வேற வழியில்லை

வேறு வழியில்லை, வீட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான்.
எத்தனை நாள்தான் அடியும், திட்டும் வாங்கிக் கொண்டிருப்பது? எனக்கு பின்னால் இன்னும் மூன்று தங்கைகள் இருக்கிறார்களே, அவர்களின் வாழ்க்கை நாசமாகிவிடுமே என்று நினைத்து, பொறுமை காப்பது தப்பு என்பது நேற்று தெரிந்துவிட்டது.
திருமண பந்தம் என்பது உண்மையான ஆண், பெண்ணுக்குரியது. ஆனால், இங்குதான் அது சுத்தமாக இல்லையே. ஒரு நாள் காய்ச்சலில் படுத்ததில்தான் சுயரூபமே தெரிந்தது. சீ…சீ… வீட்டில் வேலை  செய்பவர்களிடமுமா? மனம் வெறுத்துவிட்டது.
திருமணத்துக்கு முன்பு மாமனார், மாமியார்  வரும்போது வியாபாரம் செய்கிறோம் என்றார்கள். ஆனால், இங்கு வந்த பார்த்த பின்னர்தானே தெரிகிறது. சாராயம், கஞ்சா விற்பனைதான்  இவர்களின் வியாபாரமாம். அப்புறம் ஆட்கள் மட்டும் எப்படி நல்லவர்களாக இருந்துவிடப் போகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே அம்மா, அப்பிராணியாக வளர்த்துவிட்டாள். அதுதான் இப்போது பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த முறை அடிவாங்கும்போது, அதைப்பார்த்து குழந்தை பவித்ரா துடித்துவிட்டாள். என் மீது அடிபடாதவாறு அவள் வந்து கட்டிக் கொண்டபோது, கண்ணில் தண்ணீர் ஆறாக ஓடியது. அவள்தான் துடைத்துவிட்டாள். எனக்காக ஒரு ஜீவன் இருக்கிறாளே என்று மனம் ஆறுதல் கொண்டது.
ஒவ்வொரு நாளும் இந்த வீட்டில் பொழுதுபோவது என்பது, நரகமாக இருக்கிறது. சரி, போவது என்று முடிவெடுத்துவிட்ட பின்னர் எங்கே போவது? குழந்தையை விட்டுப் போவதா அல்லது அவளையும் அழைத்துக் கொண்டு போவதா என்று யோசனை எழுந்தது.
குழந்தையை விட்டுச் சென்றால், அவளும் இவர்களின் நடவடிக்கையை பார்த்து கெட்டுவிடுவாள். ஏதோ, தன் வளர்ப்பால் கொஞ்சம் நல்ல பெண்ணாக இருக்கிறாள். அவளும் கெட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்றால், தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்வதுதான் சரியாக இருக்கும்.
சரி எங்கே செல்வது? அடுத்த கேள்வி மனதில் ஓடியது. – ஜே.எஸ்.கே.பாலகுமார்.
பக்கத்தில் இருந்தால் எப்படியாவது வந்து சுற்றிவளைத்து விடுவார்கள்.
அன்றைக்கு பவித்ராவை பள்ளிக்கூடத்துக்கு விடச்செல்லும்போது, பள்ளியின் வாசலில் பவித்ரா வகுப்பு தோழன் அருணின் அப்பாவும் அவனை விடுவதற்காக வந்திருந்தார். ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்தால், ஒரு சில  நிமிடங்கள்தான் அவரிடம் பேசியிருப்பேன். அதைப்பார்த்து, கார் டிரைவர் வீட்டில் போட்டுக் குடுத்துவிட்டான். மறநாள் அருணின் அப்பா கட்டுக்களுடனும், முகத்தில்  வீக்கத்துடனும் வந்திருந்தார்.
தங்கள்  வீட்டுக்கு ரகசியத்தை அவரிடம் சொல்லியிருப்பேனோ என்று அச்சம். அதனால் யாரும் என்னிடம் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்களாம். அதில் இருந்து காரை நானே எடுத்து செல்கிறேன். பவியை காரில் அழைத்து செல்லும் சமயத்திலாவது சற்று நிம்மதியாக இருக்கலாமே என்பதால்தான்.
இப்படிப்பட்டவர்கள் ஆட்களை வைத்து தேடி வந்து விடமாட்டார்கள் என்பது நம்புவது தவறு. எப்படியும் மூலை முடுக்கெல்லாம் தேடுவார்கள். அதனால் இவர்களின் கண்ணில் படாத தூரத்துக்கு சென்றுவிட வேண்டும்.
ஏற்கனவே, கல்லூரிக்காலத்தில் உற்றத்தோழனாக இருந்த மதி, இப்போது புதிதாக பிரிக்கப்பட்டுள்ள காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காவல் துறை சிறப்பு கண்காணிப்பாளராக இருப்பதாக சமீபத்தில் மார்க்கெட்டுக்கு போயிருந்தபோது, குழந்தை குட்டிகளுடன் வந்திருந்த சுஜாதா சொன்னது ஞாபகத்துக்கு வந்து சென்றது.
நிச்சயம் அவனிடம் போய் நின்றால், ஏதாவது ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து தந்துவிடுவான். அப்புறம் பவியை வளர்ப்பது என்பது அவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்காது. பாதுகாப்புக்கும் எந்த பிரச்னையும் இருக்காது.
அதுதான் சரியான வழியிருக்கும்.
மறுநாள் பவியை பள்ளிக்கு விட்டு வரும் சமயத்தில், ஒரு இன்டர்நெட் சென்டர் முன்பு நிறுத்திவிட்டு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக இணையதளத்தை ஓபன் செய்தேன்.
பெயர் கேட்டது.
வெங்கடேசன் என்று என் பெயரை டைப் செய்தேன்.
– ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks