வச்சக்குறி தப்பாது 2


2
பெரியவர் தன்னை நோக்கி வருவதை பார்த்ததும் விமானியின் அறைக்கு முன்புறம் நின்றிருந்த சாக்ஸ் ஆசாமி, அவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்தினான்.

‘பொளக்என்று பெரியவரின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. அவர் அப்படியே நிலைத்தடுமாறி, மூக்கை பிடித்து கொண்டார். இதைப்பார்த்து, ஆண்கள் முதல் பெண்கள் வரை கத்த, ஆரம்பித்தனர். பெரியவரை ஆசாமி குத்தியதையும், அவர் மூக்கில் இருந்து ரத்தம் வருவதையும் பார்த்த குழந்தை ஒன்று கத்தி அழ ஆரம்பித்தது. அதை அவளது தாய் கட்டியணைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

பெரியவரை குத்தியதை பார்த்த ஒரு பயணி, சாக்ஸ் ஆசாமியிடம், ‘‘இப்படி எல்லாம் அநாகரீகமாக நடந்துக் கொள்ளலாமா? நாங்கதான் நீங்க சொல்றதை எல்லாம் கேட்கிறோம்னு சொல்லிட்டுத்தான் பின்னாடி வந்து உட்கார்ந்திருக்கோம்….’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

தன்னை எதிர்த்து பேசியதை பார்த்து மேலும் கோபம் அடைந்த சாக்ஸ் ஆசாமி, தன் முன்னால் பேசிக் கொண்டிருந்த அந்த பயணியை துப்பாக்கியின் பின் முனையால் ஓங்கி, தள்ளிவிட்டு, அவர் தலையில் துப்பாக்கியை வைத்தான்.

‘‘யாராவது சத்தம்போட்டீங்க… இவனோட மூளை சிதறிடும்’’

விமானத்தில் இன்ஜின் சத்தம் வேற எல்லா சத்தமும் ஒடுங்கியத.

ஆக்ரோஷமாக எழுந்த அனைவரும் சக பயணியின் உயிருக்காக, சப்தநாடியும் ஒடுங்க சீட்டில் குறுகிக் கொண்டனர்.

‘‘யோவ் பெரிசு… பாத்ரூம் போகணும்னாலும், தும்மல் போடம்னுனாலும், என்னை கேட்கணும், என்னை கேட்காம ஏதாவது செய்ய நினைச்சீங்க, காக்கா, குருவிகளா சுட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருப்பேன்….. புரியுதா?’’ சாக்ஸ் ஆசாமி மிரட்டினான்.

பின்னர், ஒழுகி்க் கொண்டிருந்த ரத்தத்தை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டிருந்த பெரியவரை பார்த்து, ‘‘என்ன ஒண்ணுக்கு போகணுமா….. ரெண்டுக்கு போகணுமா….’’ என்று கேட்டான்.

‘‘எனக்கு எதுவும் வரலப்பா….’’ என்பதுபோல் இருகைகளையும் தூக்கி அவனுக்கு கும்பிடு போட்டார் அந்த பெரியவர்.

பெரியவரின் கும்பிட்டதை பார்த்து கொல்லென்று சிரித்த துப்பாக்கி ஆசாமிகள், ‘‘அது…’’ என்றனர்.

விமானிகள் அறையில் நின்றிருந்த, ஒற்றைநாடி ஆசாமி, விமானத்தை ஆப்ரிக்கா பக்கம் செலுத்தும்படி விமானிக்கு கட்டளையிட்டான்.

‘‘ஏதென்சில் இருந்து ஆப்ரிக்காவுக்கு கிட்டத்தட்ட 13 மணி நேரம் பறந்தா…. எரிபொருள் முழுக்க காலி ஆயிடும்…. அப்புறம் ஏதாவது எமர்ஜென்சின்னா கூட ஒன்னும் செய்ய முடியாது… அதுவும் இல்லாம… விமானத்தில போதுமான அளவுக்கு உணவு இல்லை…’’ என்று கூறினார் விமானி.

‘‘அதெல்லாம் எங்களுக்கு தெரியும்…. நீ பொத்து… நான் சொல்றதை செய்யுறது மட்டும்தான் உன் வேலை… கேள்வி எதுவும் கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது…. புரியுதா மிஸ்டர் கேப்டன்’’ என்று ஒற்றைநாடி சீறியது.

‘‘பயணிகளோட உயிருக்கு நான்தானே பொறுப்பு…. அதனால நான் சொல்ல வேண்டியதை சொன்னேன்’’

‘‘சரி….. சொல்லிட்டில்ல…. இனிமே மூடிட்டு விமானத்தை ஓட்டுற வேலைய மட்டும் பாரு’’

பயணிகளின் எண்ண ஓட்டங்களைப்போல, விமானத்தின் இன்ஜின் ஓட்டமும் சீறிக்கொண்டிருந்தது.

பின் சீட் வரிசையில் அமர்ந்திருந்த சற்று நடுத்தர வயது பெண் ஒருவர், மிகவும் பதற்றமாக காணப்பட்டார். பனிப்பெண்ணிடம் தண்ணீர் கேட்க, அவர், பின்புறம் நின்றிருந்த குட்டை ஆசாமி மற்றும் டிசர்ட் போட்டிருந்த அவனது கூட்டாளியின் முகத்தை பார்த்தார்.

நம்பியார் பாணியில் அவர்கள் முகத்தை மட்டும் ஆட்ட, பணிப்பெண், தண்ணீர் பாட்டில் ஒன்றை, எடுத்துவந்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்.

அதை குடித்தும்கூட அந்த பெண் தொடர்ந்து, பதற்றமாகவே காணப்பட்டார். அவர் பணிப்பெண்ணிடம் ஏதோ காதில் கிசுகிசுத்தார்.

‘‘அங்க என்ன பேச்சு’’ என்று குட்டை ஆசாமி கேட்டான்.

பனிப்பெண் ஸ்பைசியிடம் எழுந்து சென்று, ‘‘அந்த பெண் பயணி 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தமும் இருக்கிறது…. இங்கு நடக்கும் சம்பவங்களால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வருவதுபோல் உள்ளதாக கூறுகிறார். அவர் மட்டும் கீழே படுத்து கொள்ள அனுமதிப்பீர்களா?’’ பணிப்பெண் கேட்டார்.

‘‘நாங்க என்ன ஆசிரமமா நடத்திக்கிட்டு இருக்கோம்…. உங்களுக்கு எல்லாம் கருணை காட்டிக்கிட்டு இருக்க…. சும்மா சீட்ல உட்கார்ந்திருக்கட்டும்… இல்ல சாகட்டும்…’’ சீறினாள் ஸ்பைசி.

பணிப்பெண்ணுக்கு மனம் கேட்கவில்லை என்றாலும், அந்த பெண்ணின் அருகில் சென்று அமர்ந்து, அவரது தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தார்.

விமானம் ஆப்ரிக்காவை நோக்கி சென்று கொண்டிருந்தது.

----------


விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, டெல் அவிவ் பென் குரியன் விமான நிலையம்.

ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்து வந்த, ‘7700’ எனப்படும் விமானம் ஆபத்தில் சிக்கி உள்ளது. காப்பாற்றுங்கள் என்பதற்கான சமிக்ஞைால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கட்டுப்பாட்டு அறையின் மேலாளர், தனக்கு வந்த தகவலை உடனடியாக மேலதிகாரிக்கு தெரிவித்திருந்தார். அங்கிருந்து ராணுவ அமைச்சர் மற்றும் பிரதமர் இட்சாக் ராபின் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பிரதமரின் உத்தரவின்பேரில் ராணுவ அமைச்சர் சிமன் பெரஸ், விமான கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அவர் வருவதற்கு முன்னதாக ராணுவ உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர்.

விமான கட்டுப்பாட்டு அறையில், ஏர் பிரான்ஸ் கடத்தலை தொடர்ந்து, அதைப்பற்றிய விவகாரத்துக்காக தனி குழு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

‘‘யார் கடத்தியிருக்காங்க…. ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?’’ என்று அமைச்சர் சிமன் பெரஸ் கேட்டார்.

‘‘சார்… இதுவரைக்கும், எந்த தகவலும் இல்லை. ஆனா, விமான பயணிகள் பட்டியலை சரிபார்த்தப்போ…. அதில இருக்கிறவங்கள்ல பெரும்பாலானவர்கள் இஸ்ரேலியர்கள். மற்றவர்கள் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள். ஒரு சில
பாலஸ்தீனியர்களும் இருக்காங்க….’’ என்று கட்டுப்பாட்டு அறை மேலாளர் ஆரோன் விளக்கினார்.

‘‘விமானம் இப்போ எங்க போய்ட்டு இருக்கு….?’’

‘‘அவங்க போற திசையை பார்த்தா, ஆப்ரிக்காவில ஏதாவது ஒரு நாட்டுல இறங்குவாங்க மாதிரி தெரியுது….’’

‘‘கடத்தல்காரங்க பேசினாங்களா?’’

‘‘இல்லை….. சார்’’

‘‘டேன் சோம்ரான்….. கடத்தல்காரங்ககிட்ட பேச வேண்டிய பொறுப்பை உங்கக் கிட்ட ஒப்படைக்கிறேன்’’ என்று விமானப்படை தளபதியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் அமைச்சர்.

‘‘யெஸ்….சார்’’ என்று பொறுப்பை ஏற்றதற்கு அர்த்தமாக விரைப்பாக சல்யூட் அடித்தார் அங்கிருந்த தளபதி.

ஏர்பிரான்ஸ் விமானியிடம் பேசுவதற்காக அவர் எழுந்து வந்தார்.

அவரிடம் விமானியிடம் தொடர்புக் கொள்ளும் மைக்கை நீட்டினார் ஆரோன்.

ஒரு நிமிடம் பேச வேண்டியதை யோசித்து பார்த்துக் கொண்ட டேன் சோம்ரான், தான் தயாராகிவிட்டதைபோன்று விமானியிடம் தொடர்பை ஏற்படுத்தும்படி, ஆரோனிடம் சைகை செய்தார் டேன் சோம்ரான்.

தொடர்பு ஏற்படுத்தியதற்கு சிக்னலாக கட்டை விரலை உயர்த்திக்காண்பித்தார் ஆரோன்.

‘நான் இஸ்ரேல் விமானப்படை பிரதிநிதி பேசுகிறேன். நீங்க யார்…. எதற்காக எங்கள் விமானத்தை கடத்தியிருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று மைக்கில் கணீர் குரலில் பேசினார் டேன் சோம்ரான்.

அந்த பக்கத்தில் இருந்த ஒற்றைநாடி ஆசாமி, ஹெட்ஸ்பீக்கரில் வந்த குரலை கேட்டவுடன் உற்சாகமானான்.

மெலிதாக விசில் அடிக்கவும் செய்தான். பின்னர் மைக்கை ஆன் செய்து, ‘‘நாங்கள் பிஎப்எல்பி-இஓ மற்றும் ஜெர்மனியின் புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள். எங்களிடம் பயங்கர ஆயுதங்கள் உள்ளன. ஏதாவது தகிடு தத்தம் பண்ணி விமானத்தை திசை திருப்ப நினைத்தால் பயணிகளை சுட்டுத்தள்ளிட்டு விமானத்தையும் சிதறிடிச்சிடுவோம்’’ என்று கட்டை குரலில் பேசினான் ஒற்றைநாடி.

இருதரப்பிலும் சில விநாடிகள் அமைதியாக கழிந்தது.

‘‘உங்கள் கோரிக்கை என்ன…? எதற்காக அப்பாவி பயணிகளை பிடிச்சு வச்சுக்கிட்டு, அவர்களின் உயிர்களோட விளையாடுறீங்க….?’’ என்றார் டேன் சோம்ரான்.

‘‘நீங்க விளையாடாத விளையாட்டா…. நாங்க விளையாடுறோம்?’’ எதிர்முனையில் ஒற்றைநாடி இழக்காரமாக பேசினான்.

‘‘சரி உங்கள் கோரிக்கை என்ன?’’

‘‘எங்கள் அமைப்புகளைச் சேர்ந்த 40 போராளிகளை உங்க நாட்டு சிறையில அடைச்சு வச்சிருக்கீங்க…. அவங்களை உடனடியாக விடுதலை செஞ்சு, எல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கணும்….. அப்புறம், உங்க அண்டை நாடுகள், நட்பு நாடுகள்ல இருக்கிற எங்கள் போராளிகள் 13 பேரையும் விடுவிக்க வைக்கணும். அவங்க பேர் எல்லாம் உங்களுக்கு இன்னைக்கு மதியம் வர்ற போஸ்ட் கவர்ல கிடைக்கும்’’

‘‘குற்றம் செஞ்சவங்களை நீதிமன்றம் விதிச்ச தண்டனையின் பேர்லதானே நாங்க சிறையில அடைச்சிருக்கோம்…. அதுவும் இல்லாம அண்டை நாடுகள், பக்கத்து நாடுகள்ல இருக்கிற கைதிகளை விடுவிக்க வைக்கணும்ற கோரிக்கையை எப்படி உடனே நிறைவேற்ற முடியும்? இதற்கு தூதரக வழியாக பேச்சுவார்த்தை நடத்த நிறைய நாட்கள் ஆகும். இதெல்லாம் உடனடியாக நடக்கிற காரி்யமா?’’

‘‘நீங்க சொல்ற கதைகளை கேட்க நாங்க, விமானத்தை கடத்தல. எங்கள் கோரிக்கைகளை அடுத்த 24 மணிநேரத்துக்குள்ள நிறைவேத்தணும். இல்லேன்னா ஒவ்வொரு பயணியையும் போட்டுத்தள்ள ஆரம்பிப்போம். அப்புறம் உங்க இஷ்டம்’’ என்று ஒற்றைநாடி ஆசாமி ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்தான் சாக்ஸ்ஆசாமி.

என்ன என்பதுபோல் அவனிடம் கண்ணாலேயே கேட்டான் ஒற்றைநாடி. வந்தவன் ஒற்றைநாடியிடம் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அதனால் சில நிமிடங்கள், இணைப்பை துண்டிக்கும் வகையில், மைக்கின் பட்டனில் இருந்து விரலை விடுவித்தான் ஒற்றைநாடி. அவன் சொன்னது சரியாக புரியாததால், அவனிடம் பொறு என்பதுபோல் கையை காட்டி, மீண்டும் மைக்கில் இணைப்பை ஏற்படுத்தி,
‘‘எங்களுடைய கோரிக்கையை உடனே நிறைவேத்த நடவடிக்கை எடுங்க…. நான் மீண்டும் வாய்ப்பு ஏற்படும்போது உங்களை தொடர்புக் கொள்கிறேன்’’ கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான் ஒற்றைநாடி.

‘‘சரி இப்போ சொல்லு என்ன பிராப்ளம்’’ என்று தன் சகாவை பார்த்து கேட்டான் ஒற்றைநாடி.

‘‘கடைசி சீட்ல இருந்த கர்ப்பிணிக்கு உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிச்சிருக்கு. அந்த பெண்மணிக்கு கரு கலைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்’’ என்றான் சாக்ஸ்ஆசாமி.

‘‘சரி…. பர்ஸ்ட் டெஸ்டினேசன்ல, அந்த பெண்மணியை இறக்கிவிட்டுடலாம். நீ போ….’’ கூறினான் ஒற்றைநாடி.

தன்னையும், தன் கையில் இருக்கும் துப்பாக்கியையுமே பார்த்துக் கொண்டிருந்த விமானிடம் என்ன என்பது போல் பார்த்தான் ஒற்றைநாடி.

‘‘நாம ஆப்ரிக்க எல்லையில இருக்கிறாம். எங்க போகணும்னு சொன்னாத்தான் அனுமதி வாங்க முடியும்’’ என்றார் விமானி.

‘‘லிபியாவின் பெங்காஜி விமான நிலையம்’’ என்றான் ஒற்றைநாடி.

அதைத்தொடர்ந்து, பெங்காஜி விமான நிலையத்துடன் தொடர்புக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் விமானி.

‘‘நான் ஏர் பிரான்ஸ் விமானி பேசுகிறேன்…’’ மைக்கில் பேச ஆரம்பித்தார் விமானி.

கடல்பகுதியில் பறந்து கொண்டிருந்த விமானம் இப்போது நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்தது. பயணிகள் எந்த நாட்டின் மீது பறக்கிறோம் என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர். பலருக்கு பசிக்க ஆரம்பித்திருந்தது. ஆனால், பயத்தில் அதை அடக்கி வைத்திருந்தனர்.

‘‘பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் போட்டுக்கொள்ளவும். நாம் இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்க இருக்கிறோம்’’ என்று மைக்கில் பயணிகளுக்கு அறிவுறுத்தினார் விமானி.

எல்லோரும் சீட்களில் நிமிர்ந்து உட்கார்ந்து, அவசர, அவசரமாக பெல்டுகளை போட ஆரம்பித்தனர். கடுமையான ரத்தப்போக்குடன் முகம் வியர்த்துப்போய் காணப்பட்ட கர்ப்பிணியும் சீட்டில் அமர வைக்கப்பட்டு பெல்ட் மாட்டிவிடப்பட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் விமானம், பெங்காஜி விமான நிலைய ஓடுபாதையில் புகைபறக்க தரையிறங்க ஆரம்பித்தது.

ஓடுபாதையின் முழுவதும் ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் காணப்பட்டார்கள். தரையிறங்கிய சில நொடிகளில் சைரன் வைத்த ராணுவ ஜீ்ப்கள் 4 வேகமாக, விமானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தன.

(தொடரும் 2)

No comments:

Post a Comment

Thanks