பலான படமும், வரலாறும்






அது 11வது படித்துக் கொண்டிருந்த நேரம்.
அன்றயை தினம் அரையாண்டு தேர்வு முடிந்திருந்த நேரம். விடுமுறை முடிந்து பள்ளி திறந்திருந்ததால், அன்று அனைத்து ஆசிரியர்களும் திருத்தப்பட்ட விடைத்தாள்களை கொடுப்பார்கள் என்று அனைத்து மாணவர்களும் திக்… திக்…  திக்…ல் இருந்தனர்.
இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். நான் கடைசி பெஞ்ச், மன்னர்களில் குறுநில மன்னன். இதனால் பயம் சற்று அதிகமாகவே இருந்தது.
பிளஸ் 1ல் அனைத்து பாடங்களிலும் 40க்கு மேல் எடுத்திருந்தால், அவர்கள் முழு ஆண்டு எழுதாவிட்டாலும், பாஸ் என்று ஏதோ ஒரு பிரம்மஹத்தி எங்களுக்கு சொல்லி வைத்திருந்தது. அதனால், எல்லா பாடத்திலும் 40 வந்துவிட வேண்டும் என்று முனிச்சாலை முனி முதல், பெரியத்தெரு தூண் விநாயகர் வரையில் வரும்போது வேண்டிக் கொண்டு வந்திருந்தோம். இந்த ‘தோம்’முக்கு காரணம் நண்பர்கள் குழு.
முதலில் வந்தது, கணக்கு வாத்தியார். மனுஷன் படு கண்டிஷனானவர். பிறந்தபோதே முகம் அப்படி அமைந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு ‘ஜெ’ ஓவியத்தில் வரும் ஹீரோ போன்று கடுமையாக இருப்பார். சிரிக்கவே மாட்டார். சிரித்தால் மாரக் கேட்டு விடுவார்கள் என்று பயமோ என்னவோ?
அரக்க, பறக்க பேப்பரை பார்த்தால் 39 வந்திருந்தது. பாஸ் என்றாலும் கூட, ஒரு மார்க்கில் முழு பரீட்சை ஆட்டோமேடிக் (?) பாஸ் போய்விட்டதே என்று வருத்தம் மேலோங்கியது. எல்லோரும் பேப்பரை சரிபார்த்து கொடுத்த பின்னர், எதுக்கும் கேட்டு பார்ப்போமே என்று நினைத்து மெதுவாக வாத்தியாரிடம் போய், ‘‘சார் ஒரு மார்க் வந்தா 40 வந்துடும்’’ என்று இழுத்தேன்.
‘‘அதுக்கு….?’’ என்று அதட்டலாக வந்தது வார்த்தை.
‘‘10 மார்க் கிராப்புக்கு 6 மார்க் போட்டிருக்கீங்க… அதுக்கு ஒரு மார்க் சேர்த்து போட்டீங்கன்னா 40 வந்துடும்… அப்பாக்கிட்ட தைரியமா ராங்க் கார்டை காட்ட முடியும்’’ என்றேன்.
‘‘உன் மூஞ்சிக்கெல்லாம்  இந்த மார்க்கே ஜாஸ்தி….  போய் உட்காரு’’ என்று சடாரென்று பேப்பரை பிடுங்கிக் கொண்டார்.
தொங்கிப்போய்விட்டது முகம். முனிச்சாலை முனியை நாளையில இருந்து கும்பிடக்கூடாது என்று கருவிக்கொண்டு வந்து உட்கார்ந்தேன்.
அந்த வகுப்பு முடிந்த நிலையில், அடுத்த வகுப்பு ஆங்கில பீரியட்.
கணக்கை கூட நண்பர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டு திக்கித்திணறியாவது போட்டுவிடுவேன். ஆனால், இந்த ஆங்கில பாடம்? மனப்பாடம் என்பதே என் ஜீனில் கிடையாது என்று யாரோ ஒரு டியூஷன் மகான் சொன்னதாக ஞாபகம். தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம். அப்போ இங்கிலீஷில் என்று கேட்கக்கூடாது.
அந்த விடைத்தாளிலும், யாரோ சொல்லி வைத்தது போன்று 39 வந்து நின்றிருந்தது.
அடங்கொக்கா மக்கா… என்று என்னையே நானே திட்டிக் கொண்டேன்.
ஆங்கில வாத்தி… கணக்கு வாத்தியை விட சீனியர். அவர் வாயை திறந்தாலே மவுன்ட் பேட்டன்  பிரபு, குலை, குலையாய் வந்து விழுவார். சார் என்று கேட்டாலே…. குலை தள்ள ஆரம்பித்துவிடுவார். திட்டுக்களை இப்படி வேற்று பாஷையில் வாங்கிக் கொள்வது எப்படியிருக்கும்?
முயற்சி  திருவினையாக்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே.
அவரிடம், ‘‘சார்… ஒரு மார்க் போட்டீங்கன்னா…’’ என்று தான் கேட்டிருப்பேன். இதில் என்ன தவறு? சொல்லுங்கள் மக்கா!
அந்த  வாத்தியார்,  ‘‘நான்சன்ஸ் ஆப் த  ஸ்டூபிட் ஆப் த இண்டியன் ஆப் த கம்னாட்டி’’ முடித்தார்.
இதில் எனக்கு புரிந்த ஒரே வார்த்தை கம்னாட்டி மட்டுமே.
முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு பெரிய வீதி விநாயகரையும் கும்பிடுவதில்லை என்று முடிவுடன் வந்து அமர்ந்தேன்.
சோகத்திலும்  ஒரு ஆறுதல், மற்ற பாடங்கள் அனைத்திலும் 50க்கு மேல். சரி கணக்கும், ஆங்கிலமும் தானே… போய் தொலையுது என்று மார்பில் தட்டி என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டேன். கொண்டோம்.
நண்பன் கோபாலுக்கும் ஒரு பாடத்தில் 38 வந்திருந்தது.
அதனால் அவனுக்கும் வருத்தம் இருந்தது.
அன்று மாலை அவன் வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அவரது தந்தை, கூடுதல் வருமானத்துக்காக அவரது வீட்டில் இருந்த விசிஆர் எனப்படும் வீடியோ கேசட் ரெக்கார்டரை, (சுருக்கமாக அந்த காலத்தில் டெக் எனப்படும்) வாடகைக்கு விட்டு வந்தார். அப்போது நேரம் 9.30 மணி இருக்கும்.
கோபாலின் தந்தை வந்து பழைய குயவர்பாளையத்தில் ஒரு வீட்டில் டெக்கை வாடகைக்கு கேட்டுள்ளார். ரெண்டு பேரும் போய் குடுத்திட்டு வந்திடுங்க என்றார்.
சரி என்று டெக்கையும், பேப்பர் பண்டலில் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டிருந்த இரண்டு கேசட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். இதற்கு முன்பும் இதுபோன்று, டெக்கை குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று, இணைப்பை கொடுத்துவிட்டு படத்தை போட்டுவிட்டு வந்துள்ளோம். ஆனால், இம்முறை கேசட் பேப்பரில் சுற்றப்பட்டிருந்ததால், சந்தேகமாக இருந்தது.
இதனால் கோபாலிடம் கேட்டேன். ‘‘ஏண்டா கேசட் பேப்பரில் சுற்றியிருக்கு?’’ என்றேன்.
‘‘அது பலான படம்… அதனால பேப்பர் போட்டியிருக்காங்க…’’ என்றான்.
‘‘அடப்பாவி… இதை எப்படி நம்மக்கிட்ட உங்கப்பா கொடுத்தார்?’’ என்றேன்.
‘‘அதுதான் நாம பார்த்துடக்கூடாதுன்னு பேப்பரை சுற்றி ரப்பர் பேண்ட் போட்டிருக்கார்’’ என்றான்.
‘‘ஓ… அப்படியா போவுது கதை?’’ என்று சிரித்தேன்.
நாங்கள் போனது ஒரு பழைய ஓடுபோட்ட வீடு.
அங்கு ஒரே ஒரு ஒல்லிக்குச்சி ஆள் இருந்தான். அவன்  முன்னிலையில் டெக்கை போட்டுவிட்டு, கேசட்டை போடும் இடத்தை காட்டி அங்கே உள்ளே தள்ளினால் போதும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தோம்.
‘‘சரி… சரி… நீங்க கிளம்புங்க’’ என்றார் அந்த ஒல்லி ஆள்.
‘‘அவரிடம் ரூ.100ஐ வாங்கிக் கொண்டு நாளைக்கு காலையில் வருவோம்’’ என்று கூறிவிட்டு வெளியே வந்தோம்.
தினமணி தியேட்டர் எதிரே பட்டர்பன் சாப்பிட்டுவிட்டு, கமுதிப்பால் குடித்தோம். அப்போதுதான் நண்பன் கோபால் திடீரென ஒரு டவுட் கேட்டான்.
‘‘டேய்… டெக்கில கலர் பட்டன் தட்டிவிட்டியா?’’ என்று கேட்டான்.
‘‘நான் பண்ணல, நீயும் பண்ணலியா?’’ என்று கேட்டேன்.
டெக்கில் கலர் பட்டன் என்று ஒன்று இருக்கும். 1980களில் கறுப்பு வெள்ளை டிவிதான் பெரும்பாலான வீடுகளில் இருக்கும். கலர் டிவி வெகு சிலர் வீடுகளில் மட்டுமே இருக்கும். அதில் ‘பால்’ மோடை மாற்றும் சுவிட்ச்தான் அந்த பட்டன். அதை தட்டிவிட்டால்தான் படம் கலரில் வரும். இல்லாவிட்டால், படம் கருப்பு, வெள்ளையில்தான் தெரியும்.
‘‘ஐய்யய்யோ… அவிங்க மறுபடியும் ஆள அனுப்பிவிட்டுடுவாய்ங்களே… பேசாம சிரமம் பார்க்காம மறுபடியும் போய், அதை போட்டுவிட்டு வந்துடுவோம் வாடா’’ என்றான்.
‘‘அப்போ நீ சினிமாவுக்கு கூட்டிட்டு போகணும் சரியா?’’ என்றேன்.
டீல் போட்டாத்தானே சரியா இருக்கும்(?).
‘‘சரி வந்து தொலை’’ என்றான்.
மறுபடியும் அந்த வீ்ட்டுக்கு போனோம்.
இம்முறை அந்த வீட்டில் சுமார் 10 பேர் இருந்தார்கள். ஆனால், அறை கும்மிருட்டாக இருந்தது.  பலான படம் கருப்பு, வெள்ளையில் ஓட ஆரம்பித்திருந்தது. அப்போதுதான் போட்டிருப்பார்கள் போலும். கதாநாயகன் (?), கதாநாயகி(?) பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் அருகில் இருந்தவரிடம், ‘‘என்னடா பேசிட்டே இருக்காங்க…?’’ என்றார்.
அருகில் இருந்தவர், ‘‘இப்போ தானே போட்டிருக்கு போகப் போக நல்லாயிருக்கும்’’ என்றார்.
நாங்கள் அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்தோம்.
அறை கும்மிருட்டாக இருந்ததால், நண்பன் கோபால், டியூப்லைட் சுவிட்சை போட்டான்.
அவனுக்கு எப்படி சுவிட்ச் இருக்கும் இடம் தெரியும் என்று மிஸ்டர்  அன்பு கேட்பது புரிகிறது. அந்த சுவிட்ச் போர்டில் இருந்துதான், எக்ஸ்ட்ரா வயர் பாக்சில் இணைப்பு கொடுத்து டெக்குக்கு கரண்ட் கனெக்‌ஷன் கொடுத்திருந்தோம். அதனால், வீட்டில் நுழைந்தவுடன் வலதுபுற சுவற்றில் இருந்த கரன்ட் பட்டன்கள் முன்கூட்டியே எங்களுக்கு தெரியும்.
விளக்கு போட்டவுடன், அக்னி நட்சத்திரம் படத்தில் வி.கே.ராமசாமியைப் போல் ‘‘என்னய்யா… பேசிக்கிட்டே இருக்காங்க…’’ என்று மிகத்தெளிவாக கேள்வி கேட்ட ஆளைத்தான்.
அந்த ஆள் என் கணக்கு வாத்தி.
பதில் சொல்லியவர் ஆங்கில வாத்தி.
பக்கத்தில் இருந்தது, தமிழ்,  கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஜூவாலஜி, பிடி என்று அனைத்து துறையும் அங்குதான் ‘வரலாற்று’ பாடத்துக்காக வந்திருந்தது.
எங்களை பார்த்ததுதான் தாமதம், அனைத்து துறைகளும் மெதுவாக தலையை திருப்பிக் கொள்ளும் முயற்சியில் கோனிக் கொண்டிருந்தன.
‘‘சார்… டெக்கில கலர் சுவிட்ச் போடல, அதை போட்டுட்டு போகலாம்னு வந்தோம்’’ என்றோம்.
சலைவா வழிய, ‘‘சரி போடுங்க’’ என்றார் உதவி தலைமை.
அதற்குள் தெளிவாக ஓல்லிக்குச்சி ஆள், டெக்கை ஆப் செய்திருந்தார்.
‘‘சார் டெக் ஓடினாத்தான் கலர்ல வருதான்னு பார்க்க முடியும்’’ என்றோம் கோரசாக.
‘‘அதெல்லாம் நாங்க பார்த்திருக்கிறோம்… நீ கொஞ்சம் வெளியே நில்லு’’ என்றார் ஒல்லிக்குச்சி.
நாங்கள் வெளியே வந்தோம்.
சில நிமிடங்களில் ஒல்லிக்குச்சி வெளியே வந்து, ‘‘படம் கலர்ல வருது… நீங்க போங்க…  நாங்க பார்த்துக்கிறோம்’’ என்றார்.
மறுநாள்.
அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் கொடுத்துவிட்டதால், அன்று ரேங்க் கார்டு கொடுக்க வந்தார் வகுப்பாசிரியர்.
முதல் நாள் ஓட்டு வீட்டில் இருந்தவர்களில் அவரும் ஒருவர்.
என் ரேங்க் கார்டு விநியோகிக்கப்பட்டபோது, அதில் கணக்கு 42, ஆங்கிலம் 41 ஆகியிருந்தது.
மனதில் நானும் கோபாலும், ‘‘கத்தாள கண்ணால குத்தாத நீ என்னே….’’ பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது போன்று நினைப்பு வந்து சென்றது.
- ஜே.எஸ்.கே.பாலகுமார். 

No comments:

Post a Comment

Thanks