ஏ பார் ஆட்டம் - 3


3. நெருங்கியது கரை



நாள்: நவம்பர் 24.
விடிந்து வெகுநேரம் ஆகியிருந்தது.
கடலில் வீசியிருந்த வலையை உள்ளிழுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ராமேஷ்வர்.
அதை அப்துல்லாலும் மற்றவர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று வலையில் நல்ல மீன்பாடு வந்திருந்தது. ராமேஷ்வர் மகிழ்ச்சியாக வலையை இழுத்தார். ‘‘தம்பீகளா… இன்னைக்கு நீங்க வந்த அதிர்ஷ்டமான்னு தெரியல… நல்ல மீன்பாடு கிடைச்சிருக்கு… கடவுள் என் கஷ்டத்தை புரிஞ்சுக்கிட்டு, உதவியிருக்கார்னு நினைக்கிறேன்… என் பையனுக்கு இன்னைக்கு பீஸ் கட்டிடலாம்னு உறுதியளிச்சேன்… அத நிறைவேத்த கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன். அதுதான் அவர் கருணை காட்டியிருக்கார்…’’ என்றபடி வலையை வேகமாக இழுத்தார்.
பின்பு மகிழ்ச்சியுடன் படகை, மும்பை கடற்கரையை நோக்கி செலுத்த ஆரம்பித்தார்.
‘‘சகோதரரே உங்கள் படகில், வேறு யாரும் வரலியா?’’ கேட்டான் அப்துல்லா.
‘‘எப்பவுமே நாலைந்து பேராத்தான் வருவோம்… இன்னைக்கு அம்மன் வீதியுலான்னு சொல்லிட்டு யாரும் வரல… ஒழைச்சு, ஒழைச்சு வைரம் பாஞ்ச கட்டத் தம்பீ… சும்மா வீட்டில முடங்கியிருக்க பிடிக்கல… சரி கிடைச்சது கிடைக்கட்டும்னு நான் மட்டும் கிளம்பி வந்துட்னே்’’ என்றார் ராமேஷ்வர்.
‘‘நீங்க சாப்பாட்டுக்கு என்ன கொண்டு வருவீங்க?’’ அம்ஜத் கேட்டான்.
‘‘ஓ… உங்களுக்கு எல்லாம் எங்களோட வாழ்க்கை தெரியாதில்ல… சொல்றேன் கேளுங்க…’’ என்றபடி லீவரை திருப்பிவிட்டுக் கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார்.
‘‘அதிகாலையில வீட்டில வச்சு குடுக்கிற கஞ்சிப்பானையோட தொழிலுக்கு வந்துடுவோம்… இங்க ஒரு அடுப்பு இருக்கில்ல… அதுல தேவைப்பட்டா மீனை சுட்டு சாப்பிடுவோம்… இல்லாட்டி ஊருகாயை தொட்டுக்கிட்டு சாப்பிடுவோம்… கடல்ல ரெண்டு நாள் தங்கியிருப்போம்… ரெண்டு நாளும் இதுதான் சாப்பாடு. குளிக்கணும்னு நினைச்சா ஏணியை கடல்ல விட்டுட்டு, பக்கத்திலேயே குளிச்சுக்குவோம். சாதாரண நாட்கள்ல கடல்ல எந்த ஆபத்தும் கிடையாது. ஆனா, புயல் காலத்தில அலைகள் படகை தூக்கிப்போடும். படகை ஒரு நிலைக்கு கொண்டு வந்து கரைக்கு வர்றதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும்’’ என்றார் ராமேஷ்வர்.
‘‘ஏன் சகோதரரே கடல்லதான் வழி தெரியாதே… அப்புறம் எப்படி கரெக்டா வழி கண்டுபிடிச்சு போறீங்க… அப்புறம் நம்ம ஆளுங்க சில நேரத்துல பாகிஸ்தான் கடல்பகுதிக்கு போயிடுறதா சொல்றாங்களே?’’ என்றான் அப்துல்லா.
‘‘கடல்ல வழிக்காட்டி எல்லாம் வானம்தான் தம்பீகளா…இந்த சூரியன், நிலவு, நட்சத்திரங்கள வச்சிட்டுத்தான் நாங்க வழியை கண்டுபிடிப்போம். கடல்ன்னா எல்லாரும் வெறும் தண்ணீதான் நிரம்பியிருக்கும்னு நினைக்கிறாங்க… அது தப்பு… கடல்ல நீரோட்டம்னு ஒண்ணு இருக்கு… அந்த வழியில போனா எந்த பிரச்னையும் இருக்காது. மத்தபடி கண்டபடி போனா… பாறைகள்ல சிக்கி படகு சுக்குநூறா உடைஞ்சிடும். சில இடங்கள்ல ஆழமே இருக்காது… வெறும் மண்திட்டா இருக்கும்… அந்த வழியில செலுத்தினா படகு தரை தட்டி நின்னுடும்… அதை வெளியே எடுக்கணும்னா பல ஆட்கள் தேவைப்படும். அதுக்கு நிறைய செலவழிக்க வேண்டியிருக்கும். அதேமாதிரி எல்லை தாண்டி போறதுன்றது எல்லாம் உயிரை பணயம் வச்சு மீன்பிடிக்கத்தான். மத்தபடி வழி தெரியாம எல்லாம் போகல’’ என்றார் ராமேஷ்வர்.
‘‘ஓ… கடல்ல இவ்வளவு இருக்கா?’’ என்றான் அம்ஜத்.
‘‘ஆமா… தம்பீ. அதனாலத்தான் கப்பல்கள்ல கூட நேரடியா யாருக்கும் கேப்டன் பதவி போட்டுக் குடுத்திட மாட்டாங்க… இங்க அனுபவத்துக்குத்தான் மதிப்பு அதிகம். கடல்வழி சரியா தெரிஞ்ச ஆளுங்களை வலைவீசி தேடித்தான் கேப்டன் பதவி கொடுப்பாங்க… அவங்களுக்கு மதிப்பும் அதிகம்’’
‘‘ஓ…’’ போட்டனர் அனைவரும்.
‘‘அனுபவ சாலிகளுக்குத்தான் மீன் எந்த இடத்தில குவிஞ்சிருக்கு… இல்லாட்டி அந்தப்பகுதிக்கு வருமான்னு தெரியும்… அங்க பாருங்க… சீகல் பறவை பறக்குது… இவை மீன் எங்கே குவிஞ்சிருக்கோ அங்க கூட்டமா சுத்தும். அதே மாதிரி டால்பின் மீன்கள் மொத்தமா டைவ் அடிச்சு, மேலே வந்து, வந்து போகுதுன்னா… அவை மீன் கூட்டத்தை நோக்கி போய்க்கிட்டு இருக்குன்னு அர்த்தம். டால்பின்கள் மனிதர்களோட நண்பர்கள். அவை மீன் கூட்டத்தை காட்டிக் குடுக்கும். அதேசமயம், கடல்ல தவறி விழுற மனிதர்களையும் பாதுகாப்பா தள்ளிட்டுப்போய் கரையேத்திடும். அதனாலத்தான் எங்க வலைகள்ல டால்பின் சிக்கினாலும், அதை வெளியே எடுத்து போட்டுடுவோம்’’ என்றார் ராமேஷ்வர்.
‘‘அப்புறம் உங்களுக்கு ஏதாவது உதவின்னா கடற்படை, கடலோர காவல் படை எல்லாம் உடனே வந்திடுவாங்கல்ல’’ என்றான் அப்துல்லா.
‘‘அவங்க கப்பல் எல்லாம் ஓரளவுக்கு ஆழமான பகுதிக்குத்தான் தம்பீ வரும்… ஆழம் குறைந்த பகுதிக்கு வர்றதுன்னா அவங்க ரப்பர் போட் தான் எடுத்திட்டு வரணும். இப்போ நாம இருக்கிற பகுதி ஆழம் குறைவானது. அவங்க எல்லாம் இந்தப்பகுதிக்கு வரமாட்டாங்க… மீனவர்கள் படகு மட்டும் இந்த பகுதியில சுத்தியிட்டு இருக்கும்… அதுவும் நான் இன்னைக்கு வழக்கமா வர்ற பாதையில இருந்து கொஞ்சம் ஒதுங்கி வந்திருக்கேன்… இந்த பகுதியில எப்பவாச்சும் மீனவர்கள் படகு வரும். சரி தம்பீகளா… நாம கரை நெருங்கிட்டு இருக்கோம்… இன்னும் அரை மணி நேரத்தில கரைக்கு போயிடலாம். நீங்க எல்லாம் ரெடி ஆகுங்க’’ என்றார் ராமேஷ்வர்.
அதை கேட்ட அப்துல்லா, ‘‘அப்படியா சகோதரரே…’’ என்று கேட்டவாறு பேன்ட்டின் பின்னால் சொருகியிருந்த கத்தியை எடுத்து, சதக்கென்று ராமேஷ்வரின் கழுத்தில் குத்தினான்.
அவரால் பேசக்கூட முடியவில்லை. பையனின் பீஸ் கட்ட முடியவில்லையே… குடும்பத்தை தவிக்கவிட்டு போகிறோமே… என்று ஏகப்பட்ட கவலையுடன் அப்துல்லாவை வெறித்து பார்த்தபடி உயிரை விட்டார் ராமேஷ்வர்.
(தொடரும் 3)
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks