சாம்பிள் தாத்தா

சாம்பிள் தாத்தா



தாத்தாக்கள் பலவகை என்றால்,  இதுவும் ஒரு வகை.
இவர்களை நீங்கள்  கூட உங்கள் அக்கம், பக்கத்தில் நீக்கமற பார்க்க முடியும். அப்போது, நீங்களே கூட வியந்திருப்பீர்கள்.
இவர்களுக்கு, மூளையில் உள்ள அத்தனை அட்ரீனல்களும் சொல்லும் ஒரே வார்த்தை, இல்லை, இல்லை முழங்கும் ஒரே வார்த்தை சாம்பிள் என்ற வார்தா்தையை மட்டும்தான்.
வீ்ட்டுக்கு முக்கியமான பொருட்களை வாங்கப்போகும்போது, பொறுப்புகளை இவர்களிடம் விட்டுவிட்டால், அதோ கதிதான். பிரிட்ஜ்கே சாம்பிள் கேட்கும் ரகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
குடும்பத்தில் எந்த அதிகாரம் இல்லை என்றாலும் கூட, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் சமயங்களில் இவர்கள், தங்களிடமே ஒட்டுமொத்த பொறுப்பு இருப்பதாக எண்ணிக்கொண்டு (இவர்களாவே), வாங்கப்போகின்ற பொருளை அக்குவேறு, ஆணிவேராக விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள். வாங்கும் சக்தி படைத்த அவர்களது குடும்பத்தினர் அடுத்தப்பக்கம், அந்தப் பொருளுக்கு பில் போட்டுக் கொண்டிருப்பார்கள். இது தெரியாமல், விற்பனை பிரதிநிதிகளுக்கு தெரியாத விஷயங்களை கூட கேட்டு, ‘‘இதோப்பார்த்தியா… இவருக்கே தெரியல… ஹூம்… இந்த காலத்தில எல்லாத்தையும் விவரமா கேட்டு தெரிஞ்சுக்கலேன்னா… மொளகா அரைச்சுடுவாங்க…’’ என்று, அந்த பையன்கள் பற்களை நற, நறவென்று கடிக்க வைத்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்களிடம் ஒருவேளை கொடுத்துவிட்டால், அது முடிந்து வீட்டுக்கு வருகிறதோ இல்லையோ… நிச்சயம் அடுத்தமுறை நாம் கடைக்குப்போனால், ‘‘அந்தாள எல்லாம் அனுப்பாதீங்க… ஏதோ உங்க வீட்டு பெரியவராச்சேன்னு பார்க்கிறேன்… பெனாயில் வெள்ளைக்கலர்லதானே இருக்கும்… நீ… ஏதேதோ கலந்து அது கருப்பா இருக்குப்பாருன்னு, கான்சன்ட்ரேட் பினாயிலை குடுத்ததுக்கு வறுத்து எடுக்கிறார் சார்… வடிவேலு மாதிரி என்னால முடியல… அடுத்த தடவை எல்லாம் அவரை அனுப்புனீங்க…. அழுதுருவேன்’’ என்ற கடைக்காரரின் வார்த்தையைதான் கேட்க முடியும்.
சென்ற வெள்ளிக்கிழமை டிரேட் பேரில் தினகரன் உணவுக்கண்காட்சி போட்டிருந்தாங்க. நண்பர்கள் கூட்டாக சென்றிருந்தோம்.
திறப்பு விழா முடிந்து முக்கியப் பிரமுகர் ஒவ்வொரு ஸ்டாலாக சென்றுக் கொண்டிருந்தார். காலையிலேயே சென்றுவிட்டதால், ஸ்டால்களை பார்க்க முக்கியப் பிரமுகரின் பின்னாலேயே நாங்களும் செல்ல வேண்டியதாகிவிட்டது.
முதலில் நுழைந்தது, வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்டால். ஒவ்வொரு இயந்திரமாக பார்த்துக் கொண்டே வந்தோம்.
கையில்  பையும்,  முதிர்ச்சிக்கு பெரிய கருப்பு பிரேமில் வெள்ளை எழுத்து கண்ணாடியும் போட்டிருந்த ஒருநபர் எங்களுக்கு முன் வந்து, ‘‘இது ஒரு கிலோ எள்ளைப்போட்டால் எவ்வளவு எண்ணெய் குடுக்கும்?’’ என்று கேட்டார்.
இயந்திரத்தில் போட்டிருந்த எள்ளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அவர் கேள்வி கேட்பதை பார்க்கும் சற்று சுவாரசியமாகத்தான் இருந்தது. அடுத்தது, கடலை எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தின் முன்பு நின்றார்.
‘‘கடலைய வறுத்து போடணுமா, இல்லாட்டி அப்படியே போட்டுறலாமா? வெயில்ல காய வைக்கணுமா? இல்லே… தோல உரிச்சு போட்டுட்டா மட்டும் போதுமா?’’ என்று கூறியபடி கைப்பிடி அளவு கடலையை அள்ளிக் கொண்டார்.
அப்போதே சின்னதாக ஒரு சந்தேகம் வந்தது.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும் என்பதுபோல், வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக்கூடாது என்பது என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
நாங்கள் நகர்ந்து ஆலீவ் ஆயில் ஸ்டாலில் நின்றிருந்தோம்.
‘எக்ஸ்ட்ரா வெர்ஜின்’ என்பதுபோன்ற பெரிய வார்த்தைகளை  எல்லாம் சினிமா நடிகைப்போல் நின்றிருந்த அந்த பெண்மணி நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். பேசுறப்ப நீங்க நுனிநாக்கை பார்த்தீங்களாக்கும்?ன்னு விஷ்ணு கேட்கிற பதிலுக்கு அப்புறம் பதில் சொல்றேன்.
சரியா அந்த இடத்துக்கு வந்தார் நம்ம பெரியவர். எல்லோரும் அந்த பெண்மணி சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க, நேராக இவர் அந்த ‘எக்ஸ்ட்ரா வெர்ஜின்’ ஆயிலில் பொறித்து வைக்கப்பட்டிருந்த சிப்ஸ் வகைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு  ருசித்து கொண்டிருந்தார்.
‘‘இது அவர்தான், இது அவர்தான்’’ என்று உள்மனது சொல்லிக் கொண்டிருந்தாலும், காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாத புளிச்ச ஏப்பத்தை வைத்து அதை அடக்கினேன்.
‘‘இது ஆலீவ் ஆயில்ல பொறிச்சது மாதிரி இல்லையே?’’ என்று அந்த பெரியவர் கேட்டதைப் பார்த்த அந்த பெண், ‘‘இது காலையில பொறிச்சு வச்சது சார்.. ஏசி ரூம் இல்லையா… அதனால சுமெல் போயிடுச்சு… கொஞ்சம் இருங்க. பொறிச்சு காட்டச் சொல்றேன்’’ என்று அருகில் இருந்த சிறிய அடுப்பில் நின்றிருந்த நபரை பார்த்து, சிலவற்றை பொறித்து தரும்படி சைகையாலேயே காட்டினார்.
இந்த நேரத்தில் நாங்கள் நகர்ந்து,  அடுத்திருந்த காபி நிறுவன ஸ்டாலில் நின்றிருந்தோம்.
காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால், ஐந்து காப்பிக்கு ஆர்டர் கொடுத்து அது வரும்போது, நண்பர் சங்கர் மிஷினுக்கு அருகில் நின்று ஒவ்வொன்றாக வாங்கி, எங்களிடம் பாஸ் செய்தார். அந்த ஸ்டாலில் காபி வாங்குவதற்காக சற்று கூட்டம் இருந்தது.
சரியாக நான்காவது கப், அது எனக்கு வர வேண்டியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்தார் அந்த பெரியவர், ‘‘இப்படி கூட்டமா நின்னா… எல்லாருக்கும் ஒழுங்காக எப்படி குடுக்க முடியும். வரிசையில நின்னு வாங்கிக்கோங்க சார்…’’ என்று எங்களை பார்த்து கூறிவிட்டு, சங்கர் முகம் பார்க்காமலேயே பின்னால் பாஸ் செய்துக் கொண்டிருந்த நான்காவது கப் காபியை வாங்கிக் கொண்டு போனார் அந்த மனிதர்.
கையில் முந்தைய ஸ்டாலில் சுடச்சுட பொறித்து தந்த சிப்ஸ் வகையறாக்கள்.
ஏதேச்சையாக சங்கர் திரும்பி பார்த்து, பெரியவர்  வாங்கிச் செல்வதை பார்த்து, ‘‘சரி விடுங்க…’’ என்பதைப்போல் கை ஆட்டிவிட்டு, இன்னொரு கப் காபியை வாங்கி எனக்கு கொடுத்தார்.
காபியை குடித்துவிட்டு பேனா ஸ்டாலுக்கு சென்றோம். அங்கு ஸ்டாண்ட் கம் செல்போன் ரைட்டிங் பெண் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
‘‘ஏன் சார்… முதல் நாள்லேயே விற்பனை போடுறதை விட, நாலு பேருக்கு உங்க  பேனாவ குடுத்தீங்க… உங்க கம்பெனிக்கு விளம்பரம் கிடைக்கும்ல’’ என்று பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.
சீரியசாக விற்பனையாளரின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பெரியவர். இப்போது என் பற்கள், நற, நற ஆகிக் கொண்டிருந்தன. அல்சேஷன் நற, நற ஆவதற்கு முன்பு ரவிக்குமார் என்னை இழுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாலுக்கு சென்றார்.
அது கொசுவை கவர்ந்து இழுத்து கொல்லும் நவீன எல்எப்எல் லைட்டிங் மிஷன் விற்பனை ஸ்டால்.
மிஷின் எப்படி கொசுவை இழுத்துக் கொல்லும் என்பது குறித்து விளக்கம் அளித்தார் விற்பனை பிரதிநிதி. ஏற்கனவே அது கொசுவை இழுத்துக் கொன்ற மிஷினின் சேம்பரை பார்வையாளர்களிடம் காட்டினார். அதில் சீரகம் போன்று ஏராளமான கொசுக்கள் செத்துக் கிடந்தன.
‘‘ஏன்… சார்… இங்கேதான் கொசுவே இல்லையே… அதுக்குள்ள உங்க  மிஷின்ல எப்படி இவ்வளவு கொசு செத்துச்சு… இது கொஞ்சம் ஓவரா இல்ல… நான் எப்படி உங்களையும்,  உங்க மிஷினையும் நம்புறது?’’ என்று கேள்விக் கேட்டது, பின்னால் நின்றிருந்த பெருசுதான்.
‘‘சார்… கொசு எங்க விழுகும்னு காட்டறதுக்காக கொண்டு வந்த சேம்பர்சார்… கொசு சாகலேன்னா மிஷினை திரும்ப குடுத்து பணத்தை திரும்ப வாங்கிக்கலாம். அதுக்கான கேரண்டி கார்டையும் நாங்க குடுக்கிறோம்’’ என்று விளக்கிக் கொண்டிருந்தார்  வி.பி.
வொயிட்ஸ் தீவு எரிமலையை விட கொதித்து கொண்டிருந்த என்னை, அந்த இடத்தில் இருந்து மொத்த நண்பர்களும் இழுத்துச் சென்றனர்.
கடைசியாக ஆர்.ஆர் பிரியாணி போர்டை பார்த்ததும், செம வெட்டு வெட்டலாம் என்று அங்கு போய் நின்றோம். ஆனால்,  ஸ்டாலில் பிரியாணி அண்டாவைக் காணோம்.
‘‘சார்… ஸ்டால் ஓப்பன் பண்ணலையா?’’ என்று கேட்டார் நண்பர் ஆர்.சி.
‘‘பிரியாணி வந்துட்டு இருக்கு… கொஞ்சம் லேட் ஆகும்… இன்னைக்கு பர்ஸ்ட் 100 கஸ்டமருக்கு ப்ரீயா டிஸ்ரிபியூட் பண்ணப்போறோம்’’ என்றார் அந்த நபர்.
‘‘பரவாயில்லை சார்… ஒரு மணி நேரம் ஆன கூட உங்க பிரியாணிய சாம்பிள் பார்க்காம போக மாட்டேன்’’ என்று இந்த முறை அந்த பெருசு முன்புறம் வந்திருந்தார்.
‘‘டேய்… அவனா… நீ…’’ என்று கத்திக்  கொண்டிருந்த என்னை நண்பர்கள் இழுத்துச் செல்ல, ‘‘டர்ட்டி பெல்லோஸ்…’’ என்று அந்த நபர் என்னை திட்டிக் கொண்டிருப்பது மட்டும் தெளிவாக கேட்டது.
   - ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks