#மிஷன் சிவசக்தி

#மிஷன் சிவசக்தி




காலையிலேயே ராணுவ விண்வெளி ஏவுதளம் பரபரப்பாக இருந்தது.
குஜராத்துக்கும் கோவாவுக்கும் இடையே மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருந்த அந்த இடத்துக்கு செல்வதே, சாதாரண ஆட்களால் முடியாத காரியம். ராணுவத்தின் குட்டிஹெலிகாப்டர் மூலம்தான் அந்த இடத்துக்கே செல்ல முடியும். அப்படி ஒரு ஏவுதளம் இருப்பது வெளியாட்களுக்கு யாருமே தெரியாது. அந்த அளவுக்கு ரகசியத்தை பாதுகாத்து வருகிறது அரசு. அந்தஏவுதளத்தை அமைக்கும் பணி கூட மிக, மிக ரகசியமாக, அதேசமயம் பொறுமையாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் வெளியாட்களுக்கு யாருமே தெரியாது.
ஏவுதளத்தில் தலைமை விஞ்ஞானி ஹரிராம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் முன்பு அமர்ந்திருந்தார்.
‘‘மிஷன் கன்ட்ரோல்’’ முதல் கட்டளையை பிறப்பித்தார்.
‘‘எஸ்…சார்… எல்லாம் திட்டமிட்டபடி சரியாக போகிறது. இன்னும் 10 நிமிடத்தில் மரங்கள் எல்லாம் விலக்கப்பட்டுவிடும் சார்’’ என்றார் ஸ்பேஷ் கட்டுப்பாட்டு அதிகாரி சங்கர்.
‘‘குட்… ராக்கெட் எரிபொருள் கண்டிஷன் எப்படியிருக்கு?’’ கேட்டார் ஹரிராம்.
‘’20 நிமிஷத்தில பில் பண்ணுற பணி தொடங்கும் சார்’’ என்றார் எரிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி.
‘‘மேலே செயற்கை மரங்கள் விலக்கப்பட்டு, செயற்கை புல் போர்வை போர்த்தும் பணி தொடங்குகிறது’’ ஸ்பீக்கரில் பொது அறிவிப்பு ஒன்று வெளியானது.
ஏவுதளம் இருப்பது செயற்கைக்கோள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ பார்த்தால் கூட தெரியாத அளவுக்கு, ஏவுதளத்தில் பிரமாண்ட செயற்கை மரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நவீன மரங்களும் ராணுவ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டவை. செயற்கை மரங்கள் என்றாலும் கூட அதில் இருந்து, உண்மையான மரங்கள் வெளியிடுவது போன்ற ஆக்சிஜன் வெளியேற்றம்,ஈரப்பதம் பராமரிப்பு போன்றவை இயந்திரங்கள் உதவியுடன் செய்பவை. இதனால் செயற்கைக்கோள்களால் கூட, அவை செயற்கை மரம் என்பதை கண்டறிய முடியாது. வல்லரசு நாடுகளின் கண்கொத்திபாம்பு போன்ற செயற்கைக்கோளில் இருந்து தப்பிக்க இந்த ஏற்பாட்டை விஞ்ஞானிகள் செய்திருந்தனர். மேலும், இவை தீயையும் தாங்கி நிற்கக்கூடியவை என்பது இன்னொரு விசேஷம். அப்போதுதானேராக்கெட் கிளம்பும்போது கக்கும் தீப்பிழம்புகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.
செயற்கை மரங்கள் குறிப்பிட்ட தூரத்துக்கு அகற்றப்பட்டு, அந்த இடத்தில் செயற்கை புல்போர்வை இயந்திரங்கள் துணையுடன் அங்கு போர்த்தப்பட்டன. விண்வெளியில் இருந்து பார்த்தால் பசுமை இடமாகமட்டுமே தெரியும். எல்லாம் 10 நிமிடங்களில் முடிந்தது.
‘‘மரங்கள் விலக்கப்பட்டு, புல் போர்வை போர்த்தப்பட்டுவிட்டது’’ ஸ்பீக்கரில் அடுத்த அறிவிப்பு வெளியானது.
ஹரிராம் மீண்டும் மைக்கில் பேசினார். ‘‘மிஷன் கன்ட்ரோல்… நம்ம நாட்டுக்கு மேல இப்போ எந்த வெளிநாட்டு செயற்கைக்கோளும் இல்லையே… இன்னொரு தடவை உறுதி செஞ்சீட்டீங்களா?’’
‘‘யெஸ் சார்… இன்னொரு 30 நிமிடத்துக்கு நம்ம நாட்டு மேல எந்த வெளிநாட்டு செயற்கைக்கோளும் இருக்காது. குறிப்பா நம்மள உளவு பார்க்கிற நாடுகள் சாட்டிலைட்’’ என்று பதில் அளித்தவிஞ்ஞானியின் குரல் ஸ்பீக்கரில் கேட்டது.
‘‘குட்’’ என்றார் ஹரிராம்.
‘‘எரிபொருள் நிரப்பும் பணி ஆரம்பிக்கப்படுகிறது’’ ஸ்பீக்கரில் பொது அறிவிப்பு பணி வெளியானது.
மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்த ஹரிராமை, அருகில் இருந்த கவனித்த கூடுதல் தலைமை விஞ்ஞானி அமரீந்தர், ‘‘சார் நீங்க இவ்வளவு டென்ஷனா இருந்து நான் பார்த்தது இல்லை. இன்னைக்கு மட்டும்ஏன் இவ்வளவு டென்ஷன்ல இருக்கீங்க? இந்த ராக்கெட் ஏற்கனவே பல முறை சோதனை செஞ்ச ஒன்னு. அதனால அத ஏவுறதில எந்த ஒரு சிக்கலும் இருக்காது. அப்புறமும்….’’ என்றார்.
‘‘அமரீந்தர்… இந்த ராக்கெட் என் வாழ்க்கையில் நாட்டிற்கும் எனக்கும் ஒரு சேர பெயர் வாங்கித்தரப்போகும் ஒரு மிஷன். அதுதான் கொஞ்சம் டென்ஷன். அதுமட்டும் இல்ல பிரைம் மினிஸ்டர், பிரசிடென்ட்ரெண்டு பேரும், டெல்லியில நேரடியா இந்த மிஷனை பார்த்துக்கிட்டு இருக்காங்க’’ என்றார் ஹரிராம்.
‘‘ஓகே சார்…’’ என்றார் அமரீந்தர்.
‘‘லாஸ்ட் மினிட் கவுன்டவுன் ஸ்டார்ட்’’ என்றது ஸ்பீக்கர் குரல்.
60
59
58
..
..
3
2
1
0
ராக்கெட் தீப்பிழம்புகளை கக்கிக் கொண்டு விண்ணில் பறந்தது.
விஞ்ஞானிகள் அனைவரும் மானிட்டரை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ராக்கெட் விண்ணில் பாய்ந்துக் கொண்டிருப்பது, ஒவ்வொரு பொட்டாக மானி்ட்டரில் உயர்ந்தன் மூலம் தெரிந்தது.
சரியாக 1800வது நொடியில் ராக்கெட் விண்ணில் பறந்து கொண்டிருந்த செயற்கைக்கோளை தாக்கி அழித்தது.
‘‘மிஷன் சக்ஸஸ்புல் அண்ட் அக்கியூரேட்’’ என்றது ஸ்பீக்கர் குரல்.
விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில், பிரதமர் போனில் ஹரிராமை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
‘டிவி’களில் பிளாஷ் செய்தி ஓடியது. இன்னும் 10 நிமிடத்தில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றப் போகிறார்.
சரியாக 10வது நிமிடத்தில் ‘டிவி’யில் தோன்றி பிரதமர் பேச ஆரம்பித்தார்.
‘‘இன்று நாடு விண்வெளித்துறையில் முக்கியமான மைல்கல்லை எட்டி உள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் வல்லமையை நாம் பெற்றுள்ளோம். இதுவரை வல்லரசு நாடுகள்மட்டுமே இந்த சக்தியை பெற்றிருந்தன. அதை ‘ஆப்ரேஷன் சக்தி’ என்ற பெயர்ல நடந்த இன்றைய ராக்கெட் சோதனை மூலம் இந்தியா பெற்றுள்ளது. இதற்காக ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இதற்காக நமது நாட்டு விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில், அங்கிருந்து ஹரிராம், ஹெலிகாப்டர் மூலம் குஜராத் விமான நிலையம் வழியாக டெல்லி சென்றடைந்தார்.
டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் ஹரிராம், பிரதமரின் இல்லத்துக்கு அழைத்துப் செல்லப்பட்டார்.
அவரை வாசலிலேயே வந்து வரவேற்றார் பிரதமர். இதுவரை எந்த விஞ்ஞானிக்கும் கிடைக்காத அந்த பெருமை ஹரிராமுக்கு கிடைத்தது.
தனியறையில் பிரதமரும், ஹரிராமும் மட்டும் இருந்தனர்.
டீயை குடித்தபடி, ‘‘ஹரிராம் எல்லாம் சக்சஸ் தானே?’’ கேட்டார் பிரதமர்.
‘‘சார் 2 தடவை ரகசியமாக நம்மோட ராக்கெட் சோதனையையும், மற்ற நாடுகள் பண்ண சோதனையையும் இன்ச் பை இன்ச்சா நானும், என்னோட டீமும் ஆராய்ச்சி செஞ்சிருக்கோம். அதன்அடிப்படையில்தான் இந்த ராக்கெட்டை ஏவி செயற்கைக்கோளை அழிச்சிருக்கிறோம்’’ என்றார் ஹரிராம்.
‘‘இதனோட பலன் எப்போ கிடைக்கும்?’’ கேட்டார் பிரதமர்.
‘‘சார்… பர்ஸ்ட் நாம சாட்டிலைட் அட்டாக்கிங் பவர் பெற்றிருக்கிறோம் என்பதே எதிரி நாடுகளுக்கு ஒரு பெரிய பிரச்னை. அதற்கப்புறம் நம்மோட சீக்ரெட் மிஷன் சரியா மூணு வருஷத்தில நமக்கு பலன் தரஆரம்பிக்கும்’’ என்றார் ஹரிராம்.
‘‘இஸ்…இட் கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார் பிரதமர்.
‘‘எஸ்.. சார்.. இப்போ நம்ம ‘ஆப்ரேஷன் சக்தி’ மூலமா தகர்த்த செயற்கைக்கோளின் பாகங்கள் சரியாக 386 பீசா உடைஞ்சிருக்கு. அதில மெயின் 4 பாகங்கள், லோயர் ஆர்பிட் எனப்படுற பூமியின் குறைந்தஉயரத்திலான செயற்கைக்கோள் பாதையிலும், மேல் பாதையில 3ம் பிரிஞ்சு போயிருக்கு… அதில லோயர் ஆர்பிட்ல சிதறின ராக்கெட்டோட மெயின் பாக்ஸ், செயற்கைக்கோளோட பேட்டரி பெட்டி,கூம்புப்பகுதி, ராக்கெட் இன்ஜின் பகுதி ஆகியவை, இதே நாள்ல அடுத்த 3வது வருஷத்தில, அதே பாதையில் வரும் எதிரிகள் நாட்டோட உளவு செயற்கைக்கோள்களை தாக்கும். ஒவ்வொரு அடியும் சும்மாஇடி மாதிரி இருக்கும். அதனால எதிரிகள் செயற்கைக்கோள் சுத்தமா செயலிழக்கும். இது ஒரு மாச இடைவெளிகளில் அடுத்தடுத்து நடக்கும்’’ என்றார் ஹரிராம்.
‘‘இன்ட்டிரஸ்டிங்…’’
‘‘எஸ் சார்… நம்ம எதிரி நாடுகள் உளவு செயற்கைக்கோளை ரகசியமாத்தான் விண்வெளிக்கு செலுத்தியுள்ளன. அவை சர்வதேச செயற்கைக்கோள் பட்டியிலேயே வராது. அதனால அதப்பத்தி வெளியேவும்சொல்ல முடியாது. நம்மக்கிட்ட நஷ்டஈடும் கேட்க முடியாது. அதாவது திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி. இந்த ரெண்டாவது ஆப்ரேஷனுக்கு நாம வச்ச பெயர் தான் ‘ஆப்ரேஷன் சிவன்’ . சிவபெருமான்உடனடியா தண்டிக்க மாட்டார். அவர் பொருமை காத்தே தீயவர்களை அழிப்பார். அதனாலத்தான் இந்த பெயர். ஆனா மிஷன் சக்தி மட்டும்தான் வெளியே சொல்லப்படும். ஆனா… நம்மைபொருத்தவரையில் இந்த ஆப்ரேஷன் பெயர் ‘மிஷன் சிவசக்தி’’
‘‘உண்மையிலேயே நீங்க ஜீனியஸ்தான்…’’
‘‘இல்ல சார்… இந்த திட்டத்தை ஆராய்ஞ்சி சொன்னப்போ… அதற்கு உடனடியா நீங்க அனுமதி தந்தது இல்லாம, தேவையான நிதி ஒதுக்கி ஆதரவு தந்தீங்க… உண்மையில் நீங்கதான் சார் ஹீரோ’’ என்றார்ஹரிராம்.
‘‘இந்த திட்டம் பிரசிடென்ட், எனக்கு, அப்புறம் உங்கள தவிர வேறு யாருக்கு தெரியும்?’’ கேட்டார் பிரதமர்.
‘‘அந்த சிவனுக்கும் சக்திக்கும் மட்டும்தான் சார்’’ பதில் அளித்தார் ஹரிராம்.
அந்த இடத்தில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது.
  • ஜே.எஸ்.கே.பாலகுமார்.

1 comment:

Thanks