19 May 2019

ஆ.கா.சூ சாப்பிடுவோமா?

ஆ.கா.சூ சாப்பிட்டு இருக்கிறீர்களா?
அது தாங்க ஆட்டுக்கால் சூப். இந்த கேள்விக்கு தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், ஓ…ஓ… என்று பதில் கிடைக்கும். தென் மாவட்டங்களில் மாலை நேரத்தில் இது சாலையோர கடைகளில் சுடச்சுட கிடைக்கும்.
ஆ.கா.சூ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சமயலறை சன்னாசியார் (?) சில விதிகளை வகுத்து வைத்துள்ளார்கள்.
அது யாரு அந்த ச.ச. என்று கேட்கப்படாது… விதிகளை சொன்னா கேட்டுக்கணும். கேள்விக் கேட்கக்கூடாது.
ஆ.கா.சூ. எடுத்து வரும்போதே, வாசனை காத தூரத்தில் இருந்து மூக்கை துளைக்க வேண்டும். அதன் நிறம் மருதாணி இலையை கழுவிய தண்ணீரைப்போன்று, பிரவுனா, பச்சையா, மஞ்சளா என்று தெரியாத அளவுக்கு ஒரு கலவையாக, ரசனையாக இருக்க வேண்டும்.
காபி, டீ போன்ற சாதாரண மக்கள் குடிக்கும் பானம் அல்ல இது. உழைக்கும் உயர்த்தட்டு மக்கள் குடிக்கும், உன்னத உற்சாக பானம். அது ஆ.கா.சூ உற்சாக பானம் ஆகும் என்று கேள்விக்கேட்கும், நடுபெஞ்சு நம்பிகளுக்கான பதில், இதை குடித்து முடித்த 10 நிமிடத்தில் உடல் முறுக்கி, உங்களை பயில்வான் போல உணர வைக்கும். அதனால்தான் அதை உற்சாக பானம் என்று ச.ச விதி 324 பிரிவு 1ல் கூறப்பட்டுள்ளது.
சரி வாசனை மூக்கை துளைத்தாகிவிட்டது, நிறம் மனதை கவர்ந்தாகிவிட்டது. அடுத்தது?
தண்ணீர் டம்பளரில் தேங்காய் எண்ணெய் கொட்டினால் எப்படி தனித்தனியாக, திட்டுத்திட்டாக எண்ணெய் தேங்கி நிற்குமோ அதுபோன்று ஆ.கா.சூ.வின் மேல், கொழுப்பு தண்ணீராக உருகி ஆங்காங்கே திட்டுத்திட்டாக மிதக்க வேண்டும். இதுதான் உடலுக்கு உற்சாகம் தரக்கூடியது. அது தரமானதாக இருந்தால்தான் நல்லது. வெறுமனே எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தால், அது ருசியை தராது என்பதுடன், அதை குடிப்பதும் வேஸ்ட். அது ச.ச. சொன்னது அல்ல; அனுபவசாலிகள் சொல்வது.
இப்படி சுடச்சுட கொண்டு வந்து வைக்கப்படும் ஆ.கா.சூ.வை, அப்படியே விசிலடிப்பது போல் உதட்டை குவித்து, ஊதினால் டம்ளரின் மேல்பகுதியில் உள்ள ‘சூ’ கொஞ்சம் சூடு ஆறும். ஒரு நாலைந்து தடவை ஊதிவிட்டு, அதை குடித்தால், அப்படியே, ஜல, ஜல, ஜலவென தொண்டையில் இருந்து உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்வது வரை உணர முடியும். சில நேரங்களில், ஆக மிகுதி ஆர்வத்தினால், சிலர் ஊதாமலேயே, நான் அப்படியே குடிப்பேன் என்ற ரீதியி்ல் வாயில் விட்டுக் கொண்டு, பின்னர் புகையை வெளியே விட்டு ஆசுவாசமாவது உண்டு.
ஆ.கா.சூ.வின் மேற்படலத்தில் இருக்கும் கொழுப்பு, சூடாகவும், அதே நேரத்தில் குடிக்கும் அளவுக்கும் இருந்தால்தான் டேஸ்ட். சூடு ஆறிவிட்டால், குடிக்க முடியாது. அதேசமயம், தார் பாலைவன அளவுக்கு கொதித்தால், தொண்டை எரியும்.
அதனால் முற்றிலும் ஆற்றிவிடாமல், மேற்புறம் உள்ள சூட்டை மட்டும் சூட்டை ஆற்றவே ஊதிக் குடிக்க வேண்டும் என்பது.
இந்த ஜலதரங்கம் கொஞ்சம், கொஞ்சமாக வாயில் இறங்கும்போது, இன்னொரு ஆச்சரியம் சாப்பிடுபவருக்கு காத்திருக்கும்.
அது, சின்ன, சின்ன எலும்புத்துண்டுகள், சின்னவெங்காயம் ஆகியவை தெரியும்.
அதிர்ஷ்டம் இருந்தால், சில நேரங்களில் நல்லியும் ஜாக்பாட்டாக இருக்கும்.
ஜாக்பாட் அடித்தவர்கள், வேண்டுமென்றே எதிரில் இருப்பவர்களை வெறுப்பேற்ற, டேபிளில் ரெண்டு முறை கொத்திவிட்டு, அதை உறிஞ்சும்போது வரும் வெறுப்பு இருக்கிறதே…. முதல் மார்க் வாங்கிய மாணவனை பாராட்டும்போது, வேண்டும் என்றே எங்களைப்போன்ற கடைசி பெஞ்ச் மாணவர்களை  ரெண்டு திட்டு விழும்போது ஏற்படும் மனநிலைதான் இருக்கும். ‘நீ எல்லாம் எங்க உருப்படப்போற…’ வார்த்தைகளைப்போன்று, ‘‘உனக்கெல்லாம் இது வாய்க்காது மாமூ’’ என்ற பாணியில் காது சவ்வு கிழியும் அளவுக்கு உறிஞ்சி சாப்பிடுவார்கள். ம்ம்ம்.. அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அடித்துவிடுவதில்லையே….
ஆனால், 80களில் விற்பனைக்கு வந்த 10 பைசா பால்கோவாவின் நடுவில் இருக்கும் நாலணா எல்லோருக்கும் கிடைக்காவிட்டாலும் எல்லோருக்கும் பால்கோவா உறுதி என்பதுபோல, ஆ.கா.சூ.வை வாங்கிய அனைவருக்கும் நாலைந்து எலும்பு நிச்சயம். அதாவது 100க்கு 35 நிச்சயம்.
சூப்பை குடித்து முடித்துவிடும்போது, எப்படித்தான் அந்த சூடு அவ்வளவு சீக்கிரம் இறங்கிவிட்டது என்பதுபோன்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்படும். சூப் இல்லாத கோப்பை குப்பைக்கு சமம் என்பதுபோல், எலும்புகளை கடித்துக் கொண்டிருக்கும்போதே சூடு மிகவும் குறைந்துவிடும்.
இதனால் சில ச.ச. விதியில் 144 பிரிவை பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
அதாவது ஆ.கா.சூ வந்தவுடன், ஸ்பூனை வாங்கி கீழே தூர் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதாவது பீகார் மாணவர்கள்போல், தேர்வுக்கு முன்பே வினாத்தாளை வாங்கி பார்த்துவிடுவதுபோல், எலும்புகளை முதலில் எடுத்து உள்ளே தள்ளிவிட்டு, அதன்பின்னர் சூப்பை குடிப்பார்கள். ஆனால், இது தவறு என்கிறார் ச.ச.
‘‘அதனதனை அதனதன்போக்கே அதக்குபவர்களே
அச்சரசுத்த அர்த்தமான அசைவாளன்’’ என்கிறார் ச.ச.
இதன் பொருள், அதையும் நான் தானே சொல்லியாக வேண்டும். ஒவ்வொன்றையும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விதி உள்ளதோ, அதன்படி சாப்பிடுபவர்கள்தான் சிறந்த அசைவ பிரி்யர்கள் என்பது இதன் பொருள்.
இந்த விஷயத்தில் நான் சிறந்த அசைவாளன்.
அப்புறம், இந்த ஆ.கா.சூ.வை, ஆக… டேஸ்ட்டுடன் சாப்பிடுவதற்கு என்றே ஒரு சில கடைகள் இருக்கின்றன. இதில் மதுரை பனைமரத்து பிரியாணிக்கடை ஒன்று. மாலை 4 மணிக்கு மேல் இங்கு சென்றால், ஆ.கா.சூ. பிரியர்கள் வரிசைக்கட்டி நிற்பதை காணலாம். ஒரு தடவை நாக்கில் ருசி ஒட்டிக்கொண்டால், பின்னர் அதை விடமாட்டார்கள். எப்போது அந்தப்பக்கம் போனாலும் ஆ.கா.சூ.வை ஒரு கை பார்க்காமல், சாரி… குடிக்காமல் விடமாட்டார்கள்.
அப்படியே மதுரைப்பக்கம் போனீங்கன்னா, ஒரு எட்டு என்னையும் கூப்பிடுங்க… கூச்சப்படாம வந்து சேர்ந்துடுறேன். கூப்பிடாமா போனீங்கன்னா… ச.ச. விதி எண் ‘72 ஏ’யை மீறியதா ஆகிடும். அவ்வளவுதான் சொல்லிப்புட்டேன் பார்த்துக்கோங்க….
இப்படிக்கு ஆ.கா.சூ. வெறியன் ஜே.எஸ்.கே.பாலகுமார்.

07 May 2019

கருப்பட்டி காபி


கருப்பட்டி காபி
‘‘பில்டர் காபி என்பார், இன்டஸ்டன்ஸ் காபி என்பார்
அம்மாவின் கருப்பட்டி காபி சாப்பிடாதோர்’’
இந்த புதுமொழி இப்போதை கிட்ஸ்களுக்கு தெரியாது. ஆனால், மதுரைபோன்ற தென்னகத்தில் பிறந்து வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், மால்ட் எல்லாம் இந்த கருப்பட்டி காபி தான்.
காலையில் விவித பாரதியில், ‘‘பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போல, தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்… ஹேப்பி பெர்த்டே டூ யூ…..’’ என்று கேட்கும்போது, அம்மாவின் குரல் கேட்கும்.
‘‘கண்ணா காபி குடிச்சுட்டு குளிச்சிட்டு ரெடியாகு… பள்ளிக்கூடம் போகணும்ல’’ என்று அம்மாவின் குரல் கேட்கும்.
அதாவது மணி 7 மணி ஆகிவிட்டது என்று அர்த்தம்.
பல் விளக்குவது என்பது, ‘வீக்கான’ பல்லை கொண்டவர்களுக்கான ‘எக்ஸர்சைஸ்’ என்பது என் காலத்து பிள்ளைகளின் காபிக்கு முந்தைய ஆத்திச்சூடி.
படுக்கையை விட்டு எழுந்த கையுடன், அடுக்களைக்கு சென்றால் குண்டு பானையில் முக்கால்வாசிக்கு தயாராக இருக்கும் கருப்பட்டி காபி. இளஞ்சூட்டில் இருக்கும் அதை பெரிய டம்ளரில் ஊற்றி மடக்மடக்கென்று குடித்து, மீண்டும் ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் எடுத்து குடித்த பின்னர்தான், பெரு மூளைக்கு சிறுமூளை ‘ஓகே’ என்று சிக்னல் கொடுக்கும். கிங்பிஷர் 5000 கூட இதற்கு ஈடாகாது.
பாலை பொருத்து க.கா. கெட்டித்தன்மை மாறுபடும். வீட்டுக்கு அன்று உறவினர்கள் யாராவது வருவதாக இருந்தால், க.கா. சற்று ‘நீளமாகி’விடும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஸ்பெஷல். அன்று க.கா. திக்காக சும்மா கமகமவென்று தூக்கலாக இருக்கும். காரணம், அன்று எக்ஸ்ட்ரா ஒரு பாட்டில் பால் வாங்கப்படும் என்பதுதான்.
க.கா. டாக்டர் பிரிப்கிரிஷன் போல், காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை குண்டு பானை நிறைய செய்து வைக்கப்பட்டுவிடும்.
உறவினர்கள் வந்தாலும் சரி, விருந்தாளிகள் வந்தாலும் சரி. அதில் இருந்து ஒரு சில டம்ளர்கள் காலியாகும். மற்றவை எல்லாம் எங்களுக்குத்தான். மதியம் சாப்பாட்டிற்கு பின்னரும் கூட பல முறை, இந்த காபி எனர்ஜி பூஸ்ட்டராக பலமுறை உள்ளே இறங்கும்.
காலையில் செய்வதை விட மாலையில் செய்யப்படும் காபி, சற்று குறைவாகத்தான் இருக்கும். காரணம், பதம் சற்று கூடுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். பள்ளியை விட்டு வந்ததும், இந்த காலத்து பிள்ளைகளுக்கு மாசா, ஸ்பிரைட், கூல் காபி என்றால் எங்களுக்கு குண்டுப்பானையில் காத்திருக்கும் க.கா. தான். ஆனால், அதில் 20 மில்லி குறைந்தாலும், உடன்பிறந்தவர்களுடன் போடும் சண்டை, இரவு சாப்பாட்டுக்காக தொட்டுக் கொள்ள கொண்டு வந்த 100 கிராம் பக்கோடாவில் ஒரு பீஸ் எக்ஸ்ட்ராவாக அவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் வகையில் நீடிக்கும். பல சமயங்களில் அடுத்தநாள், ஒருவருக்கு முந்தி மற்றொருவர் அதே அளவை கூட எடுத்துக் கொண்டு குடிக்கும் வரையிலும் நீடிக்கும்.
க.கா.வுக்கு முக்கிய இன்கிரிடென்ஸான கருப்பட்டி பல ஊர்களில் தயாரிக்கப்பட்டாலும், நெல்லை பக்கத்தில் இருந்து வரும் சிறுவட்டு கருப்பட்டி நன்றாக இருக்கும். இதை விற்பதற்கென்றே மதுரை தேர்முட்டியில் பல செட்டியார் கடைகள் உண்டு.
ஒரு மாசத்துக்கு ஒரு முறை அம்மா, மொத்தமாக கருப்பட்டி பொட்டியை வாங்கிவிடுவார்கள்.
‘‘என்னாப்பா… வட்டு ரொம்ப ஈரமா இருக்கிற மாதிரி தெரியுது’’ என்பது, எப்போதுமே கருப்பட்டியை வாங்கும்போது அம்மா கேட்கும் வழக்கமான டயலாக்.
உடனே கடைக்காரர், ஓலைப்பொட்டியில் இருந்து ரெண்டு கருப்பட்டி வட்டை, இந்த கையில் ஒன்றும், அந்த கையில் ஒன்றுமாக எடுத்து, டமால் என இரண்டின் முனையிலும் அடிப்பார். அது உடையாமல் இறுகி இருந்தால், அதன் முனைகள் மட்டும், இப்போதை நெஸ்கபே காபியின் நிறத்தின் நொருங்கும். உடைந்துவிட்டாலும் பதம் சரியில்லை என்று அர்த்தம். வட்டு சப்பையாகிவிட்டாலும் சரியில்லை என்று அர்த்தம்.
அம்மாவின் ஒரு டயலாக்கில், ஒட்டுமொத்த வட்டின் தரமும், வெளிப்பட்டு விடும். நாசா உத்தரவு கூட இந்த அளவுக்கு துல்லியமாக இருக்காது.
வட்டு சரியாக இருந்தால், ஒலைப்பொட்டி சடம்பு அல்லது தேங்காய் நார் கயிரால் கட்டித்தரப்படும். அதன் மேல் பிளஸ் குறியில் செல்லும் கயிரை நேக்காக விரல்களின் வசத்தில் பிடித்து தோளில் தூக்கிக் கொண்டு வந்தால், 5 பைசா அம்மாவிடம் இருந்து பரிசாக கிடைக்கும். இல்லாவிட்டால், அப்பா ராஜபாளையம் போய்விட்டு வழியில் சிரிவில்லிபுத்தூரில் இருந்து வாங்கிவரும் பால்கோவாவில் போடப்படும் ஆறு துண்டில், அம்மாவின் பங்கு எனக்கு கிடைக்கும்.
அடுத்தது காபித்தூள்.
காபி கொட்டைகளை வாங்கிவந்து வறுத்து, அரைப்பது எல்லாம் எங்கள் காலத்தில் ஓல்டு பேஷனாகிவிட்டது. லேம்பியில் இருந்து பிரியாவுக்கு மாறிவிட்ட பின்னர், இதெல்லாம் சுத்த போராகிவிட்டது.
நேராக நரசுஸ் காபிக்கடைக்கு இரவு 8 மணிக்குள் சென்றால், 10 ரூபாய்க்கு 100 கிராம் காபி பவுடர், டிரேசிங் பேப்பரால் செய்த கவரில் வைத்து அடைத்து, பின்போட்டால் காபியில் கலந்துவிட வாய்ப்புள்ளது என்பதால், அந்தக்காலத்திலேயே முன்னெச்சரிக்கையாக, காகித டேப்பை தண்ணீரில் தடவி ஒட்டிக் கொடுப்பார்கள். 8 மணிக்கு பின்னர் ஒரு நிமிடம் தாமதமாக போனாலும் காபி பவுடர் கிடைக்காது. அவ்வளவு ஸ்டிரிக்ட் நரசுஸ் காபி கடைகளில். இப்போது அதெல்லாம் இல்லை.
கொண்டு வந்த வட்டுகளில் ஒன்றை எடுத்து, கல்லைக் கொண்டு அடித்தால் நான்கு துண்டுகளாக பிரியும். அதை அப்படியே தண்ணீரில் போட்டு பானையில் கொதிக்க வைப்பார்கள். அது நன்கு கரைந்து கொதிக்கும்போது ஒரு மனம் வரும். அப்போது நரசுஸ்சை எடுத்து 2 ஸ்பூன் போட்டு போட்டு மீண்டும் மூடிவைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்தால் காபி மனம், ஊரே மணக்கும்.
அந்த கலவை அப்படியே அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து 5 நிமிடம் ஆறவிட்டால், காபித்தூள் மற்றும் செடிமண் எல்லாம் கீழே தங்கும். இந்த இடைப்பட்ட வேளையில், பாலை இன்னொரு பானையில் காய்ச்சி 1க்கு 5 என்ற ரீதியில் பானையில் எடுத்துக் கொண்டு, டிகாஷன் காபி பானையை ஆட்டாமல், அதன் மேல் உள்ள காபி வடிநீரை மட்டும் பாலில் சேர்க்க வேண்டும். ஆகா… ஆகா… இரண்டு கலக்கும்போது, புதுப்பெண்ணும், மணமகனுக்கு இடையே திருமண மேடையில் இருக்கும் குதுாகலம் குடிப்பவர்களிடமும், கலக்கும் டிகாஷன் மற்றும் பாலிலும் தெரியும்.
டிகாஷனில் கீழே கிடக்கும் வண்டல் தேவையில்லை, அதை ரோஜா செடிக்கு ஊற்றினால் நன்கு பூ கொடுக்கும். இது பாட்டி கொடுத்த டிப்ஸ். ஊற்றிவிட்டு, அப்படியே கொஞ்சம் தண்ணீரை கொட்டி கழுவிக் கொண்டு வந்து கொடுத்தால், பெரிய டம்ளரில் ஆவி பறக்கும் காபி தயாராக இருக்கும்.
இதற்கு முன்பு, ப்ரூவாவது, நெஸ்ஸாவது!
-          குடித்து பழகிய ஜே.எஸ்.கே.பாலகுமார்.


26 April 2019

ஓடிப்போயிரலாமா?


ஓடிப்போயிரலாமா?


‘‘சிவகாமி எப்படி இருக்கே?’’ என்று கூறியபடி உள்ளே  நுழைந்தாள், அவளது தோழி  சந்திரா.
‘‘வாடி சந்திரா… நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?’’ வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த சிவகாமி கேட்டாள்.
‘‘எனக்கென்னடி… நான் என்ன உன்ன மாதிரி சென்ட்ரல் கவர்மென்ட் ஆபிஸ்ல ஆபிசரா… ஏதோ இருக்கேன்…’’ என்று இழுத்தாள் சந்திரா.
‘‘ஆமா… நீ மட்டும்தான் கொறைச்சல்… நீயும் சொல்லிட்டியா… நான் பேருக்குத்தான் ஆபிசர். வீட்டுல உன்னை மாதிரி நானும் ஹவுஸ் வொய்ஃப் தானே’’
‘‘ஆமாடி… ஏன் ஒரு வேலைக்காரிய வச்சுக்கிட வேண்டியதுதானே… இந்த வேலைகளை எல்லாம் நீ ஏன் செய்றே?’’
‘‘ஆமா… இங்க என்னத்த வாழுது… வாங்குற சம்பளத்தில பாதி மாமனார் கெழத்தோட மருந்து செலவுக்கு போயிடுது… அப்புறம் புதுசா வாங்குன லேண்ட்டுக்கு டியூ… பொண்ணு ஸ்கூல் பீஸ்… இப்படி சம்பளத்தில எல்லா கரைஞ்சிடுது… அப்புறம் எங்க வேலைக்காரிய வச்சுக்கிறது? மாசத்துக்கு ரெண்டு வாட்டி பியூட்டி பார்லர் போறதுக்கு கூட இங்க எண்ணி, எண்ணி வைக்க வேண்டியிருக்கு.  உனக்கு என்ன…  உன் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர். அவர் சம்பாதிக்கிறார் நீ என்ஜாய் பண்றே’’
உள் ரூமில் இருந்து இருமல் சத்தம் வந்தது.
‘‘உள்ள யாரு…  உன் மாமனாரா?’’ சந்திரா கேட்டாள்.
‘‘ஆமா… அந்த கெழம்தான். இருமி, இருமி உயிர வாங்குது…’’
இருவரும் தங்களது அருமை,  பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்க… உள் ரூமில் இருந்தபடி காதில் விழுந்த அவர்களின் பேச்சை, கேட்டும், கேட்காமல் புத்தகம் ஒன்றை படித்தபடி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தார் ராகவன்.
பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்தது. ஒன்றரை மணியாகியும் இன்னமும் சாப்பாட்டை செய்யும் பணிகளில் எதுவும் மும்முரம் காட்டாமல் மருமகள், தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததால், பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை குடித்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்தார். வழக்கமாக ஒரு மணிக்கே அவர் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, மாத்திரையை போட்டுக் கொண்டுவிடுவார்.
இன்று சனிக்கிழமை. மருமகளுக்கு விடுமுறை. ஆனால், மகன் சுந்தருக்கு வேலை நாள். அவனுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. மற்ற நாட்களில் காலையிலேயே சாப்பாடு ஆகிவிடுவதால், தானே போட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவார். ஆனால், சனி, ஞாயிறு மருமகளுக்கு விடுமுறை என்பதால், வீட்டில் இருப்பதால், இரு நாட்களிலும் மருமகள் செய்யும்  நேரம் வரை சாப்பாட்டுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.
இன்று அதிசயமாக 12 மணிக்கே சாப்பாட்டு வேலையை தொடங்குவதற்கான அறிகுறிகளாக பாத்திரங்கள் புழங்கும் சப்தம் கேட்டதால், சரியான நேரத்துக்கு தன்னால் மாத்திரை சாப்பிட்டு விடலாம் என்று நினைத்திருந்தார் ராகவன். ஆனால், மருமகளின் தோழி நுழைந்த சப்தத்தை கேட்டதுமே, அவருக்கு என்றுமில்லாமல், வயிறு முன்கூட்டியே பசி, பசி என்று அலற ஆரம்பித்தது.
ஹாலில் இன்னமும் சுவாரசியமாக தோழிகளின் பேச்சு ஓடிக் கொண்டிருந்தது.
மணியை பார்த்தார், இரண்டாகி 5 நிமிடம் ஆகியிருந்தது.
இப்போது போய் மருமகளிடம் சாப்பாட்டை கேட்கவும் முடியாது. அப்படியே கேட்டாலும், தன் மானத்தை வாங்கிவிட்டதாக வீட்டை ரெண்டாக்கிவிடுவாள்.
பொறுக்க முடியாமல் இன்னொரு முறை தண்ணீர் குடிக்கலாம் என்று பாட்டிலை எடுக்க முயன்றபோது, கைதவறி கீழே விழுந்தது. அது சில்வர் பாட்டில் என்பதால் விழுந்த வேகத்தில் பெரும் சப்தத்தை எழுப்பியது.
‘‘இந்த கெழத்துக்கு இதே வேலை… நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி வைக்கிற பொருள எல்லாம், இப்படி பொறுப்பில்லாம கீழே போட்டு உடைக்குது. இரு நான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்துடுறேன்’’ என்ற கூறிவிட்டு எழ முயன்றாள் சிவகாமி.
‘‘சரிடி… நீ போய் பாரு… நானும் வந்து ரொம்ப நேரமாச்சு… நானும் கிளம்புறேன்… பொண்ணு எங்கே?’’ என்று கேட்டாள் சந்திரா.
‘‘அவ வெளியே விளையாடிக்கிட்டு இருக்கா’’
‘‘சரி மத்தியானம் பார்லர்ல சந்திப்போம்’’ என்று அவளுக்கு விடைக் கொடுத்துவிட்டு, உள்ளே வந்தாள் சிவகாமி.
கீழே விழுந்த பாட்டிலை எடுத்து,  தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார் ராகவன்.
‘‘இதே வேலையா போச்சு… எதையாவது போட்டு உடைச்சுக்கிட்டே இருக்க வேண்டியது… ஏன் தான் என் உயிரை வாங்குறீங்களோ…  எங்கேயாவது ஹோமுக்காவது போய் தொலைய வேண்டியதுதானே…’’ எட்டிப்பார்த்தவிட்டு,  தீக்கங்குகளைவிட மோசமான வார்த்தைகளை கொட்டினாள் சிவகாமி.
காதில்  விழுந்த வார்த்தைகளை கேட்டபோது, ராகவனால் கண்களில் இருந்து தண்ணீரை கொட்ட முடிந்ததே தவிர… இயலாமை, வயது காரணமாக பேச வார்த்தை வரவில்லை. அந்த நேரத்தில்தான் பேத்தி லாவண்யா உள்ளே நுழைந்தாள். தாத்தாவை அம்மா திட்டும் வார்த்தைகள் கேட்டு,  அவளுக்கு பழகிப் போயிருந்தன.
அன்பாக அரவணைத்து, தனக்கு பிடித்த கதைகளை சொல்லும் தாத்தாவை அம்மா திட்டுவது அவளுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். ஆனால், அம்மாவின் குணம் அவளுக்கும் தெரிந்ததுதானே. அதனால் சத்தமில்லாமல், தாத்தாவின் கட்டிலில் உட்கார்ந்து, ‘‘தாத்தா அழாதே’’ என்று கூறினாள்.
‘‘இல்லடா லல்லி  செல்லம்… தாத்தா அழல… மேல இருந்து தூசி விழுந்துடுச்சு… அதுதான் கண்ணுல இருந்து தண்ணீ வருது…’’ என்று சமாளித்தார் ராகவன்.
‘‘நீ சமர்த்து தாத்தா… நீயும் என்னை மாதிரியே ஆயிட்டே… நானும் அம்மா திட்டும்போது இப்படித்தான் அழமாட்டேன். ஆனா கண்ணுல இருந்து தண்ணீ மட்டும் வருது தாத்தா’’ என்று தன் பிஞ்சு மொழியில் கூறினாள் லாவண்யா.
அவளை  உச்சிமுகர்ந்து முத்தமிட்டு, ‘‘சரி செல்லம்… நீ போய் படி…’’ என்று கூறிவிட்டு, புத்தகத்தில் ஆழ்ந்தார்.
சுவாரசியமாக படித்துக்  கொண்டிருந்தபோது, டேபிளில்  நங்கென்று தட்டு வைக்கப்படும் சத்தம் கேட்டது. மருமகள்தான். தட்டை வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் போய்விட்டாள்.
தட்டைப்பார்த்தார். தனக்கு பிடிக்காத உருளைக்கிழங்கு பொடிமாஸ்,  உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத கருணைக்கிழங்கு காரக்குழம்பும், ரசமும் இரு கிண்ணத்தில் இருந்தன.
நேரத்தை பார்த்தார். 3 ஆகியிருந்தது. இனியும் தாங்க முடியாது என்பதால், ரசத்தை மட்டும் ஊற்றிக் கொண்டு முழுங்கினார். தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது. தண்ணீரை குடித்து சமாளித்தார். மிச்சம் வைத்தால் அதற்கும் திட்டு விழும். அதனால் மீதமிருந்த எல்லாவற்றையும் சேர்த்து ஜன்னல் வழியாக தூக்கிப்போட்டார். பேஷினில் தட்டை கழுவி ஹாலில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, மீண்டும் தன் அறையில் முடங்கினார்.
5 நிமிடம்தான் ஆகியிருக்கும்.
கிரவுண்ட் புளோரில் இருக்கும் புஷ்பம் கத்திக் கொண்டே உள்ளே வந்தாள்.
‘‘ஏய் சிவகாமி… நீ ஆபிசர்ங்கறதுக்காக எங்க வீட்டு பின்னாடியா மிச்சத்தை வீசுவியா… எங்கேடி இருக்கே…’’ என்று ஹாலில் நின்று கத்தினாள்.
உள்ளே இருந்து வெளியே வந்த சிவகாமி, ‘‘என்னக்கா என்ன ஆச்சு?’’ என்று கேட்டாள்.
‘‘ஏண்டி… உங்க வீட்டுல சாப்பிட்ட மிச்சத்தை எங்க வீட்டுக்கு  பின்னாடி ஏன் வீசுற? என்ன கொழுப்பாகி போச்சா…’’ என்று பத்து வீட்டுக்கு கேட்கும்படி கத்தினாள்.
‘‘நாங்க ஒண்ணும் வீசலேய்யக்கா…’’ என்றாள் சிவகாமி.
‘‘ஏண்டி கீழே வந்து விழுந்த மிச்சத்தை என் பசங்க பார்த்துட்டு, மேல பார்த்தப்போ உங்க வீட்டுல இருந்துதான் கை தெரிஞ்சிருக்கு. அவங்க பார்த்துட்டு இருக்கிறப்போவே… இன்னொருதடவையும் மிச்சம் வந்து விழுந்திருக்கு’’
நிலவரத்தை புரிந்து கொண்ட ராகவன் ஓடி வந்தார்.
‘‘அம்மா…   அம்மா…  என் மருமக எதையும் வீசலமா… இந்த பாவி தான் சன்ஷேடுல விழும்னு நினைச்சு வீசிட்டேன்மா… என்னை மன்னிச்சிடுங்க…’’  என்று இருகரம் குப்பி மன்னிப்பு கேட்டார்.
ஏற்கனவே ராகவனுக்கு கிடைக்கும் மரியாதை, அந்த பிளாட்டில் இருந்த அனைவருக்குமே தெரியும். ஒரு காலத்தில் பிளாட் செகரட்டரியாக கம்பீரமாக வலம் வந்தவர். அவர் செகரட்டரியாக இருந்தபோதுதான், புஷ்பத்தின் கணவர் வீடு வாங்கி வந்தார். அந்த மரியாதை கொஞ்சம் இன்னமும் மிச்சம் இருந்தது.
அந்த மரியாதையில் பின்வாங்கினாள் புஷ்பம். ‘‘சார் இந்த மாதிரி எல்லாம் கீழே வீசாதீ்ங்க…’’ என்று எச்சரித்துவிட்டு அகன்றாள்.  அதற்குள் பக்கத்து பிளாட்காரர்கள் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டதில்,  சிவகாமிக்கு அவமானமாக போய்விட்டது.
‘‘யோவ்… நீ எல்லாம் மனுஷனா? கஷ்டப்பட்டு சமைச்சுக் குடுத்தா… அதை கீழே கொட்டியிருக்கே… உனக்கு எல்லாம் மானம், ரோஷம்னு எதுவும் கிடையாதா? நீ எல்லாம்  எதுக்கு இன்னும் உயிரோட இருக்கே… ஆபிஸ்ல நான் நடந்தா எதுக்க வர்றதுக்கே பயப்படுவாங்க… அப்படிப்பட்ட என் மானத்தை எல்லார் முன்னாடியும் வாங்கிட்டியே... உன் பைய கட்டிக்கிட்டு வந்து நான் படுற பாடு போதாதுன்னு, இப்போ அக்கம், பக்கத்தில எல்லாம் மானத்தை வாங்கிட்டியே… நீ எல்லாம் இருந்து யாருக்கு என்னப் பண்ணப்போற… செத்து தொலைக்க வேண்டியதுதானே?’’ ஊரே கேட்கும் அளவிற்கு கத்தினாள் சிவகாமி.
இதுவரை, ஒருமையை மட்டும்தான் அவள் பயன்படுத்தவில்லை. இப்போது அதையும் பயன்படுத்திவிட்டாள். என்ன பதில் கூறுவது என்று தெரியாமல், ‘‘என்னை மன்னிச்சுடும்மா…’’ என்று கூறிவிட்டு அறைக்குள் நுழைந்தார்.
ஆனால், தொடர்ந்து கேட்கக்கூடாத வார்த்தைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தாள் சிவகாமி.
அரைமணி நேரம் ஆகியிருக்கும். ஹாலில் இருந்து மீண்டும் மெதுவாக அறைக்குள் எட்டிப்பார்த்தாள் லாவண்யா.
கண்ணில் முட்டிக் கொண்டு வந்துக் கொண்டிருந்த கண்ணீரை அவளுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டார் ராகவன்.
‘‘வாடா செல்லம்…’’
‘‘தாத்தா உனக்கு கொஞ்சம் கூட அறிவு கிடையாது’’
‘‘ஏண்டா…  செல்லம்  இப்படி சொல்றீங்க?’’
‘‘அம்மா இவ்வளவு திட்டுதில்ல… நீ போடி உன் வேலைய பார்த்துட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே தாத்தா?’’
‘‘அம்மா பெரியவங்க இல்ல… அவங்கள எல்லாம் அப்படி சொல்லக்கூடாதும்மா’’
‘‘அப்போ… நீயும் தானே பெரியவங்க… உன்னை மட்டும் அம்மா திட்டுது’’
‘‘புஷ்பம் ஆன்ட்டி வந்து திட்டினாங்கல்ல… அதனால அம்மாவுக்கு கோபம் வந்து நாலு வார்த்தை பேசிட்டாங்க… அதை எல்லாம் பெருசு பண்ணக்கூடாதும்மா… தாத்தாவும் தப்பு பண்ணியிருக்கேன்ல’’
‘‘தாத்தா அன்னைக்கு அம்மாவும் கூடத்தான். ஜன்னல் வழியாத்தான் மிச்ச இட்லிய தூக்கிப்போட்டாங்க… அப்போ அவங்களையும் திட்டணும்ல?’’
‘‘அம்மா தெரியாம பண்ணிருப்பாங்கடா… தாத்தா தெரிஞ்சே பண்ணேண்ல… அதனாலதான் இந்த திட்டு’’
‘‘போ …  தாத்தா…  நீ எப்பவும் இப்படித்தான் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிப்பேசுற… நான் உன்கிட்ட சிக்ஸ்த் டேபிள் வரைக்கும் நல்லா ஒப்பிச்சேன்ல… ஆனா… அம்மாகிட்ட ஒப்பிக்கிறப்போ… பயத்தில தப்பு வந்திடுச்சு… அதுக்காக என்னையும் போட்டு அடி, அடின்னு அடிச்சிட்டா… அவ பேட் மம்மி…அப்பாவும் அவள எதுவும் கேட்கிறதில்ல’’
‘‘இல்லடா கண்ணு… நீ ஸ்கூல்ல போய் டீச்சர் கிட்ட அடிவாங்கக்கூடாதுன்ற நல்லெண்ணத்தில,  நீ நல்லா படிக்கணும்கிறதுக்காக அம்மா உன்னை அடிச்சிருக்காங்க… அதை தப்பாக எடுத்துக்க கூடாது செல்லம்’’
‘‘போ தாத்தா… நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுற’’ என்று அன்று அடித்த அடிக்காக தாத்தாவிடம் இன்று அழுதாள் லாவண்யா.
‘‘என் குட்டிம்மால்லே… நீங்க ரொம்ப தைரியமானவங்க இல்ல அழக்கூடாது’’ என்று கண்ணீரை துடைத்துவிட்டார் ராகவன்.
‘‘தாத்தா… என் கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்கு… உன்கிட்ட ஹண்ட்ரட் ருபீஸ் இருக்குல்ல… நாம ரெண்டு பேரும், இந்த வீட்டை விட்டு ஓடிப்போயிருவோம் தாத்தா… நம்மகிட்ட இருக்கிற ருபீஸ்ல பெரிய வீடு ஒண்ணா வாங்கி நீயும்,  நானும் இருக்கலாம். பேட் மம்மிய சேர்க்க வேணாம். டேடி மட்டும் வந்தா ஒரு ரூம் குடுத்திடலாம்… சரியா?’’ என்று பெரிய, பெரிய, வார்த்தைகளை கூறினாள்.
‘‘உதைபடுவீங்க… இப்படி எல்லாம் பேசக்கூடாது செல்லம்’’
‘‘நீ ரொம்ப கோவர்ட் தாத்தா… போ…’’ என்று கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டாள் லாவண்யா.
அவளுடைய கோபம் உள்ளுக்குள் பயத்தைதான் ஏற்படுத்தியது ராகவனுக்கு.
சற்று நேரத்தில் லாவண்யாவை அழைத்துக் கொண்டு பார்லருக்கு கிளம்பினாள் சிவகாமி. வீட்டை வெளியே பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் வழியாகக உள்ளே வீசிவிட்டு சென்றாள். வழக்கமாக அவள் செய்வதுதான்.
சாவியை எடுத்து கொக்கியில் மாட்டிவிட்டு, சோபாவில் கிடந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து மீண்டும் படிக்க ஆரம்பித்தபோதுதான் அந்த விளம்பரம் அவரது கண்ணில் பட்டது.
சற்று நேரம் அதையே படித்துக் கொண்டிருந்தார்.  பின் ஒரு முடிவுக்கு வந்தவராக ஒரு வெள்ளை பேப்பரில் எழுத ஆரம்பித்தார்.
‘‘அன்புள்ள மகன்  சுந்தருக்கு,
ஆசிர்வாதத்துடன் அப்பா எழுதிக் கொள்வது. நீ சிவகாமியை காதலித்து திருமணம் செய்து வந்தபோது,  உன் மணவாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனால், அதிர்ஷ்டவசத்தால் புஷ்பத்துக்கு  உயர் பதவியில் வேலை கிடைத்துவிட, அவளது உயர்வகுப்பு தோழிகளின் நட்பும், அதிகார பலமும் சேர்த்து அவளுக்கு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்த உன் மீதான காதல் சற்று குறைந்து, தனக்கு கீழே சம்பாதிப்பவன் என்பதுபோன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்திவிட்டது. அதுமட்டுமின்றி, வசதியான வீட்டில் இருந்து வந்த சிவகாமிக்கு, நடுத்தர குடும்பத்தின் கஷ்டங்கள் பழக்கப்படாதது. இதனால் அவளது  இயலாமை உன் மீதும் என் மீதும், ஏன் குழந்தை மீதும் பாய்கிறது. நான் வீட்டில் இருப்பதால்தான் உனக்கு கூடுதல் செலவு. அதனால் நான் வேலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்துள்ளேன். வேலை என்றால், சாதாரண வேலை இல்லை. சர்வதேச மருந்து நிறுவனம் ஒன்று, என்னைப்போன்ற வயதானவர்களுக்கு வரும் நோய்களை கண்டறிவதற்காக வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ளப் போகிறது. அதற்கு தன்னார்வலர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்தது. குறிப்பாக ஆதரவற்றவர்கள் தேவை என்று கூறியிருந்தது.
உன் அம்மா போன பிறகு, நான் நிராதரவாகத்தானே இருக்கிறேன். அதனால் அந்த நிறுவனத்துக்கு போன் செய்து பேசினேன். அவர்கள் உடனே கிளம்பி வரச் சொல்லிவிட்டார்கள். அவர்களே வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்வார்கள். நோய் வந்தால், அவர்களே மருந்தும் தருவார்களாம். இதற்காக ஐந்து லட்சம்  ரூபாய் தருவார்களாம். அதை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.
உனக்கு எந்த கஷ்டமும் இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த வீட்டை வாங்கும்போதே உன் பெயரில்தான் வாங்கினேன். அதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் வீட்டை நீ அனுபவிக்கலாம். இதற்கான கடனில் ஒரு லட்சம் மட்டும் பாக்கி இருக்கிறது. அதை கட்டிவிட்டு,  மீதமுள்ள பணத்தில் லாவண்யா பெயரில் டெபாசிட் போட்டு வைத்துக் கொள். திருமணத்தின்போது உனக்கு உதவும். இனி என்னால் உனக்கு எந்த செலவும் இருக்காது. உன் மனைவிக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. எனக்காக நீயும் மனைவியிடம் பேசி, மனஸ்தாபத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. தயவு செய்து  என்னை தேடி அலையும் வேலையை செய்யாமல், உன் மனைவி,  குழந்தையுடன் அன்பான வாழ்க்கை வாழு.
லாவண்யா நன்கு படிக்கும் குழந்தை. அவளுக்கு பயம் வந்தால் திக்குகிறது. அவளிடம் அன்பாக பேசி படிக்க வை. அவள் நல்லபடியாக வருவாள். இனி என்னால், உனக்கும், சிவகாமிக்கும் எந்த சண்டையும் வராது. எனது மனமுவர்ந்த ஆசிர்வாதங்கள்!
அன்புடன்,
ராகவன்’’
கடிதத்தை முடித்துவிட்டு ஒரு முறை படித்தார். அதை அப்படியே மடித்து டேபிளில் வைத்துவிட்டு, ஒரு சின்ன பையில் தன்னுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் ராகவன்.


10 March 2019

நுாறு சாமிகள் இருந்தாலும்…


‘‘போம்மா எப்ப பார்த்தாலும் நீ இப்படித்தான் சொல்லுறே…’’ புலம்பினான் குமரன்.
‘‘இல்லப்பா… 20 தேதி ஆயிடிச்சில்ல… அம்மாவுக்கு இப்ப யாரும் பணம் தர மாட்டாங்கப்பா… உனக்கு இன்னொரு நாளைக்கு நல்ல நெய், முந்திரி போட்டு சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் செஞ்சுத்தர்றேன் என்னா…?’’ ஆற்றாமையுடன் கூறினாள் வீட்டு வேலை செய்யும் சிவகாமி.
எலக்ட்ரீஷியனா வேலை பார்த்து வந்த புருஷன்காரன் பிரபாகர், ஒரு விபத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்துபோக, அன்றிலிருந்து ஆரம்பித்தது கஷ்டக்காலம். 4 வயது குழந்தையுடன் தனியாக நின்ற சிவகாமியை உறவினர்களும் கைவிட, வேறு வழியின்றி வீட்டு வேலை செய்து குழந்தையையும் தன்னையும் பாதுகாத்து கொண்டு வருகிறாள். ஒரு நாள் உடம்புக்கு முடியாவிட்டாலும் கூட, சம்பளம் கிடைக்காது. அதனால் விலா எலும்பே ஒடிகிற அளவுக்கு சுண்டி வலித்தாலும், வேலைக்கு போவதை வழக்கமாகிக் கொண்டுவிட்டாள்.
இப்போது குமரன் 4வது படிக்கிறான். பெரிய அளவில் இல்லாவிட்டால் கூட ஒரு சாதாரண மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தாள் என்றாலும் கூட, செலவு பிய்த்துக் கொண்டு போனது. வீட்டில் இருந்த கொஞ்சநஞ்ச தங்கமும் இந்த 3 வருஷத்தில பீ்ஸ் கட்ட சரியாகிவிட்டது.
குமரனுக்கு நாளைக்கு  பிறந்தநாள். வழக்கம்போல் அவன் கேட்பானே என்று கூடைப்பிண்ணிக் கொடுத்ததில் கிடைத்த தொகை மூலம் ஒரு ரெடிமேட் வெள்ளை சட்டை வாங்கியிருந்தாள். யூனிபார்முக்கு ஆச்சு, புது சட்டையும் ஆச்சு என்ற ஒரு ஆறுதல்தான்.
குடும்ப கஷ்டம் தெரியுமளவுக்கு குமரனுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை.
‘‘போன வருஷம் ஒரு தடவை, அய்யர் மாமி வீட்ல இருந்து கொண்டு வந்த பாரு…. அந்த மாதிரி சர்க்கரை பொங்கலும், வெண்பொங்கலும்தானே கேட்கிறேன். பர்த்டே அன்னைக்கு என்ன ஸ்பெஷல் வீட்டுலன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் கேப்பாங்க… நீ என்னடான்னா… நாளைக்கும் அதே பழைய கஞ்சின்னு சொல்லுறியே… போம்மா என் கூட பேசாத….’’ என்று கண்ணில் நீருடன் படுக்கையில் தலையணையை சற்று போட்டுக் கொண்டு படுத்துவிட்டான்.
அவன் கண்ணில் லேசாக துளிர்த்த நீரைப்பார்த்த உடனேயே பக் என்றாகிவிட்டது சிவகாமிக்கு.
‘‘இறைவா இந்த பச்சப்புள்ளை கேட்கிற ஒரு சாதாரண உணவை கூட செஞ்சுக்குடுக்க முடியாத நிலைக்கு என்னை தள்ளிட்டீயே… நான் என்ன  செய்வேன்… கையில இருக்கிறதே, 200 ரூபாய்தான். இன்னும் பத்து நாளைக்கு இதை வச்சு சமாளிக்கணுமே…’’ மனதில் ஏற்பட்ட ஆற்றாமை கண்ணில் நீராக வழிந்தது.
துடைத்துக் கொண்டே, அரிசி பானையை எடுத்துப் பார்த்தாள். 10 நாளைக்கு வருமா, வராதா என்ற அளவில் ஒட்டிக்கிடந்தது ரேஷன் அரிசி.
‘‘ரேஷன் கடையில காலையில கூட கேட்டேனே, ஒரு கிலோ பச்சரிசி போடுய்யான்னு… மாசக்கடைசியில எல்லாம் போட முடியாது போ… போன்னு விரட்டிட்டானே… காலையில எழுந்தவுடனே புள்ளய எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலையே… இறைவா… அடுத்த ஜென்மத்திலாவது புள்ளைங்க கேட்கிற எல்லாத்தையும் ஆக்கிப்போடுற அம்மாவா படச்சிடு… இப்படி கொழந்த கேட்கிறத கூட வாங்கத்தர முடியாத ஜென்மமா படச்சுடாதே…’’ மனதில் பொருமினாள்.
இங்கும், நடந்து யோசித்தும் எந்த யோசனையும் பிடிபடவில்லை. குமரனுக்கு அருகில் வந்து அவனுக்கு போர்த்திவிட்டு, தனக்கு போர்த்திக் கொண்டு படுத்தாள்.
ஆனால், தூக்கம்தான் வரவில்லை.
அப்படி படுத்துக் கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சுவற்றில் காற்றுக்கு ஆடிக்கொண்டிருந்த காலண்டர் கண்ணில் பட்டது. மனதில் சட்டென மின்னல் தோன்றியதுபோல், பளிச்சென்று யோசனை தோன்றியது. நிம்மதியாக தூங்கினாள்.
காலையில் 5 மணிக்கு எல்லாம் முழிப்பு வந்து எழுந்துக் கொண்டாள். அவசர, அவசரமாக வீட்டை பெருக்கி குளித்துவிட்டு கிளம்பினாள்.
திருவல்லிக்கேணியில் இருந்து ரயில் பிடித்து மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வந்து இறங்கினாள். காலண்டரில் பார்த்ததுபோன்றே சாய்பாபா அமர்ந்திருந்தார்.
தரிசனம் முடிந்துவிட்டு, பிரசாதத்துக்கு வரிசையில் நின்றாள். வியாழக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சர்க்கரைப் பொங்கலை, குழந்தைக்கும் என்றுக் கூறி ரெண்டு தொன்னை வாங்கிக் கொண்டாள்.
அதை அப்படியே பையில் வைத்துக் கொண்டு காத்திருக்க ஆரம்பித்தாள். எதிர்பார்த்ததுபோலவே, எட்டு மணிக்குப்பின்னர் சர்க்கரைப் பொங்கலை நிறுத்திவிட்டு வெண்பொங்கல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதை விநியோகிக்க வேறு ஆள் உட்கார்ந்ததும், சிவகாமிக்கு தோதாக போய்விட்டது. மீண்டும் வரிசையில்போல் ரெண்டு தொன்னை வாங்கிக் கொண்டாள்.
இது குழந்தைக்கு பத்தாதே என்ற எண்ணம் தோன்றியது.
மீண்டும் ஒரு முறை வரிசையில் நின்று வாங்கப் போனாள். விநியோகித்து கொண்டிருந்த ஆள் அடையாளம் கண்டுக் கொண்டுவிட்டான். ‘‘ஏம்மா… இது பிரசாதம்னு நினைச்சியா… டிபன்னு நினைச்சியா… ஒரு தடவைதான் வாங்கணும்… போம்மா… போம்மா…’’ என்று விரட்டினார்.
அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் தன்னையே பார்க்கவே கூனி, குறுகிவிட்டாள்.
பின்னால் வந்த ஒரு பெண் ரெண்டு தொன்னையில் பொங்கலை வாங்கிக் கொண்டு, முன்னே தளர்ந்து சென்றுக் கொண்டிருந்த சிவகாமியிடம் வந்தாள்.
‘‘இந்தாம்மா… இந்த பொங்கலையும் வாங்கிக்கோ…’’ என்று ரெண்டு தொன்னையையும் நீட்டினாள் அந்த பெண்.
‘‘வேண்டாம்மா…’’ என்று சங்கோஜப்பட்டாள் சிவகாமி.
‘‘நிச்சயமா நீ பொங்கலை உனக்காக வாங்கல… அது மட்டும் நல்லாத்தெரியுது… உன் குழந்தைக்கோ, இல்லாட்டி வேறு யாருக்கோத்தான் வாங்குறே… உனக்கு உதவுறதில எனக்கு சந்தோஷம் தான். வாங்கிக்கோம்மா… எந்த சங்கோஜமும் வேண்டாம்…’’ கையில் திணித்தார் அந்த பெயர் தெரியாத சகோதரி.
அப்போதைக்கு அந்த பெண் தெய்வமாக தெரிந்தார்.
‘‘ரொம்ப நன்றிம்மா…’’ மனதார கூறினாள் சிவகாமி.
பொங்கலை பையில் வைத்துக் கொண்டு அவசர, அவசரமாக மீண்டும் ரயில் பிடித்து திருவல்லிக்கேணி வந்து வழியிலேயே குப்பம்மாள் கடையில் ஒரு சாம்பார் பாக்கெட்டையும், ஒரு கப் டீயையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.
மணி எட்டே முக்கால் ஆகிக் கொண்டிருந்தது.
சர்க்கரை பொங்கலையும், வெண் பொங்கலையும் பாத்திரத்தில் வைத்துவிட்டு, டீயை டம்ளரில் ஊற்றிக் கொண்டு சந்தோஷத்துடன் குமரனை எழுப்பினாள்.
‘‘என்னம்மா… டீ எல்லாம் வாங்கியிருக்கே…?’’ ஆச்சரியத்துடன் கேட்டான்.
‘‘உனக்கு பெர்த்டேல்லடா செல்லம்… அதனால அம்மா போய் வாங்கி வந்தேன்’’
டீயை குடித்துவிட்டு, குளித்துவிட்டு வந்தவனிடம், ‘‘அப்பா படத்தை கும்பிட்டுட்டு புது சட்டை போட்டுக்க கண்ணு’’ என்றாள்.
‘‘சரிம்மா… ’’ என்று துள்ளிக்குதித்து துண்டை தூக்கி எறிந்துவிட்டு, அவசர, அவசரமாக அப்பா படத்துக்கு கும்பிடு போட்டுவிட்டு, புது சட்டையை போட்டுக் கொண்டு வந்து சிவகாமி முன் வந்து நின்று, ரஜினி ஸ்டைலில் ‘‘இது எப்படி இருக்கு?’’ என்றான்.
அப்படியே… அவனை இரு கைகளாலும் தடவி நெட்டி முறித்தாள் சிவகாமி. ‘‘என் செல்லம் எது போட்டாலும் சூப்பர்தான்பா…’’
‘‘வா… வா… சாப்பிட்டுட்டு ஸ்கூலுக்கு போகணும்ல’’
தயாராக வைக்கப்பட்டிந்த தட்டின் முன் உட்கார்ந்தாள்.
சிவகாமி முதல் சட்டியில் இருந்த, சர்க்கரைப் பொங்கலை எடுத்து வைத்தாள்.
‘‘அட்ரா சக்கன்னானா… எப்படிம்மா… நேத்து என்கிட்ட காசு இல்லேன்னு சொன்னே…’’
‘‘எப்படியோ வந்திடுச்சு… சாப்பிடுப்பா…’’ என்றாள்.
‘‘அட்டகாசம்மா… என்னா நெய்… என்னா நெய்… சூப்பர்ம்மா…’’
அடுத்து வெண் பொங்கலை எடுத்து வைத்தாள்.
சாம்பாரை ஏற்கனவே பாக்கெட்டில் இருந்து எடுத்து, கிண்ணத்தில் ஊற்றி வைத்திருந்தாள். அதையும் எடுத்து ஊற்றினாள்.
‘‘வெண் பொங்கலும் சூப்பர்ம்மா…’’ சப்புக் கொட்டி சாப்பிட்டான்.
மகன் சாப்பிடுவதை ரசித்து பார்த்தாள்.
‘‘சூப்பர்ம்மா… இது மாதிரி தினமும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்லம்மா?’’
‘‘நீ சம்பாதிக்கிறப்போ… அம்மா இதே மாதிரி நல்லா ஆக்கி போடுறேன்பா… அம்மா படிக்காதவ இல்ல… அதனால கொஞ்சமாத்தான் சம்பாதிக்கிறேன். நீ படிக்கிற புள்ளயில்ல… உனக்கு கைநிறைய சம்பளம் குடுப்பாங்க… அப்ப அம்மாவ கவனிச்சுக்குவே இல்ல?’’
‘‘உன்னைத்தான்மா கவனிப்பேன்…’’ பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தம் குடுத்தான் குமரன்.
அவனது முத்தத்தில் கறைந்தது சிவகாமியின் மனது மட்டுமல்ல; தொண்டைக்குழியில் பாரமாக நின்று கொண்டிருந்த சோகமும் கறைந்து ஓடியது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

03 March 2019

அது, அதுக்கு ஒரு வழி!

குழந்தை அழுதுக் கொண்டே இருந்தது.
‘‘டேய் ராகவா… குழந்தை எதையோ பார்த்து பயந்திருக்குடா… சின்னக்கடை மசூதியில போய் மந்திரிச்சுட்டு வாடா. அப்பத்தான் குழந்தையோட அழுகை நிற்கும்’’ அம்மா கத்தாத குறையாக கூறினாள்.
‘‘அட போம்மா… இந்தக்காலத்தில கூட இன்னமும் மாந்திரீகம்… பாய்ன்னுட்டு’’ சலித்துக் கொண்டேன், 
‘‘அப்படியில்லடா… ஒரு சிலது, அதுக்குன்னு இருக்கிற வழியில போனாத்தான் கட்டுப்படும். உன்னை சின்னப்புள்ளையில எத்தனை தடவை பாய்கிட்ட தூக்கிட்டு போயிருக்கேன் தெரியுமா?’’
‘‘ஏன் இங்கன இருக்கிற காளிக்கோயில்ல போய் மந்திரிச்சா… சரியாகாதா?’’ குதர்க்கமாக கேட்டேன்.
‘‘டேய்… உன் விதண்டாவாதத்தை எல்லாம் தூக்கி குப்பையில போடு… காளின்னாலும், அல்லான்னாலும், ஏசுன்னாலும் எல்லாம் பொம்பைளைங்களுக்கும் ஒண்ணுதான். ஏன், எத்தனை முஸ்லிம் பெண்கள் காளிக்கோயிலுக்கு குழந்தையோட வர்றாங்க… எங்களுக்கு குழந்தை நல்லாயிருக்கணும் அவ்வளவுதான். அது எந்த கடவுளா இருந்தாலும் எங்களோட குழந்தையை சரி செஞ்சா போதும்… ஏன் உனக்கு உடம்பு முழுக்க திடீர் கட்டி, கட்டியா வந்தப்போ சிங்குக்கிட்ட போய் மந்திரிச்சுட்டு வரல? அதுக்கு முன்னாடி எத்தனை டாக்டர்கிட்ட காட்டியிருப்ப ஏதாவது சரியாச்சா?’’
‘‘சரி… சரி… உன் புராணத்த ஆரம்பிக்காதே… நான் கூட்டிட்டு போறேன்’’ என்று குழந்தையை வாங்கிக் கொண்டு, சின்னக்கடை மசூதிக்கு கிளம்பினேன்.
அங்கே ஏற்கனவே டோக்கன் வாங்கிக் கொண்டு ஏகப்பட்ட பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.
நான் போனபோது 10வது டோக்கன்தான் கிடைத்தது.
5 ரூபாய் கொடுத்துவிட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு வரிசையில் நின்றிருந்தேன்.
பாய் எனப்படும் முஸ்லிம் பெரியவர், தொழுகையை முடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தார்.
குழந்தை இன்னமும் அழுதுக் கொண்டிருந்தது.
‘‘பார்வதி இருந்திருந்தா… அவளை அனுப்பியிருக்கலாம். அவ எக்ஸாம்னுட்டு பெங்களூரு போய்ட்டா… அம்மாவால நடக்கவும் முடியாது… என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவன் ரொம்ப படுத்துறானே…’’ மனதில் முனங்கிக் கொண்டே வரிசையில் முன்னேறினேன்.
என் முறை வந்தபோது, கையில் இருந்த டோக்கனை எடுத்து பாயிடம் குடுத்தேன்.
என்னை ஏறெடுத்து ஒரு கனம் பார்த்தார்.
‘‘எல்லாத்துக்கும் சந்தேகப்படாதே… நமக்கும் மேல ஒருவன் இருக்கிறான்… ’’ என்று கூறிவிட்டு, குழந்தையை பார்த்து ஏதோ மவுன பாஷையில் கூற ஆரம்பித்தார். பின்னர் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்து குழந்தையின் முகத்தில் சடாரென அடித்தார். சாம்பல் போன்றிருந்த ஒன்றை எடுத்து அவன் நெற்றில் தழும்பில் இட்டார்.
இவ்வளவு நேரம் ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்த குழந்தை, அழுகையை நிறுத்திவிட்டது.
‘‘இன்ஷா அல்லாஹ்’’ என்று கூறிவிட்டு, மீண்டும் ஒரு கனம் பார்த்துவிட்டு என்னைப்பார்த்துவிட்டு, அடுத்த டோக்கன்காரரை கவனிக்க ஆரம்பித்தார் பாய். அவரது பார்வையின் பின்னால் பல அர்த்தம் இருப்பதாக பட்டது.
குழந்தையை இடது கையில் இருந்து வலது கைக்கு மாற்றினேன்.
விடாமல் அழுதுக் கொண்டிருந்த அவன், இப்போது என்னைப்பார்த்து சிரித்தான். அம்மா சொன்னது சரிதான். அது, அதுக்குன்னு ஒரு வழி இருக்கிறது நிஜம்தான்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

01 March 2019

ஷாலி டார்லிங்


‘‘சரியான சிப்பு கெட்ட மனுஷனா இருக்கிறாரே…. எத்தனை தடவை சொல்றது, வெளியே போறப்போ கதவை தாழ்ப்பாள் போட்டு போகணும்னு….கேட்கவே மாட்டேங்கிறாரே இந்த மனுஷன்…’’ நினைத்துக் கொண்டே வெளிக்கதவை சாத்தி தாழ்பாள் போட்டாள் ஷாலி.
உள்ளே நுழையுமபோது எதிரில் எலி ஒன்று ஓடியது.
‘‘இந்த வீட்டில எல்லாம் அலங்கோலமா இருக்கே… எலிகளுக்கு எல்லாம் எப்படி இடம் கொடுத்தான் பிரசாத்?’’
சிந்தித்துக் கொண்டே எலி சென்ற திசையில் சென்றாள், கண்களால் கூர்ந்து கவனித்தாள்.
‘‘மாட்டிக்கிட்டியா… ’’ என்றபடி பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டாள். பின்பு கீழே குனிந்து எலியை எடுத்து ஒரு கனம் பார்த்தாள்.
‘‘செத்துப்போச்சு…. கன்பார்ம்’’ என்று, அதை எடுத்துக் கொண்டு தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
‘‘படுவா எத்தனை நாளா இந்த வீட்டில குப்பை கொட்டிட்டு இருந்தே…  நான் வந்த பிறகு இதெல்லாம் நடக்குமா?’’
‘‘பரமாத்மா என்னை மன்னிப்பாராக’’ என்று மண்ணை தோண்டி புதைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தாள்.
போன் மணி அடித்தது.
ஹலோ…!
ஹலோ…!
‘‘சொல்லு பிரசாத்!’’
‘‘ஷாலி… நான் தான் பேசுறேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?’’
‘‘ஏம்பா… என் தலையில என்ன களிமண்ணு இருக்குன்னு நினைச்சியா? போன்ல பேசுறப்போ குரலை வச்சே யார் பேசுறதுன்னு டிரைனிங் எடுத்திருக்கேன். என்னால திரைக்கு பின்னாடி மறைஞ்சிருக்கிறவங்க யாரு, திரவத்தில என்னென்ன கலந்திருக்குன்னு ஈசியா கண்டுபிடிக்கிறதுக்கும் சொல்லித் தந்திருக்காங்க… நீ பேசுறதையா என்னால கண்டுபிடிக்க முடியாது?
‘‘அது சரி… வீட்டையா வச்சிருக்கே நீ… எலி, ஒற்றடைன்னு ஒரே குப்பைக் காடா இருக்கு!’’
‘‘அதுக்குத்தானே… உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன். இனிமே நீயாச்சு… என் வீடாச்சு!’’
‘‘சரி ஓகே… எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். போனை வச்சிடு எனக்கு நிறைய வேலை இருக்கு. இப்பவே ரெண்டு நிமிஷம், எட்டு செகண்டுக்குமேல நீ பேசிட்டு இருக்கே…’’ என்றாள்.
‘‘ராட்சசி… பேசுறத்துக்கு கூட டைம் பார்க்கிறா. இவ கூட எப்படி வாழ்க்கை பூரா குப்பை கொட்டப்போகிறேனோ!’’ நொந்தபடி போனை வைத்தான் பிரசாத்.
சமையலறையில் ஓவன் பிளிங்கிங் சவுண்டு கொடுத்துக் கொண்டிருந்ததையடுத்து,வேகமாக அதை நோக்கி நடந்தாள் ஷாலி.
சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு, ஏற்கனவே நறுக்கி வைத்திருந்த காலிபிளவரை கூட்டுக்கு தயார் பண்ணி வைத்துக் கொண்டிருக்கும்போதுதான், வெளியே ஏதோ ஆள் அரவம் கேட்டு பின் கட்டிற்கு திரும்பினாள் ஷாலி.
அங்கே ஒரு சிறுவன், வீட்டுத்தோட்டத்தில் இருந்த மாங்காய் மரத்தில் திருட்டு மாங்காய் பறிப்பதற்காக ஏறிக் கொண்டிருந்தான்.
ஒரு நிமிஷன் அவனையே உற்றுப்பார்த்தாள் ஷாலி. எங்கும் பார்த்தமாதிரி ஞாபகத்துக்கு வரவில்லை. எடுத்தாள் துப்பாக்கியை. சிறுவன் பின் மணடையை நோக்கி சுட்டாள்.
பொத்.
சிறுவன் கீழே விழுந்து உயிரைவிட்டான்.
எந்த குற்ற உணர்வும் இல்லாமல், சாதாரணமாக வீட்டிற்குள் நுழைந்தாள். பிரசாத்தை போனில் அழைத்தாள்.
‘‘என்ன ஷாலி டார்லிங்… இப்பத்தானே என்னை போன் பண்ணாதேன்னு சலிச்சுக்கிட்டே, இப்போ நீயே கூப்பிடுறே?’’ பிரசாத் கேட்டான்.
‘‘நான் வீட்டில வேலை பார்த்துக்கிட்டு இருந்தேனா… அப்ப பின்னாடி சத்தம் கேட்டு போய் பார்த்தேன். அங்கே ஒருத்தன் அத்துமீறி நம்ம வீட்டுல இருக்கிற மாங்காய் மரத்தில மாங்காய் பறிச்சுக்கிட்டு இருந்தான். விட்டுடுவேனா…. துப்பாக்கிய எடுத்து சுட்டுக்கொண்ணுப்புட்டேன். உனக்கு தகவல் சொல்லலாம்னு கூப்பிட்டேன்’’ என்றாள் ஷாலி.
‘‘அட மர மண்டை ரோபோவே… எல்லா வேலையும் செய்யும் ஆட்டோமேடிக் ரோபோட்ன்னு வந்து வீட்டில வச்சா… இப்படி அநியாயமா ஒரு உயிரை கொண்ணுட்டு வந்து நிற்கிறியே….’’ பிரசாத் உச்ச ஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தான்.
போனில் பேசிய பிரசாத்தின் டெசிபல்ஸ் குண்டக்க, மண்டக்க உயர்ந்திருந்த்தால், அவன் அதிகபட்ச கோபத்தில் இருப்பதை உணர்ந்தாள். ஆனால், எஜமானர் வீட்டில் யாராவது அத்துமீறி நுழைந்து, அவருக்கு உரிமையான பொருட்களை திருட முயன்றால், சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தானே என் மூளைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது…. அப்புறம் ஏன் பிரசாத் இப்படி டென்ஷன் ஆகிறான் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த்து ஷாலி. சாரி…. தன்னுடைய மாஸ்டர் சிப்பில் புரோகிராம்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தது.
-    ஜே.எஸ்.கே.பாலகுமார்

27 February 2019

என் இனிய தமிழ் மக்களே
என் இனிய தமிழ் மக்களே!

வானம்பொய்த்துக் கொண்டுபெய்யும்போல் இருந்தது. கீழ்வானத்தில் மேகம் கரிக்கடை சுவர்போல இருண்டு கிடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாய் இருக்கும் மனைவிக்கு காலையில் இருந்து  இலேசாக இடுப்பு வலி இருந்ததால்,மேய்ச்சலுக்கு லட்சுமியை அழைத்துச் செல்லாமல், அறுவடைதான் முடிந்து பூமி எல்லாம் சும்மாதானே கெடக்கு என்ற தைரியத்தில் அப்படியே கழட்டிவிட்டுவிட்டான் சுந்தரம். அதுதான் இப்போது வினையாக தோன்றியது. வீட்டு கூரையின் கீழே உட்கார்ந்து கொண்டு  வானத்தை அண்ணாந்து பார்த்தவனின் மூக்கின் நுனியில் ஒரு மழைத்துளி பொட்டு வைத்தது.
‘‘வானம் நல்லா பொழியும்போலிருக்கே… இந்தநேரம் பார்த்து லட்சுமியை கழற்றி விட்டிருக்க கூடாது… இப்போ அது எங்கேபோய்மேயுதோ…’’ கவலையுடன் அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினான்.
‘‘ஏலே… சண்முகம்… நீ அண்ணிக்கூடவே இரு. நான் லட்சுமியை பத்திட்டு வந்துடுறேன்.வேத்தாள்போன அது முட்டுது…’’ என்று சொல்லிவிட்டு, கிழக்கே பசு மாட்டைதேடி ஓடினான்.
அதுவரை இங்கொன்றும், அங்கொன்றுமாக தூவிக்கொண்டிருந்த வானம், கண்டக்டர் விசிலுக்கு கிளம்பும் பஸ்போல‘ஜோ’வென்றுபெய்ய ஆரம்பித்தது.
வயலில் ஓடிக்கொண்டிருந்த சுந்தரத்துக்கு நிற்பதற்கு நேரமில்லை. இடுப்பில் புல்லருக்கும் அறுவாளை கட்டியிருந்த துண்டை எடுத்து தலையில் முண்டாசு போட்டுக் கொண்டான். பிறை அறுவாளை எடுத்து இடுப்பில்சொருகிக்கொண்டு விரைந்தான்.
‘‘ஏற்கனவே சளிப்பிடித்து ஒழுகிக்கிட்டு இருந்தது. மழையில நனைஞ்சா அப்புறம்ரெண்டு நாளைக்கு பால் தராது. சனியன் எங்கேபோய் நிக்குதோ…’’ முனகிக்கொண்டே ஓடினான்.
பெய்யாமல்பெய்த மழையுடன் காற்றும் கை கோர்த்திருந்ததால், சுழன்று, சுழன்று அடித்தது. பத்தடி தூரம் கூட சரியாக தெரியவில்லை.
‘‘லட்சுமி… லட்சுமி…’’ குரல் கொடுத்து கொண்டே ஓடினான்.
மலையின் கீழ் ஈச்சமரத்தின் ஒன்றின் அடியில் ஒதுங்கியிருந்த லட்சுமி, எஜமானனின் குரலைக்கேட்டதும், ‘‘ம்..ம்மே…’’ என்று கத்தியது.
‘‘இங்க ஒதுங்கியிருக்கியா… வா… வா…’’ என்று மூக்கணாங்கயிற்றை பிடித்து இழுத்தான்.
அவன் இழுப்புக்கு லட்சுமி வராமல் நின்றதை கண்டுகோபமடைந்த சுந்தரம், ‘‘என்ன சனியனே… சீக்கிரம் வா… வீட்டுக்குபோகணும்…’’ என்று மறுபடியும் இழுத்தான்.
லட்சுமி காலை எடுத்துவைக்க முடியாமல் மீண்டும் ஈனஸ்வரத்தில் ‘அம்ம்ம்மே…’ என்று கத்தியது.
அப்போதுதான் அதன் காலில் அடிபட்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
காலில் யாரோ அடித்ததைபோன்று, நல்ல அடி பட்டிருந்தது. அதில் இருந்து ரத்தம், மழை நீருடன் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்த மாத்திரத்தலேயே பதறிவிட்டான்.
‘‘அய்யோ… இது எப்படி ஆச்சு, எவன்தோட்டத்திலாவது போய் மேஞ்சியா…’’ அதற்கு புரியுமா, புரியாதா என்ற கவலை எல்லாம் இல்லாமல் சஜகமாக பேசினான். ஈச்ச மரத்தின் கீழ் நன்கு ஒதுங்கி நிறுத்தி, அதன் காலை மெதுவாக துடைத்துவிட்டான். மெல்ல கை வைத்ததற்கே லட்சுமி கத்தினாள்.
‘‘அடி பலமாத்தான் இருக்கும் போலிருக்கு…’ மனதில் நினைத்துக் கொண்டான். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, அதன் காலில் கட்டாக கட்டிவிட்டான்.
மழை கொஞ்சம் கூட நிற்காமல், சித்தியிடம் சூடுபட்டபெண் அழுவதுப்போல பொல,பொலவென்று பெய்துக் கொண்டே இருந்தது. லட்சுமியை மரத்தில் கொஞ்சம் கயிற்றை இழுத்துவிட்டு கட்டிவிட்டான். தந்தியடித்துக் கொண்டிருந்த பல்லுடன்,தோளில் கை வைத்து குத்த உட்கார்ந்தான்.
தூரத்தில் ஒரு உருவம் ஓடி வந்துக் கொண்டிருப்பது நிழலாக தெரிந்தது. அருகில் நெருங்க,நெருங்க, அது சித்தப்பன் மகன் சுடலை என்று தெரிந்தது.
இவன் எதுக்கு இந்த மழையில இப்படி ஓடியாரான் என்று நினைத்துக்  கொண்டிருந்த நேரத்தில், ‘‘ஏலா… சுந்தரா, உன் மேட்டு நிலத்து வரப்பை வொடைச்சு, மாரியப்பய தன் நிலத்துக்கு தண்ணீரை எறக்கிட்டு இருக்காம்லே, சீக்கிரம் போய் பாருலே’’ என்று சொல்லிவிட்டு சுடலை மூச்சு வாங்கினான்.
‘‘அட வேசி மவனே… அவனுக்கு அவ்வளவு தைரியம் ஆகிப்போச்சா… சுடலை லட்சுமி எங்கோ கால ஒடிச்சுட்டு வந்து நிக்கு. அதை பார்த்து வீட்டுக்கு பத்திட்டுப்போ. நான் மாரியப்பயல ஒரு கை பார்த்துட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு நிலத்துக்கு விரைந்தான்.
‘‘மழையில்லாம காஞ்சு கிடக்கிற பூமியில, வராம வந்த மழையில ஒரு எத்து எடுத்துரலாம்னு பார்த்தா, கொள்ளியிலபோற மாரி, தண்ணீய தன் நிலத்துக்கு எடுத்துட்டுபோறானாமே! அது பார்த்துட்டு நிற்கிறதுக்கு நான் என்ன கேணக்கிறுக்கனா…’’ மனதில் புலம்பியபடியே ஓடினான்.
சுடலை சொன்னபடியே,மேட்டில் இருந்த தன்னுடைய நிலத்தில் விழுந்த மழை நீரை வரப்பை  உடைத்து தன்னுடைய நிலத்தில் திருப்பிக் கொண்டிருந்தான் மாரி. பார்த்தவுடனேயே பற்றிக்கொண்டு வந்தது.
‘‘எல… மாரி நீயெல்லாம் உங்கப்பன் ஈத்துக்கு பிறந்த பய தானா? என் நிலத்தில வடியிற மழையை உன் நிலத்துக்கு  எடுத்துக்கிறியே… இது பதிலாக உன் பொஞ்சாதி முந்தாணய விருந்தாளிக்கு  விரிச்சு சம்பாதிக்க வேண்டியது தானே?’’ வாயிலிருந்து தீப்பிழம்புகளை தடவிய வார்த்தைகளை கொட்டினான் சுந்தரம்.
‘‘ஏண்டா…கொண்ணப்பயல, எங்கப்பன் ஈத்தையா பேசுர, உங்காத்தா தாண்டா உன்ன அப்படிபெத்திருப்பா. அதனாலத்தான் வார்த்த அப்படி வருது…’’ தப்புசெய்ததும் இல்லாமல் எதிர்த்து பேசினான் மாரி.
வந்த ஆத்திரத்தில் இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்து மாரியை வெட்டச்சென்றான் சுந்தரம். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மாரி, அவனது அரிவாளை எடுத்து சுந்தரத்தின் கழுத்துக்குபோட்டான். அதை தடுக்க முயன்றதில், சுந்தரத்தின் கையில் பெரும் வெட்டு விழுந்தது. அங்கிருந்து ரத்தம் குபீர் என்று பீறிட்டு கிளம்பியது. ரத்தத்தை பார்த்த மாரி, விழுந்தடித்து ஓடினான்.
சிறிது தூரம் வரை அவனை துரத்திக்கொண்டு ஓடிய சுந்தரத்துக்கு, தலையில் கிர்ர்ர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. கிறக்கத்தில் அப்படியே உட்கார்ந்துவிட்டான்.
அந்த சோர்விலும் ஒடிக்கப்பட்டிருந்த வரப்பை ஒற்றை கையால் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். தொடர்ச்சியான மழையில் அவன் ஏற்றிவிட்ட மணல் கரைந்து ஓடியது. மயக்கத்தில் கிறங்கினான்.
எங்கிருந்தோ, ‘‘அண்ணே… அண்ணே…’’ என்று கத்திக்கொண்டு ஓடி வந்தான் சண்முகம்.
சுந்தரத்தின் வழிந்துகொண்டிருந்த ரத்தத்தையும், அவனது நிலையையும் பார்த்து, ‘‘அண்ணே… என்னாண்ணே… இது கையில ரத்தம் ஆறா ஓடுது…’’ பதறினான்.
‘‘ஒண்ணுமில்லடா… ஒரு மாரியப்பயலோட சின்னத்தகராறு... அது சரி, உன்ன அண்ணிக்கு துணையாத்தானே இருக்கச் சொன்னேன், நீ எதுக்கு வந்தே?’’
‘‘அதச்சொல்லத்தாண்ணே வந்தேன்… அங்க அண்ணி பிரசவ வலியால துடிச்சிட்டு இருக்காங்க… உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்தேன். பக்கத்துவீட்டு பாட்டிய உட்கார வச்சுட்டு வந்தேன்’’ என்றான்.
சுந்தரத்தின் கையில் வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து இன்னமும் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது.
‘‘சரி நீ முன்னாலபோய், ஆத்தாவை வீட்டுக்கு கூட்டியாந்துடு… நான் வீட்டுக்குப் போறேன்’’
‘‘அண்ணே… உன்ன இப்படியே விட்டுட்டுபோறதா, வாண்ணே… உன்னை வீட்டு விட்டுட்டு, நான்போய் ஆத்தாவை கூட்டியாரேன்’’
‘‘நீபோடா முதல்ல… நான் எந்திரிச்சு போயிருவேன். சீக்கிரம் நீ போய் ஆத்தாவை கூட்டியா’’ என்று விரட்டிவிட்டான்.
திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே போனான் சண்முகம்.
கையை மடக்கிக் கொண்டு, நிலத்து நீரை  தடுக்க அவகாசம் இல்லாததால், அப்படியே எழுந்து வரப்போரத்திலேயே வீட்டை நோக்கி நடந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், கண்கள் இருண்ட மாதிரி இருந்தது.
மழை நின்றுபோய் இருந்தது.
தூரத்தில் வீடு தெரிந்தது. இதோ எட்டு தூரம்… போய்விடலாம் என்று நம்பிக்கையுடன் நடையில் கொஞ்சம் வேகம் காட்டினான். வீட்டுக்கு சிறிது தள்ளி தார்பாய் போட்டு மூடி வைத்திருந்த வைக்கோல் போரில் இருந்து புகு, புகுவென்று புகை வந்துக் கொண்டிருந்தது.
மனதில் பக் என்றாகிவிட்டது சுந்தரத்துக்கு. ‘வைக்கோல் போர் பற்றிக் கொண்டுவிட்டதோ’ பதற்றத்துடன் இன்னும் வேகமாக நடந்தான்.
நிஜம்தான்.வைக்கோல் போர் பற்றிக்கொண்டு எரிந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் மாரி ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தான் சுந்தரம்.
‘‘எலேய் என் ஈத்தையா பேசுற, நீ எப்படிபொளப்பு நடத்துறேன்னு நானும் பார்த்திடுவேம்ல’’சொல்லிக் கொண்டே ஓடினான் மாரி.
புரிந்துவிட்டது சுந்தரத்துக்கு. அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் தார்பாயை எடுத்துவிட்டு மாரி, வஞ்சத்தில் தீவைத்திருக்கான் என்று.
முன்பைக் காட்டிலும், கண்கள் மேலும் இருள ஆரம்பித்தன.கொஞ்சம் வாய்க்கு தண்ணீர் கிடைத்தால் தேவல என்பதுபோல் இருந்தது. தூரத்தில் மனைவி பிரசவ வலியால் துடிக்கும் சத்தம் கேட்டது. அப்படியே கீழே விழுந்துவிட்டான். விழுந்த சமயத்தில் காலில் சுருக்கென்று,கொள்ளிக் கட்டையை சொருகியது போன்று இருந்தது.
‘‘அம்மா… ’’என்று வலியில் துடித்துக் கொண்டே கீழே பார்த்தான். வரப்பில் ஒரு பாம்பு ஓடிக் கொண்டிருந்தது.
‘‘இறைவா… இன்னைக்கு யார் முகத்தில நான் முழிச்சேன்… என் பொஞ்சாதிய காப்பாத்து, மீண்டும் மழைபெய்ய வச்சு வக்கப்போர காப்பாத்து… கடைசியா யாரையாவது அனுப்பி என்னையும் காப்பாத்து…. காப்பாத்துப்பா… காப்பாத்து…’’ முனகிக் கொண்டே தலையை தரையில் கவிழ்த்தான் சுந்தரம்.
‘‘கட்… கட்… எழுத்தாளரே… கதை எல்லாம்ரொம்ப நல்லாத்தான் இருக்கு. ஆனா… கிராமத்து பக்கமா இருக்கு… அதனால, நல்லா…யோசிச்சு… ஒரு மார்டர்னா… நகரத்து கதையா கொண்டாங்க…’’சொல்லிவிட்டு ஆப்பிள் ஜூசை சாப்பிட ஆரம்பித்தார் தயாரிப்பாளர்.
தொண்டை தண்ணீ வற்ற, சினிமா வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற ஆசையில் கதை சொல்லிய, சுந்தரம் என்கிற, துணை இயக்குநராகிய நான், குடிக்க, தண்ணீர் கூட இன்றி, நா வறண்டு அடுத்த தயாரிப்பாளர் வீட்டைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

19 February 2019

351 அடி உயர சிவன் சிலை

ஜெகமாளும் ஈசனுக்கு ஜோத்பூரில் பிரமாண்ட சிலை

இந்தியாவின் 2வது மிக உயரமான சிலையாகவும், உலகின் மிகப்பெரிய சிலைகள் வரிசையில் நான்காவதாகவும், இந்து சிலைகளில் உலகிலேயே மிகப்பெரியதாகவும் ராஜஸ்தானின் நத்துவாராவில் சிவன் சிலை கட்டப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்து சிலை என்ற பெருமையை பெற உள்ள, இந்த சிவபெருமானின் உயரம் 351 அடியாகும். இது முற்றிலும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் கலவையால் அமைக்கப்படுகிறது. நத்துவாராவில் உள்ள கணேஷ் தேக்ரி என்ற இடத்தில் மலைக்குன்றின் மீது சிலை அமைக்கப்படுகிறது. நத்துவாராவுக்கு வருவதற்கு 20 கி.மீ. தொலைவில் இருந்து பிரமாண்ட சிவபெருமானின் உருவத்தை தரிசிக்க முடியும் என்பதுதான் அதன் விசேஷம்.

அமர்ந்த நிலையில், சாந்த வடிவமாக இடது கையில் சூலாயுதமும், வலது கையை மடியிலும் வைத்தவாறு சிவபெருமான் சிலை அமைக்கப்படுவதாக இத்திட்டத்தின் தலைவரான ராஜேஷ் மேத்தா கூறினார். இந்த சிலையை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மிராஜ் குழுமம் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. சிலையின் உள்ளே அமைக்கப்படும் லிஃப்ட் மற்றும் மாடிப்படி வழியாக 280 அடி உயரம் வரை பக்தர்கள் செல்ல முடியும். மேலும், சிவபெருமான் சிலையை இரவில் வெகு தூரத்தில் இருந்து தரிசிக்கும் வகையில், பிரமாண்ட மின்விளக்குகள் அமெரிக்காவில் இருந்து  தருவிக்கப்பட உள்ளன.

இதேபோல்,  சிவபெருமான் அமைய உள்ள குன்றைச் சுற்றிலும் பூங்கா, பல்வேறு வகையான உணவகங்கள், சிறுவர்கள் விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி பிரசங்க மேடை என்று பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் நாமும் இந்த சிவபெருமானை தரிசிக்க செல்ல முடியும். உலகின் மிக உயர்ந்த இந்து சிலையை தரிசித்த பெருமையும் கிடைக்கும். ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு சென்றால், அங்கிருந்து ஏராளமான பஸ்கள், கால்டாக்சிகள் நத்துவாராவுக்கு செல்கின்றன. கட்டணம் அதிகபட்சம் ரூ.75.   

ஜே.எஸ்.கே.பாலகுமார்

17 February 2019

ஆப்ரேஷன் 44

44 வீரர்கள் இறந்த துக்கம் நாடு முழுவதும் கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

‘‘இன்னும் எத்தனை நாள்தான் எங்களை காத்திருக்கச் சொல்வீர்கள்?’’ ராணுவ தளபதிகேட்டபோது பிரதமரின் உள்ளம் நொருங்கித்தான் போனது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மட்டும் அந்த அறையில் இருந்தனர்.

பிரதமர்தான் ஆரம்பித்தார். ‘‘எத்தனை நாட்கள் உங்களுக்கு தேவைப்படும். எல்லைப்பகுதி நகரங்களை வளைத்தாலேபோதுமானது. மற்றவற்றை நமது நட்பு நாடுகளான உலக நாடுகள் பார்த்துக்கொள்ளும். சமரசம் பேசுவதுபோல், நமது அண்டை நாட்டை வழிக்கு வரச்செய்துவிடும். ஏற்கனவே, அதன் தலைவர்களுடன்பேசிவிட்டனர். அவர்கள் எனக்கு அளித்த அவகாசம் மிகக் குறைவு. அதற்குள் நாம்வேலையை முடித்து காட்டவேண்டும். அதனால்தான் கேட்கிறேன். எத்தனை நாட்கள் உங்களுக்கு தேவைப்படும்’’

‘‘எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறவேண்டுமானால் 4 முதல் 5 நாட்கள் ஆகும்’’ தளபதிகள் ஒரே குரலில் கூறினர்.

பிரதமர் நேரடியாகதேசிய பாதுகாப்பு ஆலோசகரை பார்த்தார்.

அதை புரிந்துக் கொண்ட அவர்,வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு அதிகாரியை பார்வையால்,, ‘‘முடிந்தாகிவிட்டதா?’’ என்பதுபோல்கேட்டார்.

அவர்,மெல்லிய புன்முறுவலுடன் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தார்.

இதையடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆரம்பித்தார். ‘‘எங்களால் 2 நாட்கள் பெருமளவில் அவர்களின் பலத்தை முடக்க முடியும். அதாவது அவர்கள் மூலமான எதிர்ப்பை,வேறு வழியில் அடக்கி வைப்பதற்கான உபாயத்தை நாங்கள்செய்து முடித்துள்ளோம். அதாவது மிக்குறைந்த எதிர்ப்பில் நீங்கள் முன்னேற முடியும்’’ என்றார்.

‘‘அப்படியென்றால், இந்த 2 நாளில் நீங்கள் இலக்கை முடிக்க முடியுமா? இழப்பு எவ்வளவு இருக்கும்?’’ பிரதமர் மீண்டும் தளபதிகளிடம் கேட்டார்.

‘‘நீங்கள் சொல்வதுபோல் நடந்தால், ஒன்றரை நாளிலேயே நாங்கள் முழுமையாக எல்லை நகரங்களை கைப்பற்றிவிடுவோம். நமது தரப்பில் இழப்பு 500 வரை இருக்கக்கூடும். விமானங்களை பொருத்தவரையில் 10 முதல் 15 ஆக இருக்கக்கூடும்’’ என்றார் தரைப்படை தளபதி.

‘‘சரி… சூட்டோடு சூடாக நாம் காரியத்தில் இறங்கினால்தான், உலக நாடுகள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நமக்கு சாதகமாக இருக்கும்’’ பிரதமர் கூறினார்.

‘‘இன்று சனிக்கிழமை. இன்று இரவே ஆரம்பிக்கிறோம். திங்கட்கிழமை நீங்கள் பறக்கிறீர்கள்’’தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறினார்.

படைகளை போருக்கு அனுப்பும் வரலாற்று சிறப்பு மிக்க பிரகடனத்தில் கையெழுத்திட்டார் பிரதமர்.

சனிக்கிழமை இரவு மணி 12.

சாட்டிலைட் ரிமோட் கண்ட்ரோல் மூலம், தானியங்கி மருந்து செலுத்தும் நுண்ணுயிரி இயந்திரம் இயக்கிவைக்கப்பட்டது.

இயந்திரம்செயல்பாடு திருப்தியுடன் இருந்ததை தொடர் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், உளவுப்பிரிவு தலைவரும் திருப்தியாக ஓய்வெடுக்க கிளம்பினர்.

மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும்கொட்டை எழுத்துகளில் தலைப்புசெய்தியாக ‘போர் வருமா? இரு நாடுகளும் தயாராகின்றன’’ என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

காலை 9 மணி.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், புலனாய்வுப் பிரிவு தலைவரும் முக்கியமான போனுக்காக காத்திருந்தனர்.

அந்த எதிர் பார்த்திருந்தபோன் வந்தது.

‘‘சாப்ட்வேர் லோட் ஆகிவிட்டது’’ என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், புலனாய்வுப் பிரிவு தலைவரும் சிறுபிள்ளைகளைபோல் ஹைபை செய்துக் கொண்டனர்.

மதியம் 12 மணி

அடுத்த அழைப்பு வந்தது.

‘‘பறவைகள் எச்சம் விழத்தொடங்கிவிட்டன’’ மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமருக்கான தனி அழைப்பு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, ‘‘பழம் கனிந்துவிட்டது’’ என்றார். அதே தகவலை தளபதிகளுக்கும் கூறினார்.

மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3 மணி.

விமானப்படை விமானங்கள் கொத்து, கொத்தாக சென்று வீர்ரகளை எதிரி நாட்டின் நகரங்களின் இறக்கிவிட்டன. முதலில் விமான நிலையங்கள் வீழ்ந்தன. அனைத்து காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

எல்லையில் இருந்த தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் சர்வநாசமாகின.

முப்படை தளபதிகளுக்கே ஆச்சரியம். தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கூட எதிர்ப்பு இல்லாமல் நகரங்கள் வீழ்ந்தது ஆச்சரியத்துக்கு உள்ளாக்கின.

திங்கட்கிழமை மதியமே, அண்டை நாடு கதறிக் கொண்டு காலில் விழாத குறையாதகெஞ்ச ஆரம்பித்த்து. தன் நாட்டில் இருந்த தீவிரவாத தலைவனை அதுவே ஒப்படைக்க முன்வந்தது.

எல்லாம் சுபமாக முடிந்தது.

தரைப்படை தளபதிக்கு இருப்பு தாளவில்லை.வெற்றி விழாவில், சற்று தனியாக இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம், ‘‘எப்படி சாதித்தீர்கள்?’’ என்று கேட்டார்.

‘டெக்னிக் என்னவோ ரொம்ப சாதாரணமான டிவி தொடர்கள் கதைதான். ஆனா, அதை நாங்க ரொம்ப தெளிவா யோசிச்சு சம்பவமாக்கிட்டோம்’’ என்றார்.

‘‘அட….டா… நான் ரகசியத்தைகேட்டா நீங்க இன்னும் சுவாரசியம் ஆக்குறீங்களே?’’ தளபதி கேட்டார்.

‘‘அந்த நாட்டில இருக்கிற நம்ம ஏஜன்ட்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பெரிய அசைன்மென்ட்டைகொடுத்தோம். அதாவது எல்லா தளவாட இடங்கள், முகாம்கள் என்று ராணுவம்,போலீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள்ல தானியங்கி முறையில் மருந்தை கலக்கிற சின்னச்சிறு இயந்திரங்களை பொருத்தினோம்.அதுல இருக்கிற மருந்துரொம்ப,ரொம்ப வீரியம் குறைந்த வயிற்றுப்போக்கு மருந்து’’

‘‘அப்புறம் எப்படி இந்த அளவுக்கு அவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது?’’ தளபதி வினவினார்.

‘‘இங்கதான் நம்ம விஞ்ஞானிகளோட கைவண்ணம் இருக்கு. அதாவது அந்த நாட்டில வயித்துப்போக்கு ஏற்பட்டா… எந்த வகையான மருந்து தரப்படுதுன்னு விரிவா ரிப்போர்ட் எடுத்தோம். அதுலரெண்டு வகை காம்பினேஷன் டோஸ் மட்டும்தான் என்றுதெரிந்தது. அந்த காம்பினேஷன்ல எந்த மருந்தை சாப்பிட்டாலும், வயிற்றுப்போக்கு அபரிமிதமா மிதமிஞ்சிபோகும். எந்திரிச்சுக் கூட நிக்க முடியாத அளவுக்கு இருக்கும். அத்துடன் காரணமே இல்லாம உடம்பு சுடும். காய்ச்சல், வயிற்றுப்போக்குன்னு நினைச்சு, திடகாத்திரமா இருக்கிறவங்க கூட, மனசளவில முடங்கிடுவாங்க… அப்புறம் எங்கே துப்பாக்கிய தூக்குறது… விமானத்தை ஓட்டுறது… அதுலதான் எல்லாமே முடங்கிட்டாங்க… இனி ஒரு தடவை அவங்க வாலாட்டினா… அடுத்த திட்டமும் தயாரா இருக்கு…’’சிரித்துக் கொண்டே கூறினார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்.

தன்னிடம் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து அவரது வாயில் ஊட்டிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் தளபதி.

கபாலிடா.... நெருப்புடா....

கபாலிடா.... நெருப்புடா.... என் அப்பாவை குறிப்பிட வேண்டும் என்றால், இப்படித்தான் பாராட்ட தோன்றுகிறது. மனிதரை பார்த்தால், மிகக்கடுமையானவ...