தொட தொட துன்பம்

[5:37 PM, 11/17/2018] J S K Balakumar😎🤩: டிஎம்ஐ

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரின் குளிரூட்டப்பட்ட அந்த அறையில் கடும் இறுக்கம் நிலவிக் கொண்டிருந்தது.
அமைச்சர் இன்பவேலன்தான் ஆரம்பித்தார், ‘‘பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தி இருப்பது சாதாரண ஒருத்தருடைய பெண்ணை அல்ல. நாட்டின் தலைமை விஞ்ஞானியோட பெண்ணை. அவருடைய குடும்பத்துக்கே நாம் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது’’.
பெங்களூரில் இருந்து வந்திருந்த போலீஸ் டிஜிபி கவுடா உடனடியாக பதில் தந்தார். ‘‘சார்... விஞ்ஞானி சுப்ரமணியத்தோட பொண்ணுக்கிட்ட பல முறை எச்சரித்திருக்கிறோம். எக்காரணத்தை கொண்டும் தனியாக போகும் விபரீதத்தில் இறங்க வேண்டாம்னு. ஆனா, அதை கேட்காம அவர் சுவர் ஏறிக்குதித்து தனியா பிரண்ட்ஸ்களோட ஷாப்பிங் போனதாலதான் இந்த சம்பவம் நடந்திருக்கு. எங்களால முடிஞ்ச அளவுக்கு மிகத்தீவிரமா தேடிட்டுதான் இருக்கோம்’’ என்றார்.
அமைச்சர் அவரை கையைக்காட்டி அமர்த்தினார். ‘‘நீங்க தேடிட்டு இருக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ நிலைமை ரொம்ப கையை மீறிப்போயிடிச்சு. அவங்க நம்ம திகார் சிறையில் இருக்கிற பாகிஸ்தான் தீவிரவாதி அக்பரை விடுவிச்சா தான் விஞ்ஞானி சுப்ரமணியனுடைய பொண்ணை விடுப்போம்னு பேரம் பேசுற அளவுக்கு வந்துட்டாங்க...’’
‘‘என்ன செய்யப்போறீங்கன்னு பிரதமர் அலுவலகத்தில இருந்து ரெண்டு முறை போன் வந்துவிட்டது’’ அமைச்சர் வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
அங்கிருந்த அனைத்து அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்தனர்.
அமைச்சரே மீண்டும் ஆரம்பித்தார், ‘‘சரி நாம இன்னும் ரெண்டு மணி நேரத்தில திரும்ப கூடலாம். அதுக்குள்ள என்ன செய்ய முடியும்னு, எப்படி அந்த பொண்னை காப்பாத்த முடியும்னு பாருங்க’’ என்றார்.
அனைவரும் கலைந்து சென்றுவிட, அமைச்சர் ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.
திடீரென நினைவுக்கு வந்தவராக, தனது செல்போனை எடுத்து ராணுவ புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவரான ஜே.கே. என்று அழைக்கப்படும் ஜெயக்குமாரை அழைத்தார்.
சில விநாடி ரிங்டோனை தொடர்ந்து, ‘‘ஜே.கே. பேசுறேன் சார். குட்மார்னிங்’’ என்றார்.
‘‘ஜே.கே. விஷயம் உங்களை எட்டியிருக்கும்னு நினைக்கிறேன். ரா அபிஷியல்ஸ்கிட்ட பேசியிருக்கேன். சுப்ரமணியன் பொண்ணை பத்திரமா மீட்க உங்கக்கிட்ட ஏதாவது பிளான் இருக்கா?’’
‘‘சார்... எங்க பிளான் எப்பவுமே அதிரடியா இருக்கும். உங்களுக்கு அது தெரிஞ்சதுதான். சம்பவத்தை பத்தி கேள்விப்பட்ட உடனேயே நாங்க அதப்பத்தி பிளான் போட ஆரம்பிச்சுட்டோம். சாதாரணமா சிவில் மேட்டர்ல நாங்கள தலையிடுறதில்ல. ஆனா, இந்த பிரச்னையில விஞ்ஞானி சுப்ரமணியன் பாதுகாப்புத்துறை ஆலோசகரும் கூட. அதனால நாங்க இதுல தலையிடுறதுல எந்த பிரச்னையும் இருக்காது. ஆனா... எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும்னு, உறுதியளிச்சா உடனடியாக நாங்க காரியத்தில இறங்கத்தயார் சார்’’ கம்பீரமான குரலில் கூறினார், ஜே.கே.
‘‘ஜே.கே. உங்க நடவடிக்கைகள்ல ஈர்க்கப்பட்டவன் நான். முள்ளை முள்ளாளத்தான் எடுக்கணும்னுறது என்னோட பாலியும் கூட. தலைவர் படேல் வழியை பின்பற்றுகிறவர்களுக்கு இது நல்லாவே தெரியும். ஓ.கே. உங்க பிளான் பத்தி நீங்க விளக்கிட்டீங்கன்னு நாம புரசீட் பண்றதுக்கு நல்லாயிருக்கும். பை த பை உங்களுக்கு எவ்வளவு அவகாசம் தேவைப்படும்?’’
‘‘சார்... என்னோட பிளான் இதுதான். பொண்ணு காண போயி இப்போ வரைக்கும் நாலு மணி நேரம் ஆகியிருக்கு...’’ என்று விளக்க ஆரம்பித்தார் ஜே.கே.
‘‘ஓ.கே. நீங்க உடனடியா செயல்ல இறங்கலாம். நான் அவங்கக்கிட்ட 8 மணி நேரம் அவகாசம் கேட்டிருக்கிறேன். அதுக்குள்ல நீங்க சொன்ன மாதிரி காரியத்தை கச்சிதமா முடிச்சிடுவீங்கன்னு நினைக்கிறேன்’’ கூறினார் அமைச்சர்.
‘‘ஆப்ரேஷன் எப்எம்.மை முடிச்சிட்டு உங்கக்கிட்ட பேசுறேன்’’ என்றுக் கூறி இணைப்பை துண்டித்தார் ஜே.கே.


-------

போனை வைத்த அடுத்த விநாடி, தன் முன் அமர்ந்திருந்த தனது அதிகாரிகளுடன் உரையாட ஆரம்பித்தார் ஜே.கே.
‘‘கய்ஸ்... நான் நினைச்சது போல, விஞ்ஞானியோட பெண்ணை மீட்கும் ஆப்ரேஷன் எப்எம் நம்மக்கிட்டேயே வந்திடுச்சு... பெண் என்றதால நானே வச்ச பேர் இது. உடனடியாக காரியத்தில இறங்கனும். சுருக்கமா நாம ஏற்கனவே பேசினபடி, ஆப்ரேஷனில் இறங்குகிறோம். இந்த சம்பவத்தில இன்வால்வ் ஆகியிருக்கிறவங்க... பாகிஸ்தான் தீவிரவாதிகள். சிறையில இருக்கிற தீவிரவாதி அக்பரோட குரூப். நமக்கு ஏற்கனவே கிடைச்ச பட்ஷிகள் அளித்த தகவல்படி அவங்க இப்படி பிளான் பண்ணலாம்னு மெசேஜ் வந்தப்பவே, அதை எப்படி முறியடிக்கலாம்னு ஒரு பிளானை போட்டு வச்சிருந்தோம். அதைத்தான் இப்போ செயல்படுத்தப்போறோம்’’ என்றார் ஜே.கே.

‘‘பெங்களூருல பெண்ணை கடத்தியிருக்காங்க... நிச்சயமா அவங்களுக்கு இந்தியா சேப்பான நாடு கிடையாது. அதனால விக்டிமை அவங்க தங்களோட நாட்டுக்கு கடத்திட்டு போகத்தான் பார்ப்பாங்க...’’
‘‘கடத்தினது பெங்களூர்ன்றதால அங்க வச்சும் அவங்க பிளைட் ஏற முடியாது. அதனால பக்கத்தில இருக்கிற சென்னைக்கு கூட்டிட்டு போயிருக்கனும். இது அசம்ப்சன்தான். கோவை கூட போயிருக்கலாம். உடனடியா ஏர் இந்தியா வெப்சைட்டை கிராஸ் பண்ணி, பெங்களூர் அல்லது அதற்கு பக்கத்தில இருக்கிற ஏர்போர்ட்கள்ல இருந்து அடுத்த ரெண்டு மணி நேரத்தில கிளம்புற எந்த பிளைட்டிலாவது ரெண்டு லேடீஸ் பெயர்ல, அதுவும் முஸ்லிம் லேடீஸ் பெயர்ல புக் ஆகியிருக்கான்னு செக் பண்ணுங்க... குயிக்....’’ உத்தரவுகளை பிறப்பித்தபடி, அவரும் வார் ரூம் எனப்படும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அந்த அறையில் இருந்த பிரமாண்ட கம்ப்யூட்டர் திரையை பார்க்க ஆரம்பித்தார்.
நாட்டின் தலைசிறந்த கம்ப்யூட்டர் புலிகள், உடனடியாக தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, ஏர் இந்தியாவின் நிர்வாக இணையதளத்தில் புகுந்து டிக்கெட்களை செய்ய ஆரம்பித்தார்கள்.
‘‘சார்... நீங்க சொன்னது கரெக்ட... சென்னையில இருந்து தாய்லாந்துக்கு ரெண்டு டிக்கெட் புக் ஆகியிருக்கு’’ ஒரு ஊழியர் குரல் கொடுத்தார்.
‘‘குட் கார்த்திக்... அந்த டிக்கெட் எந்த ஐபி அட்ரஸ்ல இருந்து புக் ஆகியிருக்குன்னு செக் பண்ணிட்டு, அதே ஐபி அட்ரஸ்ல இருந்து, அதே பிளைட்டுக்கு வேற ஏதாவது டிக்கெட் புக் ஆகியிருக்கான்னு பாரு’’
‘‘யெஸ்... சார்... டிக் புக் பண்ணது, செல்போன்ல இருந்து. அதே செல்ல இருந்து ஜியா என்ற பெயர்ல, அதே பிளைட்ல ஒரு டிக்கெட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புக் பண்ணியிருக்காங்க’’
‘‘அப்போ நம்ம எப்எம்.மை கொண்டு போறது, இந்த பிளைட்லதான்’’ ஜே.கே. கூறினார்.
‘‘எப்படி சார்... அவ்வளவு உறுதியா சொல்றீங்க?’’ அவருக்கு அடுத்தநிலை அதிகாரி கேட்டார்.
‘‘அதையும் கன்பார் பண்ணிடுவோம். அவங்க புக் பண்ணியிருக்கிறது 3 மணி பிளைட்டுக்கு. இப்போ மணி 2. அதனால அவங்க கட்டாயம் ஏர்போர்ட்ல செக் இன் செய்திருக்கணும் அல்லது காத்திருக்கணும். நம் எப்.எம்மை அப்படியே சுயநினைவோட கூட்டிட்டு போக முடியாது. அதனால அவங்க ஹேண்டிகேப் சேர் புக் பண்ணி, பேசன்ட்டா புக் பண்ணுவாங்க... டிக்கெட்ல அது கன்பார் ஆகியிருக்கா செக் பண்ணுங்க...’’ ஜே.கே. உத்தரவிட்டார்.
‘‘யெஸ்... சார்... யூ ஆர் கரெட்... ரெண்டு டிக்கெட்ல ஒரு லேடிக்கு வீல்சேர் புக் பண்ணியிருக்காங்க.... பேஷன்ட்னு மென்சன் ஆகியிருக்கு’’ ஊழியர் கூறினார்.
‘‘சென்னை டூ தாய்லாந்து திரி அண்ட் ஆப் ஹவர்ஸ். இந்த நேரத்தை நமக்கு பயன்படுத்திக்கணும். ஏர்போர்ட் கேமரா சர்வர ஆன் பண்ணி, நம்ம எப்எம் இருக்காங்களா பாருங்க...’’
அடுத்த சில விநாடிகள் அமைதியாக கழிந்தன.
‘‘யூ ஆர் கிரேட் சார்... அதோ தேர்ட் ரோவில செக் இன் செய்திட்டு உட்கார்ந்திருக்கிறது, நம்ம எப்எம் தான். உடன் வந்தது. மயக்கமா இருக்கிற மாதிரி வீல் சேர்ல உட்கார்ந்திருக்காங்க... உடன் வந்த லேடி பக்கத்திலேயே உட்கார்ந்திருக்காங்க... ரெண்டு பேரும் மூஞ்சியை மறைக்கிறதுக்காக பர்தா போட்டிருக்காங்க... நம்ம எப்எம்.மோட ரியல் போட்டோ, வீல் சேர் லேடியோ மேட்சிங் ஆகுது சார்’’ உற்சாகத்தில் ஊழியர் கூறினார்.
‘‘நாம இங்கேயே மடக்கிட்டா என்ன சார்...?’’ அடுத்தநிலை அதிகாரி ஜே.கே.யிடம் கேட்டார்.
‘‘அது ரிஸ்க்... உயிரை எடுக்கவும் தயங்க மாட்டாங்க... நாம பேங்காக் வரைக்கும் அவங்களோட கயிரை விட்டுப்பிடிக்கலாம். நம்ம பேங்காக் ஏஜன்ட்கிட்ட சொல்லி ஆப்ரேஷனுக்கு ரெடியா இருக்கச் சொல்லுங்க... நம்ம பேங்காக் ஏஜன்ட்கிட்ட லேடீஸ் அண்ட் பாய்ஸ் டீமோட ரெடி இருக்க சொல்லி ஆப்ரேஷனுக்கு தயாரா இருக்கச் சொல்லுங்க... பாகிஸ்தான் ஏஜன்ட்கிட்ட பேச சொல்லி மெசேஜ் குடுங்க’’ பரபரவென உத்தரவுகளை பறக்கவிட்டார் ஜே.கே.
‘‘சார்... பாகிஸ்தான் ஏஜன்ட் வாட்ஸ்அப் லைன் இருக்கார்’’ ரேடியோ ஊழியர் பணிவுடன் கூறினார்.
எழுந்து சென்று ரீசிவரை காதில் பொருத்திய ஜே.கே., ‘‘ஹலோ... சுல்தான், வணக்கம். நான் ஏற்கனவே காலையில சொன்னபடி பண்ணீட்டீங்களா?’’ என்று கேட்டார்.
‘‘சார்... நீங்க சொன்னபடி, அக்பரோட கடைசி மனைவியை, அவளோட குழந்தையோட சேர்த்து, இன்பச் சுற்றுலா பரிசுன்னு சொல்லி ஏமாற்றி கொஞ்சம் கூட சந்தேகம் வராத அளவுக்கு, லாகூர் டிஸ்னிலேண்டுக்கு கூட்டி வந்திருக்கோம். அவங்க கையில 5,000க்கு கிப்ட் வவுச்சரும் குடுத்திருக்கிறதால சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க... இதுவரை நல்லா போயிட்டு இருக்கு சார்... நீங்க சொன்னபடி 3 மணிக்கு நம்ம இடத்துக்கு கூட்டிட்டு போயிடுவேன்... ஏதாவது தகவல்னா மறுபடியும் உங்களை கான்ட்டாக் பண்றேன்’’
‘‘குட்... கோ அஹெட்’’
‘‘நாம உடனடியா இப்போ திகார் ஜெயிலுக்கு போகனும்... அவங்க ஐஜிக்கு இன்பார்ம் பண்ணிடுங்க... விஷயம் சீக்ரெட்டாவே மெயின்டெயின் பண்ணச் சொல்லுங்க’’ சொல்லிவிட்டு ஜே.கே. எழுந்து நடக்க, அவருடன் துணை அதிகாரி மற்றும் சில அதிகாரிகள் எழுந்து பின்னாலேயே சென்றனர்.
அவர்களது கார், சத்தமின்றி திகார் ஜெயிலில் நுழைந்து, தீவிரவாதிகள் அடைக்கப்பட்ட உச்சபட்ச பாதுகாப்பு பகுதிக்கு சென்று அமைதியானது.
ஜே.ேக.யும், உடன் வந்த அதிகாரிகளும் நேராக அக்பர் அறைக்கு சென்றனர்.
அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார் அக்பர்.
இவரா ஐதராபாத்தில் நடந்த அவ்வளவு பெரிய குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஆச்சரியப்படுமளவுக்கு, ஒல்லியான தேகம், நீண்ட தாடியுடன், வெள்ளை ஜிப்பா, குர்தாவுடன் அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.
‘‘வணக்கம் பாய்...’’ ஜே.கே. கூறினார்.
அவரது குரலை கேட்டு அந்தப்பக்கம் திரும்பிய அக்பர், வாங்க சார்... அதுதான் வழக்கில விசாரணை எல்லாம் முடிஞ்சு எனக்கு தூக்கு தண்டனை வாங்கிக் குடுத்திட்டீங்களே... இன்னமும் எதுக்காக என்னை பார்க்க வந்திருக்கீங்க?’’
‘‘உன்னால ஒரு காரியம் ஆகணும் பாய்...’’ ஜே.கே. ஆரம்பித்தார்.
என்ன என்பதுபோல் அவரது முகத்தை பார்த்தார் அக்பர்.
‘‘இன்னைக்கு மத்தியானம் நாலு மணிக்கு, அபோதாபாத்தில உன்னை சிறையில் இருந்து மீட்டு கொண்டு வருவது குறித்து பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆட்களோட உன் ேகாஷ்டியோட ஆட்கள் கூட்டத்தில கலந்துக்கிறது எங்களுக்கு தெரியும். இதில ஐஎஸ்ஐ.யோட பெரிய தலை கலந்துக்கிறதும் எங்களுக்கு தெரியும். அது உனக்கும் எப்படியாவது தெரிந்திருக்கும் என்பதும் எங்களுக்கு தெரியும்!’’
‘‘அப்படியா...?’’ என்றார் அக்பர் ஆச்சர்யமாக.
பின்னர் அவரே தொடர்ந்தார். ‘‘அதுகென்ன இப்போ?’’
‘‘அங்கதான் உங்களால எனக்கு ஒரு காரியம் ஆகணும்’’
மீண்டும் ஜே.கே.யின் முகத்தை பார்த்தார் அக்பர்.
‘‘உன்னோட டீமில் ஒருத்தரை தற்கொலைப்படைக்காரனா அங்க அனுப்பி ப்ளோ பண்ணனும்’’
‘‘உங்களோட விஞ்ஞானி மகள கடத்தினதையே, உங்களால இன்னும் மீட்க முடியல, அதுக்கு நடுவில என்னை வச்சே என் ஆட்களை கொல்ல நினைக்கிறீங்களா?’’ அக்பர் ஆத்திரத்துடன் கேட்டார்.
‘‘அக்பர் பாய்... என்னைப்பத்தி உங்களுக்கு நல்லா தெரிஞ்சதுதான். நான் ஒரு காரியத்தை எடுத்தா முடிக்காம விடமாட்டேன். இதுல எங்களுக்கு உதவி செஞ்சா... உங்களுக்குத்தான் நல்லது நடக்கும்’’
‘‘ஆமா... என்னை தூக்குல இருந்து மீட்டு, என் சொந்த நாட்டுக்கு அனுப்பிட போறீங்க பாருங்க...’’ கிண்டலுடன் சிரித்தார் அக்பர்.
‘‘நீ செத்தா கூட, உன் கடைசி பிள்ளையை சாகாம தடுக்க முடியுமே?’’
ஜே.கே. கூறியதை கேட்ட அடுத்த நொடி, அதிர்ச்சியானார் அக்பர். ‘‘அப்துல்லாவை என்ன பண்ணுனீங்க...’’ சற்று கலவரத்துடன் கேட்டார்.
‘‘கரெக்டா புரிஞ்சுக்கிட்டீங்களே பாய்... உங்களை சிறையில கொண்டு அடைச்ச உடனேயே உங்க பத்தின முழு சாதகத்தையும் வாங்கிட்டேன். நீங்க ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்ட நூருண்ணிசாவும், அவளுக்கு பிறந்த குழந்தையையும், உன் அடுத்த தலைக்கு கூட தெரியாம லாகூர்ல ஒரு அபார்ட்மென்ட்ல வச்சிருந்தியே அது கூட எனக்கு தெரியும். அப்துல்லா மேல நீ எவ்வளவு பாசம் வச்சிருக்கேங்கிறது, 10 நாளைக்கு முன்னாடி உன்னோட வெளி ஆள் ஒருவன் டெடிபேர் கொண்டு போய் குடுத்ததில இருந்தே எங்களுக்கு நல்லாத்தெரியும்’’
‘‘ஜே.கே. உங்களோட சித்ரவதை எல்லை மீறி போய்ட்டு இருக்கு... அதுதான் என்னை தண்டிச்சிட்டீங்களே அப்புறமும் எதுக்கு என் பிள்ளைய வதைக்கிறீங்க?’’
‘‘அக்பர் பாய்... நீங்க பாட்டுக்கு பேசாமா இருந்திருந்தா... நாங்களும் எங்க பாட்டுக்கு பேசமா வேலையை பார்த்திட்டு இருந்திருப்போம். ஆனா, நீங்க பொண்டாட்டி பிள்ளைய பார்க்கணும்ற ஆசையில விஞ்ஞானி மகளை கடத்தி, அதுவும் ஐஎஸ்ஐ ஆட்கள்கிட்ட ஒப்படைக்க இருந்தீங்களே, அது மட்டும் நியாயமா? நீங்க ஒரே கல்லில ரெண்டு மாங்காய அடிக்கலாம்னு திட்டம் போட்டீங்க... அதே கல்லை திருப்பிவிட்டு நாங்க மாங்காய அடிக்கலாம்னு பார்க்கிறோம்... அவ்வளவுதான்’’
‘‘என் குழந்தையை நான் பார்க்கணும்...’’ அக்பர் தழுதழுத்த குரலில் கூறினார்.
யாரை எங்கே அடித்தால் வலிக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்த ஜே.கே., இதை எதிர்பார்த்துதான் விஞ்ஞானியின் மகளை கடத்தி, தீவிரவாதிகள் அக்பரை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள் என்று செய்தி கிடைத்த உடனேயே சுல்தானுக்கு போன் செய்து, அக்பரின் மனைவி, குழந்தையை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்டிருந்தார். அது இப்போது சரியாக ஒர்க்அவுட் ஆனது.
தனது செல்போனில் இருந்து சுல்தானுக்கு வாட்ஸ்ஆப் காலில் அழைத்தார்.
‘‘சுல்தான்... அக்பர் பாய் அவரோட பைனை பார்க்கணும்னு சொல்றார். கொஞ்சம் காட்டு’’ ஜே.கே. கூறினார்.
ஏதோ ஒரு கரும்பு அரவை மில்லில், இயந்திரம் ஓடிக்கொண்டிருக்க அதன் அருகில் கரும்பை கடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அப்துல்லா.
பார்த்த மாத்திரத்திலேயே உடைந்தார் அக்பர்.
‘‘அக்பர் பாய் நாங்க சொல்ற நீங்க கேட்டீங்கன்னா ஒன்ணுமே நடக்காததது மாதிரி, உங்க இளம் சம்சாரத்தையும், பையனையும் அப்படியே பிளாட்டுக்கு கொண்டு போய் விட்டுடுவோம். இல்லேன்னா... கரும்பு அரவையிலே...’’
‘‘நிறுத்துங்க ஜே.கே.... நான் செய்றேன். எனக்கு ஒரு சாட்டிலைட் போன் குடுங்க’’ என்றார் தழுதழுத்த குரலில் அக்பர்.
போன் கொடுக்கப்பட்டு, அவர் பேசி முடித்ததும், ஜே.கே. அவரைப்பார்த்தார்.
‘‘4 மணிக்கு சம்பவம் நடக்கும்’’ என்றார் அக்பர்.
‘‘உங்க பிள்ளை 4.05க்கு உங்க வீட்ல இருப்பான்’’ என்றார் ஜே.கே.
வெளியே வந்தவர் உடனடியாக காரில் ஏறி அமர்ந்து, பேங்காக் ஏஜன்ட்டை பிடித்தார்.
‘‘விமல் நம்ம பிளைட் வர்ற நேரமாச்சு... பேங்காக் ஏர்போர்ட்ல அவங்க வந்து இறங்கி, அடுத்ததா துபாய் அல்லது எமிரேட் கன்ட்ரி ஏதாவதுக்கு டிக்கெட் எடுத்து வச்சிருப்பாங்க. அதை ஏஜன்ட் கொண்டு வந்து குடுக்க அவங்ககிட்ட குடுப்பான். அதுக்குள்ள எப்.எம்.மை மீட்டாகணும்’’
‘‘ஓ.கே. சார்... நீங்க சொல்ற ஆங்கிள்ல நானும் செக், பண்ணேண். அவங்க இந்த முறை ஈஜிப்ட் போறாங்க சார்...’’ விமல் கூறினார்.
‘‘நான் ஏற்கனவே, நம்ம எப்.எம்.மையும் அவங்களோட வர்ற லேடி படத்தையும் உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அதே சைஸ்ல ரெண்டு லேடி ஏஜன்ட்களை ரெடி பண்ணிட்டீங்களா?’’
‘‘எஸ்... சார்’’
‘‘ஓ.கே. அவங்களோட நம்ம லேடி டீம் ரெடியா இருக்கணும். அவங்க எங்கேயும் தடயத்தை விட்டுடக்கூடாதுன்னு... டாய்லெட்லதான் டிக்கெட்டை வாங்கிப்பாங்க.... அதனால குளோச அவங்க வாட்ச் பண்ணி, டிக்கெட்டை வாங்கிக்கிறதுக்காக அந்த லேடி பாத்ரூம் போறப்போ, மடக்கிட்டு, நம்ம ஏஜன்ட் பர்தாவில எப்.எம்.கிட்ட போயிடனும். அதே நேரம், பாய்ஸ் டீம், எப்.எம்.முக்கு பின்னாடி உட்கார்ந்திட்டு, வாட்ச் பண்ற அவங்களோட ஏஜன்ட்டுக்கு தூக்கத்தை குடுக்கணும்... புரியுதா?’’
‘‘யெஸ் சார்... கிளியர்...’’
இணைப்பை துண்டித்துவிட்டு சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டார் ஜே.கே.
அவரது, அடுத்தடுத்த யோசனைகள், திட்டமிடல் ஆகியவற்றை பார்த்து பிரமிப்புடன் இருந்தனர் அதிகாரிகள். 
எதிர்பார்த்திருந்த அந்த மாலை 4 மணி நேரம், சூடான டீயுடன் ஆரம்பித்தது ஜே.கே.வுக்கு.
அப்போதாபாத் சம்பவம் பற்றி எதிர்பார்த்திருந்தவருக்கு, 10 நிமிடம் தாமதமாக அந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலம் வந்தது.
‘சிவகாசி விருந்து’ என்று வந்திருந்த செய்தியை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தார்.
அதை அப்படியே தனது டீம் உறுப்பினர்களுக்கும் காட்டினார். அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
அடுத்த சம்பவத்துக்காக காத்திருந்தவருக்கு, விமலின் அழைப்பை பார்த்ததும் பரபரப்பானார்.
மெசேஜ் வராமல் கால் வந்ததை பார்த்தும், ‘‘என்ன பிராப்ளம் விமல்?’’ என்றார்.
‘‘சார்... எப்.எம்.மோட வந்த லேடியை மடக்கிப்போட்டாச்சு... அவங்களுடைய மெசெஜ்ஜரா வந்தவன், ‘ரோஹிப்னால் குடுக்கிறதுக்குல்ல உஷாராயி தடுத்துவிட்டான். நம்ம ஏஜன்ட்க்கு ஏற்கனவே இது மாதிரியான நேரத்தில, செயல்படுவது குறித்து டிரைனிங் குடுத்திருந்தேன். அதனால அவன் கர்சீப் மருந்தை அமுக்கிறதுக்கு முன்னாடி, அவன் பையில தன்னோட பர்சை போட்டுட்டான். அவன் சுதாரிச்சிட்டதால அவன புரட்டி எடுத்து திருடன், திருடன்னு கத்திட்டான். போலீஸ் வந்ததும், வசமா மாட்டிவிட்டுட்டான்.... சோ... எப்.எம். அண்ட் ஆல் ஆர் சேப் சார். அவங்களை அடுத்த பிளைட்ல அனுப்பட்டுமா, இல்லாட்டி வேற பிளான் உண்டா?’’
‘‘குட் விமல்... நம்ம காமர்ஸ் மினிஸ்ட் அண்ட் டீம் மாநாட்டுக்காக தனி விமானத்துல அங்க வந்திருக்காங்க... அவங்களோட விமானம் இன்னும் அரைமணி நேரத்தில புறப்பட போகுது. அதுல அவங்களை அழைச்சிட்டு வர்றதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். அவங்களை ஸ்ட்ரெச்சரில் வைத்து, அந்த டீம் கிட்ட ஒப்படைச்சிடுங்க... பிஆர்ஓ. தனசேகரன் நம்பரை உங்களுக்கு அனுப்பி இருக்கேன் பார்த்துக்கோங்க’’ கூறி முடித்துவிட்டு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகளுக்கு கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார்.
அனைத்து ஊழியர்களும் எழுந்து ஒரு ‘ஓஹோ’ போட்ட நேரத்தில், உள்துறை அமைச்சரிடம் இருந்து ஜே.கே.வுக்கு அழைப்பு வந்தது.
‘‘சார் ஜே.கே.’’
‘‘ஜே.கே.... காரியம் பழமா?’’
‘‘யெஸ் சார்... டிஎம்ஐ இறங்கிய சம்பவத்தில காய்களை பழுக்க வச்சித்தான் பழக்கம். நம்ம காமர்ஸ் மினிஸ்டர் வர்ற பிளைட்ல சுப்ரமணியத்தோட பொண்ணும் வர்றாங்க’’
‘‘சூப்பர் ஜே.கே. இதை பிரதமர்கிட்ட உடனே சொல்றேன். அப்புறம் அப்போதாபாத்தில தீவிரவாதிகள் கூட்டத்தில கலந்துக்கிட்ட ஐஎஸ்ஐ ஜோனல் கமாண்டர் நசீர் குண்டுவெடிப்பில பலின்னு இப்போதான் நியூஸ் கிடைச்சது. அதுவும் உங்களோட வேலையா?’’
‘‘யெஸ் சார்... இவர்தான் அக்பர் டீமை ஹேண்டில் பண்ணிட்டு இருந்தார். இனி அக்பர் டீமே கிடையாது. அவனோட டீம்ல எல்லா ஆளும், அவனை இயக்கினவரும் பரலோகம் போய்ட்டாங்க...’’
‘‘இதுவும் நல்லா இருக்கு... பிரதமர்கிட்ட இதை சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவார்... தேங்கியூ ஜே.கே. உங்க டீம் கிட்டேயும் சொல்லிடுங்க... இன்னைக்கு நைட் உங்க டீமுக்கு டின்னர் அரேஞ்ச் பண்ணிருக்கேன். எல்லாரும் கட்டாயம் வரணும்.... ஓ.கே.யா?’’
‘‘எஸ் சார்....’’ கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார் ஜே.கே.
மறுநாள் காலை. தினப்பத்திரிகைகளில் துண்டுச் செய்தியில் வெளியாகி இருந்தது, ‘‘பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் தீவிரவாதிகள் கும்பலில் நடந்த மோதலில், குண்டுவெடித்து 12 பேர் மரணம். இதுபற்றி...’’

No comments:

Post a Comment

Thanks