அரைபிளேட் பிரியாணியும், ஆப்பாயிலும்!


எல்லோருக்குமே வளர் இளம் பருவத்தில் ஒரு பெரிய மனுஷத்தனம் திடீரென எட்டிப்பார்க்கும். ஆண் பிள்ளைகளுக்கு இந்த பெரிய மனுஷதனத்தில் பண்ண சேட்டைகளை நினைத்தால், பின்னாளில் மிகப்பெரிய சிரிப்பாக இருக்கும்.
அந்த நேரத்தில்,  ‘‘நான் பெரிய மனுஷா பார்ம் ஆயிட்டேன்’’ என்பதாக மனதில் அர்த்தம் கொள்ளப்படும்.
அந்த பார்ம் ஆன நேரத்தில் சிலருக்கு அப்பாவின் பைக்கை ஓட்டத்தோணும், சிலருக்கு அப்பாவின் வேட்டியை எடுத்து உடுத்திப்பார்க்க தோணும்;  இன்னும் சிலருக்கு ஷேவ் பண்ணிக்கொண்டால் என்ன என்று, முளைக்காத நாலு  பூனை முடியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அப்பாவின் ரேஷரை கொண்டு ஷேவ் பண்ணத்தோணும். இப்படி இத்தியாதி, இத்தியாதி எல்லாம் நடக்கும்.
பெண் பிள்ளைகளை பற்றி எல்லாம் இங்கு கேட்கப்படாது. இது ஒன்லி பார் ஜென்டில்மேன்ஸ் கதை.
அப்படியாகப்பட்ட ஒரு பெரிய மனுஷனாக உணரப்பட்ட நேரத்தில், என் முன் இருந்த மிகப்பெரிய சவால், ஆப்பாயிலை அப்படியே சாப்பிட்டு விட வேண்டும் என்பது. அதுவும் அரைபிளேட் பிரியாணியை முழுமையாக சாப்பிட்டு, பெரிய மனுஷத்தனமாக இறுதியில் ஆப்பாயிலை அப்படியே லாவகமாக நாலாபுறமும் சேர்த்து பிடித்து, பூப்போல கோழிக்குஞ்சை தூக்குவது போன்று அதிக அழுத்தமும் இல்லாமல், விட்டும் விடாமல், வாயில் போட்டுக் கொண்டு, மஞ்சள் கரு வெயில் கொட்டிவிடாமல் சாப்பிட வேண்டும்.
பல நாட்கள் அப்பாவுடன் பிரியாணி சாப்பிட போனபோதெல்லாம், நாமும் பெரிய மனுஷன் ஆகிறப்போ (?) இப்படித்தான் ஆப்பாயிலை ‘லபக்’குன்னு முழுங்கிடணும்னு பல நாட்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அப்படி,  ‘பா’ ஆன நேரத்தில் ஒரு நாள் அப்பாவும், என்னையும், என் அக்காக்களையும், மதுரை அம்சவள்ளி பிரியாணி கடைக்கு கூட்டிச் சென்றார்.
இந்த இடத்தில்  அம்சவள்ளியை பற்றி, கொஞ்சம் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த காலத்தில் பார்ட்டி, கொண்டாட்டம் என்றால், டோமினோஸ், மெக்டொனால்ட் என்றால், எங்களுக்கு அம்சவள்ளிதான்.
அந்தக்கடையின் பிரியாணியில், சிவப்பு அரிசி ஆங்காங்கே கலந்து பார்ப்பதற்கு, மடிப்பு அம்சா மாதிரி சும்மா கும்னு இருக்கும் (யாருப்பா அந்த ஓரத்தில இருந்து குரல் குடுக்கிறது?). பிரியாணி சாப்பிட்டுவிட்டு பல மணி நேரமானாலும்,, கையில் மணம் அப்படியே, ஃபாக்கை தோற்கடிக்கும். பிரியாணியுடன், சிக்கன்  65 அங்கு மிக ஸ்பெஷல். அந்த நேரத்தில் வேறு எங்கும் இவ்வளவு சுவையுடன் சிக்கன் 65 கிடைக்காது.
இரவு நேரத்தில் அந்த கடைக்குபோகும்போது, வாசலில் இருந்து பல அடி தூரத்துக்கு முன்பிருந்தே வரும் பிரியாணி வாசனை, வயிற்றில் அமிலங்கள் சுரந்து எங்கே, எங்கே என்று கேட்க  வைத்துவிடும்.
அந்தக்கடையில், அப்பா எல்லோருக்கும் கால் பிளேட் பிரியாணி (அப்போ எல்லாம் காலும் உண்டு பாஸ்) ஆர்டர் கொடுத்துவிட்டு, அவருக்கு மட்டும் அரைபிளேட் வாங்கிக் கொண்டு வெட்ட ஆரம்பித்துவிட்டார்.
நமக்கு என்றைக்குமே சிக்கன் பிரியாணி. கொழுப்பு இருந்தால், சுத்தமாக பிடிக்காது. ஆனால், அம்சவள்ளியில் அதுபோன்ற எதுவும் இல்லாமல் வெறும் கறியாக சிக்கன்  பிரியாணி கிடைக்கும்.
நானே பெரிய மனுஷனாயிட்டேன். எனக்கு அரை பிளேட் பிரியாணி சொல்லாம, கால்பிளேட்  சொல்றாரேன்னு ஒரே கடுப்பு. சரி… பிரியாணிய சாப்பிட்டு நம்ம திறமையை நிரூபிச்சுட்டு வாங்கிக்குவோம் என்று நினைத்துக் கொண்டேன்.
பிரியாணி வைத்துவிட்டு சென்ற பேரர் மீண்டும் வந்து, மூன்று ஆம்பிளேட்டை தட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றார். நாமதான் ‘பா’ ஆயாச்சே…. அப்புறம் முழு ஆம்பிளேட் சாப்பிடலைன்னா நம்ம மரியாதை  என்ன ஆகிறது? அதனால ஒரு ஆம்பிளேட் அப்பாவுக்கு தள்ளிவிட்டு, இன்னொரு ஆம்பிளேட்டை ரெண்டு அக்காவுக்கும் சேர்த்து தள்ளிவிட்டு, மூன்றாவது ஆம்பிளேட்டை முழுமையாக எனக்கு எடுத்துக் கொண்டேன்.
அப்பா என்றால், எங்கள் அனைவருக்குமே கொஞ்சம் நடுக்கம்தான். அவருக்கு தெரியாமல் இந்த வேலையை நான் செய்தேன். ரெண்டாவது அக்காதான் முறைத்தாள். ‘‘டேய்… நீ வேஸ்ட் பண்ணே… அப்பா குட்டு  போடுவார். ஒழுங்கா எனக்கு கொஞ்சம் எடுத்து வச்சிடு’’ என்றாள்.
‘‘ஹாஹ்… நாங்க எல்லாம் யாரு தெரியும்ல?’’ என்று ரஜினி ஸ்டைலில் தலையை கோதிக் கொண்டு (இடது கையால்), ஆம்பிளேட்டை கிள்ளி வாயில் போட்டுக் கொண்டு, பிரியாணியையும் பின்னாலேயே உள்ளே தள்ளினேன்.
கால் பிளேட்  பிரியாணி முடிந்தபோதே வயிறு கொஞ்சம் ஆன மாதிரி தெரிந்தது.
‘‘நோ… நோ… விட்டுறாதே… நாம அல்ரெடி பாரம் ஆயிட்டோம்… அதனால விடக்கூடாது’’ என்று எச்சரித்தார் நம்ம இன்னர் பாஸ்.
அப்பாவிடம், ‘‘இன்னொரு கால் பிளேட் பிரியாணி சொல்லுங்க…’’ என்றேன் ஆர்டராக.
‘‘வேஸ்ட் பண்ணுவான்… வேணாம்பா…’’ என்றாள் என் உடன் பிறந்த இரண்டாவது ராட்சசி. எனக்கு வில்லியாகவே வந்து சேர்ந்திருக்கிறாளோ என்று எண்ணிக்கொள்வேன்.
அவளையும் பார்த்தார், என்னை பார்த்தார். என்ன நினைத்தாரோ… ‘‘சர்வர்’’ என்று கூப்பிட்டார்.
தொப்பி போட்ட சர்வர் வந்து நின்றார்.
‘‘இன்னொரு கால் பிளேட் பிரியாணி. அப்புறம் ஒரு ஆப்பாயில்’’ என்று அப்பாவை முந்திக் கொண்டு நான் ஆர்டர் செய்தேன். சிரித்துக் கொண்டார் அப்பா (பய… பெரிய மனுஷன் ஆயிட்டானோ என்று நினைத்திருப்பாரோ?).
அக்காள்கள் இன்னும் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. வந்த இன்னொரு கால் பிளேட் பிரியாணியை முழுமையாக நானே கொட்டிக் கொண்டேன். நாலு  வாய் உள்ளே போயிருக்காது. அதிகளவு உள்ளே தள்ளியதால், மடக்கென்று வாந்தி வருவதுபோன்ற  ஒரு பிரம்மை ஏற்பட்டது. பிரம்மையாவது,  பிரம்மாவாவது, நமக்கு முக்கியம் நம்மோட வளர்ச்சியை  நிரூபிப்பது.
திக்கித்திணறி, பட்டனை லூஸ் செய்து, தண்ணீரை குடித்து இப்படி பல  வழிகளில் இருந்த கால் பிளேட்டை முடிப்பதற்குள், இதுக்கு பேசாம சின்ன பயலாவே இருந்துட்டு போயிடலாம் என்ற அளவுக்கு கதற ஆரம்பித்துவிட்டது உடம்பு.
அப்பாடி முடிந்தது என்று எழும் நேரத்தில்,  பின்னால் இருந்து ஒரு கை என் சட்டையை இழுத்தது. பார்த்தாள் ராட்சசி. என்ன என்பதுபோல் அவளைப் பார்த்தேன். அவள் பார்வை, ‘‘இது என்ன உங்க தாத்தனா வந்து சாப்பிடுவான்?’’ என்பதுபோல் ஆப்பாயில் பிளேட்டை நோக்கி பார்வையை திருப்பினாள்.
அப்பா அப்போதுதான் கை கழுவ போயிருந்தார்.
‘‘வேண்டாம் டீ…  வேண்டாம் டீ… வயிறு புல் ஆயிடிச்சு…’’ என்றேன்.
‘‘நீ தானே கேட்டே…  நாங்க எல்லாம் ஆப்பாயில் சாப்பிட மாட்டோம்… அப்பாவும் எழுந்திட்டார்… சோ… ஒழுங்கா சாப்பிடு, வாயில இருந்து சிந்தினே… அப்பாக்கிட்ட குட்டுதான்  விழும்’’ என்று ஹிட்லர் பாணியில் கூறினாள் ராட்சசி.
மனம் நோ என்றது… ஆனால், ராட்சசியின் கையில் சட்டை மாட்டிக் கொண்டிருக்கிறது… தப்பிக்க முடியாது.
ஆப்பாயிலுக்கு என்று சில  இணக்கணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. எல் போர்டுகள் எல்லாம் நாலு முனைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். பெர்மனன்ட்கள் வெறும் மூன்று முனைகளையே அதை வாயில் போட்டுக் கொள்வார்கள். கைத்தேர்ந்த பென்ஸ் ஓட்டுநர்கள், வெறும் இரு மடிப்பில் கூட கொஞ்சம் சிந்தாமல் வாயில் அள்ளிப்போட்டுக் கொண்டு, இது எப்படி என்று எதிரில் இருப்பவர்களின் வாயில் எச்சில் ஊற வைப்பார்கள்.
இந்த விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், யானை புக்க புலம் போல ஆகிவிடும்  ஆப்பாயிலும் வாயும்.
அப்பா வந்துவிடுவார் என்ற அவசரத்தில், பெர்மனன்ட் ரகத்தில்  மூன்று முனைகளை பிடித்து வாயில் போட்டுக் கொள்ள முயல.  வெள்ளை மட்டும்தான் உள்ளே சென்றது. உள்ளே இருந்த மஞ்சள் என் வாயிலும்,  வெள்ளை சட்டையிலும் ஒழுகி பிராணனை வாங்கிவிட்டது. அப்பா வந்துவிடுவார்  என்ற அவசரத்தில் அவசர  கதியில் அதை துடைக்க மேலும், சட்டை முழுக்க ஆகிவிட்டது (முதன் முதலில் ஆப்பாயில் சாப்பிடுபவர்கள் விதிகளை ஒழுங்கா பின்பற்றுங்கப்பா).
அப்பா வந்தார். என்னையும் பார்த்தார். சட்டையையும் பார்த்தார்.
‘‘போய் அவனை கைகழுவ வச்சு… சட்டையை நீட் பண்ணி கூட்டியா…’’ என்று ராட்சசியிடம் சொன்னார்.
‘‘பெரிய, பெரிய மனுஷன். அவரும் இப்படி அனுபவப்பட்டிருப்பார் போல… அதனால என்னை மன்னிச்சு விட்டுட்டாரு…’’ மனம் துள்ளியது.
ஆனால், பின்னால் இருந்து கையில் நறுக்கென்று ஒரு கை கிள்ளியது. ராட்சசிதான். ‘‘அப்பவே சொன்னேன்ல… உனக்கு ஆப்பாயில் எல்லாம் சாப்பிடத் தெரியாதுன்னு…கேட்டியா? எல்லாத்தையும் பெரிய மனுஷன் மாதிரி பண்றது….’’ என்று திட்டிக்கொண்டே வாஷ் பேசினுக்கு அழைத்து சென்றாள்.
கழுத்து வரையில் சாப்பிட்டுவிட்டேன் என்று பல பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்றுதான் அதை உண்மையிலலே உணர்ந்தேன். அதுவும் கழுத்து வரையில் இல்லை. வாய் வரையில் சாப்பிட்டிருந்தேன்.
வீட்டுக்கு வந்தவுடன் அம்மா சூடாக பாலை காய்ச்சி வைத்திருந்தார்கள். எ்ல்லோருக்கும் டம்ளரில் ஊற்றிக்  கொடுத்துவிட்டார்கள்.
பாசக்கார அம்மா… எப்பவுமே எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே குடுப்பாள்.  வழக்கத்தைவிட அன்று பெரிய டம்ளரில் பாலை  ஊற்றி கையில் நீட்டினாள்.
நான் முக்கிக் கொண்டிருப்பதை  ஏற்கனவே ராட்சசி கணித்திருந்தாள். அதனால் நான் என்ன செய்கிறேன் என்பதை ஓரக்கண்ணால்  பார்த்துக் கொண்டிருந்தாள்.
விட்டால் இவள் முன்பு மானம் போயிடும். அதுமட்டுமின்றி,  ஊர்முழுக்க டமாரம் அடித்துவிடுவாள்.
அம்மாவிடம் இருந்து ஆவேசமாக பால் டம்ளரை வாங்கி குடித்தேன். நான்கு  வாய் கூட குடித்திருக்க மாட்டேன். வயிற்றின் அடிப்பாகத்தில் இருந்து கத்திய கோழிக்கறியால், பால் டம்ளரை வைத்துவிட்டு பாத்ரூமுக்கு ஓடினேன்.
‘‘உவ்வேவேவே….’’
நெற்றிப்பொட்டெல்லாம் சூடாகி வேர்க்க, வயிற்றில் இருந்த ஆப்பாயில், ஆம்பிளேட், பிரியாணி, நடுவே, சிக்கன் 65 என்று எல்லாமே வெளியில் வந்துவிட்டது.
‘‘போதும்டா சாமீ….  பெரிய மனுஷனா பார்ம் ஆனது போதும், பிரியாணி சாப்பிட்டது போதும்…. ஆளு விடுங்கடா…’’ என்று டயர்டாகி திரும்பினேன்.
இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் வில்லி.
ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks