#தயிர்சாதம்


தயிர்சாதம்





சும்மா தயிர்சாதம் மாதிரி உட்கார்ந்திருக்காதே என்று, எப்போதுமே ‘ஙே’ என்று உட்கார்ந்திருப்பவர்களை பார்த்து கிண்டல் செய்வார்கள்.
அவர்களுக்கு என்ன தெரியும்?
தேவாமிர்தத்துக்கு இணையான ஒரு பதார்த்தை உண்ட களிப்பில் அவர்கள் இருக்கிறார்கள் என்று.
வெறும் சாதத்தில் தயிர் ஊற்றி சாப்பிடுவதற்கு பெயர், தயிர்சாதம் அல்ல. அதன் தயாரிப்பே மிக சுவாரசியமானது, எச்சில் ஊற வைக்கக்கூடியது. ஆனால், இதை கடமையாக மட்டும் செய்தால், அதன் சுவை இருட்டுக்கடை அல்வாவுக்கு பதில், ஆன்லைனில் வாங்கப்படும் சொறி, சொறியான அல்வாவை போன்றுதான் இருக்கும்.
தயிர் சாதம் என்றால், வாயில் வைத்தவுடன் கரைய வேண்டும். ஒரிஜினல் கிருஷ்ணா சுவீட்ஸ் நெய் மைசூர்பா உங்களுக்கு ஞாபகம் வந்தால், சரியானதாக இருக்கும்.
அதன் சுவையில் முதலில் வெளிப்படுவது, மெலிதான புளிப்பு. கவனம் மெலிதான புளிப்பு மட்டுமே. அதிகம் இருந்தால், அது கரும்புளி ஆகிவிடும். புளியை மரத்தில் இருந்து பிடுங்கி பழமான பின்னர், அதை எடுத்து சுவற்றில் இருக்கும் சுண்ணாம்பில் தேய்த்து சாப்பிட்டு பாருங்கள் (இஸ்ரோவால் கூட கண்டுபிடிக்காத முடியாத இந்த அரிய கண்டுபிடிப்பை என் சின்ன வயதில் அறிமுகம் செய்தவர் ஒரு பெரியவர். இன்னமும் 88 வயதில் திடகாத்திரமாக புளியை சுவைத்து கொண்டிருக்கிறார்). ஒரு அருமையான இனிப்பு, புளிப்பு சுவை கிடைக்கும். அந்த டிகிரியில் இருக்க வேண்டும் புளிப்பு.
இந்த மெல்லிய புளிப்பு நாக்கில் முனையில் இருந்து இருந்து தொண்டைக் குழிக்குள் இறங்குவற்குள், சடாரென இனிப்பு நாக்கின் முனையில் வந்து ஒட்ட வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று, விசிலடித்து கேட்பவர்களுக்கு… தயிர்சாதத்தில் சொத்தையற்ற திரட்டியான பச்சை நிற திராட்சை, பார்த்தாலே சும்மா கும்மென்று கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ் போன்று, அடர் சிவப்பு நிறம் கொண்ட மாதுளை முத்துக்கள், ஆங்காங்கே அடடே, இது என்ன என்று எட்டிப்பார்க்கும் அளவுக்கு கருந்திராட்சைகள் தூவப்பட வேண்டியது அவசியம். இவைதான் நாக்குக்கு இனிப்பை தந்து, மூளையில் பச்சை விளக்கை எரியச் செய்வது. சிலர் அன்னாசி, ஆப்பிள் பழங்களையும் நறுக்கி போடுவது உண்டு. அது அவரவர் வீட்டு காந்திகள் எண்ணிக்கையை பொருத்தது.
அடுத்தது சாதம். சாதம் குழைந்து இருக்க வேண்டியது அவசியம். அது எப்படி இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசி பாயாசம் சரியான பதத்தில் இருந்தால், ஜவ்வரிசி எப்படி தெரியாதோ அந்த அளவுக்கு குழைவாக இருக்க வேண்டும்.
ஆக… புளிப்பு, இனிப்பு முன் நாக்கிலும், பின்நாக்கிலும் தொட்டுக் கொண்டு, நடுவில் சாதம் உருண்டுக் கொண்டு செல்லும்போது இருக்கிறதே ஒரு சுவை… அடடா…. உணர்ந்து சாப்பிட்ட ராமன்களுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு ஹைவேசில், வேகத்தடை, டோல்கேட், திருப்பங்கள் இல்லாமல் போனால், என்னதான்  புகாட்டி சிரோனில் போனால் கூட அலுப்பு தட்டிவிடும். அதேதான் இங்கும்.
அதனால் பின் நாக்கில் புளிப்பு, நடுநாக்கில் சாதம், முன் நாக்கில் பழங்கள் என்று இறங்கிக் கொண்டிருக்கும்போது, நறுக்கென்று ஒரு பச்சை மிளகாய் கடி அவசியம். இந்த பச்சை மிளகாயில் கவனம் மிக அவசியம். மடிசாருக்கு சேலையின் நீளம் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு, இதில் கவனம் மிக முக்கியமானது. 10 கவளம் சாப்பிட்டால் ஒரு முறை மிளகாய் கடிபட வேண்டும். இந்த மிளகாயின் அளவும் காரத்தை அதிகம் தூக்கிக் கொடுக்காத அளவுக்கு சின்னதாக அரியப்பட வேண்டியது அவசியம். கல்லூரியின் பெண்ணின் நெற்றிப்பொட்டு மாதிரி இருந்தால், காரமும், காதலாக இருக்கும். சொர்ணாக்காவின் நெற்றி பொட்டு மாதிரி பெரிதாக அரியப்பட்டால், மொத்த சுவையும் நாசமாகிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அதேபோல், இன்ஜினுக்கு ஆயில் எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு தயிர் சாதத்துக்கு அவசியமானது, தாளிப்பு. உடம்புக்கு நல்லெண்ணைதான்  எவ்வளவுதான் நல்லதாக இருந்தாலும், நம்ம தயிர்சாதத்துக்கு ரீபைண்டார்தான் சிறப்பானவர். ஏனெனில், அவர்தான் வாசனையை அதிகரிக்கச் செய்யாதவர். ரீபைண்ட் ஆயிலில், சென்னை பக்கம் கிடைக்கும், சிறிய ரக கடுகையும் (மதுரை பக்கத்தில் கடுகு சற்று பெரிதாக இருக்கும்), உள்ளங்கை பாக்கு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு உளுந்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து, எண்ணெய் கருகிட அளவில் தாளித்து சேர்த்தால், தயிர்சாதம் மனம், எங்கோ மணக்கும்.
தயிர்சாதத்தில் பலர், கொத்தமல்லியை சேர்க்க மாட்டார்கள். ஆனால், கொத்தமல்லியை சிறுகச், சிறுக வெட்டி அதை சேர்த்து சாப்பிட்டால், நிறம், மணம், குணம் என்று சாமுத்திரிகா லட்சணத்தில் தயிர் சாதம் வா, வா… என்று அழைக்கும்.
அடபோய்யா… இதெல்லாம் எங்க வீட்டு அம்மணி செஞ்சு குடுக்காது என்று சலித்துக் கொள்பவர்கள், சிம்பிளாய் பாஸ்மதி அரிசியை குழைய வேகவைத்து, ஆவின் கெட்டித்தயிர் ஊற்றி, தொட்டுக்கொள்ள பூண்டு ஊறுகாய் அல்லது மதுரை அமிர்தம் ஸ்வீட்ஸ் காராபூந்தியை வைத்து சாப்பிட்டு பாருங்கள்…. என்ன நாக்குய்யா… இது என்று உங்களை நீங்களே மெச்சிக் கொள்வீர்கள்.
அடிக்கடி மெச்சிக்கொள்ளும் ஜே.எஸ்.கே.பாலகுமார்.




No comments:

Post a Comment

Thanks