21 May 2020

நித்தம் நித்தம் நெல்லிச்சோறு...


நித்தம் நித்தம் நெல்லிச்சோறு…


                         
புரோட்டா புராணத்தை எழுதி பலரது வயிற்றெரிச்சலை சம்பாதித்து விட்டான் இந்த ஜேஎஸ்கே. இந்த கோடை வெயிலில் அந்த புண்பட்ட வயிற்றுக்கு தண்ணீர்விட்டு ஆற்ற, ஒரே தீர்வு பழைய சாதம்.
பழைய  சாதம் இப்போதெல்லாம் அம்மணிகளின் மதிய நேர தயிர் ஊற்றி சாப்பிடுவதற்கான ஆகாரமாக மாறிவிட்டது. ஏனெனில், வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் சுடுசோறு சாப்பிட மீதமான பழைய சாதத்தை அம்மணிகள்தான், ‘‘அரிசி விக்கிற விலையில…’’ என்று புலம்பிக் கொண்டு சாப்பிடும் நிலையில் உள்ளார்கள். உண்மையிலேயே இளமை வேண்டும் என்பவர்கள் நம்பர் நடிகை மாதிரி இந்த வயசிலும் ஹீரோக்களோட போட்ட போட்டு நடிக்கிற மாதிரி இளமையா இருக்கணும்னா  பழைய சாதத்தை சாப்பிடுவதுதான் வைட்டமின் டி யாக இருக்கும்.
அதுமட்டுமல்ல பழைய சாதத்தை சாப்பிட்டுப் பாருங்கள். அப்படியே அம்மாவின் கைப்பிடித்து  திருவிழாவுக்கு போன சுகம் கிடைக்கும். (அப்பாக்கூட போன நாலு முட்டாய் ஒரே நேரத்தில கெடக்காதில்ல…. அப்புறம் கேட்டு தலையில குட்டு வாங்கிக்கிறது யாரு….?) பழைய கஞ்சியில் வைட்டமின் பி12 அவ்வளவு குவிந்து இருக்குகிறது. ஆனால், நம்மாட்கள்… லபக்… லபக்கென்று மாத்திரை  தின்கிறார்களே… தவிர இந்த ஜேஎஸ்கே சொல்வது போல் பழைய சாதத்தை சாப்பிடுவதில்லை.
பழைய சாதம் என்றால்,  முதல் நாள் சமைத்த சாதத்தில் இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் 11 மணி அளவில் எடுத்து சாப்பிடுவது. இப்போது நியூயாரக் டிபார்மென்ட் ஸ்டோர்களில் இந்த பழைய சாதம் ஒரு பேக் ரூ.350 (அங்க எப்பய்யா ரூபாயில விக்க ஆரம்பிச்சான்னு நம்பியார் பாணியில் கையை பிசைந்துக் கொண்டு கேட்கப்படாது…. இது நம்மூர் பண மதிப்பில் மாற்றிப்போட்டது) கிடைக்கிறது.
வெள்ளைக்காரன், ‘‘பொழயசேதம்…!’’ என்று வாங்கி சாப்பிட்டுப் போகிறான். காரணம் இருக்கிறது புரேரா…. வெறும் ரொட்டியும்,  பர்கரும் சாப்பிட்டு காலையில் முக்கிக்கொண்டிருப்பவர்கள் பழைய சாதத்தை சாப்பிட்டால் போதும்… விவேக் சினிமாவில் சொன்னதுபோல வெளியேறும் என்பதால்தான். டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்,
பழைய சாதத்தை சிலர் இரண்டு நாள் கூட வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரையில் 15 மணி நேரம்தான் அதிகபட்ச ஊறல் நேரம். இல்லாவிட்டால் சென்னையில் விற்கும் ஜிகர்தண்டாக்களைப்போல் இருக்கும்.
பழைய சாதத்தை செய்ய மண்பானை தீ பெஸ்ட். மண்பானை அல்லது சட்டியில் இரவில் மிஞ்சிய சாதத்தை போட்டு தண்ணீர் ஊற்றிவிடுங்கள். காலையில் ஒரு 10 மணி வாக்கில் திறந்து பாருங்கள். மூடியை திறந்ததும், ஆங்காங்கே சிறு குமிழிகள் வந்து வெடித்து செல்லும். தேர்தல் நேரத்து புதுக்கட்சிகள்போல். அந்த சிறுகுமிழிகள் வெடித்து சென்றால், சாதம் நன்கு ஊறியிருக்கிறது என்று அர்த்தம்.
மூடியை திறந்தவுடன், பழைய சாதத்தில் இருந்து ஒரு மெல்லிய புளிச்சவாசனை நாக்கை எட்டும். ஆகா… அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பான்ட்ஸ் போன்று மூக்கை தெறிக்கும் மணமின்றி, கோகுல்சாண்டல் போன்று மெல்லிய மணத்துடன் இருக்கும். ஆனால், நீண்ட நேரம் இருக்கும்.
சாதம் அனைத்தும் கீழே தேங்கியிருக்க, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு நீலத்தைவிட்டதுபோன்று மிக,   மிக மெல்லிய நீல நிறத்துடன் தண்ணீர் தேங்கிநிற்கும். நீட் தேர்வில் வடமாநிலத்தவர்கள் எளிதில் மேலே வந்துவிடுவதுபோல…
இதை அப்படியே விட்டுவிட்டால்  நன்றாக இருக்குமா? அப்படியே சாதத்தையும், தண்ணீரையும் ஒன்றாக பிசைய வேண்டும். அப்போதுதானே  பிரச்னை வராமல் இருக்கும். இப்போ நீலத்தன்மை மறைந்து பால் போன்ற நிறம் வந்திருக்கும்.
நன்றாக சம்மணம்போட்டு உட்கார்ந்துக் கொண்டு, ராஜ்கிரண் பாணியில் பானையில் இருந்து சாதத்தை உருண்டைப் பிடித்து வாயில் போட்டால், முதலில் ஒரு சிறிய புளிப்புத்தன்மை நாக்கில் தென்படும். சாதம் அரைபட, அரைபட பொறியை வாயில்போட்டு சாப்பிட்டு அனைத்தும் கரையும்  நிலைக்கு வந்தபோது ஒரு சுவை இருக்குமே அந்த சுவைக்கு வந்துவிடும் சாதம். எந்த ஒரு உணவையும் ரசிச்து சாப்பிட்டு பாருங்க… அப்போதான் எல்லா சுவையும் மனதில் நிற்கும்.
இந்த சமயத்தில்தான், அடுத்த கவள சாதத்துக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது, தொட்டுக்கொள்ள ஏதாவது நாக்கின் நடுவில் தடவினால், நல்லகிரைம் படம் பார்க்கும்போது குத்தாட்ட பாட்டை ரசிப்பதுபோன்று மனநிலை ஏற்படும். ஆட்டமா… தேரோட்டமா… பாணி  பாடல்கள் சிறப்பு.
இந்த பழைய சாதத்துக்கு ஏற்ற சைடிஷ் சாங்… சாரி சைடிஷ் என்னைப் பொருத்த வரையில், தாமரை இலையில் மடித்த ஊறுகாய்தான். ஊர்ப்பக்கத்தில் இது அதிகம்கிடைக்கும். சென்னையில்  வண்ணாரப்பேட்டை போன்ற இடங்களில் கிடைக்கிறது.
பொடி போடுபவர்களை பார்த்திருக்கிறீர்களா? சின்ன சில்வர்  டப்பியில் நிரப்பி வைத்திருப்பார்கள். அதை மேலாப்பில் சின்னதாக ஒரு தட்டு தட்டி, அதில் இருந்து ஒரு சிட்டிகை எடுத்து, கட்டைவிரல், நடுவிரலில் பிடித்து, ஆட்காட்டி விரலை அதன் ஒரு தட்டு தட்டி சிறிய ஒலியை எழுப்பி மூக்கில் ஏற்றுவார்கள்.  அதைப்போன்று இந்த தாமரைஇலை ஊறுகாய் பொட்டலத்தை மேலாக ஒரு தட்டு தட்டி, ஒட்டிய கீழே இறங்கும் வகையில் லாவகமாக பிரித்து, அதில் இருந்து  பாதியை லாவகமாக வழித்து எடுத்து, போட்டுக் கொண்டால், ஒரு பானை பழைய சோறு இருந்தாலும் சும்மா பிச்சுக்கிட்டு உள்ளே இருக்கும். காதலி கொடுத்த பரிசைப்போல். ஊறுகாய்  மிச்ச ஊறுகாயை மடித்து மீண்டும் மறுநாள் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
பணக்கார நண்பர்கள், பழைய சாதத்துக்கு… இன்னொரு சைடிஷ்ஷை வைத்துள்ளார்கள். அது ஆட்டுக்கறி  பிரட்டல்,  அதான்பா மட்டன் சுக்கா… (வைரமாவே இருந்தாலும் தங்கத்தில்தான் போட்டுக்கலயா அதுமாதிரி). மிளகுப்பொடியை காரசாரமாக தூவி தயார் செய்த மட்டன் சுக்காவை, பழைய சாதத்துடன் சேர்த்து  சாப்பிடுவார்கள். மாத முற்பகுதியில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். அப்போ பிற்பகுதியில்…? வேற  வழி…. ஆட்டமா… தேரோட்டமாதான்.
ஆட்டுக்கறி பிரட்டல்,  பழைய சாதம் காம்பினேஷன், கீர்த்தி சுரேஷூடன் நாமே ஹீரோவாக நடித்ததுபோன்ற பிரம்மாண்ட பிரம்மையை நமக்குள் ஏற்படுத்தும். அப்போது ஜென்டில் உமன்களுக்கு…? அவங்களுக்கு அஜீத்தோ, விஜய்யோ காம்பினேஷன் வச்சுக்கலாம். ஆங்காங்கே தென்தேசத்தில் முருங்கைக்காய் கூட்டும் இதற்கு பயன்படுத்துகிறார்கள். அதுவும் கூட நல்லாத்தான் இருக்கும்.
அதேபோல், சி சென்டர்களில் பழைய சாதத்துக்கு பச்சை மிளகாய், வெங்காயம், மாங்காய் போன்றவற்றை தொட்டு சாப்பிடுவதாக ஆங்காங்கே இருக்கும் ரசிகர் மன்றங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஊறுகாய் மட்டையும், ஆட்டுக்கறியும் பிரட்டல்தான், மிகச்சிறப்பானது என்று அமெரிக்க அதிபர் டிர்ம்ப்பே ஒரு முறை கூட்டத்தில் கூறியதாக, வாஷிங்டன்னில் இருந்து எமது நிருபர் கூறியிருக்கிறார்.
அதனால் மக்களே இன்னொரு முறை பழைய சாதத்தை சாப்பிடும்போது, கீர்த்தி சுரேஷா, ரம்யா கிருஷ்ணனா என்பதைமுதலில் முடிவு செய்துக் கொண்டு சாப்பிடவும்.
அப்புறம், நித்தம் நித்தம் நெல்லிச்சோறு….ன்னு என்ன கூந்தலுக்கு  இதுக்கு பெயர்  வச்சே என்று ராணிப்பேட்டை மீரான் கத்துவது கேட்கிறது. நெல்லிச்சோறுதாம்யா…நித்தம், நித்தம் பழைய சாதத்துக்கு ஏற்றது. எப்புடீடீடீ… நாங்க பழைய கமல் ரசிகருகய்யா…ஜே.எஸ்.கே.பாலகுமார்.

No comments:

Post a Comment

Thanks