பச்சக்குன்னு ஒரு முத்தம்


பச்சக்குன்னு ஒரு முத்தம்

‘‘வீட்டுல கெழவிங்க தொல்லை தாங்க முடியலப்பா…. காலையில எந்திரிக்கலங்க்கிறா… தண்ணீ அடிக்கிலேங்கிறா…. காய்கறி வாங்கிட்டு வரலேங்கிறா….’’ அங்கலாய்த்தார் துரைச்சாமி என்ற துரை.
‘‘ஆமாய்யா…. இந்த ரிட்டயர்டு வயசுல காலையில எழுந்திருச்சு, நாம என்ன கலெக்டர் வேலைக்கா போகப்போகிறோம்? எப்பப்பாரு… சிறுசுங்க முன்னாடி நம்மள அவமானப்படுத்துறதே…. வீட்ல உள்ள இந்த கெழவிங்களுக்கு வேலையாப்போச்சு….’’ தன் பங்குக்கு அங்கலாய்ந்தார் கிட்டு என்ற கிருஷ்ணசாமி.
‘‘நானும் பல தடவை சொல்லிப்பார்த்துட்டேன்…. உங்க வீடுகள்ல மாதிரிதான் எங்க வீட்டுலயும் சதா சர்வக்காலமும் ஒரே பஜனையா இருக்கு…. சாயங்காலம் ஒரு சினிமாவுக்கு போனோமா….. ரெண்டு பஜ்ஜி சாப்பிட்டோம்மான்னு இல்லாம….. எப்ப பார்த்தாலும், பார்த்தசாரதி கோயிலுக்கு போவோம்…. கபாலீஸ்வரர் கோயிலுக்கு போவோம்னு ரோதனையா போச்சு…’’ பெருசுகள் கூட்டத்தில் ராமமூர்த்தி சுருதி சேர்த்தார்.
‘‘அங்கப்பாரு…. நாம பேசிக்கிட்டு இருக்கிறதை கூட எங்க வீட்டு கெழவி மேலே இருந்து வாட்ச் பண்ணுது….. இதை வச்சுக்கிட்டே வீட்டுக்கு போனவுடனே… ராமயாணத்தை ஆரம்பிப்பா….. என்னம்மோ நாம ஸ்கூல் பசங்க மாதிரி… இங்க போகாதே… அங்க போகாதே… அவன்ட்ட பேசாதே…. இவன்ட்ட பேசாதே…. ஒரே ரோதனையா இருக்குப்பா’’ துரையின் குரலில் உச்சம் தெரிந்தது.
‘‘அதுக்காகத்தான் அவனவன்…. ரிட்டையர் ஆன உடனேயே சொம்ப தூக்கிட்டு காசி, ராமேஸ்வரம்னு கௌம்பிடுறான்…. இந்த கௌவிங்கல வச்சு சமாளிக்கிறத விட, நாம பாட்டுக்கு ப்ரீயா சுத்திக்கிட்டு இருக்கலாம்’’ கிட்டு புலம்பினார்.
‘‘நம்ம அபார்ட்மென்ட்ல இருக்கிற எல்லா ரிட்டையர் ஜென்டில்மேன்களும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுவோமா…. அப்போத்தான் இந்த கௌவிங்க தொல்லைப்பத்தி நாம தைரியமா மீட்டிங்கில பேச முடியும்’’ துரை ஆலோசனை கூறினார்.
‘‘அடேய்… என்னடா கொஞ்சம் கூட பயமில்லாம இப்படி சொல்லிட்டே…. அப்புறம்…. பூவாவுக்கு என்ன பண்ணுவே….. நீ பாட்டுக்கு பேசிட்டு போயிடுவே… அப்புறம் கஷ்டப்படப்போறது யாரு?’’ எச்சரித்தார் ராமமூர்த்தி.
‘‘ஆமாம்டா… இவன் சொல்லுறதும் சரிதான். ஏடாகூடாமா ஏதாவது பேசிட்டு போனா… அப்புறம் சோத்துல உப்ப அள்ளிக்கொட்டி பிராணனை வாங்கிடுவாளுங்க…. கெழவிங்க சாதாரணமானங்கவ இல்லேப்பா…. அதுவும் எங்க வீட்டு கெழவி… தூங்குறப்போ வேணும்னே காலை உதைச்சிட்டு….. கெழம் தூங்குது பாரு…. பன்னி மாதிரின்னு சொல்லிட்டு போகும்….. ஏடாகூட கெழவி’’ கிட்டு பழைய அனுபவத்தை கூறினார்.
‘‘சரிய்யா…. இப்படியே பேசிட்டே போனா… இவங்க அட்டூழியத்தை ஒழிக்கிறதுக்கு என்னதான் வழி?’’ ராமமூர்த்தி கேட்டார்.
‘‘யோவ்…. இதுக்கு பிளான் பீ தான் சரியான வழி…. இதை செஞ்சுட்டோம்னா… கெழவிங்க எல்லாம் நம்ம காலடியில விழுந்து கிடப்பாங்க… நமக்கும் திட்டு விழாது…. இதைத்தவிர வேற வழியில்லை…. எல்லாரும் பக்கத்தில வாங்க…..’’ என்று கூறி, கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒருவர் தோள்மேல் ஒருவர் கைவைத்து, எதிரணியின் வியூகத்தை எதிர்க்கொள்வது பற்றி ஆலோசிப்பது போன்று ரகசியமாக பேசினர்.
ஆசியட் அப்பார்மென்ட்டில் ரிட்டயர்டு பெருசுகளின் வியூகம் வடிவம் பெற்றுக் கொண்டிருந்தது.
காலைப்பொழுது. விடிந்தும், விடியாமல் கீழ்வானம் சிவந்துக் கொண்டிருந்தது.
மெதுவாக தலையணைக்கு அடியில் அலறிய அலாரம் சத்தம் கேட்டு துள்ளி எழுந்தார் துரை.
இதோ ஆரம்பிச்சிட்டேன்ல…. மனதில் கூறியவாறு, கெழவியை பார்த்தார். முந்தைய நாள் இரவு, நீண்ட வரை வேலை செய்து கொண்டிருந்த அலுப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
பாத்ரூமியில் நுழைந்து அவசர, அவசரமாக காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்.
பால் கார்டை எடுத்துக் கொண்டு, அபார்ட்மென்ட் வாசலில் இருந்த டிப்போவுக்கு புறப்பட்டு போனார். அங்கு ஏற்கனவே கிட்டு, ராமுவும் வந்திருந்தார்கள். அவர்களும் கட்டை விரலை தூக்கி காட்டியபடி பாலை வாங்கிக் கொண்டு அவசர, அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சுடச்சுட தண்ணீர் ஊற்றி, டிகாஷனை வடிகட்டி பால் ஊற்றி தானும் ஒரு கப் குடித்துவிட்டு, கிளவிக்கும் தயாராக எடுத்து வைத்துவிட்டு, அடுப்பறைக்கு சென்றார். அங்கு கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை, விம்மோ… கிம்மோ….. ஏதோ கெழவி வாங்கி வைத்திருந்த ஒரு கருமத்தை எடுத்து மடமடவென்று கழுவிப்போட்டார். எல்லா பத்து பாத்திரங்களை சுத்தமாக தண்ணீரை வடியவைத்து, அடுக்கி வைத்துவிட்டு, அடுப்பை பற்ற வைத்தார்.
ஏற்கனவே போட்டிருந்த பிளான்படி, பொங்கலுக்கான வேலையை ஆரம்பித்தார். பேச்சுலரா இருந்தப்ப சமைக்க கத்துக்கிட்டது இப்போ…. கைக்கொடுக்குது…’’ தன்னைத்தானே மெச்சிக் கொண்டார்.
பொங்கல் ரெடியானதும் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, அவசர, அவசரமாக பாத்ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு, சாமி மாடத்தில் விளக்கை பொருத்தி வணங்கினார். ஊதுவத்தி வாசனை ரம்மியாக இருந்தது. மாடத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றிக்கு இட்டுக் கொண்டார்.
பாருடா…. இதுகூட… நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டார்.
ஊதுவத்தி வாசனை கும்மென்று ஆளை தூக்கியது.
காபியை ஒரு டம்ளரில் ஊற்றிக் கொண்டு, பெட்ரூமுக்கு சென்றார். அங்கு இன்னமும் கெழவி தூங்கிக் கொண்டிருந்தார்.
‘‘இதப்பார்றா…. இன்னமும் தூங்கிட்டு இருக்கா….’’ மனதில் கூறிக் கொண்டார்.
காபி டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு, சோபாவில் அமர்ந்த துரை, ‘‘ஏ… டீ….. காமு எழுந்திரி…..’’ என்று மனைவியை எழுப்பினார்.
நல்ல தூக்கத்தில் இருந்து எழுந்த காமு என்றழைக்கப்படும், காமாட்சி, கணவரின் கோலத்தை பார்த்து விக்கித்துப்போனாள்.
‘‘என்ன ஆச்சுங்க உங்களுக்கு காலையிலேயே எழுந்து, குளிச்சு முடிச்சு…. நான் காண்பது, நனவா, கனவா….’’ என்று அதிர்ச்சியாக கேட்டார்.
‘‘அடி கெழவி எல்லாமே நெஜம்தான். நான் திருந்திட்டேன்….. இங்க பாரு.. உனக்காக காபி எல்லாம் போட்டு வந்திருக்கேன்…..’’
கணவரின் செயலால் காமு, நெஞ்சில் கைவைத்து அதிர்ச்சி குறையாதவராய், அவரை பார்த்தார்.
மனைவியின் செயலால் மேலும் தைரியம் கொண்ட காளையாக மாறினார் துரை.
காமுவுக்கு அப்படியே பச்சக்கென்று ஒரு முத்தம் கொடுத்துவிடும் தீர்மானத்தில், கமல் பாணியில் மெதுவாக மனைவியை நெருங்கினார்.
‘‘வேண்டாங்க….’’ கணவரின் செயலால் அச்சம் அடைந்திருந்த காமு மெதுவாக முனங்கினார்.
‘‘நீ வேண்டாம்னா…. நான் விட்டுவேனா…..’’ கூறிக்கொண்டே இன்னும் நெருக்கமானார்.
‘‘கெழவிக்கு வெட்கத்தைப்பாரு…. இவ்வளவு நாள என்னை படுத்துனே… இன்னைக்கு உன்னை என்ன பண்றேன்னு…. பாரு’’ காமுவிடம் காமாந்தனாக நெருங்கிக் கொண்டிருந்தார் துரை.
காமாட்சிக்கும், துரைக்கும் ஒரு இன்ச் கேப்தான்.
எங்கிருந்தோ…. பறந்து வந்து அருகில் விழுந்தது ஒரு சொம்பு.
அலறியடித்து எழுந்தார் துரை.
எதிரில் பத்ரகாளியாய் நின்றிருந்தாள் காமு.
மனுஷன்னா… காலையில எழுந்திருக்கணும். எட்டு மணி வரைக்குமா…. எருமையாட்டம் தூங்குறது? அதுவும் சின்னப்புள்ளைங்க மாதிரி தூக்கத்திலேயும் காமு, மாமுன்னு புலம்புறது….. எழுந்துருய்யா…. சீக்கிரம்….
காலாகாலத்தில எழுந்திருச்சு… புருஷ லட்சணமா எங்காவது கணக்கெழுத போனோ… வந்தோம்மான்னு இல்லாம…. எப்ப பாரு, நாலு கெழவனுங்கள சேர்த்து வச்சுக்கிட்டு, மோடி பண்ணது சரியா…. மாடி ஏறினது பிரியான்னு வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருக்க வேண்டியது…. வந்து வாய்ச்சிருக்குதுங்க பாரு…. எனக்குன்னு!’’ காமு துடைப்பத்தால் பெட்ரூமை பெருக்க ஆரம்பித்தார்.
காமு வீசிய சொம்பில் இருந்த சில துளி தண்ணீர் முகத்தில் விழுந்தது. ‘‘நல்லவேளை இன்னமும் நம்ம மேல இவளுக்கு கொஞ்சூண்டு பயம் இருக்கு… இல்லாட்டி தலைக்கு வீசாமா…. சொம்பை கட்டிலுக்கு வீசியிருப்பாளா’’ தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வெளியே வந்தார்.
பக்கத்து வீட்டு கிட்டு வீட்டில் சுவற்றில் டம்ளர் ஒன்று பட்டுத்தெறிக்கும் சத்தம் ஓங்கியே கேட்டது.
‘‘சேம் பிளட்’’ காதை தேய்த்துக் கொண்டு பாத்ரூமுக்கு நடந்தார் துரை.
-ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks