27 February 2019

என் இனிய தமிழ் மக்களே




என் இனிய தமிழ் மக்களே!

வானம்பொய்த்துக் கொண்டுபெய்யும்போல் இருந்தது. கீழ்வானத்தில் மேகம் கரிக்கடை சுவர்போல இருண்டு கிடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மனைவிக்கு காலையில் இருந்து  இலேசாக இடுப்பு வலி இருந்ததால்,மேய்ச்சலுக்கு லட்சுமியை அழைத்துச் செல்லாமல், அறுவடைதான் முடிந்து பூமி எல்லாம் சும்மாதானே கெடக்கு என்ற தைரியத்தில் அப்படியே கழட்டிவிட்டுவிட்டான் சுந்தரம். அதுதான் இப்போது வினையாக தோன்றியது. வீட்டு கூரையின் கீழே உட்கார்ந்து கொண்டு  வானத்தை அண்ணாந்து பார்த்தவனின் மூக்கின் நுனியில் ஒரு மழைத்துளி பொட்டு வைத்தது.
‘‘வானம் நல்லா பொழியும்போலிருக்கே… இந்தநேரம் பார்த்து லட்சுமியை கழற்றி விட்டிருக்க கூடாது… இப்போ அது எங்கேபோய்மேயுதோ…’’ கவலையுடன் அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினான்.
‘‘ஏலே… சண்முகம்… நீ அண்ணிக்கூடவே இரு. நான் லட்சுமியை பத்திட்டு வந்துடுறேன்.வேத்தாள்போன அது முட்டுது…’’ என்று சொல்லிவிட்டு, கிழக்கே பசு மாட்டைதேடி ஓடினான்.
அதுவரை இங்கொன்றும், அங்கொன்றுமாக தூவிக்கொண்டிருந்த வானம், கண்டக்டர் விசிலுக்கு கிளம்பும் பஸ்போல‘ஜோ’வென்றுபெய்ய ஆரம்பித்தது.
வயலில் ஓடிக்கொண்டிருந்த சுந்தரத்துக்கு நிற்பதற்கு நேரமில்லை. இடுப்பில் புல்லருக்கும் அறுவாளை கட்டியிருந்த துண்டை எடுத்து தலையில் முண்டாசு போட்டுக் கொண்டான். பிறை அறுவாளை எடுத்து இடுப்பில்சொருகிக்கொண்டு விரைந்தான்.
‘‘ஏற்கனவே சளிப்பிடித்து ஒழுகிக்கிட்டு இருந்தது. மழையில நனைஞ்சா அப்புறம்ரெண்டு நாளைக்கு பால் தராது. சனியன் எங்கேபோய் நிக்குதோ…’’ முனகிக்கொண்டே ஓடினான்.
பெய்யாமல்பெய்த மழையுடன் காற்றும் கை கோர்த்திருந்ததால், சுழன்று, சுழன்று அடித்தது. பத்தடி தூரம் கூட சரியாக தெரியவில்லை.
‘‘லட்சுமி… லட்சுமி…’’ குரல் கொடுத்து கொண்டே ஓடினான்.
மலையின் கீழ் ஈச்சமரத்தின் ஒன்றின் அடியில் ஒதுங்கியிருந்த லட்சுமி, எஜமானனின் குரலைக்கேட்டதும், ‘‘ம்..ம்மே…’’ என்று கத்தியது.
‘‘இங்க ஒதுங்கியிருக்கியா… வா… வா…’’ என்று மூக்கணாங்கயிற்றை பிடித்து இழுத்தான்.
அவன் இழுப்புக்கு லட்சுமி வராமல் நின்றதை கண்டுகோபமடைந்த சுந்தரம், ‘‘என்ன சனியனே… சீக்கிரம் வா… வீட்டுக்குபோகணும்…’’ என்று மறுபடியும் இழுத்தான்.
லட்சுமி காலை எடுத்துவைக்க முடியாமல் மீண்டும் ஈனஸ்வரத்தில் ‘அம்ம்ம்மே…’ என்று கத்தியது.
அப்போதுதான் அதன் காலில் அடிபட்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
காலில் யாரோ அடித்ததைபோன்று, நல்ல அடி பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம், மழை நீருடன் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்த மாத்திரத்தலேயே பதறிவிட்டான்.
‘‘அய்யோ… இது எப்படி ஆச்சு, எவன்தோட்டத்திலாவது போய் மேஞ்சியா…’’ அதற்கு புரியுமா, புரியாதா என்ற கவலை எல்லாம் இல்லாமல் சஜகமாக பேசினான். ஈச்ச மரத்தின் கீழ் நன்கு ஒதுங்கி நிறுத்தி, அதன் காலை மெதுவாக துடைத்துவிட்டான். மெல்ல கை வைத்ததற்கே லட்சுமி கத்தினாள்.
‘‘அடி பலமாத்தான் இருக்கும் போலிருக்கு…’ மனதில் நினைத்துக் கொண்டான். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, அதன் காலில் கட்டாக கட்டிவிட்டான்.
மழை கொஞ்சம் கூட நிற்காமல், சித்தியிடம் சூடுபட்டபெண் அழுவதுப்போல பொல,பொலவென்று பெய்துக் கொண்டே இருந்தது. லட்சுமியை மரத்தில் கொஞ்சம் கயிற்றை இழுத்துவிட்டு கட்டிவிட்டான். தந்தியடித்துக் கொண்டிருந்த பல்லுடன்,தோளில் கை வைத்து குத்த உட்கார்ந்தான்.
தூரத்தில் ஒரு உருவம் ஓடி வந்துக் கொண்டிருப்பது நிழலாக தெரிந்தது. அருகில் நெருங்க,நெருங்க, அது சித்தப்பன் மகன் சுடலை என்று தெரிந்தது.
இவன் எதுக்கு இந்த மழையில இப்படி ஓடியாரான் என்று நினைத்துக்  கொண்டிருந்த நேரத்தில், ‘‘ஏலா… சுந்தரா, உன் மேட்டு நிலத்து வரப்பை வொடைச்சு, மாரியப்பய தன் நிலத்துக்கு தண்ணீரை எறக்கிட்டு இருக்காம்லே, சீக்கிரம் போய் பாருலே’’ என்று சொல்லிவிட்டு சுடலை மூச்சு வாங்கினான்.
‘‘அட வேசி மவனே… அவனுக்கு அவ்வளவு தைரியம் ஆகிப்போச்சா… சுடலை லட்சுமி எங்கோ கால ஒடிச்சுட்டு வந்து நிக்கு. அதை பார்த்து வீட்டுக்கு பத்திட்டுப்போ. நான் மாரியப்பயல ஒரு கை பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு நிலத்துக்கு விரைந்தான்.
‘‘மழையில்லாம காஞ்சு கிடக்கிற பூமியில, வராம வந்த மழையில ஒரு எத்து எடுத்துரலாம்னு பார்த்தா, கொள்ளியிலபோற மாரி, தண்ணீய தன் நிலத்துக்கு எடுத்துட்டுபோறானாமே! அது பார்த்துட்டு நிற்கிறதுக்கு நான் என்ன கேணக்கிறுக்கனா…’’ மனதில் புலம்பியபடியே ஓடினான்.
சுடலை சொன்னபடியே,மேட்டில் இருந்த தன்னுடைய நிலத்தில் விழுந்த மழை நீரை வரப்பை  உடைத்து தன்னுடைய நிலத்தில் திருப்பிக் கொண்டிருந்தான் மாரி. பார்த்தவுடனேயே பற்றிக்கொண்டு வந்தது.
‘‘எல… மாரி நீயெல்லாம் உங்கப்பன் ஈத்துக்கு பிறந்த பய தானா? என் நிலத்தில வடியிற மழையை உன் நிலத்துக்கு  எடுத்துக்கிறியே… இது பதிலாக உன் பொஞ்சாதி முந்தாணய விருந்தாளிக்கு  விரிச்சு சம்பாதிக்க வேண்டியது தானே?’’ வாயிலிருந்து தீப்பிழம்புகளை தடவிய வார்த்தைகளை கொட்டினான் சுந்தரம்.
‘‘ஏண்டா…கொண்ணப்பயல, எங்கப்பன் ஈத்தையா பேசுர, உங்காத்தா தாண்டா உன்ன அப்படிபெத்திருப்பா. அதனாலத்தான் வார்த்த அப்படி வருது…’’ தப்புசெய்ததும் இல்லாமல் எதிர்த்து பேசினான் மாரி.
வந்த ஆத்திரத்தில் இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்து மாரியை வெட்டச்சென்றான் சுந்தரம். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மாரி, அவனது அரிவாளை எடுத்து சுந்தரத்தின் கழுத்துக்குபோட்டான். அதை தடுக்க முயன்றதில், சுந்தரத்தின் கையில் பெரும் வெட்டு விழுந்தது. அங்கிருந்து ரத்தம் குபீர் என்று பீறிட்டு கிளம்பியது. ரத்தத்தை பார்த்த மாரி, விழுந்தடித்து ஓடினான்.
சிறிது தூரம் வரை அவனை துரத்திக்கொண்டு ஓடிய சுந்தரத்துக்கு, தலையில் கிர்ர்ர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. கிறக்கத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
அந்த சோர்விலும் ஒடிக்கப்பட்டிருந்த வரப்பை ஒற்றை கையால் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். தொடர்ச்சியான மழையில் அவன் ஏற்றிவிட்ட மணல் கரைந்து ஓடியது. மயக்கத்தில் கிறங்கினான்.
எங்கிருந்தோ, ‘‘அண்ணே… அண்ணே…’’ என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் சண்முகம்.
சுந்தரத்தின் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தையும், அவனது நிலையையும் பார்த்து, ‘‘அண்ணே… என்னாண்ணே… இது கையில ரத்தம் ஆறா ஓடுது…’’ பதறினான்.
‘‘ஒண்ணுமில்லடா… ஒரு மாரியப்பயலோட சின்னத்தகராறு... அது சரி, உன்ன அண்ணிக்கு துணையாத்தானே இருக்கச் சொன்னேன், நீ எதுக்கு வந்தே?’’
‘‘அதச்சொல்லத்தாண்ணே வந்தேன்… அங்க அண்ணி பிரசவ வலியால துடிச்சிட்டு இருக்காங்க… உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்தேன். பக்கத்துவீட்டு பாட்டிய உட்கார வச்சுட்டு வந்தேன்’’ என்றான்.
சுந்தரத்தின் கையில் வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இன்னமும் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
‘‘சரி நீ முன்னாலபோய், ஆத்தாவை வீட்டுக்கு கூட்டியாந்துடு… நான் வீட்டுக்குப் போறேன்’’
‘‘அண்ணே… உன்ன இப்படியே விட்டுட்டுபோறதா, வாண்ணே… உன்னை வீட்டு விட்டுட்டு, நான்போய் ஆத்தாவை கூட்டியாரேன்’’
‘‘நீபோடா முதல்ல… நான் எந்திரிச்சு போயிருவேன். சீக்கிரம் நீ போய் ஆத்தாவை கூட்டியா’’ என்று விரட்டிவிட்டான்.
திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனான் சண்முகம்.
கையை மடக்கிக் கொண்டு, நிலத்து நீரை  தடுக்க அவகாசம் இல்லாததால், அப்படியே எழுந்து வரப்போரத்திலேயே வீட்டை நோக்கி நடந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், கண்கள் இருண்ட மாதிரி இருந்தது.
மழை நின்றுபோய் இருந்தது.
தூரத்தில் வீடு தெரிந்தது. இதோ எட்டு தூரம்… போய்விடலாம் என்று நம்பிக்கையுடன் நடையில் கொஞ்சம் வேகம் காட்டினான். வீட்டுக்கு சிறிது தள்ளி தார்பாய் போட்டு மூடி வைத்திருந்த வைக்கோல் போரில் இருந்து புகு, புகுவென்று புகை வந்துக் கொண்டிருந்தது.
மனதில் பக் என்றாகிவிட்டது சுந்தரத்துக்கு. ‘வைக்கோல் போர் பற்றிக் கொண்டுவிட்டதோ’ பதற்றத்துடன் இன்னும் வேகமாக நடந்தான்.
நிஜம்தான்.வைக்கோல் போர் பற்றிக்கொண்டு எரிந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மாரி ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
‘‘எலேய் என் ஈத்தையா பேசுற, நீ எப்படிபொளப்பு நடத்துறேன்னு நானும் பார்த்திடுவேம்ல’’சொல்லிக் கொண்டே ஓடினான் மாரி.
புரிந்துவிட்டது சுந்தரத்துக்கு. அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தார்பாயை எடுத்துவிட்டு மாரி, வஞ்சத்தில் தீவைத்திருக்கான் என்று.
முன்பைக் காட்டிலும், கண்கள் மேலும் இருள ஆரம்பித்தன.கொஞ்சம் வாய்க்கு தண்ணீர் கிடைத்தால் தேவல என்பதுபோல் இருந்தது. தூரத்தில் மனைவி பிரசவ வலியால் துடிக்கும் சத்தம் கேட்டது. அப்படியே கீழே விழுந்துவிட்டான். விழுந்த சமயத்தில் காலில் சுருக்கென்று,கொள்ளிக் கட்டையை சொருகியது போன்று இருந்தது.
‘‘அம்மா… ’’என்று வலியில் துடித்துக் கொண்டே கீழே பார்த்தான். வரப்பில் ஒரு பாம்பு ஓடிக் கொண்டிருந்தது.
‘‘இறைவா… இன்னைக்கு யார் முகத்தில நான் முழிச்சேன்… என் பொஞ்சாதிய காப்பாத்து, மீண்டும் மழைபெய்ய வச்சு வக்கப்போர காப்பாத்து… கடைசியா யாரையாவது அனுப்பி என்னையும் காப்பாத்து…. காப்பாத்துப்பா… காப்பாத்து…’’ முனகிக் கொண்டே தலையை தரையில் கவிழ்த்தான் சுந்தரம்.
‘‘கட்… கட்… எழுத்தாளரே… கதை எல்லாம்ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா… கிராமத்து பக்கமா இருக்கு… அதனால, நல்லா…யோசிச்சு… ஒரு மார்டர்னா… நகரத்து கதையா கொண்டாங்க…’’சொல்லிவிட்டு ஆப்பிள் ஜூசை சாப்பிட ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.
தொண்டை தண்ணீ வற்ற, சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற ஆசையில் கதை சொல்லிய, சுந்தரம் என்கிற, துணை இயக்குநராகிய நான், குடிக்க, தண்ணீர் கூட இன்றி, நா வறண்டு அடுத்த தயாரிப்பாளர் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

19 February 2019

351 அடி உயர சிவன் சிலை

ஜெகமாளும் ஈசனுக்கு ஜோத்பூரில் பிரமாண்ட சிலை

இந்தியாவின் 2வது மிக உயரமான சிலையாகவும், உலகின் மிகப்பெரிய சிலைகள் வரிசையில் நான்காவதாகவும், இந்து சிலைகளில் உலகிலேயே மிகப்பெரியதாகவும் ராஜஸ்தானின் நத்துவாராவில் சிவன் சிலை கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்து சிலை என்ற பெருமையை பெற உள்ள, இந்த சிவபெருமானின் உயரம் 351 அடியாகும். இது முற்றிலும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கலவையால் அமைக்கப்படுகிறது. நத்துவாராவில் உள்ள கணேஷ் தேக்ரி என்ற இடத்தில் மலைக்குன்றின் மீது சிலை அமைக்கப்படுகிறது. நத்துவாராவுக்கு வருவதற்கு 20 கி.மீ. தொலைவில் இருந்து பிரமாண்ட சிவபெருமானின் உருவத்தை தரிசிக்க முடியும் என்பதுதான் அதன் விசேஷம்.

அமர்ந்த நிலையில், சாந்த வடிவமாக இடது கையில் சூலாயுதமும், வலது கையை மடியிலும் வைத்தவாறு சிவபெருமான் சிலை அமைக்கப்படுவதாக இத்திட்டத்தின் தலைவரான ராஜேஷ் மேத்தா கூறினார். இந்த சிலையை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மிராஜ் குழுமம் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. சிலையின் உள்ளே அமைக்கப்படும் லிஃப்ட் மற்றும் மாடிப்படி வழியாக 280 அடி உயரம் வரை பக்தர்கள் செல்ல முடியும். மேலும், சிவபெருமான் சிலையை இரவில் வெகு தூரத்தில் இருந்து தரிசிக்கும் வகையில், பிரமாண்ட மின்விளக்குகள் அமெரிக்காவில் இருந்து  தருவிக்கப்பட உள்ளன.

இதேபோல்,  சிவபெருமான் அமைய உள்ள குன்றைச் சுற்றிலும் பூங்கா, பல்வேறு வகையான உணவகங்கள், சிறுவர்கள் விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி பிரசங்க மேடை என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் நாமும் இந்த சிவபெருமானை தரிசிக்க செல்ல முடியும். உலகின் மிக உயர்ந்த இந்து சிலையை தரிசித்த பெருமையும் கிடைக்கும். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு சென்றால், அங்கிருந்து ஏராளமான பஸ்கள், கால்டாக்சிகள் நத்துவாராவுக்கு செல்கின்றன. கட்டணம் அதிகபட்சம் ரூ.75.   

ஜே.எஸ்.கே.பாலகுமார்

17 February 2019

உடலையும் மனதையும் வருடும் தமாரா கூர்க்

இரண்டு சுண்டு விரல்கள் அளவுக்கு ஒரு பறவை. கிரீச், கிரீச் என்று அவைபோடும் சத்தம், அந்த அதிகாலைவேளையில் மனதை வருடும் ஒரு இன்பம்.ஜோடியுடன் காலைவேளையிலேயே இரைத்தேட கிளம்பும் இரட்டை வால் பறவை. பஞ்சவர்ண கிளிக்கு தங்கை என்றுசொல்லப்படும் பல்வேறு நிறம்கொண்ட அளவில் சிறிய கிளி… இப்படி அதிகாலைவேளையில் பறவைகளின் இசைக் கச்சேரியையும், மலைகளில் இருந்து புகுந்து வரும் காற்றின் புனலோசையும்சேர்ந்து, ஒரு டிசம்பர் மாத ஆனந்த கச்சேரியை அரங்கேற்றுவது இயற்கை அதிசயம். அத்துடன் காட்சியை ரசிக்க வருபவர்களை வருடிச்செல்லும் வெண்பஞ்சு பனி, காதலியின் கைவிரல்பட்ட சிலிர்ப்பை ஏற்படுத்தும்கொஞ்சல். இவை எல்லாம், கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள தமாரா ரெசார்ட்டில் கிடைக்கும், இயற்கை அன்னையின் பரிசுகள்.
கர்நாடகாவின் மைசூர் அல்லது கேரளாவின் குன்னூரில் இருந்து சுமார் இரண்டரை மணிநேரத்தில் வருகிறது இந்த ரெசார்ட். காசு கொடுத்து வருபவர்கள் தானே என்ற அலட்சியம் எல்லாம் இங்கு கிடையாது. காந்தியின் பொன்மொழியைபோன்று வாடிக்கையாளர்களே இங்கு தெய்வமாக பார்க்கப்படுகின்றனர். இதனால் ரெசார்ட்டில் உள்ளே நுழைந்த உடனேயே ஆரத்தி எடுத்து வரவேற்கப் படுகின்றனர் பயணிகள். அடுத்ததாக மூக்கையும், மனதையும் கவரும் நறுமனம் கொண்ட மலர் மாலை அணிவிக்கப்படுகிறது. மலை முழுவதும் காபி தோட்டம், அப்புறம் நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஏன், உடலை கெடுக்கும் வேதிப்பொருட்கள் கொண்ட செயற்கை பானங்கள்? அதனால் சுடச் சுடச் கருங் காபி கோப்பை நிறைய வழங்கப்படுகிறது. அந்த குளிர் மலைப் பிரதேசத்தில் ஆவி பறக்கும் அந்த கருங்காப்பி, உடலை மேலும் புத்துணர்வு அடையச்செய்வது இயற்கையே.
அடுத்து காபி தோட்டத்தின் பாதையில்நெடிதுயர்ந்த மரங்களுக்குபோட்டியாக அமைக்கப்பட்ட மரத்தூண்களின் மேல் அமைக்கப்பட்ட காட்டேஜூக்கு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரி வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விடப்படுகின்றனர். ஒரு வானந்திரப் பகுதியில், அனைத்து நவீன வசதிகள் அடங்கிய காட்டேஜ் வியக்கத்தான் வைக்கும். இரண்டுபேர் தங்குவது முதல் 6பேர் தங்குவது வரையிலான காட்டேஜ்கள் வசதிக்கு ஏற்ப கிடைக்கின்றன. காட்டேஜ்ஜில் ஆளை சுருங்க வைக்கும் குளிர் நிலவுகிறது. ஆனாலும், கூட அங்கு ஏசி,பேன் போன்ற வசதிகளும், சுடச்சுடச் காபி செய்துக்கொள்வதற்கு ஏற்ப, அங்கேயே அரைத்து தயாரிக்கப்பட்ட காபித்தூள் உட்பட,டீ, குளிர்பானங்கள்,சோமபானங்கள் என்று அனைத்தும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. பால்கனியை திறந்தால் விசாலமாக படுத்துக்கொள்ள ஓய்வு எடுக்க மூங்கில் ரெஸ்டிங் காட்,சேர் ஆகியவை போடப்பட்டுள்ளன. சுற்றிலும் வானுயர்ந்த மலை, கீழே எட்டிப்பார்த்தால், அதல, பாதாளம். அப்போதுதான் தெரிகிறது. மரங்களுக்கு போட்டியாக அமைக்கப்பட்ட காட்டேஜின் பிரமாண்டம்.
அதிகாலையிலேயே பறவைகளை காண அழைத்து செல்கின்றனர்.கைதேர்ந்த நிபுணர், வாடிக்கையாளர்கள் அனைவரது கைகளிலும் நவீன பைனாக்குலரை தந்துவிடுகிறார். அந்த அதிகாலைவேளையிலும் மனிதர் கனகச்சிதமாக பறவையை கண்டுபிடித்து அவை இருக்கும் இடத்தை துல்லியமாக குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு காட்டுகிறார். புரியாதவர்களுக்கு கையிலேயே புத்தகத்தை கொண்டு வந்து, அதில் இருக்கும் படத்தை காட்டித் தெளிவாக விளக்குகிறார். இந்த அதிகாலை பறவைகள் பார்க்கும் நடை, சுமார் ஒன்றரை மணிநேரம் நடக்கிறது. அதன்பின்னர் சுடச் சுடச் நீராவிக் குளியல் எடுத்துக்கொண்டு,வெப்பநிலை பராமரிக்கப்படும் நீச்சல் குளத்தில் கும்மாளமிட்டு வெளியே வந்தால்… அதேதான், வயிற்றில் கபகபவென பசி.
உணவகத்துக்கும் கூடபேட்டரி காரிலேயே அழைத்துச் செல்லப்படுகின்றனர். வலது பக்கத்தில் பாய்ந்து விழும் நீர்வீழ்ச்சிக்கு இடையே மனதுக்கு பிடித்தமான உணவு வகைகளைகேட்டு வாங்கி சாப்பிடலாம். தலைமை செப் சஞ்சய் வாடிக்கையாளர் எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்து வந்திருந்தாலும், அவர்கள்கேட்கும் உணவு வகைகளை அதிகபட்சம் 20 நிமிடத்தில் சமைத்து தருவது அதிசயம் தான். காலை 7.30 மணிக்கே, சுடச்சுடச் கூர்க் சிக்கன் கறி, மட்டன் கறி, கப்பா புட்டு, அரிசியில்செய்த சப்பாத்தி, சூப் வகைகள்,பொங்கல், பூரி என்று நாக்கில் எச்சில் ஊறும் அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. பொறுமையும், உணவின் மீது ரசிப்புத் தன்மையும்கொண்டவர்களுக்கு இது ஒரு சொர்க்கபுரி.
மதியமும் இதே தான். அசைவ உணவில் ஊர்வன, பறப்பன, மிதப்பன முதல்,சைவத்தில் கொத்தமல்லி துவையல் முதல் முழு காலிப்பிளவரை மசாலா போட்டு, எண்ணெய்யில் வறுத்தெடுத்துகொடுக்கும் உணவு வரை எல்லாமே கிடைக்கிறது.
இரவில் அருவியை பார்த்தபடி,சோமபானம் அருந்திக் கொண்டே (ஒரு சுமால் ரூ.200 முதல் ரூ.4,000) மட்டனையும், சிக்கனையும்வெட்டுபவர்கள் இடையே, தக்காளி சூப்பையும்,பைனாப்பிள் ஜூசையும் மிளகு அப்பளம், ஜவ்வரிசி வடாகத்துடன் சாப்பிட்டு ‘போதை’ ஏற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கு மது பானங்களுக்கு மட்டும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மாலையில், முன்பதிவு செய்துக் கொண்டு ஸ்பாவுக்கு சென்றால், அவர்களின் உடல் நலத்துக்கு ஏற்ப பல்வேறு விதமான மசாஜ்கள் நிபுணர்கள் மூலம் ஆண்,பெண்களுக்கு தனித்தனியாக செய்யப்படுகின்றன. உண்மையிலேயே பயிற்சிபெற்ற நிபுணர்கள் என்பதால், உடல்வலி குறைந்து போவதை கண்கூடாக உணர முடிகிறது.
இதேபோல், வாடிக்கையாளர்களில் பெண்களுக்கு மாலையில் சமையல் வகுப்பறை நடக்கிறது. விருப்ப பப்பட் ஆண்களும் இதில் கலந்துக் கொள்ளலாம். பாரம்பரிய அசைவ, சைவ உணவுகளை ருசியுடன்செய்ய கற்றுத்தரப்படுகிறது. சமையல் வகுப்புக்கு பின்பு யோகாசனம் வகுப்பு நடக்கிறது.
திடகாத்திரமான ஆண்,பெண்களுக்கு இங்கு மலையேற்ற பயிற்சியும் நடக்கிறது.
மனதுக்கு புத்துணர்ச்சியை அள்ளித்தரும் இன்னொரு விஷயம். தாவரங்களுக்கு இடையிலான நடை. பிளானடேஷன் வாக் என்றபெயரில் அழைத்துச் செல்லப்படும் இந்த நடையில், டார்ச் ஜின்சர், எலிபென்ட் பனானா, ஒற்றை முக ருத்திராட்சம், காபி வகைகள் என்று காணக்கிடைக்காத தாவர,செடி,கொடி வகைகளை காண முடிகிறது. ஒரு சிறந்த காபித்தூளை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.
இந்த காபி தோட்டத்தில் ஒரு பிடிசெயற்கை உரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை என்பதுடன், குப்பைகள் அனைத்தும் மக்கச்செய்து இயற்கை உரமாக்கப்படுகின்றன. அசைவபொருட்களை தவிர பெரும்பாலான உணவுப்பொருட்கள் இங்கேயே விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. பாலுக்காகவே ஒரு கோசாலையும் பராமரிக்கப்படுகிறது.
இரண்டு நாட்கள் இங்கு தங்கினாலும், அடுத்து ஓராண்டுக்கு மனதுக்கும், உடலுக்கும்தேவையான சக்தியை மீண்டும் ரீசார்ஜ் ஆகிவிடுகிறது என்றால், அது மிகையில்லை. நகர இரைச்சல், படபடப்பு வாழ்கை, எந்திர கதியான உணவு ஆகியவற்றில் இருந்து விடைபெற்று, மனதிற்கு பிடித்த காட்சிகள், மனம் விட்டுபேசவும், நடைபோடவும், உண்ணவும் நிம்மதியான ஒரு இடம் தமாரா கூர்க்.
- கட்டுரையை பிரசுரித்த தினகரன் நாளிதழுக்கு நன்றி . ஜே.எஸ்.கே.பாலகுமார்.

11 February 2019

புளியோதரையும், பாலகுமாரனும்

ஊருக்கு போகணுமா, காலையில இருந்து ஷாப்பிங் கிளம்பணுமா, பொருட்காட்சிக்கு போகணுமா..... வை புளியோதரை என்பார்கள்.
எல்லாவற்றுக்கும் கைக்கொடுக்கும் இந்த புளியோதரையை தரமாக ருசித்தவர்கள், வாழ்நாளில் வேறு எந்த சாதத்தையும் விரும்ப மாட்டார்கள். முதல் காதலியைப்போல்.டீக்கு மட்டுமல்ல, புளியோதரைக்கும், மணம், நிறம், திடம் உண்டு.
புளிக்காய்ச்சலின்போதே தெரிந்துவிடும், வீட்டுக்குள் ‘டைகர் ரைஸ்’ உருவாகிறது என்று. சும்மா... அதிருதுல்லெ... என்ற பாணியில், புளியுடன், தனியா, பெருங்காயம் காயும் வாசனைக்கு முன்னால், டைகர் பாம் எல்லாம் ‘உள்ளேன் ஐயா’தான்.
ஸ்டாலின் பாணியில் சொல்வதென்றால், ஆக.... புளியோதரைக்கும் மணம் உண்டு.
அடுத்ததாக நிறம்.புளியோதரைக்கு நிறம் மிக முக்கியமானது.
மனிதர்களில் வேண்டுமானால் சிவப்பு தோலுக்கு மவுசு இருக்கலாம். ஆனால், திருவாளர் புளிக்கு, கருப்புதான் மகா லட்சணம் பொருந்திய சாதத்துக்கான நிறம்.
சிலர் வெள்ளை யானை என்று, வெளிறிய இளஞ்சிவப்பு நிறத்திலான யானையை காட்டுவார்கள். எம்.ஆர்.ராதா பாணியில்.... டேய்... அப்பா... உங்க தொல்லை தாங்க முடியலடா என்று தான் சொல்லத்தோன்றும்.
அதுபோன்றுதான், புளியோதரை என்றால், அது அடர் மஞ்சள் மற்றும் ஆங்காங்கே புளிக்கரைசல் ஒட்டிய கருப்பும் தெரிய வேண்டும். இல்லாவிட்டால், அது புளியாக இருக்காது. பூனையாக இருக்கும்.
இதற்கு மிக முக்கியமானது. புளி தேர்வு. புதுப்புளி வெள்ளை சாதத்துக்கு வெளிறிய மஞ்சள் நிறத்தை கொடுக்கும். அது பார்வையை சுண்டி இழுக்காது. கருப்பாய் இருக்கும் பழைய புளிதான், சும்மா கும்முன்னு.... நாட்டுமல்லி கணக்காய் பார்வையை சுண்டியிழுக்கும்.
அடுத்ததாக புளியோதரையில் சிலர் நிலக்கடலை சேர்ப்பார்கள். சிலர் கடலைப்பருப்பை சேர்ப்பார்கள். என்னைப் பொருத்த வரையில், இரண்டுமே மிகச்சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது புளியோதரையின் சுவையை எந்தவிதத்திலும் பாதிப்பதாக இருக்கக்கூடாது. கடலை மிட்டாய் சாப்பிட்டு முடித்தபின் பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் சின்னத் துகளை நோண்டு, துழாவி எடுத்து சாப்பிடும் சுவையைப் போன்று இருக்க வேண்டும்.
புளியோதரையில் எண்ணெய்யை சிலர் கூடுதலாக சேர்த்துவிடுவார்கள். அது ருசியை சேர்ப்பதற்கு பதில் கையில் வழுவழுப்பைத்தான் கூட்டும். இதுவும் அளவோடு இருக்க வேண்டும்.
‘ஆக....’ மணம், நிறம், திடத்துடன் இருக்கும் புளியோதரை உருண்டையாக அமுக்கி, பிசக்காமல், பால் சாதம் போன்று, அழுங்கல், குலுங்கல் இல்லாமல் சாப்பிட வேண்டும்.
புளியோதரைக்கு சைடீஸ்..... சில பேர் தேங்காய் சட்னி என்பார்கள். சில பேர் சுண்டல் என்பார்கள், மேலும் சிலர் தேங்காய் பத்தை என்பார்கள். என்னை பொருத்த வரையில், சுண்டல்தான், புளியோதரைக்கு பெஸ்ட் ஜோடி. அதுவும் சுண்டல் நச, நச என்றில்லாமல், கொஞ்சம் திக்காக வேகவைத்து சாப்பிட்டால், அட, அட..... இதற்கு நிகர் வேறு என்ன வேணும்?
ஈரேழு லோகத்திலும் தேடினாலும், லட்சத்தெட்டு ஹோட்டல்களில் சாப்பிட்டாலும், நல்ல புளியோதரை ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கும்.
பங்குனி மாதம், மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில், சாமி ஆற்றில் இறங்கும் வைபத்தின்போது, ஜானகி வகையறா மண்டபத்தில் விநியோகிக்கப்படும் புளியோதரை அந்த ஜாதியைச் சேர்ந்தது. முடிந்தால், மதுரைக்கு டிக்கெட் போடுங்கள். புளியோதரை ரசிகர்கள் மன்றத்தில் இணையுங்கள். - ஜே.எஸ்.கே.பாலகுமார்.