#கீஷ்டு


கீஷ்டு




பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேகம் பிடித்திருந்தது.
செங்கல்பட்டை தாண்டிவிட்டதால், பெட்டியில் இருந்த அனைவரும் சாப்பிட்டு முடித்து தூக்கத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த ராணுவ கர்னல் கிருஷ்ணா. தனது பயணங்களுக்கு குளிர்ச்சாதன பெட்டியில்தான் பயணம் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை அவரே விரும்பி இரண்டாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்திருந்தார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இரண்டாம் வகுப்பில்தான் தன் ஊரையொத்த மக்கள் பயணம் செய்வார்கள். அவர்களின் முகங்களை பார்க்கும்போது ஒரு ஆறுதல் கிடைக்கும். மூன்றாம் வகுப்பில், மேல்தட்டு மக்களை மட்டுமே பார்க்க முடியும். அதுவும், யாரிடமும் எந்த பேச்சும் வைத்துக் கொள்ளாத முன்ஜாக்கிரதை எண்ணம் கொண்டவர்கள்.
ஜன்னல் வழியாக பின்னால் விரைந்து கொண்டிருந்த வீடுகள், விளக்கு கம்பங்கள், பாலங்கள், மரங்கள் என்று அனைத்தையும் வெறித்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
மனம் சின்ராசு போனில் பேசியதை அசைப்போட்டது.
‘‘ஏலே கிருஷ்ணா… உனக்கு ரொம்பத்தாம்ல வைராக்கியம். ஈஸ்வரியோட கல்யாணம் இல்லைன்னு ஆனப்புறம் நீ பாட்டுக்கு விறுவிறுன்னு பட்டாளத்துக்கு போய் சேர்ந்திட்டே… ஆனா… அந்தப்புள்ள விடாம ஒன்ன கட்டிக்கிறதுக்காக, அவன் அப்பன்காரன்கிட்டேயும், அக்கா புருஷன்கிட்டேயும் என்ன பாடுபட்டா தெரியுமா… என்னதான் தன் நண்பன் மகன அவ விரும்பினாக்கூட, எல்லா அப்பனுக்கும் தலைக்கு ஏறுற மாதிரி அவங்கப்பன்னுக்கும், அதுவே கவுரத விஷயமா ஆகிப்போச்சு…. தானும், மாமனும் பார்த்த பையனத்தான் கட்டிக்கணும் இல்லாட்டி விஷம் குடித்து குடும்பத்தோட தற்கொலைப் பண்ணிக்குவேன் சொல்லி அவளை அந்த தண்ணிவண்டிப்பய ராமுவுக்கு கட்டி வச்சிட்டாங்க… அவன் பண்ண கொடுமைய எல்லாம் சகிச்சுட்டு வாழ்ந்தாடா… இப்போ சாவக்கிடக்கா… ஆனா… என்னக்காரணமோ தெரியல உசுரு போவல… எனக்கு தாம்லே தெரியும்… அதனோட உசுரு உன்னை சுத்தி வருதுன்னு… ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போய்யா… மவராசி… கையில பிடிச்சிட்டு இருக்கிற உசுர நிம்மதியா விடுவா… உங்க அம்மா செத்தப்போ கூட நீ ஊருக்கு வராம இருந்தது எல்லாம், அவளை பார்த்துடக் கூடாதுன்ற வைராக்கியம்தான்றது எனக்கு தெரியும்… ஒரே ஒரு தடவை ஊருக்கு வந்துட்டு போலே…’’ உடைந்து அழுதான் சின்ராசு.
கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டபடி, ‘‘வர்றேன்’’ என்றான் ஒத்தை வார்த்தையில்.
‘‘எக்ஸ்கியூஸ் மீ சார்’’ என்ற வார்த்தையை கேட்டுத்தான் நினைவுக்கு வந்தார் கிருஷ்ணா.
‘‘சார் டிக்கெட்’’ என்று நின்றுக் கொண்டிருந்தார் பரிசோதகர்.
தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டினார். அதை பரிசோதித்துவிட்டு நகர்ந்தார் பரிசோதகர்.
சற்றே எழுந்து காற்று வாங்குவதற்காக வாசல் அருகில் வந்து நின்றார். குளிர்க்காற்று முகத்தை அறைந்துக் கொண்டு சென்றது. ரயில் ஒரு ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் மீண்டும் பழைய நினைவில் மூழ்கினார் கிருஷ்ணா.
திருப்பரங்குன்றம் ரயில்வே கிராசிங் அருகே உள்ள மேட்டுப்பகுதியில் பிளஸ் 2 படிக்கும்போது பள்ளிக்கு செல்லும் வழியில் தானும், ஈஸ்வரியும் அமர்ந்து ரயில்களை வேடிக்கைப் பார்ப்பது இருவருக்குமே மிக பிடித்தமான விஷயம்.
அன்றொரு நாள் அதேமாதிரி ஒரு ரயிலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ‘‘டேய் கீஷ்டு… இதே மாதிரி நீயும் வெளியூருக்கு போய் சம்பாதிச்சுட்டு வருவியாம்… நானும் நம்ம புள்ளைங்களும், விளாச்சேரி வளைவிலேயே வந்து நின்னு உன்னை வரவேற்பானாம். நீ வண்டியில இருந்து இறங்கின உடனே அப்படியே உன்னை கட்டிப்பிடிச்சுப்பேனாம்’’ என்றாள் ஈஸ்வரி.
‘‘சீ… போடி… ஜனங்க எல்லாம் இருப்பாய்ங்கல்ல’’ என்றான் கிருஷ்ணா.
‘‘யாரு இருந்தா எனக்கு என்னடா… என் புருஷனை நான் கட்டிப்பிடிக்கிறேன்’’
வெட்கத்துக்கு இடையே கேட்டான். ‘‘அது என்ன புதுசா கீஷ்டு?’’
‘‘என் தோழி ஒருத்திக்கிட்டே பேசிட்டு இருந்தேன். அவங்க பாஷையில கீஷ்டுன்னா கிருஷ்ணாவாம்… அதனால இனிமே செல்லமா கீஷ்டுதான். நீ மட்டும் என்னை புஜ்ஜின்னு கூப்பிடுறேல்ல… அதுமாதிரி’’
‘‘தமிழ்ல இருக்கிற எந்த வார்த்தையையும் எதுகை மோனையா பேசலாம். அதாவது, ஈஸ்வரி - கீஸ்வரி, மதுர – கிதுர இப்படி அடுக்கலாம். ஆனா, கிருஷ்ணா என்ற பேர மட்டும் எப்படி பார்த்தாலும் மாத்த முடியாது தெரியுமா?’’
மனதில் ஏதேதோ வார்த்தைகளை போட்டுப் பார்த்துவிட்டு, ‘‘ஆமாடா… நீ சொன்னது கரெக்டுடா கீஷ்டு’’
இருவரும் சிரித்தனர்.
‘‘சார் லைட்டர் இருக்குமா’’ என்று பக்கத்தில் வந்து நின்ற வாலிபர் கேட்டபோது மீண்டும் நினைவுக்கு வந்தார்.
‘‘சாரி யெங்மேன் எனக்கு சிகரெட் குடிக்கிற பழக்கம் கிடையாது’’ என்றார் கிருஷ்ணா.
அதற்குள் அருகில் நின்றிருந்த மற்றொருவர், அவருக்கு லைட்டரை எடுத்து நீட்டினார். புகைப்பிடிக்கக்கூடாது என்ற போர்டை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கு, ஈஸ்வரி கேட்டது நினைவுக்கு வந்தது.
கிருஷ்ணாவின் பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரச் சொல்லியிருந்தாள்.
கோயிலுக்கு விளக்கு போட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி, ‘‘கீஷ்டு தீப்பெட்டி எடுத்திட்டு வர மறந்திட்டேன்டா’’ என்று தலையில் தட்டிக் கொண்டாள்.
தன்  பாக்கெட்டில் இருந்த குழந்தை அழும் சத்தம்போடும் லைட்டரை எடுத்து பொருத்தினான்.
அதைப்பார்த்த ஈஸ்வரி, ‘‘டேய் நீ சிகரெட் பிடிப்பியா?’’ என்று கேட்டாள்.
‘‘அடிப்போடி… இது எங்க மாமா சிங்கப்பூர்ல இருந்து கொண்டு வந்தாரு. வித்தியாசமா இருந்ததால உன்கிட்ட காட்டுறதுக்காக கொண்டு  வந்தா… இப்படி கேட்கிறியே…’’ நொந்துக் கொண்டு கூறினான் கிருஷ்ணா.
‘‘கோச்சுக்காத கீஷ்டு…’’ என்று கூறியபடி, ‘‘இந்த சட்டையில நீ ரொம்ப அழகா இருக்கேடா’’ என்று கூறியபடி, அக்கம், பக்கம் பார்த்துவிட்டு நெட்டி முறித்தாள்.
‘‘நீ வாங்கிக் குடுத்ததுதானே… இருக்காத பின்னே…’’ என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டான் கிருஷ்ணா.
இருவருக்கும் சற்று நின்றுக் கொண்டிருந்த ஈஸ்வரியின் தோழி செண்பகம், ‘‘ஏம்மா.. சீக்கிரம் கெளம்புடிம்மா… யாராது பார்த்துட போறாங்க’’ என்றாள்.
அவளுடன் கிளம்பிச் சென்ற ஈஸ்வரியை பார்த்துக் கொண்டு நின்றான் கிருஷ்ணா.
காற்றின் வேகத்தில், எதிர்ப்புற வாசல் கதவு டமால் என்று அடித்தது. தான் நின்றிருந்த வாசலின் கதவையும், எதிர்க்கதவையும் அடைத்துவிட்டு இருக்கைக்கு திரும்பினார் கிருஷ்ணா.
‘‘அங்கிள் விளக்கை அணைச்சுடலாமா?’’ என்றாள் எதிர் இருக்கையில் இருந்த இளம்பெண்.
‘‘செய்மா’’ என்றார் கிருஷ்ணா.
கீழ்படுக்கையில் அமர்ந்து போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தார் கிருஷ்ணா. தலைக்கு மேல் நீல நிற விளக்கு ஒன்று எரிந்துக் கொண்டிருந்தது.
அந்த நீல நிற விளக்கில்தான், அந்த பிரச்னையே ஏற்பட்டது.
பசுமலையில் இருந்த அந்த பாரில், நீல நிற விளக்கொளியில் கிருஷ்ணாவும் நண்பர்களும் அமர்ந்து, ராணுவத்தில் வேலை கிடைத்த சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
மிக்சர் வாங்கிக் கொண்டு வந்த பாண்டியன், முன்புற சீற சீட்டில் காலை விரித்துக் கொண்டு அமர்ந்திருந்த நபரால் கீழே விழுந்தான். அவன் கீழே விழுந்ததில், அந்தாள் ஊற்றி வைத்திருந்த விஸ்கி டம்ளரும் கீழே விழுந்து கொட்டிவிட்டது.
அந்த ஆத்திரத்தில் அந்த நபர் படாரென்று பாண்டியன் கன்னத்தில் அறைந்துவிட்டார். பாண்டியன் சுருண்டு வந்து விழுந்தான். அவன் அடிக்கப்பட்டு கீழே வந்து விழுந்ததை பார்த்தவுடன், கிருஷ்ணாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. யார் என்ன ஏதுவென்று பார்க்காமல், எழுந்து சென்று அந்த நபரை காலரை பின்னால் இருந்து பிடித்து சடாலென்று கன்னத்தில் விட்டான்.
அப்போதுதான் தெரிந்தது அவர் ஈஸ்வரியின் அக்கா காளீஸ்வரியின் புருஷன் என்று. அடித்த பின்னர்தான் அவரை முழுமையாக பார்த்தான். இதனால், உடனடியாக சாரி கேட்டான். ஆனால், அந்த நபர் சமாதானம் ஆகாததுடன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து இவர்களை தாக்க, அங்கு பெரிய களேபரம் ஆகிவிட்டது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் கஷ்டப்பட்டு பிரித்துவிட்டனர்.
ஆனால், அந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டுதான், தன்னுடைய கொழுந்தியாளை, கிருஷ்ணாவுக்கு கொடுக்க நினைத்த மாமியாரின் திட்டத்தை, குடிகாரன், பொம்பள பொறுக்கி என்று ஏதேதோ சொல்லி தடுத்துவிட்டான். அவனது பேச்சு, ஈஸ்வரியின் தந்தைக்கு வேதவாக்கு. ஈஸ்வரியின் வீட்டில் அன்று நடந்த சம்பவத்தை போனில் சொன்னபோது நொந்துபோனான்.
‘‘மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது’’ என்ற அறிவிப்பை கேட்டுத்தான் முழித்தார் கிருஷ்ணா.
பழைய வேகம், சுறுசுறுப்பு எல்லாம் உடலில் இல்லாதது அவருக்கே அதிசயமாக இருந்தது. மெதுவாக பெட்டியில் பெட்ஷீட்டை எடுத்து வைத்துக் கொண்டு, ஓலா புக் செய்து வெளியே ஸ்டேஷனை வி்ட்டு வெளியே வந்தார். தயாராக நின்றிருந்த காரில் ஏறி, ‘‘‘விளாச்சேரிக்கு போப்பா...’’ என்றார்.
மீண்டும் ஒரு பயணம்.
இருளில் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மரங்கள்,  செடிகள், வீடுகள், விளக்குகம்பங்களை இப்போ வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணாடியை இறக்கிவிட்டிருந்ததால் ஜில்லென்று காத்து உள்ளே வந்து கொண்டிருந்தது.
‘‘டேய் ஒருவேளை நம்ம கல்யாணம் நடக்கலேன்னா என்னடா பண்ணுவே’’ ஒரு கல்யாணத்தின்போது சாப்பிட்டுவிட்டு கைக்கழுவும் சாக்கில் வந்து நின்று, அருகில் நின்றுக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் கேட்டாள்.
‘‘உன்ன பார்க்கவே மாட்டேன். அப்படியே பார்த்தாலும் செத்திடுவேன். கவலைப்படாதேடீ… நம்ம  அப்பாக்கள் பிரண்ட்ஸ்தானே… அதனால நம்ம கல்யாணத்தில எந்த சிக்கலும் இருக்காது. என் புஜ்ஜிய அலேக்கா தூக்கிட்டுப் போயிடுவேன்’’ என்றபடி அவளது முந்தானையில் கையை துடைத்துக் கொண்டான் கிருஷ்ணா.
அவன் வாயில் ஒட்டியிருந்த பருக்கை எடுத்துவிட முயன்றபோதுதான், அவள் கையின் மணிக்கட்டை பார்த்தான். அங்கு புல்லாங்குழல் பச்சை குத்தப்பட்டிருந்தது.
‘‘என் கீஷ்டுவுக்காக…’’ என்று அந்த புல்லாங்குழலுக்கு ஒரு முத்தமிட்டாள் ஈஸ்வரி.
ஊர் நன்கு விரிவாகியிருந்தது.
விளாச்சேரி சவுராஷ்டிரா கல்லூரி முனையில் டிராபிக் ஜாம் ஆகியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையில் வாகனங்கள் வருவதே அரிது. இப்போது டிராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு வாகனங்கள் பெருகியிருந்தன.
வலது பக்கத்தில் நின்றிருந்த மாருதி ஆம்புலன்ஸ், சைரனை போட்டுக் கத்திக் கொண்டிருந்தது.
திடீரென ஆம்புலன்சில் இருந்து ஒரு கத்தல் கேட்டது.
‘‘பாவிமக… குடிகார புருஷனோட கொடுமைகளை எல்லாம் தாங்கிட்டு, நெஞ்சில புதைஞ்சவனையும் மறக்க முடியாம… ஒரு நடைப்பொணமா வாழ்ந்துட்டு வந்தியே… மவராசி… இத்தனை நாளா வச்சிட்டு இருந்த உசுர… இப்போ யாருக்காக விட்டுட்டு இப்படி அவசர, அவசரமா கிளம்பிட்டேடீ… உன் புள்ளக்குட்டிகளை எல்லாம் அநாதைய தவிக்கவிட்டு போயிட்டேயிடீ…’’
அந்தக்குரல் செண்பகத்தினுடையது.
உயிரை விட்டிருந்த ஈஸ்வரியின் கை, ஜன்னல் வழியாக நீட்டிக் கொண்டிருந்தது. அவளது பார்வை, பக்கவாட்டில் காரில் இருந்த கிருஷ்ணாவின் மீது குத்தி நின்றிருந்தது.
ஓலா டிரைவர் கிருஷ்ணா காருக்கு வெளியே கை நீட்டியிருப்பதை கண்ணாடியில் பார்த்துவிட்டு, ‘‘டிராபிக் கிளியர் ஆயிடிச்சு… கைய எடுத்து உள்ளே வைங்க சார்… கிளம்பலாம்’’ என்றார்.
ஆனால், அவர் கூறிய எதுவும் கிருஷ்ணாவின் காதுகளில் விழவே இல்லை. அவரது பார்வை ஆம்புலன்சில் இருந்த ஈஸ்வரியின் கண்ணை பார்த்து நிலைத்துப்போயிருந்தது.
உயிர்க்கூடு உடலில் இருந்து அகன்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், ‘‘கீஷ்டு… நீ இதே மாதிரி வெளியூருக்கு போய் சம்பாதிச்சுட்டு வருவியாம்… நான் புள்ளைங்களோட விளாச்சேரி வளைவிலேயே வந்து வரவேற்பானாம்’’ என்ற ஈஸ்வரியின் குரல் மட்டும் கிருஷ்ணாவின் மூளைக்குள் கேட்டுக் கொண்டிருந்தது.
-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks