வச்சக்குறி தப்பாது 8

8

அறையில் இருந்த அனைவரும், அதிரடி நடவடிக்கையில் ஈடுபடப்போகும் அதிகாரி யோனாதன் நெதன்யாகுவை நிமிர்ந்து பார்த்தனர்.

அனைவருக்கும் அவர் சல்யூட் அடித்தார்.

அவருக்கு மெலிதாக கைத்தட்டி வாழ்த்து தெரிவித்தனர் அறையில் இருந்தவர்கள்.

அனைவருக்கும் நன்றி என்பதுபோல் மீண்டும் ஒரு சல்யூட் அடித்தார். அதைத்தொடர்ந்து, தனது உயரதிகாரியை அவர் பார்க்க, அவர் செல்லலாம் என்பது போல் கண்ணைக்காட்டினார். அதையடுத்து, நெதன்யாகு அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

மீண்டும் ஆலோசனை தொடர்ந்தது.

‘‘இந்த தாக்குதலில் ஈடுபட உள்ள விமானங்களுக்கு தலைமை விமானியாக பணியாற்ற போகிறவர் லெப்டினென்ட் கலோனல் ஜோஷூவா சானி. இங்க ஆப்ரேஷனுக்கு கிரவுண்ட் கமாண்டர்களாக மேஜர் ஜெனரல் யெகுதியல் குடி ஆடம் மற்றும் டேன் சோம்ரான் ஆகியோர் செயல்படப் போறாங்க’’ என்று விமானப்படை மூத்த அதிகாரி விளக்கினார்.

தொடர்ந்து அவரே பேசினார். ‘‘கடந்த 2 நாட்களாக மொசாத், நம்ம ஏர்போர்ட்ல அமைச்சு கொடுத்த எண்டபே விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் அதையொட்டி உள்ள கட்டிடம் போன்ற மாதிரியில், நமது வீரர்கள் கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. அரசாங்கம் நமக்கு அனுமதி கொடுத்த அடுத்த விநாடி, வீரர்கள் களத்தில இறங்கிடுவாங்க’’

‘‘சரி…. இந்த தாக்குதல் முடிஞ்சு நாம கிளம்புறப்போ, உகாண்டா போர் விமானங்கள் நம்மை தாக்க வராதுன்றது என்ன நிச்சயம்? அவங்க விமானப்படை விமானமும் தயார் நிலையில்தானே இருக்கும்’’ கேட்டார் சிமன் பெரஸ்.

‘‘அதையும் நாங்க யோசிச்சு வச்சிருக்கோம் மிஸ்டர் சிமன் பெரஸ். வீரர்கள் பிணைக் கைதிகளை மீட்டு திரும்புற சமயம், நான்காவது குழுவினர் விமான நிலைய ஓடுபாதையையும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களையும் சேதப்படுத்திவிட்டுத்தான் கிளம்புவாங்க…. அவங்க, வேற விமான நிலையத்தில இருந்து தாக்குதல் நடத்த கிளம்பி வர்றதுக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும். அதுக்குள்ள நாம ரொம்ப தூரத்துக்கு வந்துடுவோம். உகாண்டாவில எண்டபே மத்தியப்பகுதி விமான நிலையங்கள் பட்டியல்ல இருக்கு. அந்த மத்திய மண்டலத்தில இருக்கிற வேற ஏர்போர்ட்கள் கஜ்ஜான்சி, முதுகுலா, நகசன்கோலா. இந்த  விமான நிலையங்கள்ல இருந்து அவங்க விமானங்களை எடுத்து கிளம்புறதுக்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆகும்னு கணிச்சிருக்கிறோம். ஏன்னா… நம்ம மொத டார்க்கெட்…. எண்டபே விமான கட்டுப்பாட்டு அறையை சிதறடிச்சு தகவல் தொடர்பை துண்டிக்கிறது. அடுத்தது…. தரைவழி தொலைத்தொடர்பு இணைப்பை துண்டிக்கிறது. இந்த திட்டத்தை சரியா செயல்படுத்திட்டு நாம கிளம்பினா…. அவங்க நம்ம விமானத்தை பிடிக்கவே முடியாது’’

‘‘அது எப்படி அவ்வளவு துல்லியா சொல்றீங்க?’’ குறுக்கிட்டார் சிமன் பெரஸ்.

‘‘ஏன்னா நம்ம விமானத்தோட வேகம், இப்போ உகாண்டால இருக்கிற விமானங்களோட வேகத்தைவிட 40 சதவீதம் அதிகமானது. அதுமட்டுமில்லாம, இந்த 45 நிமிடத்தில நாம உகாண்டா எல்லையை தாண்டிடுவோம். அதுக்கு மேல அவங்க துரத்திட்டு வர்றது தங்களோட தலையில தாங்களே மண்ணை போட்டுக்கிறதுக்கு சமம். நம்ம விமானங்கள் அதிநவீன ஏவுகணைகள் தாங்கியவை. உகாண்டா எல்லையை தாண்டி அவங்க ஒருவேளை பிடிச்சு தொரத்திட்டு வந்தா… அவங்களோட விமானத்தோட கதி தீபாவளி பட்டாசு ஆகிடும்….’’ விமானப்படை அதிகாரி விளக்கினார்.

‘‘அப்படி பார்த்தா நாமளும் இன்னொரு நாட்டோட எல்லையிலதானே பறந்துட்டு இருப்போம்…. அவங்களும் பிரச்னை பண்ணிட மாட்டாங்களா?’’

‘‘கரெக்ட் மிஸ்டர் சிமன் பெரஸ். இதுக்கான தீர்வை நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். அதாவது, கடல்பகுதியில மிகத்தாழ்வா நாம பறந்து வர்றதால… எந்த நாட்டோட விமான ரேடாராலும் நம்மை கண்டுபிடிக்க முடியாது. அதனால சத்தமில்லாம நாம அவங்களை தாக்கிட்டு போய்ட்டே இருக்கலாம். எங்களோட உளவுத்தகவல்படி உகாண்டாவில லோ ஹைட்ல டிரைனிங் எடுத்துக்கிட்ட பைலட்ஸ் யாரும் எண்டபேயிலோ அல்லது பக்கத்தில இருக்கிற மத்திய மண்டலங்கள்ல இருக்கிறவங்கள்லேயோ யாரும் இல்லை. இது நமக்கு மிகப்பெரிய அட்வான்ட்டேஜ். அவங்க கீழே பறந்து வர பயப்படுவாங்க…. அது மட்டுமில்லாம, அவங்களாலயும் நம்ம விமானத்தை கண்டுபிடிக்கிறது கஷ்டம். வெறும் கண்ணால விமானத்தை துரத்திட்டு வர முடியாது. இத மீறி அவங்க வர்றது என்றதுக்கு 99.9 சதவீதம் வாய்ப்பே இல்லை….’’

‘‘சோ… பிளான்…. நூறு சதவீதம் தயாரா இருக்கு இல்லையா…?’’ என்றார் சிமன் பெரஸ்.

‘‘யெஸ் சார்….’’

‘‘எல்லாம் சரியா போய்ட்டு இருக்கு. இடி அமீன் மொரீஷியஸ் போறதா நமக்கு தகவல் கிடைச்சிருக்கு. அவர் நாடு திரும்புறதுக்குள்ள இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். பிணைக் கைதிகளை பொருத்தவரையில் வேறு ஏதாவது தகவல் இருக்கா?’’

‘‘அவங்கக்கிட்ட இருக்கிற பிணைக்கைதிகள் அனைவருமே இஸ்ரேலியர்கள் மட்டும்தான். விமானிகள் மட்டுமே பிரான்ஸ்காரங்க….’’

‘‘இந்த நடவடிக்கையில நம்ம தரப்பில, எந்த சேதமும் ஏற்படாதுன்றது உறுதியா சொல்ல முடியாது… ஆனா, எவ்வளவுக்கு எவ்வளவு சேதத்தை தவிர்க்க முடியுமோ, அந்த அளவுக்கு பாதுகாப்பா இருக்கிறதுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கோம் சார்…’’

‘‘குட்… பிளானை பொருத்தவரையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மத்தவங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா….?’’ கேட்டார் சிமன் பெரஸ்.

‘‘நோ சார்…’’ என்று பொத்தாம் பொதுவாக அனைவரும் தலையாட்டினர்.

‘‘நாம இப்போது எண்டபே மாதிரி விமான நிலைய கட்டிடத்தை பார்க்க போகிறோம்’’ கூறியபடி வாசலைக்காட்டினார் விமானப்படை அதிகாரி.

அனைவரும் எழுந்து சென்று, தயாராக இருந்த வாகனங்களில் ஏறி, விமான நிலையத்துக்கு சென்றனர்.

விமான நிலையத்துக்கு பல கி.மீ. தூரத்துக்கு முன்பே, உள்ளே நடப்பதை யாரும் பார்க்க முடியாத அளவுக்கு பல அடி உயரத்துக்கு திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ராணுவத்தின் முன்னேற்பாட்டை நினைத்து பெருமை கொண்டார் அமைச்சர் சிமன் பெரஸ்.

மாதிரி எண்டபே விமான நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், தளபதிகளையும் அமைச்சரையும் பார்த்தவுடன் விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தனர்.

ஏற்கனவே, கடத்தல் பிரச்னை ஆரம்பித்தவுடனேயே போட்டோக்களில் பார்த்த எண்டபே விமான நிலையத்தை போன்றே அச்சு அசலாக இருந்தது மொசாத் அமைத்திருந்த மாதிரி விமான நிலையம்.

பயணிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஹால், அதற்கான தொலைவு, இஸ்ரேல் விமானங்கள் சென்று இறங்கும் இடம் என்று தெளிவாக செயல்முறை விளக்கத்தை அளித்தார், விமானப்படை அதிகாரி.

எல்லாம் முடிந்த நேரத்தில் சூரியனும் தன் கடமையை முடித்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருப்பததை அந்திவான சிவப்பு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

---------------

ஜூலை 3, 1976.

பிரதமரின் முகாம் அலுவலகம் பரபரப்பாக இருந்தது. வழக்கமாக அமைச்சரவை கூட்டம் என்றால், அது நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில்தான் நடக்கும். ஆனால், ரகசிய அமைச்சரவை கூட்டம் என்பதால், பிரதமரின் இல்லத்தில் முகாம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வராமல், சாதாரண கார்களில் வெவ்வேறு நேரங்களில் மொசாத் அதிகாரிகள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அமைச்சர்களுக்கு ஏதோ முக்கியமான முடிவு எடுக்கப்பட போகிறது என்பது மட்டும் தெரிந்தது. ஆனால், அது என்ன முடிவு என்பது தெரியவில்லை.

பிரதமர் வந்தவுடன் அமைச்சர்களை தவிர அனைவரும் வெளியேற்றப்பட்டு, அந்த அரங்கு மூடப்பட்டது. வெளியே பலத்த காவல் போடப்பட்டிருந்தது.

பிரதமர் இட்சாக் ராபின் பேச ஆரம்பித்தார்.

‘‘நம்முடைய பிரஜைகளை கடத்தி வச்சிருக்கிற பாலஸ்தீன அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள்கிட்ட பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. அவங்க கைதிகளை விடுவிக்கணும்றதுல பிடிவாதமா இருக்காங்க… பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத், எகிப்து அதிபர் சானி உள்ளிட்ட தலைவர்கள் பேசியும் அவங்க இறங்கிவர்ற மாதிரி தெரியல…. அதனால அதிரடி தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளை மீட்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்….’’

பிரதமர் கூறியவுடன் அமைச்சர்கள், மெலிதாக மேஜையை தட்டினர்.

‘‘தாக்குதல் திட்டம் முழுமையாக தயாராக இருக்கு. இந்த திட்டத்தில நமக்கு இருந்த மிகப்பெரிய சிக்கல் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப ஒரு ஆப்ரிக்க நாட்டின் உதவி தேவையா இருந்தது. இதுக்காக கென்யாக்கிட்ட நாம பேசினோம்’’

‘‘அந்த நாட்டு அமைச்சரும், நம்முடைய நாட்டு நண்பருமான புரூஸ் மெக்கன்சியும், நம்ம நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களின் வலியுறுத்தலாலும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப ஒப்புதல் அளிச்சிருக்கு. ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில எரிபொருள் நிரப்ப அந்நாட்டு அதிபர் ஜோமோ கென்யாட்டா ஒப்புதல் அளிச்சிருக்கார்….

‘‘இதுக்காக கென்யா அதிபருக்கும், அமைச்சர் புரூஸ் மெக்கன்சிக்கும் எங்களுடைய நன்றியை தெரிவிச்சிருக்கிறோம். வேறு எந்த வழியும் இல்லாததாலேயே இந்த தாக்குதல் முடிவுக்கு இந்த அரசாங்கம் வந்திருக்கு. இதுல பிணைக்கைதிகள் உயிருக்கும், நம்ம வீரர்கள் உயிருக்கும் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு….

‘‘ஆனா முயற்சிக்காத எந்த செயலும், வெற்றிப்பெறாது என்ற முதுமொழியின் அடிப்படையிலும், நம்முடைய பிரஜைகளை கடத்தினவங்களுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்கவும்தான் இந்த தாக்குதல் முடிவு எடுக்கப்பட்டிருக்கு….’’ என்று பிரதமர் இட்சாக் ராபின், எந்த பிசிறியும் இன்றி தெளிவாக கூறிக்கொண்டிருந்தார்.

அமைச்சர்கள் அனைவரும் அவர் பேசுவதையே கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘‘இந்த தாக்குதல் நடவடிக்கையில இறங்கப்போகிற நம்ம வீரர்கள் அனைவருக்கும் அரசாங்கம் தரப்பில ஒரு உத்தரவாதம் அளி்க்கிறோம். அதாவது வெற்றியுடன் திரும்பும் அனைத்து வீரர்களுக்கும் இரட்டை பதவி உயர்வு, கூடுதல் சம்பளம். ஒருவேளை அசம்பாவிதம் நடக்கும்பட்சத்தில் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் மிகப்பெரிய அளவிலான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்….’’

அமைச்சர்கள் மீண்டும் ஒருமுறை மேஜையை தட்டினர்.

சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் தொடர்ந்தார் பிரதமர்.

‘‘தாக்குதலில் மட்டுமே வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதியளித்திருக்கோம். ஆப்ரேஷன்ல ஈடுபடப்போகிற வீரர்களை நானே நேரில் சந்திச்சு சற்று முன்பு இந்த உறுதிமொழிகளை அளிச்சிருக்கேன். நாட்டுக்காக, மக்களுக்காக போராடப்போகும் அவர்களுக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் நன்றி தெரிவிக்கிறோம்….

‘‘இனி யாரும் நம்முடைய பிரஜைகளை கடத்த முடியாத அளவுக்கு விமான நிலையங்கள்ல பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அண்டை நாடுகளிலும் அதை வலியுறுத்தி உள்ளோம். விமான நிலையங்கள் என்பது பயணங்களுக்கான இடமா இருக்கணும். அதை தங்களுடைய பிணைக்கைதிகளுக்கான இடமாக தீவிரவாதிகள் மாற்றுவதை ஏற்க முடியாது….

‘‘இனி வரலாற்றில் டெல் அவிவ் என்ற விமான நிலையத்தில் இருந்து எந்த தீவிரவாத சம்பவமும் நடக்காது என்று என் நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். இந்த அமைச்சரவை கூட்ட முடிவுகள் அனைத்தும் ரகசியமானது. இதனால் இது நாட்டின் வரலாற்று பக்கங்களில் மட்டுமே இருக்கும். ஒருவேளை எனக்கு பின்னால் வரும் ஆட்சியாளர்கள் விரும்பினால், இத்தகவலை வெளியிடக்கூடும். அது அவர்களுடைய விருப்பம். மொத்தத்தில் இந்த முடிவு நாட்டு மக்களின் நலனை மட்டுமே முழுமையாக கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக என் தலைமையிலான அமைச்சரவை பெருமை அடைகிறது.

‘‘இறுதியாக, தீவிரவாதிகள் மீதான நம்முடைய ‘ஆப்ரேஷன் தண்டர்போல்ட்’ தாக்குதல் திட்டத்துக்கு இந்த அமைச்சரவை அனுமதி அளிக்கிறது. கடவுள் நமக்கு துணையிருப்பார்….’’ என்று பிரதமர் கூறி முடித்தவுடன் மீண்டும் மேஜை சற்று பலமாக அதிர்ந்தது.

அப்போது மாலை 6.30 மணி.

(தொடரும் 8)

No comments:

Post a Comment

Thanks