ஒன் 4 த்ரீ - நாவல்



இன்போ பிராஸ் ஐ.டி. அலுவலகம் காலையிலேயே களைக்கட்டியிருந்தது.

அன்று பிரஸ்ஸர்ஸ் எனப்படும் புது பணியாளர்கள் வேலையில் சேரும் நாள். இளம் ஐ.டி. பணியாளர்களுக்கு அது ஒரு கல்லூரி பிரஸ்ஸர்ஸ் டேயாகத்தான் இருக்கும். எந்த பிட்டு, எந்த டீமுக்கு வருமோ என்று ஒரே ஏக்கம். அழகான சிட்டுக்களை கண்டால், அது தங்கள் செக்‌ஷனுக்கு வந்துவிடாதா என்று ஏக்கம், பரபரப்பு.

கவுசிக் அன் கோவுக்கு முதல் நாளே தகவல் கிடைத்தாகிவிட்டது. தங்கள் டீமுக்கு முக்கியமான கல்லூரியில் தேர்வு செய்யப்பட்ட இளஞ்சிட்டுகள் சிலர் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்று. போதாதா….? யார்ட்லி சென்ட், புது டிரி்க்கர் ஜீன்ஸ், பார்க்கர் சர்ட், பூட் என்று தங்களால் முடிந்த அளவுக்கு கலக்கலாக வந்திருந்தார்கள்.

அலுவலகம் 10 மணிக்குத்தான் என்றாலும், தங்களுடைய ‘டீப் டிஸ்கஷனுக்காக’, கவுசிக், சிவா, பாலா, விஷ்ணு, ஜான் ஒன்பதரை மணிக்கே அலுவலகத்தில் அசம்பிள் ஆகியிருந்தனர்.

நண்பர்கள் பேச்சு சுவாரசியத்தில் 10 மணி ஆனதே தெரியவில்லை. சிஸ்டமை ஓப்பன் செய்து, தம்ப் வைக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. புதிதாக வந்த குழுவினர் அட்மினுக்கு சென்றுவிட்டு ஒன்றாக வந்து கொண்டிருந்தார்கள்.

ஜான்தான் ஆரம்பித்தான். ‘‘மாப்பிளைஸ் டைம் ஆயிடிச்சி… தம்ப் வைக்கலேன்னா… பெருசு போன் போட்டு கத்தும்…. வாங்டா போகலாம்’’

‘‘அட இருடா… குட்டீஸ் வந்துட்டு இருக்காங்க…. ஒரு பைவ் மினிட்ஸ் பார்த்துட்டு போயிடலாம்’’ எல்லோரையும் அமர்த்தினான் சிவா.

கேன்டீனில் டீ வாங்கிக் கொண்டு கப்புடன் வராண்டாவில் நின்றுக் கொண்டே நண்பர்கள் குழு நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

இளம்பெண்கள் சிலர் தங்களை மாடர்னாக காட்டிக் கொள்ள பேன்ட், சர்ட்களிலும், பாரம்பரியத்தை காட்டிக் கொள்ளும் வகையில் சிலர் சேலையிலும் நடைப்போட்டு வந்தனர். ஆண்கள் நீட்டாக சேவ் செய்து, டக் இன்னுடன் அட்மின் ஆளுடன் வந்து கொண்டிருந்தனர்.

கவுசிக் குரூப் ‘எம்’ குரூப்பை விட்டு, ‘எஃப்’ குரூப்பை மட்டும் வாட்ச் செய்து கொண்டிருந்தனர்.

அதில்தான் தேவதையாக ஒரு பெண் வந்து கொண்டிருந்தாள். அவளது நடை, உடை, பாவனை எல்லாமே வித்தியாசமாக இருந்தது. மாடர்னாகவும் இல்லை, பட்டிக்காடகாவும் இல்லை. சாதாரண சுடிதார் என்றாலும் அதிலும் ஒரு நேர்த்தி. வெள்ளையும், வெளிர் நில நிறமும், கோதுமை நிறத்தில் இருந்த அவளுக்கு மேலும் அழகை கூட்டியது.

கவுசிக் அன் கோ முழுவதுமாகவே அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அட்மின் ஆள் வழக்கம்போல் இவர்களை பார்த்து முறைத்துக் கொண்டே முன்னேறிச் சென்றான்.

‘‘மச்சி இந்த தேவதை நம்ம டீமுக்கு வந்தா… எப்படியிருக்கும்?’’ கவுசிக்தான் கேட்டான்.

‘‘அதேதான்டா மச்சான்… நானும் அதைத்தான் நினைச்சேன்’’ சிவா கூறினான்.

அவர்கள் பேசிக் கொண்டே இருக்கையில், இவர்கள் வேலை பார்க்கும் ‘ஏ’ பிளாக்கை நோக்கித்தான் அட்மின் ஆள் நடைப்போட்டுக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்ததுதான் தாமதம்… ஐவருமே… டீ கப்பை டேபிளில் வைத்துவி்ட்டு பிளாக்குக்கு விரைந்தார்கள்.

கவுசிக்கின் டீம் லீடர் ரோசியிடம் சென்று அட்மின் ஆள் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் ஐவரும் தங்களுடைய சீட்களில் செட்டில் ஆகி ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தேவதையுடன், மேலும் 3 பெண்கள் ஒரு இளைஞனை ரோசியிடம் அறிமுகம் செய்துவைத்துவிட்டு, மற்றவர்களுடன் நகர்ந்தான் அட்மின் ஆ.

‘‘அப்போ…. தேவதை நம்ம டீமா?’’ ஐவருமே மவுன பாஷையில் ஒருவருக்கு ஒருவர் பார்வையால் பேசிக் கொண்டனர்.

ரோசி, ஐவரிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அதைத் தொடர்ந்து, பிரன்ட் ரோவில் இருக்கும் பிரஸ்ஸர்ஸ் சீட்டில் அவர்களை அமர வைத்தாள்.

ஐவரும் சந்தோஷமாக அந்த நாள் பணியை உற்சாகமாகத் தொடங்கினார்கள்.

அவர்கள் அனைவருமே எதிர்பார்த்திருந்த லஞ்ச் நேரம் வந்தது. வழக்கம்போல், டீமில் உள்ளவர்கள் சாப்பிடப்போனபோது, அவர்களை கூப்பிட்டு, கூப்பிட்டு பிரஸ்ஸர்களை அறிமுகம் செய்து வைத்தாள் ரோசி.

ஐவர் குழு தங்கள் லஞ்ச் பாக்ஸ்களுடன் ஒன்றுமே தெரியாததுபோல் ரோசியயை கடக்க முயலுகையில் அவளே கூப்பிட்டாள்.

‘‘ஆக…. உங்களுக்கு எல்லாம் இன்னைக்கு பிரஸ்ஸர்ஸ் வந்திருக்கிறது தெரியாது, அப்படித்தானே?’’ ரோசி கிண்டலாக கேட்டாள்.

‘‘அப்படியில்ல மேடம்…. ஏதோ வேலை பிசியில….’’ பாலா மழுப்பினான்.

‘‘விடுங்கடா… உங்களைப்பத்தி எனக்கு தெரியாது. இருங்க, அவங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்’’ என்று தேவதை குழுவினரை கூப்பிட்டாள் ரோசி.

முதலில் வந்த பாதுரி யாரைமே கவரவில்லை. அடுத்ததாக தேவதையை கூப்பிட்டு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தாள்.

‘‘என் பெயர் கனிகா’’ என்று அவள் கைக்கொடுத்தபோது, மூளையில் லட்சம் பட்டாம்பூச்சிகள் பறந்தது கவுசிக்குக்கு.

(தொடரும் 1)

-----------------------

கனிகாவின் கை விரல்களா, இலவம் பஞ்சு அடைத்து வைத்து வெல்வெட் துணியா என்றே சந்தேகம் வந்துவிட்டது கவுசிக்குக்கு. அவ்வளவு மென்மையாக இருந்தது, கனிகாவின் கைகள்.
கைகொடுத்துவிட்டு, அவள் மெதுவாக நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தபோது, அவன் கால்கள் தரையில் இருந்து மிதப்பதுபோன்று இருந்தது. ‘‘குட் மார்னிங், சாப்பிட்டிங்களா?’’ என்று உளறினான்.
‘‘இல்ல சார்... இனிமேதான்’’ கனிகா சின்னபுன்முறுவலுடன் கூறிவிட்டு, தன் பேட்ச் மேட்களுடன், நடக்க ஆரம்பித்தாள்.
‘‘ஒகே கய்ஸ்... உங்க வேலைய செவ்வனே முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க...’’ ரோசியும் விடைக்கொடுத்தாள்.
சிவா தான் ஆரம்பித்தான், ‘‘மாப்பிளை செமயில்லே?’’
‘‘ஆமாடா... இந்த பேட்சில பெஸ்ட் இவதான் பிபிசி சொல்லிச்சு...’’ பாலா ஒத்து ஊதினான்.
கேன்டீனில் முழுக்க, முழுக்க பிரஸ்சர்ஸ் பேச்சுதான். அதுவும் கவுசிக் டீமில் அப்சரஸ் ஒன்று வந்திருப்பதாக வந்த பேச்சை தொடர்ந்து, ஆங்காங்கே அமர்ந்திருந்த மற்ற பேட்ஜ் காரர்கள் இவர்கள் பக்கம் திரும்பி, பேசுவதும், சிரிப்பதுமாக இருந்தார்கள்.
ஒரு வழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு, கவுசிக் டீபன் பாக்சை கழுவிக் கொண்டிருந்தபோது, கனிகா அங்கு வந்தாள்.
தன் பின்னால் யாரோ நின்றுக் கொண்டிருப்பதை போன்று இருந்ததை தொடர்ந்து, பின்னால் திரும்பி பார்த்தான் கவுசிக்.
‘‘ஹலோ... வாங்க கனிகா, நீங்க கைக்கழுவுங்க, நான் அப்புறம் டீபன் பாக்ஸ் கழுவிக்கிறேன்’’ என்று அவளுக்கு வழிவிட்டான்.
ஒரு புன்முறுவலுடன் அவர் கை கழுவியபோது, தண்ணீர் பட்டு அவளது கை சிவப்பதை பார்த்து அதிசயித்தான் கவுசிக்.
‘‘கைக்கழுவினா... கை சிவக்குமா? நம்ம கை ஒரு நாளும் இப்படி சிவந்தது இல்லையே? அது சரி நம்ம நிறத்துக்கும், அவ நிறத்துக்கும் இதெல்லாம் சாதாரணப்பா...’’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
கனிகா சென்ற பின்னர் நிதானமாக மீண்டும் டீபன் பாக்சை கழுவ ஆரம்பித்தான் கவுசிக்.
‘‘சார்... நாங்க ரொம்ப நேரமா உங்க பின்னாடி கைக்கழுவுறதுக்காக நிக்கிறோம்... எங்கே உங்க கண்ணுக்கு நாங்க எல்லாம் பட மாட்டோமே...’’ குரல் கேட்டு திரும்பியபோதுதான் பாலா தன் பின்னால் நிற்பதை உணர்ந்து, அவசர, அவசரமாக கழுவிக் கொண்டு வெளியேறினான்.
கேன்டீனில் மாம்பழ ஜூஸ் சாப்பிட்டுவிட்டு, பாக்கை சற்று அள்ளி வாயில் போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தபோது, பிராஜெக்டில் ஏகப்பட்ட கரெக்சன்கள் சொல்லப்பட்டிருப்பதை பார்த்து, மீண்டும் வேலையில் மூழ்க ஆரம்பித்தான் கவுசிக்.
‘‘மாப்பிள்ளை கெளம்பலியா? மணி 6.30 ஆகப்போகுதுடா’’ சிவா வந்து சொன்ன பிறகுதான், வாட்சைப்பார்த்தான் கவுசிக்.
‘‘கொஞ்சம் இரு ஷட் டவுன் பண்ணிட்டு வந்துடுறேன்’’ சொல்லிவிட்டு கம்ப்யூட்டரின் உயிரை முடக்கிவிட்டு, கிளம்பத்தயாரானான்.
ஆபிசைவிட்டு கிளம்பியபோது, கனிகாவும் அவரது தோழிகளும் கூட அதே கேப்பில் வந்து அமர்வது பார்த்து, இருவரும் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.
கேப்பில் அன்று கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
சிவாதான் வலிய பேச்சு கொடுத்தான்.
‘‘வாங்க கனிகா அன்கோ... நீங்களும் எங்க ஏரியாத்தானா?’’ என்று எந்த ஏரியா என்று சொல்லாமலேயே கூவினான்.
‘‘நாங்க மயிலாப்பூர் சார்’’ கனிகாவின் தோழி தேவி கூறினாள்.
‘‘ஓ... அப்ப நீங்க எங்களுக்கு முன்னாடியே இறக்கிடுவீங்க அப்படித்தானே?. ஏன்னா நான் ராயப்பேட்டை’’ சொல்லிவிட்டு சிவா சிரித்தான்.
பொத்தாம், பொதுவாக சிரித்து வைத்தார்கள் அவர்கள்.
‘‘என்ன தேவி நீங்க எல்லாம் ஹாஸ்டலா, இல்லாட்டி மெட்ராஸ்தான் பெர்த் சர்டிபிகேட் வாங்கின பூர்வக்குடியா?’’ என்று கேட்டான்.
‘‘நானும், கனிகாவும் மயிலாப்பூர் சார்... மாலினியும், ஜான்சியும் மந்தைவெளி சார்’’.
‘‘நீங்க எந்த கிளாஸ் என்கிட்ட படிச்சீங்க தேவி?’’
‘‘புரியலையே... நான் உங்கக்கிட்ட படிச்சேனா?’’
‘‘அப்புறம் என்ன... மொதல்ல எல்லாத்துக்கும் சார்... மோர்னு சொல்றதை நிப்பாட்டுங்க. என் பெயர் சிவகுருநாதன். சுருக்கமா சிவான்னு கூப்பிடலாம்’’
‘‘ஆமாம்மா... சாரை சிவான்னும் கூப்பிடலாம்... சிவசிவான்னும் கூப்பிடலாம்...’’ கடைசி பெஞ்ச் பி பிளாக் பொறாமையில் கத்தியது.
அதற்கும் கூட பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தார்கள் கனிகா அன்கோ.
‘‘கேர்ள்ல் இவன் பெயர் கவுசிக். வெரி கியூட் பாய். எங்க செட்ல பர்ஸ்ட் ரேங்க். பேபி பாய் கூட. இவனும் உங்க ஏரியாதான். ஆனா, எல்லையில இறங்கிடுவான்’’ என்று அறிமுகப்படுத்தினான்.
‘‘எல்லைன்னா...?’’ மாலினி கேட்டாள்.
‘‘ராயப்பேட்டை பிரிட்ஜ்க்கு முன்னாடியே இறங்கிடுவான்மா... அதைத்தான் அப்படி சொன்னேன்’’ சிவா கூறினான்.
‘‘ஓ...’’ என்று எல்லா பெண்களும் ஒரே நேரத்தில் கூறியது, சற்று சத்தத்தை கூட்டச் செய்தது.
இவர்கள் கிண்டல் செய்கிறார்களோ என்று, அவர்களை பார்த்தான் கவுசிக். ஆனால், அப்படி எதுவும் படவில்லை.
இப்போதுதான் அவர்கள் பாமுக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.
அதற்குள் மந்தைவெளி வந்துவிட்டது. டிவிஸ் பைக் ஷோரூம் அருகில் மாலினியும், ஜான்சியும் இறங்கிச்செல்ல அங்கு ஒரு அமைதி நிலவ ஆரம்பித்தது.
ஆனால், கவுசிக் மனதில் ஒரு இனம்புரியாத பதற்றம் எழ ஆரம்பித்திருந்தது. ‘‘அடுத்த ஸ்டாப் கனிகாவாச்சே... இன்னும் கொஞ்ச நேரம் இந்த பஸ் பயணம் நீடித்திருக்கக்கூடாதா?’’ என்று மனம் கிடந்து அடிக்க ஆரம்பித்தது.
அடுத்த ஸ்டாப் மயிலாப்பூர் என்பதால், கனிகாவும், தேவியும் எழுந்து தயாரானார்கள்.
‘‘வர்றேன் சார்...’’ ஒற்றை வரியில், ஒரு சின்ன புன்முறுவலுடன் கனிகா கூறியபோது, பதில் சொல்லாமல் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘மாப்பிள்ளை அவங்க கிளம்புறாங்க... நீ ஏதோ யோசனையில இருக்கே?’’ சிவா கேட்டபோதுதான் நினைவுக்கு வந்து, அவளை பார்த்து, ‘‘போய்ட்டு வாங்க’’ என்றான்.
டேங்க் ஸ்டாப்பில் பஸ் நின்று இருவரும் இறங்கி, இவர்கள் இருக்கும் ஜன்னலை கடந்து சென்றபோது, மெலிதாக மீண்டும் ஒரு புன்முறுவல் பூத்தாள்.
கவுசிக் தன் நிலை மறந்தான்.

தொடரும் - 2
------------------------
காலையிலேயே படுக்கையில் தூக்கம் கலைவிட்டது கவுசிக்குக்கு.

இன்று கனிகாவுடன் எப்படி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். பலமுறை யோசித்தும் எந்த ஐடியாவும் வரவில்லை. திரும்ப, திரும்ப யோசித்து பார்த்தும் எதுவும் பிடிபடவில்லை.

‘‘டேய் அங்க என்ன பலத்த யோசனை… சூரியன், மேற்குக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறப்போதான் எழுந்திருக்கிறதா உத்தேசமா?’’ அம்மா அடுப்பங்கரையில் இருந்து குரல் கொடுத்தாள்.

அவசர, அவசரமாக எழுந்து, ஆபிஸ் போக தயாரானான்.

அம்மா சுட்டுவைத்திருந்த இட்லியை, விண்டு வாயில் போட்டுக் கொண்டு பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தபோது மணி 9 ஆகி இருந்தது.

ஏற்கனவே சிவா அங்கு வந்து நின்றிருந்தான்.

‘‘வாடா மாப்பிள்ளை… என்ன இன்னைக்கு மேக்கப் கொஞ்சம் தூக்கலா இருக்கு… டிரஸ்ஸூம் ரொம்ப நேர்த்தியா இருக்கு… யார்ட்லி வேற மணக்குது….’’

‘‘டேய்… ரொம்ப ஓட்டாதே… வழக்கமா, வர்ற மாதிரித்தான் வந்திருக்கேன்’’

‘‘அப்படியா மாப்பிள… நாங்க எல்லாம் கிரேசி மேரிக்கே மேக்கப் போட்டவனுங்க… எங்களுக்கு தெரியாதா… எந்த மூஞ்சிக்கு எவ்வளவு பவுடர் பிடிக்கும்னு’’ என்று சிரித்தான்.

‘‘ஆமாடா… இன்னைக்கு சார் கொஞ்சம் கூடுதலாத்தான் அலங்காரம் பண்ணியிருக்கேன்… இப்ப என்னாங்கிற அதுக்கு?’’

‘‘அப்படி ஒத்துக்கோங்க மாப்பிள்ள… அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு’’

இவர்களின் அரட்டைக்கு இடையே கம்பெனி பஸ் வந்து கொண்டிருந்தது. இருவரும் ஏறிய நிலையில், இடதுபுறம் காலியாக இருந்த இரண்டு சீட்டில் உட்காரச் சென்றான் சிவா.

அவனை அப்படியே இழுத்துக் கொண்டு இடதுபுறம் காலியாக இருந்த சீட்டுக்கு அவனை இழுத்துக் கொண்டு உட்கார்ந்தான் கவுசிக்.

‘‘ஏண்டா அங்க வாஸ்து சரியில்லையா? தெற்கே சூலமா?’’ சிவா கேட்டான்.

முன்புறம் நோக்கி கண்ணை காட்டினான் கவுசிக். அதுவும் காலியாகத்தான் இருந்தது. ஒரு சில விநாடிகள் யோசித்த சிவா, ‘‘ஓ….. கதை அப்படிப்போகுதா… நடத்துங்கடா… என்னடா பொழுது விடிஞ்சிருச்சே… இன்னும் சம்பவம் எதுவும் காணமேன்னு பார்த்தேன்… நடத்துங்க சாமீ…’’

கவுசிக் மெல்லிதாக சிரித்தான்.

அதற்குள் டிவிஎஸ் ஷோரூம் ஸ்டாப் வந்தது. எதிர்பார்த்தபடியே, அங்கு கனிகாவும் அவளது தோழி தேவியும் காத்திருந்தனர்.

அடுத்த எதிர்பார்ப்புபடி... அவர்கள் காலியாக இருந்த கவுசிக்-சிவா சீட்டுக்கு முந்தைய சீட்டில் உட்கார்ந்தார்கள்.

‘‘வாங்க அம்மணிகளா… பொழுது நல்லா விடிஞ்சதா?’’ சிவா கேட்டான்.

‘‘என்னது பொழுது விடிஞ்சிருச்சா…’’ என்று கேட்டபடியே நெற்றில் கையை வைத்து வெளியே பார்த்தாள் தேவி.

‘‘அட்ர சக்கைன்னானா… வாங்க… மயிலாப்பூர் அட்ராசிட்டி… வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாளே இந்த போடு போட்டா… நீங்களெல்லாம்….’’ இழுத்தான் சிவா.

‘‘ஹலோ… ஹலோ… நாங்களெல்லாம் காலேஜிலேயே சங்கராபரணம் பாடினவங்க… இப்போ வேலைக்கு வேற வந்தாச்சு… எங்க கிட்டேயாவா?’’

‘‘தெரியா வாய குடுத்திட்டேன் அம்மணி… நீங்க உங்க சங்கராபுராணத்தை பாருங்க’’ என்று கையெடுத்து கும்பிட்டான் சிவா.

எல்லோரும் சேர்ந்து சிரித்தனர்.

பஸ் அடையாரை தாண்டிக் கொண்டிருந்தபோது, கனிகாவின் கர்ச்சீப் தவறுதலாக கீழே விழுந்தது. அவள் கவனிப்பாளா என்று பார்த்தான். ஆனால், அது விழுந்ததே தெரியாமல் அமர்ந்திருந்தாள் கனிகா.

அதை எடுத்து, ‘‘கனிகா உங்க கர்ச்சீப்’’ என்று எடுத்து கொடுத்தான்.

பின்புறம் திரும்பி, ‘‘நன்றி’’ என்று புன்முறுவல் பூத்தாள்.

இன்று நெற்றியில் அவள் வைத்திருந்த சிறிய சந்தன கீற்று, அவள் முகத்துக்கு மேலும் அழகு கூட்டியது. மேலும், தலையில் வைத்திருந்தது சிறிய துண்டு மல்லிகை என்றாலும், அதன் வாசம் மூக்கை துளைத்ததுடன், என்னன்வோ செய்தது.

‘‘என்ன கோயிலுக்கு போயிட்டு வந்தீங்களா?’’ கேட்டான் கவுசிக்.

‘‘இல்ல சார்… எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கிற பிள்ளையாரை வழியில கும்பிட்டு வந்தேன்’’ என்று மீண்டும் சின்னதாக புன்முறுவல் பூத்தாள்.

‘‘இனிமே சார் எல்லாம் வேண்டாம்… கவுசிக்கின்னே கூப்பிடுங்க…’’

‘‘சரி சார்…’’ என்று கூறிவிட்டு, அவசரமாக நுனிநாக்கை கடித்தவிதம் குழந்தைத்தனமாக இருந்தாலும் ரசிக்க தோன்றியது.

‘‘அப்படியே என்னையும் கூப்பிடலாம்னு நினைச்சிடாதாம்மா… என்னை சார்னு தான் கூப்பிடனும்… ஓகே.யா?’’ நடுவில் புகுந்தான் சிவா.

கனிகா பதில் சொல்வதற்குள் முந்திய தேவி, ‘‘ஓகே அங்கிள்’’ என்றாள்.

மீண்டும் பஸ்சில் கொல்லென்று ஒரு சிரிப்பு வெடித்தது.

பஸ் அலுவலகம் வந்து, வேலை ஆரம்பித்தபோது நேரம் போனதே தெரியாமல் போனது.

லஞ்ச் டயத்தில் பாலா வந்து கூப்பிட்டபோதுதான் நேரத்தை பார்த்தான் கவுசிக். மணி ஒன்றரை ஆகியிருந்தது. அவசர, அவசரமாக எழுந்து அனைவரும் கேன்டீன் சென்றனர்.

பிளேட் எடுத்துக் கொண்டு அன்றை ஸ்பெஷல் குலாப் ஜாமூன் டிரேக்கு போனபோது அங்கு கனிகா நின்றிருந்தாள். பின்னாலேயே வரிசையில் நின்றனர் கவுசிக் அன்கோ.

ஆனால், அரைமணி நேரம் தாமதமாக வந்திருந்ததால், கனிகாவுடன் தீர்ந்து போனது குலாப் ஜாமூன்.

இனி, சொடெக்சோ காரனிடம் சொல்லி அவன் அதை எடுத்து வருவதற்குள் விடிந்துவிடும். அதனால் சாப்பாட்டை வைத்துக் கொண்டு டேபிளுக்கு திரும்பினர்.

‘‘வடை போச்சே…’’ புலம்பினான் சிவா.

அந்த நேரத்தில்தான் கையில் குலாப் ஜாமூன் கிண்ணத்துடன் வந்தாள் கனிகா.

‘‘கவுசிக் தேவி ஏற்கனவே எனக்கும் சேர்த்து எடுத்திருக்கா… அதனால இதை நீங்க சேர் பண்ணிக்கோங்க… சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிட்டா நல்லா இருக்கும்’’ என்று கூறிவிட்டு கிண்ணத்தை வைத்துவிட்டு சென்றாள்.

பாய்ந்து கை வைத்த சிவாவின் விரல்கள் மேல், ஒரு கத்தி குத்திட்டு நின்றது.

‘‘நிமிர்ந்து பார்த்தான், எடுத்தே குத்திடுவேன். மரியாதையா கைய எடு…’’ என்றான்.

எல்லோரும் கவுசிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

தொடரும் 3
--------------------
‘‘குளோப் ஜாமூன்ல கைவச்ச கை இருக்காது மவனே… அது எனக்கு குடுத்தது… அப்படி கைய எடு’’ கத்தி முனையில் மிரட்டினான் கவுசிக்.

‘‘மாப்பிள்ளை என்னடா ஒரு குளோப் ஜாமூனுக்கு இப்படி காண்டாகிறான். இவனுக்கு சிக்கன் பீஸ் குடுத்திருந்தா கடிச்சு கொதறியிருப்பான் போலயே…’’ சிவா கூறினான்.

‘‘அது என்னோட ஆளு… எனக்காக குடுத்தது. ஏன் உன்கிட்ட கொண்டு வந்து குடுத்தாளா… இல்லேல்ல… அப்புறம் என்ன மூடிட்டு, சாம்பார் சாதம் சாப்பிடு…’’ கவுசிக் கூறினான்.

‘‘டேய்… எப்போ இருந்து அவ உன்னோட ஆள் ஆனா?’’ பாலா கேட்டான்.

‘‘அது மொத தடவை பார்த்தப்போவே பார்மாயிடுச்சு’’ கவுசிக் கூறினான்.

‘‘ஐயே..யே… இது ஒன்சைட்’’ விஷ்ணு கிண்டல் செய்தான்.

‘‘டேய்… நீங்க என்னவேணா சொல்லிட்டுப் போங்க… அவ என்னோட ஆளுதான்’’ மீண்டும் கவுசிக் கூறினான்.

‘‘நல்லேவேளைடா சாமீ… என் கை தப்பிச்சு… அது உங்க ஆளு கொடுத்ததோ… உங்க மஞ்சூரியன் குடுத்ததோ… நீயே வச்சுக்கோடா என் பர்கரு… அங்க பாரு… என் செல்லம், குண்டன் மறுபடியும் குளோப்ஜாமூன் கொண்டு வந்து வச்சிட்டுக் இருக்கான். நான் போயி ரெண்டு கப் அள்ளிட்டு வர்றேன்’’ டேபிளில் இருந்து நகர்ந்தான் சிவா.

‘‘சரிடா… இப்போ குளாப்ஜாமூன் மறுபடியும் வந்துடுச்சு… நீ என்ன பண்றேன்னா... அதை எடுத்துட்டு போய் பச்சிக்கிட்ட குடுக்கிற… அவ எடுத்து யாருக்கும் குடுக்காம அவ மொத சாப்பிட்டாள்னா… அவ உன்னோட ஆள்னு நம்புறோம்… ஓகே…யா?’’ ஜான் கேட்டான்.

‘‘சரிடா… உங்களுக்கு இன்னைக்கு நிரூபிக்கிறேன்’’ கவுசிக் கூறினான்.

சரியாக சிவா ரெண்டு கப்புகளில் தலா 3 ஜாமூன்களை கொண்டு வந்து அவனது தட்டுக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு உட்காரப்போனான்.

அதில் இருந்து ஒரு கப்பை எடுத்துக் கொண்டு எழுந்தான் கவுசிக்.

‘‘டேய்… டேய்… அது என்னோடதுடா… ’’கத்தினான் சிவா.

எதையும் கண்டுக் கொள்ளாமல், குளோப்ஜாமூன் கப்புடன், கனிகா டேபிளுக்கு சென்றான் கவுசிக்.

‘‘கனிகா… குளோப்ஜாமூன் வந்திடுச்சு. இந்தாங்க… உங்களுக்காக நானே எடுத்துட்டு வந்தேன்’’ என்று அவளது தட்டுக்கு பக்கத்தில் வைத்தான்.

‘‘ஏன்… சார் எங்களுக்கு எல்லாம் எடுத்திட்டு வந்து தரமாட்டீங்களா?’’ தேவிதான் கேட்டாள்.

‘‘என்னோட வாங்களேன்… எடுத்து தர்றேன்’’

‘‘அக்காங்ங்ங்ங்… அது எங்களுக்கு தெரியாதாக்கும். இங்க டேபிளுக்கு எடுத்திட்டு வந்து தரமாட்டீங்களா?’’

‘‘அவங்கதான் எனக்காக தன்னோட குளோப்ஜாமூனை எனக்கு குடுத்தாங்க… அதனால கனிகாவுக்கு கொண்டு வந்து குடுத்தேன்’’

‘‘அப்போ கணக்கு சரியா போயிடுச்சா?’’

‘‘இல்ல இனிமேதான் ஆரம்பிக்கப் போகிறேன்’’ என்று கூறியபடி கனிகாவை பார்த்தான் கவுசிக்.

அவள் தோழிகளுடன் சேர்ந்து பொத்தாம் பொதுவாக சிரித்தாள்.

அப்படியே டேபிளுக்கு திரும்பினான் கவுசிக்.

அங்கு டேபிளில் இருந்த சிவா, பாலா, விஷ்ணு, ஜான் நால்வருமே நடந்து வந்து கொண்டிருந்த இவனையும், டேபிளில் அமர்ந்திருந்த கனிகாவையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நடந்து வந்து கொண்டிருந்த கவுசிக், பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாத வகையில், தம்ப்ஸப் காட்டினான்.

கவுசிக் டேபிளில் வந்து அமர்ந்த பின்னரும், நால்வரும் கனிகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கவுசிக் தன் தட்டில் இருந்த மக்ரோனி பேலையும், சாஸ்சையும் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அருகில் இருந்த பைனாப்பிள் ஜூசையும் இடையிடையே உள்ளே தள்ளினான்.

ஆனால், மற்றவர்கள் இன்னும் தட்டில் வைத்திருந்த கை நகலாமல், பார்வை கனிகா டேபிள் குளோப்ஜாமூன் கப் மீதும் வைத்திருந்தனர்.

கனிகா டேபிளை பார்த்தபடியே, சிவாவின் கை மட்டும் குளோப்ஜாமூன்களை சத்தமில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.

கனிகா டேபிளில் உணவு முடிந்து, சுவீட்டுக்கு வந்திருந்தார்கள்.

சுவீட்டை தொட்ட நேரத்தில் ரோசி அங்கு வந்தாள்.

‘‘ஹாய் கேர்ள்ஸ்… என்ன இன்னைக்கு டேபிள் கச்சேரி தூள் பறக்குதுபோல… புதுப்புது அயிட்டமா இருக்கு’’ என்று டேபிளில் இருந்த உணவுகளை வகைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘‘இவ… வேறா… இப்ப யாரு இவளை இங்கே கூப்பிட்டா’’ விஷ்ணுதான் ரொம்பவும் சலித்துக் கொண்டான்.

பேசிக் கொண்டே இருந்த ரோசி, ‘‘இன்னைக்கு என்னன்னு தெரியலை, எனக்கு பசிக்கவே இல்லே…’’ என்று கூறியபடி தேவி கொண்டு வந்து வைத்திருந்த ஐஸ்கிரீம் கப்பை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

செக்‌ஷன் ஹெட்டாச்சே… யாரும் எதுவும் சொல்லவில்லை.

ஐஸ்கிரீம் சாப்பிட்ட கையோடு, கனிகா தட்டுக்கு அருகில் இருந்த குளோப்ஜாமூனை எடுக்க முயன்றாள் ரோசி.

இதை எதிர் பார்த்திருந்தாலோ என்னவோ, கனிகா உடனடியாக அந்த கப்பை எடுத்து அதில் இருந்த ஒரு உருண்டையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

பின்பு எதுவும் தெரியாததுபோல், ‘‘ஓ… உங்களுக்கும் வேணுமா மேடம்…?’’ என்று கேட்டபடி, பாதுரி தட்டுக்கு அருகில் இருந்த குளோப்ஜாமூன் கப்பை எடுத்து ரோசியிடம் நீட்டினாள் கனிகா.

அதை எடுத்து ரோசி சாப்பிட ஆரம்பித்தாள்.

இங்கு காட்சிகளை பார்த்த நால்வரும் வாயடைத்து போனார்கள்.

‘‘மாப்பிள உண்மையில ஒர்க்கவுட் ஆயிடிச்சுடா… நைசா நீ குடுத்த குளோப்ஜாமூனை ரோசி எடுத்து சாப்பிடப்போறான்னு, தானே நைசா எடுத்து சாப்பிட்டுட்டடா…’’ நால்வரும் ஒன்றாக சொன்னார்கள்.

கவுசிக் புன்முறுவல் பூத்தான்.

மீ்ண்டும் நால்வரும், ‘‘மாப்பிள அப்ப இன்னைக்கு நைட் உங்க வீட்டு பார்ட்டிடா’’ என்றனர்.

‘‘ஓ.கே. டன். பிக்னிக் பிளாசா போறோம். பில் என்னோடது’’ என்றான் கவுசிக்.

அங்கே ரோசி குளோப்ஜாமூன் சாப்பிட்டுவிட்டு நகல, ‘‘என்னடி நடக்குது இங்க… ஏன் உன்னோட குளோப்ஜாமூனை தரமாட்டியோ? அது என்ன பாதுரியோடது எடுத்து தர்ற?’’ தேவி கேட்டாள்.

‘‘அது அப்படித்தான்…’’ என்று மெதுவாக கவுசிக்கை திரும்பி பார்த்தாள் கனிகா.

அவனும் இவளையே பார்த்துக் கொண்டிருக்க, சின்ன புன்முருவலுடன் டக்கென்று திரும்பிக் கொண்டாள்.
தொடரும் 4
-----------------------
கேன்டீனில் கனிகா பார்த்த பார்வையிலேயே அவளுக்கு தன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது தெரியவந்ததால் கவுசிக் மிக உற்சாகமாகி இருந்தான்.

அன்றைய அலுவலக பணிகள், குலாப் ஜாமூனைப் போலவே அழகாக சென்றது.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது மணி 7 ஆகிவிட்டது. முகம் கழுவி, அம்மா கொடுத்த பில்டர் காபியை சுடச்சுட குடித்துவிட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், போன் ஒலித்தது.

போனை எடுத்து பார்த்தான் அன்நோன் நம்பர் என்று வந்திருந்தது. பாரின் காலாக இருக்குமோ… என்று நினைத்துக் கொண்டு, ஆன் செய்தான்.

‘‘ஹலோ…’’

எதிர்முனையில் எந்த சப்தமும் கேட்கவில்லை. அமைதியாக இருந்தது.

‘‘ஹலோ...’’ மீண்டும் கூறினான்.

மறுமுனையில் அதே அமைதி.

‘‘ஹலோ… யாருங்க… ஏன் பேசாம இருக்கீங்க…’’ கேட்டான்.

அப்போது அந்தப்பக்கம் பதில் ஏதும் இல்லாததால், சிக்னல் பிராப்ளமாக இருக்கலாம் என்று நினைத்து, போன் இணைப்பை துண்டித்தான்.

ஆபிஸ் முடிஞ்சு வந்தாக்கூட இவங்க தொல்லை தாங்க முடியமாட்டேங்குது. கிளையண்ட்டுங்களுக்கு மொதல்ல டூயூட்டி டையத்த போட்டு அனுப்பனும். வீட்டுக்கு வந்தப்புறம் டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு சொல்லணும்.

நினைத்துக் கொண்டிருந்தபோதே மீண்டும், ‘ஜூன் போனால் ஜூலைக் காற்றே…’’ பாட்டு செல்போனில் இருந்து அழைத்தது.

அதே அன்நோன் நம்பர்.

‘‘ஹலோ…’’

அதே அமைதி.

‘‘டேய் வெள்ளைக்கார கம்னாட்டிகளா… போன் எடுத்தா பேசுங்கடா… சும்மா சீரியல் பார்க்க நேரத்தில கூப்பிட்டு, விளம்பரத்தை போட்டு கொல்லாதீங்கடா’’ எரிச்சலாய் எதிர்முனையில் இருப்பவர்களுக்கு புரியுமா, புரியாதா என்றுக்கூட தெரியாமல் புலம்பினான்.

வெறுப்பாக போனை கட் பண்ணிவிட்டு, மீண்டும் சீரியல் பார்க்க ஆரம்பித்தான்.

அந்த நேரத்தில்தான் மீண்டும் போன் வந்தது. காண்டாகி இந்த முறை அசிங்க, அசிங்கமாக திட்டிவிடும் நோக்கத்துடன் பாய்ந்து போனை எடுத்தான்.

‘‘ஆர்… யூ மேட்… பிளடி… இடியட்’’ என்று ஆரம்பித்தான்.

‘‘டேய்… டேய்… மாப்பிள்ளை… ஏண்டா… ஏண்டா ஏன்?’’ எதிர்முனையில் சிவா பேசினான்.

‘‘டேய்… சிவா…’’ இழுத்தான் கவுசிக்.

‘‘ஆமாம்டா… ஏன் இப்படி திட்டுற?’’

நடந்ததை கூறினான் கவுசிக்.

‘‘டேய்… வெள்ளைக்காரனுங்க ரொம்ப நல்லவனுங்கடா… அவனுங்க எல்லாம் இப்படி பேச மாட்டாட்டானுங்க. வேற எவனாச்சும் பேசியிருப்பான் விடு’’ சிவா கூறினான்.

டென்ஷன் குறைந்து இயல்புநிலைக்கு வந்தான் கவுசிக்.

‘‘மாப்பிள்ளை மத்தியானம் லஞ்சில, நீ சொன்ன மாதிரியே கனிகா நீ குடுத்த குலோப்ஜாமூனை சாப்பிட்டாளேடா… எப்படிடா இதெல்லாம்… எப்படிடா வளைக்கிறீங்க. எனக்கு அந்த ரகசியத்தை சொல்லிக்குடேன். நானும் தேவியை கரெக்ட் பண்ணுவேன்ல’’

‘‘டேய்… இதெல்லாம் திட்டம் போட்டு செய்றதுதில்ல… அதுவா தானா நடக்கிறது’’

‘‘அந்த அதுவா நடக்கிறதை, மெதுவா என்கிட்டேயும் சொல்லுன்னுதான் சொல்றேன்’’

‘‘டேய்… ராஸ்கல்… உன் மேல லவ் இருந்தா… அவளோட நடவடிக்கையில இருந்தே தானா தெரிய வரும்… வெயிட் பண்ணிப்பாரு’’

‘‘மாப்பிள்ளை நாளைக்கு ஆபிஸூக்கு வர்றப்போ, அவளை லவ்வா ஒரு பார்வை பார்க்கப்போறேன்… அவளுக்கு என் மேல காதல் இருக்கா, இல்லையான்னு நீ தான் சொல்லணும் சரியா…’’

‘‘சரிடா… நாளைக்கு பார்ப்போம்’’

………..
மறுநாள் கம்பெனி பஸ் 10 நிமிடம் தாமதமாகத்தான் வந்தது.

கவுசிக்கும், சிவாவும் ஏறி அடுத்த ஸ்டாப்புக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்,

அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும், ஒரு யுகமாக கடந்தது.

ஒரு வழியாக டிவிஎஸ் பஸ் ஸ்டாப் வந்தபோது, ஆட்டோமேடிக்காக இருவருமே வெளியே எட்டிப்பார்த்தனர்.

அதே வயலட் நிறத்தில் வெளிர் நீல நிறத்தில் பெரிய பூப்போட்ட சேலையில் தேவதையாக நின்றாள் கனிகா. அவள் கண்ணிலும் தன்னை கவுசிக் பார்க்கிறனா என்று ஒரு குறுகுறு பார்வை தெரிந்தது. பக்கத்திலேயே தேவி, ஆரஞ்சு நிற சேலையில் நின்றிருந்தாள்.

இருவரும் பஸ்சில் ஏறி உள்ளே வந்தபோது, ‘‘குட்மார்னிங் பிரதர்’’ என்றாள் சிவாவைப் பார்த்து தேவி.

பஸ்சில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

‘‘போச்சுடா… எல்லாம் போச்சு…’’ மெதுவாக கவுசிக் காதில் புலம்பினான் சிவா.

‘‘டேய்… இது நிஜமான புரோ இல்லே… இது ‘ராஜா ராணி’ பட புரோ’’ என்றான் கவுசிக்.

‘‘அப்படியா சொல்லுறே மாப்பிள்ளை…?’’

‘‘ஆமாம்டா… நான் பார்த்தேன். பஸ் ஸ்டாண்டில நான் என் ஆளை பார்த்துட்டு இருக்கறப்போ, அப்படியே தேவியையும் பார்த்தேன். அவ உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தா… அதனால தைரியமா நீ அவகிட்ட மூவ் பண்ணலாம்’’

‘‘அப்படி சொல்லு என் செல்லம்… இனி நான் பார்த்துக்கிறேன்’’ கூறிய சிவா, முன்புறம் உட்கார்ந்திருந்த தேவியை பார்க்க ஆரம்பித்தான்.

பஸ் அடையாறு பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, ஏதேச்சையாக தேவி பின்னால் திரும்பி சிவாவைப் பார்த்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த சிவா, கூச்சத்தில் சினிமா புதுப்பெண்ணைப் போல் கோணி குறுகி, காலால் கோலம் போட்டான்.

அவனையும் காலையும் பார்த்த தேவி சட்டென்று எழுந்திருந்து அவனை நோக்கி வந்தாள்.

அவள் வருவதைப் பார்த்து வெலவெலத்து போனான் சிவா.

தொடரும் 5
-----------------------
சிவாவை நோக்கி வந்த தேவி, ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘‘இனிமே இந்த மாதிரி எல்லாம் முறைக்காதீங்க அங்கிள். காசு வேணும்னா கேளுங்க…’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து விக்கித்து நின்ற சிவா, ஒரு நல்ல சீரியஸ் காட்சியை இப்படி காமெடி ஆக்கிவிட்டு போய்விட்டாளே என்று வாயடைத்து நின்ற நிலையில், கவுசிக் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

சிரிப்பதா, சீரியசாக முகத்தை வைத்துக் கொள்வதா என்று தெரியாமல், சிரித்துக் கொண்டிருந்த கவுசிக்கை பார்த்து முறைத்தான் சிவா.

இவனை பார்த்துவிட்டு, மீண்டும் தேவியை பார்த்தான் சிவா. அவள் இவனைப்பார்த்து சிரித்துவிட்டு, கைவிரலால் அப்படி பார்க்கக்கூடாது என்பதுபோல், ஆட்காட்டி விரலால் கண்ணை தொட்டு, ஆட்டி காண்பித்தாள். சடாரென திரும்பி சிவாவைப் பார்த்தான்.

‘‘இன்னைக்கு என்னை வச்சு காமெடி பண்ணிட்டேல்ல… என்னடா விடிஞ்சிருச்சே… இன்னும் சம்பவம் எதுவும் நடக்கலையேன்னு பார்த்தேன்… இந்தா… நடந்திருச்சுல்ல… நடத்துங்கடா… நடத்துங்க’’ என்றான் சிவா.

‘‘டேய் மாப்பிள்ள சும்மா உன்னை கலாய்க்கிறா… ஆனா, உன்கிட்ட பேசணும்கிறதுக்காக தேவி வந்துட்டு போனா… நீ பதிலுக்கு அவளை கலாய்க்கிற மாதிரி கால்ல விழுந்து ரொம்ப நன்றிம்மான்னு சொல்லியிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் கடலை போட்டிருக்கலாம்… விட்டுட்டியே மாமூ…’’ என்றான் கவுசிக்.

‘‘அட இப்படி ஒரு ரூட் இருக்கா… இதெல்லாம் எங்கேடா கத்துக்கிட்ட… நானும் உன்னோட தானே ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் படிச்சேன்… நீ மட்டும் எப்படிடா?... என்னம்மோ போடா மாதவா… உன் அளவுக்கு என்னால வர முடியாது… சரி போனது போயாச்சு… இப்ப ஒரு ஐடியா குடு… நான் போய் கடலை போட்டு வர்றேன்’’ என்றான் சிவா.

‘‘உன்கிட்ட குடுத்த அஞ்சு ரூபாவ அவக்கிட்டேயே திருப்பி குடுத்துட்டு, செல்லாத காசு எல்லாம் வாங்குறதில்லம்மா… வேணும்மா… உன் டிபன குடும்மான்னு கேளு… இன்னைக்கு அவ சாப்பிடலன்னு நினைக்கிறேன். காலை டிபனை கட்டிக்கிட்டு வந்திருக்கா பாரு’’

‘‘சரி கேட்டா குடுப்பாளா… திட்டிட்டா?’’

‘‘டேய் சொன்னத மொத செய்… உனக்கு டிபன் உறுதி’’

‘‘அப்படியா சொல்ற மாப்பிள்ள… இப்பவே களத்தில இறங்குகிறேன்’’ என்று சிப்பாய் போல் ஒரு கையை மார்பில் வைத்துக் கொண்டு வணங்கினான்.

‘‘வெற்றி உனதே போய் வா… மகனே’’ என்றான் கவுசிக்.

நேராக தேவியிடம் சென்ற சிவா, ‘‘ஏங்க… 10 ரூபாய்க்கு கம்மியா நான் வாங்கிறது கிடையாது… இந்தாங்க உங்க அஞ்சு ரூவாாாா… பிச்சை போடம்னு நினைச்சா உங்க டிபன் பாக்ஸ் குடுங்க, வாங்கிக்கிறேன்’’ என்றான்.

‘‘அப்படியா… இந்தாங்க டிபன் பாக்ஸ். சாப்பிட்டு தண்ணீ குடிங்க… விக்கல் வரப்போகுது’’ என்று தண்ணீர் பாட்டிலையும் சேர்த்து சிவாவிடம் கொடுத்தாள் தேவி.

இரண்டையும் வாங்கிக் கொண்டு வந்து, மீண்டும் கவுசிக் அருகே உட்கார்ந்தான் சிவா.

‘‘டேய்… நீ டிபன் பாக்ஸ் கேட்கச் சொன்னே… அவ தண்ணீயையும் கொடுத்து அசிங்கப்படுத்துறாடா மாப்பிள்ளை…’’ என்றான் சிவா.

‘‘எல்லாத்திலேயும் குறைய பார்க்காதே… அவ உன் நல்லதுக்கு சொல்லியிருக்கா… அநேகமாக டிபன் பாக்ஸ்ல சப்பாத்தி இருக்கும்னு நினைக்கிறேன். அதனாலத்தான் தண்ணீயையும் சேர்த்துக் குடுத்திருக்கா’’ என்றான் கவுசிக்.

‘‘டேய் எப்படிடா… இப்படியெல்லாம்… முடியலடா சாமீ…’’ என்றவாறு டிபன் பாக்சை திறந்தான் சிவா. உள்ளே கவுசிக் சொன்னது போலவே சப்பாத்தி இருந்தது.

மீண்டும் கவுசிக்கை பார்த்தான் சிவா. அப்படி அவன் காலை தொட்டு கும்பிடுவது போன்று சைகையில் செய்தான் சிவா.

‘‘மனமுவர்ந்த ஆசிகள் மவனே… சாப்பிட்டுவிட்டு தெம்பா இரு…’’ என்றான் கவுசிக்.

அவசர, அவசரமாக சப்பாத்தியை சாப்பிட ஆரம்பித்தான் சிவா.

அவன் சாப்பிட்டு முடிக்கும்போது, பஸ் அடையாறை தாண்டியிருந்தது. அவசர, அவசரமாக சாப்பிட்டதில் தேவி சொன்னதுபோல் விக்கியது. உடனடியாக தண்ணீரை எடுத்துக் கொடுத்தான். இவன் விக்கல் சத்தத்தை கேட்டு தூரத்தில் இருந்து பார்த்தாள் தேவி.

‘‘அண்ணலும் நோக்கினான். அவளும் லுக்கினாள்’’ என்றான் சிரித்துக் கொண்டே கவுசிக்.

‘‘அடுத்து என்னடா பண்றது மாப்பிள்ளை…’’ என்றான் சிவா.

‘‘பஸ் ஆபிஸ் கேம்பஸ்குள்ள நுழையறதுக்கு முன்னாடி, வாசல்ல ஒரு வயசான அம்மா பூ வித்திட்டு இருப்பாங்க பாரு… அவங்கக்கிட்ட ஒரு ரெண்டு முழும் பூவ பிளாஸ்டிக் கவர்ல வாங்கி டிபன் பாக்ஸ்ல வச்சு குடுத்திடு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்’’ என்றான் கவுசிக்.

‘‘சரி மாப்பிள்ளை… பஸ் ஆபிஸ் வாசல்ல நுழையறப்போ நான் பின்வாசல் வழியா கீழே இறங்கி பூவ வாங்கிட்டு வந்துடுறேன்’’ என்றான் சிவா.

பஸ் ஆபிஸ் கேம்பசில் நுழையும்போது மெதுவாக திரும்பியது. அந்த சமயத்தில் துள்ளிக்குதித்து ஓடினான் சிவா. சரியாக பஸ் உள்ளே வந்து நிற்கும்போது, முன்கூட்டியே இறங்கி நின்றதுபோல் நின்றான் சிவா.

முதலில் கனிகாவும், தேவியும் இறங்கினர். பின்னாலேயே கவுசிக் இறங்கி வந்தான்.

‘‘அம்மணி இந்தாங்க உங்க டிபன் பாக்ஸ்… அம்மா நல்லா சப்பாத்திய சாப்ட்டா சுட்டிருக்காங்க… நீங்களும் இதே மாதிரி சுட கத்துக்கிட்டீங்கன்னா… போற இடத்தில ரொம்ப யூசாகும்’’ என்றான் சிவா.

‘‘அதெல்லாம் வர்றவங்க பொறுப்பு… நாங்க ஏன் கத்துக்கிடணும். வேணும்னா கத்துக்கிட்டு வரட்டும்’’ என்று கூறியபடி டிபன் பாக்சை அவனிடம் இருந்து வாங்கினாள் தேவி.

கனிகாவும், தேவியும் முன்னே நடக்க, கவுசிக்கும், சிவாவும் பின்னால் நடந்தனர்.

‘பி’ பிளாக் வரும்போது தேவி முன்னே நடக்க சற்று பின் தங்கிய கனிகா, தன் பேக்கில் இருந்து ஏதோ எடுத்தாள். பின்னர் திடீரென்று பின்னால் திரும்பி, கவுசிக்கிடம், ‘‘நேத்து ஷாப்பிங் போனப்போ வாங்கினோம்… சாப்பிடுங்க’’ என்று சொல்லி குடுத்துவிட்டு, மீண்டும் வேகமாக முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

கையில் குடுத்ததை எடுத்து பார்த்தான். அது மும்பை சோன் பிளேட் ஸ்வீட்.

சிவா முறைக்க, ‘‘இதுதான் லவ்’’ என்றான் கவுசிக்.

தொடரும் 6
----------------------
அன்றைய நாளும் வழக்கம்போல்தான் சென்றுக் கொண்டிருந்தது.

அமெரிக்க பாங்க் ஒன்றுக்கான சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது.

என்ன செய்தாலும், மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டிருந்த பக்கை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், புதுப்புது இன்புட்களை கொடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் கவுசிக்.

அப்போதுதான் அந்த போன் அழைப்பு வந்தது.

வழக்கம்போல், ‘அன்நோன் நம்பர்’.

பக்கத்து சீட்டில் இருந்த சிவாவின் சேரை பின்னால் இருந்து இழுத்து போனை காட்டினான்.

‘‘இங்க குடு மாப்பிள நான் பேசுறேன்’’ என்றான்.

அவனிடம் போனை கொடுத்தான். போனின் கால் ரீசிவரை தூக்கிவிட்டு, ‘‘ஹலோ’’ என்றான் சிவா.

அந்த பக்கம் ஏதோ மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. அதுவும் மிக மெலிதாக. மீண்டும் ஒரு முறை, ‘‘ஹலோ’’ என்றான்.

ஆனால், இப்போது எதிர்தரப்பில் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

‘‘மாப்பிள பேச மாட்டேங்கிறாங்க… நம்ம ஆபிஸ்லதான் மாப்பிள யாரோ விளையாடுறாங்க… இந்தா போனை பிடி. இன்னொருதரம் போன் வந்தா, ஆன் பண்றதுக்கு முன்னாடி, என்கிட்ட சொல்லு… நான் ஒரு ரவுண்டு பார்த்து வர்றேன். யார் விளையாடுறாங்கன்னு பார்த்துடலாம்’’ என்றான் சிவா.

‘‘சரி’’ என்று கூறிவிட்டு, மீண்டும் பக்கை கட்டுப்படுத்தும் செயலில் இறங்கினான்.

பத்து நிமிடம் கழித்து மீண்டும் போன் வந்தது. அதே அ.நோ.தான். போன் பெல் அடிப்பதை பார்த்தே, திரும்பி பாரத்தான் சிவா. அவனிடம் சைகையில் ஆன் செய்யச் சொல்லிவிட்டு, சிவா யாராவது போனில் பேசுகிறார்களா என்று பார்க்க எழுந்து சென்றான்.

ஆனால், அலுவலகத்தில் யாரும் பேசியதாக தெரியவில்லை. பிரஷ்ஸர் சைடில் யாராவது பேசுகிறார்களா என்று பார்த்தான். அப்போதுதான் கனிகா போனை, தேவியிடம் கொடுப்பது தெரிந்தது.

ஒருவேளை இவர்கள் விளையாடுகிறார்களோ என்று நினைத்த சிவா… அவர்கள் பேசுவதை கவனிக்காததுபோல் மெதுவாக அருகே சென்றான்.

‘‘இல்லடி கனிகாவுக்கும், எனக்கும் ஆபிஸ்ல வேலை இருக்கு… நாங்க வர முடியாது. சண்டே வேணும்னா வர்றோம்…’’ என்று போனில் பேசிய தேவி, பக்கத்தில் நின்று பேனாவின் பார்த்தபடி ஓரக்கண்ணால் தன்னை பார்த்துக் கொண்டிருந்த சிவாவை பார்த்து, ‘‘என்ன அங்கிள் லிப்ஸ்டிக் வேணுமா?’’ என்று கேட்டாள்.

அவளை முறைத்தபடி அங்கிருந்து சீட்டுக்கு திரும்பினான் சிவா.

‘‘மாப்பிள… ஆபிசுல யாரும் உன்கிட்ட பேசுன மாதிரி தெரியல… ஆம்பிளைங்களா இருந்தாலும், பொம்பளைங்களா இருந்தாலும் வழிக்கு கொண்டு வர ஒரு டெக்னிக் இருக்கு… இன்னொரு தடவை போன் வந்தா… ஹஸ்கி வாய்ஸ்ல ‘ஐ லவ் யூ’ன்னு சொல்லிடு… அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்’’ என்றான் சிவா.

‘‘டேய்… ஏடாகூடாமா ஏதாவது சொல்லி வம்புல மாட்டிட போறேன்’’ என்றான் கவுசிக்.

‘‘அதெல்லாம் எதுவும் நடக்காது. எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்’’

‘‘எப்படி…. எங்கெங்கே வீங்கிருக்குன்னா?’’

‘‘டேய்… பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும். இல்லாட்டி நஷ்டம் உனக்குத்தான்’’

‘‘சரி… ஏதோ சொல்லுற… செய்றேன்’’

‘‘சரி நீ உன் வேலைய பாரு… இங்க ஒரு ஆன்ட்டிக்கு சின்னதா ஒரு ஷாக் டிரீட்மென்ட் குடுக்கணும். அதை பார்த்து வர்றேன்’’ என்றான் சிவா.

சீட்டில் சென்று அமர்ந்த சிவா, இன்டர்காமில் தேவியை கூப்பிட்டான்.

‘‘மிஸ் டி…இ…வி…ஐ…. உங்களோட புரோகிராம் பைல்ஸ் பார்த்தேன். ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்கே… இவ்வளவு மோசமாவா உங்களுக்கு கத்துக்குடுத்தாங்க… இதுல சீனியர்கள பார்த்தா கிண்டல் வேற… உடனடியா உங்க பைல்ஸ்களை ரோசிக்கு அனுப்பப் போறேன்… அப்போ தெரியும், உங்க நிலைமை’’ என்றான் சிவா.

எதிர்முனையில் பேசிய தேவி, ‘‘சார்… என் பைல்ஸ் இன்னும் டிரைனிங் லெவல்லதான் இருக்கு. கம்ப்ளீட் பைல் இன்னும் ரெடி பண்ணல… அப்புறம், எனக்கு சீனியர்னு பரத் சாரை தானா சொன்னாங்க… அவர்கிட்ட தான் நான் ரிப்போர்ட் பண்ணணும்னு சொன்னாங்க… இனிமே நான் உங்கக்கிட்ட ரிப்போர்ட் பண்ணணுமா? சார்… இருங்க பரத்கிட்டேயே நான் கேட்டுறேன்’’ என்றாள்.

‘‘ஏய்ய்ய்…. இரும்மா…இரும்மா… நான் பைல்ஸ பார்த்தேன்னுதான சொன்னேன். என்கிட்ட ரிப்போர்ட் பண்ணணும்னு சொல்லவே இல்லையே… அப்புறம் சீனியர்களை மதிக்க கத்துக்கோ… அது என்ன ஆ..ஊன்னா… உடனே வத்தி வைக்கிறது… பரத் என் செட்டுதான்… நீ வத்தி வச்சாலும் ஒண்ணும் பண்ண முடியாது’’

‘‘சரி சார்… நீங்க சொன்னீங்கன்னு… பரத் சார்கிட்ட சொல்லிடுறேன்’’

‘‘ஹலோ… ஒரு தடவை சொன்னா உங்களுக்கு புரியாது. போய் வேலைய பாருங்க…’’

‘‘அதுதான் சார்… நான் வேலையத்தான் பார்த்துட்டு இருந்தேன். நீங்கதான் வேலை இல்லாம அங்க, இங்கண்ணு சுத்திட்டு, வம்பிழுத்திட்டு இருக்கீங்க…’’

‘‘வேண்டாம் அழுதுருவேன்… இத்தோட இந்த பிரச்னைய விட்டுடுவோம். என் சீட்ட தாண்டி நானும் வரமாட்டேன். நீங்களும் உங்க சீட்டை தாண்டி பரத்கிட்ட போகக்கூடாது’’

‘‘அது… கண்ண துடைச்சுக்கோங்க… நல்ல பிள்ளையா உக்கார்ந்து வேலய மட்டும் பார்க்கணும்... இந்த மிரட்டுறது, உருட்டுறத எல்லாம் இன்னொரு தடவை பார்த்தேன்…. அம்புட்டுதான்’’ என்றாள் தேவி.

‘‘ம்….’’ என்று கூறிவிட்டு போனை டொக்கென்று வைத்தான் சிவா.

‘‘ராட்சசி… ராட்சசி… எப்படித்தான் கண்டுபிடிக்கிறான்னு தெரியல… இல்லே… நாமளா மாட்டிகிடுறோமான்னு தெரியல…’’ மனதுக்குள் புலம்பியபடி அடுத்த வேலை பார்க்க ஆரம்பித்தான்.

வேலையில் மூழ்கியிருந்த கவுசிக் கைக்கடிகாரத்தை பார்த்தான். மணி 1.15 காட்டியது. எல்லோரும் கேன்டீனுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்து சீட்டில் மும்முரமாக கம்ப்யூட்டரில் நோண்டிக் கொண்டிருந்த சிவா கூப்பிட்டு, ‘‘சாப்பிட போலாமா’’ என்றான்.

‘‘அதவிட வேற என்ன வேலை இருக்கு? வா….’’ என்றபடியே கிளம்பினான் சிவா.

ஜானும், விஷ்ணுவும் வந்து சேர எல்லோரும் கேன்டீனுக்கு கிளம்பினார்கள்.

தட்டில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு முதலில் டேபிளில் வந்து அமர்ந்துவிட்டான் கவுசிக். அப்போதுதான் மீண்டுமு் அந்த அ.நோ கால் வந்தது.

போனை பார்த்தான். ஆன் செய்தான்… மறுமுனையில் வழக்கம்போல் அமைதி.

‘‘ஐ லவ் யூ’’ என்றான் கவுசிக்.

மறுமுனையில் ஒரு மெல்லிய சிரிப்பொலி.

‘‘இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கோமே…’’ என்று யோசிக்க ஆரம்பித்தான் கவுசிக்.

தொடரும் 7
---------------------
# ஒன்4 த்ரீ – பாகம் 8

‘ஐ லவ் யூ’ என்ற குரலை கேட்டவுடன் மறுமுனையில் எழுந்த மெல்லிய சிரிப்பை கேட்டதும், மூளையில் எங்கோ மணி அடித்தது கவுசிக்குக்கு.

‘‘இந்த குரலை நல்லா கேட்டிருக்கேன். ஆனா… எங்கேன்னுதான் ஞாபகம் வரல… அதே மாதிரி ஒரு கோஷ்டியே இருக்கும்போல இருக்கே… அந்தப்பக்கம் பல குரல் கேட்டதே’’ மனதில் அசைப்போட்டுக் கொண்டே சாப்பிட்டான் கவுசிக்.

அதற்குள் சிவா, விஷ்ணு, ஜான் வந்து சேர்ந்தார்கள்.

‘‘என்னப்பா… கவுசிக் ரொம்ப ரோசனையா இருக்கே போல’’ என்றான் விஷ்ணு.

‘‘மாப்பிள ஏன் யோசனையில இருக்கான்னு, எனக்கு தெரியும்’’ என்று கூறிவிட்டு, நடந்தவற்றை கூறினான் சிவா.

‘‘யாரோ, கால் நம்பர் ஹைடிங் ஆப் மூலமா நம்பர் தெரியாம விளையாட்டு காட்டுறாங்க’’ என்றான் ஜான்.

‘‘ஆமாடா… ஆனா, அந்தப்பக்கம் பேசுறது லேடீஸ்தான். நான் குரலை கேட்டேன். அதேசமயம், ரெண்டு மூணு பேறா இருப்பாங்காளோன்னு ஒரு சந்தேகமா இருக்கு’’ என்றான் கவுசிக்.

‘‘அப்போ உன்னை வச்சு காமெடி பண்றாங்கன்னு சொல்லு…’’ என்றான் விஷ்ணு.

‘‘அதேதான்’’ என்றான் சிவா.

‘‘சரி விடுங்கடா… அத நான் பார்த்துக்கிறேன்’’ என்று கூறியவாறு சாப்பிடத் தொடங்கினான் கவுசிக்.

சாப்பிட்டு முடித்து பிளேட்டை கழுவும் இடத்தில் வைக்க செல்லும்போது பார்த்தான், ஏற்கனவே அங்கு கனிகா நின்றிருந்தாள். அதுவும் தனியாக.

மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன. பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களே, யாரும் இந்தப்பக்கம் வருவதாக தெரியவில்லை.

கிடைத்தது அதிர்ஷ்ட வாய்ப்பு என்ற சந்தோஷத்தில் மெல்ல நெருங்கி, ‘‘இன்னைக்கு கூட்டு நல்லா இருந்ததில்ல…’’ என்றான் கவுசிக்.

முதலில் திடுக்கிட்டு திரும்பி பார்த்த கனிகா, இவனைப் பார்த்ததும் மெல்லிய புன்முறுவல் பூத்தாள். பின்பு, ‘‘கூட்டு மட்டும்தானா… சாம்பார் கூட நல்லா இருந்ததே…’’ என்றாள்.

தொடர்ந்து, ‘‘கூட்டு, சாம்பார் தவிர வேறு எதுவும் நல்லா இல்லையா?’’ என்றாள் கனிகா.

‘‘திடீரென ஞாபகம் வந்தவனாக, ஓ… உங்க லைட் பிங்க் சுடி டிரஸ் கூட நல்லா இருக்கே’’ என்றான் கவுசிக்.

‘‘அப்டியா?’’ என்று ஒரு முறை டிரஸ்சை பார்த்துக் கொண்டாள். பின்னர், ‘‘அப்புறம்?’’ என்றாள்.

‘‘அப்புறம்…’’ என்று இழுத்த கவுசிக், இவள் எதை கேட்கிறாள் என்று தெரியாமல், ‘‘உங்க குட்டி டயல் வாட்ச் ரொம்ப நல்லா இருக்கு’’ என்றாள்.

‘‘அப்போ இதையெல்லாம் நீங்க கவனிச்சுட்டு இருந்திருக்கீங்க… அப்படித்தானே?’’ என்றாள்.

‘‘அப்படியில்லேங்க… அழகா இருந்தா, உடனே மனசில ஒரு மூலையில தங்கிடுமே… அதைத்தான் பட்டுன்னு சொன்னேன்’’ என்றான்.

‘‘சரி அப்புறம்…?’’ என்றாள்.

‘‘அப்புறம் என்னங்க… போய் ஒர்க் பார்க்க வேண்டியதுதான்’’ என்று சலித்துக் கொண்டான் கவுசிக்.

கனிகாவுக்கு என்ன கோபம் வந்ததோ… திடீரென முறைத்துக் கொண்டு திரும்பிச் சென்றாள்.

‘‘ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள். இவள் எதை கேட்க நினைத்தாள்… நான் எதை மறந்தேன்’’ என்று யோசிக்க ஆரம்பித்தான் கவுசிக்.

ஆனால், எதுவும் ஞாபகத்துக்கு வராததால் மீண்டும் திரும்பி சீட்டுக்கு சென்றான்.

வேலை பரபரப்பில் நேரம் போனதே தெரியவில்லை. சிவா வந்து டீக்கு அழைத்தபோதுதான் நேரத்தை பார்த்தான். மணி 5 ஆகியிருந்தது.

‘‘என்ன மாப்பிள இன்னும் யோசனையிலேயே இருக்கே… இன்னும் அந்த போன் பத்தின யோசனைதானா என்றான்’’ சிவா.

‘‘அதில்லடா… இந்த பக் பாடாப்படுத்துது’’ என்று கூறிவிட்டு அவனுடன் டீ சாப்பிட சென்றான் கவுசிக்.

நால்வர் அணி டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஆபிசிலேயே மூத்தவரான குணசேகரன், சுவீட் பாக்சுடன் வந்தார்.

‘‘பாய்ஸ்… சுவீட் எடுத்துக்கோங்க… என் பொண்ணுக்கு வர்ற ஜூலை 28ல் மேரேஜ்… எல்லோரும் பேமிலியோட வரணும்’’ என்றார்.

‘‘பீஷ்மரே வந்துட்டா போகுது…’’ என்றபடி அனைவரும் சுவீட்டும், அவர் கொடுத்த கார்டையும் வாங்கிக் கொண்டனர்.

‘‘பீஷ்மரே… எங்கே வாங்கினீங்க சுவீட்… கலக்கலா இருக்கு’’ என்றான் சிவா.

‘‘மாமி செஞ்சதுப்பா…’’ என்றபடி நகர்ந்துக் கொண்டிருந்தார் குணசேகரன்.

ஒரு நிமிடம் சிவாவையே பார்த்துக் கொண்டிருந்த கவுசிக்குக்கு, கனிகா ஏன் கோபத்துக் கொண்டு போனாள் என்று இப்போதுதான் புரிந்தது.

நாலு பேர் நிற்கிறார்களே என்ற கவலையில்லாமல், ‘‘தேங்க்ஸ்டா மாப்பிள’’ என்று சிவாவை தூக்கினான்.

‘‘டேய்… டேய்… விடுடா… எனக்கு குடுத்ததே ஒண்ணுதான். அதையெல்லாம் குடுக்க முடியாது, கையில் வைத்திருந்த பாதி சுவீட்டை மேலே தூக்கினான்’’ சிவா.

‘‘டேய்… உன் சுவீட் எல்லாம் வேணாம். எனக்கு நீ மறைமுகமா ஒரு ஹெல்ப் பண்ணிருக்கே… அதுக்குத்தான் தூக்கினேன்’’ என்றான் கவுசிக்.

உடனடியாக தனது செல்போனை எடுத்து, ‘‘நீங்க கொடுத்த சுவீட்டை வாழ்நாள்ல மறக்க முடியாது… அவ்வளவு அருமையா இருந்தது’’ என்று கனிகாவுக்கு மெசேஜ் அனுப்பினான்.

கோபத்தில் திரும்பிச் சென்ற கனிகா, பதில் மெசேஜ் அனுப்புவாளோ இல்லையோ என்று செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மெசேஜ் அனுப்பிய அடுத்த இரண்டு செகண்டில் பதில் மெசேஜ் வந்தது.

அதில், ‘‘தேறிட்டே…’’ என்று இருந்தது.

தொடரும் 8
------------------------

#ஒன் 4 த்ரீ - பாகம் 9

கனிகா அனுப்பிய ‘தேறிட்டே’ மெசேஜை பார்த்தவுடன் துள்ளிக்குதித்தான் கவுசிக்.

திடீரென கவுசிக் துள்ளி்க்குதித்ததை பார்த்ததும், அருகில் இருந்த நண்பர்கள் அவன் ஏதோ மிகப்பெரிய சந்தோஷத்தில் இருப்பதும், அதுவும் செல்போன் மூலம் தெரிந்துள்ளதையும் ஊகித்துக் கொண்டனர்.

‘‘மாப்பிள என்ன திடீர்னு இவ்வளவு சந்தோஷம்? ஏதாவது லோட்டோ விழுந்திடிச்சா?’’ என்று கேட்டான் சிவா.

‘‘லோட்டோ என்னடா, லோட்டோ அதைவிட மிகப்பெரிய சந்தோஷம்’’ என்றான் கவுசிக்.

‘‘அப்படி என்ன புரோ சந்தோஷம்?’’ கேட்டான் விஷ்ணு.

‘‘கனிகா காலையில கொஞ்சம் கோபமா இருந்தா… அவ மறைமுகமா கேட்ட கேள்வியை என்னால சரியா ஊகிச்சு பதில் சொல்ல முடியல… இப்போ அதை சரியா சொன்னேன். அதுக்கு தேறிட்டேன்னு பதில் அனுப்பி இருக்கா’’ என்றான் கவுசிக்.

‘‘பதில்தானேடா அனுப்பி இருக்கா… என்னமோ புரபோஸ் பண்ணின மாதிரி குதிக்கிறே?’’ என்றான் ஜான்.

‘‘புரபோஸ் பண்றதுக்கு சமமா அவளுடைய மெசேஜ் இருக்குடா… அதுதான் இவ்வளவு சந்தோஷம். சாதாரணமா சார்… மோர்.., நீங்க, வாங்கன்னு எல்லாம் கூப்பிட்டுட்டு இருந்த கனிகா, தேறிட்டேன்னு ஒருமையில சொல்லியிருக்கா… அதுக்கு அர்த்தம், அதுதான்’’ என்றான் கவுசிக்.

‘‘அப்போ இன்னைக்கு நைட் பார்ட்டி, உங்க வீட்டிலேயா மாப்பிள?’’ என்றான் சிவா.

‘‘ஓகேயான நாளைனைக்கு பார்ட்டி மாப்பிள’’ என்று காதை பிடித்து திருகுவது போல் நடித்தான் கவுசிக். வலிப்பதுபோல் கதை பிடித்துக் கொண்டான் சிவா.

நண்பர்கள் மீண்டும் தங்களது இருக்கைகளுக்கு சென்றனர்.

மாலையில் மேகம் கருத்திருந்தது. ஏற்கனவே நாலு மணியில் இருந்து வெளியே குளிர்ந்த காற்று வீசியது. இப்போது மேகம் திரண்டு மழை வருவதுப்போல் இருந்தது.

இதனால் பெண்கள் அவசர, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

சரியாக ஆறு மணிக்கு கிளம்பினார்கள் சிவாவும், கவுசிக்கும்.

வெளியே காலை எடுத்து வைக்கும்போது, மழை திடீரென கொட்ட ஆரம்பித்தது. அந்த நேரத்தில் கனிகாவும், தேவியும் தனித்தனி குடையுடன் வந்தார்கள்.

இருவரும் தங்களிடம் ஒரு குடையை கொடுத்துவிட்டு, அவர்களும் ஒரு குடையில் நடப்பார்கள் என்று கவுசிக் எதிர்பார்த்தான்.

ஆனால் எதிர்பாராதவிதமாக தேவி திடீரென, ‘‘அங்கிள் வாங்க உங்கள பஸ்ல டிராப் பண்றேன்’’ என்று சிவாவை கூப்பிட்டாள்.

இவன் முறைப்பதை பார்த்த கவுசிக், ‘‘டேய் இன்னைக்கு உனக்கு அதிர்ஷ்டக்காற்று வீசுது… சும்மா ஓட்டுறா… கப்புன்னு பிடிச்சுட்டு போயிடு’’ என்றான்.

‘‘போடா… அவ என்னை கிண்டல் பண்றா… அவ கூட போகச் சொல்லுற’ என்று முனங்கினான் சிவா.

‘‘அப்படியெல்லாம் கிடையாது… அவ ஆசையாத்தான் உன்னை கூப்பிடுறா… போடா’’ என்று அவர்களுக்கு கேட்காதவாறு சொன்னான் கவுசிக்.

சிவா டக்கென்னு தலையில் மழை விழாதவாறு கையை மறைத்துக் கொண்டு, தேவியின் குடைக்கு ஓடினான். அவர்கள் இருவரும் நடக்க ஆரம்பித்துவிட, அவர்கள் பின்னால் இருந்த தேவி, சில நிமிடங்கள் அப்படியே நின்றாள்.

‘‘இவ என்ன என்னை கூப்பிட மாட்டேங்கிறா… இவளும் நம்மை கூப்பிட்டா நல்லா இருக்குமே?’’ என்று நினைத்துக் கொண்டான் கவுசிக்.

அப்போது மீண்டும் ஒரு எதிர்பாராதவிதமாக, பின்னால் திரும்பி கவுசிக்கை பார்த்தாள் கனிகா. ‘‘வரலியா’’ என்பதுப்போல் இருந்தது அவளது பார்வை.

இதற்குமேல் என்ன வேண்டும்… சட்டைப் பையில் இருப்பது கீழே விழுந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், வலது கையால் பையை பிடித்துக் கொண்டு, அவளது குடைக்கு ஓடினான் கவுசிக்.

இருவரும் ஒரே குடையில் பஸ்சை நோக்கி நடந்தனர்.

‘‘கூப்பிட்டாத்தான் வருவீங்களோ?’’ என்றாள் கனிகா.

‘‘ஓ.கே. சொல்லாம எப்படிங்க வர்றது… அப்புறம் உங்க பிரண்டு மாதிரி அசிங்கப்படுத்திட்டீங்கன்னா?’’ என்றான் கவுசிக்.

‘‘அவ அசிங்கப்படுத்தினாள்னு ஏன் நினைக்கிறேன்… அதுவே… அன்பா இருந்தா?’’

‘‘ஓ… இப்படியொரு முரட்டு அன்பு இருக்கோ? எனக்கு தெரியாம போச்சே… அப்போ உங்க சைடிலயும் அப்படியே நினைச்சுக்கலாமா?’’

‘‘ஐயே… இத தெரிஞ்சுக்கிறதுக்கு இவ்வளவு நாள் ஆச்சா?’’

அவள் சொன்னா பதிலால் உற்சாகம் அடைந்த கவுசிக். அவள் கையில் இருந்த குடையை பிடித்து தன் கையில் எடுத்து அதை மடக்கினான்.

‘‘ஐய்யய்யோ…மழையில நனைஞ்சிடப்போறோம்… குடையை ஏன் மடக்கினீங்க?’’

‘‘இந்த மழையாலதான் உன் லவ்வை தெரிஞ்சுக்கிட்டேன்… அதன் ஆசிர்வாதம் வேண்டாமா?’’ என்றபடி மழையில் நனைந்துக் கொண்டே நடந்தான் கவுசிக்.

மெல்லிய நாணத்துடன் அதற்கு பதில் அவனுடன் நடந்தாள் கனிகா.

‘‘ஐயோ… இப்போ என் மனசில இருக்கிற உற்சாகத்தில உன்னை அப்படியே தூக்கிப்பிடிச்சு ஒரு சுத்து சுத்தணும்ற மாதிரி தோணுது…’’ என்றான் கவுசிக்.

‘‘ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க... பேசாம வாங்க…’’ என்றாள் கனிகா.

‘‘இந்த சந்தோஷத்தை கொண்டாடணுமே… உனக்கு ஏதாவது பரிசு குடுக்கணும்னு நினைக்கிறேன்… வாங்கிப்பியா?’’ என்றான் கவுசிக்.

மெல்லிதாக தலையாட்டினாள் கனிகா.

சட்டென்னு தான் போட்டிருந்த செயினைக்கழற்றி, ‘‘இது என் முத மாச சம்பளத்தில ஆசையா வாங்கினது… அத என் ஆசை கிளி்க்கு தர்றேன் வாங்கிக்கோ…’’ என்று கனிகாவின் கையில் குடுத்தான்.

‘‘ஐய்யய்யோ… ஏன் செயினை எல்லாம் குடுக்கிறீங்க… வீட்டில கேட்டா என்ன சொல்லுவீங்க?’’ என்று கலவரத்துடன் கேட்டாள் கனிகா.

‘‘என் பொண்டாட்டிக்கு குடுத்தேன்னு சொல்லுறேன்…’’ என்றான் சட்டென்று.

நாணத்தில் சிரித்துக் கொண்டே தலையை குனிந்து கொண்டாள்.

அதற்குள் பஸ் நிற்கும் இடம் வந்துவிட இருவரும் பஸ்சில் ஏறினர். மழையில் நனைந்துவிட்டதால் உடை எல்லாம் ஈரமாகி இருந்தது.

இடது பக்க முதல் இரட்டை சீட்டில் தேவியும், கனிகாவும் அமர, பின் இரட்டை சீட்டில் சிவாவும், கவுசிக்கும் அமர்ந்தனர்.

இருவரும் ஈரத்துடன் இருப்பதை பின்னால் திரும்பி பார்த்துக்கோ என்ற ரீதியில் சிவாவைப் பார்த்தாள் தேவி.

தேவி தன்னிடம் இருந்த கர்ச்சீப்பால், ‘‘துடைச்சிக்கோ’’ என்று கனிகாவிடம் கொடுத்தாள்.

அதை மறுத்த கனிகா, பின்னால் திரும்பி, ‘‘கொஞ்சம் கர்ச்சீப் குடுங்க’’ என்று கவுசிக்கிடம் கேட்டாள் கனிகா.

தொடரும் 9
---------------------
கவுசிக்கிடம் கனிகா கர்ச்சீப் கேட்டதை பார்த்தவுடன், ‘‘ஓ… அப்ப நாங்க எல்லாம் இனி தேவையில்லை…’’ என்றாள் தேவி.

கனிகா கேட்டவுடன், தன்னுடைய கர்ச்சீப்பை எடுத்து நீட்டினான் கவுசிக்.

கவுசிக்கின் காதில், ‘‘என்னடா நடக்குது இங்கே…?’’ என்றான் சிவா.

‘‘ஓகே ஆயிடிச்சு…’’ என்றான் கவுசிக்.

‘‘ஓஓஓ…’’ என்று இழுத்தான் சிவா.

‘‘சும்மா இருடா…’’ என்று அவன் தோளைத் தட்டினான் கவுசிக்.

‘‘சார்… உங்க வித்தைய எல்லாம், உங்க பிரண்டுக்கு சொல்லிக்குடுக்க மாட்டீங்களா?’’ என்றாள் தேவி.

‘‘குடுத்திடுவோம்’’ என்றான் கவுசிக்.

‘‘குடுத்திட்டாலும், இங்கே உடனே வௌங்கிடும்’’ என்று சிவாவைப்பார்த்து முறைத்தாள் தேவி.

‘‘டேய்… இருந்தாலும் என்ன வச்சி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப ஓட்டுறீங்கடா’’ என்றான் சிவா.

‘‘அப்படி இல்ல மச்சி, அவ உன்னை லவ்வுக்கு தயார்ப்படுத்த சொல்லுறா. நீ அவகிட்ட பேசினியா இல்லையா? என்று கேட்டான் கவுசிக்.

‘‘உங்க வீட்டுல எந்த மாதிரி பொண்ணு பார்க்கிறாங்கன்னு கேட்டா…’’ என்றான் சிவா.

‘‘அது நீ என்ன சொன்னே?’’

‘‘ரொம்ப அடக்க ஒடுக்குமா… வாயாடியா இல்லாம, அமைதியான பொண்ணா தேடிட்டு இருக்காங்கன்னேன்’’ என்றான் சிவா.

‘‘முட்டாள் அவளை கடுப்பேத்துற மாதிரி சொன்னா அவ எப்படிடா உன்கிட்ட நல்லா பேசுவா… உன்னை மாதிரி அழகான பொண்ணா தேடுறாங்கன்னு சொல்லியிருந்தேன்னா… இந்நேரம் டூயட் பாடிட்டு இருக்கலாம்ல?’’ என்றான் கவுசிக்.

‘‘அது தெரிஞ்சா… பாலகுமார் என்னை ஹீரோ ஆக்கியிருப்பாரே… ம்ம்ம்… இனிமே டிரை பண்றேன் மச்சி’’ என்றான் சிவா.

வெளியே மழை விட்டிருந்தது.

நால்வரும் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்து கொண்டிருந்தாலும், அவரவர்கள் தங்கள் இணையைதான் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவழியாக பஸ் டிவிஎஸ் டீலர் ஸ்டாப்புக்கு வந்தது.

கனிகா கர்ச்சீப்பை கொடுத்துவிட்டு, போனில் பேசுகிறேன் என்பதுபோல் கையால் சைகை காட்டிவிட்டு இறங்கினாள்.

சீட்டில் இருந்து எழுந்திருக்கும்போது, கனிகாவுக்கு வழிவிடுவதுபோல் நின்ற தேவி, மறக்காமல் வேண்டுமென்றே சிவாவின் காலை மிதித்துவிட்டு படிக்கு சென்றாள்.

‘‘எருமை, எருமை… வேணும்னே மிதிச்சுட்டு போகுது பாரு’’ என்றான் சிவா.

‘‘அது உன்மேல இருக்கிற அலாதி அன்பு. தற்போதைக்கு உன் பேச்சால அது, கோபமா மாறியிருக்கு’’ என்றான் கவுசிக்.

‘‘ஓ… அப்படியா சங்கதி… நாளைக்கு பாரு எப்படி அசத்துருறேன்னு’’ என்றான் சிவா.

‘‘எதையாவது ஏடாகூடா செய்யாம இருந்த சரி’’ என்றான் கவுசிக்.

கீழே இறங்கி வந்த கனிகா, யாரும் பார்க்காத சமயத்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கவுசிக்கை பார்த்து, மெல்லிதாக போய் வருகிறேன் என்ற பாணியில் தலையை ஆட்டிக் காட்டினாள். மெல்லிய புன்முறுவலுடன் அதேபோல் மெல்லிதாக தலையாட்டினான் கவுசிக்.

பஸ் கிளம்பிய பின்னரும் பின்னாலேயே சில நிமிடங்கள் பார்த்துவிட்டு, பின்னர்தான் தலையை உள்ளே இழுத்துக் கொண்டான் கவுசிக்.

‘‘அப்போ… உங்க வீட்டுல இன்னைக்கு பார்ட்டி. அப்படித்தானே…?’’ என்றான் சிவா.

‘‘இன்னைக்கு வேண்டாம். வர்ற சண்டே வச்சுக்கலாம். பிரண்ட்ஸ்களையும் கூப்பிடலாம்’’ என்றான் கவுசிக்.

‘‘டபுள் ஓகே மச்சி’’ என்றான் சிவா.

இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே ராயப்பேட்டை பாலம் ஸ்டாப் வந்தது.

இருவரும் இறங்கி பிரிந்து சென்றனர்.

மாலையில் விஜய் ‘டிவி’யில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் கவுசிக் போன் அடித்தது. புதிய நம்பராக இருந்தது. எடுத்து பேசினான்.

‘‘ஹலோ…’’

‘‘நான்தான் பேசுறேன்’’ என்றான் மறுமுனையில் கனிகா.

வீட்டில் அம்மாவும், தங்கையும் ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்ததால், போனில் ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு, மாடிக்கு விரைந்தான். அங்கு வைத்து மீண்டும் போனில், ‘‘ஹலோ…’’ என்றான்.

‘‘சொல்லுங்க…’’ என்றாள் கனிகா.

‘‘பஸ்ல வர்றப்போதான் ஒரு டவுட் வந்துச்சு…’’ என்று இழுத்தான் கவுசிக்.

‘‘என்ன டவுட்?’’

‘‘என் போன் நம்பரே உனக்கு தெரியாது. நானும் குடுக்கல… அப்புறம் எப்படி போறப்போ போன்ல பேசுறேன் சொல்லிட்டு போனே… அதே மாதிரி கரெக்டா என் பெர்ஷனல் நம்பர்ல பேசுறே?’’ என்றான் கவுசிக்.

‘‘பெண்கள் நினைச்சா… முடியாதது எதுவும் கிடையாது. ரொம்ப சிம்பிள். அட்மின்ல எங்க கிளாஸ்மேட் ஒருத்தி வேலை பார்க்கிறா… அவகிட்டதான் உங்கக்கிட்ட அவசரமா ஒரு டவுட் கேட்கணும் சொல்லி வாங்கினோம்’’ என்றான் கனிகா.

‘‘னோம் னா… வேறு யார் உன் கூட கூட்டணி?’’

‘‘வேற யாரு தேவிதான். அவகிட்டத்தான் உதவி கேட்டேன். அவதான் இந்த ஐடியாவை சொன்னா…’’ என்றாள் கனிகா.

‘‘அடப்பாவிகளா பசங்களவிட மோசமா ஆயிட்டு வர்றீங்களே…’’

எதிர்முனையில் சிரிப்பொலி கேட்டது,

‘‘ஹேய்… இரு… இரு... இந்த சிரிப்பு சத்தத்தை நான் ஏற்கனவே எங்கேயோ கேட்டிருக்கேனே…’’ என்று யோசிக்க ஆரம்பித்தான் கவுசிக்.

‘‘அந்த அன்நோன் கால்ல கேட்டிருப்பீங்க’’ என்றாள் கனிகா.

‘‘அடிப்பாவி… அப்போ அதுவும் நீதானா…’’

‘‘நானே தான்… என் செல்லக்கண்ணனோட பேசணும்னு ஆசையா இருந்தது. அதனால ஹைடிங் நம்பர் ஆப்ல போட்டு உங்களுக்கு கால் பண்ணேன்’’

‘‘இது தெரியாம யாரோ விளையாடுறாங்கன்னு நினைச்சு… ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன் தெரியுமா?’’

‘‘எனக்குத்தான் தெரியுமே’’

‘‘அப்போ எனக்கு முன்னாடியே நீ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே அப்படித்தானே?’’

‘‘உண்மையச் சொன்னா அப்படித்தான். ஆனா, என்னை கண்டுபிடிக்கிறதுக்காக உங்க நண்பர் சிவா, ஆபிசுல வேவு பார்க்க அனுப்பினீங்களே…அதுதான் செம காமெடி’’

‘‘ஆமா… ஆபிசுல இருந்துதான் யாரோ பேசுறாங்கன்னு நினைச்சு, யாரு போன்ல பேசுறாங்கன்னு பார்க்கிறதுக்காக சிவா டிரை பண்ணான். ஆனா உன் பிரண்டு தேவி, அவனை ரொம்ப கலாய்ச்சுட்டா’’

‘‘அந்த நேரத்தில கொஞ்சம் விட்டிருந்தா… நாங்க மாட்டியிருந்திருப்போம்… சிவா ஒவ்வொருதரா பார்த்துட்டு வர்றதை பார்த்தவுடனேயே அவர் வேவு பார்க்கத்தான் வந்திருக்கான்னு தெரிஞ்சிடுச்சு… அதனால, கையும் ஓடல, காலும் ஓடல… உடனே போனை தூக்கி தேவிக்கிட்டே குடுத்திட்டேன்… அவதான் நான் பார்த்துக்கிறேன் சொல்லி, சிவாவை கலாய்ச்சா…’’

‘‘அப்போ நாங்கதான் தொப்பி வாங்கிட்டோமா’’

‘‘100 பெர்ஷன்ட்’’

‘‘சரி… உன் பிரண்ட், என் பிரண்டை லவ் பண்றாளா இல்லையா?’’

‘‘அவ சைடில இருந்து விரும்புறது உண்மை. ஆனா, உங்க பிரண்ட்தான் சரியில்ல. இன்னைக்கு சாயங்காலம் அவ லவ்வ சொல்ல இருந்தா… ஆனா சிவா அவளை கடுப்பேத்திட்டார். அதனால அவ சொல்லாமலே போய்ட்டா…’’

‘‘நாளைக்கு நம்மாளு அசத்துறேன்னு சொல்லியிருக்கான்… பார்ப்போம்… அவனை தயார்ப்படுத்தி அனுப்புறேன்’’

‘‘சரி… நாளைக்கு என்ன கலர் டிரஸ் போடப்போறீங்க?’’

‘‘நீயே சொல்லேன்…’’

‘‘புளூ வித் வொயிட் செக்குடு?’’

‘‘சரி. நீ சொல்ற காம்பினேஷன்ல என்கிட்ட ஒரு சட்டை இருக்கு. அதுக்கு மேட்சா ஜீன்ஸ். ஓகேயா?’’

‘‘டபுள் ஓகே. ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா, வீட்டில என்ன, யாருன்னு கேட்பாங்க. நான் போனை வைக்கட்டா’’

‘‘கட்டாயம் வச்சாகணுமா?’’

‘‘போடா… நாட்டி…’’

‘‘சரி பர்ஸ்ட் டைமா ஒண்ணு கேட்பேன். குடுப்பியா?’’

‘‘என்ன முத்தமா?’’

‘‘இப்படி படார், படார்னு போட்டு உடைச்சா… பசங்க எல்லாம் என்னதான் பண்ணுவோம்’’

‘‘அதுதான் அசடு வழியிறப்பவே தெரியுதே’’

‘‘சரி குடுத்துட்டுதான் போயேன்’’

‘‘உதைபடுவ…’’

‘‘இச்… இச்… இச்…’’

‘‘என்னடா இப்படி எச்சில் பண்ணிட்டே’’

‘‘ஐயாவுக்கு பர்ஸ்ட் டைம்ல அதனால ஸ்ட்டிராங்கா குடுத்திட்டேன். நீ கேட்காமலேயே குடுத்தேன்ல, எனக்கு ஒண்ணே ஒண்ணு மட்டும் குடேன்’’

‘‘சரி கண்ணை மூடிக்கோ…’’

‘‘இச்…’’ என்று ஒரு சத்தம் கேட்டது.

அத்துடன் கால் கட்டானது.
தொடரும் 10
================

ஒன் 4 த்ரீ – பாகம் 11

மறுநாள் அலுவலகத்தில் அரசல்,  புரசலாக கனிகா – கவுசிக் காதல்  விவகாரம் காது,  மூக்குடன் பரவி இருந்தது.
பார்த்த நண்பர்கள் எல்லோரும் கவுசிக்குக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். அது அவனுக்கே சற்று சங்கோஜமாக இருந்தது. அன்று காலையில் புராஜெக்ட்டை முடிக்க வேண்டும் என்பதற்காக, ஆபீ்ஸ் பஸ்சில் வராமல் பைக்கில் வந்திருந்தான். இதனால் கனிகாவை பார்க்க முடியவில்லை. வேலை பிசியில் அதை சற்று மறுந்துவிட்டிருந்தான்.
மதியம் சாப்பிடப்போகும்போதுதான் கனிகாவை பார்த்தான். என்றும் இல்லாத புதுமையாக மிக நேர்த்தியாக புடவை கட்டி வந்திருந்தாள். அதுவும் அவர்கள் ஏற்கனவே பேசிக் கொண்டபடி நீலநிறத்தில். தலையில் சின்னதாக ஒரு ரோஜா. வழக்கமாக ஐடி அலுவலகங்களில் மல்லிகை போன்ற மணம் வீசும் பூக்களை வைக்க அனமதி இல்லை. அதுமற்றவர்களை தொந்தர செய்யும் என்பதால். ஆனால், சின்னதாய் ரோஜா வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.
அந்த நீலநிற புடவையில் பெரிய சைஸ் பூ போட்ட சேலையில் தேவதையாய் தெரிந்தாள் கனிகா. தட்டை எடுக்கிற சாக்கில் அவள் அருகில் சென்ற கவுசிக், ‘‘ஐ லவ் யூ’’ என்றான்.
பின்னால்  திரும்பி மெல்லிதாக புன்முறுவலித்த கனிகா, ‘‘ஐ டூ  மச்சான்’’ என்றாள்.
இவர்களுக்கு பின்னால் நின்றிருந்த சிவா, ‘‘சுந்தரி நீயும், சுந்தரன் நானும்….’’ என்று எங்கோ பார்த்தபடி வேண்டுமென்றே பாடினான்.
அதையடுத்து, அவசர, அவசரமாக நகர்ந்தனர் இருவரும்.
ஆனால், கனிகா, கவுசிக்குக்கு முன்புறம் நின்றிருந்த தேவி மட்டும் அவர்களுக்கு வழிவிட்டு அப்படியே நின்றாள். அவர்கள் இருவரும் முன்னே சென்றுவிட தேவியின்  பின்னால் வந்தான் சிவா.
‘‘ஹலோ குட்மார்னிங்…’’  என்றான் சிவா.
‘‘அங்கிள் இது ஆப்டர்நூன்’’ என்றாள் தேவி.
‘‘ஹலோ பர்ஸ்ட்டைம் பார்க்கிறப்போ, குட் மார்னிங்குதான் சொல்வாங்க…’’ என்றான்.
‘‘மிட்நைட்டுல கூடவா?’’ என்றாள் தேவி.
‘‘இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா… எப்படி பதில் சொல்வாங்க?’’
‘‘எடக்குன்னா என்ன, மடக்குன்னா என்ன?’’
‘‘ஐயா… சாமீ… ஆள உடும்மா… எனக்கு ரொம்ப வேலை இருக்கு’’
‘‘நான் என்னம்மோ உங்கள பிடிச்சு வச்சிருக்கிற மாதிரியும்…. நீங்க என்னம்மோ என் கயிறுக்கு கட்டுப்பட்டு நிக்கிற மாதிரியும் இல்ல பேசுறீங்க?’’
‘‘சரிம்மா… நீ பிடிச்சு வைக்கல… நானும் நிக்கல…நான்  முன்னாடி போறேன்’’
‘‘அப்போ… நான் தான் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்… நீங்க எதுவுமே என்கிட்ட பேசல அப்படித்தானே?’’
தட்டுடன் தேவியை பார்த்து கும்பிடு போட்ட சிவா…‘‘அம்மாடி…. இது வாயா… இல்லாட்டி…’’ என்றான்.
‘‘ஏய்….’’ என்று சவுண்டு கொடுத்தாள் தேவி.
‘‘மன்னிச்சுக்கம்மா… ஆடி மாசம்னு தெரியாம வாயை குடுத்திட்டேன்… இப்படி ஆத்தா உன் உடம்பில எறங்குவான்னு தெரிஞ்சிருந்தா… வாய குடுத்திருக்க மாட்டேன்… ஐயாம் சாரி…. பசிக்கிங்…. நான் முன்னே போறேன்’’ என்றான்.
‘‘அது… இப்படி பணிவா பேசணும் புரிஞ்சதா’’ என்றாள் தேவி.
அவளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சாப்பாட்டை எடுக்க முன்னே சென்றான் சிவா.
வழக்கமாக நான்கு பேர் அமரும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்தன. இதனால் வேறு வழியில்லாமல் 10 பேர் அமரும் பெரிய இருக்கைக்கு சென்றனர் கவுசிக் மற்றும்  நண்பர்கள்.
அங்கே ஏற்கனவே ஒரு பெரிய கோஷ்டி உட்கார்ந்திருந்தது.
ஜான்தான் ஆரம்பித்தான். ‘‘மாப்பிள ஒரு வழியா கனிகாவை ஓகே பண்ணிட்டே போல இருக்கே? அப்போ இன்னைக்கு பார்ட்டியா?’’ என்றான்.
‘‘டேய் வர்ற சண்டே வச்சிக்கலாம். அன்னைக்குத்தான் எல்லோருமே ப்ரீ’’ என்றான்.
எல்லோரும் கோரஸாக தலையாட்டினார்கள்.
‘‘நம்ம மச்சானுக்கு எல்லாமே ஈசியா அமைச்சுடுதுடா…’’ என்றான் விஷ்ணு.
‘‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா… காலேஜ்ல இருந்து இதுவரை எத்தனை பொண்ணுங்க இவன்கிட்ட ஐ லவ் யூ  சொல்லியிருப்பாங்க… நம்ம ஆளும் லேசுப்பட்ட ஆள… இவன் எத்தனை  பொண்ணுங்ககிட்ட லெட்டர் குடுத்திருப்பான்’’ என்றான் சிவா.
‘‘அதுக்கெல்லாம் ஒரு  குடுப்பினை வேணும் மச்சி… உனக்கும், எனக்குமா அதெல்லாம் கிடைக்கும்?’’ என்றான் ஜான்.
‘‘சரி விடுங்கடா மச்சான் ஒரு வழியா செட்டில் ஆயிட்டான். இனி கல்யாண சாப்பாடுதான்’’ என்றான் விஷ்ணு.
‘‘டேய்… பழைய கதையெல்லாம் இப்ப ஏண்டா இழுக்கிறீங்க.... அதெல்லாத்தையும் விடுங்கடா’’ என்றான் கவுசிக்.
‘‘அதுதானே… மச்சானுக்கு வெட்கம்,  வெட்கமா வருதில்ல…’’ கிண்டலடித்தான் சிவா.
மெலிதாக அதற்கு சிரித்து வைத்தான் கவுசிக்.
பேசிக்கொண்டே அவர்கள் சாப்பிட, அந்த இடம் அரட்டைக்கச்சேரியாக இருந்தது.
ஒருவழியாக அனைவரும் சாப்பிட்டு தட்டை வைப்பதற்காக எழுந்திருக்கும்போது, அடுத்த செக்ஷன் அன்பு கவுசிக் அருகில் வந்தான்.
‘‘மச்சி கனிகாகிட்ட லவ் சொல்லிட்டே போலிருக்கு’’ என்றான் .
‘‘ஆமா புரோ’’ என்றான் கவுசிக்.
‘‘ வாழ்த்துக்கள் மச்சி… ஆனா, கல்யாணம் வரைக்கும் யாருக்கிட்டேயும் பழைய கதையை எல்லாம் உளறிட்டு இருக்காதே… இப்போ உளறிட்டு இருந்த மாதிரி’’ என்றான்.
மெல்லிதான ஒரு அதிர்ச்சியுடன், ‘‘நாங்க பேசினதெல்லாம் நீங்களும் கேட்டீங்களா?’’ என்றான் கவுசிக்.
‘‘நாங்களும் கேட்டோமா… டேபிள்ல இருந்த எல்லோருமே கேட்டோம்…  நீங்க என்ன மணிரத்னம் பட டையலாக் மாதிரியா பேசினீங்க… ஹரி பட வசனம் மாதிரி நீட்டி முழக்கிட்டுல்ல இருந்தீங்க…’’ என்றான்.
‘‘அப்படியா?’’ என்றான் கவுசிக்.
‘‘மச்சி ஒரு சின்ன ஷாக்தான். ஆனா அவனால உன் லைப்ல  பாதிப்பு ஏற்படாதுன்னு நினைக்கிறேன்’’ என்று பீடிகை போட்டான் அன்பு.
அவனை அப்படியே ஓரங்கட்டி, ‘‘என்ன சொல்றே அன்பு?’’ என்றான் சற்று கலவரத்துடன் கவுசிக்.
‘‘நம்ம டேபிள்ல நீங்க சாப்பிட்டுக்கிட்டு இருந்தப்போ… கனிகாவோ கசினும் உட்கார்ந்திருந்தான். ஆனா, உனக்கு அவனை தெரியாது. ஆனா, அவன் உன்னையே வாட்ச் பண்ணிட்டு இருந்தான். அப்புறம், அவன் கனிகாவோட கசின்றது நேத்துதான் எனக்கே தெரியும்… நான் அவன் பக்கத்திலத்தான் உட்கார்ந்திருந்தேன். உங்களை எச்சரிக்கிறதா பல தடவை கூப்பிட்டேன். ஆனா, நீங்க  பேச்சு சுவாரசியத்தில என் பக்கம் கூட திரும்பி பார்க்கல. இப்பத்தான் அவன் எந்திரிச்சு போனான். அதனாலத்தான் உன்கிட்ட சொல்லலாம்னு வந்தேன்’’ என்றான் அன்பு.
‘‘அடப்பாவி அது யாருப்பா, கனிகாவோட கசின்’’ என்றான் கவுசிக்.
‘‘யார் கிட்டேயும் பேச மாட்டான். கொஞ்ம் அசமஞ்சி. பரத் டீம்ல இருக்கான். பேரு மணி’’ என்றான்.
‘‘ரொம்ப தேங்க்ஸ் புரோ… இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கிறேன்’’ என்றான் கவுசிக்.
‘‘எனிவே வாழ்த்துக்கள் மச்சி’’ என்று கைக்குலுக்கிவிட்டு விடைபெற்றான் அன்பு.
தூரத்தில் மணி தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தும், பார்க்காததுபோல் தட்டை வைக்கும் இடத்துக்கு சென்றான் கவுசிக்.

(தொடரும் 11)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

=================
பாகம் 12



ஒன் 4 த்ரீ – பாகம் 12



மணியினால் ஏதாவது பிரச்னை வருமோ என்று கவுசிக்கின் உள்மனதில் மெல்லிய பயம் வந்து சென்றது. ஆனால், அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால், வேலைக்கு ஆகுமா என்பதால் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

வேலையில் பொழுதுபோனதே தெரியவில்லை.

மாலை 6 மணிக்கு அலாரம் வைத்திருந்ததால், சாம்சங் வாட்ச் சிணுங்கியது.

உடனடியாக கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்துவிட்டு கிளம்பினான்.

வாசலிலேயே கனிகா காத்திருந்தாள். இருவரும் சேர்ந்து பஸ்சை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

‘‘கவுசிக், இன்னைக்கு என்  கசின் மணிய பார்த்தியா?’’ கனிகா கேட்டாள்.

‘‘ஆமா… அவன் உன் கசின்னு எனக்கு தெரியாது. என் பிரண்ட் சொன்னான்’’ என்றான் கவுசிக்.

‘‘அவன் முன்னாடி எதுவும் பேசிக்கல இல்லே? அவன் எங்கப்பாக்கிட்ட ரொம்ப பேசுவான். ஏதாவது போட்டுக் குடுத்திட போறான்’’

‘‘விடு… கனிகா… அதெல்லாம் ஒன்னும் நடக்காது பார்த்துக்கலாம்’’

‘‘அது சரி… நீ என்ன எல்லாம்கிட்டேயும் நம்ம லவ்வ பத்தி சொல்லிட்டு இருப்பீயா? சரியான ஓட்ட வாய் நீ’’

‘‘அப்படி யார் உன்கிட்ட சொன்னா? நான் என் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னேன்… அவ்வளவுதான்’’

‘‘அது என் பிரண்ட்ஸ்கள் வரை பரவி, என்கிட்டேயே வந்து கேட்கிற அளவுக்கு பரவியிருக்கு தெரியுமா?’’

‘‘அட விடும்மா… நம்ம லவ்வ பார்த்து பல பேருக்கு பொறாமை… இந்த யுவராஜனும், யுவராணியும் சேர்ந்திட்டாங்களேன்னு அவங்களுக்கு எல்லாம் வயிற்றெரிச்சலா இருக்கும். அதனால காட்டுத்தீ மாதிரி பரப்பிக் கிட்டு இருக்காங்க…’’

‘‘சரி இனிமே எல்லாம்கிட்டேயும் உளறிக்கிட்டு இருக்காதே… எங்கப்பா காதுவரைக்கும் போயிடப் போகுது. அவர் கொஞ்சம் ஆர்தடாக்ஸ். ஆனா, நவீன ஆர்த்டாக்ஸ்’’

‘‘எல்லாமும் சரியா இருக்கான்னு பார்த்துட்டுதான் ஓகே பண்ணுவார். எங்க அக்காவும் லவ் மேரேஜ்தான். ஆனா, அவ ஹஸ்பண்ட் பிசினஸ்மேன். அவன் எப்படி, அவங்க பேமிலி எப்படி, பையன்கிட்ட கெட்டப்பழக்கம் இருக்கா இப்படி எல்லாத்தையும் பார்த்துட்டு, அவரே அவங்க லவ்வுக்கு ஓகே பண்ணிட்டார். அது மாதிரி நம்ம லவ்வுக்கும் ஓகே பண்ணிடுவார்னு நினைக்கிறேன். உங்கப்பா எப்படி?’’

‘‘எங்கப்பா ஆர்தடாக்சும் கிடையாது, மாடரேட்டும் கிடையாது. எனக்கு பிடிச்சதுக்கு தடை சொல்ல மாட்டார். ஆனா, தப்புன்னா அது எதுவா இருந்தாலும் ஏத்துக்க மாட்டார். அவரோட ஸ்டைல் ஆப் வே வித்தியாசமானது’’

அவர்கள் பேசிக் கொண்டே கம்பெனி பஸ் நிற்கும் இடத்துக்கு வந்துவிட்டனர்.

ஏற்கனவே அங்கு வந்து உட்கார்ந்திருந்தான் சிவா.

அவன் அருகே சென்று கவுசிக் அமர்ந்துக் கொள்ள, முன்சீட்டில் கனிகா அமர்ந்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் ஓட்டமும், நடையுமாக வந்து சேர்ந்தாள் தேவி. கனிகாவின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்ட தேவி, பின்புறம் திரும்பி பார்த்தாள். சிவா மெல்லிதாக சிரித்தான்.

அவனிடம் தன்னுடைய கர்ச்சீப்பை கொடுத்தாள் தேவி.

எதற்காக அவள் இதை தருகிறாள் என்று தெரியாமல் வாங்கிக் கொண்டான் சிவா.

கர்ச்சீப்பை கையில் பிடித்தபோது அதில் ஏதோ இருப்பதுபோன்று தோன்றியது. அருகில் இருந்த கவுசிக்கை பார்த்தான். அவன் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

மெதுவாக கர்ச்சீப்பை பிரித்து பார்த்தான். அதில் சிறிய பைவ் ஸ்டார் ஒன்று இருந்தது.

அதை அப்படியே தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு, தன்னுடைய கர்ச்சீப்பை எடுத்து, தேவியிடம், ‘‘தேங்க்ஸ்’’ என்று திரும்பிக் கொடுத்தான்.

அதை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள் தேவி. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசம்.

சிவாவின் முகத்தில் மெர்க்குரி எரிந்து கொண்டிருந்தது.

‘‘டேய் என்னடா நடக்குது?’’ கவுசிக் கேட்டான்.

‘‘பார்த்திட்டியா மாப்பிள?’’ கேட்டான் சிவா.

‘‘நானும் ஜாடை மாடையா பார்த்துட்டுத்தான் இருந்தேன். எப்படிடா திடீர்ன்னு?’’

‘‘காலையில என்னை ரொம்ப ஓட்டிட்டா இல்லே… அதனால அவளே சமாதானப்படுத்துறதுக்காக சாக்லேட் குடுத்திருக்கா’’

‘‘அப்போ உனக்கு ஓகே ஆயிடிச்சா?’’

‘‘இல்லே மாப்பிள… ஆனா ஆன மாதிரிதான். நாளைக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்’’

‘‘என்னமோ போடா மாதவா… நாங்க எல்லாத்தையும் சத்தமா செஞ்சா… நீங்க சத்தமே இல்லாம செஞ்சு முடிக்கிறீங்க’’

‘‘அது… அது… அதுவா நடக்கும் மாப்பிள’’

‘‘சரி என்கிட்டே மட்டும் டிரீட் கேட்டீங்க இல்லே… நீ எப்போ குடுக்கப்போறே?’’

‘‘மாப்பிள நாம ரெண்டுபேரும் சேர்ந்தே கிராண்ட் பார்ட்டியா குடுத்திடுவோம்…செலவும் சிக்கனமா ஆன மாதிரி இருக்கும். என்ன சொல்றே?’’

‘‘டபுள் ஓகே. ஆனா, நீ மொதல்ல ஓகே பண்ணிடு. அப்போதான் சண்டே பார்ட்டியில நீ என்னோட ஜாய்ன் பண்ண முடியும்’’

‘‘சரி மாப்பிள’’ என்றான் சிவா.

பின்னர் இருவரும் வேறு டாப்பிக்கு மாறினார்கள்.

பஸ் டிவிஎஸ் நிறுத்தத்துக்கு வந்தது.

கனிகாவும், தேவியும் எழுந்தார்கள்.

‘‘நாளைக்கு புளூகலர் சேரியில வர்றீங்களா?’’ தேவியிடம் சிவா மெதுவாக கேட்டான்.

மெல்லிய புன்முறுவலுடன், ‘‘ஓகே’’ என்றாள் தேவி.

பிளாட்பார டீக்கடையில் இருந்த ஸ்பீக்கரில், ‘‘ஒரு காதல் என்பது… என் நெஞ்சில் உள்ளது…’’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

கனிகாவும், தேவியும், கீழே இறங்கி இருவரையும் தங்கள், தங்கள் ஆட்களை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

பாடலில் லயித்தனர் கவுசிக்கும், சிவாவும்.

(தொடரும் 12)

-          - ஜே.எஸ்.கே.பாலகுமார்.
--------------------------------------------------------
ஒன் 4 த்ரீ – பாகம் 13


விஜய் ‘டிவி’யில் நாம் இருவர், நமக்கு இருவர் தொடர் ஆரம்பித்திருந்தது.
கனிகா ஷோபாவில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில்தான், அவளது அப்பா ராகவன் உள்ளே வந்தார்.
நேராக அவளை பார்த்துக் கொண்டே வந்தவர், ‘‘ஏம்மா… நீ ப்ரீயா? கோயிலுக்கு போலாமா?’’ என்று கேட்டார்.
காய் நறுக்கிக் கொண்டிருந்த கனிகாவின் அம்மா ரத்தினம், ‘‘என்ன திடீர்னு மகளை கோயிலுக்கு கூப்பிடுறீங்க? ஏன் நாங்க எல்லாம் வர மாட்டோமா?’’ என்று கேட்டாள்.
‘‘அப்பனுக்கும் புள்ளைக்கும் நடுவில ஆயிரம் இருக்கும். நாங்கன்னா ஜாலியா போய்ட்டு வருவோம்… நீ வந்தா அத வாங்காதே, இத வாங்காதே, ஓட்டல் வேணாம்ன்னு தொண, தொணப்பே… எங்களுக்கு டிஸ்டர்ப்டா இருக்கும்…’’ என்றார் ராகவன்.
‘‘அது சரி… நாங்க வந்தா உங்களுக்கு டிஸ்டர்ப்பா… சரி நீங்களே போய்ட்டு வாங்க மகராசா’’ என்று அங்கலாயித்தாள் ரத்தினம்.
வழக்கமாக கனிகாவின் அப்பா இப்படி மகள்களை கோயிலுக்கு, இல்லாவிட்டால் பர்சேசுக்கு என்று கூட்டிக் கொண்டு போவது வழக்கம்தான். அக்காவுக்கு திருமணமான பின்னர் அந்த வழக்கம் சற்று குறைந்திருந்தது.
இப்போது திடீரென்று அப்பா கூப்பிட்டவுடன் விறுவிறுவென்று தயாரானாள் கனிகா.
அடுத்த கால்மணி நேரத்தில் இருவரும் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்தனர். தரிசனத்தை முடித்துவிட்டு, இருவருக்கும் பிடித்த அப்பத்தை வாங்கிக் கொண்டு, திருமண மண்டபத்தில் ஒரு தூணுக்கு அருகே அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.
‘‘ஏம்மா… ஆபிஸ் வேலையெல்லாம் எப்படி போகுது?’’ ராகவன் தான் ஆரம்பித்தார்.
‘‘ம்..ம்…நல்லா போயிட்டு இருக்குப்பா… ஒன் இயர் டிரைனிங் ப்ரீயட் முடிஞ்சதும் இன்னும் சம்பளம் கூடும்பா’’ என்றாள் கனிகா.
‘‘குட்…நீ ரொம்ப வளர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்’’ என்றார் ராகவன்.
‘‘ஏம்ப்பா… அப்படி சொல்றீங்க?’’ என்றாள் கனிகா.
‘‘இல்லேம்மா… என் கையை பிடிச்சு சுத்தியிட்டு இருந்த குட்டிப்பொண்ணு நீ… இப்போ நீயே சம்பாதிச்சு குடுக்கிற அளவுக்கு வளர்ந்துட்டேல்ல, அதத்தான் சொன்னேன்’’
‘‘நான் என்னைக்கு இருந்தாலும் உங்க பொண்ணுதான்பா’’
‘‘அந்த நம்பிக்கையிலதான் இப்போ உன்கிட்ட ஒன்ன கேட்கப்போகிறேன். பதில் சொல்வியா?’’
அப்பா பூடகமாக பேசும்போதே, அத்தை மகன் மணி தன் வேலையை காட்டிவிட்டான் என்பதை புரிந்துக் கொண்டாள் கனிகா. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘‘சொல்லுங்கப்பா’’ என்றாள்.
‘‘ஆபிஸ்ல உன்னோட வேலை பார்க்கிற ஒரு பையனை உனக்கு பிடிச்சிருக்குன்னு கேள்விப்பட்டேன் சரியாம்மா?’’
‘‘ஆமாம்பா… ரொம்ப நல்லவர்பா. அவரை பார்த்தா உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்’’
‘‘ம்ம்…. அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். நான் அந்த பையனைப்பத்தி விசாரிக்கிறேன். எனக்கு பிடிச்சிருந்தா… நானே கட்டி வைக்கிறேன். ஆனா, அதுக்கு நீ ஒத்து வருவியா? இல்லே உங்கப்பா வேணாம்னு சொல்லிட்டா… என்னை தவிக்கவிட்டு போயிடுவியா?’’
‘‘அப்பா… என்னப்பா… இப்படியெல்லாம் பேசுறீங்க… நீங்க விசாரிங்கப்பா. அப்புறம் நாம ஒரு நாள் சந்திச்சு பேசலாம். அதுக்கு முன்னாடி அம்மாக்கிட்ட இந்த விஷயத்தை பேசாதீங்க…. அவங்க அழுது அழிச்சாட்டியம் பண்ணிடுவாங்க’’
‘‘சரி நான் சொல்ல மாட்டேன்’’ என்று வேட்டியை தட்டிக் கொண்டு கிளம்பினார் ராகவன்.
அவருடனேயே கிளம்பினாள் கனிகா.
வீட்டிற்கு வந்து சேரும் வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
இருவரும் வந்துவிடுவார்கள் என்று கணித்திருந்த ரத்தினம், சப்பாத்தியை சுட்டு வைத்திருந்தாள். அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயம், தக்காளி தொக்கு செய்திருந்தாள்.
தந்தையும், மகளும் பேசாமல் அமைதியாக சாப்பிடுவதை பார்த்து, ‘‘என்னாச்சு… உங்க ரெண்டு பேருக்கும்… கோயிலுக்கு போய்ட்டு வந்த மாதிரியலையே… ரெண்டு பேரும் பேய் அறைஞ்ச மாதிரி உட்கார்ந்திருக்கீங்க…?’’ கேள்வி எழுப்பினாள் ரத்தினம்.
‘‘ஒண்ணுமில்லையே... நாங்க நார்மலாத்தான் இருக்கோம்’’ என்றார் ராகவன்.
‘‘இல்லையே… அப்படியிருந்தா… இந்நேரம் என் டிபனை பத்தி, லொள்ளு சபா ஆரம்பிச்சிருப்பீங்களே?’’
‘‘அம்மா… கோயில்ல கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்துச்சு… அதனால கொஞ்சம் டயர்ட். வேற ஒண்ணும் இல்லேம்மா… என்னைக்கும் இல்லாம உன் டிபன் இன்னைக்கு ரொம்ப அருமையா இருக்கு தெரியுமா?’’ என்றாள் கனிகா.
‘‘என்னமோ ரெண்டு பேர் மூஞ்சியும் சரியில்ல… ஏதோ எனக்கு தெரியக்கூடாதுன்னு…ரெண்டு பேரும் மறைக்கிறீங்க… கத்திரிக்கா முத்தினா.. சந்தைக்கு வந்து தானே ஆகணும்… என்கிட்ட வருவீங்கல்ல… அப்போ பார்த்துக்கிறேன்’’ என்றாள் ரத்தினம்.
ஆனால், தந்தையும், மகளும் அதற்கு பதில் சொல்லாமல் விறுவிறுவென்று சாப்பிட்டு முடித்தார்கள்.
இருவரும் சோபாவில் அமர்ந்து, ஜீ டிவியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘காதல் திருமணம் சரியா? பெற்றோர்கள் பார்த்து செய்யும் திருமணம் சரியா?’ என்பது குறித்து சீரியல் கதாநாயகியின் அம்மா லெக்சர் எடுத்து கொண்டிருந்தார்.
அதைப்பார்த்த ராகவன் சட்டென்று மகளை பார்த்தார்.
‘‘அப்பா… சீரியலை மாத்துங்கப்பா’’ என்றாள் கனிகா.
‘‘ஏம்மா… பெரியவங்க சொல்றது கூட பிடிக்கலையா?’’ என்றார் ராகவன்.
‘‘அப்பா… எல்லாத்திலேயும் ஒரு விஷயத்தை கம்பேர் பண்ணக்கூடாது. இது போர் சீரியல்பா… நாங்க இந்த நேரத்தில சன் டிவி தான் பார்ப்போம்’’ என்றாள்.
ரிமோட்டை எடுத்து சன் ‘டிவி’க்கு மாற்றினார்.
ஏதோ ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் மனம் லயிக்காமல் வாரப்பத்திரிகை ஒன்றை எடுத்து படிக்க ஆரம்பித்தார் ராகவன்.
அந்த நேரத்தில்தான் கனிகாவின் செல்போன் ஒலித்தது.
ராகவன் ஓரக்கண்ணால் இடதுபுறம் இருந்த செல்போனை பார்த்தார். அதில் ‘ஸ்வீட்டி’ என்று காட்டியது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==================================

ஒன் 4 த்ரீ – பாகம் 14

செல்போனில் பேசுபவர் பெயர் ‘ஸ்வீட்டி’ என்று இருந்ததை பார்த்த ராகவன், அதை பார்த்தும், பார்க்காதது போல் இருந்துவிட்டார்.
செல்போனை எடுத்து பார்த்த கனிகா, பெயரை பார்த்துவிட்டு, கட் செய்தாள்.
‘குட் நைட் பா’ என்று சொல்லிவிட்டு எழுந்து தன் அறைக்கு சென்றாள்.
மீண்டும் அழைப்பு கவுசிக் அழைப்பான் என்பதால், வாட்ஸ்ஆப்பில், ‘நாளை ஆபிசில் பேசலாம். போன் செய்யாதே’ என்று மெசேஜ் அனுப்பினாள்.
மறுநாள்.
அலுவலகம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்திருந்தது.
கம்ப்யூட்டர்களில் மூழ்கிவிட்டவர்கள், அடுத்தவர்கள் சாப்பிடுகிறார்களா, பேசுகிறார்களா, தூங்குகிறார்களா என்ற கவலை ஏதும் இன்றி, தங்களுடைய டார்கெட்டை முடிக்கும் தீவிரத்தில் இருந்தார்கள்.
காலையில் இருந்து வேலை பிசியில், கனிகாவிடம் பேச நினைத்திருந்ததையே மறுந்துவிட்டான் கவுசிக்.
திடீரென நேற்று அனுப்பி மெசேஜ் ஞாபகத்துக்கு வர, கனிகாவுக்கு போன் செய்தான்.
‘‘என்ன திடீர்னு நேற்று போனை கட் பண்ணிட்டே… பக்கத்தில யாராவது இருந்தாங்களா?’’ என்றான் கவுசிக்.
‘‘ஆமா… எங்கப்பா நேத்து என் பக்கத்தில இருந்தார். அவர் உன் பெயரை கூட பார்த்திட்டார்னு நினைக்கிறேன். அதனாலத்தான் கட் பண்ணேன். அப்புறம் நேத்து ஒரு விஷயம் நடந்திச்சு தெரியுமா?’’ என்றான் கனிகா.
‘‘நீ சொல்றத பார்த்தா… ஏதோ பெரிய விஷயம் போலிருக்கே?’’ என்றான் பீடிகை தாங்க முடியாமல்.
‘‘ஆமா… நம்ம விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்சிடிச்சு… என் கசின் மணி, அவர்கிட்ட சொல்லியிருப்பான் போல…. அது சரி அவன் முன்னாடி நீ எதுவும் தப்பா நடந்துக்கலியே?’’ கேட்டாள் கனிகா.
‘‘ரெண்டு நாளைக்கு முன்னாடி பசங்க கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க… அப்போ மணி அங்கிருந்திருக்கான் போல… அவன் உன் கசின்றது எனக்கு அப்போதான் என் பிரண்ட் சொல்லித்தான் தெரியும். என் பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணிட்டு இருந்ததை கேட்டு அவன் கேட்டுட்டு இருந்திருக்கான். என்னத்தை போட்டு குடுத்தானோ… பய ரொம்ப சென்சிடீவ்வா?’’
‘‘ஆமா… எங்க பேமிலி பொண்ணுங்க கிண்டலடிச்சு பேசிட்டு இருந்தா கூட சத்தம் போடுவான். ஒரு மாதிரி ரகுவரன் டைப். ஆனா, பார்த்தா ரொம்ப அமைதியா இருப்பான்’’
‘‘ஓ…. அது சரி உங்கப்பா என்ன சொன்னார்?’’
‘‘உன்னைப்பத்தி விசாரிச்சிட்டு முடிவெடுக்கிறாராம். அதனால எப்படியும் உன்னைப்பத்தி விசாரிக்க ஆரம்பிப்பார். மணிய நினைச்சாத்தான் கவலையா இருக்கு. அவன் ஏற்கனவே ஏடாகூடாமானவன். உன்னைப்பத்தி ஏதாவது இல்லாதது, பொல்லாதது சொல்லிடுவானானோன்னு பயமா இருக்கு…’’
‘‘அப்படியெல்லாம் சொல்ல மாட்டான்னு நினைக்கிறேன். அதைப்பத்தி கவலைப்படாதே’’
‘‘ஒருவேளை எங்கப்பா ஒத்துக்கிலைன்னா என்ன செய்றது?’’
‘‘என்ன செய்யறதுன்னா?’’
‘‘இல்லேப்பா… ஒருவேளை எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிலைன்னா என்ன செய்றதுன்னு கேட்டேன்’’
‘‘அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது’’
‘‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா, அதையும் மீறி ஏதாவது சிக்கல் வந்துட்டா என்ன பண்றதுன்னுதான் கேட்கிறேன்…’’
‘‘எங்க வீட்டுல அப்பா பெரிய அளவில எதிர்க்க மாட்டார்ன்னு நினைக்கிறேன். அப்படியே ஒருவேளை உங்க வீடடுல எதிர்ப்பு வந்தா…’’ என்று நிறுத்தினான்.
‘‘வந்தா…?’’ கேட்டாள் கனிகா.
‘‘வேற வழியில்ல நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்’’ என்றான் கவுசிக்.
‘‘ஒருவேளை என்னை வேற ஆளுக்கு கட்டிவச்சிட்டா?’’
‘‘அடிப்பாவி அப்படி ஒரு நினைப்பு இருக்கா?’’
‘‘இல்லப்பா… திடீரென்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதுதான் கேட்டேன்’’
‘‘அப்படி எதுவும் நடக்காது. அப்படியே நடக்கிற நிலைமை வந்தா…’’ என்று இழுத்தான்.
‘‘வந்தா…?’’
‘‘உன்னை கொன்னுடுவேன்’’ என்றான் கவுசிக்.
‘‘என்னப்பா இப்படி சொல்லிட்டே?’’
‘‘பின்னே… எனக்கு கிடைக்காம நீ வேறவனுக்கு கிடைக்க விட்டுடுவேணா…?’’
‘‘கேட்க சந்தோஷமாத்தான் இருக்கு… ஆனா… எந்த சிக்கலும் இல்லாம பெரியவங்க ஆசியோட நாம கல்யாணம் கட்டிட்டு சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்.
‘‘சரி…சரி… ரோசி வந்திட்டு இருக்கா… நான் அப்புறம் பேசுறேன்’’ என்று போன் இணைப்பை துண்டித்தான்.
அருகில் வந்த ரோசி, ‘‘என்ன கவுசிக் இப்பல்லாம்… ரொம்ப கடலை ஓடுது போல?’’ என்றாள்.
‘‘ஹீ…ஹீ…’’ என்று பொத்தாம் பொதுவாக சிரித்து வைத்தான். ராட்சசி எல்லாத்தையும் கண்டுபிடிச்சுடுவா.
மீண்டும் வேலையில் மூழ்கியவனை ஜான் தான் வந்து கூப்பிட்டான்.
‘‘மாப்பிள மணி நாலுடா… வா டீ சாப்பிட போலாம்’’ என்றான்.
இருவரும் எழுந்து டீ சாப்பிட சென்றனர்.
அங்கு சிவாவும், விஷ்ணுவும் ஏற்கனவே வந்திருந்தார்கள்.
அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்க, கவுசிக் தான் ஆரம்பித்தான். ‘‘ப்ரண்ட்ஸ் நம்ம சிவாவும், லாக் ஆயிட்டாப்பில… அதனால சண்டே எங்க ரெண்டு பேர் பார்ட்டி’’ என்றான்.
‘‘அப்படியா….?’’ என்று கோரசாக கேட்டனர் அனைவரும்.
‘‘நீங்க வேணா பாருங்க… நேத்து அவங்க பேசிக்கிட்ட மாதிரி சார் இன்னைக்கு புளூகலர் சர்ட்ல வந்திருக்கார்… அந்த சைடுல அம்மணியும் புளூகலர் சேரியில வந்திருப்பாங்க…’’ என்றான்.
‘‘டேய்… நாங்க பேசிக்கிட்டதை நீ எப்படா கேட்டே?’’ என்று கவுசிக்கிடம் கேட்டான், ஆச்சரியம் தாங்காமல் சிவா.
‘‘அதெல்லாம் எப்படியோ கேட்டுடுவோம்… இப்ப அது பிரச்னையில்ல… நான் சொன்னது சரியா?’’ என்றான் கவுசிக்.
காலை தரையில் கிண்டிக்கொண்டே, ‘‘ஆமாண்டா… மாப்பிள’’ என்றான் சிவா.
‘‘சரி… சரி… காலை வச்சு நோண்டாதே… கீழே அந்த தேங்க மண்டையன்தான் உட்கார்ந்திருக்கான்’’ என்றான் ஜான்.
எல்லோரும் கொல் என்று சிரித்தனர்.
சொன்னபடி அந்த பக்கத்தில் இருந்து, புளூகலர் சேலையில் வந்து கொண்டிருந்தாள் தேவி மற்றும் அவளது தோழிகள்.
பாரதிராஜா படத்தில் வரும் வெள்ளை நிற டிரஸ் அணிந்த தேவதைப் பெண்கள் சுற்றி நிற்க, தேவி மட்டும் நடுவில் தெரிந்து கொண்டிருந்தாள் சிவாவுக்கு.
‘‘மாப்பிள… ரொம்ப வழியுது…கொஞ்சம் துடைச்சுக்கோ…’’ என்றான் சிவாவிடம் விஷ்ணு.
யாரும் பார்க்காத நேரத்தில், தேவி சடாரென திரும்பி, சிவாவிடம் ஓகேயா என்பது போல் சேலையை காட்டி பார்வையாலேயே பேசினாள்.
சரி என்பது போல் தலையாட்டினான் சிவா.
முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தை உள்ளே செல்லாமல் அடம்பிடிப்பதுபோல் அங்கேயே நின்றிருந்த சிவாவை, இழுத்துக் கொண்டு சென்றனர் நண்பர்கள்.
(தொடரும் 14)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===============================================
ஒன் 4 த்ரீ – 15

மாலையில் பஸ்சுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் அட்மின் கிளர்க் வேலாயுதம் வந்து ஒவ்வொரு செக்ஷன் இன்சார்ஜிடமும், ‘‘இன்னைக்கு பஸ் பிரேக் டவுன் ஆகிடிச்சு… கடைசி நிமிடம் என்றதால மாற்று பஸ் ஏற்பாடு செய்ய முடியலன்னு, டிரான்ஸ்போர்ட் கம்பெனியில இருந்து மெசேஜ் வந்திருக்கு… அதனால எல்லோரும் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல தான் போகணும். உங்க ஸ்டாப் கிட்ட சொல்லிடுங்க…’’ என்று அறிவுறுத்திவிட்டு சென்றார்.
‘‘போச்சுடா… மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரங்களா?’’ என்று தகவல் கேள்விப்பட்டதும் அனைவரும் புலம்பினர்.
ஆறுமணி அளவில் எல்லோரும் அலுவலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் சமயம், கனிகாவும், தேவியும் இவர்கள் டெஸ்க் வழியாக சென்றனர். போகும்போது, ‘‘கிளம்பலயா?’’ என்று சிவாவை பார்த்து கேட்டாள் தேவி. கனிகா, அதை பார்வையாலேயே, கவுசிக்கிடம் கேட்டாள்.
‘‘இதோ…’’ என்று எழுந்த சிவா. ‘‘என்ன மாப்பிள… நீங்க கெளம்பலியா? நான் முன்னாடி போகட்டுமா?’’ என்று கவுசிக்கிடம் கேட்டான் .
‘‘டேய் இருடா ஷட் டவுன் ஆயிட்டு இருக்கில்ல…’’ என்றான் கவுசிக்.
‘‘அதுபாட்டு ஆயிட்டு போகுது நீ கெளம்புடா… அவங்க போய்ட்டு இருக்காங்கல்ல…’’ என்று கவுசிக்கின் கம்ப்யூட்டர் சுவிட்சை ஷட் டவுன் ஆவதற்கு முன்பு ஆப் செய்தான் சிவா.
இருவரும் கிளம்பினர்.
பஸ் ஸ்டாப்பில் அன்று கூட்டம் சற்று ஜாஸ்தியாகவே இருந்தது.
‘‘மாப்பிள நாம ஏன் ஓலாவ புக் பண்ணக்கூடாது’’ என்று கேட்டான் சிவா.
‘‘மடையா… ஓலாவில எப்படி பேசிக்கிட்டு போக முடியும்? லூசாப்பா… நீ…’’ என்றான் கவுசிக்.
‘‘ஓ… நீ அந்த ரூட்டுக்கு வாரியா? சரி அப்போ பஸ்சிலேயே போவோம். வா… வா… என்றவாறு கனிகா மற்றும் தேவியின் பின்னால் நடந்தனர்.
‘‘ஏன் கனிகா… ஒரு காபி சாப்பிட்டு போனா என்ன?’’ என்றான் கவுசிக்.
‘‘ஓ… சாப்பிடலாமே!’’ என்று கனிகாவை முந்திக் கொண்டு பதில் சொன்னாள் தேவி.
நான்கு பேரும் அருகில் இருந்த காப்பி ஷாப்புக்கு சென்றனர். ஜோடியாக முன்புறம், பின்புறம் உட்கார்ந்து கொண்டனர்.
கப்பசீனாவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தனர்.
‘‘தேவி இன்னைக்கு நீங்க… ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றான் சிவா.
‘‘ம்ம்ம்… நீங்களும் தான்… அப்புறம் நீங்க, வாங்க, போங்க… எல்லாம் வேணாம் சரியா?’’ என்றாள் தேவி.
புரோட்டா சூரி மாதிரி, அஷ்டகோணலாக சிரித்துக் கொண்டே, ‘‘சரிடா செல்லம்’’ என்றான் சிவா.
பேரர் காபியை கொண்டு வந்து வைத்தான்.
கவுசிக் காபியை எடுத்துக் குடித்துக் கொண்டே, ‘‘என்ன கனிகா… ரொம்ப மவுனமா இருக்கிற மாதிரி இருக்கு?’’ என்றான்.
‘‘மனசில ஏதோ ஒரு பயமா இருக்கு… எங்கப்பா நம்மள வாட்ச் பண்ண ஆள அனுப்பி இருப்பாரோன்னு டவுட்டா இருக்கு’’ என்றார் கனிகா.
‘‘அனுப்பினா அனுப்பிட்டு போகட்டுமே, அதுக்காக ஏன் பயப்படுறே…?’’ என்றான் கவுசிக்.
‘‘அப்படியில்ல அவர் பார்வையில நீங்க நல்லவரா தெரியணும். நம்ம கல்யாணத்துக்கு அவர் சம்மதிக்கணும்… அதுதான்’’ என்றாள்.
எவ்வளவோ தேற்றியும் கனிகாவின் மனநிலை மாறுவது போன்று தெரியவில்லை.
இதையடுத்து இருவரும் பஸ் ஸ்டாப்புக்கு செல்ல எழுந்தனர்.
அந்தப்பக்கத்தில் இருந்த சிவா, இவர்கள் எழுந்ததை பாரத்து, ‘‘ஏண்டா அவசரம்… உட்கார்டா. இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்’’ என்று மெதுவாக கையைப் பிடித்து இழுத்தான்.
ஆனால் கவுசிக், ‘‘நீ வேணா பேசிட்டு வா… நாங்க முன்னாடி போறோம்’’ என்றான்.
அவர்களை அனுப்ப மனமின்றி, சிவாவும், தேவியும் கூட எழுந்து அவர்களுடன் பஸ் ஸ்டாப்புக்கு நடந்தனர்.
பஸ் ஸ்டாப்பில் இன்னமும் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை.
சரி என்று நிற்க ஆரம்பித்தனர்.
கனிகாவும், தேவியும், பெண்கள் பகுதிக்கு சென்று நின்றுக் கொண்டனர்.
அங்கு வந்த 1ஏ பஸ்சில் கூட்டம் சற்று இருந்தாலும், நேரமாகிவிடும் என்பதால் அதிலேயே ஏறிக் கொண்டனர்.
கூட்டத்தை தள்ளிக்கொண்டு உள்ள வந்தனர். கவுசிக்கும், சிவாவும். ஆனால், முன்புறம் ஏறிய கனிகாவும், தேவியும், உள்ள வர முடியாமல், டிரைவர் சீட்டுக்கு இடது பக்கம் இருந்த இடத்துக்கு முன்னேறினர்.
பஸ் நகர ஆரம்பித்தது.
பெண்கள் பகுதியில் ஒரு ஆள் உட்கார்ந்திருந்தார்.
யாரையும் அவர் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
அவர் அருகில் அலுவலக பெண்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்துக் கொண்டிருந்த கவுசிக்கு சற்று கோபம் வந்தது. ஆனால், அவராக எழுந்திருந்தால் நல்லது என்று பார்த்தான். அவர் எதையும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
சற்று முன்னேறி அவருக்கு பக்கவாட்டில் நின்றுக் கொண்டான் கவுசிக்.
தனக்கு வந்த கோபத்தில், அவருக்கு முதுகை காட்டிக் கொண்டே சிவாவுடன் பேசுவது போல் நின்றுக் கொண்டு வேண்டுமென்றே அந்த நபரின் காலை மிதித்தான் கவுசிக்.
அந்த நபர் காலை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டார்.
பொறுத்து, பொறுத்து வேறு வழியில்லாததால், ‘‘யோவ் பெருசு… பொம்பளைங்க எல்லாம் நிக்கிறாங்கல்ல… நீங்க பொம்பளைங்க சைடுல போய் உட்கார்ந்திருக்கீங்க… எந்திரிச்சு அவங்களுக்கு இடம் குடுங்க’’ என்றான் சற்று கோபத்துடன்.
அவர் முறைத்துக் கொண்டே எழுந்து நின்றுக் கொண்டார்.
அதன்பின்னர்தான் கவுசிக் நிம்மதி அடைந்தான். அதையடுத்து அதைப்பற்றி மறந்து, பஸ்சில் இருந்த சிவா மற்றும் நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட ஆரம்பித்தான். அங்கிருந்த தங்கள் அலுவலக பெண்களையும் கிண்டலடித்துக் கொண்டே வந்தனர்.
பஸ், டிவிஎஸ் சர்வீஸ் ஸ்டாப்புக்கு வந்தபோதுதான் கனிகா இறங்குகிறாளா என்று கவுசிக் எட்டிப்பார்த்தான்.
கனிகா இறங்கி, தன்னைப் பார்க்காமல் விறுவிறுவென்று நடந்து செல்வதை பார்த்ததும், கவுசிக்குக்கு அதிர்ச்சியாக இருந்தது.
கனிகா வேகமாக சென்று பின் வாசல் வழியாக இறங்கி நின்றிருந்த நபரிடம் அப்பா என்று கையை பிடித்துக் கொண்டாள்.
அவர்… பெண்கள் சீட்டில் அமர்ந்திருந்த நபர்.
நெற்றியில் அடித்துக் கொண்டான் கவுசிக்.
(தொடரும் 15)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===============================

ஒன் 4 த்ரீ – 16

அது கனிகாவின் அப்பா என்பது, அவள் சென்று கையை பிடித்தபின்னர் தான் கவுசிக்குக்கு தெரிய வந்தது. நொந்து நூடுல்ஸ் ஆனான்.
மனதில் இனம் புரியாத ஒரு பயம் உருவானது. ‘‘சே… நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’’ என்று நினைத்துக் கொண்டான்.
மாலையில் வீட்டுக்கு சென்று, கனிகாவிடம் இருந்து போன் வருமா என்று தவித்துக் கொண்டிருந்தான்.
எட்டு மணிக்கு போன் கனிகாவிடம் இருந்து போன் வந்தது.
பெயரை பார்த்தவுடன் உடனே எடுத்தான்.
‘‘ஹலோ…’’ என்றான்.
‘‘ம்… நான் தான் பேசுறேன்’’ என்றாள் கனிகா.
‘‘இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?’’ என்றான் கவுசிக்.
‘‘தெரியலையே… நான்தான் முன்னாடி இருந்தேனே…’’ என்றாள் கனிகா.
‘‘உங்கப்பா காலை வேணும்னே மிதிச்சுட்டேன்…. அப்புறம்….’’ என்று இழுத்தான் கவுசிக்.
‘‘ஐய்யய்யோ… அப்புறம் என்ன ஆச்சு?’’ என்றாள் கனிகா.
‘‘அவர் உங்கப்பான்னு எனக்கு என்ன தெரியும். அவர் லேடீஸ் சீட்ல உட்கார்ந்துட்டு எழுந்திருக்காம இருந்ததால கடுப்பாகி மிதிச்சுட்டேன்’’ என்றான் கவுசிக்.
‘‘அடப்பாவி… அவர் இடுப்பு வலியால அவதிப்படுற மனுஷன். அதனால நிக்க முடியாது. இடம் கிடைச்ச உடனே, அது பெண்கள் சீட்டா, ஆண்கள் சீட்டான்னு பார்க்காம உட்கார்ந்திருப்பாரு’’ என்றாள் கனிகா.
இப்போது கவுசிக், ‘‘ஐய்யய்யோ…’’ என்றான்.
‘‘சரி அப்புறம் என்ன ஆச்சு….?’’ என்று கேட்டாள் கனிகா.
‘‘அப்புறம் அவரை லேசா சத்தம் போட்டு வேற எந்திரிக்க வச்சேன்’’ என்றான் கவுசிக்.
‘‘அடப்பாவி… உங்கப்பாவ இருந்தா இப்படி பண்ணியிருப்பீயா?’’ என்று கேட்டாள் கனிகா.
‘‘லூசு… அவர் உங்கப்பான்னு எனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவர் கைபிடிச்ச பின்னாடித்தான் அவர் உங்கப்பான்றதே எனக்கு தெரியும். வீட்டுல வந்து ஏதாவது சொன்னாரா… இன்னைக்குன்னு பார்த்து கம்பெனி பஸ் கோளாறு ஆகிப்போச்சு பாரு… கம்பெனி பஸ் வந்திருந்தா இந்த பிரச்னையே வந்திருக்காது’’ என்று நொந்து கொண்டான் கவுசிக்.
‘‘அப்பா வீட்டுல எதுவும் சொல்லல… ஆனா கோபமா இருந்தார். இப்பத்தான் தெரியுது… அதுக்கு காரணம் நீதான்னு…’’ என்றான் கனிகா.
‘‘ஏதாவது பிரச்னை வருமோ…’’ என்றான் கவலைதோய்ந்த குரலில்.
‘‘உன் மேல கோபாம இருந்தார்னு நினைக்கிறேன்… அப்புறம் இன்னொரு நல்ல விஷயம்… நான் எங்க சித்தி வீட்டுக்கு வந்திருக்கிறேன். எங்க சித்தி கொஞ்சம் மாடர்ன் டைப். அவங்கக்கிட்ட உன்னைப்பத்தி சொன்னேன். அவங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கு… ஒரு நாள் வீ்ட்டுக்கு வரச் சொல்றாங்க…’’ என்றாள் கனிகா.
‘‘அடிப்பாவி நீ ரொம்ப பாஸ்ட்… அதுக்குள்ள சப்போர்ட்டுக்கு ஆள சேர்த்துட்டே… நான் இன்னமும் ஆரம்பிக்கவே இல்ல’’ என்றான் கவுசிக்.
‘‘சரி சித்தி உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க… இரு அவங்கக்கிட்ட கொடுக்கிறேன் பேசு…’’ என்றாள் கனிகா.
மறுத்து பேச வாய் எடுப்பதற்குள், மறுமுனையில் நடுத்தர வயது பெண் ஒருவரின் குரல், ‘‘ஹலோ…’’ என்று கேட்டது.
‘‘ஹலோ ஆன்ட்டி… நான் கவுசிக் பேசுறேன்’’ என்றான்.
‘‘தம்பீ… நான் கனிகாவோட சித்தி சிவகாமி. அவ எல்லாத்தையும் சொன்னா… உங்க வீட்டுல ஒத்துக்குவாங்களா?’’ என்று கேட்டார்.
‘‘ஆன்ட்டி கட்டாயம் ஒத்துப்பாங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு… உங்களுக்கு விசாலமான மனசு ஆன்ட்டி… உடனே எங்க லவ்வ ஏத்துக்கிட்டீங்க… முதல்ல அதுக்காக உங்களுக்கு எங்களோட தேங்க்ஸ்’’ என்றான் கவுசிக்.
‘‘அதெல்லாம் இருக்கட்டும் தம்பீ… எங்க கனிகா நல்லாயிருக்கணும். அது போதும் எங்களுக்கு. ஒரு நாள் வீட்டுக்கு வாங்க… இருங்க போன கனிகாகிட்ட குடுக்கிறேன்’’ என்றார் சிவகாமி.
ஒரு சில விநாடி இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கனிகா லைனில் வந்தாள்.
‘‘என்ன சார்… எங்க சித்திக்கிட்ட பேசினீங்களா? என்ன சொன்னாங்க?’’ என்று கேட்டாள்.
‘‘உங்க சித்தி ரொம்ப நல்ல டைப்பா இருக்காங்க… அவங்க நம்ம லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க நினைக்கிறேன்’’ என்றான் கவுசிக்.
‘‘நினைக்கிறது என்ன… கட்டாயம் அவங்க நம்ம லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க…’’ என்றாள் கனிகா.
‘‘சரி நான் வீட்டுக்கு கிளம்பணும்… அப்பா என்ன சொல்லப்போறாரோன்னு பயமா இருக்கு… நான் நினைச்சது சரியாப்போச்சா… அவர் நம்மள பார்க்கிறது… சாரி உன்னைப் பத்தி விசாரிக்கிறது வர்றேன்னு சொல்லியிருந்தான்னு சொல்லிட்டே இருந்தேனே… ஆனா… அவர் இன்னைக்கே வருவார்ன்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல… நான் இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்…’’ என்று புலம்பினாள் கனிகா.
‘‘கடவுள்மேல பாரத்தை போடுவோம்… நல்லதே நடக்கும்… குட்நைட் டார்லிங்… நீ வீட்டுக்கு கிளம்பு. காலையில ஆபிஸ்ல பார்க்கலாம்’’ என்றான் கவுசிக்.
‘‘சரி நான் போனை வச்சிடுறேன்’’ என்றாள் கனிகா.
இணைப்பு துண்டித்தவுடன் மீண்டும் யோசனையில் மூழ்க ஆரம்பித்தான்.
கனிகா வீட்டிற்கு வரும்போது மணி 9 மணி ஆகிவிட்டிருந்தது.
ஸ்கூட்டியை வீட்டில் நிறுத்தியபோது அங்கு ஒரு பைக் நின்றிருந்தது. அது மணியின் பைக் என்பதை அதன் நம்பரை பார்த்து தெரிந்து கொண்டாள் கனிகா.
‘‘ஐய்யய்யோ… கிரகம் வந்திருக்கே… என்ன போட்டுக் குடுத்திட்டு இருக்கப்போகுதோ…’’ என்று கவலையுடன் உள்ளே நுழைந்தாள்.
அவள் எதிர்பார்த்தபோலவே, மணியை சோபாவில் அமர வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் ராகவன்.
கனிகா உள்ளே நுழைந்தவுடன் இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.
‘‘ஹாய் கனிகா…’’ என்றான் மணி.
ஒரு சின்ன புன்முறுவலை பூத்துவிட்டு, கவலைதோய்ந்த முகத்துடன் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கனிகா.
(தொடரும் 16)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
=======================================
ஒன் 4 த்ரீ – பாகம் 17
கீழே அப்பாவிடம் மணி பேசிக் கொண்டிருந்ததால், சற்று டென்ஷனாகவே இருந்தாள் கனிகா.
இந்த மணி நல்லவன் இல்லை. ஆனால், நல்லவன் போல் முகத்தை வைத்திருப்பவன். இவனா இந்த வேலை செய்தான் என்பதுபோல் இருக்கும் அவனதுசெயல்கள். சிறுவயதில் இருந்து அவனை பார்த்தது தானே. அதனால்தான் என்னவோ, அவனைக் கண்டாலே பிடிப்பதில்லை. ஆனால், அப்பாவுக்கு மட்டும் அவனை பிடிக்கும். ஏனெனில், அவர் சொல்லும் எல்லாவற்றுக்கும் வேண்டுமென்றே ஆமாம் போடு, போட்டு நல்ல பெயர் வாங்கிக் கொள்பவன்.
இப்போது அப்பாவிடம் என்ன போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறானோ என்று ஒரே கவலையாக இருந்தது கனிகாவுக்கு.
சிறிது நேரத்துக்கு பின்னர் அப்பா கீழே கூப்பிட்டார்.
சரி, சாப்பிடத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து கீழே போனாள். ஆனால், அங்கு அப்பா சோபாவில் உட்கார்ந்திருந்தார். மணியை காணவில்லை. வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பியிருப்பான் போல்.
‘‘என்னப்பா…’’ என்றாள் அவருக்கு அருகில் சென்று.
‘‘இங்கே வாம்மா…’’ என்று தன் அருகில் அமரச் செய்தார்.
‘‘கனிகா… இன்னைக்கு உங்க ஆபிஸ் பக்கம் வந்திருந்தேன்’’ என்று நிறுத்தினார் ராகவன்.
‘‘அப்படியாப்பா… ஓ… அதனாலத்தான் நான் வந்த பஸ்சிலேயே வந்தீங்களா?’’ என்று தெரியாததுபோல் கேட்டாள்.
‘‘ஆமா… அப்படியே அந்த வழியா வந்த பஸ்சில வந்தேன். ஆமா… நீ ஏன்… டவுன் பஸ்சில வந்தே?’’ என்று கேட்டார்.
‘‘இன்னைக்கு கம்பெனி பஸ் கடைசி நிமிடத்தில பிரேக் டவுன் பா… அதனால பப்ளிக் வேகிளை யூஸ் பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்கண்ணு… பஸ்சில வந்தேன்பா…’’ என்றாள் கனிகா.
‘‘நான் வந்த பஸ்சிலத்தான் மணியும் வந்தான்…’’ என்றாள் ராகவன்.
‘‘ஓ… (அந்த சனியனும் வந்தானா… என்று மனதில் நினைத்துக் கொண்டாள்) அப்படியாப்பா…?’’ என்றாள் கனிகா.
‘‘அவன்தான் உன்னோட வேலை பார்க்கற கவுசிக்கை காட்டினான்’’ என்று நிறுத்தினார்.
‘‘சூப்பர்பா… கவுசிக்கை பார்த்தீங்களா? எப்படி இருக்கிறார்பா’’ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.
‘‘சாரிம்மா… அவன் ரொம்ப மோசமான ஆளா இருக்கிறான். ஒரு பெரிய மனுஷன் கூட பார்க்காம… வேணுமின்னே என் காலை மிதிச்சான் தெரியுமா? அது மட்டுமில்ல… என்னம்மா கண்ணபரமாத்மா நினைப்பில பெண்களுக்காக என்னை வேணும்னு எந்திரிக்க வச்சான்’’ என்றார்.
‘‘பாவி கவுசிக் கரெக்டா இவர் காலைத்தான் மிதிக்கணுமா?’’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் கனிகா. ஆனாலும், ‘‘அப்பா உங்களை அவருக்கு தெரியாது இல்லப்பா… அதனால தெரியாம மிதிச்சிருக்கலாம்’’ என்றாள்.
‘‘இல்ல எனக்கு நல்லா தெரியும். அவன் வேணும்னே என்னை மிதிச்சான். அப்புறம் நான் உட்கார்ந்திருந்த சீட்ல இருந்து எழுந்திருக்க வச்சான்’’ என்றார் ராகவன்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவரது முகத்தை பார்த்தாள் கனிகா.
‘‘அப்புறம் அவன் நல்லவன் இல்லமா… மணி சொன்னான்… அந்த பையன் பெரிய பெண் பித்தனா இருப்பான் போல… அதை அவன் வாயால சொல்லியிருக்கான். ஒரு நாள் உங்க ஆபிஸ் கேண்டீன்ல அவன் தன் பிரண்ட்சுங்க கிட்ட இதை சொல்லியிருக்கான். ஏதோ பெரிய கிருஷ்ணன்னு நினைப்பு அவனுக்கு. இவன் கெட்ட கேட்டுக்கு பட்டியல் போட்டு சொல்லியிருக்கான். இத்தனை பேர் தன்னை காதலிச்சதா அவன் சொல்லியிருக்கான். அதை நம்ம மணியும் கேட்டிருக்கான்’’ என்றார் ராகவன்.
‘‘அட…டா… சரியா மாட்டியிருக்கானே…’’ என்று நினைத்துக் கொண்டாள் கனிகா.
பேசாமல் தந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘ஒருத்தன் தன் வாயாலேயே சொல்றான்னா… அத எப்படி நம்பாம இருக்க முடியும்?’’ என்றார் ராகவன்.
‘‘அப்பா… மணி வேணும்னு ஏதாவது சொல்லியிருக்கலாம்ல… நீங்க நல்லா விசாரிச்சு பாருங்கப்பா… அவர் எவ்வளவு நல்லவர்னு தெரியும்’’ என்றாள் கனிகா.
‘‘உனக்கு காதல் கண்ணை மறைக்குது… இருந்தாலும் பரவாயில்லை. என் மகளுக்காக நான் இன்னொரு முறையும் விசாரிக்க தயங்க மாட்டேன்’’ என்று கூறினார் ராகவன்.
அதற்குள் உள்ளே இருந்து, ‘‘தோசை ரெடி’’ என்று குரல் வந்தது அவளது அம்மாவிடம் இருந்து.
இருவரும் எழுந்து உள்ளே சென்றனர்.
சாப்பிடும் வரையில் இருவரும், எதையும் பேசிக் கொள்ளவில்லை.
சாப்பிட்டு மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்தபோது, ராகவன் தான் ஆரம்பித்தார்.
‘‘நான் என் டிடெக்டீவ் பிரண்ட்டுக்கிட்ட சொல்லி, அந்த பையனை விசாரிக்க சொல்றேன்… அதுலயும் தப்பான தகவல் வந்தா… சாரி… நீ அவனை மறக்க வேண்டியிருக்கும்’’ என்றார் சற்று கோபத்துடன்.
‘‘அப்பா… நீங்க நல்லா விசாரித்து முடிவெடுங்க…’’ என்றாள் கனிகா.
மகளை பார்த்துக் கொண்டிருந்த ராகவன், டிவி ரிமோட்டை எடுத்து சீரியல் பார்க்க ஆரம்பித்தார்.
விட்டால்போதும் என்று அங்கிருந்து தன்னுடைய அறைக்கு திரும்பினாள் கனிகா.
வந்தவுடன் போனை எடுத்து கவுசிக்கு போட்டாள். மறுமுனையில் சில விநாடிகளில் இணைப்பு கிடைத்தது.
‘‘ஹலோ… சொல்லு கனிகா’’ என்றான் கவுசிக்.
‘‘என்னத்தை சொல்றது… அந்த சனி இங்கே வந்து உட்கார்ந்துட்டு நீ உன் பிரண்ட்ஸ்கள்கிட்ட பேசினதை எல்லாம் எங்கப்பாக்கிட்ட சொல்லிடுச்சு’’ என்றாள் கனிகா.
‘‘என்ன சொல்லுற?... ஒண்ணும் புரியலையே?’’ என்றான் கவுசிக்.
நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் கவுசிக்கிடம் கூறினாள் கனிகா.
‘‘அடப்பாவி… அந்த மணிப்பயல பார்த்தா… ரொம்ப அமைதியானவன் மாதிரி தெரிஞ்சானே… அன்னைக்கே என் பிரண்ட் அவன் ஒட்டுகேட்டுட்டு நின்னதை பார்த்துட்டு எங்கிட்ட சொன்னான். நான் தான் சாதாரணமாக எடுத்துக்கிட்டேன்… நான் வேணா என் பிரண்ட்ஸ்கள்கிட்ட சொல்லி அவனை ரெண்டு தட்டு தட்டி வைக்கச் சொல்லவா?’’ கேட்டான் கவுசிக்.
‘‘யப்பா… சாமீ… இருக்கிற பிரச்னையே போதும்… நீ வேற ஏடாகூடாம எதையாவது செஞ்சு வைக்காதே… கொஞ்ச நாள் நல்ல பிள்ளையா அமைதியா இரு… அதுபோதும்’’ என்றாள் கனிகா.
‘‘அப்போ நான் என்ன ரவுடியா?’’ என்றான் கவுசிக்.
‘‘சரி அத உடு… அது என்ன… உன்ன நிறைய பேர் காதலிச்சாங்களாமே… நீ உன் பிரண்ட்ஸ்கள் கிட்ட சொன்னீயாமே?’’ என்றாள் கனிகா.
‘‘ஆமா… ஐயா… யாரு தெரியும்ல…’’ என்றான் கவுசிக்.
‘‘இப்படி வெட்டிப்பேச்சு… பேசிதான், இன்னைக்கு மாட்டியிருக்கே… அதனால கொஞ்ச நாள் நல்ல பிள்ளையா இரு… சரியா?’’ என்றாள் கனிகா.
‘‘சரிங்க மேடம்… நீங்க என்ன சொல்றீங்களோ, அதைச் செய்றேன்’’ என்றான் கவுசிக்.
அந்தப்பக்கம் மெல்லிய சிரிப்பொலி கேட்டது.
(தொடரும் 17)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===================================================

ஒன் 4 த்ரீ – பாகம் 18
காலையில் எழுந்ததில் இருந்தே அம்மா, கறி வாங்கி வருமாறு கூறிக்கொண்டிருந்தாள்.
எப்போது இதுபோன்ற வேலைக்கு அப்பாதான் செல்வது வழக்கம்.
இன்று அவர் வெளியே போய் இருந்தார். இதனால் வேறு வழியின்றி கவுசிக்கிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வேறு வழியில்லாமல் படுக்கையை விட்டு எழுந்து மணியை பார்த்தான். 10 காட்டியது அது. முகம் கழுவிக் கொண்டு பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டான்.
பாய்க்கடையில் கறி வாங்கிக் கொண்டு, பையை பைக்கில் மாட்டியபோது, முதுகில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.
வந்த கடுப்பில் அப்படியே திருப்பி அடிப்பதற்கு திரும்பினான்.
பின்னால் சம்பந்தமில்லாத ஒரு ஆள் நின்றிருந்தார்.
கவுசிக் திரும்பியதும், ‘‘ஓ… சாரி சார்… என் பிரண்டுன்னு நினைச்சிட்டேன்’’ என்றான் அந்த ஆள்.
சாதாரணமாக சிரித்தார் அந்த நபர்.
ஆனால், கவுசிக்குக்குத்தான் பற்றிக் கொண்டு வந்தது.
‘‘ஹலோ என்ன, யாருன்னு கூட பார்க்காம அடிப்பீங்க… நான் ஒரு அறை அறையட்டுமா?’’ என்று கடுப்பாகி கையை ஓங்கினான்.
வழக்கமாக அந்த கடையில்தான் தெரிந்தவர்கள் எல்லோரும் கறி வாங்குவார்கள் என்பார்கள், கவுசிக் ஒருவருடன் கோபமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும், அருகில் வந்து, ‘‘என்னப்பா பிரச்னை?’’ என்றார்கள்.
நடந்ததை கூறினான்.
அதற்குள் அந்த நபர், ‘‘பாஸ் கோபப்படாதீங்க… நான் என் பிரண்டுன்னு நினைச்சுதான் தட்டினேன். வேணும்னா ரெண்டு அடிகூட அடிச்சுக்கோங்க…’’ என்று கவுசிக்கின் கையை பிடித்தான்.
ஆனால், அந்த நபரின் கையில் இருந்து, வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டான் கவுசிக்.
‘‘ஏன்யா… பார்த்தா ஏரியாவுக்கு புது ஆள் மாதிரி இருக்க… யாருன்னு பார்க்காம கையை வைப்பியா? சாரி கேட்டு நடைய கட்டுய்யா’’ என்றார் பெரியவர் ஒருவர்.
‘‘அததானே சார் இவ்வளவு நேரமா கேட்டுட்டு இருக்கேன்’’ என்று அந்த ஆள் கூறினான்.
கவுசிக் குடும்பத்துக்கு தெரிந்த அந்த பெரியவர், ‘‘கவுசிக் நீ போப்பா… சில மொள்ள மாரிங்க இப்படித்தான்’’ என்று அந்த ஆளைப்பார்த்து கூறினார்.
கவுசிக் டக்கென்று பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சந்துமுனையில் திரும்பும்போது திடீரென அனிச்சையாக திரும்பி பார்த்தான். அந்த ஆள் இன்னமும் அங்கேயே நின்றிருந்தான். அது மட்டுமின்றி கவுசிக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘இவனைப் பார்த்தால் சரியில்லையே…’’ என்று மனதில் ஏனோ தோன்றியது.
ஆனால், தேவையில்லாமல் சந்தேகப்படாதே என்று மனதின் இன்னொரு பகுதி கூறியது.
வீட்டுக்கு திரும்பி குளித்து முடித்துவிட்டு, ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், கனிகாவிடம் இருந்து போன் வந்தது.
‘‘ என்ன பண்ணிட்டு இருக்க?’’  என்றாள் கனிகா.
‘‘பொழுதுபோகல டிவி பார்த்துட்டு இருக்கேன். அது சரி நீ எதுக்கு போன் பண்ண?’’ என்றான் கவுசிக்.
‘‘ஏன் பண்ணக்கூடாதா?’’ என்று கேட்டாள் கனிகா.
‘‘அப்படியில்ல செல்லம்… நீ எப்ப வேணும்னாலும் பண்ணலாம். அதுக்கு உனக்கு 108 சதவீதம் உரிமை இருக்கு. ஆனா, என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேட்டேன்’’ என்றான்.
‘‘ஒண்ணு 100 சதவீதம் சொல்லுவாங்க… இல்லாட்டி 100 மடங்குல சொல்லுவாங்க… அது என்ன 108 சதவீதம்?’’ கேட்டாள் கனிகா.
‘‘ஒரு நாம ஜெபம்மாதிரின்னு வச்சுக்கோயேன்… எல்லாத்துக்கும் விளக்கம்கேட்டா நான் என்ன பண்ணுவேன். ஜோக் சொன்னா ரசிக்கணும். லாஜிக் கேட்கக்கூடாது’’ என்றான் கவுசிக்.
‘‘ஓ… அப்போ நீங்க சொன்னது ஜோக்கா?’’ என்றாள் கனிகா.
‘‘அடிப்பாவி… முடியல… விட்டுடு அழுதுவேன்’’ அழுவதுபோல் கூறினான் கவுசிக்.
‘‘அப்படி வா வழிக்கு…’’ என்று சிரித்தாள் கனிகா.
‘‘சரி நீ என்ன பண்ணிட்டு இருக்கே?’’ கேட்டான் கவுசிக்.
‘‘நானும் பொழுதுபோகாம உன்ன மாதிரிதான் சும்மா உட்கார்ந்துட்டு இருக்கேன். உன்ன பார்க்கணும்போல இருந்தது, அதுதான் கூப்பிட்டேன்’’ என்று வெட்கத்துடன் கூறினாள் கனிகா.
‘‘அடிப்பாவி இத மொதல்ல சொல்லியிருந்தா… இந்நேரம் பேன்ட் போட்டு ரெடியாயிருப்பேன்ல…’’ என்றான் கவுசிக்.
‘‘கவுசிக் அப்பா வெளியே போயிருக்கார்… நீ வீட்டுக்கு முன்னாடி இருக்கிற பெட்டிக்கடைக்கு வந்துட்டு போன் பண்ணு… நான் வாசலுக்கு வர்றேன்’’ என்றாள் கனிகா.
‘‘அதவிட வேற வேலை என்ன இருக்கு… இதோ கெளம்பிட்டேன் டார்லிங்...’’ என்று போனை கட் செய்தான் கவுசிக்.
அடுத்த 5 நிமிடத்தில் பேன்ட்டு போட்டுக் கொண்டு ரெடியானான் கவுசிக்.
‘‘டேய் கவுசிக் இன்னைக்கு லீவுன்னு சொன்னே எங்கே கௌம்பிட்டே?’’ என்று கேட்டாள் அம்மா  சவுந்தர்யா.
‘‘என் பிரண்ட் ஊருல இருந்து வந்திருக்கானாம்மா… பார்த்துட்டு வந்துடுறேன்… ஒரு அரைமணி நேரத்தில வந்துடுவேன்’’ என்றான் கவுசிக்.
‘‘சரி பத்திரமா போய்ட்டு வாப்பா’’ என்றாள் சவுந்தர்யா.
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று இருக்கும் கவுசிக் மீது சவுந்தர்யா மட்டுமல்ல, அவளது கணவர் சுந்தரலிங்கத்துக்கும் பாசம் அதிகம். இதேபோல் சவுந்தர்யாவின் குடும்பத்திலும் அவனை இளவரசனாகவே பாவித்தனர். குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால், அந்த கவுரவம் அவனுக்கு கிடைத்திருந்தது. மாமன்மார்கள் எல்லாம் போட்டிபோட்டு அவனை கவனிப்பது சவுந்தர்யாவுக்கு பெருமையாக இருக்கும். விரைவில் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதுதான் சவுந்தர்யாவின் எண்ணம்.
கவுசிக்கின் வருமானத்தில், அவன் குடும்பம் இல்லை. ஆனால், பிள்ளைக்கு பொறுப்பாக ஒரு வேலை வேண்டும் என்பதால்தான் அவனை வேலைக்கு அனுப்பியிருந்தார்கள்.
கவுசிக் வெளியே சென்றவுடன், அவனது திருமண விஷயமாக பேசலாம் என்று தந்தைக்கு போன் செய்ய போனாள் சவுந்தர்யா.
வீட்டில் இருந்து கிளம்பிய அடுத்த 15 நிமிடத்தில் சவுந்தர்யா வீட்டின் முன் உள்ள பெட்டிக் கடைக்கு சென்றுவிட்டான்.
பைக்கை நிறுத்திவிட்டு, கடையில் கோக் ஒன்றை வாங்கி குடிக்க ஆரம்பித்தான்.
எதிர்வீட்டில் இருந்து கனிகா வெளியே வந்து நின்றாள். ரோட்டில் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், மெதுவாக ஹாய் என்பதுதான் கையை ஆட்டினாள்.
கோக் குடித்துக் கொண்டிருந்த கவுசிக் புன்முறுவல் பூத்தான்.
திடீரென காற்று வேகமாக அடித்ததில் புழுதியும் சேர்ந்து பறந்து, கவுசிக்கின் கண்ணில் விழுந்தது.
கண்ணை துடைத்துக் கொண்டு எதிர்வீட்டை பார்த்தான். அங்கு கனிகா இல்லை.
ஆனால், அவன் முன்பு திடீரென அவளது அப்பா வந்து நின்று முறைத்தார்.
(தொடரும் 18)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==========================================
ஒன் 4 த்ரீ – பாகம் 19

அந்த இடத்தில் கனிகாவின் அப்பாவை பார்த்தவுடன் வெலவெலத்து போனான் கவுசிக்.
வாயில் ஊற்றிக்கொண்ட கோக், தொண்டையில் புரையை ஏற்றியது.
தனக்கு தானே தலையில் தட்டிக் கொண்டு அந்தப்பக்கம் திரும்பி குடிக்க ஆரம்பித்தான்.
கனிகாவின் அப்பா, அவனை பார்த்தபடியே கடையில் வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டுபோனார். போகும்போதும் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே போவதை ஓரக்கண்ணால் கவனிக்க தவறவில்லை கவுசிக்.
விறுவிறுவென்று கோக்கை குடித்துவிட்டு, கடையில் காசை கொடுத்துவிட்டு, பைக்கை எடுத்து கிளம்பினான்.
வீடு, வந்து சேர்ந்த பின்னர்தான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
கனிகாவிடம் இருந்து போன் வருமா என்று பார்த்தான் வரவில்லை. பின்னர் அப்படியே அதை மறந்து போனான்.
மறுநாள்.
அன்றும் அலுவலக விடுமுறை தினம்.
ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை என்பதுபோல் இதுபோன்று அபூர்வமாக விடுமுறை நாட்கள் சேர்ந்து வரும்.
இன்று எப்படியும் கனிகா கோயிலுக்கு போவாள். அவளுக்கு தெரியாமல் அவளைப்போய் பார்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டான்.
சிவாவுக்கு போன் செய்து விஷயத்தை கூறி, எப்படி போய் பார்க்கலாம் என்று அவனிடம் உதவிக்கேட்டான்.
‘‘இது என்ன பெரிய விஷயமா…? நம்ம ஸ்கூல் பிரண்ட் பிரசன்னா தெரியும்ல? அவன் அந்த சந்துலதான் மளிகை கடை வச்சிருக்கான் தெரியுமா? போனமாசம் கூட எக்ஸ்பிரஸ் அவென்யூவில சந்திச்சோமே…’’ என்றான் சிவா.
‘‘ஆமா… தொந்தி எல்லாம் வச்சிட்டு இருந்தானே…. ஆமாயில்ல… அவனை மறந்துட்டேன் பாரு… இன்னைக்கு எனக்கு டூயூட்டி அவன் கடையிலதான். அந்த வழியாத்தானே போகணும்’’ என்றான் கவுசிக்.
‘‘மாப்பிள இன்னைக்கு பிக்னிக் பிளாசாவுக்கு கூட்டிட்டு போறதா சொல்லிட்டிருந்தியே?’’ கேட்டான் சிவா.
‘‘ஹலோ… யாருங்க பேசுறது?’’ கேட்டான் கவுசிக்.
‘‘டேய்…டேய்… காரியம் ஆனவுடனே கழற்றிவிடுறீங்க பாருங்க… அதனாலத்தாண்டா உங்கக்கிட்ட முன்னாடியே பார்ட்டி கேட்கணும்கறது’’ நொந்துக் கொண்டான் சிவா.
‘‘சாரி சார்… நீங்க மனுசுல பேசுறதா நினைச்சு போன்ல பேசிட்டு இருக்கீங்க… வக்கட்டா…’’ என்று போன் இணைப்பை துண்டித்தான் கவுசிக்.
அடுத்த 10வது நிமிடத்தில் தயாராகிக் கொண்டு பிரசன்னாவின் கடையில் இருந்தான்.
வராதவன் வந்துள்ளானே என்று நினைத்து டீ எல்லாம் வாங்கிக் கொடுத்து உபசரித்தான் பிரசன்னா.
‘‘அப்புறம் மாப்பிள வியாபாரம் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு?’’ என்று ஆரம்பித்தான் கவுசிக்.
‘‘பரவாயில்ல மச்சான்… ஏதோ போய்ட்டு இருக்கு’’ என்றான் பிரசன்னா.
‘‘அது சரி என்ன இந்தப்பக்கம் திடீர்னு காத்து வீசுது?’’ என்றான் பிரசன்னா.
விஷயத்தை கூறினான் கவுசிக்.
‘‘என்னடா சேவ திடீர்னு நம்மதோட்டத்து பக்கம் வந்திருக்கேன்னு பார்த்தேன். இதுதான் விஷயமா? சரி, சரி, வியாபாரத்துக்கு இடைஞ்சல் இல்லாம பார்த்துட்டு போ’’ என்றான் பிரசன்னா.
கவுசிக் நினைத்தது நடந்தது.
கனிகா, தன் அக்காவுடன் பூஜை கூடையை எடுத்துக் கொண்டு வந்துக கொண்டிருந்தாள்.
மாம்பல நிற சேலையில் அப்சரஸ் போன்று இருந்தாள் கனிகா.
கனிகா, கவுசிக்கை பார்க்காததால் அவள் இயல்பாக சென்றுக் கொண்டிருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த  கவுசிக்குக்கு தடையாக, கடையின் முன்பு ஒரு ஆள் பைக்கில் வந்து நின்றார்.
இது என்னடா இடைஞ்சல் என்று, அவரை மீறி பின்பக்கம் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான் கவுசிக்.
திடீரென பிரசன்னா, ‘‘வாங்க சார்… என்ன ரொம்ப நாளா இந்தப்பக்கம் ஆள காணோம்’’ என்று குரல் கொடுத்தபோதுதான் பைக்கில் வந்த நபரை பார்த்தான் கவுசிக்.
அவரை பார்த்த மாதிரி இருந்ததால் இன்னொரு முறை உற்றுப்பார்த்தான். அது முதல் நாள் கறிக்கடையில் தன் முதுகின் மீது ஓங்கி அடித்த நபர்.
அந்த நபர், கடையின் உள்ளே வர, அவரை வரவேற்று சேர் ஒன்றை போட்டான் பிரசன்னா.
அந்த நபர் மீதான ஆத்திரத்தினால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் கவுசிக்.
‘‘கவுசிக்… சார் நம்ம பி2 ஸ்டேஷன்ல ஹெட்கான்ஸ்டபிள்’’ என்றான் பிரசன்னா.
‘‘சார்… இது என் பிரண்ட் கவுசிக்’’ என்றான் பிரசன்னா.
‘‘என்ன தம்பீ… அடிக்கடி இந்த தெருவுல பார்த்த மாதிரி இருக்கு? என்ன விஷயம்?’’ என்றார் கவுசிக்கை பார்த்தபடி அந்த நபர்.
‘‘ஹலோ… இது என்ன உங்களுக்கு சொந்தமான சந்தா? இல்லாட்டி இந்த கடைதான் உங்களுக்கு சொந்தமானதா? என்னம்மோ வேலைக்காரனை பார்த்து கேட்கிற மாதிரி கேட்கிறீங்க?’’ என்றான் கவுசிக் கடும் கோபத்துடன்.
‘‘சார் பையன் நம்ம பிரண்ட்டுதான். நல்ல குடும்பத்து பையன் சார்’’ என்றான் பிரசன்னா.
‘‘ஓ… நல்ல குடும்பத்து பையன்னா… இப்படித்தான் பொறுக்கி மாதிரி, பொண்ணுங்க பின்னாடி சுத்துவாறோ….?’’ என்றார் அந்த ஆள்.
‘‘ஹலோ… வார்த்தைய அளந்து பேசுங்க… இல்லாட்டி மரியாதை கெட்டிடும்’’ என்றான் கவுசிக்.
‘‘என்னடா மரியாதை கெட்டுடும். நான் யார் தெரியுமா? உன்னை எல்லாம் ஸ்டேஷன்ல கொண்டு போய் ரெண்டு தட்டு தட்டினாத்தான் சரிப்பட்டு வருவே’’ என்றார் அந்த ஆள்.
கூறியதுடன் நிற்காமல் அந்த ஆள் கவுசிக் காலரை பிடிக்க முயல, பிரசன்னா தடுக்க அங்கு ஒரு சில நிமிடங்களில் களேபரம் ஆகிவிட்டது.
அந்த நேரத்தில்தான் சிவா அங்கு வந்து சேர்ந்தான்.
அவன் பாய்ந்து சென்று, சிவாவின் காலரை பிடித்துக் கொண்டிருந்த நபரை ஓங்கி உதைத்தான். அதில் அந்த ஆள், கீழே விழுந்ததில் தலையில் நல்ல காயம்.
‘‘டேய்… யார் மேல கை வைக்கிற’’ என்றபடி மீண்டும் அவனை குத்து முயன்றான் சிவா.
அதற்குள் சுதாரித்து எழுந்த அந்த நபர், சிவாவை அடிக்க ஆரம்பித்தான்.
நிலைமை கைமீறி போவதை பார்த்த கவுசிக், பிரசன்னாவிடம் அந்த ஆளின் பெயரை கேட்டுக் கொண்டு டக்கென்று தன் போனை எடுத்து பேசினான். அதைத்தொடர்ந்து, சிவாவை அடித்துக் கொண்டிருந்த நபரை இழுத்துவிட்டு, ‘‘இந்தாய்யா… உன் அதிகாரி பேசணுமாம். பேசு…’’ என்று போனைக் கொடுத்தான் கவுசிக்.
‘‘நான் ஏண்டா… எவன்ட்டாயாவது பேசணும்’’ என்று போனை தள்ளிவிட்டான் அந்த ஆள்.
போனில் ஸ்பீக்கரை ஆன் செய்தான் கவுசிக்.
‘‘யோவ் ஏகாம்பரம்… நான் டிஜிபி பேசுறேன்’’ என்றது மறுமுனை குரல்.
சர்வநாடியும் அடங்கிப்போன நிலையில், போனை வாங்கி ஸ்பீக்கரை ஆப் செய்துவிட்டு, காதில் வைத்து பேசினான் அந்த ஆள்.
தொடர்ந்து, சரிங்கய்யா… சரிங்கய்யா… என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் அந்த ஆளிடம் இருந்து வெளியே வரவில்லை.
போனை ஆப் செய்துவிட்டு, பயபக்தியுடன் கவுசிக்கிடம் தந்தான் அந்த ஆள்.
உயரதிகாரியிடம் வாங்கிய அதிர்ச்சி அடியில் இருந்து மீளாத அந்த ஆள், சத்தமில்லாமல் பைக் எடுப்பதற்காக திரும்பினான்.
முதல் நாள் தன்னை முதுகில் அடித்ததுபோன்று ஓங்கி அடித்தான் கவுசிக்.
மீண்டும் படக்கென்று திரும்பி பார்த்தான் அந்த ஆள்.
‘‘இனிமே, அவன் சொன்னான், இவன் சொன்னான்னு இந்த பக்கம் வர்றது, அப்புறம் பிரண்டுன்னு நினைச்சு தட்டினேன்னு சொல்றது இந்த மாதிரி எல்லாம் வச்சுக்கிட்டே… மவனே வேலையிலேயே இருக்க மாட்டே…. டிஜிபி தங்கச்சி பையன் மேலேயே கைவைக்கிறியா? போ… தண்ணியில்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் காத்திட்டு இருக்கு… வாங்கிட்டுப்போய்… உலகே… மாயம்… வாழ்வே… மாயம்னு பாட்டுப்பாடி திரி…’’ என்று சிரித்தான் கவுசிக்.
‘‘பயபுள்ள ஆள் தெரியாம விளையாடிட்டான் மாப்பிள’’ என்றான் சிவா.
சிவாவும், கவுசிக்கும் சிரிக்க, அவர்களுடன் பிரசன்னாவும் சிரித்தான்.
(தொடரும் 19)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==========================================
ஒன் 4 த்ரீ 20

ஒருவழியாக பிரச்னை முடிந்து கவுசிக், சிவா, பிரசன்னா மூவரும் அமைதியானார்கள்.

‘‘மாப்பிள இன்னைக்கு என் ஆள் கோயிலுக்கு வர்றதா சொல்லியிருக்கா… நீயும் வா போய்ட்டு வரலாம்’’ என்றான் சிவா.

‘‘எந்த கோயிலுக்கு பார்த்தசாரதி கோயிலுக்குடா’’ என்றான் சிவா.

‘‘சரி நான் இப்ப இருக்கிற மூடுக்கு எங்காவது வெளிய போய்ட்டு வந்தா, நல்லாத்தான் இருக்கும் வா போகலாம்’’ என்று தன் பைக்கிலேயே சிவாவை ஏற்றிக் கொண்டு கிளம்பினான் கவுசிக்.

பார்த்தசாரதி கோயில் தேர் அருகே வண்டியை விட்டு, கோயிலுக்குள் சென்றார்கள் இருவரும்.

அங்கு பூஜைக்கூடையுடன் வாசலில் நின்றிருந்தாள் தேவி.

‘‘வாங்க கவுசிக் சார்… உங்களையும் இழுத்துட்டு வந்துட்டாரா?’’ என்றாள் தேவி.

‘‘இல்லங்கா எதிர்பாராத விதமா ஒரு இடத்தில சந்திச்சோம்… கோயிலுக்கு போறேன்னான்… சரி நானும் வர்றேன்னு வந்துட்டேன்…’’ என்றான் கவுசிக்.

‘‘சரி வாங்க உள்ள போகலாம்’’ என்று அவர்களுடன் சேர்ந்து நடந்தாள் தேவி.

மூவரும் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, பிரகாரத்தில் வந்து அமர்ந்தார்கள்.

‘‘கவுசிக் சார்… கனிகா வீட்டுல அவளை ரொம்ப கண்காணிக்க ஆரம்பிச்சுட்டாங்க… அதனால அவ ரொம்ப பயப்படுறா… அவ என்ன நினைச்சான்னா… அவங்க அக்கா லவ் மேரேஜூக்கு அவங்க அப்பா அனுமதி தந்ததுமாதிரி, தனக்கும் அனுமதி தந்துடுவார்னு நினைச்சா… ஆனா, யார் கண் பட்டுச்சோ தெரியல… அவங்க அப்பாவோட உங்க சந்திப்பு ரொம்ப உரசல போய்ட்டு இருக்கிறதா சொன்னா…’’ என்று ஆரம்பித்தாள் தேவி.

‘‘ஆமா, தேவி… இன்னைக்கு கூட அவங்க அப்பா தனக்கு தெரிஞ்ச ஒரு ஹெட் கான்ஸ்டபிளை என்னை பயமுறுத்தச் சொல்லி அனுப்பி வச்சிருந்தார்…’’ என்று நடந்ததை கூறினான்.

‘‘அடடா… இந்த முறையும் நீங்க சொதப்பீட்டிங்களே சார்… அந்த ஆள் வந்து சும்மா மிரட்டினாலும், நீங்க கொஞ்சம் அனுசரிச்சுட்டு போயிருக்கலாம்ல… இப்போ அந்த ஆள், அவங்க அப்பாக்கிட்ட என்னென்ன சொல்லப்போறாரோ?... ஏற்கனவே அவளோட கசின் மணி, உங்களுக்கு எதிரா இருக்கிறான். அவனும் உங்களை பத்தி நல்லதா சொன்னதா தெரியல… இப்போ ஹெட்கான்ஸ்டபிள் வேற…’’ என்றாள் தேவி.

‘‘தேவி… அதனால அந்த ஆள்கிட்ட அடிவாங்கச் சொல்லுறீயா?’’ என்றான் சிவா.

‘‘நான் அப்படிச் சொல்லல… அவர் மொதல்ல வந்து சொல்றப்போவே… நீங்க பேசாம எந்திரிச்சு போயிருந்தீங்கன்னா… வம்பே வந்திருக்காதே… சரி நம்மள பார்த்துட்டு பயந்துட்டாங்கன்னு அந்த ஆள், வெறுப்பா சொல்லாட்டியும், கொஞ்சமாவது உங்கள பத்தி நல்லதா சொல்லியிருப்பான்ல’’ என்றாள் தேவி.

‘‘அந்த ஆள் வந்தவுடனே ராங்கா பேச ஆரம்பிச்சான் தேவி…’’ என்றான் கவுசிக்.

‘‘ஆமா… அந்த பார்ட்டி கவுசிக்கோட சட்டைக்காலர பிடிச்சுட்டு நிக்கிற பார்த்ததும்தான் எனக்கும் கோபம் வந்து அந்த ஆளை எட்டி உதைச்சேன்’’ என்றான் சிவா.

‘‘ஆக… நீங்கதான் சண்டையை மொதல்ல ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க…’’ என்று சிவாவைப் பார்த்து முறைத்தாள் தேவி.

‘‘அப்படியில்ல தேவி… எந்த பிரண்ட்தான், தன் நண்பனை அடையாளம் தெரியாத ஒருத்தன் அடிச்சுட்டு நிக்கிறதை பார்த்துட்டு இருப்பான். அதுதான் சிவா பாய்ஞ்சுட்டான்’’ என்றான் கவுசிக்.

‘‘அப்படிச்சொல்றா… என் செல்லாக்குட்டி…’’ என்றான் சிவா.

‘‘இதுல ஒண்ணும் கொறைச்சல் இல்ல…’’ என்று குமட்டில் குத்துவது போல் நடித்தாள் தேவி.

‘‘சார்… அடுத்து என்ன பண்ணப்போறதா உத்தேசம்?’’ என்று கேட்டாள் தேவி.

‘‘எங்க வீட்டுல உடனே சொல்ல முடியாது… ஏன்னா அவங்க வேலைக்கே போக வேணாம்னு சொன்னவங்க… இப்போது வேலை பார்க்கிற இடத்திலேயே லவ்வுன்னு தெரிஞ்சா… கொன்னேபுடுவாங்க… அதனால கொஞ்சம் நல்ல சிச்சுவேஷனா பார்த்து தான் வீட்டுல சொல்ல முடியும்…’’ என்றான் கவுசிக்.

‘‘ஆனா, அதுக்குள்ள கனிகா வீட்டில வேற வரன் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்களே?’’ என்று கேட்டாள் தேவி.

‘‘அப்படி எல்லாம் போக விட்டுடுவோமா?’’ என்றான் சிவா.

‘‘ஆமா… நீங்க சொல்லிட்டிருப்பீங்க… அவங்கப்பா, உங்கமேல இருக்கிற கோபத்தில, அதை செய்ய ஆரம்பிச்சுடுவாரு’’ எனறாள் தேவி.

‘‘தேவி நீங்க சொல்லுறதும் கரெக்ட்தான். ஆனா, என்னோட சிச்சுவேஷனதான் சொல்லிட்டேனே… இன்னைக்கு இந்த கான்ஸ்டபிளால என் மாமா என்ன ஏதுன்னு குடைய ஆரம்பிச்சுடுவாரு… அவரையும் கொஞ்சம் நல்லபடியா சொல்லி டைவர்ட் பண்ணணும். இல்லாட்டி குடும்பம் முழுக்க கூப்பிட்டு கவுசிக் ஒரு பொண்ண சைட் அடிக்கிறானாம் என்ற ரீதிக்கு பரப்பிடுவாரு’’ என்றான் கவுசிக்.

‘‘பிரச்னையில்லாம எந்த லவ் மேரேஜூம் நடக்காதா’’ என்று அங்கலாய்த்தாள் தேவி.

‘‘ஏன் செல்லம்… தி பேமஸ் சிவா அண்ட் தேவி கல்யாணம் அப்படித்தான் நடக்கப்போகுது டார்லிங்’’ என்றான் சிவா.

‘‘ம்… ஆசைதான்… என் முறைமாமன் பாக்சர். அவருக்கு விஷயம் தெரிஞ்சதுன்னா… உங்களை வடிவேலு மாதிரி துவைச்சு, வடிச்சு, கொடியில காயப்போட்டுடுவார்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினாள் தேவி.

‘‘அடிப்பாவி… இத ஏன் இத்தனை நாளா என்கிட்ட சொல்லல?’’ என்று முறைத்தான் சிவா.

‘‘ஏன்… அப்படியே டபாய்ச்சுட்டு ஓடிடலாம்னா?’’ என்று கேட்டாள் தேவி.

‘‘பின்ன… என் பாடிக்கு பாக்சிங் எல்லாம் தாங்காதும்மா’’ என்றான் சிவா.

‘‘அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… நீங்க உங்க வீட்ல சொல்லி மொதல்ல பொண்ணு கேட்டு வரச் சொல்லுங்க’’ என்றாள்.

‘‘சரி… கிளம்புவோமா?’’ என்றான் கவுசிக்.

மூவரும் பின்னால் தட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

கோயில் வாசலுக்கு வந்தபோதுதான், ‘‘அடடா கர்ச்சீப்ப மறந்து வந்துட்டேன்டா… நீங்க போய்ட்டு இருங்க எடுத்துட்டு வந்துடுறேன்னு’’ சொல்லிவிட்டு உள்ளே சென்றான் சிவா.

‘‘இவர் எப்பவுமே இப்படித்தாங்க…’’ என்று சிரித்தாள் தேவி.

‘‘ஒரு தடவை ஸ்கூல்ல டவுசரையே பாத்ரூம்ல மறந்து வச்சுட்டு, கிளாசுக்கு வந்துட்டான்னா பாருங்களேன்’’ என்றான் கவுசிக்.

தேவி கொல்லென்று சிரித்தாள்

அப்போது பூஜைக்கூடையில் இருந்து பழம் கீழே விழுந்தது.

அதை எடுப்பதற்காக கீழே குனிந்தாள் தேவி.

அதே நேரத்தில் கவுசிக் குனிந்தான்.

இருவரும் தலையில் முட்டிக் கொண்டு பின்னர் சுதாரித்துக் கொண்டு எழ, எதிரே மணி இவர்களை பார்த்தபடி கோயிலுக்குள் வந்து கொண்டிருந்தான்.

(தொடரும் 20)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
=============================================================

ஒன் 4 த்ரீ – பாகம் 21

கோயில் வாசலில் தேவியையும், கவுசிக்கையும் பார்த்த மணி, அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான்.
அவர்களின் பார்வையில் இருந்து படாமல் உள்ளே சென்றவுடன், தன் மாமா ராகவனுக்கு போன் போட்டான்.
சில விநாடிகள் ரிங் போன பின்னர் எடுக்கப்பட்டது.
‘‘மாமா நான் மணி பேசுறேன்’’ என்றான்.
‘‘சொல்லுப்பா…’’ என்றார் ராகவன்.
‘‘மாமா நான் சொன்னேன்ல்ல… அநத பையன் கவுசிக் நல்லவன் இல்லேன்னு… இன்னைக்கு பாருங்க… எங்க ஆபிஸ்ல வேலை பார்க்கிற இன்னொரு பொண்ணோட ஒன்னா கோயிலுக்கு வந்திருக்கான். நாம கனிகாவுக்கு நல்லா இடமா பார்த்து முடிச்சுடலாம் மாமா’’ என்றான் மணி.
‘‘சரி மாப்பிள… நீ சொல்றது மட்டுமில்ல… நானும் பல விதங்கள்ல விசாரிச்சு பார்த்துட்டேன். அந்த பையன் கொஞ்சம் சரியில்லாமாத்தான் இருக்கான். அதுமட்டுமில்ல… நானே அவனை நேர்ல பார்த்தேன். ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான்…’’ என்றார்.
‘‘மாமா நாம எவ்வளவு சீக்கிரமா, நல்ல பையனா பார்த்து கனிகாவுக்கு முடிக்கிறோமோ… அவ்வளவு சீக்கிரம் முடிச்சிடணும்’’ என்றான் மணி.
‘‘நான் இன்னைக்கு புரோக்கரை வரச் சொல்லியிருக்கேன்… அவர்க்கிட்ட சொல்லி சீக்கிரம் நல்ல வரணா பார்க்கச் சொல்றேன்…’ என்றார் ராகவன்.
‘‘மாமா நீங்க… அம்மாக்கிட்டேயும் பேசுங்க… அவங்களும் பார்ப்பாங்க…’’ என்றான் மணி.
‘‘ஆமா மாப்பிள… நான் சாயங்காலம், வீட்டுக்கு வந்து அம்மாக்கிட்ட சொல்லி வைக்கிறேன்’’ என்றார் ராகவன்.
‘‘மாமா அப்புறம் முக்கியமான விஷயம். நம்ம கனிகாவோட அவன் நிறைய போட்டோ எடுத்து வச்சிருக்கான் கேள்விப்பட்டேன். ஒருவேளை பிரச்னை ஏற்பட்டா அதைவச்சி அவன் நம்மள மிரட்ட வாய்ப்பு இருக்கு… அதனால அவன்கிட்ட இருந்து அதை வாங்கணும் மாமா… அதுக்கு ஏற்பாடு பண்ணணும்… இதை கொஞ்சம் சாப்ட்டா தான் ஹேண்டில் பண்ணணும்…’’ என்றான் மணி.
‘‘அப்படியா… ஆமா, நீ சொல்றது சரிதான் மாப்பிள… நம்ம வீட்டு பொண்ணு விஷயத்தில நாம தான் கொஞ்சம் கேர்புல்லா ஹேண்டில் பண்ணணும்… கனிகாவோட ஆபிஸ்ல வேலை பார்க்கிறது நீ தானே மாப்பிள… ஏன் நீயே நாங்க வேற இடத்தில பொண்ணு பார்க்கிறோம்… அதனால நீங்க எங்க பொண்ணு  போட்டோ ஏதாவது வச்சிருந்தா அழிச்சிடுங்கண்ணு ஏன் கேட்கக்கூடாது?’’ என்றார் ராகவன்.
‘‘சரி மாமா… இந்த விஷயத்தை நானே கேட்கிறேன்…’’ என்றான் மணி.
இருவரும் இணைப்பை துண்டித்தனர்.
மணி யோசனையாகவே சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
மறுநாள்.
வழக்கம்போல் இன்போ பிராஸ் ஆபிஸ் களைக்கட்டியிருந்தது.
சீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த கவுசிக், சிவாவிடம் வந்தாள் ரோசி.
‘‘என்ன மச்சி… காதல் டிரைன் வேகமாக ஓடுது போல?’’ என்று கவுசிக்கிடம் கேட்டாள் ரோசி.
‘‘ஆமா… மேடம், எங்க ரெண்டு பேருக்கும் ஓகே. ஆனா, அவங்க வீட்டுல தான், கனிகாவோட அப்பா கொஞ்சம் முரண்டு பிடிப்பார்னு தோணுது’’ என்றான்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் பெரிய பிரச்னை வராது. பார்த்துக்கலாம். இவனை எதுக்கு கூடவே வச்சு சுத்திக்கிட்டு இருக்கே?’’ என்றாள் சிவாவை பார்த்தபடி ரோசி.
‘‘ஹலோ மேடம்… நாங்க இதில எல்லாம் கரை கண்டவங்க தெரியுமா?’’ என்றான் சிவா.
‘‘எப்படி… கர்ச்சீப்ல வச்சு பைவ் ஸ்டார் குடுத்தா… யாருக்கும் தெரியாம பைக்குள்ள வச்சிருக்கிறது மாதிரியா?’’ என்றாள் பஸ் சம்பவத்தை வைத்து ரோசி.
‘‘ஓ… அவ்வளவு தூரம் எங்கள கவனிச்சிருக்கீங்க… அப்படித்தானே…?’’ என்றான் சிவா.
‘‘ஆமா… இவரு பெரிய அஜீத்… அப்படியே இவரை கவனிச்சிட்டாலும்… டேய்… வேலைய பாருடா…’’ என்றபடி நகர்ந்தாள் ரோசி.
அந்த நேரத்தில்தான் மணி, கவுசிக்கை நோக்கி வந்தான்.
‘‘நேத்திக்கே… கோயில்ல முறைச்சிட்டு போனான். இன்னைக்கு எதுக்கு வர்றான்…’’  என்று யோசனையில் கம்பயூட்டரை பார்ப்பதுபோன்று பாசாங்கு செய்தான் கவுசிக்.
‘‘கவுசிக் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… கேன்டீனுக்கு போகலாமா?’’ என்றான் மணி.
சிவாவைப் பார்த்தான் கவுசிக்.
போய்ட்டு வா என்பதுபோல் கையை காட்டினான் சிவா.
‘‘ஓ… சார் ஓகே சொன்னா வருவீங்க போல?’’ என்று கிண்டலடித்தான் மணி.
அதற்கு கவுசிக் பதில் ஏதும் சொல்லாவிட்டாலும், பழைய ஏரியா நண்பன் என்பதால், ‘‘டேய் போடா… போ…’’ என்று மணியை பார்த்து கையை காட்டினான் சிவா.
கேன்டீனில் டேபிள் ஒன்றில் இருவரும் காபி கோப்பையுடன் அமர, மணி தான் ஆரம்பித்தான்.
‘‘கவுசிக்... எங்க மாமா கனிகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்… நீ அவ பின்னாடி சுத்துறதா தெரியுது… அவ விவரம் இல்லாம உன்கிட்ட பழகிட்டதா தெரியுது…’’ என்றான் மணி.
‘‘ஓ… கனிகா விவரமில்லாம பழகிட்டாளா… அப்ப சரி…’’ என்று கிண்டலாகவே பதில் அளித்தான் கவுசிக்.
‘‘இந்த கிண்டல், கேலி எல்லாம் வேண்டாம். நாங்க கனிகாவை உனக்கு தர்ற மாதிரி இல்ல… அதனால அவக்கூட நீ எடுத்த போட்டோக்களை டெலிட் பண்ணிடு… அப்புறம் அவ ஏதாவது சாட் மெசேஜ் அனுப்பியிருந்தாலும் டெலிட் பண்ணிடு…’’ என்றான் மணி.
‘‘ஓ… இதச்சொல்லத்தான் சார் வந்தீங்களோ?’’ என்றான் கவுசிக்.
‘‘இது பொண்ணு விஷயம்… பிரச்னை வேண்டாம். எங்க மாமா கனிகாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறார்’’ என்று மீண்டும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல கூறினான் மணி.
‘‘இதுக்கு கனிகா என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாமா?’’ என்று கேட்டான் கவுசிக்.
‘‘இது பெரியவங்க சேர்ந்து எடுத்த முடிவு… இதுல கனிகாவோட முடிவு தேவையில்ல…’’ என்றான் மணி.
‘‘அப்போ கனிகாவையும் கூப்பிட்டு பேசுவோம்… அவ என்ன சொல்றான்னு கேட்போம்… அவ அழிக்க சொன்னா… அழிச்சுடுறேன்’’ என்று கூறியபடி கனிகாவுக்கு போன் செய்ய முயன்றான் கவுசிக்.
அதை தடுத்த மணி, ‘‘கவுசிக்… இது பொண்ணு மேட்டர்… ஆபிஸ்ல தலைமை வரைக்கும் போனா… உங்களுக்குத்தான் பிரச்னை ஏற்படும். ஏன் வம்பு பண்ணணும்னு நினைக்கிறீங்க?’’ என்று கேட்டான் மணி.
‘‘பிரதர் இங்க நான் பிரச்னை பண்ணல… நீங்கதான் ஆரம்பத்தில இருந்து என்னைப் பத்தி தப்பு, தப்பா சொல்லி பிரச்னை ஏற்படுத்திட்டு இருக்கீங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘கடைசியா… என்னதான் சொல்றீங்க?’’ என்று கேட்டான் மணி.
‘‘கனிகா சொல்லாம என்னால முடியாது’’ என்றான் கவுசிக்.
விருட்டென்று அங்கிருந்து எழுந்து சென்றான் மணி.
(தொடரும் 21)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===========================================================
ஒன் 4 த்ரீ – பாகம் 22


மணி எழுந்து சென்றதும், கனிகாவுக்கு போன் போட்டு கேன்டீனுக்கு வருமாறு கூப்பிட்டான் கவுசிக்.
கனிகா  வந்ததும், எடுத்த எடுப்பிலேயே, ‘‘நீ எவ்வளவு தூரத்துக்கு என்னை காதலிக்கிறே?’’ என்று கேட்டான்.
‘‘இப்போ ஏன் இப்படி கேட்கிற?’’ என்று கேட்டாள் கனிகா.
‘‘சொல்லேன்…’’
‘‘இப்படி கேட்டா எப்படி சொல்றது? உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவ்வளவுதான்’’ என்றாள்.
‘‘அதுதான் எந்த அளவுக்கு பிடிக்கும்னு கேட்கிறேன்’’ என்றான்.
‘‘எனக்கு சொல்லத்தெரியல…’’ என்றாள் கனிகா.
‘‘உன் கசின் மணி வந்து மிரட்டிட்டு போறான். உங்க வீட்டுல உனக்கு தீவிரமா பொண்ணு பார்க்கிறாங்களாம். அதனால உன்னோட லைப் பாதிக்கப்படக்கூடாதுன்னு…. நீயும் நானும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ், நீ எனக்கு குடுத்த கிப்ட்ஸ் எல்லாம் திருப்பி தரணுமாம்… இல்லாட்டி விளைவுகள் மோசமா இருக்குமாம்… நேரா வந்து மிரட்டுறான்’’
‘‘அவன் எப்பவுமே இப்படித்தான் விடு. சின்ன வயசில எனக்கு லவ் லெட்டர் குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டவன். இப்ப அடுத்தவனுக்கு சொந்தமாகப்போறான்னு தெரிஞ்சதும் அவனால பொறுக்க முடியாம ஏதாவது இல்லாதது, பொல்லாதது சொல்லிட்டு இருக்கான்… எங்க அப்பாக்கிட்ட நான் இன்னொரு தடவை பேசுறேன்… பிரச்னையை நேரடியா சொல்லாம… அது என்ன எவ்வளவு பிடிக்கும்…. எவ்வளவு பிடிக்கும்னு கேள்வி?’’ என்று முதுகில் செல்லமாக அடித்தாள்.
‘‘இல்ல கனிகா… ஒருவேளை உங்க வீட்டுல, என்னை வேண்டாம்னு சொல்லிட்டா…’’ என்றான்.
அதற்கு அவன் வாயை மூடினாள் கனிகா. ‘‘இப்படி நெகடீவ்தாட்சோட பேசறதே எனக்கு பிடிக்காது. எல்லாத்தையும் ஸ்போர்ட்டீவா எடுத்துக்கோ, கட்டாயம் எங்க அப்பா சம்மதத்தோட நம்ம கல்யாணம்… ஜாம்… ஜாம்னு நடக்கும்’’ என்றான் கன்னத்தில் அடித்தபடி.
‘‘சரி நான் சீட்டுக்கு போறேன். இங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தா அதைக்கூட அவன் அப்பாக்கிட்ட வேணும்னே போட்டுக் கொடுப்பான்’’ என்று எழுந்தாள் கனிகா.
அவள் எழுந்து நடக்க முற்பட்டபோது கையை பிடித்து இழுத்தான் கவுசிக்.
‘‘என்ன இது… பப்ளிக்ல’’ என்று திரும்பி பார்த்து முறைத்தாள் கனிகா.
‘‘மேடம்… போனை வச்சிட்டு போனீங்க… அதை குடுக்கத்தான்’’ என்றான் கவுசிக்.
‘‘அதானே பார்த்தேன்… என்னடா அய்யாவுக்கு பப்ளிக்கிலேயே தைரியம் வர ஆரம்பிச்சுடுச்சேன்னு’’ என்று சிரித்துக் கொண்டே போனை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் கனிகா.
தூரத்தில் இவர்களின் நடவடிக்கையை போனில் படம் எடுத்துக் கொண்டிருந்த மணி, அடுத்த நொடி மீண்டும் ராகவனுக்கு போன் செய்தான்.
‘‘மாமா… நான் அவன்கிட்ட ரொம்ப தன்மையா பேசினேன். ஆனா, அவன் ராங்கா பேசுறான். உங்களால முடிஞ்சத பார்த்துக்கோங்கன்னு திமிரா பேசுறான் மாமா. நம்ம கனிகா வேற அவன்கிட்ட போய் வழியிறா… அப்புறம் எப்படி அவன் பேசாம இருப்பான். நீங்க கனிகாக்கிட்ட பேசுங்க மாமா’’ என்றான் மணி.
‘‘இன்னைக்கு வீட்டுக்கு வந்தவுடன் நான் பேசுறேன். அப்புறம் போட்டோ கேட்கிறதை என்கிட்ட விடு நான் பேசிப் பார்க்கிறேன்’’ என்றார் ராகவன்.
மதியம் லஞ்ச் முடித்துவிட்டு சீட்டில் வந்து அமர்ந்தான் கவுசிக்.
கம்ப்யூட்டரில் லாகின் செய்த நேரத்தில் ரிசப்ஷனில் இருந்து போன் வந்தது.
‘‘கவுசிக் உங்களை பார்க்க, ராகவன்னு ஒருத்தர் வந்திருக்கார்’’ என்றார் ஆப்ரேட்டர்.
‘‘சரி… இதோ வர்றேன்’’ என்று எழுந்தான்.
அருகில் இருந்த சிவாவிடம் விஷயத்தை கூறினான்.
‘‘மாப்பிள ஒருத்தர் மாத்தி, ஒருத்தர் வந்து பிரச்னை பண்றதுக்குன்னே வர்றானுங்க… கனிகாகிட்ட சொன்னீயா?’’ என்று கேட்டான் சிவா.
‘‘காலையில மணி வந்தப்போ சொன்னேன். இப்போ அவங்க அப்பா வந்திருக்கார். என்னன்னு நானே முதல்ல டீல் பண்றேன். அப்புறம் கனிகாக்கிட்ட சொல்லிக்கலாம்’’ என்றான் கவுசிக்.
‘‘மாப்பிள இரு நானும் உன் கூட வர்றேன்’’ என்றான் சிவா.
‘‘டேய்… நான் என்ன சண்டைக்கா போறேன்… நீயும் வர்றேங்கிற?’’ என்றான் கவுசிக்.
‘‘அப்படியில்ல மச்சான். இவனுங்க என்ன வேணா பிளானோட வந்திருக்கலாம். சேப்டிக்கு ஒருத்தர் பக்கத்தில இருக்கிறது நல்லதுதானே… வா… போகலாம்’’ என்றான் சிவா.
இருவரும் ரிஷப்சனுக்கு சென்றபோது கனிகாவின் தந்தை அங்கு காலை பேப்பர்களை மேய்ந்து கொண்டிருந்தார்.
‘எல்’ வடி சோபாவில் அவர் ஒரு கார்னரில் அமர்ந்திருந்தார். இந்த கார்னில் சென்று அமர்ந்தான் கவுசிக். பக்கத்திலேயே சிவாவும் சென்று அமர்ந்தான்.
‘‘குட்மார்னிங் அங்கிள்’’ என்றான் கவுசிக்.
‘‘சாரி… உறவு முறை எல்லாம் வேண்டாம். நீங்க சார்னே கூப்பிடலாம். இல்லாட்டி ராகவன்ற என் பெயரை சொல்லியே கூப்பிடலாம்’’ என்றார் சற்று கோபத்துடன்.
இதை எதிர்பார்க்காத கவுசிக், ‘‘சரி சார்… இனிமே அப்படி கூப்பிட மாட்டேன்’’ என்றான்.
‘‘நான் கனிகாவோட அப்பா…’’ என்றார் ராகவன்.
‘‘சார்… அடுத்த உங்க விலாசத்தை சொல்ல ஆரம்பிச்சுடாதீங்க… அந்த டீடெய்ல் எல்லாம் எங்களுக்கு தெரியும்… நேரா விஷயத்துக்கு வாங்க சார்’’ என்றான் சிவா.
‘‘இவர் யாரு… தேவையில்லாம நடுவில?’’ என்றார் ராகவன்.
‘‘இவன் என் குளோஸ் பிரண்ட் சிவா… எப்பவும் என் கூட இருப்பான்’’ என்றான் கவுசிக்.
‘‘கழியிறப்போ கூடவா?’’ என்றார் ராகவன்.
மனதில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தாலும், கனிகாவின் அப்பா என்பதால், அதை பொறுத்துக் கொண்டு, ‘‘சார்… நீங்க ராங்காவே பேசிட்டு இருக்கீங்க… என்ன விஷயம் சொல்லுங்க?’’ என்றான் கவுசிக்.
‘‘என் மக பின்னாடி நீங்க சுத்துறதா கேள்விப்பட்டேன். அவளுக்கு மாப்பிள பார்த்துட்டு இருக்கோம். அதனால அவ கூட நீங்க எடுத்துக்கிட்ட போட்டோ எல்லாம் டெலிட் பண்ணிட்டா நல்லது’’ என்றார் ராகவன்.
‘‘பண்ணாட்டி….?’’ என்று கேட்டான் சிவா.
விருட்டென்று எழுந்தார் ராகவன். அப்போது கவுசிக் கால் தவறுதலாக அவர் கால் மீது பட்டது.
‘‘சாரி சார்…’’ என்றான் கவுசிக்.
ஆனால், ‘‘இடியட்ஸ்…’’ என்று திட்டிவிட்டு, காலை தட்டிவிட்டவாறு விறுவிறுவென்று வெளியே செனறார் ராகவன்.
(தொடரும் 22)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===================================================================
ஒன் 4 த்ரீ – பாகம் 23

மாலையில் கவுசிக், சிவா, ஜான், விஷ்ணு, பாலா என்று அனைவரும் வழக்கமாக கூடும் பிக்னிக் பிளாசாவில் கூடியிருந்தனர்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் எதையோ பாஸ்ட் புட் என்ற பெயரில் வாங்கி, உள்ளே தள்ளிக் கொண்டிருந்தனர். சீன அதிபர் ஜீ ஜின்பிங் வந்து சென்றதுமுதல், சீமான் ராஜிவ் காந்தி மரணம் பற்றி பேசிய வரையில் அவர்களின் பேச்சில் பல்வேறு விஷயங்கள் அரைபட்டுக் கொண்டிருந்தன.
‘‘மாப்பிள காலையில உன் வருங்கால மாமனார், அதான்பா, கனிகாவோட அப்பா வந்துட்டு போனாரே… அதைப்பத்தி கனிகாகிட்ட பேசினியா?’’ என்று ஆரம்பித்தான் சிவா.
‘‘இல்லடா… தெரியாம கால் பட்டதையே அந்த ஆள்… என்னமோ நான் வேணுமின்னுக்கே கால பட வச்சது மாதிரி திட்டிட்டு போனார். இதை வேற கனிகாகிட்ட சொன்னா… அவளும் திட்டுவா…’’ என்றான் கவுசிக்.
‘‘என்ன பிரச்னை…’’ என்று ஒரே நேரத்தில் மற்றவர்கள் கேட்க, அவர்களுக்கு நடந்ததை கூறினான் சிவா.
‘‘மாப்பிள உம்முன்னு சொல்லு… அந்த மணிய ஒரு வழி பண்ணிடுவோம்’’ என்றான் பாலா.
‘‘இல்லடா அவனை ஒரு வழி பண்றது நம்ம வேலையில்ல… இப்போதைக்கு என் லவ்தான் முக்கியம். நாம அவனை ஏதாவது பண்ணப்போக… அது பின்னாடி பெரிய பிரச்னையாயிடும்’’ என்றான் கவுசிக்.
‘‘இவன் என்னடா புத்தன் மாதிரி பேசிட்டு இருக்கான். நமக்கு தடையா இருக்கிற முட்செடிய வீசி எறியலைன்னா… அது நமக்கே பாதகமாக வந்து முடியும்’’ என்றான் விஷ்ணு.
‘‘இப்போதைக்கு மணி பிரச்னை நமக்கு வேண்டாம். அத அப்புறம் பார்த்துக்கலாம்… கனிகாவோட அப்பாவை சமாளிக்கிறது எப்படின்னுதான் இப்போது ஒரே கவலையா இருக்கு. நான் இன்னும் அப்பாக்கிட்ட சொல்லல… அவர்கிட்ட நல்ல நேரமா பார்த்துதான் சொல்ல முடியும். ஆனா, அதுக்குள்ள கனிகாவோட அப்பா அவளுக்கு கல்யாணம் செய்றதுக்கான ஏற்பாட்டில எல்லாம் இறங்கிட்டார்’’ என்றான் கவுசிக்.
‘‘மாப்பிள எனக்கு ஒரு யோசனை தோணுது… பேசாம நாங்க நாலு பேர் போய்… கனிகா அப்பாவை கூல் பண்றோம். அவர்கிட்ட நல்லபடியா பேசி… கொஞ்ச நாள் டைம் கேட்போம்’’ என்றான் ஜான்.
‘‘ஆமா மாப்பிள ஜான் சொல்றதும் சரின்னு படுது’’ என்றான் சிவா.
‘‘இல்ல அது சரியா வரும்னு தோணல… அப்புறம் அங்கப்போய் உங்கள அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிடுவார்’’ என்றான் கவுசிக்.
‘‘டேய் நாம பார்க்காத அவமானமா…? விடுடா அதெல்லாம் பிரச்னை கிடையாது. அடிச்சா பழம், இல்லாட்டி கல்லு வீண்ணு நினைச்சுக்குவோம்’’ என்றான் பாலா.
‘‘நீங்க என்னன்னு சொல்லிட்டு போவீங்க… என் மேட்டர்னு தெரிஞ்சா அவர் உடனடியா உங்களை விரட்டி விட்டுவார்’’ என்றான் கவுசிக்.
‘‘அதை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்… நீ கவலைப்படாதே… இப்பவே நாங்க கிளம்புறோம்… பார்ட்டிக்கு ரெடியா இரு… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சா… இன்னைக்கு நைட் உன்னோட பார்ட்டி’’ என்றான் ஜான்.
‘‘சரி என்னமோ பண்ணுங்க… ஆனா இது என் வாழ்க்கை விஷயம். அதனால பார்த்து செய்யுங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘அதெல்லாம் ஜமாய்ச்சிடுவோம்பா… நீ போய் பீட்சா ஒண்ணு ஆர்டர் பண்ணிட்டு சாப்பிட்டுட்டு இரு…. நாங்க திரும்பி இதே இடத்துக்கு வர்றோம்’’ என்றான் பாலா.
நால்வரும் கவுசிக்கை மட்டும் விட்டு, கனிகா வீட்டுக்கு கிளம்பினர். போகும் வழியில் ஆனந்தபவன் ஸ்வீட் ஒரு கிலோ வாங்கிக் கொள்ள தவறவில்லை.
விஷ்ணுதான் வீட்டில் முதலில் நுழைந்தான்.
‘‘கனிகா… கனிகா…’’ என்று கூப்பிட்டான்.
வீட்டில் இருந்து ராகவன் எட்டிப்பார்த்தார். விஷ்ணு அவரிடம், ‘‘கனிகா வீடு இதுதானே…?’’ என்று கேட்டான்.
‘‘ஆமா… நீங்க யாரு?’’ என்று கேள்வி எழுப்பினார் ராகவன்.
‘‘நாங்க அவங்களோட ஆபிஸ் ஸ்டாப்ஸ். இந்தப்பக்கம் வந்தோம். அப்படியே கனிகாவை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்’’ என்றான் பாலா.
சற்று யோசனையுடனேயே, ‘‘கனிகா, அவங்க அம்மாவோட மார்க்கெட் வரைக்கும் போயிருக்கா… நீங்க உள்ள வாங்க…’’ என்று கூப்பிட்டார் ராகவன்.
அந்த நேரத்தில் சிவா வெளியில் இருந்தான்.
மூவரும் உள்ளே நுழைய, பின்னாலேயே வந்து சேர்ந்தான் சிவா.
சோபாவில் உட்கார்ந்த பின்னர்தான் ராகவன், சிவாவை பார்த்தார்.
‘‘இவர் எதுக்கு வந்திருக்கார்…?’’ என்று கோபத்துடன் கேட்டார்.
‘‘இவரும் எங்க பேட்ஜ்தான் அங்கிள்’ என்றான் பாலா.
‘‘உங்கள பார்த்தா… கனிகாவை பார்க்க வந்த மாதிரி தெரியலையே…’’ என்றார் ராகவன்.
‘‘அங்கிள்… நீங்க ஆரம்பித்தில இருந்து கவுசிக்கை தப்பாவே பார்க்கிறீங்க… அவன் ரொம்ப நல்ல பையன் தெரியுமா?’’ என்றான் ஜான்.
‘‘அதானே பார்த்தேன்… என் டவுட் சரியாடியிச்சு… நீங்க கனிகா பிரண்ட்ஸ்னா அவளை பார்த்துட்டு கிளம்பலாம். மத்தபடி என் மகளோட வாழ்க்கையை முடிவு பண்றதுக்கு எனக்கு தெரியும்’’ என்று கோபத்துடன் கூறினார் ராகவன்.
‘‘அங்கிள் காலையில நீங்க உங்க டாட்டரோட போடவா அழிச்சுடுங்கன்னு கவுசிக்கிட்ட கேட்டீங்களாம்… அதை உங்க முன்னாடியே அழிச்சுட்டு வரச் சொன்னான்… அதனால அவன் செல்போனையும் கொண்டு வந்திருக்கிறோம்…’’ என்று அவர் அருகில் உட்கார்ந்தான் சிவா.
‘‘நீங்க போட்டோ அழிக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. அது தவிர வேற எதுவும் இங்க பேச வேண்டியதில்லை. நீங்க போட்டோக்களை அழிச்சுட்டு கிளம்புங்க’’ என்று கூறினார் ராகவன்.
‘‘அங்கிள் நீங்க கோபமாவே பார்க்கிறதாலத்தான், கவுசிக்கை பற்றி உங்களுக்கு தப்பு தப்பா படுது… தயவு செஞ்சு மணி சொல்றதை எல்லாம் நீங்க நம்பாதீங்க…’’ என்றான் பாலா.
‘‘யார நம்பணும்… யாரை நம்பக்கூடாதுன்னு எனக்கு தெரியும்… என் பேமிலி மெம்பர்ஸ் பத்தி நீங்க பேச வேணாம்’’ என்றார் ராகவன்.
‘‘அங்கிள் கவுசிக், கனிகா மேல உயிரை வச்சிருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். அவனுக்கு உங்க பொண்ண குடுத்தீங்கன்னா… சந்தோஷமா இருப்பாங்க… கவுசிக் பேமிலியும் ரொம்ப பெரிய பேக்கிரவுண்ட் உள்ளவங்க…’’ என்றான் ஜான்.
‘‘அப்பா பெரிய மனுஷங்களா… நீங்க வந்து பொண்ணு கேட்டு ஒருத்தனுக்கு பொண்ணு தர்ற அளவில நான் இல்ல… தயவு செஞ்சு கிளம்புறீங்களா?’’ என்று எழுந்து நின்று கும்பிடு போட்டார் ராகவன்.
வேறு வழியில்லாமல் அனைவரும் தொங்கிய முகத்துடன் வெளியே நடந்தனர்.
‘‘ஹலோ… இந்த ஸ்வீட் பாக்ச எடுத்துட்டு போயிடுங்க… இங்க யாரும் ஸ்வீட் வேணும்னு தவம் கிடக்கல’’ என்று கடைசியாக சென்று கொண்டிருந்த விஷ்ணுவிடம் கூறினார் ராகவன்.
அவரை முறைத்துக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு கிளம்பினான் பாலா.
(தொடரும் 23)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
================================================

ஒன் 4 த்ரீ – பாகம் 24

இரவு 8.30 மணி ஆகியிருந்தபோதும், கொஞ்சம் கூட பரபரப்பு குறையாமல் பிக்னிக் பிளாசா பிசியாக இருந்தது. அதே நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளிக்கொண்டு, ஆற, அமர உலக விஷயங்களை மிகத்தீவிரமாக அலசிக் கொண்டிருந்தார்கள். இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கு உயரும் என்று விளக்கம் அளித்துக் கொண்டிருந்தவர் பீட்சாவும், கோக்கும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
கனிகா வீட்டுக்கு சென்ற நண்பர்கள் நால்வரும் மீண்டும் கவுசிக்கை விட்டுச் சென்ற அதே இடத்தில் ஒன்றுக் கூடினார்கள். அவர்களின் முகங்கள் பேயறைந்ததை போல் இருந்ததை பார்த்த கவுசிக், ‘‘வாங்கடா… என்ன ஆச்சு…’’ என்று நண்பர்களிடம் பதற்றமாக கேட்டான்.
‘‘கவுசிக்… அவர் கொஞ்சம் கூட அசையல… அந்த அளவுக்கு மணி அவர்கிட்ட பெரிசா உன்னைப்பத்தி சொல்லியிருக்கான். எங்களை விரட்டியே விட்டார்னா பார்த்துக்கோயேன்…’’ என்றான் பாலா.
‘‘ஆமாம்டா மாப்பிள… நல்லவேளை நான் கொஞ்சம் தாமதிச்சு உள்ளே போனேன். வாசல்லேயே என்னை பார்த்திருந்தா… அங்கேயே விரட்டி விட்டிருப்பார் போல’’ என்றான் சிவா.
‘‘என்ன சொல்றீங்க? என்ன சொன்னார் கனிகா அப்பா’’ என்றான் கவுசிக்.
‘‘நாங்க கனிகா பிரண்ட்ஸ்னு சொல்லிட்டுத்தான் உள்ளே போனோம். கனிகா அவங்க அம்மாவோட மார்க்கெட்டுக்கு போயிருந்தா… சரின்னு உட்கார்ந்து பேச ஆரம்பிச்சோம். மெதுவா உன்னைப்பத்தி ஆரம்பிச்சோம்… ஆனா.. அதுக்குள்ளேயே சிவா பார்த்ததும் அவர் டென்ஷன் ஆயிட்டார். நீங்க வந்து பேசி எல்லாம் என் பொண்ண ஒருத்தனுக்கு கட்டி வைக்கணும்னு எல்லாம் இல்லைனு பெரிய, பெரிய வார்த்தையா சொல்ல ஆரம்பிச்சுட்டார்… கடைசிய எந்திரிச்சு போங்கன்னு… ரெண்டு கையையும் எடுத்து பெருசா கும்பிட்டார். வேற வழி இல்லாததால நாங்க கிளம்பி வந்துட்டோம்’’ என்றான் ஜான்.
‘‘ஐய்யய்யோ… அதுக்குத்தான் ஆரம்பத்திலேயே வேணாம்னு சொன்னேன்… இப்ப பாருங்க பிரச்னை வேற ரூட்ல போக ஆரம்பிச்சுடுச்சு… இதை வச்சு வேற மணி இன்னும் தூபம் போட்டுவிடுவான்…’’ என்று நொந்தபடி கூறினான் கவுசிக்.
‘‘சாரிடா… மச்சான்… படிச்சவரு… சொன்னா புரிஞ்சுக்குவார்னுதான் நினைச்சோம். ஆனா, பிரச்னை இப்படி முட்டுச்சந்துல போய் நிக்கும்னு நினைக்கலப்பா…’’ என்றான் பாலா.
அந்த இடத்தில் மிகப்பெரிய மவுனம் நிலவியது.
‘‘சரி இறைவன் விட்ட வழி… கிளம்புவோமா…?’’ என்றான் கவுசிக்.
யாரும் எந்த பதிலும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி, வீட்டுக்கு சென்றனர்.
அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையிலேயே புரண்டு, புரண்டு படுத்தான் கவுசிக். கனிகாவிடம் இருந்து போன்று வருமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அங்கிருந்து எந்த போனும் வருவது போல் தெரியவில்லை. தானே செய்யலாம் என்றால், அங்கு எந்த மூடில் இருக்கிறார்களோ… நண்பர்கள் போய் வந்ததில், வீட்டில் பிரச்னை ஏதாவது ஏற்பட்டிருந்தால்… அது கனிகாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் என்று ஏகப்பட்ட எண்ணங்கள் மனதில் வந்து சென்றன. சரி, காலையில் அலுவலகத்தில் பேசிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டான் கவுசிக்.
இரவு எப்போது தூக்கம் வந்தது என்றே தெரியவில்லை. காலையில் அம்மா சமையலறையில் உள்ள சாண்டிங் மெசினில், சுப்ரபாதத்தை போட்டபோதுதான் தூக்கம் கலைந்தது. எழுந்து பார்த்தான் 7.30 ஆகியிருந்தது. போன் ஏதாவது வந்துள்ளதா என்று ஆன் செய்து பார்த்தான். அது பேட்டரியை குடித்துவிட்டிருந்ததுதான் மிச்சமாக இருந்தது. எந்த போனும் வரவில்லை.
எழுந்து விறுவிறுவென குளித்து தயாராகி, கம்பெனி பஸ் நிறுத்தத்துக்கு வந்தான். அங்கு ஏற்கனவே சிவா வந்து நின்றிருந்தான்.
‘‘வா மாப்பிள… என்ன நைட் சரியா தூக்கம் இல்லையா… மொகம் எல்லாம் ரொம்ப வாடியிருக்கு?’’ என்றான் சிவா.
‘‘ஆமாடா… நைட் கனிகா போன் பண்ணுவான்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, அவ போனே பண்ணல. அதுல கொஞ்சம் அப்செட்’’ என்றான் கவுசிக்.
‘‘விடு… அவ ஆபிசுக்கு வருவால்ல… அங்க பேசிக்கலாம்… எல்லாம் சரியாயிடும்’’ என்றான் சிவா.
‘‘ம்ம்…’’ என்று தலையாட்டினான்.
அதற்குள் கம்பெனி பஸ் வரவே இருவரும் வழக்கம்போல் காலியாக இருந்த இடதுபுற இரட்டை சீட்டுக்கு பின்புறம் இருந்த இரட்டை சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.
டிவிஎஸ் நிறுத்தத்தில் கனிகா நின்றிருக்கிறாளா என்று எட்டிப்பார்த்தான்.
ஆனால், அங்கு தேவி மட்டும்தான் நின்றிருந்தாள்.
பஸ்சில் வந்து அமர்ந்த அவளிடம், ‘‘கனிகா வரலீயா?’’ என்று கேட்டான் கவுசிக்.
‘‘இல்லையே சார்… எனக்கும் போன் பண்ணல… என்ன எதுவும் பிரச்னையா’’ என்று கேட்டாள்.
சிவா முன்னே சென்று அவளருகில் உட்கார்ந்து கொண்டு, நடந்ததை கூறினான்.
‘‘ஓ… சாரி சார்… ஒரு நாள்ல இவ்வளவு பிரச்னை நடந்திடுச்சா… நான் கனிகாகிட்ட போன்ல கேட்கிறேன் இருங்க…’’ என்று தனது போனில் கனிகா எண்ணை அழைத்தாள்.
சில விநாடிகள் சென்ற பின்னர் தான் எடுக்கப்பட்டது.
‘‘கனிகா… என்ன ஆபிசுக்கு வரல?’’ என்று கேட்டாள்.
‘‘சாரி… தேவி… நான் இனிமே ஆபிசுக்கு வரமாட்டேன். தயவு செஞ்சு எனக்கு போன் பண்ணாதே…’’ என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தாள் கனிகா.
தேவி விஷயத்தை கூறியதும், கவுசிக் பெரிதும் கலவரமானான். கனிகா வீட்டில் ஏதோ பெரிய பிரச்னை நடந்திருக்கிறது என்று ஊகித்தான்.
வேறு வழியில்லை. நாமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று கனிகாவுக்கு போன் செய்தான். போன் எடுக்கப்படவே இல்லை.
அடுத்த முறையும் போட்டான். போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
(தொடரும் 24)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
===================================================
ஒன் 4 த்ரீ – 25

பஸ்சில் வரும்போது தேவி போன் செய்தபோது, அதை கனிகா எடுக்காதது, தன்னுடைய போனையும் துண்டித்தது… சுவிட்ச் ஆப் செய்தது என்று அடுத்தடுத்த விஷயங்கள் கவுசிக்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அலுவலக வேலையில் கவனம் செலுத்த முயற்சித்தும் அவனால் முடியவில்லை.
சிவாவிடம் புலம்பி தள்ளிவிட்டான்.
11 மணி வரை பொருத்திருந்த கவுசிக், டீ நேரத்தில் மீண்டும் கனிகாவுக்கு போன் போட்டான்.
இப்போது மீண்டும் போன் ஆன் செய்யப்பட்டிருந்ததால் ரிங் போனது ஆனால் இப்போதும் எடுக்கப்படவில்லை.
அந்த வழியாக வந்து கொண்டிருந்த பாலாவின் போனை வாங்கி கனிகாவின் எண்ணுக்கு அழைத்தான்.
பாலாவின் நம்பர் அவளிடம் இல்லை போலும். அவள் போனை எடுத்தாள்.
‘‘கனிகா தயவு செஞ்சு போனை வச்சுடாதே… நான் கவுசிக் பேசுறேன்…’’ என்றான்.
மறுபக்கம் கொஞ்ச நேரம் மவுனம் நிலவியது.
‘‘கனிகா இப்படி திடீர்னு பேசலன்னா என்ன அர்த்தம்… என்ன நடந்துச்சு? ஏதாவது சொன்னாத்தானே தெரியும்?’’ என்று கேட்டான்.
‘‘இனிமே என் கூட பேச வேண்டாம். நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்’’ என்றாள் கனிகா.
‘‘கனிகா என் பிரண்ட்ஸ் உங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க… அதனால ஏதாவது பிரச்னை ஆயிடிச்சா… கோபப்படாம பதில் சொல்லு…’’
‘‘எத்தனை தடவை சொன்னேன்… உங்க வீட்டுல சொல்லச் சொல்லி… ஆனா எதையும் கேட்காம, இப்படி பொறுப்பில்லாம பிரண்ட்சை பொண்ணு கேட்டு அனுப்பியிருக்கே… நீ எங்கப்பாவை மட்டுமில்ல… என்னையும் அவமானப்படுத்திட்டே… உன் மேல நான் வச்சிருந்த மதிப்பை சுக்கு நூறா உடைச்சிட்டே… இனிமே, அதை சரி பண்றது கஷ்டம். அதுக்குப் பதிலா நாம பிரேக் அப் பண்ணிக்கிறது தான் சரியா இருக்கும்’’
‘‘கனிகா தயவு செஞ்சு கோபப்படாதே… நான் பொண்ணு கேட்டெல்லாம் அனுப்பல. உங்கப்பாவை சமாதானப்படுத்திட்டு வர்றோம்தான், என் பிரண்ட்ஸ் போனாங்க… அவங்க வெறுமனே என்னை நல்ல பையன் மட்டும்தான் சொல்லியிருக்காங்க… உங்கப்பாதான் அவங்களை விரட்டியடிச்சுட்டார்… தயவு செஞ்சு நம்பு…’’
‘‘லூசா நீ… யாராவது கோபத்தில இருக்கிற பொண்ணோட அப்பாவை சமாதானப்படுத்த பிரண்ட்ச அனுப்புவாங்களா? அந்த அளவுக்கு எங்க அப்பா… என்ன தாழ்ந்து போயிட்டாரா? ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லியிருந்தா கூட, அதை நான் தடுத்திருப்பேன். ஓ.கே. பாஸ்ட் இஸ் பாஸ்ட். நான் முடிவெடுத்திட்டேன். இனிமே நம்ம லவ் ஒத்து வராது. என்னை வீட்டில வேலைக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்க… அதனால இனிமே என்கிட்ட பேச வேண்டாம். குட் பை’’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் கனிகா.
‘‘சே…’’ என்று போனை தூக்கி கீழே போட்டு உடைப்பது போல் போனான் கவுசிக்.
‘‘டேய்… டேய்… அது என் போன்டா… என்னடா ஆச்சு?’’ கேட்டான் பாலா.
‘‘பிரேக் அப் சொல்லிட்டாடா…’’ என்றான் கவுசிக்.
‘‘கவலைப்படாத கவுசிக்… கோபத்தில சொல்லியிருப்பா… ரெண்டு நாள் போனா எல்லாம் சரியாயிடும்’’
‘‘இல்லடா அவ தீர்மானமா சொல்றா… அவளைப்பத்தி எனக்கு தெரியும். ரொம்ப பிடிவாதக்காரி. முடிவெடுத்தா மாத்திக்க மாட்டா…’’
‘‘டேய்… நான் தான் சொல்றேன்ல… அதெல்லாம் மாறும்… இரு பிரண்ட்ஸ்களை கூப்பிடுறேன்’’ என்றான் பாலா.
அவன் போனில் சொல்லிய விஷயத்தை கேட்டு, கவுசிக் நண்பர்கள் அனைவரும் அங்கு கூடினர். சிவா உள்ளிட்டவர்கள் வேகமாக செல்வதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு தேவியும் அங்கு வந்தாள்.
‘‘நண்பா சீரியசா எடுத்துக்காதே… ஒண்ணும் ஆகாது… விடு…’’ என்றான் ஜான்.
‘‘சார்… நான் தேவிய பார்த்து பேசுறேன்… நீங்க கவலைப்படாதீங்க’’ என்றாள் தேவி.
‘‘டேய்… அப்படி நான் என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன். என் பிரண்ட்ச அவளோட வீட்டுக்கு அனுப்பி பேசினது தப்பா… நான் என்னமோ பெரிய தப்பா பண்ணிட்ட மாதிரி பேசுறடா…’’ என்றான் தழுதழுத்த குரலில் கவுசிக்.
‘‘டேய் கவலைப்படாதே மச்சி… உன்னை ரொம்ப தைரியமானவன்னு நான் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டிருக்கேன். நீ என்னடான்னா… இப்படி உடைஞ்சு போற மாதிரி பேசுறேயே… விடுடா மாப்பிள எல்லாம் சரியாயிடும்’’ என்றான் சிவா. பின்னர் தேவியை பார்த்து, ‘‘நீ சீட்டுக்கு போ நாங்க வெளியே போய் டீ சாப்பிட்டு வர்றோம்’’ என்று கவுசிக்கை இழுத்துக் கொண்டு அனைவரும் வெளியே சென்றனர்.
இரானி டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர்.
டீயை வேண்டாம் என்று கூறிய கவுசிக்கிடம், வலுக்கட்டாயமாக திணித்தான் விஷ்ணு.
‘‘மாப்பிள பிரச்னை பெரிசாடியிடுச்சு… இப்போ உள்ள நிலையில, உடனடியா நீ வீட்டில சொல்லி, கனிகா வீட்டில பொண்ணு கேட்க  சொல்லு… அதுதான் பிரச்னையை சரியாக்கிற ஒரே வழி. இப்போ பிரச்னை பெரிசாயிட்டதால, கனிகாவோட அப்பா தீவிரமா பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவார்’’ என்றான் சிவா.
‘‘அதுக்குத்தான் என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…’’ என்றான் கவுசிக்.
‘‘உங்க அப்பா கண்டிப்பானவர்ன்னா கூட ரொம்ப நல்லவர். உன் மேல உயிரை வச்சிருக்கார்ன்றது எங்களுக்கு தெரியும்… நீ மொதல்ல அப்பாக்கிட்ட பேசு… அப்போதான் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றான் பாலா.
‘‘நாங்க வேணா வீட்டுக்கு வரவா?’’ என்று கேட்டான் விஷ்ணு.
டக்கென்று அவனையும், மற்றவர்களையும் பார்த்த கவுசிக், ‘‘டேய்… ஒரு தடவை நீங்க போய்ட்டு வந்ததுக்கே இவ்வளவு தூரம் வந்துடுச்சு… விடுங்க… நானே டிரை பண்றேன்’’ என்றான்.
அனைவரும் டீயை குடித்துவிட்டு வேண்டா, வெறுப்பாக அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
(தொடரும் 25)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==================================================

ஒன் 4 த்ரீ – பாகம் 26

பத்து நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. அவ்வளவு வேகமாக காலச்சக்கரம் சுழன்றிருந்தது.
கனிகாவின் பிரேக் அப் பேச்சால் தாடி வளர்த்து, தேவதாஸ்போல் ஆகியிருந்தான் கவுசிக்.
ஆபிஸ் வேலைகளிலும் சரியாக கவனம் செலுத்தாமல் திட்டு வாங்கினான். ரோசிக்கு தெரியும், அவனது பிரச்னை. திறமையான கவுசிக், மனப்பிரச்னையில் சிக்கித்தவிக்கிறான். அதுவரையில் அவனை சில நாட்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து முக்கியமான புராஜெக்ட்களை, அடுத்தவர்களுக்கு மாற்றியிருந்தாள்.
இதனால் அலுவலகத்தில் பிரச்னை இல்லாவிட்டாலும், கவுசிக்குக்கு இந்த பிரச்னையை எப்படி முடிவுக்கு  கொண்டு வருவது என்றுதான் தெரியாமல் தவித்தான்.
அலுவலகத்தில் யாரிடமும் பழைய கலகலப்பில்லாமல் பேசுவது, அதுவும் அவர்களே சென்று பேசினால் மட்டுமே பேசுவது என்று இருந்தான்.
கனிகாவுக்கு பல முறை போன் செய்தும் அவள் எடுக்கவே இல்லை. தேவி ஒருமுறை வீட்டிற்கு சென்று இருந்தபோது, அவளிடம் இனிமேல் இந்த பிரச்னை தொடர்பாக வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறாள். சரி அவள் வீட்டுப்பக்கத்தில் சென்று நின்றால், எப்படியாவது அவளை பார்த்துவிடலாம் என்று நினைத்து பிரசன்னாவின் கடைக்கு சென்று உட்கார்ந்தும் பிரயோஜனமில்லை. அவள் வீட்டை விட்டு வெளியே வருவதாகவே தெரியவில்லை. பிரசன்னாவிடம் அவள் எப்போதாவது வெளியே சென்றால்,  தகவல் தெரிவிக்குமாறு கூறியிருந்தான். ஆனால், இதுவரையில் பிரசன்னாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அதாவது கனிகா வீட்டைவிட்டு எங்குமே வெளியே செல்லவில்லை.
பித்து பிடித்தவன் போல் ஆகியிருந்தான் கவுசிக். அவனுடைய அம்மா பலமுறை கேட்டும் மலுப்பலாக பதில் சொல்லிவிட்டு, புராஜெக்ட் வேலை என்று நழுவினான்.
‘‘இந்த பாழாப்போன வேலையை கட்டிக்கிட்டு ஏன் அழுரியோ… அப்போவோட பிஸ்னசை கவனிடான்னு பல தடவை சொல்லிட்டேன்… கேட்டாத்தானே…’’ என்று புலம்பினாள் அவளது அம்மா.
இதற்கிடையே, கனிகாவுக்கு ஒரு கும்பல் பெண் பார்த்துவிட்டு போன தகவல் பிரசன்னா மூலம் கிடைத்து, யார் அவர்கள் என்று விசாரித்ததில், அது பெரிய பிராடு கும்பல் என்று தெரியவந்தது.
கவுசிக் உடனடியாக இதுபற்றி சிவாவிடம் சொன்னான். சிவா மூலம் மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல், ‘‘இனிமே இந்த ஜேம்ஸ்பாண்ட் வேலை பார்க்கிறது எல்லாம் வேணாம்… எங்க வீட்டு பொண்ண… யாருக்கு, எப்படி கொடுக்கணும்னு எங்களுக்கு தெரியும்… நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க…’’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியிருந்தான்.
எல்லாம் எதிராகவே நடந்து வந்த நிலையில், மேலும், மேலும், தன்னைத்தானே சுருங்க ஆரம்பித்திருந்தான் கவுசிக்.
இதுபோதாது என்று அன்று மாலையில்தான் பிரசன்னாவிடம் இருந்து போன் வந்தது. கனிகா எங்காவது வெளியில் கிளம்பிவிட்டாளோ என்று சந்தோஷத்துடன் போன் எடுத்தான்.
‘‘பிரசன்னா சொல்லு… நான் கவுசிக் பேசுறேன்’’ என்றான் ஆயிரம்வாட்ஸ் பல்ப் பிரகாசத்துடன்.
‘‘மாப்பிள எங்க இருக்க?’’ என்று கேட்டான் பிரசன்னா.
‘‘ஆபிஸ்லதான் இருக்கேன். சொல்லு கனிகா வெளியே கிளம்பியிருக்காளா?’’ என்று கேட்டான்.
‘‘கவுசிக்… இன்னைக்கு மத்தியானம் அவங்க வீட்டில இருந்து ஒரு கார் வந்துட்டுப் போச்சு… அவங்க வந்து போன பின்னாடி, என் தூரத்து சொந்தக்காரன் ஒருவனும் அவங்க வீட்டில இருந்து கிளம்பி வந்தான். அவனை பிடிச்சு மெதுவா பேச்சு குடுத்தேன். அவனோட அத்தைப்பையனுக்கு கனிகாவ பேசி முடிச்சிட்டாங்களாம். பையன் அமெரிக்காவில வேலை பார்க்கிறதால… அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வச்சுக்கலாம் என்று வற்புறுத்தினாங்களாம். அதனால இன்னும் 10 நாள்ல கல்யாணத்தில வச்சிருக்காங்களாம்… என்னால என்ன சொல்றதுன்னு தெரியல… அதுதான் பதறிப்போய், உனக்கு  போன் போடுறேன்…’’ என்றான்.
‘‘பிரசன்னா நீ சொல்றது உண்மைதானா…’’ என்றான் கடுமையான குரலில்.
‘‘மாப்பிள கோபப்படாத… நான் சொல்றது உண்மை. கனிகாவோட அப்பா சத்தமில்லாம காரியத்தை முடிச்சிருக்கார். இன்னைக்கு பூ வச்சிட்டு போறதுக்காகத்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரனுங்க வந்துட்டு போயிருக்கானுங்க…’’ என்றான்.
‘‘….’’
அடுத்த முனையில் கவுசிக் அமைதியாக இருக்கவே, ‘‘மாப்பிள நீ இழுத்துட்டு போவீயோ… இல்லாட்டி கடத்திட்டு போவீயோ… சீக்கிரம் கனிகாவை கல்யாணம் பண்ணிக்கோ… இப்பவே  விஷயம் கைமீறி போயிடிச்சு….’’ என்றான் பிரசன்னா.
‘‘….’’
இப்போதும் மறுமுனையில் கவுசிக் அமைதியாக இருக்கவே, ‘‘கவுசிக் உன்னோட வருத்தம் எனக்கு புரியுது… சீக்கிரம் ஏதாவது செய்… நான் வச்சிடுறேன்’’ என்று கூறி போன் இணைப்பை துண்டித்தான் பிரசன்னா.
அப்படியே டேபிளில் தலை சாய்த்து படுத்தான் கவுசிக்.
போன் வந்ததும், கவுசிக் பேசியதையும் பார்த்துக் கொண்டிருந்த சிவா, அவன் திடீரென தலைசாய்த்து டேபிளில் படுப்பதை பார்த்து பதறிவிட்டான். அவன் அலுவலகத்தில் இதுபோன்று எப்போதும் நடந்து கொண்டதில்லை. அதனால் பதற்றத்துடன், ‘‘கவுசிக்… மாப்பிள… என்ன நடந்துச்சுடா… யார் போன்ல…?’’ என்று கேட்டான்.
கவுசிக் பதில் சொல்லாமல் மவுனமாக விசும்பிக் கொண்டிருந்தான்.
அவனது முகத்தை திருப்பிய சிவா, அவன் கண்கள் சிவந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதை பதறிவிட்டான்.
‘‘டேய் மாப்பிள… என்னடா இது சின்னப்பிள்ளை மாதிரி….?’’ என்று அவனை இழுத்து அணைத்துக் கொண்டு, ‘‘வாடா…’’ என்று இழுத்துக் கொண்டு கேன்டீனுக்கு கூட்டிக்கொண்டு போனான்.
அங்கு அவனை வற்புறுத்தி கேட்ட பின்னர்தான் நடந்ததை கூறினான்.
அவனை தேற்றுவதற்குள் போதும், போதும் என்று ஆகிவிட்டது சிவாவுக்கு. பின்னர் அவன்தான் ஆபிசில் சிக்  லீவ் சொல்லிவிட்டு வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுவந்தான்.
அவனது நிலையை பார்த்து பொறுக்காமல், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மாலையில் பிக்னிக் பிளாசாவுக்கு வரச் சொல்லியிருந்தார்கள்.
சிவாதான் அவனை வீட்டுக்கு சென்று அழைத்து வந்தான். அவனது மேட்டரைப் பற்றி பேசினால், மீண்டும் டென்ஷன் ஆவான் என்பதால், ஆபிசில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசிக்  கொண்டிருந்தார்கள்.
சற்று இயல்புநிலைக்கு வந்திருந்தான் கவுசிக்.
அவனை மீண்டும் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டு வருவதாக நண்பர்களிடம் சொல்லிவிட்டு சிவா தன்னுடைய பைக்கில் அவனை அமர வைத்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அப்போது எதிரே ஒரு பைக்கில் பிளாசா உள்ளே போவதற்காக ஒரு இளம்ஜோடி வந்துக் கொண்டிருந்தது. ஏதேச்சையாக அந்த ஜோடியை பார்த்தான் கவுசிக். பின்னால் அமர்ந்திருந்தது கனிகா.
அதற்குள் அவர்களை கடந்திருந்தது அந்த பைக்.
கனிகாவும் இவனை பார்த்தாள். அவள் முகத்தில் தேஜஸ் இல்லாமல் இருந்தது. ஆனால், இவனை பார்த்தபோது, பார்க்க மனமில்லாததுபோல் முகத்தை முன்புறம் திருப்பிக் கொண்டாள்.
(தொடரும் 26)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
=========================================

ஒன் 4 த்ரீ – பாகம் 27

யோசித்து, யோசித்து பார்த்தும், இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என்று கவுசிக்குக்கு தெரியவில்லை. எப்படிப் போனாலும் சிக்கல் பல ரூபங்களில் வந்தது.
கனிகா சொன்னதுபோல் ஓடிப்போய் கல்யாணம்  செய்துக் கொள்ளலாம் என்றால், முதலில் இப்போது அவளே தயாராக இல்லை. அப்பாவுக்கு அவமானம் செய்துவிட்டேன் என்று கருதி எனக்கு எதிராக மாறிவிட்டாள். அப்புறம், அப்பா, அம்மாவின் சம்மதம் வேண்டும். இதுவரையில் அவன் கேட்டு எதையும் இல்லை என்று சொல்லாதவர்கள். அவர்கள் தர்மசங்கடம் படும்படியாக இந்த விஷயத்தை நேரடியாக எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ‘‘வயசுக்கு வந்த தங்கச்சிய வச்சுக்கிட்டு நீ இந்த மாதிரி பண்ணிட்டு இருக்கியே’’ என்று கேட்டுவிட்டால், இவனால் தாங்க முடியாது.
இப்போதைக்கு தனது குடும்பத்தாரிடம் இந்த விஷயத்தை சொல்லி சம்மதம் கேட்டாலும், கனிகாவுக்கு நிச்சயமே ஆகி, இன்னும் 10 நாளில் திருமணம் வைத்திருக்கும் நிலையில், அதை நிறுத்தி எனக்கு கனிகாவை அவளது அப்பா எப்படி கட்டியா வைப்பார்? என்று ஆயிரம், ஆயிரம் யோசனைகள் நிழலாடின.
நினைக்க,  நினைக்க மண்டை வெடித்துவிடும்போல் இருந்தது. அன்று நண்பர்களை அவளது வீட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. அடுத்தது அவளது அப்பா அனுப்பிய ஹெட்கான்ஸ்டபிளிடம் கோபப்படாமல் இருந்திருக்கலாம். இருக்கிற பிரச்னை போதாது என்று கனிகாவுக்கு தேவியை தூதுவிட்ட சம்பவத்தால் கோபமடைந்த அவளது அப்பா எப்படியோ, அலுவலகத்தில் இருந்து வீட்டு முகவரியை வாங்கி, அம்மாவிடம் வந்து உங்கள் மகன் செய்யும் சரியில்லை என்று புலம்பிவிட்டு சென்றுள்ளார். அன்று வீட்டுக்கு சென்றபோது, ‘‘கவுசிக் உன்கிட்ட இருந்து இதுமாதிரி எல்லாம் எதிர்பார்க்கல… நீ சின்னப்பையன்னு தப்பா நினைச்சிட்டேன்…’’ என்ற கூறியவர்தான். அதன்பிறகு,  அவ்வளவாக அவனிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. அப்பாவிடம் சொல்ல நான்கைந்து முறை எத்தனித்தும், கடைசி நிமிடத்தில் ஏதோ தடுக்க, திரும்பியதுதான் மிச்சம்.
எல்லாவற்றையும் ஏடாகூடாமாக செய்துவிட்டு, இப்போது முடிவை தேடி அலைவது, நட்டநடு பாலைவனத்தில்  வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பது போல் இருந்தது.
சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம் கவுசிக்கிடம் இருந்தது. தனக்கு வீட்டில் கிடைக்காத பொம்மைகள், சாக்லேட்கள் என்று அனைத்தையும் மாமா வீட்டிற்கு சென்று பெற்றுக் கொள்வான். இப்போதும் அவன் நினைவுக்கு வந்தது. அவனது மாமா ஏக்நாத். வேற வழியே இல்லை. திட்டித்தீர்த்தாலும், இப்போதைக்கு இந்த பிரச்னைக்கு வழி சொல்ல அவரைத் தவிர வேறு ஆள் இல்லை. அவனது மாமாவிற்கு இவன் மீது தனி பாசம். அவருக்கு குழந்தை இல்லாதது ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
மாமாவை நேரடியாக அவரது அலுவலகத்துக்கே சென்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்தான்.
இதனால், ஹேங்கரில்  தொங்கிய வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்.
டிஜிபி ஆபிஸ் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
மாமா ஏக்நாத் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்ற பின்னர் ஒரு சில முறை இந்த அலுவலகத்துக்கு கவுசிக் வந்து சென்றுள்ளான். இதனால் அங்குள்ள அதிகாரிகளுக்கு ஓரளவு பழக்கமும் ஆகியிருந்தான்.
டிஜிபி அறையின் வாசலில் இருந்த பாராவிடம் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான். அவர் இல்லை என்பது போல் தலையாட்டினார்.
தள்ளுக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கவுசிக். அங்கு கம்பீரமாக தனது இருக்கையில் அமர்ந்திருந்தார் ஏக்நாத்.
வெள்ளெழுத்து கண்ணாடியை அணிந்து பைலை பார்த்துக் கொண்டிருந்தவர், ஆள் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார் ஏக்நாத்.
‘‘கம் மை யெங் மேன்’’ என்று வரவேற்றார் ஏக்நாத்.
கவுசிக் அங்கிருந்த சுழல் நாற்காலிகளில் ஒன்றை இழுத்து ஏக்நாத் அருகில் போட்டுக் கொண்டு அமர்ந்தான். இவன் செய்கைகளில் வித்தியாசம் இருப்பதை  பார்த்த ஏக்நாத், என்ன ஏது என்று கேட்பதற்குள், அவரது கையை பிடித்துக் கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தான் கவுசிக்.
ஒரு நிமிடம் பதறிவிட்டாலும், அவன் ஏதோ பெரும் சோகத்தில் இருப்பதை மட்டும் அறிந்துக் கொண்ட ஏக்நாத், அவன் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டே, ‘‘கவுசிக் என்ன ஆச்சு… என்ன பிரச்னை…?’’ என்று அவன் மோவாயை பிடித்து தூக்கினார்.
‘‘மாமா நான் உயிருக்கு உயிரா ஒரு பொண்ணை லவ் பண்ணேன். என் கேரக்டர் சரியில்ல… இல்லாட்டி என் வேலை சரியில்ல… என் குடும்ப சரியில்லன்னு ஏதாவது ஒரு குறை இருந்தா கூட நான் சமாதானம் ஆகியிருப்பேன் மாமா. ஆனா, யாரோ சொன்னதை வச்சு… என் கேரக்டர் மேலே சந்தேகப்பட்டு வேற ஆளுக்கு அந்த பொண்ணை அவங்கப்பா நிச்சயம் பண்ணிட்டாரு மாமா…’’ என்று மீண்டும் அழுதான் கவுசிக்.
சின்ன வயதில் இருந்து கவுசிக்கை  பார்ப்பவர் ஏக்நாத். எந்த கெட்டப்பழக்கமும் உண்மையிலேயே கிடையாது. ஏதோ பிரண்ட்ஸ்கள் சேர்ந்தால், பார்ட்டிக்கு செல்வது வழக்கும். அதுவும்  கூட மிக, மிக குறைவாகத்தான் ஆல்கால் எடுப்பதை பார்த்து வியந்திருக்கிறார். இவர்கள்தான் ஸ்டார் ஹோட்டலுக்குதானே வருவார்கள். அதுவும் பாதுகாப்புக்காக இவர் செல்லும் அதே ஹோட்டலுக்குதான் அவர்களும் வருவார்கள். இந்தக்காலத்துக்கு பிள்ளைகளில் இவன் கொஞ்சம் வித்தியாசமானவன் மட்டுமல்ல, நல்லவன் என்பதை இவரே அவனுக்கு தெரியாமல், அவன் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கிறார். அதுவும் ஒரு முறை அல்ல, மூன்று முறை. அப்படி பொறுப்பான ஒரு பையனை யார் நிராகரித்தார்கள் என்று அவரே ஒரு நிமிடம் ஆச்சரியம்தான் அடைந்தார்.
‘‘சரி… அழாமா விஷயத்தை சொல்லு’’ என்றார் ஏக்நாத்.
நடந்த விஷயங்களை எல்லாம் அவரிடம் கூறினான் கவுசிக்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஏக்நாத், ‘‘சரி விடு சின்னப்பிள்ளை மாதிரி அழுதிட்டு இருக்காதே’’ என்று அவனை தேற்றினார்.
அப்படியே பெல் அடித்து காபி வரவழைத்து அவனுக்கு கொடுத்தார்.
(தொடரும் 27)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
=============================================

ஒன் 4 த்ரீ – பாகம் 28

வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தான் மணி. கடாரம் கொண்டான் ஓடிக் கொண்டிருந்தது.
தன்னைக் போட்டுக் கொடுத்த நபரை விக்ரம் துப்பாக்கி எடுத்து சுடும் நேரம், அவனது போன் அலறியது.
சிவா என்று இருந்தது. சிவாவும், அவனும் சிறுவயதில் ஒன்றாக பள்ளியில் படித்தவர்கள். பெரியளவில் பின்னால் பழக்கம் இல்லை என்றாலும் இருவரும் நேரில் பார்க்கும்போது ஹாய் சொல்ல மறப்பதில்லை. இந்த நேரத்தில் இவன் எதற்கு போன் செய்கிறான் என்று நினைத்துக்கொண்டே, ‘‘ஹலோ’’ என்றான்.
‘‘மணி... நான் சிவா பேசுறேண்டா…’’ என்றான்.
‘‘சொல்லு… தெரியுது’’ என்றான் மணி.
‘‘கவுசிக்க பத்தி உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்டா. அதுதான் போன் போட்டேன்’’ என்றான் சிவா.
‘‘அவனைப்பத்தி பேசுறதுக்கு என்ன இருக்கு?’’
‘‘கவுசிக் ஒரு துரோகிடா… கனிகாவுக்கு தான் நிச்சயமாயிடிச்சே… அவள மறந்திடுடான்னு சொன்னேன். அதுக்குப்போய்… நண்பண்ணு கூட பார்க்காம சடார்னு கண்ணு மண்ணு தெரியாம அடிச்சுட்டாண்டா…’’ என்றான் சிவா.
‘‘டேய் நீங்க பிரண்ட்ஸ். இன்னைக்கு அடிச்சுக்குவீங்க… நாளைக்கு சேர்ந்துக்குவீங்க… அதுக்குப்போய் எனக்கு எதுக்குடா போன் பண்ண?’’ என்று கேட்டான் மணி.
‘‘இல்லடா என்னால தாங்க முடியல… அது எப்படிடா, இத்தனை வருஷம் பழகின ஒரு நண்பன்னு கூட பார்க்காம ஒருத்தன் அடிக்கலாம்? அதனால அவன் கூட இனி பழகிறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். அதுமட்டுமா இனிமே தான் அவன் உண்மையான சிவா முகத்தை பார்க்கப் போறான்’’ என்றான்.
கேட்க, கேட்க மணிக்கு சந்தோஷமாக இருந்தது மணிக்கு. பின்னே, எதிரிக்கு எதிரி நண்பனாச்சே!
‘‘சரி என்னப் பண்ணப்போறே?’’ என்று கேட்டான் மணி.
‘‘இன்னைக்கு ஆபிஸ்ல ஒரு தகவல கேள்விப்பட்டேன். அவனுக்கு புரமோஷன் வருதுன்னு… அதோட அவனை யூஎஸ் பிராஜெக்ட்டுக்கு மாத்துறாங்களாம்… அத தடுத்து நான் வாங்கப் போறேன்…’’ என்றான் சிவா.
‘‘அது எப்படி முடியும்?’’ கேட்டான் மணி.
‘‘அமெரிக்கன் பிராஜெக்ட்டுக்கு முன்னாடி அவனோட பைனல் பேங்க் பிராஜெக்ட், பக் செக்கிங்குக்கு உனக்கு தானே வரும். அங்க நீ கை வைக்கிற… பைனல் பிராஜெக்ட் சரியில்லேன்னா… அவன் மேல பேட் இம்ப்ரஷன் வரும்… அடுத்தது இன்னொரு நண்பனையும் பிடிச்சு வச்சிருக்கேன்… அவனும் நமக்கு உதவுவான். சோ… பைனலா… கம்பெனிக்கு லாஸ் வந்தா… அவனுக்கு புரமோஷனும் கிடையாது… யூஎஸ்.ஸூம் கிடையாது’’ என்றான் சிவா.
‘‘சூப்பர்டா… இந்த விஷயத்தை நான் யோசிக்கவே இல்லையே…’’ என்றான் மணி.
‘‘சரி நான் ஜானோட அடையாறு வீட்டு சாவிய வாங்கி வச்சிருக்கேன். நீ கூட அவன் வீட்டுல நடந்த பார்ட்டிக்கு வந்திருக்கியே… அவன் ஊருக்கு போயிருக்கான். அதனால என்கிட்ட குடுத்திட்டு போயிருக்கான். ஈவ்னிங் நாம அங்க உட்கார்ந்து தண்ணியடிச்சுட்டே… பர்தரா டிஸ்கஷ் பண்ணுவோம் சரியா?’’ என்றான் சிவா.
‘‘டபுள் ஓகே’’ என்றான் மணி.
இரவு 8.30 மணிக்கு எல்லாம், ஜான் வீட்டிற்கு வந்துவிட்டான் மணி.
வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை அடையாறு, ஆள் அரவமின்றி அமைதியாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு ஜான் வீட்டின் உள்ளே நுழைந்தான் மணி.
ஏற்கனவே ஜான் வீட்டில் இருந்த சிவா… 1849ஐ திறந்து கிளாஸ்களில் ஊற்றி இருந்தான். அதுமட்டுமின்றி அவன் ஒரு சில ரவுண்ட்கள் போய்விட்டிருந்தது கண்ணிலும் நடவடிக்கையிலும் தெரிந்தது. டேபிளில் சிக்கன், சிப்ஸ், நிலக்கடலை, ஆப்பிள் என்று ஏகப்பட்ட ஐயிட்டங்கள் இருந்தன.
‘‘என்ன வரச்சொல்லிட்டு நீ மட்டும் மட்டையாகிட்டு இருக்கே?’’ என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தான் மணி.
‘‘இல்ல நண்பா… நல்ல சரக்கு… சிக்கன் சைடிஷ்… வாசனை மூக்கை துளைச்சதா… அதுதான்’’ என்று வார்த்தையில் குளறினான் சிவா.
ஊற்றி வைத்திருந்த சரக்கை எடுத்து, மணியும் மடமடவென்று குடித்தான்.
இருவருக்கும் போதை உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த டிவியில் ஏதோ ஒரு பாட்டுக்கு, பிரபல நடிகை அரைகுறை ஆடையில் ஆடிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்துக் கொண்டே வந்த சிவா, கிளாஸ் டம்ளரை எடுக்கும்போது, கைதவறி மணியின் பேன்ட்டில் விழுந்துவிட்டது.
‘‘முட்டாள்… பார்த்து எடுக்கிறதில்ல’’ என்றான் மணி.
‘‘டேய்ய்ய்… யார முட்டாளென்ற… நீ முட்டாள், உங்கப்பா முட்டாள், உங்ககம்மா முட்டாள்…’’ என்று போதையில் அடுக்கினான் சிவா.
‘‘டேய்… முட்டாள்… சரக்க எடுத்து பேன்ட்ல கொட்டிட்டு என்ன முட்டாள்றியா… பாஸ்டர்ட்…’’ என்றான் மணி.
‘‘டேய் உங்கம்மா தாண்டா… அது… நான் தமிழ்ல திட்டுறேன்.  நீ தாண்டா தேவடியாப்பயல்… அதனாலத்தான் இப்படி எல்லாம் உன்கிட்ட இருந்து வார்த்தைகள் வருது’’ என்றான் சிவா.
போதையும், ஆத்திரமும் தலைக்கேறியிருந்த மணி. ‘‘எங்கம்மாவையா அசிங்கமா திட்டுற…?’’ என்று சடாரென டேபிளில் கிடந்த கத்தியை எடுத்து, சிவாவின் மார்பிள் சொருகினான்.
அதை சற்றும் எதிர்பார்க்காத சிவா,  கத்தியை  பிடித்துக் கொண்டே… ‘‘டேய்… என்னையவா… குத்திட்டேடட…’’ என்ற முனகிக் கொண்டே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான்.
எல்லாம் ஒரு சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டது.
அடித்திருந்த போதை எல்லாம் சடாரென இறங்கியதுபோல் இருந்தது மணிக்கு.
கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவின் மூக்கில் விரலை வைத்து பார்த்தான். மூச்சு வரவில்லை.
படாரென்று கையை எடுத்துக் கொண்டு, சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.
தலை விண், விண்ணெண்று தெரித்தது.
தேவையில்லாமல் ஆத்திரப்பட்டு விட்டோமே என்று தலையில் அடித்துக் கொண்டான். இப்போது என்ன செய்வது என்று யோசித்து, யோசித்து பார்த்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிடலாமா?
‘‘இல்லை… இல்லை… ஆத்திரத்தில் தெரியாமல் செய்தாலும், கொலை, கொலைதானே… எனக்கு என்ன போய்ட்டு வாப்பா என்று சொல்லிவிடுவார்கள்? நிச்சயம் தூக்கில் போட்டுவிடுவார்கள்’’ மனம் எச்சரித்தது.
‘‘சே… கனிகாவை கட்டிக்கிட்டு வாழலாம்னு நினைச்சா… அவளும் கிடைக்கல… இப்போ வாழ்க்கையும் முடிஞ்சுடும் போலயே…’’ மனதில் புலம்பித் தவித்தான்.
என்ன செய்வது, என்ன செய்வது என்று திரும்பத் திரும்ப மனதில் கேள்வி ஓடியது.
மாமாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிப்பார்க்கலாம் என்று நினைத்து கனிகாவின் அப்பாவுக்கு போன் செய்தான்.
நீண்ட நேரம் ரிங் போய் எடுக்கப்பட்டது.
‘‘என்ன மாப்பிள இந்த நேரத்தில போன் பண்றே?’’ என்று கேட்டார் ராகவன்.
‘‘மாமா… நான் ஒரு கொலை பண்ணிட்டேன்’’ என்று கதறி அழுதான் மணி.
(தொடரும் 28)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
================================================

ஒன் 4 த்ரீ – பாகம் 29

கொலை செய்துவிட்டதாக மணி கூறியதும், கடும் அதிர்ச்சி அடைந்தார் ராகவன்.
‘‘மாப்பிள என்ன சொல்லுறே… கொலையா?’’ என்றார் அதிர்ச்சி மாறாமல்.
‘‘ஆமா… மாமா… அந்த கவுசிக் இருக்கானே. அவனோட பிரண்ட் சிவா, அன்னைக்கு ஆபிசுல உங்கக்கிட்ட ராங்கா பேசினதாக கூட சொன்னீங்களே அவன்தான். இன்னைக்கு போன் எனக்கு போன் பண்ணி கவுசிக்குக்கு எதிரா பேசணும்னு, அடையாறுல இருக்கிற ஒரு நண்பனோட வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தான். அங்கு போனப்போ அவனுக்கும், எனக்கும் திடீர்னு தண்ணியில தகராறு ஆயிடிச்சு… அவன் ரொம்ப கேவலமா என்னைப்பத்தியும், அம்மாவைப்பத்தியும் திட்டினதா ஆத்திரத்தில கத்தியெடுத்து குத்திட்டேன்… அவன் செத்துப் போயிட்டான் மாமா…’’ என்றான் அழுது கொண்டே.
‘‘போலீஸ்கிட்ட சொல்லிட வேண்டியதுதானே?’’ என்றார் ராகவன்.
‘‘மாமா போலீஸ்கிட்ட சொன்னா… என் வாழ்க்கையே போயிடும் மாமா… உங்களத்தான் மலைப்போல நம்பியிருக்கேன்… நீங்கதான் எப்படியாவது இந்த விஷயத்தில என்னை காப்பாத்தணும்’’ என்று கதறினான்.
‘‘சரி… அழாதே… அட்ரஸ் சொல்லு. நான் வர்றேன்’’ என்று கூறினார் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் ராகவன்.
அடுத்த  கால்மணி நேரத்தில் பைக்கில்  வந்து சேர்ந்தார் ராகவன்.
அவரது பைக் சத்தத்தை கேட்டு, மூடியிருந்த கதவை திறந்தான் மணி. அவர் உள்ளே நுழைந்ததும் மீண்டும் கதவை மூடினான்.
சிவாவின் மார்பில் ரத்தம் உறைந்து போய் கிடந்தது. இன்னும் அப்படியே கிடந்தான்.
‘‘மாப்பிள பேசாம… போலீஸ்கிட்ட தகவல் சொல்லிடலாம்… அதுதான் நல்லது. நாம ஏதாவது செய்யப்போய் அதுவே பின்னாடி பெரிய பிரச்னையா ஆயிறக்கூடாது’’ என்றார் ராகவன்.
’’மாமா… திரும்பத் திரும்ப போலீஸ்னு சொல்லாதீங்க… எனக்கு நெருப்பு அள்ளி கொட்டினது மாதிரி இருக்கு… போலீஸ்கிட்ட போகணும்னா… நான் அப்பவே போயிருப்பேனே மாமா… எனக்கு ஏதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்க மாமா…’’ என்றான் மணி.
சோபாவில் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தார். மணியை பார்த்தார். 11 ஆகியிருந்தது. இருவரும் நகங்களை கடித்தபடி யோசிக்க, ராக்கோழிகளின் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
திடீரென, ‘‘மாப்பிள எனக்கு ஒரு ஐடியா தோணுது’’ என்றார் ராகவன்.
‘‘சொல்லுங்க மாமா…’’ என்றான் மணி.
‘‘கிண்டி வழியாக ஆதம்பாக்கம் போற வழியில ரயில் தண்டவாளத்தையொட்டி காம்பவுண்ட் சுவத்தில ஒரு பெரிய ஓட்டை இருக்கிற பார்த்திருக்கிறேன். அந்த வழியா இவனை தண்டவாளத்தில கொண்டுபோய் வச்சிட்டா… ரயில் ஏறி செத்த மாதிரி ஆயிடும்… என்ன நான் சொல்றது?’’ என்றார் ராகவன்.
அவரை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்ட மணி, ‘‘சூப்பர் யோசனை மாமா… இதுக்குத்தான் உங்களை மாதிரி அனுபவசாலி பெரியவங்களை பக்கத்தில வச்சுக்கணும்கிறது… நீங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டா… யாராலேயேயும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா, அங்க ஆள் நடமாட்டம் இருக்காதா?’’ என்று கேட்டான்.
‘‘கத்தி கூப்பாடு போட்டாக்கூட அங்க ஞாயிற்றுக்கிழமையில ஒரு ஆள் கூட வரமாட்டாங்க… அதுதான் சரியான வழின்னு தெரியுது. ஆனாலும், கொஞ்சம் பயமாத்தான் இருக்கு’’ என்றார் ராகவன்.
‘‘ஒண்ணும் பயப்படாதீங்க மாமா… நாம உடனே கிளம்புவோம் மாமா…’’ என்று கூறிவிட்டு கதவை திறந்து, வாசல் அருகே டிக்கியில் பிணத்தை ஏற்றுவதற்கு தோதாக காரை கொண்டு வந்து நிறுத்தினான். பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தான். தெரு விளக்கை தவிர எந்த வீட்டிலும் வெளி விளக்கு கூட எரியவில்லை. ஆள்அரவமின்றி முடங்கியிருந்தது அந்தப்பகுதி.
சிவாவின் சடலத்தை காரின் பின்பக்கம் ஏற்றினார்கள்.
பின்னர் வீட்டில் பார்த்து, பார்த்து ரத்தக்கறை மற்றும் எல்லாவற்றையும் சுத்தம் செய்தனர். சரக்கு, தண்ணீர் பாட்டில், சைடீஸ்களை எல்லாம் பிளாஸ்டிக் கவரில் போட்டுக் கொண்டு கிளம்பினான் மணி.
‘‘மாமா சாவிய என்ன பண்றது?’’ என்று கேட்டான்.
‘‘போற வழியில எங்காவது குப்பையில வீசிடலாம். எல்லாத்தையும் நல்லா சுத்தம் பண்ணிட்டே இல்ல?’’ கேட்டார் ராகவன்.
‘‘ஆமா மாமா…’’ என்றான் மணி.
‘‘சரி நீ மொதல்ல கிளம்பு நான் பைக்கில பின்னால வாரேன்’’ என்றார் ராகவன்.
கார் கிளம்ப, பின்னாலேயே ராகவனும் கிளம்பினார்.
ராகவன் ஏற்கனவே சொன்னதுபோலவே, அந்த ஆதம்பாக்கம் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய காம்பவுண்டு பகுதியில் ஆள் அரவம் எதுவும் இல்லாமல் இருந்தது. யாரோ அவசர வழிக்காக யாரோ செய்து வைத்திருந்த பிரமாண்ட ஓட்டையில்  ஒரு  ஆள் எந்த தொந்தரவும் இன்றி நுழையலாம் போல் இருந்தது.
இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தார்கள். யாருமே அங்கு இல்லை.
டிக்கியை திறந்து சடலத்தை எடுத்தார்கள்.
கத்தியை பிடித்தபடி செத்து போயிருந்த சிவாவின் விரல்களை வலுக்கட்டாயமாக இழுத்து கத்தியை எடுத்து டிக்கியில் போட்டுக் கொண்டான். பின்னர், சிவாவின் சடலத்தை எடுத்து குத்தப்பட்ட இடத்தை சரியாக தண்டவாளத்தில் வைத்துவிட்டு இருவரும் மீண்டும் வெளியே வந்தனர்.
‘‘மாப்பிள இங்க நின்னா ஆபத்து… உடனே   கிளம்பிடலாம். எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்’’ என்றார் ராகவன்.
இருவரும் கிளம்பினர்.
போகிற வழியில் அடையாறு ஆற்றில், குப்பை கவர், கத்தி, சாவியை தூக்கி எறிந்தான் மணி. சிவாவின் பையில் இருந்த செல்போனை எடுத்து வைத்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அதையும் எடுத்து வீசினான்.
வீட்டிற்கு சென்று முதல் வேலையாக, டிக்கியை கழுவினான்.
காரை கழுவிவிட்டு நேரத்தை பார்த்தான் மணி ஒன்னு ஆகியிருந்தது.
பெரும் சோர்வாக இருந்தது.
கேட்டை மூடிவிட்டு, உள்ளே சென்றான்.
‘‘ஏண்டா முட்டாப்பயலடா நீ… நடுராத்திரியில உட்கார்ந்து காரை கழுவிட்டு இருக்கே’’ என்று அவனது அம்மா சத்தம்போட்டாள்.
ஆனால், எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் அறைக்கு சென்று பொதாலென்று படுக்கையில் விழுந்தான்.
கண் அயர்ச்சியில் தானாக கண்ணை மூடினான்.
 (தொடரும் 29)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==========================================

ஒன் 4 த்ரீ – இறுதி 4
மறுநாள் வழக்கம்போல் ஆபிசுக்கு போனான். மாலை பேப்பரில் ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் இல்லை.
அன்று இரவு நிம்மதியாக தூக்கம் வந்தது அவனுக்கு மறுநாள் காலையிலேயே எழுந்து வாசலில் கிடந்த தினகரன் பேப்பரை எடுத்து பார்த்தான். நகரச் செய்திகள் பக்கத்தில் சின்னதாக ரயிலில் வாலிபர் தற்கொலை என்று செய்தி வெளியாகியிருந்தது. நிம்மதியாக அம்மா கொண்டு வந்து கொடுத்த டீயை குடித்துக் கொண்டிருந்தபோது, போன் மணி அடித்தது. மாமாதான் கூப்பிடுகிறாரோ என்று பார்த்தான்.
ஆனால், புது நம்பராக இருந்தது.
ட்ரூகாலரிலும் பெயரை காட்டவில்லை.
‘‘ஹலோ…’’ என்றான் மணி.
‘‘பிரதர் அட்டகாசமாக கொலை பண்றீங்க…’’ என்றது மறுமுனை  குரல்.

ஒரு நிமிடம் விக்கித்து போனான், மறுமுனை குரலைக் கேட்டு.
‘‘ஹலோ… யாருங்க…’’ என்று மீண்டும் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டான் மணி.
‘‘இந்த அடையாறு… அடையாறு… தெரியுமா?’’ என்றது மறுமுனைக் குரல்.
‘‘ஹலோ… நீங்க யாருங்க…’’ என்றான் மணி.
‘‘நான் உன் நண்பன்பா…  முந்தா நேத்து அமேசான்ல செல்போன் பைனாக்குலர் வாங்கினேன். அதை வச்சு… ஏதாவது பலானது தெரியுமான்னு என் பிளாட்டில இருந்து பார்த்தா… ஒரு வீட்டுல இருந்து கத்தியால குத்தின ஒரு பாடியை காரில் ஏத்திட்டு ஒரு ஆளும், பின்னாடியே பைக்கில இன்னொரு ஆளும் போனதை என் போன் ரெக்கார்ட் பண்ணிடுத்துபா… அதுல பாரு… கார் நம்பர், பைக் நம்பர், உன் முகம், செத்தவன் முகம், பைக்கில வந்த ஆள் முகம்னு எல்லாம் பி.சி.சிரிராம் கேமரா வாட்டம் பக்கவா படம் பிடிச்சுருக்குப்பா….’’ என்றான் அந்த நபர்.
‘‘அது என் ரிலேட்டீவ்… யாரோ குத்திட்டதா போன் பண்ணான். அதனால ஆஸ்பத்திரிக்கு போறதுக்காக தூக்கிட்டு போனோம். அதனால என்ன?’’ கேட்டான் மணி.
‘‘அப்புடியா?.... எந்த ரிலேட்டீவ டிக்கியிலே ஏத்திட்டு போவாங்க? அப்புறம் இன்னொரு விஷயத்தையும் சொல்ல மறந்திட்டேன். நான் உன் காரை பாலோ பண்ணிட்டு வந்தேன்… நீ ரயில்வே தண்டவாளத்தை உடம்ப போட்டதையும் அநியாயத்துக்கு என் கேமரா படம் பிடிச்சுடுப்பா… அப்படியே தொடர்ந்து வந்து உன் வீட்டையும் பார்த்தேன். மறுநாள் உன் ஆபிசையும் பார்த்துட்டுதான் போன் நம்பர் வாங்கினேன்’’ என்றது மறுமுனைக்குரல்.
‘‘உனக்கு என்ன வேணும்?’’ என்றான் மணி.
‘‘இது… நல்ல  பிள்ளைக்கு அழகு. இப்படி சட்டுபுட்டுன்னு விஷயத்துக்கு வந்துட்டா… நான் ஏன் பேசிட்டு இருக்கப்போறேன்? அப்ராடு போய் செட்டிலாகணும்னு ஆசை. அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. காமதேனுவா நீ வந்து மாட்டியிருக்க… குடுத்தா நான் பாட்டுக்கு போயிடுவேன். நீயும் எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்’’ என்றான் மர்மநபர்.
‘‘எவ்வளவு வேணும்?’’ என்றான் மணி.
‘‘அநியாயத்துக்கு கற்பூரமா இருக்கியேப்பா… நீ ஒரு 5 லட்சம், அந்த ஆள் ஒரு 5 லட்சம்.  மொத்தம் 10 லட்சம்’’ என்றான்.
‘‘ஏய்… நீ புரிஞ்சுட்டுத்தான் பேசுறீயா? என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல’’ என்றான் மணி.
‘‘ஏம்மா… டஸ்டர் கார் வச்சிருக்கே… உன்கிட்டேயே காசில்ல… குடு மச்சி…  இல்லாட்டி… பேசாம வீடியோ எடுத்துட்டுப்போய் உண்மை விளிம்பியா போலீஸ்ட்ட  குடுத்திடுவேன். எனக்கு மெடல் கொடுத்து பாராட்டுவாங்க தெரியுமா?’’ என்றான் மர்மநபர்.
மணியின் தரப்பில் இருந்து அமைதி நிலவவே மீண்டும் அந்த நபரே பேசினான். ‘‘மச்சி ஒண்ணும் அவசரமில்ல… நாளைக்கு காலையில எந்திரிச்சு… பணத்தை ஏற்பாடு பண்ணு… நடுவில போலீசுக்கு போனா… உனக்குத்தான் ஆபத்து…’’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான் மர்மநபர்.
‘‘ஐயோ…’’ என்று கத்தலாம் போல் இருந்தது மணிக்கு.
ஒரு சனியன் தொலைஞ்சதுன்னு நிம்மதியானா… இன்னொரு சனியன் வந்து ஆடுதே… என்ன பண்றது என்று யோசித்துக் கொண்டே தூங்கிப் போனான்.
அதிகாலையிலேயே தூக்கம் கலைந்துவிட்டது மணிக்கு.
தலை கடுமையாக வலித்துக் கொண்டிருந்தது.
போனை எடுத்து ராகவனை கூப்பிட்டான்.
அவர் தூக்கக் கலக்கத்தில் போனை எடுத்தார்.
‘‘மாமா… நான் மணி பேசுறேன்’’ என்றான்.
‘‘சொல்லுப்பா…’’ என்றார் ராகவன்.
‘‘இன்னொரு புது பூதம் கிளம்பியிருக்கு மாமா…’’ என்றான் மணி.
‘‘என்னாப்பா சொல்றே…?’’ என்றார் ராகவன்.
இரவில் வந்த போன் கால் பற்றி கூறினான் மணி.
‘‘ஐயோ… இன்னொரு பிரச்னையா… அதுக்குத்தான் சொன்னேன். பேசாம போலீஸ்ல போயிடலாம்னு… இப்போ என் பொண்ணு கல்யாணத்தை வச்சுட்டு… இந்த பிரச்னை எல்லாம் எனக்கு தேவைதானா?’’ என்ற கத்த ஆரம்பித்தார் ராகவன்.
‘‘மாமா… சத்தம் போட்டு பேசாதீங்க… அங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சுடப் போகுது… நான் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்கு வர்றேன்… எங்காவது போய் இதப்பத்தி பேசலாம்… இப்போ கோபப்படாதீங்க’’ என்றான் மணி.
பதில் கூறப்படாமல் மறுமுனையில் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதில் இருந்தே…. ராகவன் கோபத்தில் இருப்பது தெரிந்தது.
சொன்னபடியே 9 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டான் மணி.
இவனைப் பார்த்த கனிகாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
அவனைப்பார்த்தும் பார்க்காதது போல் ஆபிசுக்கு புறப்பட்டு சென்றாள்.
ராகவன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு,  மணியுடன் கிளம்பினார். மனைவி சிவகாமி, ‘‘எங்கே போறீங்க?’’ என்று கேட்டபோது, அவரைப் பார்த்து முறைத்தார் ராகவன்.
கிளம்பும்போது போகும் இடம் பற்றி கேட்பது அவருக்கு பிடிக்காத ஒன்று, அதுவும் இன்றிருந்த மனநிலையில் அவர் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
‘‘அத்தை… கனிகா கல்யாண விஷயமாத்தான் வெளியே போறோம்… சீக்கிரம் வந்துடுவோம்’’ என்று மணிதான் பதில் கூறினான்.
சரி என்பதுபோல் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள் சிவகாமி.
நாகேஸ்வரராவ் பூங்காவுக்கு வந்து அமர்ந்தார்கள் இருவரும்.
ராகவன் தன்னிடம் இருந்த போனை எடுத்து, தன்னால் வளர்ந்தவரான ஹெட்கான்ஸ்டபிள் ஏகாம்பரத்துக்கு போன் போட்டார்.
நீண்ட நேரத்துக்கு பின் எடுத்தார் ஏகாம்பரம்.
‘‘சொல்லுங்க சார்…’’ என்றார் ஏகாம்பரம்.
‘‘ஏகாம்பரம் உன்னால ஒரு உதவி ஆகணுமே…’’ என்றார் ராகவன்.
‘‘மறுபடியுமா… சார்… அந்த பையன் பிரச்னையா? நான் அவன்ட்ட பட்ட அவமானம் போதும் சார்… அவங்க மாமா டிஜிபின்றது தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்க கூட மாட்டேன்’’ என்றார் சற்று கோபத்துடன்.
‘‘ஏகாம்பரம்… அந்த பையன் மேட்டர்ல உன்னை மாட்டிவிடணும்னு நான் நினைக்கலப்பா… பொண்ணை பெத்தவன் இல்லையா…. அதனாலத்தான் அடிக்கடி அவன் ஏரியா பக்கம் வர்றதை தடுக்க கொஞ்சம் மிரட்டச் சொன்னேன்… அவ்வளவுதான்பா…’’ என்றார் ராகவன்.
‘‘சரி… இப்ப என்ன பிரச்னை சொல்லுங்க…’’ என்றார் ஏகாம்பரம்.
சுற்றும், முற்றும் பார்த்து, யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு நடந்ததை கூறினார் ராகவன்.
‘‘சார்…’’ என்று அலறிவிட்டார் ஏகாம்பரம். பின்னர், ‘‘என்ன சார்… ஒரு கொலையை சர்வசாதாரணமா சொல்றீங்க… அதுவும் பாடிய வேற கொண்டு போய் தண்டவாளத்தில போட்டிருக்கீங்க… இதெல்லாம் பயங்கர அபென்ஸ் சார்…’’ என்றார் ஏகாம்பரம்.
‘‘அக்கா பையன் பாசம் ஏகாம்பரம்… இப்போ எவனோ எங்களை மிரட்டுறான்… அதுதான் என்ன பண்றதுன்னு தெரியல… உன்கிட்ட கேட்டா ஏதாவது ஐடியா கிடைக்குமேன்னுதான்…’’ என்று இழுத்தார் ராகவன்.
‘‘சார் நீங்க என்கிட்ட பேசல… நானும் உங்கக்கிட்ட பேசல… இந்த விஷயத்தில நான் தலையிட்டது வெளியே தெரிஞ்சா… என் வேலை போறது மட்டுமில்ல… நானும் உள்ளேப்போய் உட்கார வேண்டியதுதான். மொத்தல்ல இந்த மாதிரி விஷயத்தை போன்ல பேசாதீங்க… அது கூட வார்த்தைகளை வச்சு ரெக்கார்ட் ஆகும். உங்களுக்கு உதவி வேணும்னா… அந்த பையனையே பிடிங்க… அவங்க மாமாதான் டிஜிபி… அவர் நினைச்சா ஒருவேளை உங்கள காப்பாத்த முடியும்’’ என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார் ஏகாம்பரம்.
போனையே பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம், ‘‘என்ன மாமா… என்ன சொல்றார் ஏகாம்பரம் சார்?’’ என்றான் மணி.
அவர் கூறியதை கூறிய ராகவன், ‘‘அவன் கால்ல விழுறதை காட்டிலும் நான் பேசாம தற்கொலை பண்ணிப்பேன்’’ என்றார் ராகவன்.
‘‘மாமா… அப்படியெல்லாம் பேசாதீங்க… நான் அவனைப்போய் பார்க்கிறேன்’’ என்றான் மணி.

(தொடரும் 30)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==========================================

ஒன் 4 த்ரீ – பாகம் 31


இன்போ பிராஸ் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கனிகாவின் பிரேக் அப்புக்கு பின்னர் கவுசிக், அலுவலகத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசுவது இல்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்ற ரீதியில்தான் அலுவலகத்தில் இருந்தான். பழைய கலகலப்பு என்பது அவனிடம் இல்லாமல் போயிருந்தது.
சீட்டில் அமர்ந்திருந்த கவுசிக், சிவாவின் சீட்டை பார்த்தான். அது காலியாக கிடந்தது. இரண்டு நாளாக சிவா வேலைக்கு வரவே இல்லை. கவுசிக் தன்னுடைய பிராஜெக்ட் தொடர்பாக எதையோ, நினைத்துக் கொண்டிருந்தபோது, மணி தன்னை நோக்கி மணி வருவதை பார்த்தான்.
அவனை பார்க்கவே மனமின்றி, பின்புறம் திரும்பினான் கவுசிக்.
‘‘கவுசிக்… நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்’’ என்றான் மணி.
அவன் பக்கம் திரும்பிய கவுசிக், ‘‘துரோகிகள்கிட்ட நான் பேசுறது கிடையாது. நீங்க போகலாம்’’ என்றான்.
‘‘கவுசிக் என் மேல உங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்னு எனக்கு தெரியும்… அதுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்’’ என்றான் மணி.
‘‘என்னடா சோழியங்குடுமி, சும்மா வந்து ஆடுதேன்னு…’’ என்று நினைத்தபடி, ‘‘சரி வந்த விஷயத்தை சொல்லுங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘கொஞ்சம் பெர்ஷலான விஷயம். நாம பார்க் பக்கம் போகலாமா…?’’ என்றான் மணி.
‘‘அதுதான் எல்லாத்திலேயும் மண்ணை வாரி போட்டு முடிச்சிட்டீங்களே… இன்னும் என்ன பேச வேண்டியிருக்கு?’’ என்று கோபத்துடன் பேசினான் கவுசிக்.
‘‘கவுசிக்… நான் உயிர் போற ஆபத்தில இருக்கேன்… தயவு செஞ்சு என்னோட வாங்க…’’ என்றான் தழுதழுத்த குரலில்.
அவன் ஏதோ பெரிய ஆபத்தில் இருப்பதை புரிந்துக் கொண்ட கவுசிக், ‘‘சரி வாங்க போகலாம்…’’ என்று அவனுடன் பார்க்குக்கு சென்றான்.
பணி நேரம் என்பதால், பார்க்கில் யாரும் இல்லை. அங்கே சென்றவுடன்… திடீரென கவுசிக்கின் காலில் விழுந்தான் மணி.
‘‘கவுசிக் என்ன காப்பாத்துங்க… உங்களால மட்டும்தான் என்னையும், கனிகாவோட அப்பாவையும் காப்பாத்த முடியும்…’’ என்று கதற ஆரம்பித்தான்.
பத்து பேர் எதிர்த்து வந்தாலும், துணிந்து நின்று அடிக்கும் தைரியம் கொண்டவன் கவுசிக். ஆனால், திடீரென ஒருவர் காலில் விழுந்தபோது, அவனால் இரங்கி வராமல் இருக்க முடியவில்லை. பதறிப்போய், மணியின் தோளைப்பிடித்து எழுப்பினான் கவுசிக்.
‘‘என்ன நடந்தது மணி சொல்லுங்க… ஏன் கால்ல எல்லாம் விழுறீங்க?’’ என்றான்.
‘‘நீங்க கோவிச்சுக்கிற மாட்டீங்கன்னு கனிகா மேல சத்தியம் பண்ணுங்க…’’ என்றான் மணி.
கனிகாவின் மீதான கவுசிக்கின் காதலை, அவளுடைய தந்தை புரிந்து வைத்திருக்கிறாரோ இல்லையோ… இவன் சரியாக புரிந்து வைத்திருந்தான். அதனால்தான் கனிகாவின் மீது சத்தியத்தை கேட்டான்.
‘‘சரி சொல்லுங்க…மொதோ… எந்திரிங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘நான் சிவாவை கொன்னுட்டேன் கவுசிக்… கொன்னுட்டேன்….’’ என்று உடைந்து அழுதான் மணி.
‘‘என்னது சிவாவ…  கொன்னுட்டீங்களா…?’’ என்றான் அதிர்ச்சியுடன் கவுசிக்.
‘‘ஆமா…’’ என்று மணி  கூறியதும், படார்,  படார் என்று அவனது கன்னத்தில் அடித்தான் கவுசிக். ‘‘என்ன சொல்றீ்ங்க மணி… நிஜமாத்தான் சொல்லுறீங்களா…?’’ அவனது கழுத்தை பிடித்து நெருக்க ஆரம்பித்தான் கவுசிக்.
‘‘கொல்லுங்க கவுசிக்… என்னை கொல்லுங்க… ஆத்திரம் தீருற வரைக்கும் அடிச்சு கொல்லுங்க…’’
‘‘சிவா என் நண்பனும் கூட… அவனை கொல்லணும்னு நினைச்சு கொல்லல…’’ என்று நடந்ததை கூறினான் மணி.
‘‘பாவி ஒரு நல்ல  நண்பனை கொன்னுட்டு வந்திருக்கே… உனக்கு என்னடா உதவின்னு?’’ என்று மறுபடியும் ஆத்திரம் தீரமட்டும் அடித்தான் கவுசிக்.
எல்லாவற்றையும் பொறுமையாக வாங்கிக் கொண்டிருந்தான் மணி. ஒருகட்டத்தில் வெறுத்துப்போய், அவனை காலரை விட்டுவிட்டு, சிமென்ட் சேரில் பொத்தென்று உட்கார்ந்தான் கவுசிக்.
உள்ளே அழுகிறான் என்பது மட்டும் மணிக்கு தெரிந்தது.
சிறிது நேரத்துக்கு பின்னர், ‘‘எனக்கு  உதவுறதுக்கு வந்த கனிகாவோட அப்பாவும் இதில மாட்டிக்கிட்டார். இப்போ 10 லட்சம் ரூபா கேட்டு என்னை பிளாக்மெயில் பண்றான் ஒருவன். இல்லேன்னா ரெண்டு பேரையும் போலீஸ்ல மாட்டிவிட்டுடுவேன்னு மிரட்டுறான். இன்னும் பத்து நாள்ல கனிகாவோட கல்யாணத்தை வச்சுக்கிட்டு, அவரோட அப்பா இந்த பிரச்னையா ரொம்ப தவியா தவிக்கிறார்…’’ என்றான் மணி.
‘‘பாவிகளா  ஒரு கொலைய  செஞ்சதும் இல்லாம, அதுவும் என் நண்பனையே கொன்னுட்டு… என்கிட்டேயே வந்து உதவி கேட்கிறீங்களே… நீங்க எல்லாம்  மனுஷங்க தானா… பாவிகளா’’ என்று மறுபடியும் திட்டினான் கவுசிக்.
இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அங்கு கனத்த மவுனம் நிலவியது.
‘‘படுபாவி உனக்காக இல்லாட்டியும், கனிகாவோட அப்பாவுக்காக உதவுறேன். நான் எங்க மாமாக்கிட்ட பேசுறேன்’’ என்றான் கண்ணை துடைத்தபடி கவுசிக்.
இறுகிப்போய் கிடந்த மணி்யின் முகத்தில் மெல்லிதாக ஒரு புன்னகை மலர்ந்தது.
(தொடரும்)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

===========================================

ஒன் 4 த்ரீ - 32

கவுசிக் உதவுகிறேன் என்று கூறிய பின்னர்தான் மணிக்கு நிம்மதி வந்தது.
அவன் கைகளை பிடித்துக் கொண்டு, ‘‘நன்றி கவுசிக்… உன் நல்ல மனச புரிஞ்சுக்கிடாம உன்னைப்பத்தி கனிகாவோட அப்பாக்கிட்ட தப்பு, தப்பா சொல்லிட்டேன்… அவர் எனக்குத்தான் கனிகாவை கட்டி வைக்கணும்கிறதுக்காக அப்படிப் பண்ணிட்டேன்.  ஆனா, அவர் எதிர்பாராத விதமாக வேற மாப்பிள்ளைய பேசி முடிச்சிட்டார்.  இப்படின்னு தெரிஞ்சிருந்தா… உனக்கே கட்டிவைக்கிற மாதிரி சொல்லியிருப்பேன்’’ என்றான் தழுதழுத்த குரலில் மணி.
அவனிடம் இருந்து கையை உதறிக் கொண்டு, அவன் எழுதிக் கொடுத்த மர்மநபரின் போன் எண் எழுதிய  பேப்பருடன்  புறப்பட்டான் கவுசிக்.
அலுவலகத்தில் அவசர லீவுக்கு அப்ளை செய்துவிட்டு, மாமாவை பார்க்க போனான் கவுசிக்.
அங்கிருந்தபடியே மணிக்கு போன் செய்து வரவழைத்தான் கவுசிக்.
அடுத்த அரைமணி நேரத்தில் மணி, டிஜிபி அலுவலத்துக்கு வந்துவிட்டான்.
அவனை, தனது மாமா கூறியபடி அசிஸ்டன்ட் கமிஷனர் அறைக்கு அழைத்து சென்றான் கவுசிக். போகிற வழியில் மணியிடம், ‘‘கொலைகிலைன்னு உளறிட்டு இருக்காதீங்க… என் மாமாக்கிட்ட மட்டும் அந்த விஷயத்தை சொல்லியிருக்கேன். அவர், உங்களுக்கு திரட்டன் வர்ற மாதிரி அசிஸ்டன்ட் கமிஷனர்கிட்ட சொல்லி ஹெல்ப் பண்ண சொல்லியிருக்கார். அவர்கிட்ட வேற எதையும் சொல்ல வேண்டாம்’’ என்றான் கவுசிக்.
‘‘சரிங்க… கவுசிக் புரிஞ்சது… நான் அதே மாதிரி நடந்துக்கிறேன்’’ என்றான் மணி.
இருவரும் அசிஸ்டன்ட் கமிஷனர் குமார் அறையில் நுழைந்து, அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். அதற்குள் டிஜிபி ஏகாம்பரம் அவருக்கு போன் செய்திருப்பார் போலும். அவர், ‘‘சரி சார், சரி சார்…’’ என்று ஏகப்பட்ட சார்களை போட்டுக் கொண்டிருந்தனர்.
மணியும், கவுசிக்கும் அசிஸ்டன்ட் கமிஷனர் டேபிள் முன்பு இருந்த சேர்களில் அமர்ந்தனர்.
டிஜிபியின் போனை வைத்த பின்னர், ‘‘வாங்க கவுசிக்… இப்போ தான் சார் பேசினார். இவரத்தான் மிரட்டுறாங்களா?’’ என்று மணியை பார்த்து கேட்டார் அசிஸ்டன்ட் குமார்.
‘‘ஆமா சார்… ஒரு பெர்ஷனல் பைல் அவன்கிட்ட சிக்கியிடிச்சு… அதை வச்சு மிரட்டுறான்…  நீங்கதான் இவருக்கு ஹெல்ப் பண்ணணும்’’ என்றான் கவுசிக்.
‘‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னையில்ல… பார்த்துடலாம். இன்னொரு தடவை அந்த ஆள் போன் பண்றப்போ எங்கே வந்து பணத்தை தரணும்னு கேட்டு வச்சுக்கோங்க…’’ என்று கவுசிக்கிடமும், மணியிடமும் பொத்தாம் பொதுவாக கூறினார் குமார். மேலும், மர்ம நபரிடம் எப்படி பேச வேண்டும் என்பது குறித்தும் அவர் சொல்லிக் கொடுத்தார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே, மணியின் போனுக்கு அதே எண்ணில் இருந்து போன் வந்தது.
‘‘என்ன பிரதர்… என் கோரிக்கை பத்தி முடிவு பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்டான் மர்மநபர்.
‘‘நான் பணம் கொடுத்தா திருப்பி கேட்க மாட்டேன்னு… என்ன நிச்சயம்?’’ என்று அசிஸ்டன்ட் கமிஷனர்  சொல்லிக்கொடுத்தபடி பேசினான் மணி.
‘‘பிரதர் நான் புரபஷனல் கிரிமினல் கிடையாது. அது மட்டுமில்லாம கிரைம்ல சிக்கினா நான் வெளிநாட்டுக்கு போக முடியாதுங்கிறது எனக்கு தெரியும். எனக்கு தேவை பணம். உனக்கு தேவை வீடியோ… அதை நான் அழிச்சுடுவேன். அதைப்பத்தி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை’’ என்றான் மர்மநபர்.
‘‘பணத்தை கொஞ்சம் குறைச்சுக்கலாமே?’’ என்றான் மணி.
‘‘வேணும்னா… ஒரு ஐம்பதாயிரம் குறைச்சுக்கோங்க… அதுக்கு மேல குறைக்க முடியாது’’ என்றான் மர்மநபர்.
‘‘குறைக்கிறதுன்னா லட்சத்தில குறைக்கணும்… அது என்ன ஐம்பதாயிரம்? இப்போ நான் ரொம்ப டைட்ல இருக்கேன். ரெண்டு தவணையா வேணா தர்றேன்’’ என்றான் மணி.
‘‘அது சரி… மொதல்ல 5 லட்சத்த தாங்க’’ என்றான் மர்மநபர்.
‘‘சரி எங்க, எப்போ வரணும்?’’ என்று கேட்டான் மணி.
‘‘என்ன பிரதர் திடீர்னு ரொம்ப இறங்கி வர்ற மாதிரி தெரியுது… ஏதாவது ஜேம்ஸ்பாண்ட் வேலை பார்க்கலாம்னு ஐடியாவா… இல்ல போலீஸ்கிட்ட சொல்லிட்டு பேசுறீங்களா?’’ சந்தேகத்துடன் கேட்டான் மர்ம நபர்.
‘‘புரோ… பணம் இல்லைன்னா மீறுறீங்க…குடுக்கிறேன்னா… பதுங்கிறீங்க… என்னை என்னதான் பண்ணச் சொல்லுறீங்க…’’ அப்பாவியாக கேட்டான் மணி.
‘‘இல்ல உங்க பேச்சில திடீர்னு ஒரு தைரியம் தெரிஞ்சதே… அதக்கேட்டுதான் கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு’’ என்றான் மர்மநபர்.
உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அசிஸ்டன்ட் கமிஷனர் சற்று பவ்யத்துடன் பேசும்படி எழுதிக்காட்டினார்.
‘‘சரி புரோ பணத்தை எங்க கொண்டு வந்து குடுக்கணும்?’’ மீண்டும் கேட்டான் மணி.
‘‘காமராஜர் லைப்ரரி எதிர்தார்ப்பில பிர்லா அரங்கம் முன்னாடி ஒரு குப்பை தொட்டி இருக்கும். அதுல சாயங்காலம் நாலு மணிக்கு மத்தியானம் கொண்டு வந்து போட்டுடுங்க’’ என்றான் மர்மநபர்.
‘‘பணத்தை கொடுத்த பின்னாடி என்னை ஏமாத்திட மாட்டியே?’’ என்று கேட்டான் மணி.
‘‘நம்பிக்கைத்தான் பிரதமர் வாழ்க்கை… நம்பி வாங்க… வீடியோவோட போங்க…’’என்று பிரபு பாணியில் பேசினான் மர்மநபர்.
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், மூவருமே அதை கேட்டிருந்தனர்.
அசிஸ்டன்ட் கமிஷனர், உள்ளே சென்று ஒரு சூட்கேசை எடுத்து வந்தார். இதுபோன்ற மிரட்டல் கேஸ்களுக்காக பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுக் கட்டுக்களை அதில் எடுத்து வைத்தார். பார்க்க அச்சு அசல் ஒரிஜினல் போலவே இருந்தது.
அதை எடுத்துக் கொண்டு மணியும், கவுசிக்கும் கிளம்பினர்.
ஏற்கனவே மர்மநபர் கூறியபடி நாலு மணிக்கு அந்த குப்பை தொட்டியில் சென்று அந்த சூட்கேசை போட்டான் மணி. பின்னர் திரும்பி பார்க்காமல் காரில் ஏறி கிளம்பினான்.
சிறிது நேரத்தில் அந்த சூட்கேசை  எடுக்க வந்த ஒரு நடுத்தர வயது ஆளை, மறைந்திருந்த போலீசார் அலேக்காக தூக்கிக் கொண்டு டிஜிபி ஆபிசுக்கு கொண்டு சென்றனர். அங்கு காத்திருந்த மணியும், கவுசிக்கும், அந்த நபரை பார்த்து ஆச்சரியமடைந்தனர். அவருக்கு சுமார் 52 வயது இருக்கும்.
‘‘இந்த ஆளா… வெளிநாட்டுக்கு போகணும்னு ஆசைப்பட்டான்…’’ என்று வியந்தான் மணி.
‘‘சும்மா அவுத்து விடுறது தானே… போகட்டும் விடுங்க… உங்க பிரச்னை முடிஞ்சிடுச்சு இல்ல… இனி போலீஸ்காரங்க பார்த்துக்குவாங்க… இதைப்பத்தி வெளியே யார்க்கிட்டேயும் மூச்சு விடாதீங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘கவுசிக்… இந்த உதவிய என் வாழ்நாள்ல மறக்க மாட்டேன்… உங்க நல்ல மனசை பத்தி புரிஞ்சுக்காம…’’ என்று மணி முடிப்பதற்குள், ‘‘மறுபடியும் உங்க நன்றி புராணத்தை ஆரம்பிச்சுடாதீங்க… கிளம்புங்க… கனிகாவோட அப்பாக்கிட்ட தைரியமா இருக்கச் சொல்லுங்க…’’ என்றான் கவுசிக்.
‘‘சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு…’’ என்று டிஜிபி அறையை பார்த்து கேட்டான் மணி.
‘‘மாமாக்கிட்ட நான் சொல்லிக்கிறேன்… மேலும், அவர் இப்போ ரூம்ல இல்ல. ஏதோ மீட்டிங் அட்டென்ட் பண்ண போயிருக்கார்… பரவாயில்ல… நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்… நீங்க கிளம்புங்க’’ என்றான் கவுசிக்.
நிம்மதியாக வீட்டுக்கு கிளம்பினான் மணி.
(தொடரும் 31)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
=========================================

ஒன் 4 த்ரீ – பாகம் 33

அலுவலகத்தில், கனிகா எல்லோருக்கும் பத்திரிகை கொடுத்து கொண்டிருந்தாள்.
இன்னும் சரியாக 4 நாள்தான் இருந்தது கல்யாணத்துக்கு. பத்திரிகை கொடுத்தவிட்டு, அப்படியே 20 நாள் லீவுக்கு சென்றுவிடும் திட்டத்தில் இருந்தாள் கனிகா.
கனிகாவுடன் அதிகாரிகளை கூப்பிடுவதற்காக அவளது அப்பாவும் வந்திருந்தார்.
எல்லோரையும்  கூப்பிட்டுக் கொண்டு வந்தவள்,  வேண்டும் என்றே கவுசிக்கின் அருகில் இருந்த சிவாவின் சீட்டுக்கு சென்று ஒரு பத்திரிகையை வைத்தாள். அருகில் இருந்த ஸ்டாப்பிடம், ‘‘சிவா இன்னும் ஆபிசுக்கு வரலியா… அவருக்கு என்ன அப்படி முக்கியமான வேலையோ…?’’ என்று கூறிவிட்டு, கவுசிக்கை நாசுக்காக கடந்தாள்.
அதைப்பார்த்தாலும், பார்க்காதது மாதிரி இருந்தான் கவுசிக். எதற்கு அவளது கோபத்தை சம்பாதிப்பானேன் என்று நினைத்துவிட்டான்.
ஆனால், அவள் கவுசிக்குக்கு பத்திரிகை கொடுக்காமல் கடந்து சென்றதை பார்த்துக் கொண்டிருந்த அவளது அப்பா, கவுசிக்கிடன் வந்து அவனது கையை பிடித்துக்  கொண்டார். ‘‘தம்பீ… தப்பா நினைச்சுக்காதீங்க… நீங்க அவசியம் குடும்பத்தோட கல்யாணத்துக்கு வரணும். என் வாழ்க்கையை மீட்டுக் குடுத்திருக்கீங்க... கொஞ்சம் அவசரப்பட்டு மணியோட பிரச்னையில நானும் சிக்கிட்டேன். ஆனா, எதையும் மனசுல வச்சுக்காம வந்து காப்பாத்தினீங்க… பாருங்க… ரொம்ப நன்றி தம்பீ… நீங்க அவசியம் கல்யாணத்துக்கு வரணும். என் பொண்ணு கூப்பிடலேன்னா என்ன… நான் கூப்பிடுறேன். நீங்க…. என் கெஸ்டா கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்’’ என்றபடி பத்திரிகையை நீட்டினார்.
அதில், திருவாளர் கவுசிக் என்று அழகாக எழுதப்பட்டிருந்தது.
‘‘கட்டாயம் வர்றேன் சார்…’’ என்றான் கவுசிக்.
‘‘இனிமே நீங்களும் என் தங்கை பையன் மாதிரிதான். அதனால மாமான்னே கூப்பிடுங்க…’’ என்றார் ராகவன்.
‘‘சரிங்க சார்…’’ என்று கூறிவிட்டு, நாக்கை கடிந்து கொண்டு, ‘‘சரிங்க மாமா…’’ என்றான் கவுசிக்.
‘‘நல்லா இருங்க தம்பீ…’’ என்று கூறினார் ராகவன்.
அந்த நேரத்தில் மணியும் வந்து சேர்ந்தான்.
‘‘கவுசிக் கட்டாயம் கல்யாணத்துக்கு வந்துடுங்க… நீங்க செஞ்ச உதவி…’’ என்று ஆரம்பித்தான்.
அதற்குள், ‘‘மணி உங்களோட நன்றி புராணம் போதும்… நான் கட்டாயம்  கல்யாணத்துக்கு வர்றேன்’’ என்று கூறினான்  கவுசிக்.
அவர்கள் இருவரும் நகர, பத்திரிக்கையை பிரித்தான் கவுசிக்.
மாப்பிள்ளை இடத்தில் கணேஷ் என்று போட்டிருந்தது. கீழே இன்போசிஸ், அட்லாண்டா என்று இருந்தது.
‘‘ஓ… சாப்ட்வேரா…’’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, மீண்டும் கம்ப்யூட்டரில் மூழ்கினான் கவுசிக்.
ராஜா கல்யாண மண்டபம் களைக்கட்டியிருந்தது.
விருந்தினர்கள் வருகை அதிகமாக இருந்தது.
‘‘மாப்பிள்ளை வீட்டுல ஜனங்க அதிகம்போல…’’ என்று தன் அருகில் இருந்த மணியிடம் கூறினார் ராகவன்.
‘‘ஆமாம்… மாமா… அவங்க ஆட்கள்தான் ஜாஸ்தியா இருக்காங்க… நம்மக்கிட்ட ஒரு 200 பேர் வருவாங்கன்னு சொன்னாங்க. ஆனா, வந்தவங்களை பார்த்தா நானூரை தாண்டும்போல… எல்லாரும் கார்லதான் வந்து எறங்குறாங்க… நம்ம மாப்பிள்ளை குடும்பத்தை தவிர மத்தவங்க எல்லாரும் கொஞ்சம் வசதி போல…’’ என்றான் மணி.
‘‘ஆமா… மணி  நானும் அதைத்தான் நினைச்சிட்டு இருந்தேன்… சரி விருந்தாளிங்களை கவனி’’ என்றபடி மணமேடைக்கு சென்றார் ராகவன்.
மாப்பிள்ளை தயாராக வந்து உட்கார்ந்திருந்தார். கழுத்தில் ரோஜாப்பூ கேம்பினேஷனில் மல்லிகை மாலையை அணிந்து உட்கார்ந்திருந்தார். மேடையின் முன்புறம் அமர்ந்திருந்தவரை பார்த்து, சரியா, சரியா என்பதுபோல் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார் மாப்பிள்ளை.
அப்போதுதான் கவுசிக் மண்டபத்தில் நுழைந்தான். கனிகா தன்னைப் பார்த்தால், தப்பாக நினைப்பாளோ என்று கடைசி வரிசையிலேயே அமர்ந்துக் கொண்டான்.
அவனை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டான் மணி. நேராக அவனிடம் ஓடி வந்து, ‘‘கவுசிக் வாங்க… என்ன கடைசியில உட்கார்ந்திருக்கீங்க… நீங்க எங்களோட ஸ்பெஷல் கெஸ்ட். வந்து முதல் வரிசையில உட்காருங்க…’’ என்றான்.
‘‘இல்ல மணி… என்ன இருந்தாலும், கனிகாவுக்கு தர்மசங்கடமா இருக்கும். தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுருங்க…’’ என்று அவனை வலுக்கட்டாயமாக விருந்தாளிகளை கவனிக்க தள்ளிவிட்டான்.
வேண்டா வெறுப்பாக அங்கிருந்து நகர்ந்தான் மணி.
மேடையில் இருந்து இவனை பார்த்த ராகவனும், முன்னாடி வரும்படி சைகை காட்டினார். ஆனால், வேண்டாம் என்பதுபோல் கையெடுத்து கும்பிட்டான் கவுசிக்.
அய்யர், மணப்பெண்ணை அழைத்து வர உத்தரவிட மாடியில் இருந்து அழகு தேவதையாக வந்து இறங்கினாள் கனிகா. அவள் கண்கள் அழுததன் காரணமாக சிவந்திருந்தது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் மணமேடையில் வந்து அமர்ந்தாள்.
மணமேடையில் அவள் வந்து அமர்ந்தபோது, வழக்கம்போல முன்வரிசையில் இருந்த நபரிடம் சரியா என்பதுபோல் கட்டை விரலை தூக்கி காண்பித்தார் மாப்பிள்ளை. அவரும் கட்டை விரலை தூக்கிக்காண்பித்தார்.
திடீரென கழுத்தில் இருந்து மாலையை எடுத்து, தூக்கிப்போட்டார் மாப்பிள்ளை.
‘‘நான் இந்த பொண்ணை கட்டிக்கிற மாட்டேன்’’ என்று சத்தம்போட்டு கூறினார் மாப்பிள்ளை.
அதிர்ந்து விட்டார் ராகவன். அவர் விளையாடுகிறாரோ என்று நினைத்து, ‘‘மாப்பிள்ளை என்ன இது… சம்பந்தமில்லாம… அமைதியா உட்காருங்க… எல்லாரும் பார்க்கிறாங்க பாருங்க…’’ என்றார்.
‘‘யோவ் நான் உன்னை கட்டிக்கிற முடியாதுய்யா…’’ என்று கத்தினார் மாப்பிள்ளை.
அப்போதுதான் மாப்பிள்ளை உண்மையிலேயே கோபத்தில் இருக்கிறார் என்பதையே உணர்ந்தார் ராகவன். அடுத்த நொடி எதைப்பற்றியும் கவலைப்படாமல், ‘‘ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சிடுங்க…தயவு செஞ்சு மேடையில உட்காருங்க…’’ என்று கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார் ராகவன்.
‘‘முடியாதுய்யா… உம்பொண்ணு ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணியிருக்கு… அவனோட பல இடங்களுக்கு சுத்தியிருக்கு… அதை மறைச்சு என் தலையில கட்டப்பார்க்கிறியா? எவ்வளவு தில்லாலங்கடி ஆளுய்யா நீ…’’ என்று சத்தம்போட்டார் மாப்பிள்ளை.
‘‘மாப்பிள்ளை அப்படியெல்லாம் இல்ல… என் பொண்ணு உத்தமிங்க. தயவுசெஞ்சு தாலி கட்டுங்க மாப்பிள்ளை. 10 பவுன் வேணா சேர்த்து போடுறேன் மாப்பிள்ளை…’’ என்றார் ராகவன்.
‘‘யோவ்… என்னை என்ன வியாபாரின்னு நினைச்சியா… நீ போடுற பத்து பவுனுக்காக உன் பொண்ணை கட்டிக்கிட்டு போனா  என் வாழ்க்கை நாசமாயிடும்யா… வேணும்னா ஒரு 100 பவுன் சேர்த்து போடு… ஒரு காரும் வாங்கிக்குடு கட்டிக்கிறேன்…’’ என்றார் மாப்பிள்ளை.
ஆடிவிட்டார் ராகவன். ஏற்கனவே தன் சேமிப்பை எல்லாம் போட்டுத்தான் அந்த கல்யாணத்தையே அவர் நடத்திக் கொண்டிருந்தார்.
எவ்வளவோ கெஞ்சியும் மாப்பிள்ளை கேட்பதாக இல்லை. மாப்பிள்ளையின் பெற்றோர்கள் கூறியும் கூட அவர்களையே திட்டி விரட்டிய, மாப்பிள்ளை, ‘‘100 பவுன் போட்டா கல்யாணம்… இல்லாட்டி கெளம்பிட்டே இருக்கேன்’’ என்றபடி எழுந்து முன்வரிசைக்கு சென்று உட்கார்ந்துக்  கொண்டார்.
கனிகாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொல, பொலவென்று கொட்டிக் கொண்டிருந்தது.
(தொடரும் 33)
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.
==============================================

ஒன் 4 த்ரீ – பாகம் 34

மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டேன் என்று முன்வரிசையில் சென்று அமர,  கனிகா மேடையில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். மாப்பிள்ளை தாலிகட்ட மறுத்துட்டாராம் என்று மண்டபமே பரபரப்பாகிவிட்டது.
அதற்குள் கூட்டத்தில் யாரோ, ‘‘இந்த மூதேவிக்கு கட்டி வைக்கிறதவிட, அந்த பொண்ண லவ் பண்ண பையனையே கட்டி வச்சிடலாம்’’ என்று குரல் கொடுத்தார்.
பின்னால் திரும்பி பார்த்து முறைத்தார் மாப்பிள்ளை.
அந்த குரல், ராகவன் காதிலும் கூட விழுந்தது.
அருகில் இருந்த மணி, ‘‘மாமா… யோசிக்க வேண்டாம்… கவுசிக் இங்கதான் இருக்கான். பேசாம அவருக்கே கட்டிவச்சிடலாம்… நீங்க போய் கேட்டுக்கிட்டா நிச்சயம் தாலி கட்டுவார்’’ என்றான்.
சற்று நிதானித்து கவுசிக்கை நினைத்துப் பார்த்தார். எந்த இடத்திலும் அவன் தவறு செய்ததாக தெரியவில்லை. முக்கியமாக கொலை வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றியிருக்கிறான். மகளுக்கு பிடித்தவனும் கூட. அப்புறம் என்ன வேணும் என்று மனுது கூவியது.
டக்கென்று, அங்கவஸ்திரத்தை ஏத்திப்போட்டுக் கொண்டு, விறுவிறுவென்று கவுசிக்கிடம் சென்றார் ராகவன்.
‘‘தம்பீ… எனக்கு வேற வழி தெரியல… என் பொண்ணுக்கு வாழ்வு குடுங்க… நீங்களும் இந்த மாப்பிள்ளை போல ஏதாவது சொல்லிடாதீங்க… என் மனசு தாங்காது. என்னடா திடீர்னு வந்து கேட்கிறானேன்னு நினைக்க வேண்டாம். நான் வேணா உங்க  அப்பா, அம்மாக்கிட்ட பேசுறேன்…’’ என்று கூறியபடி அவனது காலில் விழப்போனார் ராகவன்.
பக்கத்தில் இருந்த மணியும், ‘‘கவுசிக் நீங்க விரும்பின பொண்ணே உங்களுக்கு கிடைக்கப்போகுது… தயவு செஞ்சு வந்து தாலி கட்டுங்க…’’ என்றான்.
அருகில் இருந்த ஓரு பெண், ‘‘ஏம்ப்பா… மகாலட்சுமி மாதிரி இருக்கா பொண்ணு… பேசாம போய் தாலி கட்டுய்யா…’’ என்றார்.
கண்ணை மூடி ஒரு சில விநாடிகள் யோசித்த கவுசிக், அடுத்தவிநாடி மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அதற்குள் மணி அவனுக்கு பட்டுசட்டை, வேட்டியை எடுத்து வந்து கொடுத்தான். அருகில் இருந்த மணமகன் அறையில் உடையை மாற்றிக் கொண்டு வந்து மணமேடையில் அமர்ந்தான் கவுசிக்.
கனிகா மெல்லி நாணத்துடன், கண்ணில் வடிந்த ஆனந்தக்கண்ணீருடன் அவனை பார்த்தாள். அவளைப்பார்த்து புன்முறுவல் பூத்தான் கவுசிக்.
அய்யர் மீண்டும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார். கூட்டத்தினர் எல்லாம் அவரவர் இடங்களில் அமர்ந்து கொண்டனர்.
அய்யர் தாலி எடுத்துக் கொடுக்க, கூட்டத்தினரை பார்த்தான் கவுசிக்.
‘‘கட்டுய்யா… கட்டுய்யா…’’ என்று ஒட்டுமொத்தமாக குரல் வந்தது.
சந்தோஷத்துடன் கனிகாவின் கழுத்தில் தாலியை கட்டினான் கவுசிக்.
‘‘என்ன மணவறையை சுத்தி ஒரேக்கூட்டம்… எல்லாரும் கொஞ்சம் கீழே போய் உட்காருங்க… மாப்பிள்ளைக்கு வேர்த்திருக்கு பாருங்க…’’ என்று ஒரு குரல் வந்தது.
யாரது என்று எல்லோரும் திரும்பி பார்த்தனர்.
அது சிவா. புத்தம் புது பளபள சட்டையும்,  வேட்டியும் அணிந்து கல்யாணத்துக்கே வந்தவன் போல வந்திருந்தான்.
அவனைப்பார்த்த மணியும், ராகவனும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
‘‘அங்கேயே பார்த்துட்டு இருந்தா எப்படி… அடுத்தது கேக் கட்டிங்… கவுசிக்… என் மருமகள கூட்டிட்டு கீழே வாடா’’ என்று ஒரு குரல் வந்தது.
அதிர்ச்சிக்கு இடையே மணி கீழே பார்த்தான்.
அது, அவனை போனில் மிரட்டி, போலீசில் சிக்கிய நபர்.
‘‘அப்பா… எப்பவுமே இப்படித்தான்… கொஞ்சம் ரொமான்டிக் ஆனவர். வா கனிகா… கீழே போவோம்’’ என்று கனிகாவின் கையை பிடித்துக் கொண்டு கீழே போனான் கவுசிக்.
கீழே நின்றிருந்த அவனது அம்மா, ‘‘டேய்… அத்தை, மாமா, சித்தின்னு எல்லாரும் வந்திருக்காங்க..,. எல்லார் கிட்டேயும்  ஆசிர்வாதம் வாங்கிக்கோ…’’ என்றாள்.
‘‘கட்டாயம்மா…’’ என்றான் கவுசிக்.
விக்கித்து நின்றிருந்த மணி, ராகவனிடம் வந்த சிவா, ‘‘டேய்… நீ திட்டம்போட்டு என் நண்பனோட  வாழ்க்கையை கெடுப்பே… நாங்க திட்டம் போட மாட்டோமா… கவுசிக்… அவன் மாமாவோட சேர்ந்து போட்ட பிளான்ல தான்மர்டர். அதற்கடுத்து வீடியோ, காப்பாத்தல் படலம் எல்லாம்…’’ என்றான். ஏற்கனவே கவுசிக்கோட மாமாவே, அவங்க குடும்பத்தில காதலை பத்தியும் பிரச்னையை பத்தியும் எல்லார்கிட்டேயும் சொல்லி ஒப்புதல் வாங்கிட்டாரு… அதுல அவங்கப்பாவே ஒரு கேரக்டர்ல நடிக்க வந்ததுதான் ஹைலைட். அப்புறம்,  மாப்பிள்ளை வீட்டு தரப்பில இங்க வந்திருக்கிறது, பெரும்பாலும் கவுசிக்கோட சொந்தக்காரங்கதான். இதுவும் டிஜிபி மாமா பண்ண ஏற்பாடுதான்.
எங்கிருந்தோ வந்த பழைய மாப்பிள்ளை, ‘‘அண்ணே… அந்த வீடியோவ என்கிட்ட குடுத்திட்டீங்கன்னா… நான் வேற பொண்ண பார்க்க போயிடுவேன்’’ என்று கெஞ்சிக்கொண்டு வந்து நின்றார்.
‘‘கருமாந்திரம் பிடிச்சவனே… இவர் பெரிய ஹாலிவுட் ஹீரோ… இவரோட அந்தரங்கத்தை நாங்க படம் பிடிச்சு வச்சிருக்கிறதுக்கு… சும்மா உன்னை மணமேடையில் இருந்து கெளப்புறதுக்கு சொன்ன உடான்சுய்யா… என் டுபுக்கு’’ என்றான் சிவா.
‘‘அடப்பாவீகளா… வேலை போய்டும். வெளிநாடு போக முடியாது. மானம் போய்டும்னு அடுக்கடுக்கா சொல்லி ஏமாத்தி புட்டீங்களேடா… அது சரி திண்டிவனம் பிரியாணி, உளூந்தூர் பேட்டை நாய்க்குதான்னா அத யாரால மாத்த முடியும்…’’ என்று புலம்பியபடி நகல ஆரம்பித்தான் மாப்பிள்ளை.
அவனைப்பிடித்து இழுத்து, ‘‘யோவ் திண்டிவனம் பிரியாணி, சென்னை மாப்பிள்ளைக்கு கிடைச்சிடிச்சு… போய்யா… போய்யா…’’ என்றான் கையை காட்டிக்காட்டினான் சிவா.
‘‘நல்லா இருங்கடா நீங்களெல்லாம்…’’ என்று நொந்துக் கொண்டே சென்றான் பழைய மாப்பிள்ளை.
மணியும், ராகவனும் அவன் கழுத்தை பிடிப்பதற்காக ஓடிவந்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தான் சிவா.
நடந்த எதைப்பற்றியும் அறியாத கனிகா, கவுசிக்குடன் சந்தோஷமாக கேக் வெட்டினாள்.

சுபம்.

No comments:

Post a Comment

Thanks