ஏ பார் ஆட்டம் 5




நாள் நவ.25. நேரம்: நண்பகல்.
ராமேஷ்வர் சரிந்து விழுந்தவுடன், அவரை விசைப்படகின் கீழே இழுத்துச் சென்றான் அம்ஜத்.
படகில் அப்துல்லாவும் 10 பேரும் கூடியிருந்தனர்.
‘‘இப்போதிலிருந்து நம்முடைய வேலை ஆரம்பமாகிறது. நமக்கு அங்கே இருந்து சிக்னல் வந்தவுடன் இந்த விசைப்படக கைவிட்டு, நம்ம ரப்பர் போட்ல கரைக்கு போறோம். அங்கே ஏற்கனவே சொன்னபடி நானும் அம்ஜத்தும், நாரிமன் பாய்ண்ட் போறோம். இம்ரான், பஷீர், வாஷிம் ரயில்வே ஸ்டேஷன், ஜாகீர், கரீம் தாஜ்மகால் ஓட்டல், கபூர் லியோபோல்ட் கபே போறோம். கபூர் நீ உன்னோட வேலையை முடிச்சுட்டு வேகமாக வந்து எங்களோட கலந்துக்கிற. உங்களால எவ்வளவு எதிரிகளை கொல்ல முடியுமோ அவ்வளவு பேரை கொல்லுங்க. நாம கொல்லும் ஒவ்வொரு உயிருக்கும், கஷ்டப்படுற நம்ம குடும்பத்துக்கு பணமா போய் சேரும்னு உறுதியளிச்சிருக்காங்க’’ என்றான் அப்துல்லா.
‘‘எல்லார் பேக் பேக்கிலேயும் பேரீச்சம் பழம், பிரட், பிஸ்கட் பாக்கெட் சாக்லெட் இருக்கு. பசிக்கு இதை சாப்பிட்டுக்கலாம். யாரும் யாரையும் கான்ட்டாக்ட் பண்ண முடியாது. அதனால உங்க கவனமெல்லாம் எதிரிகளை கொல்றதிலதான் இருக்கணும்’’ என்றான் அம்ஜத்.
எல்லோரும் அவர்களின் உத்தரவை ஏற்பதுபோன்று கட்டைவிரலை தூக்கி காட்டினர்.
கரையில் இருந்து இருந்து வரும் சிக்னலுக்காக அவர்கள் காத்திருக்க ஆரம்பித்தனர்.
இரவு வரையில் எந்த சிக்னலும் வரவில்லை. இதனால் 5 பேர் முழித்திருப்பது என்றும், மீதம் ஐந்து பேர் உறங்குவது என்றும் ஷிப்ட் போட்டுக் கொண்டு தூங்க ஆரம்பித்தனர். மறுநாளும் அவர்கள் எதிர்பார்த்திருந்த சிக்னல் கரையில் இருந்து வரவில்லை.
இதனால் படகில் இருந்த கஞ்சியுடன் , மீனை சுட்டு சாப்பிட்டனர்.
மாலை 5 மணிக்கு சாட்டிலைட் போன் அலறியது.
அப்துல்லாதான் எடுத்தான்.
‘‘பழம் பறிக்கலாம்’’ என்றது மறுமுனை குரல்.
அத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
‘‘சகோதரர்களே நாம் தயாராகலாம்’’ என்றான் அப்துல்லா.
அடுத்த 10 நிமிடத்தில் எல்லோரும் தயாரானார்கள். ரப்பர் படகில் காற்றை நிரப்பி தண்ணீரில் போட்டார்கள். எல்லோரும் ஏறிக் கொள்ள, அப்துல்லா கடைசியாக படகில் ஏறினான்.
எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம் காணப்பட்டது. படகு தண்ணீரை கிழித்துக் கொண்டு மும்பை கரையை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. 10 பேரும் பேக் பேக்கும், கைகளில் கவர் போட்டு மூடியிருந்த இயந்திர துப்பாக்கியும் இருந்தன.
கரையை நெருங்கிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு சில போலீஸ் படகுகள் போன்று காணப்பட்டதை அம்ஜத்தான் பார்த்தான். இதனால் கரையை நெருங்கும் முன்னரே அவர்கள் அப்படியே சுற்றிக் கொண்டு அடுத்த பகுதியை நோக்கி விரைந்தார்கள்.
அப்துல்லாவிடம் இருந்த சாட்டிலைட் போன் அலறியது. எடுத்து பார்த்தான். தனக்கு தெரிந்த எண்ணில் இருந்துதான் அழைப்பு வந்துக் கொண்டிருந்தது. இதனால் தைரியமாக அழைப்பை எடுத்தான்.
‘‘கிராமத்தை நெருங்கிட்டீங்களா?’’ எதிர்முனையில் இருந்து இஸ்மாயில் கேட்டார்.
‘‘இன்னும் 10 நிமிஷத்தில மருந்து தெளிக்க ஆரம்பிச்சிடுவோம்’’ என்றான் அப்துல்லா.
‘‘சரி இனிமே எந்த தொடர்பும் வேண்டாம்’’ என்றார் இஸ்மாயில்.
‘‘சரி’’ என்று இணைப்பை துண்டித்தான் அப்துல்லா.
அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ரப்பர் போட்டை நிறுத்தி இறங்கினார்கள். அதில் இருந்து காற்றை பிடுங்கிவிட்டு, பிரதான சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
சாலையில் வந்ததும், ஏற்கனவே பேசிக் கொண்டபடி அனைவரும் பிரிந்து சென்றனர்.
அப்துல்லாவும், அம்ஜத்தும் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்த ஒரு டாக்சியை நிறுத்தினார்கள். அவர்களை பார்த்தவுடன், தனக்கு நல்ல டூரிஸ்ட்கள் கிடைத்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியுடன், டிரைவர் அவர்கள் வந்து நிறுத்தினான்.
இருவரும் டாக்சியில் ஏறி, வாடகை பேரம் எதுவும் பேசாமல் நாரிமன் பாய்ன்ட் என்றார்கள்.
அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்தது நாரிமன் பாய்ன்ட். எப்படியும் இன்று 200 ரூபாய் தேறிவிடும் என்ற சந்தோஷத்தில் வண்டியை ஓட்டினார் டிரைவர்.
டாக்சியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல், ஆளுக்கு ஒரு பக்கம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஏற்கனவே காட்டப்பட்டிருந்த அபார்ட்மென்ட் கட்டிடம் கண்ணெதிரே தெரிந்து கொண்டிருந்தது.
அதைப்பார்த்தவுடன், அப்துல்லா டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
‘‘உங்க இடம் வந்திருச்சா சார்?’’ என்று கேட்டார் டிரைவர்.
‘‘உன் விதி முடிஞ்சிருச்சு…’’ என்று கூறியவாறு, அவரது பின்மண்டையில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டான் அப்துல்லா.
என்ன நடக்கிறது என்று ஊகிக்கப்பதற்குள் உயிரை விட்டார் டிரைவர்.
இருவரும் தங்கள் பொருட்களுடன் அபார்ட்மென்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
(தொடரும் 5)
-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks