அம்மா.... அம்மா.....

டூமில்….
அந்த சத்தத்தை கேட்டு அலறியடித்து எழுந்தான் டேவிட். கூடவே அவனது மனைவியும், குழந்தைகளும்.
‘‘அது உங்க அம்மா ரூம்ல இருந்து வந்தது மாதிரி இருந்ததுங்க…’’ மனைவி கிறிஸ்டி கூறினாள்.
அலறியடித்துக் கொண்டு அம்மாவின் அறைக்கு சென்றான் டேவிட். ஏற்கனவே அங்கு வந்திருந்தான் அவனது சகோதரன் ஜேம்ஸ்.
கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அப்பாவின் நடுப்பொட்டில் சுட்ட துப்பாக்கியுடன் விக்கித்து நின்றுக் கொண்டிருந்தாள் அம்மா. அவளது கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
அ்ம்மா சல்லி செல்லான், சாந்தமே உருவானவள். அதிர்ந்து ஒரு வார்த்தை கூட பேசாதவள். அவளா அப்பாவை சுட்டாள் என்று நினைத்தபோது, சரியான வேலையைத்தான் செய்திருக்கிறாள் என்றே எண்ணத்தோன்றியது டேவிட்டுக்கு.
அதற்குள், துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருந்தததால், கிளேகேட் போலீசார் விரைந்து வந்துவிட்டனர். இந்த சின்னஞ்சிறிய நகரத்தில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில், மனைவியே கணவனை சுட்டுக் கொன்றதை பார்த்து அவர்களும் அதிர்ந்துதான் போனார்கள்.
அம்மாவிடம் இருந்து அவர்கள் துப்பாக்கியை வாங்கியபோது, அவளது கைகள் நடுங்கி்க் கொண்டிருந்ததை உணர முடிந்தது. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. ஒன்றும் பேசாமல் போலீசார் பின்னால் நடக்க ஆரம்பித்தார்.
அவரைப்பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கண்களில் கண்ணீர் அருவி மாதிரி கொட்டியது. என் சகோதரனுக்கும் அதே நிலைதான்.
அப்பாவை பார்த்து, பார்த்து கவனித்தவர் அம்மா. அவரது பார்வை, நடையின் வேகம் ஆகியவற்றை பார்த்தே புரிந்து கொண்டு செயல்படுவார். அப்படிப்பட்டவரா… அப்பாவை கொடூரமாக சுட்டுக் கொன்றார் என்று எண்ணியபோது, அவளது புண்பட்ட மனதின் ரணத்தை உணர முடிந்தது.
அம்மா, எவ்வளவுக்கு எவ்வளவு என் தந்தையை உருகி, உருகி காதலித்தாரோ, அதே அளவுக்கு வெறுத்து, மட்டம் தட்டியவர் என் தந்தை ரிச்சர்ட். அம்மாவை மட்டம் தட்டுவது என்றால், அவருக்கு அவ்வளவு இஷ்டம்.
ஒருமுறை அம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் மிகவும் மெலிந்துவிட்டார். அப்போது வீட்டுக்கு வந்த உறவினர், ‘‘என்ன சல்லி, ரொம்ப இளைச்சிட்டே’’ என்று கேட்டார்.
வழக்கம்போல் அம்மா அவரிடமும் மெலிதாக புன்னகைத்தார். ஆனால், பக்கத்தில் இருந்த அப்பாவோ, ‘‘அவளை ஆடையில்லாம பார்த்தா இன்னும் கரப்பான் பூச்சி போல இருப்பா….’’ என்று ஒரு அருவெறுப்பான கமென்ட் அடித்தார். அப்போது பக்கத்தில் இருந்த எனக்கே, அம்மாவைப் பற்றி, அப்பா இப்படி கூறியது கடுப்பாகத்தான் இருந்தது. ஆனால், அதையும் கூட அம்மா பொருட்படுத்தவில்லை. வந்த உறவினர் கூட, அப்பாவின் கமென்ட்டை அறுவெறுப்பாக தான் எடுத்துக் கொண்டார். அப்பாவிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. அம்மாவை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மட்டம் தட்ட வேண்டும். அதுதான் அவரது ஒரே லட்சியமாகத்தான் இருந்ததை பல முறை பார்த்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் விட மிகக் கொடுமையான ஒரு விஷயம் நடந்தது. ஒரு முறை அப்பாவின் நண்பர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றிருந்தோம். அப்பாவிற்கு யார்க்ஷையர் புட்டிங் கிரேவியோடு இருந்தால் மிகவும் பிடிக்கும். அதனால் பப்பே சிஸ்டத்தில் இருந்த அதை தட்டில் எடுத்துக் கொண்டு வந்து அப்பாவிற்கு ஆசையாக கொடுத்தார். ஆனால், அதை வாங்கிப்பார்த்த அப்பாவிற்கு பெரும் கோபம். புட்டிங்கில் இருந்த கிரேவி கீழே வழிந்து கொண்டிருந்ததது அவருக்கு பிடிக்கவில்லை.
‘‘உன் மூஞ்சி மாதிரி இருக்கு’’ என்று அதை எடுத்து விருந்து நிகழ்ச்சி என்றுக் கூட பார்க்காமல் அம்மாவின் முகத்தை நோக்கி வீசிவிட்டார். இதனால் அம்மா கூனிக்குறுகிப் போய்விட்டாள்.
இளம்பருவத்தில் இருந்த எனக்கும், என் சகோதரனுக்கும் கூட, என் அப்பாவின் செயல் அவமானமாகிப் போய்விட்டது. எங்களுடைய நண்பர்கள் எல்லாம், ‘‘உன் அப்பா இவ்வளவு முரடரா?’’ என்று கேட்டு பச்சாதாபம் கொட்டினார்கள்.
அப்பாவுக்கு, அம்மாவைத்தான் பிடிக்காதே ஒழிய, எங்களை ஒருபோதும் மரியாதைக் குறைவாகவோ அல்லது அன்பில்லாமலோ நடந்தது கிடையாது. நாங்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அம்மாவிடம் அவர் நடந்துக் கொண்ட விதத்தை பார்த்தபோது, எங்களுக்கும் அவர் மீது பெரிய அபிமானம் இல்லாமல் போய்விட்டது.
அப்பாவை பொருத்தவரையில் தன் தகுதிக்கு ஏற்ற வகையில் என் அம்மா இல்லை என்று நினைப்பு. இத்தனைக்கும் அம்மா அழகிலோ, படிப்பிலோ குறைந்தவர் இல்லை. ஆனால், ஏனோ அப்பாவுக்கு மட்டும் அவரை பிடிக்காமல் போய்விட்டது. எங்களுக்கு அம்மா என்றால் உயிர். எங்களுக்கு கதை சொல்வதில் இருந்து, பேன்ட் சட்டை எடுத்துக் கொடுப்பது வரையில் அவருக்கு நிகர் அவரே. ஆன்லைனில் பார்த்து, புதுப்புது ஆடைகளை எங்களுக்காக வரவழைப்பார். அப்பாவுக்காகவும் அவர் ஆரம்பத்தில் உடைகளை ஆர்டர் செய்தார்தான். வழக்கம்போல், அவர், ‘‘இது என்ன கலர், இது என்ன டிசைன்….’’ என்று மூலையில் தூக்கி வீசியதால், அவருக்கு ஆர்டர் செய்வதை மட்டும் நிறுத்திக் கொண்டார்.
ஆனால், ஒவ்வொரு முறை ஆர்டர் செய்யும்போது, டேப்லாய்டில் ஆடைகளை எங்களிடம் காட்டி, ‘‘இது அப்பாவுக்கு போட்ட நல்லாயிருக்கும்ல…’’ என்று அங்கலாய்ப்பார்.
‘‘அட விடுமா…. அந்தாளுக்கு….’’ என்று நாங்கள் திட்டினாலும், ‘‘பல்லை உடைப்பேன். அப்பாவைப்பத்தி அப்படியெல்லாம் பேசக்கூடாது’’ என்று அம்மா எங்களை கண்டிப்பார்.
அப்படிப்பட்ட அம்மாவா… அப்பாவை கொன்றார்…. என்ற கேள்வி எங்களுக்கு பல நாட்களாக இருந்தது.
நீதிமன்றத்தில் அவருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நாங்கள்தான் தொடர்ந்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் வாதாடி அவருக்கான தண்டனையை 18 ஆண்டுகளாக குறைக்க வைத்தோம்.
அம்மா பட்ட கஷ்டங்களை வக்கீல் மூலம், நீதிமன்றத்தில் எடுத்துரைத்தோம். ஆனால், குடும்ப வன்முறை என்பது இங்கிலாந்து நீதிமன்றங்களின் தர்க்கரீதியிலான வாதத்துக்கு அப்பாற்பட்டவை. நீதிபதி நாங்கள் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளவே இல்லை. சட்டத்தின் வைத்து கொண்டு, அதன்படி தண்டனை வழங்கிவிட்டார்.
கடைசியாக சர்ரே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை குடும்பத்துடன் சென்று பார்த்தபோது, அம்மாவின் கைகளை பிடித்துக் கொண்டே அழுதேவிட்டேன்.
‘‘நீ ஏம்மா அப்பாவை கொன்னே?’’
வழக்கம்போல் அவரது கண்ணில் இருந்து கண்ணீர்தான் கொட்டியது.
ஒருவழியாக அவரை தேற்றி மீண்டும் அதே கேள்வியை கேட்டேன்.
‘‘அவர் என்னைப்பற்றி பேசியது வரையில் என்னால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், உங்களைப்பற்றியும் பேச ஆரம்பித்தபோதுதான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’’ என்றுக் கூறி மீண்டும் கதற ஆரம்பித்தாள்.
அம்மா… அம்மா… என்று கண்ணீர் விடத்தான் முடிந்தது.

No comments:

Post a Comment

Thanks