#தீபாவளி


தீபாவளி





‘‘சிவகாமி…சிவகாமி…’’ கத்திக்கொண்டே வீட்டில் நுழைந்தார் ராகவன்.

‘‘என்ன சாமீ… இவ்வளவு சந்தோஷமா வாறீக?’’ கேட்டாள் சிவகாமி.

‘‘சின்னவனும், பெரியவனும் பேரப்பசங்களோட ரெண்டு நாள்ல தீபாவளிக்காக ஊருக்கு வர்றாங்களாம்… அந்த குன்றத்து முருகன் இப்பயாவது அவங்களுக்கு ஊருக்கு வர்றதுக்கு லீவு குடுத்திருக்கானே… எத்தனை வருமாஷச்சு புள்ளைங்கள பார்த்து… சின்னவனோட சுட்டிப்பையனுக்கு 3 வயசா இருந்தப்போ வந்தாங்க… இப்போ அவனுக்கே 9 வயசாயிடுச்சு… இந்த வாட்டி பசங்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கு பிடிச்சத எல்லாம் சமைச்சு ஜமாய்ச்சிடணும்… பின்னே… அமெரிக்காவில இருந்து லீவு கிடைச்சு ஊருக்கு வர்றதுன்னா சும்மாவா…’’ சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே சென்றார் ராகவன்.

‘‘சாமீ… இவ்வளவு படபடப்பா இருக்காதீக… உங்களுக்கு என்ன சின்ன வயசா ஆவுது…’’ கணவரின் திடீர் பரபரப்பை பார்த்து வருத்தத்துடன் கூறினாள் சிவகாமி.

‘‘அடி போடி இவளே… என் பிள்ளைங்களும், பேரன்களும் வர்றாங்க… அதை கொண்டாடாம… உம்முன்னு இருக்கச் சொல்லுறீயா?’’ என்று கேட்டவாறு தன் அறைக்குள் நுழைந்தார்.

‘‘சரிங்க… உங்களுக்கு காப்பித்தண்ணீ எடுத்திட்டு வாறேன் இருங்க…’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் சிவகாமி.

‘‘பசங்க அங்க கண்டத சாப்பிட்டு நாக்கு செத்துக்கிடக்கும். அவங்களுக்கு வாய்க்கு ருசியா கறியும், மீனுமா சமைச்சு போடச் சொல்லணும்… பேரப்பிள்ளைங்களுக்கு பலகாரங்கள் எல்லாம் செஞ்சுக் குடுக்கச் சொல்லி ஜமாய்க்கணும்… எல்லோருக்கும் பிடிச்சமாதிரி டிரஸ் எடுத்து கொடுக்கணும்…’’ என்று மனதில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தவருக்கு, சுருக்கென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

போன மாதம்தான் தான் அந்த பழைய வீட்டை மராமத்து பார்த்திருந்தார். ஒவ்வொரு மழைக்கும் வீடு ஒழுகுவதும், ஆங்காங்கே சட்டி எடுத்து வைப்பதும் மழைக்காலங்களில் வேலையாகி போயிருந்தது. ஆசிரியப்பணியில் இருந்த வரையில், இதெல்லாவற்றையும் அவர் ஒரு பொருட்டாகவே கண்டுக்கொண்டதில்லை. போகிற போக்கில் முனுசாமியிடம் சொல்லிவிட்டு போவார். கொத்தனார் என்று சொல்லிக் கொண்டு, வீடுகளில் அரைகுறை வேலைகளை செய்யும் அவன், வேலைகளை முடித்துவிட்டு பள்ளிக்கு வந்து கூலியை வாங்கிச் செல்வான். அந்த பழங்காலத்து வீட்டின் நிலைமை ஓய்வு பெற்ற பின்னர்தான் அவருக்கு தெரிந்தது.

குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்த அதன் நிலைமை அவருக்கே ஆச்சரியத்தை வரவழைத்தது. இவ்வளவுநாள் வீட்டை பார்க்காமல் இருந்திருக்கோமே என்று அவருக்கே கோபத்தை வரவழைத்தது. அதனால் தனது சேமிப்பில் இருந்த 3 லட்சம் ரூபாயை எடுத்து, வீட்டின் உத்திரக்கட்டைகள் முதல் அனைத்தையும் சரி செய்தார். வங்கியில் இருந்தது மட்டுமில்லாமல், வெளியே ஒரு 10 ஆயிரம் ரூபாயையும், தனது நண்பனான கோபாலிடம் கடன் வாங்கி சரி செய்தார். இந்த மாசமே அவனுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இப்போது, பென்ஷன் பணத்தில் மட்டும்தான் வாழ்கை ஓடிக்கொண்டிருந்தது. மகன்கள், பேரன்கள் வரும் நிலையில், எப்படியும் ஒரு 10 பெரிய நோட்டு தேவைப்படும் என்று கணக்குப்போட்டார். என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டிருந்தார்.

அப்போதுதான் வலது கையில் போட்டிருந்த மோதிரத்தை பார்த்தார். 25 வருஷத்துக்கு முன்பு தேசிய நல்லாசிரியர் விருது வாங்கியபோது, பள்ளியில் இருந்து சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்த பச்சைக்கல் மோதிரம். அது வந்த பின்னர் அதிர்ஷ்டம் தனக்கு மேலும் கூடியதாக எண்ணினார். அதனால் எப்போதும் அதை அணிந்திருந்தார். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது கூட கழற்றியது இல்லை. அந்த மோதிரத்தை விற்றுவிடலாம் என்று முடிவு செய்தார். அப்போதுதான் கோபாலுக்கும் பணம் தர முடியும்.

சிவகாமி காபி டம்ளருடன் அறையில் நுழைந்தார்.

‘‘என்ன சாமீ… ரொம்ப ரோசனையில இருக்கீங்க?’’ என்றபடி அவரிடம் காபி டம்ளரை நீட்டினாள் சிவகாமி.

‘‘இல்ல ஒரு யோனைமா… அதுதான்’’ என்று கூறிவிட்டு காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தார்.

டம்ளரை சிவகாமியிடம் கொடுத்துவிட்டு, ‘‘சிவகாமி நான் வெளியே போய்ட்டு வந்துடுறேன்… என்னென்ன சாமான் வேணும்னு எழுதி வை என்னா?.... டவுனுக்கு போய் ஒரு எட்டு வாங்கி வந்துடுவோம்’’  என்றார்.

‘‘சரி சாமீ… நீங்க ரொம்ப வெயில்ல அலையாதீக… உங்க உடம்புக்கு ஆகாது. சீக்கிரமா வந்துடுங்க… மத்தியானத்துக்கு சாம்பார் வைக்கவா?’’

‘‘சரி வை. நான் திருப்பரங்குன்றம் வரை போய்ட்டு வந்துடுறேன்’’ என்று கூறிவிட்டு மீண்டும் மஞ்சள் பையை சுருட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார் ராகவன்.

மோதிரத்தை ஆராதியாவில் விற்றுவிட்டு, அப்படியே பஸ் ஏறி தெற்குமாசி வீதிக்கு சென்று சாரதியில் மூன்று பட்டு வேஷ்டியும், அப்படியே நல்லிக்கு சென்றுக்கு மூன்று பட்டுப்புடவைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பினார்.

வேர்வை துடைத்துக் கொண்டு வீட்டில் நுழைந்த அவரை பார்த்ததும், ஓடோடி வந்தாள் சிவகாமி. ‘‘ஏன் சாமீ… இம்புட்டு வெயில் கொளுத்துது…. இந்த வேகாத வெயில்தானா வெளிய போய்ட்டு வரணும், வாங்க… வாங்க… வந்து உட்காருங்க… ’’ அவரது கையில் இருந்த பையை வாங்கி ஓரத்தில் வைத்துவிட்டு, மோட்டாவை அவருக்கு எடுத்து போட்டாள்.

‘‘உஷ்… ஆமா… சிவகாமி சரியான வெயில் இன்னைக்கு. ஜவுளிக் கடையில கூட்டமும் ஜாஸ்தி. எல்லோருக்கும் வேஷ்டி சட்டை எடுத்திட்டேன்… உனக்கு பிடிச்சிருக்கா பாரு சிவகாமி’’ என்றார்.

‘‘அது இருக்கட்டு சாமீ… தண்ணிய குடிங்க…’’ என்று சொம்பை நீட்டினாள் சிவகாமி.

தண்ணீர் குடித்துவிட்டு, ‘‘அந்த ரெண்டாவது பையில இருக்கிற சேலையை எடுத்து பாரு சிவகாமி… உனக்கு பிடிச்ச பச்சைக்கலர் புடவை எடுத்திருக்கேன். மருமகள்களுக்கு நீலப்புடவை எடுத்திருக்கிறேன்’’ என்றார்.

பையில் இருந்த புடவைகளை எடுத்து பார்த்தடி, ‘‘சாமீ… இப்போ ஏன் இவ்வளவு செலவு பண்ணி பட்டுப்புடவை எல்லாம் எடுத்தீக…?’’ அங்கலாய்த்தாள் சிவகாமி.

‘‘அடி போடி இவளே… குடும்பத்தோட எல்லாரும் இந்த வருஷம் தீபாவளி கொண்டாடப் போறோம். நல்லபடியா ஆடை உடுத்த வேணாமா? சேலை எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் ராகவன்.

‘‘ரொம்ப நல்லாயிருக்கு சாமீ… நீங்க வாங்கியாந்தது இல்ல…’’ பெருமையுடன் சொன்னாள் சிவகாமி.

புன்முறுவலுடன் அதை ரசித்தார் ராகவன்.

அடுத்த நாள் மீண்டும் டவுனுக்கு சென்று புதிதாக பெட்ஷீட், போர்த்திக் கொள்ள போர்வை போன்றவற்றை வாங்கி வந்தார். திருப்பரங்குன்றத்துக்கு சென்று தலையணைகளுக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு, வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு வந்தார்.

அந்த இரண்டு நாட்களிலும் மனிதர் படும்பாட்டை பார்த்த சிவகாமிக்கு, மனசு பக், பக் என்றது. ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன்பு வயிற்றில் கட்டி என்று ஆப்ரேஷன் செய்துக் கொண்ட மனுஷன். இப்படி படபடவென்று இருப்பது அவளுக்கு கவலையாக இருந்தது.

அடுத்த நாள் காலை ராகவன், விடியற்காலையிலேயே எழுந்து குளித்து ரெடியாகி, விளாச்சேரியில் இருந்த ஐயப்பன் கோயிலுக்கும் போய்விட்டு வந்தார்.

அன்றுதான் ராகவனின் மகன்கள் வரும் நாள்.

வீட்டில் இருந்த சில மணி நேரத்தில் மணியை பார்ப்பதும், வாசலை பார்ப்பதுமாக ராகவன் பரபரவென்று இருந்தார்.

‘‘சாமீ… அவங்க வர்றப்போ வரட்டுமே… நீங்க ஏன் இப்படி பறக்குறீங்க…? பேசாம டிவிய போட்டு பாருங்க… ரொம்ப பதட்டப்படாதீங்க’’ என்று பொறுக்க மாட்டாமல் சொன்னாள் சிவகாமி.

சிவகாமி சொல்லிக் கொண்டிருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், வாசலுக்கும், வீட்டுக்கும் 10 தடவைக்கு மேல் நடந்திருப்பார். ஆனால், ராகவனின் மகன்களும், பேரன்களும் வந்ததாக தெரியவில்லை.

சின்னதாக ஒரு அலுப்பு வந்த நிலையில், டிவியில் செய்தியைப் போட்டார். அதில் மூழ்கியிருந்தவருக்கு, வாசலில் ஒரு கார் வந்து நின்றபோது மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொள்ள வாசலுக்கு ஓடினார்.

நினைத்தபடியே அவரது மகன்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பார்த்த ராகவன், ‘‘சிவகாமி, இன்னும் என்ன பண்ணிட்டிருக்க, ஆரத்திய கொண்டுவா…’’ என்று சத்தம் போட்டார்.

வீட்டில் இருந்து, ‘‘இந்த வந்துட்டேன் சாமீ…’’ என்றவாறு ஆரத்தி தட்டுடன் வந்தாள் சிவகாமி.

‘‘என்னம்மா இதெல்லாம்… நாங்க என்ன வேத்து மனுஷங்களா?’’ என்று பெரியவன் அன்பு கேட்டான்.

‘‘எம்புட்டு தூரத்தில இருந்து வந்திருக்கீங்க… யார், யார் கண்ணெல்லாம் பட்டதோ… நீங்களெல்லாம் நல்லா இருங்கணுங்கிறதுக்காகத்தான்யா’’ என்றார் ராகவன்.

ஆரத்தி எடுத்து முடிக்கிற வரைக்கும், குழந்தைகளை பிடித்து வைத்திருந்த சின்னவன் குமரன், குழந்தைகளின் கைகளை விடுவித்தான்.

‘‘தாத்தா…’’ என்று அவர்கள் ஓடோடி வந்து கட்டிக் கொண்டனர்.

அவர்களை அணைத்தபடி ஒருவன் குறைகிறானே என்று ராகவன் பார்க்க, சின்னவனின் கடைசி வாண்டு கிஷோர் மட்டும் தந்தையின் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனுக்கு, ராகவனை பார்த்த மாதிரியும் இருந்தது; பார்க்காத மாதிரியும் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக அண்ணன்களின் பேச்சில் அடிக்கடி அடிபட்டுக் கொண்டிருந்த தாத்தா, அவர் தான் என்று தெரிந்தது. ராகவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ராகவன் அவனைப்பார்த்து, ‘‘இங்க வாங்கய்யா… நீங்க தான் கிஷோராய்யா?’’ என்று இருகரம் நீட்டி கூப்பிட்டார்.

‘‘போடா… தாத்தா கூப்பிடுறார்ல்ல…’’ என்றான் சின்னவன் குமரன்.

மெல்லிய புன்னகையுடன் அருகில் வந்தான் கிஷோர்.

‘‘என்னய்யா… தாத்தாவ அடையாளம் தெரியலயா?’’ என்றபடி அவனை தூக்கி அணைத்துக் கொண்டார் ராகவன்.

‘‘மாமா… அவன் பார்க்கத்தான் அமைதியா இருக்கிற மாதிரி தெரியும்… பழகிட்டா… போதும்… போதும்னு ஆக்கிடுவான்’’ என்றாள் சின்ன மருமகள்.

‘‘இருக்கட்டும்… உன் வீட்டுக்காரனும் அப்படித்தான்மா சின்ன வயசில இருந்தான். அவங்க வாரிசில்ல… அப்படித்தானே இருப்பாங்க…’’ என்றார் ராகவன்.

அனைவரும் சிரித்துக் கொண்டே வீட்டில் நுழைந்தனர்.

காலையில இட்லி, பொங்கல், வடை என்று ஜமாய்த்திருந்தாள் சிவகாமி.

எல்லோரும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்தனர்.

‘‘யப்பா… இந்த மாதிரி ருசியா சாப்பிட்டு எத்தனை நாளாகுது’’ என்று அங்கலாய்த்தான் பெரியவன்.

தான் வாங்கியிருந்த வேட்டி, சேலைகளை அவர்களிடம் காண்பித்தார் ராகவன்.

அதற்குள் காப்பி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள் சிவகாமி.

சின்ன மருமகளும், பெரிய மருமகளும் அதை ஊற்றிக் கொடுக்க, மகன்கள் இருவரும் பெற்றோருக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து காண்பிக்க ஆரம்பித்தனர்.

எல்லாம் பார்த்து முடித்தபின்பு, ‘‘பசங்களா டவுனுக்கு போய் உங்களுக்கு டிரஸூம், பட்டாசும் வாங்கி வருவோமா… ரெடி ஆகுறீங்களா?’’ என்று பேரன்களை பார்த்து கூப்பிட்டார் ராகவன்.

‘‘ஓ…ஓ…’’ என்று ஒட்டுமொத்தமாக குரல் வந்தது.

‘‘ஏம்ப்பா…  நாங்கதான் இவ்வளவு வாங்கி வந்திருக்கோமே… திருப்பி நீங்க எதுக்காக இவங்களுக்கு வாங்குறீங்க?’’ பெரியவன் கேட்டான்.

‘‘விடுப்பா… என்ன இருந்தாலும், தாத்தா வாங்கி கொடுக்கலேன்னா நல்லா இருக்குமா? நான் கூட்டிட்டு போய்ட்டு வர்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க’’ என்றார்.

‘‘ஏன் சாமீ… ஒத்தையாளா அலைஞ்சிட்டு இருக்காதீக… அதுதான் பசங்க வாங்கி வந்திருக்காகல்ல’’ என்றாள் சிவகாமி.

‘‘விடு… நான் போய்ட்டு வந்துடுறேன்… மத்தியானத்துக்கு கறி வாங்கி சமைச்சுடு…  நேத்தே.. பாய்கிட்ட ஒன்றரை கிலோ சொல்லிட்டு வந்திட்டேன்’’ என்றார்.

‘‘டேய் சின்னவனே… நீயாவது அப்பாருகூட போய்ட்டு வாய்யா… மனுஷன் தனியாளா அலைஞ்சிட்டே இருக்காருய்யா’’ என்றாள் சிவகாமி.

‘‘அட போம்மா… நான் ரெண்டு நாளா பிளைட் ஜர்னியில ஒரே டயர்டா இருக்கேன்… இப்போ தூங்கினேன்னு வை… நாளை காலையிலதான் எந்திரிப்பேன்’’ என்று கூறியவாறு தூங்க உள்ரூமுக்கு சென்றான்.

எங்கே தாய் தன்னை போகச் சொல்லிவிடுவாளோ என்று பெரியவன், இன்னொரு அறையை நோக்கி விறுவிறுவென்று நடந்து கொண்டிருந்தான்.

ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராகவன், சட்டை போட்டுக் கொண்டு 4 பேரன்களை கூட்டிக் கொண்டு, பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

தெற்குமாசி வீதியில் தீபாவளி கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.

‘‘பசங்களா கூட்டம் ஜாஸ்தியா இருக்கு… யாரும் தொலைஞ்சு போய்டக்கூடாது… உங்க கைகள காட்டுங்க என் போன் நம்பரை எழுதி விடுறேன்… எங்கேயாவது தொலைஞ்சா கூட இந்த நம்பர்ல கூப்பிடச் சொல்லணும் ஓகேயா?’’ என்று கேட்டுவிட்டு, அவர்களின் கைகளில் போன் நம்பரை எழுதிவிட்டார்.

பின்னர் சின்னப்பேரனின் கையை பிடித்துக் கொண்டு,மற்றவர்களை முன்னேவிட்டு அவர் பின்னால் நடக்க, ஜவுளிக் கடைக்கு சென்றனர். அங்கு பேரன்களுக்கு ரெடிமேட் சட்டை பேண்ட் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

‘‘தாத்தா… இவ்வளவு பீப்பிள்ஸ் இருக்காங்க… இவங்க எல்லாம் முன்னாடியே பர்சேஸ் பண்ண மாட்டாங்களா? ஏன் லாஸ்ட் மினீட்ல கூட்டத்தில கஷ்டப்படுறாங்க…ஆன்லைன் மார்க்கெட்டுலதான் எல்லாமே கிடைக்குதே?’’ என்றான் பெரிய பேரன்.

‘‘நீங்க அமெரிக்காவ கணக்குல வச்சு பேசுறீங்கய்யா… இங்க வந்து வாங்குற மக்கள் எல்லாம் நடுத்தட்டு மக்கள். உங்க பாஷையில சொல்லணும்னா மிடில்கிளாஸ் பீப்பிள்ஸ். இவங்களுக்கு தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் போனஸ் கிடைக்கும். அதைவச்சுதான் அவங்க குடும்பத்துக்கு ஆடைகளை எல்லாம் வாங்குவாங்க… அதுமட்டுமில்லாம இப்படி குடும்பத்தோட கடைக்கு வந்து ஜவுளி வாங்குற மகிழ்ச்சி ஆன்லைன்ல கிடைக்குமா?’’ என்றார் ராகவன்.

தாத்தா ஏதோ சொல்கிறார் என்ற பாணியில் தலையாட்டினர் பேரன்கள்.

அவர்களை விளக்குத்தூண் ஜிகர்தண்டா கடைக்கு கூட்டிச் சென்று ஐஸ்கிரீம் போட்ட ஜிகிர்தண்டா வாங்கிக் கொடுத்தார்.

‘‘தாத்தா… சான்சே இல்ல… செம டேஸ்ட். இதுதான் ஜிகர்தண்டாவா… எங்க டாடி அடிக்கடி சொல்லிட்டு இருப்பார்’’ என்றான் 2வது பேரன்.

‘‘சாப்பிடுய்யா.. சாப்பிடுய்யா’’ என்றார் ராகவன்.

விளக்குதூண் பஜாரில் சாலையின் நடுவில் கூறு போட்டு விற்றுக் கொண்டிருந்த கம்பி மத்தாப்புகளையும், குச்சி மத்தாப்பு பெட்டிகளையும், ராக்கெட் பட்டாசையும் வாங்கி போட்டுக் கொண்டார்.

‘‘ஏன் தாத்தா… வீட்டிலதான் பிராண்டட் பட்டாசுகளைதான் வாங்கி வச்சிருந்தியே… அப்புறம் இது எதுக்கு அன்பிராண்டட் பட்டாசு… இதெல்லாம் நல்லா இருக்குமா?’’ என்றான் சின்னவனின் மகன்.

‘‘கண்ணு இவங்க எல்லாம்… ஏழை ஜனங்க… இந்த பட்டாசு வித்தா… அவங்களுக்கு ஒரு நூறு, இருநூறு கிடைக்கும்… பட்டாசு வித்துட்டு அவங்க அந்த பணத்தில தங்களோட பிள்ளைங்களுக்கு டிரசும் பட்சணமும் வாங்கிட்டு போவாங்க… இந்த மாதிரி நாம கொஞ்சம் வாங்கினாத்தானே அவங்களும் தீபாவளி கொண்டாட முடியும்?’’ விளக்கினார் ராகவன்.

‘‘ஓ… இதுல இவ்வளவு விஷயம் இருக்கா…. நீ ரொம்ப கைண்ட்மேன் தாத்தா’’ என்றான் பேரன்.

‘‘அப்படியில்ல கண்ணு… எங்கப்பா எனக்கு சொல்லிக்குடுத்தது… அதை நான் பின்பத்துறேன்’’ என்றார் ராகவன்.

‘‘அப்ப எங்க டாடி ஏன் தாத்தா இது மாதிரி எல்லாம் சொல்லித்தர்றதில்ல…?’’ பெரியவன் கேட்டான்.

‘‘நீங்க அமெரிக்காவில இல்ல இருக்கீங்க… அங்க எதுக்கு இந்தியன் கல்ச்சர்னு… சொல்லாமா விட்டிருக்கிலாம்யா… அங்க இந்த மாதிரி எல்லாம் ஏழைகள் இருக்க மாட்டாங்கல்ல…’’ என்றார் ராகவன்.

பொதுவாக தலையாட்டினர் பேரன்கள்.

பேரன்கள் சின்ன பைகளை கொடுத்துவிட்டு, பெரிய பைகளை அவர் தூக்கிக் கொண்டு வந்தார். கீழவாசல் வளைவில் பாயை போட்டு விற்றுக் கொண்டிருந்தனர்.

அங்கே நான்கு பாய்களை வாங்கினார்.

பின்னர் அவற்றை இரண்டு, இரண்டாக சேர்த்து கட்டித்தரச் செய்து எடுத்துக் கொண்டார்.

அதை வைத்துக் கொண்டு அந்த வழியாக ஆட்டோவை எதிர்பார்த்து காத்திருந்தார்.

‘‘ஏன் தாத்தா... வர்றப்போ பஸ்சிலதானே வந்தோம்… இப்பவும் பஸ்சிலேயே போகலாமே?’’ என்று கேட்டான் சின்னவனின் மகன்.

‘‘வர்றப்போ நம்மக்கிட்ட சாமான் எதுவும் இல்ல. அதனால பஸ்சுல வந்தோம். அஞ்சு பேருக்கும் சேர்த்து, 75 ரூவா தானே ஆச்சு… ஆனா இப்போ இவ்வளவு சாமானையும் தூக்கிட்டு போக முடியுமா? அதனாலத்தான் ஆட்டோவை பார்த்துட்டு இருக்கேன்’’ என்றார் ராகவன்.

‘‘தாத்தா இங்க இருந்து ஆட்டோவில நம்ம விளாச்சேரிக்கு எவ்வளவு கேட்பாங்க?’’ என்றான் பெரிய பேரன்.

‘‘ஒரு முண்ணூரூவா கேட்பான்யா’’ என்றார் ராகவன்.

‘‘அப்போ நாம வர்றப்போ…. 225 ருபீஸ் சேவ் பண்ணியிருக்கோம், இல்லையா தாத்தா ?’’ என்றான்.

‘‘ஆமாய்யா… அதுல தானே நாம ஜிகர்தண்டா சாப்பிட்டோம்’’ என்றார் ராகவன்.

‘‘பென்டாஸ்டிக் தாத்தா… நம்மளால முடியும்னா பப்ளிக் டிரான்ஸ்போர்ட்…  முடியலன்னா பிரைவேட் டிரான்ஸ்போர்ட்ட… வாவ்… சூப்பர் எகனாமிக் பாலிசி தாத்தா’’ என்றான் பெரிய பேரன்.

அதற்குள் ஆட்டோ ஒன்று வந்து நிற்க, பேரம் பேசி ராகவன் ஏற்கனவே சொன்னபடி 300 ரூபாய்க்கு படிய வைத்தார். எல்லோரும் ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வரவும், வாசலிலேயே கறிக்குழம்பு வாசனை கமகமனெ வரவும் சரியாக இருந்தது.

பசங்களை பார்த்ததும், மருமகள்கள் வந்து, ராகவனின் கையில் இருந்த பைகளை வாங்கி உள்ளே கொண்டு சென்று வைத்தனர்.

‘‘என்னம்மா சாப்பிட்டாச்சா?’’ கேட்டார் ராகவன்.

‘‘இல்ல மாமா… உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கோம்’’ என்றாள் சின்ன மருமகள்.

‘‘பசங்க எங்கம்மா?’’ என்றார் ராகவன்.

‘‘அவங்க ஜெட் லாக்ல இருக்காங்க மாமா… ரெண்டு பேரும் போய் தூங்கிட்டாங்க… அவங்க எந்திரிக்கப்போ… எந்திரிக்கட்டும்… நீங்க கை, கால் கழுவிட்டு வாங்க மாமா… சாப்பிடலாம்’’ என்றாள் பெரிய மருமகள்.

‘‘ஆமா… ஆமா… பாவம் பசங்க… தூங்கட்டும் விடும்மா’’ என்று கூறியவாறு, கை, கால்களை அலம்பிவிட்டு வந்து அமர்ந்தார்.

அதற்குள் சிவகாமி, சாப்பாடு பாத்திரங்களை கொண்டு வந்து வைத்திருந்தாள்.

அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

சின்ன பேரன் நல்லி எலும்பை சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டே… ராகவன் சாப்பிட ஆரம்பித்தார்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்னர், ராகவன் சின்னதாக ஒரு தூக்கம் போடலாம் என்று ஹாலிலேயே ஓரு ஓரத்தில் படுத்துக் கொண்டார். அலைந்துவிட்டு வந்திருந்ததால், தூங்கிய சில நிமிடங்களிலேயே குறட்டை விட ஆரம்பித்தார். அவரை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, பேன் சுவிட்சை போட்டுவிட்டு சென்றாள்.

மாலையில் முறுக்கு மற்றும் பலகாரங்களுக்காக, சிவகாமி, பாத்திரங்களை தயார் செய்துக் கொண்டிருந்தபோதுதான் ராகவன் எழுந்தார்.

‘‘என்ன சிவகாமி… இவ்வளவு நேரம் ஆயிடிச்சு… எழுப்பி விட்டிருக்கலாம்ல?’’ லேசாக கடிந்து கொண்டார்.

‘‘ஏஞ்சாமீ…நீங்க என்னைக்காவதுதான் இப்படி தூங்குறீங்க… இந்த ரெண்டு நாளா நீங்க அலைஞ்ச அலைச்சல் என்ன… அப்புறம் தூக்கம் வராதா… அதை வேற நான் கெடக்கணுமா? நல்லா தூங்குங்க சாமீ… ஒண்ணும் அவசரம் இல்ல…’’ என்றாள் சிவகாமி.

‘‘அடி போடி… இவளே… பசங்க வந்திருக்காங்க… மருமகள்க வந்திருங்காங்க… இப்போ போய் தூங்கு, தூங்குன்னு சொல்லுறீயே…’’ என்றபடி துண்டை உதறிக்கொண்டு முகம் கழுவ உள்ளே சென்றார்.

பேரப்பிள்ளைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ராகவன் அவர்களை பார்த்துக் கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார். அதற்குள் காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் சிவகாமி.

‘‘பசங்களா… பாட்டி முறுக்கு சுட்டுக்கிட்டு இருக்காங்க பாருங்க… அவங்களுக்கு போய் ஹெல்ப் பண்ணுங்க…’’ என்றார் அவர்களை பார்த்து ராகவன்.

அவர்கள் ‘‘ஹோய்…’’ என்று கத்திக் கொண்டே சிவகாமியுடன் உள்ளே சென்றனர்.

உள்ளே முறுக்கு, அதிரசம் என்று விதவிதமாக வாசனை வந்துக் கொண்டிருந்தது. அத்துடன் மருமகள்கள், பேரன்களின் சத்தமும் வந்து கொண்டிருந்தது. இதை கேட்பதற்குத்தானே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தோம் என்று சந்தோஷமாக அந்த சப்தங்களை அனுபவித்தார்.

பலகார வேலைகள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக அடுப்புகளை உள்ளே கொண்டு வைத்தபோதுதான் சின்னவனும், பெரியவனும் எழுந்து வந்தார்கள்.

அதற்குள் அவர்களுக்கு இட்லி  தயார் செய்திருந்தாள் சிவகாமி.

‘‘வாங்கப்பா… நல்லா தூங்குனீங்களா?’’ கேட்டார் ராகவன்.

‘‘ஆமாப்பா… செம தூக்கம்…’’ என்றனர் இருவரும்.

‘‘போய் ரெப்ரஸ் ஆகிட்டு வந்திருங்கய்யா… சாப்பிடலாம்’’ என்றார் ராகவன்.

அவர்கள் வருவதற்கும், சிவகாமி இட்லிகளை கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது.

மல்லிப்பூ போன்று இருந்த இட்லிகளையும், மட்டன் குழம்பையும் ஊற்றிக் கொண்டு ஒரு பிடிபிடித்தனர் சின்னவனும், பெரியவனும்.

அதற்குள் பேரன்கள் விளையாடிக் கொண்டிருந்த பேரன்கள் வரவே, அவர்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

‘‘இதுக்காகவே… அமெரிக்காவில இருந்து இங்க வந்துடனும்பா…’’ என்றான் பெரியவன்.

‘‘வந்துடுங்கய்யா… இங்க கடைசி காலத்தில எங்களுக்கும் உதவியா இருக்கும்ல’’ என்றார் ராகவன் படாரென்று.

‘‘அட போப்பா… இந்த சாப்பாடுக்கும், இட்லிக்கும், ரெண்டரை லட்ச ரூபா சம்பள விடச் சொல்லுறீயா? ஏதோ அப்பப்போ வந்தோமா சாப்பிட்டு போனோமான்னு இருக்கலாம். அதுக்காக ஒரேயடியா வேலை எல்லாம் விட்டுட்டு வர முடியாதுப்பா…’’ என்றான் சின்னவன்.

‘‘ஆமாம்ப்பா… இங்க இவ்வளவு சம்பளம் தர மாட்டங்கல்ல’’ என்றான் பெரியவனும்.

அவர்களை தன் அருகிலேயே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த ராகவனுக்கு அவர்களின் பேச்சு, கண்ணின் ஓரத்தில் நீர்த்துளிகளை பிறப்பித்தது. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருமுவது போன்று தன்னை தானே தட்டிக் கொண்டு, தண்ணீர் குடித்தார்.

கணவரை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, ‘‘டேய்… பணம், பணம்னு அலையாதீங்கடா… கொஞ்சமா சம்பாதிச்சாலும் நிறைவா வாழ்ந்திட்டு போகணும்…’’ என்றான் சிவகாமி.

‘‘அட விடும்மா… பசங்க இப்ப என்ன சொல்லிட்டாங்கன்னு திட்டுறே… போய் ரெண்டு ஆம்பிளேட் போட்டு எடுத்தாந்தா… பேரப்பிள்ளைகள் சாப்பிடுவாங்க போ…’’ என்று அவளை அடுக்களைக்கு விரட்டினார் ராகவன்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டனர். இருந்த இரண்டு அறைகளில் மகன்கள் படுத்துக் கொண்டதால், ராகவன் ஹாலிலேயே படுத்துக் கொண்டார். சிவகாமி, வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வருவதற்குள் அவர் குறட்டை விட ஆரம்பித்திருந்தார். புதிதாக முனகலாகவும் இருந்தது அவரது சப்தம். சிவகாமிக்கு விம்மிக் கொண்டு வந்தது. மகன்கள் மீதான பாசத்தில் அவர் தவிப்பதும், ஆனால், அவர்கள் அதைக் கண்டுக்கொள்ளாமல் பணமே கதியென்று வெளியூரில் கிடப்பதும் அவளை பாடாய் படுத்தியது.

ராகவனுக்கும், அவளுக்கும் 15 ஆண்டுகள் வித்தியாசம். இதுவரையில் ஒரு நாள் கூட ராகவன், அவளை திட்டியது கூட இல்லை. அதிகபட்சமே ‘‘போடி இவளே’’ என்பதுதான் அவரது திட்டாக இருக்கும். மகன்களை பெரிய ஆளாக்கி பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் கடன் கிடன் வாங்கி அவர்களை பெரிய படிப்புகளை எல்லாம் படிக்க  வைத்தார். ஆனால், அவர்கள், இவர்களைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் வெளியூரில் செட்டில் ஆகிவிட்டார்கள். ஒரு வார்த்தைக்கு கூட இவர்களை தங்களுடன் வந்து இருக்குமாறு கூறவில்லை.

ராகவனுக்கு ஆஸ்துமா பிரச்னையும் இருந்தது. எங்கே அவர் அங்கு வந்தால், தங்களுக்கு வேலை இழுத்து விட்டுவிடுவார் என்று அவர்கள் நினைத்து விட்டார்களோ என்னவோ… ஆனால், இதுவரையில் மகன்களை திட்டவோ, அவர்களை தப்பாக பேசவோ ராகவன் அனுமதித்தில்லை.

ஆனால், சிவகாமிக்குத்தான் அவர்களை திட்டி தீர்க்க வேண்டும் என்று தோன்றும். கணவருக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். அப்படி அவரது முகத்தை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கு எப்போது தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.

மூன்று மணிக்குத்தான் எழுந்தாள்.

அவளது நடமாட்டத்தை கேட்டு ராகவனும் எழுந்துவிட்டார். இருவரும் அடுத்தடுத்து எண்ணெய் தேய்த்து குளித்து முடித்தனர். ஆனால் இன்னமும் மகன்கள் அறையில் இருந்து எழுந்ததற்கான எந்த சத்தமும் கேட்கவில்லை.

மணியை பார்த்தார் 4.30 ஆகியிருந்தது.

இப்போ இருந்து ஒவ்வொருத்தரா குளிச்சா தானே சரியா இருக்கும் என்ற நினைப்பி்ல், இரு அறைகளையும் மெதுவாக தட்டி எழுப்பினார். மருமகள்கள் எழுந்து வந்தனர்.

‘‘சுடுதண்ணீர் ரெடியாடிச்சும்மா… குளிச்சு தயாராகிடுங்க’’ என்றார் ராகவன்.

வேண்டா வெறுப்பாக அவர்கள் சென்றனர்.

அறையில் சென்று பேரப்பிள்ளகளையும், மகன்களையும் எழுப்பினார். அவர்களும் பயங்கர சோம்பலுடன் எழுந்து, மணியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பெரிய பேரன் தான் கேட்டான், ‘‘தாத்தா… என்ன இது 4.30க்கு வந்து எழுப்பி, குளின்னு சொல்லுறே… நீ ரொம்ப பேட் தாத்தா’’ என்றான்.

‘‘இன்னைக்கு தீபாவளியில்ல கண்ணு… சூரியன் வர்றதுக்குள்ள எழுந்து எண்ணெய் தேய்ச்சு குளிக்கணும்பா’’ என்றார் ராகவன்.

அவர்களை செல்லம் கொஞ்சி எழுப்பி புழக்கடைக்கு அழைத்து சென்றார். அவரே எல்லோர் தலையிலேயும் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி போட்டு காய்ச்சி வைத்திருந்த  நல்லெண்ணெய்யை பரக்க, பரக்க தேய்த்துவிட்டார். சின்னப் பேரன் தான் மிகவும் அடம் பிடித்தான். அவனையும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி எண்ணெய் தேய்த்து, அரப்பு போட்டு குளிக்க வைத்தார். அந்த அதிகாலை வேளையில் எண்ணெய் குளியல் முடித்த கையோடு, புது ஆடைகளை வைத்து சாமியிடம் படைத்தார் ராகவன்.

அவற்றை பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு, ‘‘எல்லாரும் போட்டு வாங்க… பட்டாசு வெடிக்கலாம்’’ என்று குதூகலப்படுத்தினார் ராகவன். மகன்களுக்கும், மருமகள்களுக்கும் ஆடைகளை எடுத்துக் கொடுத்தார். அடுப்படியில் இருந்த சிவகாமியையும் கூப்பிட்டு சேலையை கொடுத்து உடுத்திக் கொண்டு வருமாறு கூறிவிட்டு, தானும் புது வேட்டியை மாற்றும் வேலையில் ஈடுபட்டார்.

எல்லோரும் புத்தாடையில் வர, மகன்கள் ஜோடியாக பெற்றோர் காலில் விழுந்து ஆசி வாங்கினர். அவர்களுடன் பேரன்களுடன் காலில் விழுந்தனர்.

எல்லோருக்கும் நூறு ரூபாயை தீபாவளி காசாக கொடுத்தார் ராகவன்.

பேரன்கள் மகிழ்ச்சியுடன் பட்டாசு டப்பாக்களை எடுத்துக் கொண்டு, வெளியே சென்றனர்.

இந்த நான்கு நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை.

சின்னவனும்,பெரியவனும் தங்கள் மாமனார் வீடுகளுக்கு சென்றுவிட்டு, அப்படியே ராஜஸ்தான் டூருக்கு செல்லும் பிளானில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

ராகவனுக்குதான் மனம் ஏனோ தவித்துக் கொண்டிருந்தது. இன்றைக்கு மகன்கள் ஊருக்கு கிளம்பி விடுவார்கள். இனி எப்போது வருவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

சின்னவனும், பெரியவனும் விபூதியை இட்டுக் கொள்வதற்காக சாமி மாடம் இருக்கும் அறைக்கு வந்தனர். அங்கு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்த சிவகாமி. அவர்களை புழக்கடைக்கு அழைத்து சென்றாள்.

‘‘எலேய்… நீங்க ரெண்டு பேரும், குடும்பத்தோட ஊருக்கு வந்து போனதில ரொம்ப சந்தோஷம். ஆனா, இனிமே தயவு செஞ்சு, ஊருக்கு வந்துடாதீங்க… நானோ… உங்க அப்பாரோ போய் சேர்ந்திட்டாங்கன்னு தகவல் வந்தா மட்டும் வாங்க…’’ என்றாள் சிவகாமி.

‘‘என்னம்மா… இப்படிச் சொல்லுறே?’’ என்றான் பெரியவன்.

‘‘டேய் உடம்பு சரியில்லாத மனுஷன்டா அவர்… கையில இருந்த சேமிப்பும் வீட்டை சரி செய்றதுல கரைஞ்சிடுச்சு… அவர் தன்னோட அதிர்ஷ்டமா கருதுற மோதிரத்தை கூட ரெண்டு நாளைக்கு முன்னாடி வித்திட்டாரு… தன்னோட  பணமில்லாம கஷ்டப்பட்டப்போக்கூட அந்த மோதிரத்தை விக்கணும்னு அவர் நினைச்சில்லதடா… உங்ககிட்ட இருந்து ஒரு பைசாவ கூட வாங்கவும் அவர் விடல… தன்னோட கால்ல நிக்கணும்னு நினைக்கிற மனுஷன்டா அவரு… இன்னைக்கு நீங்க வர்றீங்கண்ணு… சொன்னவுடனே அந்த மனுஷன் தன்னோட கஷ்டப்பத்தி கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்காம மோதிரத்தை போய் வித்துட்டு வந்துட்டாரு… என்கிட்ட கூட இன்னமும் சொல்லல… அவரோட விரலை பார்த்தும், செலவு செய்றதை பார்த்தும் நானே தெரிஞ்சுக்கிட்டேன். அந்த மனுஷன்கிட்ட போய் சம்பளத்தைப் பத்தி பேசி… மனச உடைச்சிட்டீங்களேடா… நீங்களெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சு என்னடா… ஒரு அப்பன்கிட்ட ஆறுதலா ஒரு நாலு வார்த்தை பேசத்தெரியல… நீங்களெல்லாம் அவர் கால் தூசுக்கு சமம்டா… இனிமே… இங்க வந்து கொஞ்சம் நஞ்சம் இருக்கிற அவரோட பலத்தையும் குறைச்சிடாதீங்க…’’ என்று கையெடுத்து கும்பிட்டாள் சிவகாமி.

இருவரும் பேச வார்த்தைகளின்றி விக்கித்து வெளியேறினர்.

பெட்டி படுக்கைளுடன் காரில் கிளம்பிய மகன்களை கண்கள் ஓரம் வடிந்துக் கொண்டிருந்த கண்ணீருடன் விடைகொடுத்தார் ராகவன்.

இனி மகன்கள் அருகில் இல்லையே என்ற கவலையுடன் தன் கணவன் இருந்தாலும், அவர்கள் வருகையினால், அவர்களுக்காக ஓடியாடி உடம்பை கெடுத்துக் கொள்ளாமல் நிம்மதியாக இருப்பார் என்ற மகிழ்ச்சியில் மகன்களுக்கு சந்தோஷமாக கையாட்டி விடை கொடுத்தாள் சிவகாமி.

-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks