சுண்டல்

‘‘அப்பா… இன்னைக்காவது புது ஜாமின்டரி பாக்சும், ஒரு நல்ல பேனாவும் வாங்கிக் குடுத்துடுப்பா… தினமும் டீச்சர் எல்லார் முன்னாடியும் திட்டுறாங்கப்பா…. நானும் இன்னைக்கு இன்னைக்கு வாங்கிடுறேன், நாளைக்கு வாங்கிடுறேன்னு சொல்லி, சொல்லி, கையில அடி வாங்கினதுதான் தான்பா மிச்சம்’’ பெரியவள் காமாட்சி, தன் கையில் தழும்பேறிய கையை காட்டி பரிதாபமாக கெஞ்சினாள்.

‘‘பீச்ல சுண்டல் விற்கும் எனக்கு பிறந்ததுதான் இந்த பிஞ்சுகள் செய்த பாவமா?’’ மகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மனம் வெதும்பியது சுதாகருக்கு.


‘‘இன்னைக்கு அப்பா எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லமா….. 20 பொட்டணும் கூட வித்தாவது உனக்கு ஜாமின்ட்ரி பாக்ஸ் வாங்கியாந்துர்றேன் கண்ணு…. கவலைப்படாம ஸ்கூலுக்கு போ தாயி!’’ மகளின் தோளில் பையை மாட்டிவிட்டு, கண்ணில் வெடுக்கென்று வந்த கண்ணீரை மறைக்க, தலைசாய்த்து, கைநீட்டி மகளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டார்.

பெரியவள் அப்பாவிடம் கேட்பதை பார்த்தும், ஓடோடிவந்த பையன் சரவணன், ‘‘அப்பா எனக்கும் ஒரு பென்சிலும், ரெண்டு கோடு நோட்டு ஒண்ணும் வாங்கணும்பா’’ என்று கோரிக்கை வைத்தான்.

மகனின் குரலை கேட்டு சட்டென்று நிமிர்ந்த சுதாகர், ‘‘அதுக்கென்ன சாமீ…. வாங்கியாந்துட்டா போகுது. நீங்களும் கௌம்புங்க ஸ்கூலுக்கு டைமாயிடுச்சில்ல…..’’ மகனுக்கும் தோளில் மஞ்சப்பையை மாட்டிவிட்டு, மனைவி அவித்து வைத்திருந்த சுண்டலுக்கு, தூவுவதற்காக மாங்காயை துருவ ஆரம்பித்தார் சுதாகர்.

எல்லாம் முடிந்து பெரிய வாளியில் சுண்டலையும், ஒரு மஞ்சப்பையில் பேப்பரையும் கட்டிக் கொண்டு, மெரினா பீச்சுக்கு ‘6ஏ’யில் வந்து இறங்கியபோது மணி 10 ஆகியிருந்தது.

வெயில் கனகனத்துக் கொண்டிருந்தது. இன்னைக்கு எப்படியும் முழு வாளி சுண்டலை வித்துட்டு, புள்ளைங்களுக்கு தேவையானதை வாங்கிட்டுபோயிடனும், சுடலைமாட சாமீ…. நீதான் எனக்கு அருள் புரியணும் மனதில் வேண்டிக் கொண்டே ரோட்டைத் தாண்டி வேகமாக பீச் மணலுக்கு சென்றார்.

அங்கே போலீஸ் கூட்டம் ஏகத்துக்கும் இருந்தது. எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்ததுமே, சுதாகருக்கு மனதில் பகீர் என்றது.

ஒரு போலீஸ்காரரிடம் சென்று, ‘‘பீச்சுக்கு போகக்கூடாதா சார்….’’ என்று அப்பாவியை கேட்டார்.

‘‘யோவ்…. போய்யா அந்தப்பக்கம், வந்துட்டாரு பெரிய விஐபி. ஏற்கனவே போராட்டம், அது இதுன்னு யாரையும் உள்ள விடக்கூடாதுன்னு, மேல இருக்கிறவங்க உசுர வாங்குறானுங்க…. இதுல இவரு வேற….. போயி வேற எங்கயாவது சுண்டல வித்துட்டுப்போ’’ போலீஸ்காரர் விரட்டினார்.

இன்றைக்கும், நாளைக்கும் மகள் வாங்கப்போகும் அடியால், மனம் வலித்தது.

No comments:

Post a Comment

Thanks