27 May 2020

போளி சாப்பிடலியோ…?



போளி.

இந்த வார்த்தையை  கேட்டவுடனேயே, எப்போதாவது உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று  ஒரு கனம் யோசித்து பார்த்திருக்கிறீர்களா?  அடுத்த முறை பாருங்கள். அந்த வார்த்தையை கேட்டவுடனேயே நாக்கில் இருக்கும் பத்தாயிரம் ருசி மொட்டுகள் ஜிங்கென்று எழுந்து நிற்கும். உண்மையா இல்லையா?

காரணம் போளியில் இருக்கும் சுவை.

நீங்கள் பஸ் ஸ்டாண்டிலோ அல்லது தெருவோரத்திலோ மஞ்சள் கலர் போலியை, (சரியான வார்த்தைதான்) வாங்கி சாப்பிட்டு இருந்தால் இது நடக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை. 15,000 வங்கிக்கணக்கில் வந்த மாதிரியே இருக்கும்.

போளி என்பது, பார்த்தவுடனேயே, வயாக்ரா மாதிரி உடனடியாக வேலை செய்ய வேண்டும். அதுதான் அசல்.
போளிக்கென்று சில லட்சணங்கள் இருக்கின்றன. போலி கருத்தக்குட்டியாக இருக்கக்கூடாது. அது சிவந்தும், சிவக்காத கருஞ்சிவப்பு நிறுத்தில் வெந்திருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் நிறும்தான் போளிகள் விஷயத்தில் கரெக்ட்.

எங்கும் வாய்பிளந்து இருக்கக்கூடாது. அப்படி திறந்திருந்தால், உள்ளே உள்ள பூர்ணத்தின் மனம் வெளியேறி, முழு சுவை உணர முடியாது. ரீல் போட்டு முதல் சீன் ஓடிய  பின்னர் பார்க்கும் திரைப்படம் போல் இருக்கும்.

போளியை மட்டும் எப்போதும் சுடச்சுட சாப்பிட்டால்தான் அதன் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியும். அருமையான சாப்பாடு சாப்பிட்ட இலையில் கடைசியில் வழித்து திங்கும்போது கிடைக்கும் சுகம், சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டபோது கூட கிடைத்திருக்காது.

போளியில் பல வகைகள் இருக்கின்றன. அதில் எனக்கு பிடித்தது, பருப்பு போலியும், தேங்காய் போலியும்தான்.
போளி ஏதோ சாப்பிட்டோம், கை கழுவினோம் என்று இருக்கக்கூடாது. அதற்கு ஒரு ஐந்து நிமிடம் கொடுத்து, விள்ளல், விள்ளலாக பிய்த்து, பழைய நினைவுகளை அசைப்போட்டு சாப்பிட்டு பாருங்கள்… மனம் ஜிவ்வென்று பறக்கும். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உடல் சிலிர்த்து, புத்தம் புது தெம்புடன் வேலைக்கு கிளம்பிவிடுவீர்கள். அதற்கு அதன் காம்பினேஷனைப் பற்றி தெரிந்துக் கொண்டால், அடுத்த முறை ரசிப்பீர்கள்.

போளி மாவு, வெறும் மைதாவில் செய்ததுதான். ஆனால், அதில் ஒரு கலை இருக்கிறது. பிசைந்த மாவில், கைவிட்டால், அப்படியே வழுக்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். அந்தக்காலத்தில் ஆட்டுக்கல்லில் அம்மாக்கள் மாவு அரைப்பார்கள். அப்போது அரிசி மாவு, அதிகம் தண்ணீர் விடாமல், கொஞ்சம் கெட்டியாக அரைக்கப்படும். உளுந்து மாவில் சற்று தண்ணீர் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உபி.க்கு 15, தமிழகத்துக்கு 6 என்ற கணக்கு போன்று. அம்மாக்களின் கணக்கு மிகச்சரியாக இருக்கும்.ஜே.எஸ்.கே.பாலகுமார்.

இந்த மாவு அரைக்கும்படலத்தில் அரிசி மாவு அரைக்கப்பட்டு பாத்திரத்தில் வழித்து வைத்திருப்பார்கள். அதில் கைவிட்டு மாவை அள்ளித்தின்ற அனுபவம் பலருக்கும் இருக்கும். அந்த பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் போளி மெத்து, மெத்து என்று சாப்ட்டாக இருக்கும்.

இந்த காலத்திலே யாருய்யா ஆட்டுக்கல்ல  மாவு ஆட்டுறா என்று கோவையில் இருந்து கிஷோர் கேட்பது புரிகிறது. உங்க காலத்து பசங்களுக்கு சொல்ல வேண்டும் என்றால்,  குளோப்ஜாமூனில் கைவிட்டு பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த பதத்தில் விரல் இறங்கினால் மாவு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். இதற்காக மாவை எண்ணெய்… கொஞ்சம் அம்பானி பேமிலி என்றால், எண்ணெய்யில் கூட ஊற வைத்திருப்பார்கள்.

அடுத்தது பூரணம்.

இதில்தான்யா விஷயமே இருக்கிறது… கமலின் லிப்-லாக் போன்று சும்மா நச்சென்று பருப்பும், மண்டைவெல்லமும், கூட ஏலக்காய் பொடி கலந்திருக்க வேண்டும். லிப்-லாக்கில், ஓரிதழில் இருந்து ரசம் மறு இதழுக்கு பரவும். இருமனங்கள் பரவசத்தில் மிதக்கும். அதுபோன்ற நிலையில், பருப்பும், வெல்லமும் இணைந்திருந்தால்தான் போளி சும்மா நமீதா மாதிரி கிண்ணெண்று இருக்கும். சிம்பு மாதிரியான நெத்தி முத்தம், இட்லிக்கு தொட்டுக் கொள்ளும் பொடி போல ஒட்டுவதுதான் ஒட்டும். இணைப்பு முழுமையாக இருக்காது.
வழ, வழா,  கொழ, கொழாவாக பூரணம் இருந்தால், போளி, மைதா தோசையாகி, தோசைக்கல்லையும் கெடுத்துவிடும். பதம் சரியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம்.

அடுத்து மாவு உருண்டையை உள்ளங்கையில் பிடித்து, கட்டை விரலையும், சுட்டு விரலையும் முனையில் பிடித்து அழுத்தினால் உருண்டையாக மாவு வெளியே வரும். அதை மனையின் மீது வைக்கப்பட்ட பிளாஸ்டிக் காகிதத்தில் நெய் தடவி வைத்து  அழுத்த உருண்டையாக மாறும். அதில் பூர்்ணத்தை வைத்து சுற்றிலும் இருக்கும் மாவை மேலே கொண்டு வந்து லாவகமாக மடித்து அதை மீண்டும் நெய்தடவி சப்பாத்தி மாவைப்போல் விரவி, தோசைக்கல்லில் வாட்டி எடுத்தால்…. அட, அடா…. சும்மா நச்சென்று போளி தயார்.

ஏழைகளின் இனிப்பு என்று பெயர் பெற்ற இந்த போளி, நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியைக் கொண்டது. ஒன்று இரண்டு சாப்பிட்டாலே முழு திருப்தி ஏற்படும். இந்த போளியின் முழுமையான சுவையை மதுரை மஹால் 3வது தெருவில் இருக்கும் புளியடிஸ் போலியில் உணர்ந்து, ரசித்து சாப்பிட்டுள்ளேன். இந்த சந்துல நுழையறப்பவே வாசனை  சும்மா கும்முன்னு தூக்கும். இவர்கள் வெளிநாட்டுக்கும் அனுப்புகிறார்கள் என்பதுடன், முந்திரி போலி என்று புது வகையையும் தயாரிக்கிறார்கள்.

இங்கிலாந்துக்கு தப்பிப்போன  உடனேயே ஆர்டர் அனுப்புறேன்… தயவு செஞ்சு அனுப்பி வைங்க என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்…

போளியை வாங்கியவர்கள், அதை அப்படியே சுருட்டி மடித்து சாப்பிடுபவர்களை பார்த்தால், லடாக்கில் இருக்கும் சீனக்காரனின் துப்பாக்கியின் முன்பு நிறுத்திவிட தோணும். போளியை சாப்பிடுவதற்கு என்று சில முறைகள் உள்ளது. முதலில் ஒரு முனையில் இருந்து துண்டிக்க வேண்டும். அதுவும் பூர்ணம் சிந்தாமல். அதில் இனிப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும். எடுத்த உடனேயே ஜெனீபர் லோபஸ் அளவுக்கு எதிர்பார்க்கக்கடாது. அப்படியே விள்ளல், விள்ளலாக உள்ளேச் செல்ல… செல்ல… பரவசம் கூடும். அய்யோ… இப்பவே வாயில வழியுதே…. சொக்கா…. இப்படி சாப்பிட்டாதான் போளியின் முழுமையை நீங்கள் உணர முடியும்.

அடுத்த முறை போளியை சாப்பிடும்போது, சும்மா சாப்பிடாதீர்கள்…அம்மா அரைத்த அரிசி மாவு, கமலின் லிப்-லாக், நமீதா என்று எல்லாவற்றையும் செக் செய்து, சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். பத்தாயிரும் ருசி மொட்டுகளும் உங்களை வாழ்த்தும். – ஜே.எஸ்.கே.பாலகுமார்.

23 May 2020

மோகனும், கிருஷ்ணனும்



ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வரும். ‘‘சார் பிளாட் வேணுமா? ஏன் சார் உங்க எம்பிளாயிஸ் பிளாட் வாங்க பெர்மிஷன் ஆவது தரலாமே...? அவங்க ஆர்வமா இருந்தாலும் நீங்க பெர்மிஷன் தர மாட்டேங்கிறாகளாமே...?’’ என்று கேள்விகளில் துளைத்து எடுத்துவிடுவார் அந்த நபர்.

நானே ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அப்புறம் நான் எப்படி முதலாளி ஆக முடியும்? அதுமிட்டுமின்றி நான் மற்றவர்கள் பிளாட் வாங்குவதற்கு அனுமதி தர மறுக்கின்றேன் என்று குற்றச்சாட்டு வேறு.

ஒரு நாள் அந்த நம்பரில் பேசியவரிடம் கேட்டுவிட்டேன்... ‘‘சரி நான் என் எம்பிளாயிக்கு அனுமதி தர்றேன்... அவங்க பேர எல்லாம் சொல்லுங்க...’’ என்றேன்.

‘‘அதுதான் சார்... சூப்ரிடென்ட் மோகன், ஹெட்கிளார்க் கிருஷ்ணன். அவங்களுக்குத்தான் நீங்க அனுமதி தரணும்’’ என்றார் அந்த நபர்.

‘‘சரி நான் அனுமதி தர்றேன். அவங்களுக்கு அட்வான்ஸ் அமவுண்ட இன்னைக்கே சாங்கஷன் பண்ணிடுறேன்... போதுமா?’’ என்றேன்.

‘‘ரொம்ப நன்றி சார்... அவங்க ரெண்டு தடவை வந்து பிளாட்டை பார்த்துட்டு போயிட்டாங்க... நீங்க அனுமதி தராததாலத்தான் அப்படியே நிக்குது.. ரொம்ப நன்றி சார்...’’ என்றார் அந்த நபர்.

அவர் சொன்ன அந்த மோகன், கிருஷ்ணன் என் நண்பர்கள்.

மோகனுக்கு போன் செய்து, ‘‘என்னடா நடக்குது...?’’ என்று நடந்ததை கூறி கேட்டேன்.

‘‘அது ஒண்ணுமில்ல மாப்பிள... ஞாயித்துக்கிழமை போரடிச்சா... எங்கேயாவது ேபாகணும்ல... பேமிலிய பசங்க... வைப் எல்ேலாரும் வெளியே கூட்டிட்டு போகச் சொல்லி கம்ப்பல் பண்ணிட்டு இருந்தாங்க.... அத கிருஷ்ணன் கிட்ட சொன்னேன். அவனுக்கும் அதே டார்ச்சர்தான்னு சொன்னான். சரின்னு ரெண்டு பேரும் தீவிரமா யோசிச்சு செஞ்ச திட்டம்தான் இது...’’ என்றான்.

‘‘என்ன திட்டம்டா...?’’

‘‘அதான் மச்சி... ரியல் எஸ்டேட்காரன்கிட்ட போன் பண்ணி பிளாட் பார்க்க வர்றதா சொல்லுவோம்... குடும்பத்தோட அவங்களே வேன் போட்டு செகல்பட்டு வரைக்கும் கூட்டிட்டு போவாங்க... போறப்போ பிஸ்கெட், கூல்ரிங் கூட குடுப்பாங்க மச்சி.... போய் பிளாட்ட பார்த்து முடிச்சா... மத்தியானம் வடை, பாயசத்தோட சாப்பாடு வேற போடுறாங்க.... சரி ஒரு தடவை போய்ட்டு வந்ததில பிளாட் வாங்கப்போறதா வைப்புக்கு ரொம்ப சந்தோஷம். பசங்களுக்கு ஒரு லாங் டிரிப் போன மாதிரி ஒரு சந்ேதாஷம்... இதுல பாரு மச்சி... நமக்கு ஒரு பைசா செலவில்லை. வாயில வடை சுட்டா போதும்...’’

‘‘அதுக்கு எதுக்குடா ரெண்டு தடவை போய் பார்த்தீங்க...?’’

‘‘ஒரு தடவையோட முடிச்சிடலாம்னுதான் பார்த்தோம்... ஆனா, அந்த ஏஜன்ட் ரொம்ப தொந்தரவு பண்ணினா... வைப் வேற கேட்டுட்டே இருந்தாங்க.... இன்னொரு டிரிப் அடிச்சோம்....’’

‘‘அது சரி ஏஜன்ட் ஏன் எனக்கு போன் பண்றான்...?’’

‘‘அவன் சும்மா எங்கள தொந்தரவு பண்ணிட்டே இருந்தானா... அதுதான் உன்னை முதலாளி ஆக்கி, அவன்கிட்ட நம்பரையும் குடுத்துட்டோம்... நீதான் ஒத்த நிமிஷத்தில போன கட் பண்ற ஆளாச்சே... அதனால அவன்கிட்ட எல்லாம் ரொம்ப பேச மாட்டேன்னு நினைச்சு குடுத்தோம்... பாவி இப்படி மாட்டிவிட்டுட்டீயே....?’’

‘‘அதனால என்ன பேமிலியோட இன்னொரு தடவை டிரிப் போய்ட்டு வாங்க... அவன் போன் பண்ணா... மேலிடத்தில இருந்து ஸ்டாப்புக்கு யாருக்கும் லோன் சாங்கஷன் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்கன்னு சொல்லிடுறேன்... பாவிகளா உங்க விளையாட்டுக்கு நான் தான் கிடைச்சேனா...’’

‘‘சரி மச்சி... இந்த சண்டே ப்ரீயா... வாயேன் குடும்பத்தோட இன்னொரு பிளாட்ட போய்ட்டு பார்த்து வருவோம்’’ என்றான்.

இப்போ கொரோனாவால் லோன் பாதிக்கப்பட்டுள்ளதாக இருவரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க...ஜே.எஸ்.கே.பாலகுமார்.

21 May 2020

நித்தம் நித்தம் நெல்லிச்சோறு...


நித்தம் நித்தம் நெல்லிச்சோறு…


                         
புரோட்டா புராணத்தை எழுதி பலரது வயிற்றெரிச்சலை சம்பாதித்து விட்டான் இந்த ஜேஎஸ்கே. இந்த கோடை வெயிலில் அந்த புண்பட்ட வயிற்றுக்கு தண்ணீர்விட்டு ஆற்ற, ஒரே தீர்வு பழைய சாதம்.
பழைய  சாதம் இப்போதெல்லாம் அம்மணிகளின் மதிய நேர தயிர் ஊற்றி சாப்பிடுவதற்கான ஆகாரமாக மாறிவிட்டது. ஏனெனில், வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சுடுசோறு சாப்பிட மீதமான பழைய சாதத்தை அம்மணிகள்தான், ‘‘அரிசி விக்கிற விலையில…’’ என்று புலம்பிக் கொண்டு சாப்பிடும் நிலையில் உள்ளார்கள். உண்மையிலேயே இளமை வேண்டும் என்பவர்கள் நம்பர் நடிகை மாதிரி இந்த வயசிலும் ஹீரோக்களோட போட்ட போட்டு நடிக்கிற மாதிரி இளமையா இருக்கணும்னா  பழைய சாதத்தை சாப்பிடுவதுதான் வைட்டமின் டி யாக இருக்கும்.
அதுமட்டுமல்ல பழைய சாதத்தை சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியே அம்மாவின் கைப்பிடித்து  திருவிழாவுக்கு போன சுகம் கிடைக்கும். (அப்பாக்கூட போன நாலு முட்டாய் ஒரே நேரத்தில கெடக்காதில்ல…. அப்புறம் கேட்டு தலையில குட்டு வாங்கிக்கிறது யாரு….?) பழைய கஞ்சியில் வைட்டமின் பி12 அவ்வளவு குவிந்து இருக்குகிறது. ஆனால், நம்மாட்கள்… லபக்… லபக்கென்று மாத்திரை  தின்கிறார்களே… தவிர இந்த ஜேஎஸ்கே சொல்வது போல் பழைய சாதத்தை சாப்பிடுவதில்லை.
பழைய சாதம் என்றால்,  முதல் நாள் சமைத்த சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் 11 மணி அளவில் எடுத்து சாப்பிடுவது. இப்போது நியூயாரக் டிபார்மென்ட் ஸ்டோர்களில் இந்த பழைய சாதம் ஒரு பேக் ரூ.350 (அங்க எப்பய்யா ரூபாயில விக்க ஆரம்பிச்சான்னு நம்பியார் பாணியில் கையை பிசைந்துக் கொண்டு கேட்கப்படாது…. இது நம்மூர் பண மதிப்பில் மாற்றிப்போட்டது) கிடைக்கிறது.
வெள்ளைக்காரன், ‘‘பொழயசேதம்…!’’ என்று வாங்கி சாப்பிட்டுப் போகிறான். காரணம் இருக்கிறது புரேரா…. வெறும் ரொட்டியும்,  பர்கரும் சாப்பிட்டு காலையில் முக்கிக்கொண்டிருப்பவர்கள் பழைய சாதத்தை சாப்பிட்டால் போதும்… விவேக் சினிமாவில் சொன்னதுபோல வெளியேறும் என்பதால்தான். டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்,
பழைய சாதத்தை சிலர் இரண்டு நாள் கூட வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரையில் 15 மணி நேரம்தான் அதிகபட்ச ஊறல் நேரம். இல்லாவிட்டால் சென்னையில் விற்கும் ஜிகர்தண்டாக்களைப்போல் இருக்கும்.
பழைய சாதத்தை செய்ய மண்பானை தீ பெஸ்ட். மண்பானை அல்லது சட்டியில் இரவில் மிஞ்சிய சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றிவிடுங்கள். காலையில் ஒரு 10 மணி வாக்கில் திறந்து பாருங்கள். மூடியை திறந்ததும், ஆங்காங்கே சிறு குமிழிகள் வந்து வெடித்து செல்லும். தேர்தல் நேரத்து புதுக்கட்சிகள்போல். அந்த சிறுகுமிழிகள் வெடித்து சென்றால், சாதம் நன்கு ஊறியிருக்கிறது என்று அர்த்தம்.
மூடியை திறந்தவுடன், பழைய சாதத்தில் இருந்து ஒரு மெல்லிய புளிச்சவாசனை நாக்கை எட்டும். ஆகா… அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பான்ட்ஸ் போன்று மூக்கை தெறிக்கும் மணமின்றி, கோகுல்சாண்டல் போன்று மெல்லிய மணத்துடன் இருக்கும். ஆனால், நீண்ட நேரம் இருக்கும்.
சாதம் அனைத்தும் கீழே தேங்கியிருக்க, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு நீலத்தைவிட்டதுபோன்று மிக,   மிக மெல்லிய நீல நிறத்துடன் தண்ணீர் தேங்கிநிற்கும். நீட் தேர்வில் வடமாநிலத்தவர்கள் எளிதில் மேலே வந்துவிடுவதுபோல…
இதை அப்படியே விட்டுவிட்டால்  நன்றாக இருக்குமா? அப்படியே சாதத்தையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைய வேண்டும். அப்போதுதானே  பிரச்னை வராமல் இருக்கும். இப்போ நீலத்தன்மை மறைந்து பால் போன்ற நிறம் வந்திருக்கும்.
நன்றாக சம்மணம்போட்டு உட்கார்ந்துக் கொண்டு, ராஜ்கிரண் பாணியில் பானையில் இருந்து சாதத்தை உருண்டைப் பிடித்து வாயில் போட்டால், முதலில் ஒரு சிறிய புளிப்புத்தன்மை நாக்கில் தென்படும். சாதம் அரைபட, அரைபட பொறியை வாயில்போட்டு சாப்பிட்டு அனைத்தும் கரையும்  நிலைக்கு வந்தபோது ஒரு சுவை இருக்குமே அந்த சுவைக்கு வந்துவிடும் சாதம். எந்த ஒரு உணவையும் ரசிச்து சாப்பிட்டு பாருங்க… அப்போதான் எல்லா சுவையும் மனதில் நிற்கும்.
இந்த சமயத்தில்தான், அடுத்த கவள சாதத்துக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது, தொட்டுக்கொள்ள ஏதாவது நாக்கின் நடுவில் தடவினால், நல்லகிரைம் படம் பார்க்கும்போது குத்தாட்ட பாட்டை ரசிப்பதுபோன்று மனநிலை ஏற்படும். ஆட்டமா… தேரோட்டமா… பாணி  பாடல்கள் சிறப்பு.
இந்த பழைய சாதத்துக்கு ஏற்ற சைடிஷ் சாங்… சாரி சைடிஷ் என்னைப் பொருத்த வரையில், தாமரை இலையில் மடித்த ஊறுகாய்தான். ஊர்ப்பக்கத்தில் இது அதிகம்கிடைக்கும். சென்னையில்  வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் கிடைக்கிறது.
பொடி போடுபவர்களை பார்த்திருக்கிறீர்களா? சின்ன சில்வர்  டப்பியில் நிரப்பி வைத்திருப்பார்கள். அதை மேலாப்பில் சின்னதாக ஒரு தட்டு தட்டி, அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து, கட்டைவிரல், நடுவிரலில் பிடித்து, ஆட்காட்டி விரலை அதன் ஒரு தட்டு தட்டி சிறிய ஒலியை எழுப்பி மூக்கில் ஏற்றுவார்கள்.  அதைப்போன்று இந்த தாமரைஇலை ஊறுகாய் பொட்டலத்தை மேலாக ஒரு தட்டு தட்டி, ஒட்டிய கீழே இறங்கும் வகையில் லாவகமாக பிரித்து, அதில் இருந்து  பாதியை லாவகமாக வழித்து எடுத்து, போட்டுக் கொண்டால், ஒரு பானை பழைய சோறு இருந்தாலும் சும்மா பிச்சுக்கிட்டு உள்ளே இருக்கும். காதலி கொடுத்த பரிசைப்போல். ஊறுகாய்  மிச்ச ஊறுகாயை மடித்து மீண்டும் மறுநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
பணக்கார நண்பர்கள், பழைய சாதத்துக்கு… இன்னொரு சைடிஷ்ஷை வைத்துள்ளார்கள். அது ஆட்டுக்கறி  பிரட்டல்,  அதான்பா மட்டன் சுக்கா… (வைரமாவே இருந்தாலும் தங்கத்தில்தான் போட்டுக்கலயா அதுமாதிரி). மிளகுப்பொடியை காரசாரமாக தூவி தயார் செய்த மட்டன் சுக்காவை, பழைய சாதத்துடன் சேர்த்து  சாப்பிடுவார்கள். மாத முற்பகுதியில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். அப்போ பிற்பகுதியில்…? வேற  வழி…. ஆட்டமா… தேரோட்டமாதான்.
ஆட்டுக்கறி பிரட்டல்,  பழைய சாதம் காம்பினேஷன், கீர்த்தி சுரேஷூடன் நாமே ஹீரோவாக நடித்ததுபோன்ற பிரம்மாண்ட பிரம்மையை நமக்குள் ஏற்படுத்தும். அப்போது ஜென்டில் உமன்களுக்கு…? அவங்களுக்கு அஜீத்தோ, விஜய்யோ காம்பினேஷன் வச்சுக்கலாம். ஆங்காங்கே தென்தேசத்தில் முருங்கைக்காய் கூட்டும் இதற்கு பயன்படுத்துகிறார்கள். அதுவும் கூட நல்லாத்தான் இருக்கும்.
அதேபோல், சி சென்டர்களில் பழைய சாதத்துக்கு பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய் போன்றவற்றை தொட்டு சாப்பிடுவதாக ஆங்காங்கே இருக்கும் ரசிகர் மன்றங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஊறுகாய் மட்டையும், ஆட்டுக்கறியும் பிரட்டல்தான், மிகச்சிறப்பானது என்று அமெரிக்க அதிபர் டிர்ம்ப்பே ஒரு முறை கூட்டத்தில் கூறியதாக, வாஷிங்டன்னில் இருந்து எமது நிருபர் கூறியிருக்கிறார்.
அதனால் மக்களே இன்னொரு முறை பழைய சாதத்தை சாப்பிடும்போது, கீர்த்தி சுரேஷா, ரம்யா கிருஷ்ணனா என்பதைமுதலில் முடிவு செய்துக் கொண்டு சாப்பிடவும்.
அப்புறம், நித்தம் நித்தம் நெல்லிச்சோறு….ன்னு என்ன கூந்தலுக்கு  இதுக்கு பெயர்  வச்சே என்று ராணிப்பேட்டை மீரான் கத்துவது கேட்கிறது. நெல்லிச்சோறுதாம்யா…நித்தம், நித்தம் பழைய சாதத்துக்கு ஏற்றது. எப்புடீடீடீ… நாங்க பழைய கமல் ரசிகருகய்யா…ஜே.எஸ்.கே.பாலகுமார்.

18 May 2020

சாருக்கு ரெண்டு புரோட்டாாாா…





புரோட்டா என்றால், அது மதுரைதான். அதன் வி்த்துக்கள் வேண்டுமானால் ஆங்காங்கே இருப்பதாக கூறலாம். அதன் அசல் வித்துக்களில் சில செங்கல்பட்டு, விழுப்புரம் பக்கத்தில் காண முடிகிறது.  சாரி… ருசிக்க முடிகிறது.
சென்னை  பக்கத்தில் தேடித் தேடி சாப்பிட்டு பார்க்கிறேன். இன்னமும் என் தாய் மண்ணின் ருசியை எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. சென்னைக்கடைகளில் புரோட்டா கிடையாது… பரோட்டாதான். போர்டுகளில்கூட பெரும்பாலான இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. இதைப்பற்றி கூட ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.
திருச்சிப் பக்கம் சால்னா கொஞ்சம் தண்ணியாக இருக்கும். கன்னியாகுமரி பக்கம், புளிப்பு கொஞ்சம் ஜாஸ்தி. ராமநாதபுரம் பக்கமும் அதேதான். கேரளாவில் புரோட்டாவுக்கு கொண்டைக்கடலை குருமா குடுப்பார்கள். அதெல்லாம் சாப்பிட்டு யார் அவஸ்த்தை பட்டுக் கொண்டிருப்பது?
புரோட்டாவுக்கு கூட சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கின்றன. புரோட்டா என்றவுடேனேயே அதில் பென்சாயின் பெராக்சைடு இருக்கு…. நீரிழிவு வரும்… கடலை மிட்டாய் வரும்…. என்றெல்லாம் ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்றைக்கு மட்டும்தான் நிச்சயம். நாளை நடப்பதை காலத்துக்கு கிட்டேயே குடுத்துடுவோமே… கொரோனான்னு ஒண்ணு வரும்…  நம்மை எல்லாம் இப்படி வீட்டில் முடக்கிப்போட்டு கும்மி அடிக்கும் என்றெல்லாம் பிப்ரவரியில் நினைத்திருப்போமா? விட்டுத்தள்ளுங்கய்யா…
எங்கே விட்டோம்…. ம்ம்ம்ம்… சாமுத்திரிகா லட்சணம். புரோட்டாவுக்கு பழைய மாவுதான் பெஸ்ட். புது மாவில் செ்த புரோட்டா லேசாக புளிக்கும். புரோட்டா பழங்குடிகளுக்கு இந்த சுவை உடனடியாக தெரிந்துவிடும். நல்ல பிரியாணியில் நங்கென்று ஒரு கல்லை கடித்தது  போன்ற ஒரு கடுப்பு வரும்.
பழைய மாவு என்றால், பிசைந்து இரண்டு, மூன்று மணி நேரம் ஆன மாவு. அது  லேயர், லேயராக அழகாக இருக்க வேண்டும். இந்த லேயருக்கு பின்னால் ஒரு ருசியின் கலையே உள்ளது. அதாவது புரோட்டாவை பிய்த்துப்போட்டு சாப்பிடும்போது, மேலே இருக்கும் கருக்கலான பகுதி மொறு, மொறுவென்று இருக்கும். இது சால்னாவில் உடனடியாக ஊறாது என்பதால், அந்த மொறு, மொறு நிச்சயம் கிடைக்கும். உள்ளே உள்ள பகுதி கொஞ்சம் சாப்ட்டாக இருக்கும். அது சால்னாவில் குலைந்து அப்படியே அல்வா துண்டாக தொண்டையில் இறங்கும். அதற்காகத்தான் லேயர் முக்கியம்.
ராஜஸ்தான் பக்கம் போய் புரோட்டா கேட்டால், ‘ரொட்டி….? அச்சா….’’ என்று சொல்லி ஒரு இரட்டை ஊதாப்பம் சைசில் கொண்டு வந்து போடுகிறார்கள். வட இந்திய பக்கம் போனால் நான்தான். பெஸ்ட். சைடிஸ்ஸாக கீரை கூட்டை தேர்ந்தெடுக்கலாம். சுவையாக இருக்கும். அந்த பக்கத்தில் வேலை பார்க்கும்  நம்மவர்கள் பாவம், சால்னாவுக்காக ஏங்கிப்போய் கிடப்பதை  அவர்களை பார்க்கும்போது கேட்டிருக்கிறேன்.
அடுத்தது  சால்னா.
புரோட்டாவுக்கு ஏற்ற கூட்டணின்னா சால்னா. சிலர் வெஜிடேபிள் குருமாவுடன் சாப்பிடுவார்கள். பொங்கலுக்கு சாஸ் தொட்டு சாப்பிடுவது போன்று.சரியான கூட்டணின்னா தாமரையை  தாங்கும் இலையைப்போல் இருக்க வேண்டும். 
சால்னா கெட்டியாகவும் இருக்கக்கூடாது.  தண்ணியாகவும் இருக்கக்கூடாது. புளிப்பாகவும் இருக்கக்கூடாது.  புளிப்பு குறைவாக இனிப்பாகவும் ஆகிவிடக்கூடாது. ஒரு சிறந்த பதத்தில்,  மேலே மிளகாய் பொடியால் சிவப்பு நிறம் கொண்ட எண்ணெய் மிதவையுடன் தகதகவென்று இருக்க வேண்டும்.
அடுத்தது இலை.
புரோட்டாவை தட்டில்போட்டு சாப்பிட்டால் அதன் சுவையை முழுமையாக உணர முடியாது பாஸ். கடையில் இலைப்போட்டு உட்கார்ந்து சாப்பிட்டால்தான் அதன் திடம், மனம், சுவையை உணர முடியும்.
இலையைப்போட்டு தண்ணீர் வைக்கவில்லையே என்று கீழ்நிலை வேலைக்காரரைப் பார்த்து கோபப்பட தேவையில்லை. கல்லா டேபிளில் சேர் போட்டு மேலே உட்கார்ந்திருக்கும் முதலாளியிடம் தண்ணீ இன்னும்  வரல என்று சொன்னால் போதும். முதலாளி  பதறியடித்து குடிப்பதற்கும்,  தெளிப்பதற்கும் தண்ணீரை கொண்டு வந்து வைத்துவிடுவார். சில  இடங்களில் மேலேதான் வேலை நடக்கும் என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள்தான் கடைக்கு செல்ல வேண்டும்.
மதுரை  பக்கத்தில் புரோட்டா என்று கேட்டால் தட்டில் அள்ளிக் கொண்டு வரும் சர்வர்களிடம் எண்ணிக்கையை சொன்னால் போதும். அள்ளி எடுத்து இலையில் பிச்சுப்போட்டுவிட்டு செல்வார்கள். திருச்சியை தாண்டினால் நீங்கள்தான் பிய்த்துக் கொள்ள வேண்டும்.
பிய்த்துப்போட்ட புரோட்டாவில் யானைப்புக்க  புலம்போல சால்னாவை ஊற்றிக் கொள்ள வேண்டும். இங்கு வழிந்து ஓடுமே என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. நாலாப்பக்கமும்  ஊற்றிக்கொண்டால்தான் புரோட்டாவுக்கு சுவை கூடும்.
புரோட்டாவில் சால்னாவை ஊற்றிக் கொண்ட பின்னர், கருகல்  வில்லை ஒன்றை எடுத்து, முன்பல் படாமல் வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அது, இடது, வலது பற்களில் கடிபட்டுக் கொண்டிருக்கும்போதே. செக்கில் சிக்கிய எள்ளில்  இருந்து எண்ணெய் வழிந்து வருவதுபோல், புரோட்டாவில் சிக்கிய  சால்னா, அப்படியே வழிந்து தொண்டையில் இறங்கும். அந்த தருணம்… ஆஹா… எப்போதுமே   கிளாசில்  போட்டுக் கொடுக்கும் லீடர்,  வாத்தியிடம் ஸ்கேலால் செமத்தியாக அடிவாஙகும்போது  கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கிறதே… அதைப்போன்று பத்து மடங்கு மகிழ்ச்சியில்  மூளை செல்களில் பரவும்.
இந்த மகிழ்ச்சியை தொடர அடுத்த கருகல் வில்லையை  கையில் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் அரைவை முடிந்தவுடன் அடுத்த அரவையை ஏற்ற வேண்டும். அந்த காலத்தில் அடித்துபிடித்து ரேஷனில் மண்ணெண்ணெய் பிடித்தவர்்களின் முகத்தில் தெரியுமே அந்த மகிழ்ச்சியை இதைப்போன்று அனுபவித்து சாப்பிடுபவர்கள் மனதில் தெரியும்.
மதுரைப்பக்கத்தில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. கொஞ்சம் தெரிந்த சர்வர் என்றால், சிக்கன் தொக்கை கொண்டு வந்து வைப்பார். அது சிவப்பு டோக்கன் வாங்கிக் கொண்டு வருபவருக்கு, கீழே கிடைத்த பச்சை டோக்கனைப்போன்று மேலும் குஷியை தரும் விஷயம்.
இதேபோல் புரோட்டாவுக்கு சிக்கன் பிரை,  ஆம்பிளேட், ஆப்பாயில் எல்லாம் சைடிஷ்ஷாக சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இது ரிசர்வ் வங்கி அளிக்கும் வரத்தை போன்றது. பையில் காசு இருந்தால் ஜமாய்க்கலாம். இல்லாவிட்டால் சீ.. சீ… இந்தப்பழம் புளிக்கும் என்று அறிக்கைவிட்டு ஒதுங்கிக்  கொள்ளலாம்.
சரி இவ்வளவு அருமையான புரோட்டாவை சாப்பிட்டிருக்கோமே… 20 லட்சம் கோடி போன்று  நிறைய பில் வந்துவிடுமோ என்று கவலைப்பட தேவையில்லை. ஒரு புரோட்டா இன்னமும் 10 ரூபாய்தான். சென்னையில் பயபிள்ளைகள், புரோட்டாவை வைத்துவிட்டு என்ன  சால்னா வேண்டும் என்று கேட்டு திகைக்க வைப்பார்கள், அங்கேயே உஷாராக வேண்டும் இல்லாவிட்டால் பின்னால் பில்லில் வங்கியில்  மூன்று மாதம் கட்ட வேண்டிய வட்டியை விட மிக அதிகமாக பில் வந்திருக்கும். ஒரு புரோட்டா காலணா…  சால்னா அரையணா கணக்கில் இருக்கும்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.

10 May 2020

அவனா நீயீ...




ராமேஸ்வரம் பலருக்கு தீர்த்த யாத்திரையாக இருக்கும்.

எனக்கு பணியாற்றும் இடம்.

வாரம் ஒரு முறை மதுரையில் இருந்து ஊர்ந்து(?) செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறினால் 5 மணி நேரத்தில் (பஸ்சில் மூன்றரை மணி நேரம்தான்) ராமேஸ்வரத்தில் இருக்கலாம். இதற்காக திங்கட்கிழமைகளில் மதியம் 2 மணி டிரெயின்தான் பிடிப்பேன். அரைநாள் சக ஊழியரால், கோ பிராக்சி போட்டுக் கொள்ளப்படும்.

இந்த ரயில் பயணம் ஆரம்பத்தில் மிக சுவாரசியமாக இருந்தது. ஆனால், நேர விரயத்தால் பின்னாளில் ரயிலை பார்த்தாலே, எட்டி உதைக்க வேண்டும்போல் ஆகிவிடும். பஸ் கட்டணம் ஜாஸ்தியாச்சே.... அடிச்சாலும் பிடிச்சாலும், சென்ட்ரல் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்மென்ட்தானே.

அதே காய்ந்த கருவேலங்கள்தான் வழி முழுவதும். மண்டபம் வரும்போதுதான், மனதுக்கு அப்பாடி என்று இருக்கும். வாரம் முழுக்க வேலை பார்த்துவிட்டு, சனிக்கிழமை அதே மதிய நேர ரயிலை பிடித்தால் (அன்னைக்கும் அரைநாள் பிராக்சியா என்றெல்லாம் கேட்கப்படாது), இரவு 7 மணிக்கு மதுரைக்கு வரும். மானாமதுரையை தாண்டிவிட்டால், ‘‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா...’’ என்று மனம் துள்ள ஆரம்பித்துவிடும்.

சோழவந்தான் வந்துவிட்டால், சின்னக்குழந்தையை போன்று, ஒரு சீட்டில் இருந்து எழுந்து அடுத்த சீட்டின் ஜன்னலோரத்தில் அமர்ந்து, இதோ... இதோ... என்று இடதுபக்கம் சாலையில் செல்லும் வாகனங்களின் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் இருக்கும் டி.என்.59 எண்ணைக்கண்டு மனம் குதூகலமடைய ஆரம்பித்துவிடும்.
சென்னைவாசிகள் பல பேருக்கு தென்மாவட்டத்தில் இருந்து வரும்போது கூவத்தை நுகரும்போதுதான் உற்சாகம் பிறக்கும் என்பார்களே அதைப்போன்ற ஒரு மனநிலைதான் (இப்போ நான் கூட சென்னைவாசிதான் புரோ...).

அன்று ஒருநாள் மதுரையில் வீட்டில் விசேஷம். ராமேஸ்வரத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டு கிளம்பும்போதே மதியம் 2.45 ஆகிவிட்டது. 3 மணிக்கு சரியாக ரயில் கிளம்பிவிடும். அடித்துபிடித்து வந்து சேர்ந்தால் ரயில் பிளாட்பாரத்தைவிட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது.

டிக்கெட் கூட வாங்க நேரமில்லை. சரி, ரயிலில் டிடிஆரிடம் பைன் போட்டுக் கொள்ளலாம் (ஓராண்டு பழக்கத்தில் நண்பரான எதிரி) என்று ஏறிவிட்டேன்.
பெரும்பாலும் அந்த ரயிலில் டிடிஆர் வருவதில்லை. ஆனால், நமக்கு என்று ஹெட் ரைட்டிங் இருக்கிறதே.... அது விட்டுப்போகுமா? சரியாக வந்து தானே ஆவணும். அந்த ரூட்டில், தெரிந்த அந்த டிடிஆர் மட்டும்தான் வருவார். வேறு யாரையும் அந்த ஓராண்டுக்காலத்தில் நான் பார்த்தது இல்லை.

அன்றைக்கு புது டிடி வந்து கொண்டிருந்தார். ரயில் பரமக்குடியை நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றைக்கு ரயிலில் அதிகளவில், ‘ஏக் காவ்மே ஏக் கிசான்கள் ஏறியிருந்தார்கள்

ரயிலில் வந்துக் கொண்டிருந்த டிடி மிக இளமையாக இருந்ததுடன், வெள்ளை பேன்ட், வெள்ளை சட்டை மட்டும் போட்டு டிக்கெட்டை வாங்கி சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெட்டியின் பின் வாசலில் நின்றிருந்தார். நான் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தேன். நண்பேன்டா டிடி வந்திருந்தால், 20 ரூபாய் அபராதம் போட்டுக் கொண்டு சென்றுவிடலாம். பல நேரங்களில் அவர் டிக்கெட்டைக்கூட என்னிடம் கேட்டதில்லை. என் பணி மீது அவருக்கு இருந்த மரியாதையாக கூட இருந்திருக்கலாம். ஆனால், வலுக்கட்டாயமாக நானே அபராதம் போட்டு வாங்கிக் கொள்வேன்.

சாதாரணமாக அபராதம் என்றால், 12 ரூபாய் டிக்கெட்டுக்கு ரூ.120 போட வேண்டும். ஆனால், அவசரத்தில் வந்ததில் ரூமுக்கு சென்று பணம் எடுக்காமல் வந்துவிட்டேன். அதிகபட்சமே 80 தோ, 90 தான் இருந்தது. அதனால்தான் புது டிடி பார்த்தவுடன், வயிற்றில் மிக்சி சுற்றியது. அவர் பக்கத்தில் வர, வர மிக்சியின் வேகம் 4ல் சென்றுக் கொண்டிருந்தது.

திடீரென ஒரு குரல், ‘‘அவனை பிடிங்க... அவனை பிடிங்க...’’ என்று.

ஒயிட் டிடி என்னை தாண்டி, ‘‘சோர்… சோர்…’’  என்று கத்தியபடி ஓடிக்கொண்டிருந்தார். சரி அவர் யாரோ, திருடனை பார்த்து ஓடுகிறார்... அவரை பிடித்துக் கொடுத்தால் நாமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் பின்னாலேயே நானும் ஓட ஆரம்பித்தேன்.

அந்த நேரத்தில் ரயில் பரமக்குடி ஸ்டேஷனில் பாதி நுழைந்துவிட்டது.


ஒயிட் சர்ட் டிடி ரயிலில் இருந்து பாய்ந்து குதித்து ஓடினார். அவருக்கு பின்னால் அஜீத் (சாரி விஜய் பேன்ஸ்) ஸ்டைலில் நான் குதித்து ஓடுகிறேன்

அந்த நேரத்தில் ரயில் சடாரென எமர்ஜென்சி பிரேக் அடித்து நிற்கிறது, ரயிலில் சடன் பிரேக் போட்டால் அது பெட்டிகளுடன் ஒன்று சற்று தள்ளிவிட்டு நிற்கும் சத்தம் பலமாக கேட்கும். இதை  பலமுறை கேட்டுள்ளேன்.

அந்த ஓட்டத்திலும் ரயில் ஏன் பாதியிலேயே பிரேக் அடித்து நிற்கிறது என்கிறது என்று பெட்டியின் உள்ளே கண்களை சுழற்றுகிறேன்.

பிதாமகன் படத்தில் லைலா எமர்ஜென்சி செயினை இழுத்துப்பிடித்து தொங்கிக் கொண்டிருப்பாரே, அது போன்று ஒரு இளம்பெண் எமர்ஜென்சி செயினை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள். வடமாநிலங்களில் கொள்ளையர் என்றால் இப்படித்தான் எமர்ஜென்சி செயினை பிடித்து இழுப்பார்கள் என்று பின்னால் தெரிந்துக் கொண்டேன்.

ஒயிட் டிடி யாரை துரத்திக் கொண்டு ஓடுகிறார் என்று முன்னால் பார்க்கிறேன். முன்புறம் யாரையுமே காணோம். அவர் என்னை பார்க்கிறார்.... மீண்டும் வேகம் எடுக்கிறார். யாரை துரத்துகிறோம் என்று தெரியாமல், நானும் அவரை பார்க்கிறேன்... வேகம் எடுக்கிறேன்ஒரு பரபரப்பு சினிமா சேசிங் காட்சி போல் இருந்தது.

ஓடிக்கொண்டிருந்த நான் எதேச்சையாக பின்னால் பார்க்கிறேன்.

அங்கே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

பழைய டிடி, ஓடி வந்துக் கொண்டிருந்தார்.... ‘சார் அவனை பிடிங்க.. அவனை பிடிங்க சார்...’’ என்று என்னை நோக்கி கத்திக் கொண்டிருந்தார்.

அவர் யாரை சொல்கிறார் என்று மீண்டும் முன்புறம் பார்த்தால், எனக்கு முன்னால் ஓடிக் கொண்டிருந்த ஒயிட் சர்ட் டிடி.யைதான் காட்டிக் கொண்டிருந்தார்.

இவருக்கும் அவருக்கும் வாய்க்காவரப்பு தகராறா இருக்குமோ.... என்று நினைத்துக் கொண்டே, இப்போது ஒயிட் டிடி பிடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.
ஒயிட் டிடி ஓட்டத்துக்கு எங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அந்த ஆள் ஓடிவிட்டார்.
முட்டியில் கைகளை வைத்து குனிந்து மூச்சு வாங்கினேன். பழைய டிடியும், என் அருகில் வந்து அதேபோல் மூச்சிரதை்தார்.

‘‘என்னா சார் விட்டுப்புட்டீங்களே… அவன் கேடி சார்... கூட்ட நேரத்தில ஏறி, பாசஞ்ஜர்ஸ்க்கிட்ட பைன்னு சொல்லி பணத்தை புடுங்கிட்டு போயிடுவான்... ரொம்ப நாளா அகப்படாம இருந்தான். இன்னைக்கு ரயில்ல ஏறினா இவன் நிக்கிறான். சரி பிடிச்சிடலாம்னு நினைச்சேன்... இன்னைக்கும் தப்பிச்சிட்டானே சார்....’’ என்றார்.

‘‘ஆமா தப்பிச்சுட்டான்…’’ அவரிடம் கூறினாலும், மனதில், ‘‘அப்பாடி.... நானும் தப்பிச்சிட்டேன்....’’ என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது.

நிமர்ந்து இருவரும் மெதுவாக நடந்து பெட்டிக்கு வருகிறோம்.

அங்கப்பார்த்தா இன்னும் அந்த பக்கி செயினை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது ஜன்னல் வழியாக தெரிந்தது.
-
ஜே.எஸ்.கே.பாலகுமார்.