தட்சணை


வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்று பெரியவர்கள் சொன்னது சரியாத்தான் இருக்கு குணாளன் சழித்துக் கொண்டார்.
யப்பப்பா…. வீ்ட்டை கட்டத்தொடங்கியதில் இருந்து சரியாத்தூங்கி ஆறு மாசத்துக்கு மேலாச்சு. செங்கல் விலை ஏறி, மண்ணு விலை அதைவிட ஒரு படி மேலே போகுது. நாம கம்பியை வாங்கப்போற நேரத்தில தானா… வரிபோடணும்….. கம்பிக்கு வரி கட்டியே, நான் இன்னொரு லோன் வாங்கணும்போல…. மனதில் அலை, அலையாய்…. கஷ்டங்கள் நிழலாடிவிட்டு போயின.
ஒரு வழியா இன்னை கிரகப்பிரவேஷம் முடிச்சாச்சு…. இதுக்காக நாலு நாலா ஒவ்வொன்னையும் வாங்கி, உறவினர்களுக்கு குறையில்லாம விருந்து உபசரிப்பு, புது ஆடைகளை வாங்கிக் கொடுத்து திருப்தி படுத்துவதற்குள், வங்கியில் இருந்த இருப்பு மட்டுமல்ல, சின்னவளின் உண்டியலில் கிடந்த மூன்றாயிரம் ரூபாயும் காலியாகிவிட்டது. அந்த பச்சப்புள்ளையிடம் உண்டியல் காசு வாங்குறப்போ உண்மையிலேயே மனம் வெறுத்துதான் போனது.
என்ன பண்றது, நமக்குன்னு ஒரு குருவிக்கூட்டை கட்டுறதுக்குள்ள இந்த கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தாங்கித்தானே ஆக வேண்டியிருக்கு….
இதோ சாப்பாடு விநியோகித்த நிறுவனம், தண்ணீர் கேன் போட்ட பாய்க்கு என்று எல்லோருக்கும் கொடுத்தாகிவிட்டது.
வீட்டிற்கு பின்புறம் இருந்த பந்தலில் நோட்டு வைத்துக் கொண்டு எல்லா கணக்குகளையும் சரிபார்த்து கொடுத்துக் கொண்டிருந்த குணாளன், கடைசியாக சட்டைப்பையில் எவ்வளவுதான் மிஞ்சியிருக்கு என்று பார்த்தார். ஒரு நாலு நூறு ரூபாய் நோட்டும், ரெண்டு அம்பது ரூபாய் நோட்டும் இருந்தன. அதுபோக கொஞ்சம் சில்லரை காசுகள்.
மொய் பணத்தில் செலவழித்ததுபோக எவ்வளவு இருக்கு என்று மஞ்சப்பையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்த்ததில் ஒரு ரெண்டாயிரம் தேறியது.
நாளைக்கு பையன் ஸ்கூல் பீஸ் கட்டணும்னானே…. ஐய்யயோ…. கடைசியா அய்யருக்கு கொடுக்க வேண்டிய தட்சணையை கழிச்சா… ஆயிரம்தான் மிஞ்சும்போலேயே…. யாருக்கிட்ட போய் கேட்கிறது? மனம் குடைய ஆரம்பித்தது.
யோசனைக்கு இடையே, பஞ்சக்கச்சம் கட்டிய அய்யர், வாய் முழுக்க சிரிப்பாய்…. ‘‘கிரகப்பிரவேஷத்தை நல்லா முடிச்சிட்டீர்…. இனி ஷேமமா இருப்பீர்…. எனக்கு குடுக்க வேண்டிய தட்சணையை குடுத்திட்டேள்னா…. வண்டியை பிடிக்க போயிடுவேன்’’ கும்பிடுபோட்டுக் கொண்டே கேட்டார் அந்த ஏழை அய்யர்.
அவருக்கான தட்சணையாக ஏற்கனவே கொடுத்தது போக, மீதத்தொகையான ஆயிரத்து ஐநூறை எடுத்துக் கொடுத்தார் குணாளன்.
‘‘குணாளன் சார்…. ஒரு சின்ன விண்ணப்பம்…. நாளைக்கு என் பையனுக்கு பீஸ் கட்டணும்.. ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தேள்னா ரொம்ப நன்னாயிருப்பீர்…. அடுத்த மாசம் திருப்பி தந்துடுறேன்’’ மிக நம்பிக்கையாய் கிடைத்துவிடும் என்ற நப்பாசையில் கையேந்தி நின்றார் அய்யர்.
வீடே கட்டினவருக்கு ஆயிரம் ரூபாய் என்ன பெரிய விஷயமா என்று அய்யர் நினைத்திருக்கலாம். ஆனால், என்னைப்போன்று வீட்டை கட்டிப்பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அது எவ்வளவு பெரிய பிரசவ வேதனை என்று.
இறைவன் அருளால் எல்லாத்தையுமே நல்லபடியா செஞ்சு முடிச்சாச்சு…. ஒரு ஏழை அய்யரின் ஆசையையும், நல்லபடியாக நிறைவேத்தி வச்சிடுவோமே…. இவ்வளவு தூரத்துக்கு துணையிருந்த இறைவன், நாளைக்கு நமக்கு உதவ மாட்டானா….. எண்ண ஓட்டத்துக்கு இடையே, எல்லாவற்றையும் எடுத்து இரண்டாயிருத்து ஐநூறு ரூபாயாக அய்யரிடம் நீட்டினார் குணாளன்.
‘‘நீங்க… குழந்தை குட்டிகளோட நன்னாயிருப்பீங்க….’’ நடுங்கும் கரங்களால் கைநீட்டி பெற்றுக் கொண்டு, கிளம்பினார் அய்யர்.
கடவுளே இனி என்னிடம் எடுப்பதற்கு ஒன்றுமில்லை….. தயவு செய்து தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடும்போல் எந்த கஷ்டத்தையும் குடுத்திடாதே….. சேரில் இருந்து எழுந்து, தோளில் கிடந்த துண்டை கையில் விசிறியவாறு எடுத்துக் கொண்டு, வீட்டின் உள்ளே நடக்க ஆரம்பித்தார் குணாளன்.
செல்போனில் மெசேஜ் வந்ததற்கு அறிகுறியாக மெல்லிய ஒலி வந்து சென்றது.
போனை எடுத்து மெசேஜை பார்த்தார்.
எப்போதோ கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தில் முதலீடாக போட்ட பணத்தை, அந்த கம்பெனிக்காரன் தலையில் துண்டைபோட்டு ஓடிப்போனான். வராது என்ற நினைத்திருந்த டெபாசிட் பணம் பத்தாயிரம் ரூபாய், நீதிமன்றத்தின் உத்தரவால், அதன் சொத்துக்கள் விற்கப்பட்டு முதலீட்டாளர்கள் கணக்கில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது.
அய்யரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, இப்போது குணாளனின் நெஞ்சில் நிறைந்திருந்தது.

No comments:

Post a Comment

Thanks