்காம ஒரே சாத்து…. அது கை ஓடிஞ்சு, இன்னும் ஒத்த கையோட திரியுறாறு….. பார்க்க பாவமா இருந்துச்சு…. அந்த சம்பவத்தை பார்த்ததில இருந்துதான் இந்த ஆள் என்னை ரவுடி, ரவுடின்னு சொல்லிட்டு திரியுறான்.
எப்பா…. வண்டிய பார்த்து நிமிஷம் நிப்பாட்டுறேன். போய் டீ சாப்பிட்டு வந்து ஏறிடுங்க…. டிரைவர் கத்திட்டு போனார்.
எனக்கு பின்னால் இருந்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். நான் மட்டும் வண்டியிலேயே இருந்தேன்.
வள்ளி்க்கும் எனக்கும் சின்ன வயசில இருந்தே பழக்கம். பயிற்சி வகுப்பில ஒரு தடவை, ஏதோ ஒரு அருவிக்கு கூட்டிட்டு போனாங்க… எல்லோரும் பயிற்சி முடிச்சிட்டு குளிக்கப் போனோம். அப்போ எல்லாம் வள்ளி என்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டா…. ரொம்ப சுட்டி வேற…
எல்லோரும் குளிச்சிட்டு, தண்ணியில இருந்து மேல ஏற ஆரம்பிச்சோம். அப்போதான் அந்த சம்பவம் நடந்தது. எங்கோ தண்ணிக்குள்ள இருந்து வந்த ஒரு முதலை, வள்ளியோட காலை பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சிடிச்சி….
அவ வலியில கத்த ஆரம்பிச்சிட்டா…
ஆனா, அவளை சைட் அடிச்ச பயலுகள்ல இருந்து, எங்களுக்கு பயிற்சி தர்ற ஆசிரியர்கள் வரை எல்லோரும் கரையில நின்னுதான் கத்தினானுங்க…
என் அருமை வள்ளியை ஒரு சாதாரண முதலை ஜென்மம் காலை பிடிப்பதா…. எங்கிருந்து கோபம் வந்ததுன்னு தெரியல…… ஓடிப்போய்… முதலையை துவம்சம் செஞ்சிட்டேன்ல….. அதுல துண்டைக் காணோம்…. துணியை காணோம்னு… முதலை ஓடிப்போயிடிச்சு….. ஆனா வள்ளிக்கு கால்ல ரத்தம் கொட்டிட்டு இருந்தது. அந்த வலியிலும் என்னை நன்றிக்கடனா அன்போட பார்த்தா… அப்போ ஆரம்பிச்சதுதான் எங்க காதல்…..
இப்போ அவ எப்படி இருப்பா…. தலைமுடி எல்லாம் நரைச்சு….. சே…. அவ்வளவு வயிசாடிச்சா என்ன? என் வள்ளி இன்னமும் ஜம்முன்னு இருப்பா…. மனம் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டது.
‘‘எல்லாரும் வந்தாச்சா….’’ சீட்டில் வந்து அமர்ந்த டிரைவர் கத்தினார்.
‘‘என்னம்மோ…. ஒரு திருவிழா கூட்டத்தை கூட்டிட்டு போற மாதிரியே கத்துரியே…. இருக்கிறதே… நாங்க ரெண்டு பேர்…. இதோ இந்த பயபுள்ளைய சேர்த்தா…. 3 பேரு…. கிளம்பு, கிளம்புயா…. எல்லாம் வந்தாச்சு’’
பின்னால் இருந்த முண்டாசு ஆசாமி கத்தினான்.
வண்டி மீண்டும் பயத்தை தொடர ஆரம்பித்தது.
மனம், மீண்டும் காதல் நினைவில் மூழ்க ஆரம்பித்தது. எப்போது விடிந்தது என்று தெரியவில்லை. பொழுது புலர்ந்து நன்கு வெளிச்சம் வர ஆரம்பித்திருந்தது.
சின்னப்பிள்ளைகளை போன்று மனம் கொண்டாட்டத்தில் இருந்தது. எல்லாம் வள்ளியை பார்க்கப்போகும் தருணத்தினால்தான்.
வண்டியில் இருந்து இறங்குவதற்கு தோதாக தற்காலிக மண் மேடை அருகே நிறுத்தினார்கள்.
வண்டியை நிறுத்தியவுடன், மடமடவென்று இறங்கி ஓடினேன். முன்புறம் இருந்து, இறங்கிவந்த எங்கப்பன், ‘‘ராஜா…. ராஜா…. ’’ என்று ஓடி வந்தார்.
அங்கு இருந்த போர்டில், ‘‘முதுமலை யானைகள் முகாம், உங்களை அன்புடன் வரவேற்கிறது’’ என்று பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.
-     J.S.K.பாலகுமார்.













No comments:

Post a Comment

Thanks