#ரெண்டு குடம் தண்ணீர்


‘‘அம்மா இன்னைக்கு ஒரு அரைமணி நேரம் முன்னாடி கிளம்பவா?’’ முதலாளி அம்மாவிடம் பரிதாபமாக கேட்டாள்  சிவகாமி.
‘‘என்னடி இது புது பழக்கம். விருந்தாளிகள் எல்லாம் வந்திருக்காங்கல்ல…  நீ பாட்டுக்கு கிளம்புறேன்னா…  பாத்திரங்களை யாரு கழுவி வைக்கிறது? அதுக்கா உன்னை வேலைக்கு வச்சிருக்கேன். இருந்து எல்லா வேலையையும் முடிச்சிட்டு போ… சும்மா... சும்மா.. இப்படி வாரத்துக்கு ஒரு தடவை கேட்டுட்டே இருந்தேன்னா… நீ வேற வீட்டை பார்த்துக்கிட வேண்டியிருக்கும்…’’ கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் பேசினாள் முதலாளி அம்மா வரலட்சுமி.
மடக்கென்று கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை அடக்கிக் கொண்டு, ‘‘சரிங்கம்மா… நான் இருந்து வேலைய முடிச்சிட்டுப்  போறேன்’’ என்று அடுக்களைக்கு சென்றாள் சிவகாமி.
‘‘தண்ணீர் லாரி வர்ற நாள். இன்னைக்கு பிடிக்கலேன்னா அப்புறம் 3 நாளைக்கு அப்புறம்தான் வரும். ஏற்கனவே வீட்டில குடிக்கிறதுக்கு மட்டும்தான் அரைக்குடம் தண்ணீர் இருக்கும். அதுவும் நைட்டு போய் பாத்திரங்களை கழுவி வச்சுட்டா சரியாப் போயிடும். இறைவா… நாளைக்கு காலையில தண்ணீ இல்லேன்னா எப்படி சமைப்பேன், குழந்தைங்க குடிக்க தண்ணீ  கேட்டா எதை குடுப்பேன்… காசு போட்டு வாங்குற அளவுக்கா என் பொழப்பு இருக்கு?’’ புலம்பிக் கொண்டே அடுக்களையில் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
வீட்டில் கடைசி வேலையாக பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது உள்ளே எட்டிப்பார்த்தாள் வரலட்சுமி.
‘‘ஏண்டி… இப்படி தண்ணிய கொஞ்சமா ஊத்தி கழுவினா பாத்திரம் எப்படிடீ சுத்தமாகும்… உன்னை எல்லாம் வேலைக்கு வச்சிட்டு நான் கட்டி அழ வேண்டியிருக்கு… அதுதான் கொழா.. திறந்தா தண்ணீ கொட்டுதில்ல… அப்புறம் ஏண்டி கஞ்சத்தனம் பண்றே… ஏன் நீ தான் வந்து கரண்ட் பில்லை கட்டப்போறீயோ…. நல்லா குழாய திறந்துவிட்டு சுத்தமா கழுவுடீ…’’ திட்டிவிட்டு போனாள் வரலட்சுமி.
தண்ணீர் இல்லாத தன் வீட்டு நினைப்பில் சிக்கனமாக பயன்படுத்த நினைத்து திட்டு வாங்கினாள் சிவகாமி.
‘‘அம்மா… ஷவர்ல பிரஷர் போதல… நாளைக்கு மொதல்ல டேடிக்கிட்டே சொல்லி ஒரு பிரஷர் பம்ப் மாட்டச் சொல்லுமா…’’ பாத்ரூமியில் இருந்து வரலட்சுமியின் மகன் கத்திக் கொண்டிருந்தான்.
வரலட்சுமி சொல்லிவிட்டு போனாலும் கூட, தண்ணீரை வீணடிப்பது சிவகாமிக்கு மிக வருத்தமாகத்தான் இருந்தது. வேறு இல்லாமல், பின்னால் ஒரு பார்வையும், குழாயில் ஒரு பார்வையுமாக வேலை முடிக்க ஆரம்பித்தாள்.
 இரவு மணி எட்டரை ஆகியிருந்தது.
எல்லா வேலையும், முடிந்து, பாத்திரங்களையும் கழுவி முடித்து, துடைத்து வைத்துவிட்டதை மேலும் ஒரு தடவை சரிபார்த்துக் கொண்டு, முதலாளி அம்மாவிடம் வந்தாள். ‘‘அம்மா நான் கிளம்பவா… எல்லா வேலையும் முடிச்சுட்டேன்மா…’’ என்றாள்.
‘‘சரி  காலையில… காலா, காலத்துக்கு வேலைக்கு வா… தண்ணீ பிடிக்கப்போனேன்… கருமாதிக்கு போனேன்னு வந்து காரணத்தை சொல்லிட்டிருந்தேன்னா… அப்புறம் நான் வேற ஆளத்தைதான் பார்க்க வேண்டியிருக்கும்’’ கங்குகளை கொட்டினாள் முதலாளி அம்மா.
அவர்கள் தரும் மூன்று ரெண்டாயிரம் நோட்டில்தானே, அவள் ஜீவனமே நடக்கிறது. வார்த்தைகள் கங்குகளாய் இருந்தால் என்ன, கங்கையாய் இருந்தால் என்ன… கேட்டுத்தானே ஆக வேண்டும்….‘‘சரிங்கம்மா… வந்துடுறேன்’’ என்று எதிர்பேச்சு பேசாமல் நடையைக் கட்டினாள் சிவகாமி.
சாலையில் இறங்கியதுதான் தாமதம், ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி விரைந்தாள். வழியில் ரப்பர் செருப்பு வேறு காலை வாரிவிட்டது. அதையும் பின்போட்டு சரி செய்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். காலையில் சோபாவை தூக்கி வைக்கும்போது, அதன் கால் பகுதி, கட்டை விரலை நசுக்கியது. அந்த வலி இப்போது ஒவ்வொரு அடியிலும் விண், விண்ணென்று தெரித்தது.
வீட்டு முனையில் திரும்பும்போதே சந்தில் லாரி நிற்கிறதா என்று ஆவலுடன் பார்த்தாள். ஆனால், அங்கு தண்ணீர் லாரி நின்று சென்றதன் அடையாளமாக, குளமாக தண்ணீர் மட்டும் தேங்கியிருந்தது.
‘‘ஏண்டி சிவகாமி தண்ணீ இல்லேன்னு புலம்பிட்டு இருந்தே… எங்க ஆள காணோம்… இன்னைக்கும் லேட்டா?...’’ பக்கத்துவீட்டு பங்கஜம் அக்கா கேட்டாள்.
‘‘ஆமாக்கா…  கொஞ்சம் லேட்டாயிடிச்சு… அதுதான் வெரசா வந்தேன்… அதுக்குள்ள தண்ணீர் லாரி போய்ட்டது’’ நொந்துக் கொண்டாள் சிவகாமி.
‘‘இன்னைக்கு வேற அரை லாரி தான் கொண்டு வந்திருந்தான். அதனால எல்லாருக்கும் கிடைக்கல… என்னமோ இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டும்தான் தண்ணீர் வருமாம். எல்லா கொளம், குட்டையும் வத்திருச்சாம்… என்னத்த பண்ணப் போறோமோ…’’ புலம்பிக் கொண்டே சென்றாள் பங்கஜம்.
வீட்டில் மகன்கள் இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
‘‘அம்மா…’’ என்று ஓடிவந்து கட்டிக் கொண்டான் சின்னவன்.
‘‘அம்மா… இன்னைக்கு தண்ணீ லாரி வந்துச்சா… நானும் அண்ணணும் சேர்ந்து குடத்தை எடுத்துட்டு போனோம். ஆனா… ஒவ்வொரு வாட்டியும் காசு குடுக்காமலேயே பிடிச்சுட்டு போறீ்ங்க…  இன்னைக்கு  அஞ்சு ரூவா குடுத்தா தான் தண்ணீ விடுவேன்னு அந்த கட்சிக்கார அம்மா விரட்டி விட்டுடுச்சும்மா… எங்கக்கிட்ட காசு இல்லையா… அதனால தண்ணீ பிடிக்க முடியாம வந்துட்டோம்மா’’ என்றான் சின்னவன்.
‘‘ஏண்டா சாமீ படத்துக்கு கீழே இருக்கிற… டப்பால காசு இருக்குமேடா…’’ சிவகாமி கேட்டாள்.
‘‘நீ தானேமா… அதுல இருந்து காசு எடுக்கக்கூடாது… சாமீ கண்ணை குத்திரும்னு சொன்னே?’’ கேட்டான் சின்னவன். பெரியவனும் ஆமோதித்தான்.
‘‘அட போங்கடா… அவசரத்துக்குன்னா அதை எடுத்துக்கலாம்டா… சாமீ ஒண்ணும் செய்யாது’’ என்றாள் சிவகாமி இயலாமையுடன்.
‘‘சரிம்மா… இப்போ சொல்லிட்டேல்ல… நாளையில இருந்து பார்த்துக்கிறோம்’’ என்றான் பெரியவன்.
இருந்த அரை குடம் தண்ணீரில் சாப்பாட்டை ஆக்கிவிட்டு, குடிப்பதற்கும் எடுத்து வைத்துக் கொண்டாள்.
‘‘வாங்கப்பா சாப்பிடலாம்…’’ மகன்களை கூப்பிட்டாள் சிவகாமி.
கூட்டாக உட்கார்ந்து சாப்பிட்டனர்.
‘‘அம்மா இன்னைக்கு சாப்பாடு சூப்பர்மா...’’ சின்னவன் பாராட்டினான்.
‘‘நல்லா சாப்பிடுப்பா…’’ சந்தோஷமாக கூறினாள் சிவகாமி.
சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை கழுவாமல், அவற்றை அப்படியே ஓரத்தில் சேர்த்து வைத்துவிட்டு வந்தாள் சிவகாமி.
‘‘அம்மா… நம்ம வீட்ல தண்ணீ இல்லேயம்மா… நாளைக்கு என்ன பண்ணுவோம்…?’’  துடுக்கான சின்னவன்தான் கேட்டான்.
‘‘கடவுள் பார்த்துக்கிடுவார் கண்ணு… நீ நல்லா தூங்கு…’’ சிவகாமி முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
ஆனால், மனம்தான் பதை, பதைத்தது.
கணவர் இருந்தபோதும், இதுபோன்ற கஷ்டம் வந்துள்ளது. ஆனால், அவர் சைக்கிளில் அலைந்து திரிந்து ரெண்டு குடமாவது தண்ணீர் பிடித்து வந்துவிடுவார். அதனால் பிரச்னை இல்லாமல் இருந்தது. ஆனால், அவர் மறைந்துவிட்ட  நிலையில், எல்லா வேலைகளையும் செய்துவிட்டாலும், இந்த தண்ணீர் பிரச்னை மட்டும் அவளுக்கு பெரும் இடியாக இருந்தது.
கடந்த 2 நாட்களாக, சின்னவனையும், பெரியவனையும் கூட்டிக் கொண்டு வீதி, வீதியாக அலைந்ததுதான் மிச்சம். எங்குமே குழாயில் தண்ணீர் வரவே இல்லை. அப்படியிருக்கையில் இன்றைக்கும் பிள்ளைங்களை கூட்டிக் கொண்டுபோய் அலைவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.
விளக்கை அணைத்துவிட்டாலும், சாமீ படம் இருக்கும் திசையில் இருட்டில் பார்த்தபடியே, ‘‘இறைவா நீதான் ஒரு வழி காட்டணும்… இல்லாதவங்களுக்கு நீ தானே துணை’’ என்று கண்ணீருடன் புலம்பினாள்.
வீட்டிற்கு வெளியே, சிறிது நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளம் தோண்டி வைத்திருந்தார்கள். அந்த இடத்தின் அருகே ஆட்கள் அதிகாலையில் வந்து வேலை செய்வதும், போவதுமாக இருந்தார்கள். அதேபோன்று அந்த அதிகாலையும் 5 மணிக்கே ஆட்கள் சத்தம் கேட்டது.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிவகாமி, சேலை தலைப்பால் கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே சென்று பார்த்தாள். அவளாலேயே நம்ப முடியவில்லை. பள்ளத்தில் போடப்பட்டிருந்த பைப்லைனில் இருந்த வால்வில் இருந்து தண்ணீர் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தது.
அருகில் நின்ற ஆட்களிடம், ‘‘சார்… இது என்ன தண்ணீ சார்…’’ கேட்டாள் சிவகாமி.
‘‘அதோ அங்கே இருக்குப்பாரு தண்ணீ தொட்டி… அதுல இருந்து இந்தப்பகுதிக்கு தண்ணீ சப்ளை பண்ணப்போறோம். அந்த தொட்டியில ஏத்தி வச்சிருந்த தண்ணீதான் வெளியேறு….அது கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஏத்தினது… இப்போ அதுல ஏத்துற அளவுக்கு எங்க தண்ணீ இருக்கு’’ என்று அந்த நபர் கூறிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு பாய்ந்து ஓடினாள் சிவகாமி. சட்டி, குடம், பானை என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் தண்ணீரை பிடித்துக் கொண்டு சென்றாள். வீட்டில் இருந்த இரண்டு சொம்புகளிலும் கூட தண்ணீர் நிரம்பியிருந்தது.
சந்தோஷமாக பாத்திரம் கழுவி, துணி துவைத்து, குளித்தும் முடித்தாள்.
‘‘கண்ணுங்களா எந்திரிங்க… வெளியே குழாயில இருந்து தண்ணீ வெளியேறுது பாருங்க… டக்குன்னு போய் குளிங்க, போங்க… போங்க…’’ என்று படுக்கையில் தூங்கியபடி விளையாடிக்  கொண்டிருந்த சின்னவனையும், பெரியவமனையும் விரட்டினாள்.
தண்ணீர் கஷ்டத்தில் தினமும் அரைகுறை குளியல் போட்டு வந்த அவர்களுக்கு தண்ணீர் வருகிறது என்ற சொல்லே உற்சாகமாக்கி எழும்ப வைத்தது. இருவரும் வெகு நாளைக்கு பின்னர் நன்றாக தண்ணீரில் ஆட்டம் போட்டு வந்தனர்.
அவர்களை சாப்பிட வைத்துவிட்டு, சரியான நேரத்துக்கு வரலட்சுமியின் வீட்டுக்கு வேலைக்கு வந்தாள் சிவகாமி.
வீட்டின் முற்றத்திலேயே மோடாவில் முதலாளி அம்மா வரலட்சுமி உட்கார்ந்திருக்க, அவரது குடும்பத்தினரும் குளிக்காமல், கட்டிலில் இருந்து எழுந்த கோலத்தில் சேர்களில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் முன்பு என்றும் இல்லாமல் மிக பளீச்சென்று நின்றாள் சிவகாமி.
‘‘தண்ணீ தொட்டியில எது செத்து தொலைச்சதோ தெரியல… எந்த குழாய திறந்தாலும் கெட்ட வாசனை அடிக்குது…. அதனால பாத்ரூம் கூட போக முடியாம உட்கார்ந்திருக்கோம்…நீ இன்னைக்கு வேலைக்கு வராதே… நாளைக்கு வா போ… போ…’’ என்று விரட்டினாள் வரலட்சுமி.
எப்போதுமே, முதலாளி அம்மா விரட்டும்போது, ஊசி முள்ளால் நெஞ்சை தைப்பதுபோல் இருக்கும். இன்றைக்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது. தண்ணீரோட அருமை இன்னைக்கு இவங்களுக்கும் தெரியும்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks