07 March 2020

பாதை

‘‘அண்ணே நான் வேலைய விட்டுடலாம்னு இருக்கேன்’’ என்றான் கேசவன்.
‘‘ஏம்ப்பா… உனக்கு என்ன குறைச்சல்… அவனவன் கவர்ன்மென்ட் வேலை கிடைக்கலயேன்னு வருத்தத்தில இருக்கான்… நீ என்னடான்னா ரயில்வேயில வேலை கிடைச்சும்… அதை விட போறேன்னு சொல்றே?’’ என்றார் மூத்த ரயில் டிரைவரான விநாயகம்.
‘‘அண்ணே… நானும் அப்படித்தான் நினைச்சு இந்த வேலைக்கு வந்தேன்…’’ என்றான் இளம் ரயில் டிரைவான கேசவன்.
‘‘அப்புறம் என்ன?’’ என்றார் விநாயகம்.
‘‘தினம், தினம் என் கண் முன்னாடி பல பேர் தற்கொலை செய்துக்கிறதை பார்த்தா… உயிர் போய், உயிர் வருதுன்னே… துக்கம் தொண்டை அடைக்குது… முந்தாநேத்து… நாமதான் பார்த்தோமே… நம்ம கண் முன்னாடி பிஞ்சுக் குழந்தையோட ஒரு இளம்பெண், நம்ம ரயில்ல விழுந்து செத்தாளே… நம்மளால என்ன பண்ண முடிஞ்சது… ரயில நிறுத்தக்கூட முடியல… அந்த பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செஞ்சுச்சுனே?’’ என்று விசும்பலுடன் கூறினான் கேசவன்.
அவன் தோள் மீது கைவைத்தார் விநாயகம்.
‘‘என் கண் முன்னாடி ஸ்கூல் பசங்க, வயசானவங்க, போன் பேசிட்டு போறவங்க, வண்டியில திடீர்னு குறுக்கே பாயுறவங்க இப்படி எத்தனை, எத்தனை உயிர் போகுது… வெளியில இருந்து பார்க்கிறப்போ… எல்லோருக்கும் ரயில் டிரைவர் வேலைன்னா ஒரு சேர்ல உட்கார்ந்துட்டு ஹாயா பாதைய பார்த்துட்டே போகிறதுன்னுதான் நினைச்சிருப்பாங்க… நானும் வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன்… ஆனா, இந்த வேலை, தூக்கு கயித்தில தொங்குறவனை துடிக்க, துடிக்க கொல்லுற லிவர் லிப்டர் மாதிரியாத்தான்னே எனக்கு தெரியுது…’’ என்று விசும்பினான் கேசவன்.
அவனை கட்டி அணைத்துக் கொண்டார் விநாயகம்.
‘‘நானும் இந்த வேலைய ரொம்ப லவ் பண்ணி வந்து சேர்ந்தேண்ணே… ஆனா, தினம், தினம் உயிர்கள் என் கண் முன்னாடி துடிக்க, துடிக்க பலியாகிறப்போ… கத்தியால நெஞ்சத்தை குத்திக்கிழிக்கிற மாதிரி ஒரு வேதனை வாட்டுதுனே… ராத்திரியில கூட சரியா தூங்க முடியல… நடுராத்திரி எந்திரிச்சு… தண்டவாளத்தில விழுந்திராதே… போ… போன்னு கத்துறதப் பார்த்து என் அம்மா கூட ரொம்ப பயந்துட்டங்கண்ணே…
‘‘போன வாரம் உங்களுக்குத்தான் ஞாபகம் இருக்குமே… ஒரு காதல் ஜோடி திடீர்னு நம்ம ரயில் முன்னால பாய்ஞ்சு உயிர விட்டாங்களே… நாமதான் இறங்கி பார்த்தோமே… அவங்களுக்கு எல்லாம் வாழ வேண்டியது வயசுண்ணே… தண்டவாளத்தில கை, கால் சிதறி கோரமா செத்து கிடந்தாங்கண்ணே… அதப்பார்த்து ரெண்டு நாள் சாப்பிட கூட இல்லேண்ணே… இன்னைக்கு பேப்பர்ல பாருங்க யானைங்க, ரயில் மோதி இறந்திருக்கு… இப்படி நம்ம ரயில்லயும் நடந்திருக்கே… இன்னும் இந்த வேலையில இருந்தா, எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்… அதுக்கு முன்னாடி நிம்மதியா ஒரு கிளார்க் வேலையிலாவது போய் சேர்ந்திடுறேன். மனசுக்காவது  நிம்மதி மிஞ்சும்’’ என்றான் கேசவன்.
‘‘சரி உனக்கு டூயூட்டி முடிஞ்சதில்ல, இன்னைக்கு உன்னோட நானும் வர்றேன். பெங்களூர் எக்ஸ்பிரஸ்ல போகலாம்’’ என்றார் கேசவன்.
இருவரும் பெங்களூர் எக்ஸ்பிரசில் ஏறினார்.
இரவு மணி 10.30.
பெரும்பாலான பயணிகள் படுக்கையை விரிக்க ஆரம்பித்திருந்தனர்.
ஒரு பெட்டியில் வயதான ஒரு ஜோடிகள் படுப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
அங்கு பக்கவாட்டில் இருக்கும் ரெண்டு சீட் காலியாக இருந்தன. அதில் இருவரும் அமர்ந்துக் கொண்டனர்.
‘‘எல்லா பெட்டியையும் பார்த்தியா? வயசானவங்க, குழந்தைங்க, உன்ன மாதிரி சின்னப்பசங்க எல்லாம் எவ்வளவு நிம்மதியா தூங்குறாங்க…’’ என்றார் விநாயகம்.
‘‘ஆமா… தூக்கம் வருது தூங்குறாங்க…’’ என்றான் கேசவன் சாதாரணமாக.
‘‘தப்பு… இந்த ரயில் டிரைவர் மேல அவங்க வச்சிருக்கிற நம்பிக்கை. ஆனா, அது நேரடியா தெரியாது. ரயில் உரிய நேரத்தில போய் சேர்ந்திடும்றது அவங்களோட கணக்கு. அதாவது டிரைவர்கள் சரியாக தங்களை நேரத்துக்கு கொண்டு போய் கூட்டிக்கொண்டு போய் உரிய இடத்தில விட்டுடுவார்ங்கிற நம்பிக்கையில தூங்குறாங்க. நீ சொன்னா மாதிரி இருந்தா, டூவீலர்ல போறப்போ பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு தூக்கம் வந்தாலும் தூங்குவாங்களா? கார்ல நைட் டிராவல் பண்றப்போ, எத்தனைப் பேர் முழிச்சிட்டு போவாங்க தெரியுமா? அதுக்காக பஸ்ல தூங்க மாட்டாங்களான்னு கேட்ப… அதுவும் சரிதான். ஒரு டிரைவர் தாறுமாற ஓட்டிப்போறார்னு வை… அந்த பஸ்ல யாராவது தூங்குவாங்களா? பஸ் நிதானமா… அலுங்காமா, குலுங்காமா போனாத்தான் அதில் உள்ள பயணிகளுக்கு டிரைவர் மேல நம்பிக்கை வரும். நிம்மதியா தூங்குவாங்க… பிளைட்ல கூட இதே நிலைமைதான்…
‘‘அதனாலத்தான் ராத்திரி ரயில ஓட்டுறப்போ கூட ஒரேடியா ஓங்கி பிரேக்க போடாதேன்னு உன்னை திட்டுறது… நம்ம மேல பயணிகளிடம் இருக்கிற நம்பிக்கைய, அது குறைக்கும். ஒரே சமயத்தில ரெண்டாயிரம் பேரோட நம்பிக்கைய நாம சுமந்துட்டு போறோம். அது எவ்வளவு கர்வமான விஷயம் தெரியுமா? யாருக்காவது இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கா? இதுல எல்லா வயசுக்காரங்களும் அடக்கம். அப்புறம் நீ புலம்புறீயே…. நீயா… யாரையாவது போய் கொல்றீயா?’’ என்று கேட்டார் விநாயகம்.
‘‘இல்ல…’’ என்று இழுத்தான் கேசவன்.
‘‘நம்ம வழியில நாம போய்ட்டு இருக்கோம்… தானே வந்து விழுந்தா நாம என்ன பண்ண முடியும்? அதுவுமில்லாம நம்மளால காப்பாத்தக்கூடிய அளவு தூரம் இருந்தா நாம பிரேக் போடத்தானே செய்றோம்? இல்லே செத்தா, செத்துட்டு போறாங்கன்னு அப்படியே, மனசாட்சி இல்லாம ஏத்திட்டு போறோமா? வளைவுகள்ல யாரும் குறுக்கே வந்துடக்கூடாதுன்னு ஹாரனும் அடிக்கிறோம். ஆனா, அப்படியும் மீறி வர்றப்போ… அது கடவுள் விட்ட வழியாகத்தான் இருக்கும். ஏன் போனமாசம் ஒரு பொம்பளை கைக்குழந்தையோட ரயில்ல பாய்ஞ்சாளே ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்… ஆனா, அவ மட்டும்தானே செத்தா… குழந்தை என்ன அழகா தண்டவாளம் நடுவில விழுந்து சிரிச்சிட்டுத்தானே இருந்தது? இந்த வேலை வெறும் சம்பளத்துக்கானது மட்டும் இல்ல… ஒரு ஆத்மார்த்தமான சேவை… தினம், தினம் நீ ஆயிரக்கணக்கான மக்களை அவங்கவங்க போக வேண்டிய இடத்துக்கு கொண்டுப் போய் சேர்க்கிற…  இதுவும் கூட எல்லையில காவல் காக்கிற வீரர்களோட பணிக்கு சமமானதுதான். அவங்க நாட்டை காக்கிறாங்க… நாம நம்மள நம்பி பயணம் செய்யுறவங்களை பாதுகாப்பாக கூட்டிட்டு போறோம். அதே மாதிரி இந்த வேலை ஒரு அப்பாவுக்கு சமமானது. என்னைக்காவது நம்ம அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாத்தணும்னு சங்கப்பட்டிருப்பாரா?
‘‘ஆரம்பக்காலத்தில உன்ன மாதிரிதான் நானும் தவிச்சேன். ஆனா, குடும்பச் சூழ்நிலை எனக்கு பாடம் கத்து தந்தது. உனக்கு நான் என் அனுபவத்தை சொல்றேன். ஒரே சமயத்தில 2 ஆயிரம் பேரோட நம்பிக்கைய பெறுகிறது பெருசா… விட்டில் பூச்சி மாதிரி தானே விளக்குல வந்து விழுந்து உயிர விடுறவங்க பெருசா…. நீயே முடிவு பண்ணிக்க…’’ என்றார் விநாயகம்.
ரயில் அரக்கோணத்தில் நின்றது.
இருவரும் இறங்க வேண்டிய இடம்.
‘‘நான் காலையில 5.30க்கு டூயூட்டிக்கு வந்துடறேண்ணே’’ என்று புன்னகை மலர சொன்னான் கேசவன்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

05 March 2020

தவிச்ச வாய்க்கு....

‘என்னங்க இன்னைக்கும் நீங்க கலெக்டர் ஆபிசுக்கு போய்த்தான் ஆகணுமா?’’ தள்ளாத வயதில் படுக்கையில் இருந்து எழ முடியாமல் இருந்த சிவகாமி, கணவன் ராமசாமியிடம் கேட்டாள்.‘‘ஆமா… சிவகாமி, சுதந்திர போராட்டத்தில நாம கூட்டம், ஆர்ப்பாட்டம், சிறைன்னே காலத்தை கழிச்சுட்டோம்… நம்மள காப்பாத்த என் பிள்ளைக் குட்டிங்களா இருக்கு. அரசாங்கம் நம்மள மாதிரி தியாகிங்க சிகிச்சைக்காக பணம் கொடுக்குதாம். அது கிடைச்சுட்டா… உனக்கு நல்லபடியா ஆப்ரேஷன் முடிச்சிடலாம். இன்னைக்கு வா, நாளைக்கு வான்னு அந்த கிளார்க் தம்பீ சொல்லுது… அவங்க எதையோ எதிர்பார்க்கிறாங்க போல… என்ன பண்றது கண்ணம்மா… என்கிட்டதான் பணம் இல்லையே…’’ நொந்துக் கொண்டார் ராமசாமி.‘‘என் சாமீ… உங்களுக்கு அலைஞ்சு, திரியுற வயசா… விடுங்க… இந்த கட்டை அப்படியே போயிடும். தூக்கிப்போட்டு போங்க… எனக்காக எல்லாம் அலைய வேண்டாம். என் பக்கத்திலேயே இருங்க சாமீ. அதுபோதும்’’ படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாவிட்டாலும், கணவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் சிவகாமி.‘‘கண்ணம்மா இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீ போயிட்டா… எனக்கு யார் இருக்கா சொல்லு?. இந்த கிழவனை அநாதையா விட்டுட்டு போகணும்னு உனக்கு எவ்வளவு நாளா ஆசை?’’ கேட்டார் ராமசாமி.‘‘அதில்ல சாமீ… எனக்காக நீங்க படுற கஷ்டத்தை பார்க்க முடியல… அந்த கருத்த மாடன் என் வயித்தில ஒரு புழு, பூச்சியையும் குடுக்காம உட்டுட்டான். நமக்குன்னு ஒரு பிள்ளை இருந்திருந்தா… இந்த நிலைமை நமக்கு வந்திருக்குமா?’’ கண்ணீர் வடித்தாள் சிவகாமி.‘‘அட என் செல்லம்… பிள்ளை இருந்தா மட்டும் என்ன செய்திட முடியும். அரசாங்க உத்தியோகத்தில இருக்கிற ஆளுங்க… வயசானவங்களோட நிலைமை புரிஞ்சுக்கிறாத வரை யாருமே எதையுமே செய்திட முடியாது. அது சரி விடு… உனக்கு சாப்பாடு ஆக்கி வச்சிருக்கேன். பசிச்சா மோர் ஊத்தி சாப்பிடுமா… நான் அந்த ஆபீசர போய் ஒருவாட்டி பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்று மனைவியின் கட்டிலில் இருந்து எழுந்தார்.தள்ளாத வயதில், தனலாய் கொதிக்கும் வெயிலி்ல் கணவன் கிளம்பிச் சென்றதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சிவகாமி.கலெக்டர் அலுவலகம், எப்போதும் போல் பரபரப்பாக இருந்தது. மனு கொடுப்பவர்கள் அந்தபக்கமும், இந்த பக்கமும் ஆளாய் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மனு எழுதிக் கொடுக்கவென்று ஒரு நாலு பேர் சின்ன டெஸ்க்கை வைத்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த காலத்திலும் கூட அரசாங்க அதிகாரிகளின் பேச்சை தட்டாமல் சிலர் டைப் செய்வதற்காக, எழுத்தர்களின் முன்பு காத்திருந்தனர்.இரண்டு மாடி ஏறி, தியாகிகள் ஓய்வூதியத்துறை என்று எழுதப்பட்டிருந்த அறைக்கு நுழைந்தார்.பேன் சுற்றுகிறதா, இல்லை நாலா பக்கமும் சுற்றி பார்க்கிறதா என்று தெரியாத வகையில், லொட, லொட என்ற சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தது.50 வயதை எட்டிய, பெரிய மீசையுடன் கூடிய அதே கிளார்க் தன்னுடைய இருக்கையில் பைல் ஒன்றை வைத்துக் கொண்டு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் முன்பு போய் நின்றார் ராமசாமி.‘‘வாங்கய்யா… நான் சொன்ன மாதிரி நீங்க சிறையில இருந்து விடுலையாகிறப்போ குடுக்கிற லெட்டரை கொண்டு வந்திட்டீங்களா?’’ கேட்டார் கிளார்க்.‘‘ஐயா… நான் சிறைக்கு போய் 70 வருஷத்துக்கு முன்னாடி. இப்போ போய் அந்த கடுதாசியை கேட்டா நான் எப்படிங்கய்யா குடுக்க முடியும்…’’ மெல்லிய குரலில் கூறினார் ராமசாமி.‘‘அப்போ நாங்க கேட்கிறத குடுத்துட்டு, வேலைய முடியும்…’’ என்று பட்டென்று கூறினார் கிளார்க் ராகவன்.‘‘ஐயா… இந்த தள்ளாத வயசில தியாகிங்க பென்ஷன்லதான் என் வாழ்க்கையே ஓடுது… இப்போ என் பொஞ்சாதி படுத்த படுக்கையா இருக்கா… அவ வயத்தில பெரிய கட்டி இருக்காம். அதை ஆப்ரேஷன் பண்ணி எடுக்கலேன்னா… உசுரு போய்டும்னு டாக்டர்ங்க சொல்றாங்கய்யா… அவ மருந்து,மாத்திரைக்கே பல நாள் காசில்லாமல் அலையுறேன்… என்கிட்ட இருந்தா நிச்சயமா உங்களுக்கு குடுத்திடுவேன்… என் கிட்ட எதுவும் இல்லேங்கய்யா… தயவு செஞ்சு… இந்த சிகிச்சைக்காக செலவை கிடைக்க வச்சீங்கன்னா… உங்க குடும்பம் நல்லா இருக்கும்கய்யா…’’ கண்ணில் சட்டென்று எட்டிப்பார்த்த கண்ணீருடன் கைக்கூப்பி கெஞ்சினார் ராமசாமி.வரிகொடா இயக்க ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் நடத்திய தடியடியின்போது கூட தலையையோ, உடலையோ சாய்க்காமல் கம்பீரமாக நின்ற காட்சிகள், ராமசாமியின் உள்ளத்தில் நிழலாடியது.‘‘இந்த பாரு பெரிசு… எனக்கும் குடும்பம், குட்டி இருக்குல்ல… அரசாங்கம் குடுக்கிற சம்பளம் எந்த மூலைக்குய்யா பத்தும்? நானும் ஆடம்பரமா வாழ வேணாமா? உன்னை மாதிரி நாலு பேர் சொன்னா… நான் எங்கே போறது? இந்த பதவிக்கு வர்றதுக்காக சொலையா மூணு லட்சம் ரூபா குடுத்திட்டு வந்திருக்கேன்… சும்மா சோகப்பாட்டு பாடிட்டு திரியாத… மாசா, மாசம் சும்மா கிடைக்கிற பணத்தில கொஞ்சம் குடுய்யான்னா… தினமும் வந்து பஞ்சப்பாட்டு பாடிட்டு இருக்கே… போ பெருசு… பிராணன வாங்காத… முடிஞ்சா பணத்தோட வா… இல்லாட்டி இந்தப்பக்கமே வராத’’ என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வெளியே விரட்டினார் ராகவன்.கண்ணில் வழிந்த கண்ணீரை தோளில் கிடந்த துண்டால் துடைத்தபடி அங்கிருந்து வெளியேறி வந்தார் ராமசாமி.வாசலில் நின்றிருந்த பியூன் கேட்டான். ‘‘ஏன்யா… பெருசு… நீயும், உன் ரெண்டு பேருமே தியாகிங்க தானே… அப்புறம் நல்லா பென்ஷன் கிடைக்குமேய்யா…?’’‘‘இல்ல தம்பீ… என் பொஞ்சாதிக்கு பென்ஷன் வாங்கல… வீட்டுல ஒருத்தருக்கு போதும்னு எனக்கு மட்டும்தான் எழுதிக்கொடுத்தோம்’’ என்றார் ராமசாமி.‘‘என்னா… பெருசு… பொழைக்கத் தெரியாத ஆள இருக்கே… இந்த ஆள் வேற பணத்தை வாங்காம, பேனா மூடிய கூட திறக்க மாட்டானே… போயி ஏதாவது பணத்துக்கு வழி பண்ணு பெருசு… பார்த்தா… பாவமாத்தான் இருக்கு’’ என்று தலையில் அடித்து கொண்டார் பியூன்.கலெக்டர் அலுவலகத்தின் இரண்டு மாடி  இறங்கி வந்ததில், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது ராமசாமிக்கு. பையில் பார்த்தார், வரும் போது டிக்கெட் எடுத்த 10 ரூபாய் போக, ஒரு இருபது ரூபாய் நோட்டு மிச்சம் இருந்தது. குளிர்பானம் கூட வாங்கி குடிக்க முடியாது. அப்படியே மெதுவாக நடந்து ரோட்டுக்கு வந்தார். அங்கு தன்னைப்போல சில பெரியவர்கள் மட்டும் இருந்தார்கள்.எல்லோரும் பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.அப்போது, ராகவனும் பஸ் ஸ்டாண்டை நோக்கி வருவது தெரிந்தது.அவரது நடையில் கொஞ்சம் அவசரம் தெரிந்தது.அவரை ராமசாமி பார்த்து கொண்டிருந்தபோதே, சடாரென்று கீழே விழுந்தார்.பஸ் ஸ்டாண்டில் இருந்த தன் வயதையொத்த பெரியவர்களுடன், ராமசாமியும் அவரை நோக்கி சென்றனர்.கீழே விழுந்த ராகவன் தண்ணீ, தண்ணீ… என்று முனகிக் கொண்டிருந்தார்.அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஒரு பெரியவர், ‘‘ராட்சசன் இவனா… பணம் குடுத்தாத்தான் கையெழுத்தே போடுவேன்னு சொன்னவன். இவனுக்கு எல்லாம் தண்ணீ குடுக்கிற விட விஷத்தை வாயில ஊத்தி அப்படியே அனுப்பிடணும்… உனக்கு எல்லாம் கடவுள் நல்லாத்தான் தண்டனையா குடுக்கிறான்’’ என்று கூறியபடி சடாரென்று அங்கிருந்து கிளம்பினார்.மற்றொரு பெரியர், அவர் ஏற்கனவே ராமசாமிக்கு முன்னதாக வரிசையில் நின்றிருந்தவர். ‘‘அவரு சொல்றதும் சரிதான்… இவன் எல்லாம் இப்படியே விக்கி, விக்கி சாகட்டும்… வாங்க பெரியவரே அவன் கிடக்கட்டும்’’ என்று துண்டால் விசிறிக் கொண்டிருந்த ராமசாமியை இழுத்தார்.அவரது கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டவர், எங்கிருந்து அவ்வளவு பலம் வந்தது என்று தெரியாமல் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு ஓடி, ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வந்து, அநாதையாக கிடந்த ராகவனின் கழுத்தை மடியில் வைத்து குடிக்க வைத்தார்.சரியான வெயிலில் தண்ணீர்ச்சத்து இல்லாமல் மயங்கி விழுந்த ராகவன் மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.பெரியவர்கள் பேசிய பேச்சு இன்னமும் அவரது மூளையில் நங்கு, நங்கு என்று எதிரொலித்துக் கொண்டிருந்தது.ராமசாமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார் ராகவன். அதைத்தவிர அவரால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.முதுகில் தட்டிவிட்டு, வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார் ராமசாமி.ராமசாமியின் மனைவி சிகிச்சை செலவுக்காக அவர் விண்ணப்பித்திருந்த மனுவில் கையெழுத்துப்போட மீண்டும் தனது அலுவலகத்துக்கு எழுந்து நடக்க ஆரம்பித்தார் ராகவன்.-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.
x