10 May 2020

அவனா நீயீ...




ராமேஸ்வரம் பலருக்கு தீர்த்த யாத்திரையாக இருக்கும்.

எனக்கு பணியாற்றும் இடம்.

வாரம் ஒரு முறை மதுரையில் இருந்து ஊர்ந்து(?) செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறினால் 5 மணி நேரத்தில் (பஸ்சில் மூன்றரை மணி நேரம்தான்) ராமேஸ்வரத்தில் இருக்கலாம். இதற்காக திங்கட்கிழமைகளில் மதியம் 2 மணி டிரெயின்தான் பிடிப்பேன். அரைநாள் சக ஊழியரால், கோ பிராக்சி போட்டுக் கொள்ளப்படும்.

இந்த ரயில் பயணம் ஆரம்பத்தில் மிக சுவாரசியமாக இருந்தது. ஆனால், நேர விரயத்தால் பின்னாளில் ரயிலை பார்த்தாலே, எட்டி உதைக்க வேண்டும்போல் ஆகிவிடும். பஸ் கட்டணம் ஜாஸ்தியாச்சே.... அடிச்சாலும் பிடிச்சாலும், சென்ட்ரல் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்மென்ட்தானே.

அதே காய்ந்த கருவேலங்கள்தான் வழி முழுவதும். மண்டபம் வரும்போதுதான், மனதுக்கு அப்பாடி என்று இருக்கும். வாரம் முழுக்க வேலை பார்த்துவிட்டு, சனிக்கிழமை அதே மதிய நேர ரயிலை பிடித்தால் (அன்னைக்கும் அரைநாள் பிராக்சியா என்றெல்லாம் கேட்கப்படாது), இரவு 7 மணிக்கு மதுரைக்கு வரும். மானாமதுரையை தாண்டிவிட்டால், ‘‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...’’ என்று மனம் துள்ள ஆரம்பித்துவிடும்.

சோழவந்தான் வந்துவிட்டால், சின்னக்குழந்தையை போன்று, ஒரு சீட்டில் இருந்து எழுந்து அடுத்த சீட்டின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, இதோ... இதோ... என்று இடதுபக்கம் சாலையில் செல்லும் வாகனங்களின் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் இருக்கும் டி.என்.59 எண்ணைக்கண்டு மனம் குதூகலமடைய ஆரம்பித்துவிடும்.
சென்னைவாசிகள் பல பேருக்கு தென்மாவட்டத்தில் இருந்து வரும்போது கூவத்தை நுகரும்போதுதான் உற்சாகம் பிறக்கும் என்பார்களே அதைப்போன்ற ஒரு மனநிலைதான் (இப்போ நான் கூட சென்னைவாசிதான் புரோ...).

அன்று ஒருநாள் மதுரையில் வீட்டில் விசேஷம். ராமேஸ்வரத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போதே மதியம் 2.45 ஆகிவிட்டது. 3 மணிக்கு சரியாக ரயில் கிளம்பிவிடும். அடித்துபிடித்து வந்து சேர்ந்தால் ரயில் பிளாட்பாரத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

டிக்கெட் கூட வாங்க நேரமில்லை. சரி, ரயிலில் டிடிஆரிடம் பைன் போட்டுக் கொள்ளலாம் (ஓராண்டு பழக்கத்தில் நண்பரான எதிரி) என்று ஏறிவிட்டேன்.
பெரும்பாலும் அந்த ரயிலில் டிடிஆர் வருவதில்லை. ஆனால், நமக்கு என்று ஹெட் ரைட்டிங் இருக்கிறதே.... அது விட்டுப்போகுமா? சரியாக வந்து தானே ஆவணும். அந்த ரூட்டில், தெரிந்த அந்த டிடிஆர் மட்டும்தான் வருவார். வேறு யாரையும் அந்த ஓராண்டுக்காலத்தில் நான் பார்த்தது இல்லை.

அன்றைக்கு புது டிடி வந்து கொண்டிருந்தார். ரயில் பரமக்குடியை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு ரயிலில் அதிகளவில், ‘ஏக் காவ்மே ஏக் கிசான்கள் ஏறியிருந்தார்கள்

ரயிலில் வந்துக் கொண்டிருந்த டிடி மிக இளமையாக இருந்ததுடன், வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை மட்டும் போட்டு டிக்கெட்டை வாங்கி சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெட்டியின் பின் வாசலில் நின்றிருந்தார். நான் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தேன். நண்பேன்டா டிடி வந்திருந்தால், 20 ரூபாய் அபராதம் போட்டுக் கொண்டு சென்றுவிடலாம். பல நேரங்களில் அவர் டிக்கெட்டைக்கூட என்னிடம் கேட்டதில்லை. என் பணி மீது அவருக்கு இருந்த மரியாதையாக கூட இருந்திருக்கலாம். ஆனால், வலுக்கட்டாயமாக நானே அபராதம் போட்டு வாங்கிக் கொள்வேன்.

சாதாரணமாக அபராதம் என்றால், 12 ரூபாய் டிக்கெட்டுக்கு ரூ.120 போட வேண்டும். ஆனால், அவசரத்தில் வந்ததில் ரூமுக்கு சென்று பணம் எடுக்காமல் வந்துவிட்டேன். அதிகபட்சமே 80 தோ, 90 தான் இருந்தது. அதனால்தான் புது டிடி பார்த்தவுடன், வயிற்றில் மிக்சி சுற்றியது. அவர் பக்கத்தில் வர, வர மிக்சியின் வேகம் 4ல் சென்றுக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு குரல், ‘‘அவனை பிடிங்க... அவனை பிடிங்க...’’ என்று.

ஒயிட் டிடி என்னை தாண்டி, ‘‘சோர்… சோர்…’’  என்று கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தார். சரி அவர் யாரோ, திருடனை பார்த்து ஓடுகிறார்... அவரை பிடித்துக் கொடுத்தால் நாமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் பின்னாலேயே நானும் ஓட ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் ரயில் பரமக்குடி ஸ்டேஷனில் பாதி நுழைந்துவிட்டது.


ஒயிட் சர்ட் டிடி ரயிலில் இருந்து பாய்ந்து குதித்து ஓடினார். அவருக்கு பின்னால் அஜீத் (சாரி விஜய் பேன்ஸ்) ஸ்டைலில் நான் குதித்து ஓடுகிறேன்

அந்த நேரத்தில் ரயில் சடாரென எமர்ஜென்சி பிரேக் அடித்து நிற்கிறது, ரயிலில் சடன் பிரேக் போட்டால் அது பெட்டிகளுடன் ஒன்று சற்று தள்ளிவிட்டு நிற்கும் சத்தம் பலமாக கேட்கும். இதை  பலமுறை கேட்டுள்ளேன்.

அந்த ஓட்டத்திலும் ரயில் ஏன் பாதியிலேயே பிரேக் அடித்து நிற்கிறது என்கிறது என்று பெட்டியின் உள்ளே கண்களை சுழற்றுகிறேன்.

பிதாமகன் படத்தில் லைலா எமர்ஜென்சி செயினை இழுத்துப்பிடித்து தொங்கிக் கொண்டிருப்பாரே, அது போன்று ஒரு இளம்பெண் எமர்ஜென்சி செயினை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள். வடமாநிலங்களில் கொள்ளையர் என்றால் இப்படித்தான் எமர்ஜென்சி செயினை பிடித்து இழுப்பார்கள் என்று பின்னால் தெரிந்துக் கொண்டேன்.

ஒயிட் டிடி யாரை துரத்திக் கொண்டு ஓடுகிறார் என்று முன்னால் பார்க்கிறேன். முன்புறம் யாரையுமே காணோம். அவர் என்னை பார்க்கிறார்.... மீண்டும் வேகம் எடுக்கிறார். யாரை துரத்துகிறோம் என்று தெரியாமல், நானும் அவரை பார்க்கிறேன்... வேகம் எடுக்கிறேன்ஒரு பரபரப்பு சினிமா சேசிங் காட்சி போல் இருந்தது.

ஓடிக்கொண்டிருந்த நான் எதேச்சையாக பின்னால் பார்க்கிறேன்.

அங்கே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

பழைய டிடி, ஓடி வந்துக் கொண்டிருந்தார்.... ‘சார் அவனை பிடிங்க.. அவனை பிடிங்க சார்...’’ என்று என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்.

அவர் யாரை சொல்கிறார் என்று மீண்டும் முன்புறம் பார்த்தால், எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த ஒயிட் சர்ட் டிடி.யைதான் காட்டிக் கொண்டிருந்தார்.

இவருக்கும் அவருக்கும் வாய்க்காவரப்பு தகராறா இருக்குமோ.... என்று நினைத்துக் கொண்டே, இப்போது ஒயிட் டிடி பிடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.
ஒயிட் டிடி ஓட்டத்துக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த ஆள் ஓடிவிட்டார்.
முட்டியில் கைகளை வைத்து குனிந்து மூச்சு வாங்கினேன். பழைய டிடியும், என் அருகில் வந்து அதேபோல் மூச்சிரதை்தார்.

‘‘என்னா சார் விட்டுப்புட்டீங்களே… அவன் கேடி சார்... கூட்ட நேரத்தில ஏறி, பாசஞ்ஜர்ஸ்க்கிட்ட பைன்னு சொல்லி பணத்தை புடுங்கிட்டு போயிடுவான்... ரொம்ப நாளா அகப்படாம இருந்தான். இன்னைக்கு ரயில்ல ஏறினா இவன் நிக்கிறான். சரி பிடிச்சிடலாம்னு நினைச்சேன்... இன்னைக்கும் தப்பிச்சிட்டானே சார்....’’ என்றார்.

‘‘ஆமா தப்பிச்சுட்டான்…’’ அவரிடம் கூறினாலும், மனதில், ‘‘அப்பாடி.... நானும் தப்பிச்சிட்டேன்....’’ என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது.

நிமர்ந்து இருவரும் மெதுவாக நடந்து பெட்டிக்கு வருகிறோம்.

அங்கப்பார்த்தா இன்னும் அந்த பக்கி செயினை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெரிந்தது.
-
ஜே.எஸ்.கே.பாலகுமார்.