வச்சக்குறி தப்பாது 6


6

29 ஜூன் 1976. மாலை 5 மணி.

டெல் அவிவ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை.

கடத்தப்பட்ட விமான பயணிகளை மீட்பதற்கான கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையின் ஒரு அறையில் அமர்ந்திருந்தார் டேன் சோம்ரான். அந்த ஏசி அறையில் நிசப்தமாக இருந்தது. .உயர் அதிகாரிகளை தவிர வேறு யாரும் அங்கு இல்லை. அமைச்சர் சிமன் பெரஸ் அங்கு வருவதாக டேன் சோம்ரானுக்கு தகவல் சொல்லப்பட்டிருந்ததால், அவருக்காக காத்திருந்தார்.

குறித்த நேரத்தில் அமைச்சர் சிமன் பெரஸ் அங்கு வந்து சேர்ந்தார். அமைச்சருக்கு மரியாதை செலுத்தினார் டேன் சோம்ரான். அவருடன் கைக்குலுக்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தார் சிமன் பெரஸ்.

சில நிமிடங்கள் அங்கு அமைதியாக கழிந்தது.

டேபிளில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு, சிமன் பெரஸ்தான் ஆரம்பித்தார். ‘‘மிஸ்டர் டேன் சோம்ரான் பிரதமர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். இப்போதைக்கு நம்ம பிளானை செயல்படுத்த அவர் ஒப்புதல் தந்திருக்கிறார்’’ என்றார்.

‘‘வாவ்…. இட்ஸ் ஏ குட் மெசேஜ் மினிஸ்டர்’’ என்றார் டேன் சோம்ரான்.

‘‘நீங்க உடனடியா.பிணைக்கைதிகள் சில பேரை விடுவிக்க அவங்கக்கிட்ட வலியுறுத்துங்க… கைதிகளை விடுவிக்கிறது தொடர்பாக நீதிமன்றத்தில அட்டர்னி மூலமா பெட்டிஷன் பைல் பண்ணியாச்சு… அதை சொல்லுங்க…. அப்புறம் எவ்வளவு அவகாசம் கேட்க முடியுமோ…. அந்த அளவுக்கு அவங்கக்கிட்ட அவகாசம் கேளுங்க…. அப்பத்தான் நம்ம திட்டத்துக்கு நாம தயாராக முடியும்’’

‘‘யெஸ் சார்…. உடனே செயல்ல இறங்கிடலாம்…’’ என்று கூறிவிட்டு, தீவிரவாதிகளுடன் இணைப்பை ஏற்படுத்தும்படி அருகில் இருந்த அதிகாரிகளிடம் கூறிய டேன் சோம்ரான், மைக்கில் பேச தயாரானார்.

இணைப்பு கொடுத்தாகிவிட்டது என்பதற்கான சமிக்ஞையை காண்பித்தார் கட்டுப்பாட்டு அறை அதிகாரி.

சற்றே கணைத்துக் கொண்டு, ‘‘நான் டேன் சோம்ரான் பேசுகிறேன். உங்களிடத்தில் பேச வேண்டும்’’ என்றார் டேன் சோம்ரான்.

‘‘…….’’

சிறிது நேரம் அமைதியாக இருந்த மைக்கில், சிறிய கொகொர சப்தத்தை தொடர்ந்து,  ஒற்றைநாடு ஆசாமியின் கரகரப்பு குரல் கேட்டது.

‘‘சொல்லுங்கள்…..’’

‘‘நான் டேன் சோம்ரான் பேசுகிறேன். உங்களுடைய கோரிக்கைப்படி கைதிகளை விடுவிக்க முடிவு செஞ்சிருக்கோம். இதற்காக இன்னைக்கு காலையில நாங்கள் நீதிமன்றத்தில மனுத்தாக்கல் செஞ்சிருக்கோம். அநேகமாக நீதிமன்றத்தில அனுமதி கிடைச்சிடும்னு நம்புறோம். அதேசமயம், மற்ற நாடுகள்கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறோம். இது தூதரகரீதியிலான முயற்சி அதனால உடனடியாக அவங்க பதில் சொல்லிட மாட்டாங்க…. அவங்க அரசாங்கத்துக்குகிட்ட பேசித்தான் முடிவெடுப்பாங்க… அதுக்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுது’’

‘‘ம்…. நாங்கள் கேள்விப்பட்டோம். ஆன ரொம்ப நாட்கள் நாங்க பொறுமையா இருக்க மாட்டோம். உங்களுக்கு ரெண்டு நாள் குடுத்திருக்கோம். உங்க நாட்டு மக்கள் மேல கரிசனம் இருந்தா…. நீங்க உங்க நடவடிக்கைய வேகப்படுத்தலாம். நாங்க 1ம் தேதி விதித்த கெடு முடியறதுக்குள்ள எங்களுடைய கோரிக்கையை நிறைவேத்தியே ஆகணும். இல்லாட்டி எதுக்காகவும், யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம். நாங்க சொன்னபடி பயணிகளை கொன்னுட்டு போயிட்டே இருப்போம். இதுல எந்த மாற்றமும் இல்லை….’’

‘‘நீங்க சொல்லியிருக்க நிபந்தனைகளை நாங்க நிறைவேத்த ஆரம்பிச்சிருக்கோம். இது நீதிமன்றம் மற்றும் சில நாடுகள் சம்பந்தப்பட்டதுன்றால கொஞ்சம் தாமதம் ஆகுது. ஆனாலும், அதை எவ்வளவு வேகமா செய்ய முடியுமோ அவ்வளவு வேகமாக செய்து முடிப்போம். அதேசமயம், எங்களுக்கு நம்பிக்கை வர்ற மாதிரி நீங்களும் நடந்துக்கணும்னு எதிர்பார்க்கிறோம்’’

‘‘என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க’’

ஒற்றைநாடி மெதுவாக தன் வழிக்கு வருவதை புரிந்துக்கொண்ட டேன் சோம்ரான், ‘‘பிணைக்கைதிகள்ல பல வயசானவங்க, பெண்கள், குழந்தைகள் இருக்கிறதா தெரியவந்திருக்கு. அவங்களை விடுவிக்கலாமே?’’ என்றார்.

‘‘சின்ன ரொட்டித்துண்டை போட்டுட்டு, பெரிய கேக் வேணும்னு கேட்கிறீங்க?’’

‘‘இது நாங்க மனிதாபிமான அடிப்படையில கேட்கிறது. இதில அரசியலோ, தந்திரமோ எதுவுமே இல்லையே…. நீங்க மக்களுக்காக போராடுறதா தானே சொல்லிட்டு இருக்கீங்க… அந்த மக்கள்ல, சக்தி குறைந்தவங்களை விடுவிக்கத்தானே கேட்கிறோம்…’

‘‘சரி நாங்க எங்க தலைமைக்கிட்ட பேசி, அதுபத்தி முடிவெடுப்போம். வேற என்ன தகவல்?’’

‘‘எங்க நாட்டில இருக்கிற கைதிகளை விடுவிக்கிறதில எந்த பிரச்னையும் இருக்காதுன்னு நினைக்கிறோம். ஆனா, அண்டை நாடுகள்ல இருக்கிற கைதிகளை விடுவிக்கிறதில, பல்வேறு பிரச்னைகள் இருக்கு. அதனால கெடுவை கொஞ்ச நாள் நீட்டிக்கணும்னு எதிர்பார்க்கிறோம்’’

‘‘இதற்கும் உடனடியா பதில் சொல்ல முடியாது. நாங்க ஆலோசனை செஞ்சிட்டு உங்ககிட்ட வர்றோம்’’ என்றான் ஒற்றைநாடி ஆசாமி.

அதைத்தொடர்ந்து, எதிர்முனையில் மைக் உயிரை நிறுத்தியது தெரியவந்தது.

டேன் சோம்ரான் புன்முறுவலுடன், சிமன் பெரசை பார்த்தார்.

அவர் புன்னகையுடன் கட்டைவிரலை தூக்கிக் காண்பித்தார்.

அவரிடம் விடைபெற்ற சிமன் பெரஸ், ‘‘முக்கியமான செய்தின்னா நீங்க எப்ப வேணாலும் என்னை கூப்பிடலாம்’’ என்றார்.

‘‘யெஸ் சார்…’’ என்று விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார் டேன் சோம்ரான்.

அதைத்தொடர்ந்து, ராணுவ தலைமை அலுவலகத்தின் யுக்திகள் வடிவமைப்பு அலுவலகத்துக்கு கிளம்பினார் சிமன் பெரஸ்.

அங்கு ஏற்கனவே அதிகாரிகள் தயாராக இருந்தனர்.

சிமன் பெரசை பார்த்ததும், அதிகாரிகள் விரைப்பாக சல்யூட் அடித்தனர்.

‘‘நேரடியாக விஷயத்துக்கு வர்றேன். என்னென்ன தகவல்கள் கிடைச்சிருக்கு?’’ சிமன் பெரஸ் ஆரம்பித்தார்.

வெயிலால் முகம் எல்லாம் சிவந்து கிடந்த மூத்த அதிகாரி பேச ஆரம்பித்தார்.

‘‘எண்டபேயில உள்ள விமான நிலையத்தை வடிவமைச்சது, நம்மோட நாட்டைச் சேர்ந்த சோலேல் போனே என்ற நிறுவனம். அவங்ககிட்ட இருந்து முழுமையான எண்டபே விமான நிலைய வரைபடம் வாங்கியாச்சு. அங்க இருக்கிறது. ஒரு கட்டுப்பாட்டு கோபுரம். அதற்கு வலதுபுறம் 3 கிரவுண்டில கட்டப்பட்ட 2 மாடி கட்டிடம். அந்த கட்டிடத்தின் கீழே பெரிய ஹால் இருக்கு. அதற்கு நான்கு அறைகள் இருக்கு’’

‘‘எங்களுடைய கணிப்புப்படி பிணைக்கைதிகள் அனைவரையும் தங்க வைக்கிறதுக்கான இடம்னு பார்த்தா,… அது கீழே இருக்கிற பெரிய ஹால் மட்டும்தான். அங்கதான் அவங்க நிச்சயமாக தங்க வைக்கப்பட்டிருக்கணும். அதைதவிர பெரிய இடம் அங்க வேற எதுவும் இல்லை’’

‘‘தீவிரவாதிகள் அனைவரும் ஏதென்ஸ்ல இருந்துதான் விமானத்தில ஏறியிருக்கிறாங்கன்றது நிரூபணம் ஆகியிருக்கு. அங்க ஏர் பிரான்ஸ் விமானம் 139 செக் இன் சமயத்தில ஒரு சில நிமிடங்கள் கரண்ட் கட் ஆகியிருக்கு. அந்த நேரத்திலத்தான் அவங்க தங்களுடைய ஆயுதங்களை ரகசிய பொருட்கள்ல உள்ளே வச்சிட்டு, வீரர்களை தாண்டி முன்னேறியிருக்காங்க….’’

‘‘அங்க மொசாத் சேகரிச்ச தகவல்கள் மற்றும் பெங்காஜில இறக்கிவிடப்பட்ட கர்ப்பிணிப் பெண்கிட்ட சேகரிச்ச தகவல்கள்ல இருந்து தீவிரவாதிகள்கிட்ட இருக்கிற ஆயுதங்கள் மெஷின் கன்ஸ். மொத்தம் 5 கன்கள் இருக்கு. இவை நொடிக்கு 2 புல்லட்டை உமிழும். அதுதவிர கையெறி குண்டுகள் 8 இருக்கின்றன. அவை வெடித்தால் 10 அடி தூரத்துக்கு பெரிய அளவில சேதம் ஏற்படும்’’

அதிகாரி விளக்கிக் கொண்டே செல்ல நேரம் நள்ளிரவை தாண்டிக் கொணடிருந்தது.

ஒருவழியாக அதிகாரிகள் விளக்கி முடித்தபோது பொழுது புலர்ந்திருந்தது.

சிமன் பெரஸ் ராணுவ தலைமையகத்திலேயே, டிபனை முடித்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, டேன் சோம்ரானிடம் இருந்து போன் வந்தது.

‘‘சார்… நான் டேன் சோம்ரான் பேசுறேன்’’

‘‘சொல்லுங்க….. டேன்’’

‘‘சார்…… நாம கேட்டுக்கிட்டபடி பிணைக்கைதிகள் ஒரு பகுதியினரை விடுவிக்க தீவிரவாதிகள் முடிவு செஞ்சிருக்காங்க. மொத்தம் 48 பேரை அவங்க விடுவிச்சிருக்காங்க…. அவங்கள்ல பெரும்பாலானவங்க வயசானவங்க மற்றும் நோய்வாய்ப்பட்டிருந்தவங்க. அவங்கள உடனடியாக பிரான்ஸ் போற பிளைட்ல ஏத்தி அனுப்பி்ட்டாங்க. ஒரே ஒருத்தரை மட்டும் சி்கிச்சைக்காக மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொல்லியிருக்காங்க……’’

‘‘புதன்கிழமை நல்லபடியாக விடிஞ்சிருக்கு…. விடுவிக்கப்பட்டவங்க எத்தனை மணிக்கு பாரீஸ் போய் போய் சேருவாங்க?’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘அவங்க காலையில விடுவிக்கப்பட்டு உடனடியாக விமானத்தில ஏற்றிவிடப்பபட்டிருங்காங்க. அதாவது 5 மணி நேரத்துக்கு முன்னாடி அவங்க விடுவிக்கப்பட்டிருக்காங்க. அதனால இன்னும் 5 மணி நேரத்தில அவங்க பாரீஸ் போய் சேர்ந்திடுவாங்க’’

‘‘குட் நம்ம பிளான்…. நல்லபடியா போய்ட்டு இருக்கு…. விடுவிக்கப்பட்டவங்க எல்லோரும் பிரான்ஸ் பிரஜைகளா?’’

‘‘ஆமா….. சார் அவங்க நம்ம பிரஜைகள் யாரையும் விடுவிக்கல….. மேலும், ஏர் பிரான்ஸ் விமானிகள் மற்றும் ஊழியர்கள் 8 பேரும், எல்லா பயணிகளையும் விடுவிச்ச பின்னாடிதான், நாங்களும் போவோம்னு சொல்லிட்டு அவங்களோடயே இருந்துட்டாங்கன்னு தகவல் வந்திருக்கு. விடுவிக்கப்பட்ட பயணிகள் போய்கிட்டு இருக்கிற, விமானத்தோட விமானிகள் கிட்ட இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கு’’

‘‘சோ… இப்போ அவங்கக்கிட்ட இருக்கிறது மொத்தம் எத்தனை பேர்?’’

‘‘206 பேர் இருக்காங்க……’’

‘‘இப்போ விடுவிச்சது பத்தாதுன்ற மாதிரி தொடர்ந்து அவங்கக்கிட்ட பேசுங்க…. நம்மால எவ்வளவு பேரை அவங்கக்கிட்ட இருந்து வெளியே கொண்டு வர முடியுமோ, அவ்வளவு பேரையும் வெளியே கொண்டு வரணும்’’

‘‘யெஸ்…. சார். தொடர்ந்து நான் அவங்கக்கிட்ட பேசுறேன்’’ என்று கூறி விடைபெற்றார் டேன் சோம்ரான்.

------------

பிரதமர் அலுவலகம்.

உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் மீண்டும் கூடியிருந்தனர்.

சிமன் பெரஸ் பேச ஆரம்பித்தார்.

‘‘இன்றைக்கு காலையில 48 பேரை தீவிரவாதிகள் விடுவிச்சிருக்காங்க…. மேலும் சிலரை விடுவிக்கிறதுக்கான பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு ஜென்டில்மேன்….’’

‘‘ஓ… நல்ல முன்னேற்றம்’’ என்றார் பிரதமர் இட்சாக் ராபின்.

‘‘நம்ம அதிரடி நடவடிக்கையில விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புறது தொடர்பாக கென்யாகிட்ட உதவி கேட்டு, அந்நாட்டு அதிபர் ஜோமோ கென்யாட்டா மற்றும் நமக்கு ஆதரவான விவசாயத்துறை அமைச்சர் புரூஸ் மெக்கென்ஜி ஆகியோர்கிட்ட பேசியாச்சு….. நல்ல பதிலா சொல்றோம்னு சொல்லியிருக்காங்க….’’ என்றார் பிரதமர்.

‘‘தீவிரவாதிகளால விடுவிக்கப்பட்ட பயணிகள் பாரீஸ் வந்து சேர்ந்தவுடன், அவங்கக்கிட்ட இருந்து, தீவிரவாதிகள் மற்றும் அங்கு இருக்கிற உகாண்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டுவிடும். இப்போதைக்கு நம்ம அதிரடி பிளானுக்காக, எண்டபே விமான நிலையத்தின் அச்சு அசல் மாதிரி உருவாக்கி நடவடிக்கை குழுக்கிட்ட ஒப்படைச்சிருக்கிறோம்’’ என்றார் மொசாத் உளவுப்பிரிவு தலைவர்.

‘‘தீவிரவாதிகள் இப்போ விடுவிச்சிருக்கிறங்களை தவிர மேலும் பல பிணைக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்கோம்’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘நாம திட்டமிட்டபடியே எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு…. கென்யாகிட்ட இருந்து சாதகமான பதில், அப்புறம் பிளான் ரெடியாயிட்டா நாம கண்டினியூ பண்ண வேண்டியதுதான்’’ என்றார் பிரதமர்.

‘‘நம்ம அதிரடி பிளான் இன்னைக்குள்ள ரெடி ஆயிடும் சார்…. எண்டபே விமான நிலையத்தோட முழு ஜாதகமும் எடுத்தாச்சு…. அதிர்ஷ்டவசமா அதை கட்டித்தந்தது நம்ம நாட்டு நிறுவனம்தான். அதனால எண்டபே விமான நிலையத்தை பற்றி முழுமையா அலசி ஆராய்ஞ்சிட்டு இருக்கோம்’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘குட் சிமன் பெரஸ்…. நீங்க தொடர்ந்து இதில் தொடர்பில இருங்க…. இப்போதைக்கு நம்பிக்கையுடன் நாம கலைவோம்…’’ என்று கூறிவிட்டு பிரதமர் எழ, அனைவரும் அவருக்கு விடைக்கொடுத்தனர்.

(தொடரும் 6)

No comments:

Post a Comment

Thanks