23 May 2020

மோகனும், கிருஷ்ணனும்



ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வரும். ‘‘சார் பிளாட் வேணுமா? ஏன் சார் உங்க எம்பிளாயிஸ் பிளாட் வாங்க பெர்மிஷன் ஆவது தரலாமே...? அவங்க ஆர்வமா இருந்தாலும் நீங்க பெர்மிஷன் தர மாட்டேங்கிறாகளாமே...?’’ என்று கேள்விகளில் துளைத்து எடுத்துவிடுவார் அந்த நபர்.

நானே ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அப்புறம் நான் எப்படி முதலாளி ஆக முடியும்? அதுமிட்டுமின்றி நான் மற்றவர்கள் பிளாட் வாங்குவதற்கு அனுமதி தர மறுக்கின்றேன் என்று குற்றச்சாட்டு வேறு.

ஒரு நாள் அந்த நம்பரில் பேசியவரிடம் கேட்டுவிட்டேன்... ‘‘சரி நான் என் எம்பிளாயிக்கு அனுமதி தர்றேன்... அவங்க பேர எல்லாம் சொல்லுங்க...’’ என்றேன்.

‘‘அதுதான் சார்... சூப்ரிடென்ட் மோகன், ஹெட்கிளார்க் கிருஷ்ணன். அவங்களுக்குத்தான் நீங்க அனுமதி தரணும்’’ என்றார் அந்த நபர்.

‘‘சரி நான் அனுமதி தர்றேன். அவங்களுக்கு அட்வான்ஸ் அமவுண்ட இன்னைக்கே சாங்கஷன் பண்ணிடுறேன்... போதுமா?’’ என்றேன்.

‘‘ரொம்ப நன்றி சார்... அவங்க ரெண்டு தடவை வந்து பிளாட்டை பார்த்துட்டு போயிட்டாங்க... நீங்க அனுமதி தராததாலத்தான் அப்படியே நிக்குது.. ரொம்ப நன்றி சார்...’’ என்றார் அந்த நபர்.

அவர் சொன்ன அந்த மோகன், கிருஷ்ணன் என் நண்பர்கள்.

மோகனுக்கு போன் செய்து, ‘‘என்னடா நடக்குது...?’’ என்று நடந்ததை கூறி கேட்டேன்.

‘‘அது ஒண்ணுமில்ல மாப்பிள... ஞாயித்துக்கிழமை போரடிச்சா... எங்கேயாவது ேபாகணும்ல... பேமிலிய பசங்க... வைப் எல்ேலாரும் வெளியே கூட்டிட்டு போகச் சொல்லி கம்ப்பல் பண்ணிட்டு இருந்தாங்க.... அத கிருஷ்ணன் கிட்ட சொன்னேன். அவனுக்கும் அதே டார்ச்சர்தான்னு சொன்னான். சரின்னு ரெண்டு பேரும் தீவிரமா யோசிச்சு செஞ்ச திட்டம்தான் இது...’’ என்றான்.

‘‘என்ன திட்டம்டா...?’’

‘‘அதான் மச்சி... ரியல் எஸ்டேட்காரன்கிட்ட போன் பண்ணி பிளாட் பார்க்க வர்றதா சொல்லுவோம்... குடும்பத்தோட அவங்களே வேன் போட்டு செகல்பட்டு வரைக்கும் கூட்டிட்டு போவாங்க... போறப்போ பிஸ்கெட், கூல்ரிங் கூட குடுப்பாங்க மச்சி.... போய் பிளாட்ட பார்த்து முடிச்சா... மத்தியானம் வடை, பாயசத்தோட சாப்பாடு வேற போடுறாங்க.... சரி ஒரு தடவை போய்ட்டு வந்ததில பிளாட் வாங்கப்போறதா வைப்புக்கு ரொம்ப சந்தோஷம். பசங்களுக்கு ஒரு லாங் டிரிப் போன மாதிரி ஒரு சந்ேதாஷம்... இதுல பாரு மச்சி... நமக்கு ஒரு பைசா செலவில்லை. வாயில வடை சுட்டா போதும்...’’

‘‘அதுக்கு எதுக்குடா ரெண்டு தடவை போய் பார்த்தீங்க...?’’

‘‘ஒரு தடவையோட முடிச்சிடலாம்னுதான் பார்த்தோம்... ஆனா, அந்த ஏஜன்ட் ரொம்ப தொந்தரவு பண்ணினா... வைப் வேற கேட்டுட்டே இருந்தாங்க.... இன்னொரு டிரிப் அடிச்சோம்....’’

‘‘அது சரி ஏஜன்ட் ஏன் எனக்கு போன் பண்றான்...?’’

‘‘அவன் சும்மா எங்கள தொந்தரவு பண்ணிட்டே இருந்தானா... அதுதான் உன்னை முதலாளி ஆக்கி, அவன்கிட்ட நம்பரையும் குடுத்துட்டோம்... நீதான் ஒத்த நிமிஷத்தில போன கட் பண்ற ஆளாச்சே... அதனால அவன்கிட்ட எல்லாம் ரொம்ப பேச மாட்டேன்னு நினைச்சு குடுத்தோம்... பாவி இப்படி மாட்டிவிட்டுட்டீயே....?’’

‘‘அதனால என்ன பேமிலியோட இன்னொரு தடவை டிரிப் போய்ட்டு வாங்க... அவன் போன் பண்ணா... மேலிடத்தில இருந்து ஸ்டாப்புக்கு யாருக்கும் லோன் சாங்கஷன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுறேன்... பாவிகளா உங்க விளையாட்டுக்கு நான் தான் கிடைச்சேனா...’’

‘‘சரி மச்சி... இந்த சண்டே ப்ரீயா... வாயேன் குடும்பத்தோட இன்னொரு பிளாட்ட போய்ட்டு பார்த்து வருவோம்’’ என்றான்.

இப்போ கொரோனாவால் லோன் பாதிக்கப்பட்டுள்ளதாக இருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...ஜே.எஸ்.கே.பாலகுமார்.