எதையும் பிளான் பண்ணி….


ஒட்டகத்தின் மீது ஏறி இருக்கிறீர்களா?
பலரிடம் இல்லை என்ற பதில்தான் வரும். தயவு செய்து கொஞ்சம் பயந்த சுபாவம் இருப்பவர்கள் இனிமேலும் ஒட்டக சவாரி சும்மா கிடைத்தாலும் ஏறாதீர்கள். அதிலும் டபிள்ஸ் என்றால் கட்டாயம் நோ சொல்வதே உத்தமம். பின்னால் இருப்பவர், உங்களையும் சேர்த்து, முகத்தில், ‘தக்காளி சட்னி’யை பார்க்க வைக்கக்கூடிய நிலை ஏற்படலாம்.
ஒட்டகத்தின் மீது ஏறுவது தனி கலை. இதனால்தான் அந்தக்காலத்தில் குதிரையேற்றம், யானையேற்றம், ஒட்டகயேற்றம் எல்லாம் பழகி இருக்கிறர்கள் போலும்.
சைக்கிள் கூட ஓட்ட தெரியாத ஒருவன், ஸ்டிரைட்டாக பிஎம்டபிள்யூ கார் ஓட்டப்போனதுபோல், ‘ஒர்த்தர்ருக்கு ஆயிரெம் ரூபா வாங்குது சார்… நீங்க நம்ம ஜிகிரி தோஸ்துக்கீ தோஸ்த். அதனால உன் கிட்ட 3 பேருக்கு சேர்த்து 700 ரூபா வாங்குறான் சார்….’’ என்று ஒட்டக்கக்கார் பேசியபோது, சீப்பாக அனுமதிக்கிறாரே என்று நம்பி ஒப்புக் கொண்டது முதல் தவறு.
லவுக்சக்… உசக்… லவுக்சக்..... என்று தான் பாட்டுக்கு மண்ணில் அமர்ந்து அசைப்போட்டுக் கொண்டிருந்த அந்த ஒட்டகம், என்னை ஒரு அநாமத்தாக ஒரு பார்வை பார்த்தபோதே புரிந்து கொண்டிருக்கணும்….....
‘‘நீ எல்லாம் ஏறிட்டாலும்….’’ என்று அதன் பார்வையின் அர்த்தம் தாமதமாகத்தான் தெரிந்தது.
உட்கார்ந்திருந்த ஒட்டகத்தின் மூக்கணாங்கயிறை பிடித்துக் கொண்ட ஒட்டகக்கார், ‘‘வா சார்…. ஏறி உட்கார்’’ என்று கூப்பிட்டபோதாவது மறுத்திருக்கணும். அப்பவும் செய்யாதது ரெண்டாவது தவறு.
‘‘நாங்க எல்லாம்…. யானையவே பார்த்தவைங்க…. இது எல்லாம் எம்மாத்திரம்’’ என்று, அமர்ந்திருந்தபோதே என் கழுத்து அளவுக்கு மேல் இருந்த ஒட்டகத்தின் மீது பக்கவாட்டில் இருந்த புட் ரெஸ்ட்டில் கால் வைத்து ஏறி அமர்ந்தபோது, சொய்ங்ங்ங்ங்…. என்று சீட் பக்கவாட்டில் சரிந்தது.
‘‘நல்லா ஏறி அந்த கம்பியை பிடிச்சுக்கோ சார்….’’ என்றான் ஒட்டக்கக்கார்.
அவன் கம்பி என்று சொன்னது, ஒட்டகத்தின் மீது கட்டப்பட்டிருந்த ஒரு திண்டில் ஒரு கால் அடிக்கு ஒரு இன்ச் இரும்பு பைப்பை கட்டியிருந்தார்கள். அதை பேலன்சுக்காக இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்ள வேண்டுமாம்.
அதை பிடித்துக் கொண்டு மீண்டும் சரியாக இருக்கையில் அமர்ந்தேன்.
என் சக ஊழியர் எனக்கு கிலி ஏற்படுத்துவது என்ற கங்கணம் கட்டி வந்திருந்தார் போலும். ‘‘நான் சாரோட டபிள்ஸ் போய்க்கிறேன்’’ என்று என்னுடன் வந்திருந்த மற்றொரு ஊழியரிடம் கூறிவிட்டார்.
நான் ஏறிய பிறகு, என் இடுப்பை பிடித்துக் கொண்டு அவர் ஏறி அமர்ந்தார். அவருக்கு புட் ரெஸ்ட் இல்லை. எனக்கு இருந்ததுபோன்று அவருக்கு பிடிமானம் இல்லை. அவர் என் தோளை தொட்டுக் கொண்டார். அப்போதாவது சுதாரித்திருக்கலாம்.
‘‘நல்லா பிடிச்சுக்கோ சாரே….. பயப்படாத வொண்ணும் ஆகா’’ என்று ஒட்டகக்கார் தைரியம் கொடுத்தார்.
‘ஹொய்ய்… ’ என்று ஒட்டகக்கார் ஒரு குரல் கொடுத்ததுதான் தாமதம்.
நம்ம ஒட்டகம் பின்னங்காலை தூக்கிக் கொண்டு, முன்னங்காலை முட்டிப்போட்டு நின்றது.
அப்போதே குடல் வெளியே வந்துவிடும், வயிற்றில் உருண்டு விளையாடியது.
‘‘தைரியத்தை மட்டும் விடக்கூடாது மச்சான்… நாம எல்லாம் மதுர காரங்ய்க…’’ என்று பாழாய் போன மனம் சொல்லியதால், கம்பியை (ஒட்டகக்கார் பாஷையில்) இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். பின்னால், இருந்த சக ஊழியர் என் தோளை அமுக்குவதில் இருந்து, அவரும் என் மனநிலையிலேயே இருப்பதை உணர்ந்துக் கொண்டேன்.
அடுத்ததாக, ‘சல்…ரே…. ’’ என்று ஒட்டகக்கார் அடுத்த உத்தரவு கொடுத்தார்.
முன்னங்காலை முட்டிப்போட்டு நின்ற ஒட்டகம், அதை நிமிர்த்திக் கொண்டு எழுந்தது. பின்னங்காலில் மட்டும் நின்றபோது, இதெல்லாம் ஒரு உயரமா என்று இருந்தது. ஆனால், ஒட்டகம் முன்னங்காலையும் நிமிர்த்தி நின்றபோது, ஏதோ ஒரு மாடியின் மீது இருப்பதுபோன்று திடீரென உயரம் பல மடங்கு அதிகரித்தது.
எழுந்திருக்கும்போது அது லேசாக ஆடியது. நானாவது தைரியத்துடன் (?) வேர்த்து, விறுவிறுத்தாலும் கத்தவில்லை. ஆனால், பின்னால் இருந்த ஊழியர் ஐய்யோ… அம்மா….என்று கத்த ஆரம்பித்துவிட்டார். இதனால் மீண்டும் ஒட்டகம் கீழே உட்காராமலேயே அவர் மேலே இருந்து கீழே குதித்து, மண்ணில் விழுந்து உருண்டு, புரண்டு ஓடியேவிட்டார்.
‘‘எம்மா மீனாட்சி மானத்தை வாங்க வாங்க வச்சிடாதே… எப்படியாவது தைரியத்தை கொடுமா’’ என்று மனதில் வேண்டிக் கொண்டேன்.
மீண்டும் ஒட்டகக்கார், ‘‘சல்…. ரே….’’ என்றான்.
ஒட்டகம் என்னை திரும்பி பார்த்துவிட்டு, ‘பத்திரமா இரு சொல்லிபுட்டேன்’’ என்று கூறியபடி நடக்க ஆரம்பித்தது.
அது நடக்கும்போது, ஒவ்வொரு அடிக்கும் அதன் முதுகுப்பகுதி சுமார் ஒரு அடிக்கு கீழே அமுங்கி, மேல் எழுந்தது. சத்தியமாக வயிற்றில் ஏதோ ஒரு திரவம், குண்டக்க, மண்டக்க பாய ஆரம்பித்திருந்தது. ஒட்டகம் நடக்கும்போது, திண்டுப்பகுதியும் இந்தப் பக்கமும் அந்த பக்கமும் ஆடியது. கம்பியே தெய்வம் என்று நினைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும், குயிக் பிக்ஸ் போட்டு ஒட்டியதுபோன்று, அவ்வளவு இறுக்கமாக பற்றிக் கொண்டேன்.
பாலைவனத்தில் மேட்டை நோக்கி செல்லும்போது, ஆங்காங்கே சிறு பள்ளங்களும் வரத்தான் செய்கின்றன. எல்லாம் சாதாரணமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
முன்னால் சென்றுக் கொண்டிருந்த மற்றொரு ஒட்டகக்காரின் ஒட்டகம் சற்று தொலைவு முன் சென்றுவிட்டது. இதனால் என் ஒட்டகக்கார், ஒட்டகத்தை பார்த்து, அதே தான்…. ‘சல் ரே…..’ என்று குரல் கொடுக்க, ஒட்டகம், இறக்கமான பகுதியில் வேகமாக செல்ல ஆரம்பித்தது.
‘மங்கம்மா… மாரியம்மா….. என்று கத்திவிட்டேன்’ அப்புறம்தான் புரிந்தது. ராஜஸ்தான் ஒட்டகக்காருக்கு இது எப்படி புரியும். பய்யா…. பய்யா…. மெதுவா… சீ…. அறம்சே சாவோ’ என்றேன் எனக்கு தெரிந்த இந்தியில்.
நான் பயத்தில் இருப்பதை பார்த்து, ‘‘ஹோவ்… ஹோவ்…’’ என்று ஒட்டகத்தின் நடையை மெதுவாக்கினார். அப்போதுதான் மீண்டும் உயிர் வந்தது.
கீழே இருந்து மேட்டுப்பகுதியில் வந்துவிட்டு, மீண்டும் கீழே இறக்கிச் செல்வதுதான் ஒட்டக சவாரி.
அதன்படி மணல் மேட்டுப்பகுதியில் வந்த பின்னர் ஒட்டகத்தை கீழே நடக்க வைத்தான் ஒட்டகக்கார்.
அப்போது ஒன்று நன்றாகத் தெரிந்தது. ஒட்டகத்தின் மீது அமர்ந்து மேட்டுப்பகுதிக்கு பயணிப்பது சற்று எளிதானது. இறக்கத்தின் மீது நடக்க ஆரம்பித்தால், முதுகுப்பகுதி அதிகமாக அமுங்கி, எகிறுகிறது. இதனால் வயிற்றுப்பகுதியில் உள்ள அனைத்து பாகங்களும் அழுத்ததுக்கு உள்ளாகி, பிராண அவஸ்த்தையை தரும். அதாவது ஜெயின்ட் வீலில் கீழே இறங்கும்போது வயிற்றில் ஒரு புயல் உருவாகுமே. அதே பீல் கிடைக்கும்.
எப்போடா… கீழே போய் சேருவோம் என்று நினைத்து கவலைப்பட ஆரம்பித்தபோது, ‘‘சாரே…. நாங்க ஒரு ஆத்மிக்கு 1000 ரூபா வாங்குறான்… நீங்க வேணா என் தோஸ்கிட்டே கேஹ்ளூ சார்’’ என்று மூன்று பேருக்கு 700 பேசியதை எங்கே குறைத்துவிடுவார்களோ என்ற கவலையில், பயபுள்ள சரியா கீழே இறக்கத்தில் இறங்கும்போது கூறினான்.
அப்படியே தள்ளிகிள்ளி, இல்லாட்டி, ஒட்டகத்தை ‘சல்…. ரே….’ என்று அடித்துவிட்டால், உயிர் நம் கையில் இருக்காதே…. அதனால பொதுவா அவனுக்கு ஒரு சிரிப்பு மட்டும் உதிர்த்து, ஆமால்லே… என்ற பாணியில் பொதுவாக தலையாட்டினேன்.
ஏறும்போது ஒரு பயம் தொற்றி்க் கொள்ளும் என்றால், இறங்குபோது, அதைவிட பெரிய பயம் தொற்றிக் கொள்ளும்.
ஏறிய இடத்திற்கு வந்தவுடன், ‘‘சாரே கம்பியை நல்லா பிடிச்சுக்கோ முழுசா பின்னாடி சாஞ்சிக்கோ’’ என்று கூறிவிட்டு, ஒட்டகத்திடம், ‘பைஹ்ட்…’’ என்று பைட்டோ இல்லாட்டி ஃபைட்டோ என்று ஏதோ சொன்னான் ஒட்டகக்கார்.
கேடிஎம் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, டிஸ்க் பிரேக்கை அடித்தால் வண்டியின் பின்பகுதி அப்படியே முன்புறம் தூக்குமே, அதுபோன்று சடாரென்று ஒட்டகம் முன்னங்காலை மடக்கியது. மேலே இருந்த நான், விட்டால் பல்டி அடித்து ஒட்டகத்தின் முன் போய் விழுந்திருப்பேன். ‘கம்பி’ தெய்வத்தை பலமாக பிடித்துக் கொண்டும், ஒட்டகக்கார் சொன்னபடி பின்புறம் சாய்ந்திருந்ததாலும் தப்பித்தேன். அதே நிலையில் ஒரு சில விநாடிகள் சென்றபின்னர்,ஒட்டகத்தின் பின்னங்காலில் குச்சியால் லேசாக தட்டினார் ஒட்டகக்கார். டமாலென்று பின்னங்காலையும் மடித்துக் கொண்டு ஒட்டகம் முழுமையாக அமர்ந்தபோது, ஸ்பிரிங் டேபிளின் நடுவில் எகிறி பின் நிலைக்கு வந்தது போன்று ஒரு ஃபீலிங்.
ஒட்டகத்தின் மீது இறங்கி நின்றபோது, மீண்டும் ஒட்டகம் லேசாக என்னை பார்த்து, ‘கெ….க…பி….க…கெ…க..பிக’ என்று சிரித்ததா, கணைத்ததா என்று புரியாமல் கிளம்பினேன்.

1 comment:

  1. நானே ஒட்டகச் சவாரி செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எழுத்து நடையில் நகைச்சுவை சிறப்பாக வந்துள்ளது.

    ReplyDelete

Thanks