30 April 2020

அக்னி யாகம்








சீதா பாட்டி என்றால், ஊரில் எல்லோருக்குமே தெரியும்.

எலும்பும், தோலுமாக திரியும் ஒரு உருவம். சிறுபி்ள்ளையாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் யாரிடமும் மனம் கோணாமல் பேசும் பாங்கு. பார்த்தவுடனேயே, ‘‘நல்லா இருக்கியா கண்ணு…?’’ என்று கேட்டு, அவர்களின் மனதில் புகுந்துவிடும் பாங்கு. சேலை என்ற பெயரில் ஏதோ ஒரு ஆடை அவளது உடலில் தொங்கிக் கொண்டிருக்கும். ரவிக்கை என்பது, அஞ்சு, ஆறு வருஷத்துக்கு முன்பு யாரோ கொடுத்த ஒரு பழைய துணி. பல நேரங்களில் அதுவும் கூட இருக்காது

சத்திரப்பட்டி பக்கத்தில் டி.ஊரணியில்தான் புருஷனோடு வாழ்ந்தாள். ஒரே பையன். பாழாய் போன, பசவாயு அவளது புருஷன் மாடசாமியை தாக்கியதில் இருந்து படுத்த படுக்கையானான். கூடவே காசநோயும் சேர்ந்துக் கொண்டுவிட்டது.

அவனுக்கு வைத்தியம் பார்ப்பதற்காகவே இருந்த ஒரே ஒரு குச்சி வீடும் அம்பாதாயிரத்துக்கு  விற்றாகிவிட்டது. ஏதோ நூறு நாள் வேலை, அக்கம், பக்கத்து வீட்டு வேலை என்று சீதாலட்சுமியே செய்ய ஆரம்பித்ததால் குடும்பம் ஓடியது. 45 வயதில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தவளுக்கு இப்போது 63 வயதாகிறது. இன்னமும் நிற்கவில்லை.

கொடியது, கொடியது இளமையில் வறுமை என்பார்கள். அதை பார்த்துவிட்ட, அவளது மகன் விட்டால் போதும் என்று பிய்த்துக் கொண்டு போய்விட்டான். எங்கோ வடக்கே இருப்பதாக கேள்வி. ஆனால், என்னவென்று கூட வந்து அவர்களை பார்த்தது இல்லை.

ஆனால், அதைப்பற்றி சீதாப்பாட்டி கவலைப்பட்டதே இல்லை. ‘‘என் புள்ள பட்டணத்தில பெரிய வேலையில…. ராசாவாட்டம் இருக்கான்ல…’’ என்று பெருமை பீய்த்திக் கொள்வாள். சொல்லிவிட்டு வரும்போது அவளது கண்ணைப் பார்த்தால்தான் தெரியும், கலங்கியிருந்த சோகம்.

டி.ஊரணியில் இருந்தால் பிழைக்க முடியாது என்பதால், இப்போது விருதுநகர் பக்கம் சாஞ்சான்குறிச்சி வந்துவிட்டாள். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புறம்போக்கு நிலத்தில் ஒரு குடிசையை போட்டு வாழத் தொடங்கியவள்தான்.

இன்றளவும் அதுதான் அவளது அரண்மனை. ரேஷனில் தரும் 15 கிலோ அரசிதான் அவளது கஞ்சிக்கு வழி செய்துக் கொண்டிருந்தது. காலையில் கணவனுக்கு கஞ்சி கொடுத்துவிட்டு, தானும் அதையே சாப்பிட்டுவிட்டு, நூறு நாள் வேலைக்கு சென்றுவிடுவாள்.

பாண்டு நிறைய மண்ணை எடுத்து தலையில் தூக்கிச் செல்லும்போது சில நேரங்களில் கிறுகிறுத்து வரும். ஆனால், வெளியில் சொல்ல மாட்டாள். வயதாகிவிட்டது என்று வேலைக்கு  வர வேண்டாம் என்று நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்று பயம். மண் மேட்டில் சிறிது நேரம் உட்கார்ந்து ரெண்டு வெத்திலையை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடுவதுபோல் பாசாங்கு செய்வாள்.

காலை 8 மணியில் இருந்து ஆரம்பிக்கும் அவளது பொழுதுக்கு, கிடைக்கும் ஒரே ஒரு குளுகோஸ், அந்த மதிய வேளையில் 12 மணிக்கு கிடைக்கும் டீ தான். அதுவும் தினம் ஒருவர் டீக்கு காசு போட்டு வாங்குவார்கள். ஆனால், தன்னால் வாங்க முடியாது என்பதால், ஓரு கி.மீ.க்கு அப்பால் இருக்கும் கடைக்கு சென்று டீயை வாங்கி வரும் பொறுப்பை  சீதாப்பாட்டி ஏற்றுக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் கொடுத்ததுபோக, தனக்கும் ஒரு டம்ளர் மிஞ்சும். அந்த டீயை அவள் ரசித்து, குடிக்கும் அழகு இருக்கே… அவ்வளவு அழகு. சில நேரங்களில் டீ மிஞ்சினால், அதை பிளாஸ்டிக் கவரில் பத்திரமாக ஊற்றி கட்டி, புருஷனுக்காக எடுத்து வைத்துக் கொள்வாள்.

மதியம் எல்லோருக்கும் சாப்பாட்டுக்கு இறங்கும் சமயம், ஓடிப்போய் புருஷனுக்கு மீண்டும் சாப்பாடு ஊட்டிவிட்டு, வயிற்றுக்கு போகிறதா, நிலத்துக்கு போகிறதா என்று தெரியாத அளவுக்கு நாலு முறை தானும் அள்ளி சாப்பிட்டுவிட்டு, மீண்டும் சரியாக வேலைக்கு வந்துவிடுவாள்.

இவள் மனுஷியா… ராட்சசியா… இம்புட்டு வேல பார்க்கிறாளே என்று அவளது வயதையொத்த பெண்களுக்கு மட்டுமல்ல… நேத்து கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து ஒத்த பிள்ளையை சமாளிக்க முடியாத பெண்களும் கூட ஆச்சரியப்படுவார்கள்.

3 மணிக்கு வேலை முடிந்தால், அங்கேயே கைக்கால்  கழுவிக்கொண்டு, மேட்டுத் தெருவில் இருக்கும் நாலு வீடுகளில் பாத்திரம் தேய்க்க போய்விடுவாள். அந்த வீடுகளில் ஏதாவது மிஞ்சியதை அல்லது பரிதாப்பட்டு மதியம் செய்ததில் ஏதாவது கொஞ்சம் கொடுப்பார்கள்.

புருஷன் மாடசாமி, நன்றாக இருக்கும் வரையில் இவளுக்கு எந்த குறையும் வைத்ததில்லை. நன்றாகத்தான் கவனித்துக் கொண்டான். வாரம் ரெண்டு முறை கறியுடன் தான் சாப்பாடு. ஆனால், இன்றைய நிலைமை? கறி வாங்கும் அளவுக்காக அவளது சம்பளம் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு போகும்போது, யாராவது கொஞ்சூண்டு கவிச்சி குடுத்துவிட மாட்டார்களா என்று மனம் கிடந்து தவிக்கும். மாடசாமிக்கு அதை சாப்பிட வைத்து பார்ப்பதில் சீதாப்பாட்டிக்கு அவ்வளவு சந்தோஷம். ஆனால், பல வேளைகளில் அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்ததில்லை. சில வேளைகளில் மனம் சோர்ந்து இருக்கும்போது, லாட்டரியில் அடித்த பரிசாக மீன் குழம்போ, கோழிக் குழம்போ கிடைக்கும்.

அப்படி ஏதாவது கிடைத்தால், சீதாப்பாட்டியின் நடையின் வேகம், அவ்வளவு துள்ளலாக இருக்கும். வீட்டிற்கு சென்று சாப்பாட்டை குழைய வைத்து செய்து, புருஷனுக்கு ஊட்டிவிடும்போது, கண்ணில்  தண்ணீர் பெருகும். எப்படி இருந்த என் ராசா… இப்படி மூலையில உட்கார்ந்திட்டாரே… என்று நெஞ்சு பொருமும்.

ரெண்டு மூணு நாளா கீழ்வானம் கருத்து, மழை பெய்துக் கொண்டிருந்தது. அதனால் அவளுக்கு வேலையும் இல்லை. வீட்டிலேயே அடங்கியிருந்தாள் சீதாப்பாட்டி.

மதியம் மட்டும் மேட்டுத்தெருவுக்கு போய் பாத்திரங்களை கழுவிவிட்டு வந்தாள். இன்று அவள் எதிர்பார்க்காமலேயே, கவிச்சி கிடைத்தது. ஆனால், வீட்டில் மாடசாமி வொடம்பு சரியில்லாமல் இருக்கும் நேரத்தில், வாங்கிச் சென்று தான் மட்டும் சாப்பிட மனமில்லாமல், ‘‘வேண்டாம் கண்ணு… எங்கூட்டுக்காரர் நோவுல படுத்திருக்கார்… அதனால அவர் சாப்பிட மாட்டார்…’’ என்று கொடுத்த  சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டாள்.

வீட்டில் வேலை பார்த்தாலும் கூட,  குடிசையில் கிடக்கும் மாடசாமியின் உடல்நிலையிலேயே மனம் கவலைக் கொண்டிருந்தது.

வீட்டுக்கார அம்மா கூட கேட்டே விட்டார்கள். ‘‘என்ன கெழவி இன்னைக்கு ரொம்ப கவலையா கெடக்கே… என்ன ஆச்சு…’’ என்று. ஆனால், அவர்களை சிரித்துக் கொண்டே மழுப்பிவிட்டாள் சீதாப்பாட்டி.

மழை என்றாலே சீதாப்பாட்டிக்கு பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிடும். காரணம் இல்லாமல் இல்லை. மழை வந்தால் குளிர் வரும். குளிர் வந்துவிட்டால் மாடசாமி இழைக்க ஆரம்பித்துவிடுவான். மூச்சும், இழுத்து, இழுத்து போகும். அதைப்பார்க்க, பார்க்க, சீதாப்பாட்டிக்கு பக், பக் என்று மனம் அடித்துக் கொள்ளும்.

இரண்டு நாள் மழையால் அன்று குளிர் அதிகமாகவே இருந்தது.

காலையில் இருந்து மாடசாமிக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்தான் அவளுடைய மனம் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது.

கிடந்த பத்து பாத்திரங்களை ஒழித்துக்கட்டி, துணிகளை துவைத்துவிட்டு கிளம்பியபோது, கால்கள் தள்ளாடின. முதுகில் உலக்கையை கொண்டு தாக்கியபோது வலி பின்னி எடுத்தது.

அதைப் பொருட்படுத்தாமல் குடிசைக்கு விரைந்தாள். படுக்கையிலேயே மாடசாமியின் ஒரு கால் மடங்கிக் கிடந்தது.

‘‘ஐய்யோ… சாமீ… எவ்வளவு நேரமா இப்படி கெடக்கீங்க… ரத்த ஓட்டம் நின்னுபோயிடுமே சாமீ…’’ என்று கால்களை நிமிர்த்தி தேய்த்து, பின் நீட்டி வைத்தாள்.

‘‘மேட்டுத்தெருவில கொஞ்சம் தாமசமாயிடுச்சு… சாமீ… கொஞ்சம் இருங்க… கஞ்சி போட்டுடுறேன்…’’ என்று போட்டு வந்து ஊட்டினாள்.  ஆனால், நாலு வாய்கூட சாப்பிடவில்லை. உடம்பு ஒத்துவரவில்லை என்பதை புரிந்துக் கொண்டாள் சீதாப்பாட்டி.

அவன் சாப்பிடாமல், அவளுக்கும் இறங்கவில்லை.  கஞ்சியை தூர வைத்து, அவன் அருகிலேயே உட்கார்ந்து, சட்டியில் போட்டு வறுத்திருந்த உமியை துண்டில் கட்டி, மாடசாமியின் நெஞ்சில் ஒற்றி, ஒற்றி எடுத்தாள். ஆனால், எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் மாடசாமி இருப்பதாக தெரியவில்லை.

இரவு ஆக, ஆக அவனது நெஞ்சுக்கூடு குளிரை தாங்க முடியாமல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. ஓலை குடிசையில் எரிந்துக் கொண்டிருந்த ஹைதர்காலத்து லாந்தர் விளக்கு, வெளிச்சம் என்ற பெயரில் இருளை மேலும் பயமுறுத்துவதாக  ஆக்கிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து வந்துக்  கொண்டிருந்த காற்றை தடுப்பதற்காக போஸ்டரை  எடுத்து வாசலில் கட்டிவிட்டாள் சீதாப்பாட்டி.

இன்னமும் மாடசாமி குளிருக்கு  நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, இணைத்து தைத்திருந்த கோணி துணியை கொண்டு வந்து அவன் மேல் போர்த்தினாள். கொஞ்ச நேரம், நிம்மதியாக இருந்ததுபோல் இருந்த மாடசாமி மீண்டும் நடுங்க ஆரம்பித்தான்.

‘‘பதினெட்டாம்படி கருப்பா… என்ச்சாமீயா… காப்பாத்த மாட்டீங்களா… அவரு இழைக்கிறதா பார்த்தும் என் உசுரு போக மாட்டேங்குதே… நான் என்னா செய்வேன் கருப்பா…. என்ச்சாமீய காப்பாத்திக் குடுய்யா… உனக்கு வர்ற திருவிழாவில மொட்டை போட்டுக்கிறேன்…’’ என்று நேரில் இல்லாத சாமீயிடம் சத்தம் போட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

மாடசாமியின் நிலை மேலும், மேலும்  மோசமாகத்தான் ஆகிக் கொண்டிருந்தது. அடுப்பில் நாலைந்து பேப்பர்களையும், காய்ந்த பனை ஓலைகளையும் வைத்து எரிந்து கதகதப்பான சூழ்நிலையை ஏற்படுத்த பார்த்தாள். ஆனால், மாடசாமியின் உடலில் நடுக்கம் குறைவாக தெரியவி்ல்லை.

அவன் உடல் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, தன் உடலில் கட்டியிருந்த சேலைத்துணியையும் எடுத்து அவன் மீது போர்த்திவிட்டாள்.

சீதாப்பாட்டியின் வேண்டுதல் அந்த இறைவனுக்கு கேட்கவில்லை போலும். மாடசாமியின் கைகள், சீதாப்பாட்டியின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தன.

‘‘எனனால்தானே இவ்வளவு கஷ்டம்… நான் போறேன் தாயீ…’’ என்பதுபோல் இருந்தது அவனது பிடி.

‘‘சாமீ… தைரியத்தை தளர விட்டுறாதீங்க… உங்கள விட்டா எனக்கு வேற கதி யாரு இருக்கா…. சாமீ…. இங்க பாருங்க… பதினெட்டாம்படியான் விபூதி உங்களுக்கு எல்லாம் சரியாயிடும்…’’ அவனது நெற்றியில் விபூதியை வைத்துவிட்டாள்.

கடைசியாக ஒரு இருமல் பொத்தென்று அடங்கினான் மாடசாமி.

அவனது கையின் பிடி தளர்ந்துக்  கொண்டிருப்பதை பார்த்த கலவரமடைந்த சீதாப்பாட்டி, ‘‘சாமீ… சாமீ… எந்திரிங்க… இங்க பாருங்க சாமீ…’’ புருஷனின் தலையை தன் மடி மீது கிடத்தி கத்தினாள். ஆனால், உயிர்ப்போன கூடு என்ன பதில் தரப்போகிறது.

சந்தேகம் வந்து புருஷனின் நெஞ்சில் தலைவைத்து கேட்டாள். ‘‘போதும் சீதா… என்னால முடியல…’’ என்பதுபோல நின்றுபோய் இருந்தது துடிப்பு.

‘‘ஐயாாாாா…. ச்சாமீ…. போய்ட்டீங்களா… என்ன இப்படி அநாதையா விட்டுட்டு போய்ட்டீங்களா…. என்ன  மட்டும் தவிக்கவிட்டு போக உங்களுக்கு எப்படிய்யா மனசு வந்தது….’’ என்று சீதாப்பாட்டி ஆங்கார குரலில் கத்திக் கொண்டிருந்ததை கேட்க, பாவம் அந்த வட்டாரத்திலேயே யாரும் இல்லை.

‘‘நீ இல்லாத உலகத்திலே நான் மட்டும் இருந்து என்ன ராசா பண்ணப்போறேன்…’’ என்று கத்திக் கொண்டிருந்த சீதாபாட்டி, வலது கையால் லாந்தர் விளக்கை தட்டிவிட்டாள்.

கீழே சாய்ந்த லாந்தரில் இருந்த மண்ணெண்ணெய் கசிந்து குடிசையை நனைக்க, இரக்கமில்லாத நெருப்பு அதை கப்பென்று பற்றிக் கொண்டது.

அக்னி யாகத்தில் ரெண்டு கூடுகள் சத்தமின்றி கருகிக் கொண்டிருந்தன.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.