ஆயுள் ரேகை




‘‘அப்பா  எதிர்த்தாப்பில வீடு கட்டிட்டு இருக்காரே வசந்த், அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா…’’ திக்கித்திணறி சொன்னாள் சுமலதா.
நிதானமாக அவளைப் பார்த்தார் சுந்தரம்.
‘‘நீ தெரிஞ்சுத்தான் பேசுறியா, இல்லாட்டி பிரம்மையில பேசுறீயா?’’ கோபத்துடன் கேட்டார்.
‘‘இல்லேப்பா… அவரை ரொம்ப நாளா பார்த்துட்டு வர்றேன். ரொம்ப பொறுமைசாலி. அதேசமயம் திறமையானவர். ஒவ்வொரு செயலை பார்த்து, பார்த்து செய்றப்பவே, அவரோட திறமையை தெரிஞ்சுக்கிட்டேன்’’ என்றாள்.
சுமலதா அருகே இருந்த தாய் கமலாவும் மகளுக்கு ஆதரவாக கணவரிடம், ‘‘ஆமாங்க… நானும் அந்த பையன பார்த்தேன். ரொம்ப நல்லவனா இருக்கான். பொண்ணோட மனசை புரிஞ்சுக்கிட்டு அவளுக்கு அந்த பையனையே கட்டி வச்சிடலாமே?’’ என்றாள்.
‘‘என்னான்னு சொல்றது…. ரெண்டு பேருக்கும் முத்திப்போச்சுன்னுதான் சொல்லணும்’’ தலையில் அடித்துக் கொண்டார் சுந்தரம். அவர்களிடம் பதில் ஏதும் கூறாமல், திண்ணையில் வந்து அமர்ந்தார்.
அப்போதுதான் வசந்த் என்கின்ற அந்த வாலிபன், தான் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் முன்பு வந்து பைக்கை நிறுத்தினான். பார்ப்பதற்கு லட்சணமாகத்தான் இருந்தான். ஆனால், ‘‘இவனைப்போய்…’’ என்று மனதில் நினைத்துக் கொண்டார் சுந்தரம்.
இரவு முழுக்க, மனைவியும், மகளும் சேர்ந்து அவரை வற்புறுத்தி ஒரு வழியாக சம்மதிக்க வைத்துவிட்டார்கள்.
‘‘வேறு வழியில்லை… இந்த பையனை விட்டால் வேறு ஆளை கட்டிக்கிற மாட்டேன் என்ற ரீதியில் மகள் வந்துவிட்ட பிறகு, அவளை எப்படி சமாளிக்க முடியும்’’ மனதில் நினைத்துக் கொண்டார் சுந்தரம்.
காலையில் எழுந்து குளித்து வேகமாக ரெடியாகிவிட்டார். எப்படியும் இன்னைக்கு அந்த பையன் வீட்ட பார்க்க வருவானே… அப்போ பார்த்துட வேண்டியதுதான் என்று திண்ணையில் உட்கார்ந்துவிட்டார்.
தூரத்தில் அந்த பையன் பைக்கில் வருவது தெரிந்தது. இடது பக்கமாக வசந்த் வந்து கொண்டிருந்ததால்,  சாலையின் எதிர்ப்புறத்துக்கு சென்று நின்றுக் கொண்டார்.
வசந்த் அருகில் வரும் சமயம் வேட்டியை மடித்து கொண்டு நிற்க, எதிர்பாராத நேரத்தில் ஒரு பெண் ஓடிவந்து அவரை சாலையின் ஓரத்திற்கு தள்ளிவிட்டாள்.
இந்த களேபரத்துக்குள் வசந்த் வீட்டின் முன்வந்து பைக்கை நிறுத்தினான்.
தன்னை தள்ளிவிட்ட பெண்ணிடம், ‘‘என்னை ஏம்மா தள்ளிவிட்ட?’’ கோபத்துடன் கேட்டார் சுந்தரம்.
‘‘ஏன்யா… என் பையனை கொல்லப்பார்த்தீங்களே…. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என் பையன் நூறு வருஷம் நல்லா வாழணும்… இனிமே அவனை ஏதாவது செய்யணும்னு நினைச்சீங்க… உங்களை உண்டு இல்லேன்னு பண்ணிடுவேன்…’’ என்று கத்திக் கொண்டிருந்தாள் கலாவதி.
பைக்கை நிறுத்திய வசந்தின் செல்போன் அலறியது. பைக்கை நிறுத்தும்போதே காற்று திடீரென மிக வேகமாக வீசியதால், கண்ணில் விழுந்த தூசியை கசக்கியவாறு செல்போனை எடுத்துப் பார்த்தான்.
அப்பாவின் நம்பரை பார்த்ததும் உடனடியாக எடுத்து, ‘‘ஹலோப்பா…’’ என்றான்.
‘‘வசந்த்…  அம்மா திடீர்னு நம்மள எல்லாம் விட்டு, ஹார்ட்அட்டாக்கில போய்ட்டாடா… நான் என்ன பண்றதுன்னு தெரியல… உடனே கிளம்பி வாப்பா’’ என்று உடைந்து அழுதார்.
வசந்த்தின் கண்ணில் இருந்து பெருக்கெடுத்த கண்ணீரை, வேகமாக வந்து காற்று துடைத்துவிட்டு சென்றது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks