14 June 2020

பிரியாணி

பிரியாணி


பிரியாணி என்ற வார்த்தையை கேட்டதுமே, இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே... என்று ெசால்பவர்கள் என் கட்சி. மற்றவர்களெல்லாம் எதிர்க்கட்சி என்பேன். அவர்கள் என்ன பேசினாலும், இந்த விஷயத்திலே தப்புதான்யா... அவங்க எல்லாம் ஆன்டி இந்தியன்ஸ்.

ஆதிமனிதன் கூட காட்டில் ஊன் சோறு சாப்பிட்டதா, சங்க இலக்கியங்கள்ல இருக்கிறப்போ... நான் சாப்பிடக் கூடாதா? என் முப்பாட்டன், விளக்கின உப்பும், கரியும், வேம்பும்தான்யா இப்போ நீங்க, ‘இட்ஸ் நியூ பேஸ்ட்டும்மா...’ என்று வெளக்குறீங்க...

ரொம்ப பொங்குறேனோ...? சரி விடுங்க... நமக்கு எதுக்கு பழங்கஞ்சி எல்லாம்.

பிரியாணின்னு சொன்னதுமே ஞாபகத்தில் வருவது ஒண்ணு ஜீரக சம்பாவில் செஞ்ச தென்மாவட்ட பிரியாணி. இன்னொன்னு பாஸ்மதியில் செஞ்ச வடமாவட்ட பிரியாணி. ரெண்டும் ஒண்ணுக்கொன்னு கொறஞ்சது இல்ல... நயன்தார இல்லேன்னா... தமன்னா... மாதிரி.

ஆனால், பிரியாணியில சிறந்து மட்டனா, சிக்கனான்னு கேட்டா.... என்னைப் பொருத்தவரையில் மட்டன்தான். தென்மாவட்ட மக்கள் சிக்கனை சாப்பிடுவதை கவுரவக் குறைச்சலாக கருதுவார்கள். அதுவும் பிரியாணியில். காரணம், அங்கு செமையான வெள்ளக்காட்டு கறி கிடைக்கும். அது மட்டுமின்றி விலையும் கணிசம். ஆனால், வட மாவட்டத்தில்.... தலையெழுத்து கொக்கரக்கோவின் கழுத்தை தான் திருக வேண்டியிருக்கு... ஆக மட்டன் தென் கலைன்னா... சிக்கன் வட கலை... கதம்பவனத்துக்காரர் பொங்க ஆரம்பிக்கிறார்... ஐயா... நான் சமையல் கலையை தான் அப்படிச் சொன்னேன். தண்ணிய போட்டு அடக்குங்க... ஓவர் பொங்கல்... உடம்புக்கு ஆகாது.

எந்த பதார்த்தம் என்றாலும், வீட்டில் செஞ்சதுதான் நல்லா இருக்கும். அதில் விதிவிலக்காய் இருக்கும் ஒரே விஷயம் பிரியாணியார்தான். கடையில வாங்குறதுதான், அதுவும் சரியான கடையில் வாங்குறதுதான், மடிப்பு அம்சா மாதிரி சும்மா கும்னு இருக்கும். மத்தது எல்லாம் வடநாட்டுக்காரன் பிரியாணி என்ற பேர்ல விற்கும், சூப் கலந்த சோறுதான்.

இயற்கையிலேயே ஜீரக சம்பா பிரியாணிக்கு மனம் அதிகமா, பாஸ்மதி அரிசி பிரியாணிக்கு வாசனை அதிகமா என்றால், சாப்பிட்டு ரெண்டு மணி நேரம் ஆன பின்னரும் எது வாசனை குறையால் இருக்கிறதோ அதுதான் என்று அடித்து கூறலாம். அந்த வகையில் என் ஓட்டு ஜீரக சம்பாவுக்குத்தான். 20 ரூபா நோட்டு வாங்காமலேயே நாலு கள்ள ஓட்டு கூட சேர்த்துக் குத்தலாம்.

பிரியாணிக்குன்னு சில சாமுத்திரிகா லட்சணங்கள் இருக்கு. அதில் முதாவது... சாப்பிடப் போகும் கடையில் இருந்து வாசனை காத தூரத்துக்கு வர வேண்டும். அதான்பா... வண்டிய பார்க் பண்ண போறதுக்கு முன்பிருந்தே வாசனை மூக்கை துளைக்க வேண்டும். அடுத்தது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வர்றப்போ... யாரோ தந்த பாரீன் சாக்லேட்டை வாங்கி வச்சிருந்து நம்மக்கிட்ட அவங்க எடுத்து தரும்போது ஒரு மகிழ்ச்சி கிடைக்குமே அந்த மாதிரி அழகா இருக்கணும்... (யோவ்... சாக்லேட்டுக்கும் பிரியாணிக்கும்... என்னய்யா ஒரு காம்பினேஷன்....). கறி நல்லா வெந்து பூப்போல இருக்கணும்... (ஏன் 100 மல்லி வாங்கி சாப்பிடேன்னு பொதி ராஜ் கேட்கிறது கேட்கிறது).

இந்த லட்சணங்களுடன் இருந்தால் தாராளமாக சாப்பிட அமரலாம். தலைவாழை இலை போட்டு, அதில் வெங்காயப் பச்சடி, ஆம்பிளேட், மட்டன் சுக்கா, சால்னா கப்பை வைத்துவிட்டு, பீங்கான் தட்டில் கொண்டு வந்த பிரியாணியை இலையில் தட்டிவிட்டு, அதிலேயே மிச்சம் இருப்பது விழுவதற்காக இலையில் ரெண்டு தடவை தட்டி ஒரு சத்தத்தை சர்வர் எழுப்பும்போது, என்ஜாய் மவனே... என்ஜாய் என்று சொல்வது போன்று இருக்கும்.

ரொம்பவும் கொழுப்பு கறியா இருந்தால் என் மாதிரி ஆட்களுக்கு பிடிக்காது. சதைப்பற்றுள்ள கறிதான் சிறப்பானதாக இருக்கும் என்று கருதுபவன் நான். கொஞ்சம் பஸ்டியா இருந்தாதான் மாமூ அழகு. ஒல்லிப்பிச்சி எல்லாம் அழகல்ல என்பது சீத்தலை சாத்தனார் சொன்னது அல்ல; இந்த சீவிய தலை பிரியாணி பிரியன் சொல்வது. தென்பக்கம் சால்னாவை பிரியாணியின் மீது ஊற்றி சாப்பிடுவது வழக்கம். வடக்கே பிரியாணிக்கு சால்னா என்றால், முறைக்கிறார்கள். இங்கே கொஸ்து என்று கேட்டால், கத்திரிக்காய் கறியை கொண்டு வந்து வைப்பார்கள். பீட்சாவுக்கு வெங்காயச்சட்னி மாதிரி. ஆனா, பல பேர் இது இல்லாமலும் சாப்பிடுகிறார்கள்.

இது மாதிரி சங்கரன்கோயிலில் சுல்தான் பாய் கடையில் சால்னா இல்லாமல் தருகிறார்கள். அதை சாப்பிடுபவதற்கு வரிசை வேறு. நொந்து நூடுல்ஸ் ஆகி வந்தேன்.

நம்ம தென்பக்கம் பிரியாணிய சாப்பிடணும்னா.... மதுரை அம்சவள்ளிக்கு, தமிழ்நாடு ஓட்டலுக்கு போகலாம். வடபிரியாணிக்கு தரமணி மிர்ச்சி.... வாவ்... ஜென்ம சாபல்யம் வேணும்னா... இங்க ஒரு முறை போய் சாப்பிட்டு வந்துடுங்க...

இன்னொரு விஷயம் இருக்கு. தென்பக்கம் கறியை அவிச்சி தண்ணி எடுத்து அதில் இருந்து பண்றது இல்ல. அதிலேயே கறியை போட்டு பண்றது. வடக்குபக்கம் தண்ணீரை தனியா எடுத்து பண்றாங்க.... அதிலேயே கறியை போட்டு பண்றதுதான் மஸ்தும், சுவையானதும் கூட. அதேபோல், பீட்சாவுக்கு சீஸ் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பிரியாணிக்கு வெங்காய பச்சடி. இந்த பச்சடி நல்ல கெட்டித்தயிரில், வெங்காயம் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது ஊறி, சும்மா... தளதளன்னு இருக்கணும்.... அதை வாயில் வைக்கிறப்போ, வண்டிக்கு பர்ஸ்ட் கியர் போட்ட மாதிரி ஜிவ்வுன்னு இருக்கணும்.

மொதல்ல வெங்காய பச்சடியில கொஞ்சம் வாயில அள்ளிப் போட்டுட்டு, பிரியாணியை ஆரம்பிச்சீங்கன்னா... தட்டுல சாப்பாட போட்டுட்டு, பொண்டாட்டி என்னங்க சாப்பிடலியான்னு மோவாயை பிடித்து அன்புடன் கேட்கிறப்போ வர்ற ஒரு கிக் இருக்கிறதே... அந்த மாதிரி செம டேஸ்ட்டா இருக்கும் (பொண்டாட்டி இல்லாதவர்கள் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கப்பா...)

பிரியாணியில் சால்னாவை ஊற்றி, கலக்கி, அப்படியே அள்ளி வாயில் போட்டுக் கொள்ளும்போது, சிறுகுடல், பெருங்குடல் வழியாக தாவி வந்து தொண்டைக்குழி வரை வந்து நின்று பிரியாணியை இழுத்துக் கொண்டு போகும். பிரியாணியின் முதல் கவளத்தை சாப்பிட்டபோது இருந்த தருணத்தை நினைத்து பாருங்கள். இது நினைவுக்கு வரும். முதல் கவளம் அப்படியே விழுங்கப்படும். ஏனெனில், அதன் சுவையை அவ்வளவு வேகமாக குடல் இழுக்கும். அடுத்ததுதான் ருசி மொட்டுகளுக்கு... பிரியாணியின் மனமானது, வாய்க்கு அருகில் கொண்டு செல்லும்போதே மொட்டுக்களை எழச் செய்துவிடும்.

பிரியாணி சுவையை தான், வாய் முழுவதும் ரசிக்கும். கவளத்தை அள்ளி வாயில் போடும்போது, அன்னமானது, அவசர, அவசரமாக அதன் காரத்தை இழுக்கும். நாக்கு கறிச்சாற்றின் சுவையை சுர்ரென்று இழுக்கும். பற்கள் மட்டும் சும்மா இருக்குமா...? அவை கறியை துவம்சம் செய்யும். இவற்றுக்கு எல்லாம் கிடைத்தவற்றில் இருந்து மிஞ்சிய சாறுகளை ஈறுகள் உறியும். வாய் முழுவதும் இந்த நடக்கும் இந்த உணவுப் போராட்டம் கடைசி பருக்கை வரையில் நீளும்.

இந்த நாக்கு இருக்கிறதே... எமகாதகன் சார்... எல்லாம் முடிஞ்ச பிறகும் அடங்காது. இலையில் வழித்து, விரலை தனக்கு கொடுக்க சொல்லும். அதன் சுவை நாக்குக்கு மட்டும்தான். அடுத்த முறை சாப்பிடும்போது, வடக்கா, தெக்கான்னு முடிவு பண்றதுக்கு முன்னாடி, தயவு செஞ்சு இந்த பாலகுமாரனுக்கு ஒரு போன் போட்டீங்கன்னா... உங்களுக்கு அல்வாவை ரசிக்கிறது எப்படின்னு சொல்லித்தர்றேன். - ஜே.எஸ்.கே.பாலகுமார். https://anubavampalasu.blogspot.com

12 June 2020

தேக்கு மேஜை

தேக்கு மேஜை

-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

 

‘‘கெழத்துக்கு இதே வேலையா போச்சு… எல்லா பழசையும் வச்சுக்கிட்டு அறழும். இடம் அடைக்குதுன்னு, ரூம்ல கிடக்கிற மேஜையை விக்கலாம்னா… அது மாமனார் பயன்படுத்தினது… உசுருமாதிரின்னு ஏதாவது சொல்லி தடுக்குது… இதுக எல்லாம் இன்னும் எதுக்காக உயிரோட இருந்து, எங்க உசுர வாங்குதுகளோ…’’ வார்த்தைகளில் நெருப்பள்ளிக் கொட்டினாள் ரோசி.

 

கேட்டுக் கொண்டிருந்த கணவன் ஜோசப், ‘‘மெதுவா பேசுடீ… அம்மாவுக்கு கேட்டுட போகுது…’’ என்று மெதுவாக பேசினான்.

 

‘‘ஆமா… கேட்டுட்டாலும் அப்படியே… நாண்டுக்கிட்டு செத்துடப் போறாங்க… போய்யா… நீயும்… உன் நொம்மாவும்… இதப்பாரு… இன்னும் ரெண்டு மூணு நாள் தான் பார்ப்பேன். நீ என்ன பேசுவியோ, சமாதானம் பண்ணுவியோ எனக்கு தெரியாது. ரூம்ல அடைஞ்சு கெடக்கிற அந்த ஐந்தடி மரமேஜையை உடனடியா வித்துடு. இல்லாட்டி, பழைய சாமான்காரன்கிட்ட கூப்பிட்டு சும்மாவே குடுத்திடுவேன்…’’ என்று கூட்டிக்கொண்டிருந்த விளக்குமாற்றை இடதுகையால் தட்டிக்கொண்டே முறைத்தாள் ரோசி.

 

அவளைப்பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ஜோசப்.

 

உள்ளே உட்கார்ந்திருந்த மேரிக்கு, மருமகளின் பேச்சும், அவளை அடக்க முயலும் மகனின் பேச்சும் கேட்காமல் இல்லை.

 

தேக்கு மேஜை அருகே உட்கார்ந்திருந்த மேரி, மெதுவாக அதை தொட்டுப்பார்த்தாள். பழைய நினைவுகள் ஏனோ நிழாலடின.

 

‘‘மேரி… ’’ என்று கணவர் மைக்கேல் கத்தும் சத்தும்கேட்டு ஓடோடி வந்தாள்.

 

‘‘இந்த மேஜையில யார் பிளிச்சின் பாக்கெட்டை வச்சது?’’ என்று மீண்டும் கத்தினார்.

 

‘‘நான்தாங்க…’’ என்று மென்று விழுங்கினாள் மேரி.

 

‘‘அறிவிருக்கா உனக்கு… இது என் உசுரு மாதிரி… இதுல போய் பிளிச்சின் பாக்கெட்டை வச்சிருக்கே… எங்க வீட்டுல எழுதுறதுக்கு ஒரு டேபிள் கூட கிடையாது. அதனால சின்ன வயசில இருந்தே வைராக்கியமா இருந்து முதல் மாச சம்பளத்தில ஆசை, ஆசையா செஞ்சு வாங்கின மேஜை இது. அதை கவுரப்படுத்த முடியலேன்னா கூட பரவாயில்ல. இந்த மாதிரி பிளிச்சின் பாக்கெட், பாத்ரூம் கழுவுற பிரஸ்னு வச்சு, என் டேபிளோட மரியாதைய கெடுக்காதே… திரும்பவும் சொல்றேன், அது என் உசுரு மாதிரி. புரியுதா…?’’ என்று கத்தினார்.

 

புரிந்தது என்பதுபோல் தலையை ஆட்டினாள் மேரி.

 

அதில் இருந்தே மேரிக்கும், அந்த டேபிள் மரியாதைக்குரிய ஒரு விஷயமாகி போயிருந்தது. கணவர் வெளியே போயிருக்கும் நேரத்தில் துடைத்து சுத்தப்படுத்தி வைப்பாள்.

 

பத்திரிகையாளனாக வேலைப்பார்த்த அவளது கணவர், அந்த டேபிள்தான் கதை, கட்டுரைகளை எழுதுவார். அவர் இருந்தவரையில் அந்த டேபிளுக்கும் மிக கவுரவம் இருந்தது. அதன்பின்னர் மரியாதைக்குரிய அலங்காரப் பொருளாக மாறினாலும், மருமகள் வந்த பின்னர் தினமும் அதற்கு அர்ச்சனை விழுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

 

ஐந்தடி நீளம், மூன்றடி அகலத்தில் பிரம்மாண்டமான டேபிள் அது. அறையில் அது இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், கணவர் உயிராய் மதித்த ஒரு பொருள், மெல்ல, மெல்ல தன் உயிரிலும் கலந்துவிட்ட ஒரு பொருளை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுத்தர மேரிக்கு முடியவில்லை.

 

தினமும் ஏசு படத்துக்கு முன்பு அமர்ந்து, ‘‘இவர்கள் செய்யும் பாவங்களை மன்னித்துவிடும் எம் தந்தையே. விரைவில் உங்கள் காலடியில் எனக்கு இடம் தாருங்கள்’’ என்று மனமுருக வேண்டுவாள்.

 

அன்று மருமகளின் பேச்சில் ஆத்திரம் எல்லை மீறியிருந்ததை மேரி கவனிக்க தவறவில்லை. இனி இந்த மேஜைக்கு அவள் எப்படியும் இடம் தரமாட்டாள் என்று புரிந்து போனது.

 

ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் எழுந்தாள். கணவரின் கதைகளுக்காக வரும் ராயல்டி தொகைதான் அவ்வப்போது அவளது செலவுக்கு உதவிக் கொண்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள். வழக்கமாக இந்த நேரத்தில் அவள் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். சர்ச்சுக்கு சென்றுவிட்டு, அப்படியே இமானுவேல் ஆசாரியை பார்த்துவிட்டு வந்தாள்.

 

அவள் சொல்லி வைத்ததுபோல், அன்று மாலையே இமானுவேல் இரண்டு ஆட்களுடன் வந்தார்.

 

‘‘அம்மா… கட்டாயம் எடுத்துட்டுத்தான் போகணுமா?’’ என்றார்.

 

‘‘அய்யாவுக்காக நானே ஆசையா பண்ணிக்குடுத்ததும்மா… அவருக்கும் எனக்கும் ஒரு ரெண்டு, மூணு வயசுதான் வித்தியாசம். அவர் எழுதுறதுக்குன்னு ஆசையா வந்து கேட்டப்போ… அவருக்காகவே ஆணியே அடிக்காம பண்ணிக்குடுத்த மேஜைம்மா அது’’ என்றார் இமானுவேல்.

 

கண்ணில் வடியும் கண்ணீருடன், மேஜையை நோக்கி கைக்காட்டி எடுத்துப்போகுமாறு சைகை காட்டினாள் மேரி.

 

பார்த்துக் கொண்டிருந்த ரோசிக்கு சந்தோஷமாக இருந்தது. ‘‘கெழவியே ஒரு வழியா ஆசாரிக்கிட்ட வித்துடுச்சுபோல… எப்படியோ ஒழிஞ்சா சரி’’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

பேரன் பிரான்சிஸ்தான் அழுதான். ‘‘அம்மா… நான் ஹோம்ஒர்க் செய்யணும்னா… அதுல தான உட்கார்ந்து செய்வேன்… அதைப்போய் எடுத்துட்டு போறாங்களேம்மா…’’ என்று கத்தினான்.

 

ஆனால், அவனை முதுகில் அடித்து உள்ளே கூட்டிக் கொண்டு போனாள் ரோசி.

 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

 

பிரார்த்தனைக்கு குடும்பத்தோடு அதிகாலையில் கிளம்புவது வழக்கம். எல்லோரும் தயாராக இருக்க, அம்மாவை காணாத நிலையில், ஜோசப் அம்மாவின் அறைக்கு சென்றான். அங்கு ஏசுவின் படத்துக்கு முன்பு ஜெபமாலையுடன் தூங்கிக் கொண்டிருந்தாள் மேரி.

 

‘‘அம்மா…’’ என்று தோள்பட்டையில் தட்டினான்.

 

ஆனால், அவள் தலை சாய்ந்து தொங்கியது கண்டதும், பதறிவிட்டான் ஜோசப். டாக்டரை அழைத்து சோதித்துபார்த்தான். எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இரவு முழுவதும் ஜெபம் செய்துக்  கொண்டிருந்த நிலையிலேயே தாயின் உயிர் பிரிந்துவிட்டது தெரியவந்தது.

 

சொந்தபந்தங்கள் எல்லாம் வந்து பார்த்தாகிவிட்டது. இதோ எல்லாம் ஆகிவிட்டது.

 

குழிக்குள் மேரியின் உடல் அடங்கிய பெட்டி இறக்கப்படுவதற்கு முன்பு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மா எப்போதும் ஆசையாக வைத்திருக்கும் கையடக்க பைபிளையும், அவளது ஜெபமாலையையும் தாயின் உடலின் மீது வைத்தான் ஜோசப்.மூடி மூடப்பட்டது.

 

அதன் மேலே, ‘‘அம்மாா, அப்பாா’’  என்று குழந்தையின்  கையால் செதுக்கப்பட்ட எழுத்துக்களும், கோட்டோவியமும் இருந்தது.

 

அது சிறு வயதில் தன் கையால் காம்பஸ் கூரால், வீட்டில் இருந்த அப்பாவின் மேஜையில் தான் எழுதிய எழுதுக்கள்.

 

அருகில் இருந்த இமானுவேல் தலையில் அடித்துக்கொண்டு அழுதுக் கொண்டிருந்தார்.

 

ஜோசப்பின் கதறல் விண்ணை பிளந்துக் கொண்டிருந்தது.

-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.


கல்யாணம்... கச்சேரி...

                                                 கல்யாணம்… கச்சேரி…

                                                                                        -         ஜே.எஸ்.கே.பாலகுமார்.

 

மகள் கலாவதி கல்யாணம் இவ்வளவு சீக்கிரம் அமைந்துவிடும் என்று ராகவனே எதிர்பார்க்கவில்லை.

 

ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் பெரும் பாராங்கல்லை எப்படி தூக்கி சுமக்கப்போகிறோம் என்று அயர்ச்சியாகவும் இருந்தது.

 

காரணம் இல்லாமல் இல்லை. ராகவன் தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். மாதம் 22 ஆயிரம் ரூபாய் வரும். இதில் வாங்கிய முன்பணத்துக்கான பிடித்தம்போக கையில் நிற்பது வெறும் ரூ.19 ஆயிரம் மட்டும்தான்.

 

இதில்தான் வீட்டு வாடகையில் இருந்து காபி செலவு வரையில் எல்லாவற்றையும்  பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவி சிவகாமி கணவனின் கஷ்டத்தை அறிந்தவள். அவளும் வடாகம், இட்லிப்பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி என்று அக்கம், பக்கத்தில் விற்று வீட்டுச் செலவில் சற்று முட்டு கொடுத்து வந்தாள்.

 

மகள் கலாவதி இப்போதுதான் படிப்பை முடித்து 2 மாதமாக வேலைக்கு போக ஆரம்பித்துள்ளாள். இனி கஷ்டம் கொஞ்சம் தீரும் என்று மனதின் மூலையில் ஒரு நப்பாசை பிறந்த நிலையில்தான், தூரத்து மாமன் முறை உறவான சீனிவாசன் மூலம், நல்ல வரன் அமைந்தது.

 

பையன் வீட்டாருக்கு கலாவதியை மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் சம்பாதிக்கும் மருமகள் வேறு. பெரிய அளவில் எதிர்பார்க்காவிட்டாலும் கூட 30 பவுன், 2 லட்சம் ரொக்கம், பாத்திரம் பண்டம் கேட்டிருந்தார்கள்.

 

கல்யாணச் செலவுக்கு மட்டும் எப்படியும் 3 லட்சம் ஆகிவிடும். மண்டபத்துக்கே இப்போது 50 ஆயிரம் கேட்கிறார்களே. இரண்டு நாள் என்றால், அதற்கே ஒரு லட்சம் எடுத்து வைக்க வேண்டும். அதுதவிர, அலங்காரச் செலவு, அய்யர், போட்டோ, வீடியோ, ஜவுளி, விருந்து என்று குறைந்தது 2 லட்சம் ஆகிவிடும்.

 

நகை என்று பார்த்தால்… ஒரு 20 பவுன் சேர்த்திருந்தார். இன்னும் 10 பவுன் வாங்க வேண்டும். அதுதவிர ரொக்கத்துக்கு ஏற்பாடு என்று எப்படி பார்ததாலும் 8 லட்சம் தேவைப்பட்டது.

 

நடுத்தட்டு மக்களுக்கு கவுரம்தான் பெரிய பிரச்னை. இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லி கோயிலில் கல்யாணத்தை வைத்துவிடலாம். இருக்கிறவர்கள் ஒருவாரத்துக்கு மண்டபத்தை புக் பண்ணி ஜமாய்ப்பார்கள்.

 

ஆனால், நடுத்தட்டு மக்கள். கவுரத்துக்காகவே குறைந்தபட்சம் ஒரு நடுத்தர மண்டபத்தையாவது புக் பண்ண வேண்டும். ரெண்டு சுவீட்டோடு விருந்து கொடுத்தாக வேண்டும். அதுதவிர ரிட்டர்ன் கிப்ட் என்று புதிதாக தாம்பூல பையுடன் ஒரு சின்ன பரிசுப் பொருளையாவது வைத்து தரவேண்டும். இல்லாவிட்டால், நொடிந்துவிட்டவர்கள் கணக்கில் ஊர் முழுக்கற பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

 

ஏற்கனவே முந்தாநாள் சம்பந்தியம்மா, ‘‘விருந்து நன்றாக இருக்க வேண்டும். மண்டபம் கொஞ்சம் பெருசாக இருக்க வேண்டும், ஆர்கெஸ்ட்ரா கூட வைக்கலாமே…’’ என்று பட்டியல் நீட்டிக் கொண்டிருந்தேபோதே, மனது பக், பக் என்றது.

 

எல்லாவற்றையும் பட்டியலில் போட்டு பார்த்ததில் சரியாக 8 லட்சத்து 45 ஆயிரம் தேவைப்பட்டது.

 

ஆபிசில் ஹெட் கிளார்க்கிடம் சொல்லி, பிஎப் பணம் 3.5 லட்சத்தையும் மொத்தமாக மகள் கல்யாணத்துக்கு என்று கேட்டு விண்ணப்பித்துவிட்டார். அந்த மனிதர், அவரது பால்ய நண்பர் என்பதால், பிஎப் ஆபிசில் சொல்லி பணம் உடனே வர தான் ஏற்பாடு செய்வதாக கூறினார்.

 

வங்கியில் சென்று பெர்ஷனல் லோன் கேட்டுப் பார்த்தார். 

 

அவர்கள் இவரது வயதை கேட்டபோது, 58 என்ற சொன்னவுடனேயே கைவிரித்துவிட்டார்கள். இன்னும் ரெண்டு ஆண்டில் ரிட்டயர் ஆகப்போகிறவரை நம்பி யார் கடன் கொடுப்பார்கள்?

 

அன்று வேலை முடிந்து வீட்டில் தளர்வாக வந்து அமர்ந்தார்.

 

சிவகாமி அவரை பார்த்துவிட்டு, அடுப்படிக்கு சென்று காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள். ஆற்றி அன்னத்தில் படாமல் குடித்தவருக்கு, அன்று காபி கொஞ்சம் கசப்பதாக தோன்றியது.

 

‘‘என்ன சிவகாமி… காபி கசக்குது சீனி போடலியா?’’ என்றார்.

 

‘‘இல்லீங்க… ரேஷன் கடையில சொல்லி, இந்த மாச 5 கிலோ சர்க்கரையையும், அடுத்த மாச 5 கிலோ சர்க்கரையையும் சேர்த்து வாங்கிக்கிறதா ஏற்பாடு பண்ணியிருக்கேன். வெளியே 20 ரூபா இல்ல விக்குது. கல்யாணத்துக்கு 10 கிலோ சர்க்கரை தேவைப்படுங்க. வீட்டுல இருக்கிற சர்க்கரைய இந்த மாசத்தில இன்னும் நாலு நாள் ஓட்டணும்ல… அதனாலத்தான் கொஞ்சமாக போட்டேன். கொஞ்சம் சமாளிச்சுங்கோங்க…’’ என்றாள் சிவகாமி.

 

மனைவியின் சிக்கனம் வியக்க வைத்தது ராகவனுக்கு.

 

சிவகாமியிடம் பிஎப்  பணம் ரூ.3.5 லட்சத்தை எடுக்க விண்ணப்பித்துவிட்டதை கூறினார்.

 

‘‘அப்படிப்பார்த்தாலும் நம்ம பட்ஜெட் படி இன்னும் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுமேங்க… என்னப் பண்ணப்போறோம்?’’ என்று கேட்டாள் சிவகாமி.

 

‘‘பார்ப்போம்…’’ என்று ஒரே வார்த்தையில் முடித்தார் ராகவன்.

 

‘‘நான் போட்டு வச்சிருக்கிற ஏலச்சிட்டில் இருந்து ஒரு 25 ஆயிரம் ரூபா எடுத்துக்கலாம்ங்க…’’ என்றாள் சிவகாமி.

 

யோசனையில் இருந்த ராகவன், ‘‘ம்…’’ என்றார்.

 

‘‘இந்த குழம்புப் பொடி, சம்பார் பொடி எல்லாம் வெளியே வாங்க வேணாம். நானே செஞ்சுடுவேன்… வழக்கமா நான் வாங்குற ரமேஷ் ஸ்டோர்லேயே அதை புக் போட்டு வாங்கிடுறேன். அதுல ஒரு அஞ்சாயிரம் மிச்சமாகும்’’ என்றாள் சிவகாமி.

 

மீண்டும் ‘‘ம்…’’ கொட்டினார் ராகவன்.

 

‘‘நம்ம பங்கஜம் மாமி வீட்டுக்காரர், டிநகர்ல இருக்கிற ராஜா கல்யாண மண்டபத்தில மேனேஜரா இருக்கிறாராம். மாமிக்கிட்ட நான் என் நிலைமையை சொல்லி ஏதாவது ஹெல்ப் பண்ணுங்கண்ணு கேட்டேன். ரெண்டு நாளா மண்டபத்தை புக் பண்றதால ஒரு 15 ரூபா டிஸ்கவுன்ட் வாங்கித்தர்றேன்னு அவங்க வீட்டுக்காரர் சொன்னாராம்… அதனால அதிலேயேயும் நமக்கு ஒரு 15 ஆயிரம் ரூபா மிச்சப்படுத்தலாம். அப்புறம் இந்த பூவுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன். மொத்தமா நம்ம பட்ஜெட்ல என்னால ஒரு ஐம்பதாயிரம் ரூபாய கம்மி பண்ண முடியுங்க…’’ என்றாள் சிவகாமி.

 

கேட்டுக் கொண்டிருந்த ராகவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் இருந்தே ஒரு பொம்மனாட்டி 50 ரூபாய சேமிச்சு தர்றேன்னு சொல்றாளேன்னு பெருமையாகவும் இருந்தது.

 

‘‘சரி சிவகாமி… விடிகாலையில கிளம்பணும்… நம்ம ஊருக்கு போய்ட்டு வர்றேன்…’’ என்றார் ராகவன்.

 

‘‘இப்ப எதுக்குங்க ஊருக்கு போறீங்க?’’

 

‘‘எல்லாம் ஒரு காரணமாத்தான். போய்ட்டு வந்து சொல்றேன்’’ என்றார் ராகவன்.

 

மறுநாள் காலையிலேயே வண்டி ஏறி ஜோலார்பேட்டைக்கு வந்துவிட்டார்.

 

தன் பெரியப்பா மகன் ராமலிங்கம் வீட்டை நோக்கி நடைப்போட ஆரம்பித்தார்.

 

அந்த காலத்தில் பெரியவர்கள் சூதுவாது இன்றி வாங்கிப்போட்ட இடம் இப்போது பாகப் பிரிவினையில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் கிடக்கிறது. இதில் தன் மீது வழக்கு போட்டிருக்கும் ராமலிங்கத்தின் வீட்டுக்குத்தான் சென்றுக் கொண்டிருந்தார்.

 

வீட்டு வாசலில் ராகவன் வந்து நிற்பதை பார்த்த, ராமலிங்கத்துக்கு அவரை வா என்று கூப்பிடுவதா, வேண்டாமா என்று குழப்பமே ஏற்பட்டுவிட்டது. வயது அடிப்படையில் இருவரும் சமம் என்றாலும், எப்போதும் மரியாதை குறைவாக பேசியது கிடையாது.

 

வாசலில் நின்றிருந்த ராகவன், தன்னைத்தான் பார்க்க வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட  ராமலிங்கம், ‘‘வாங்க’’ என்று பொதுவாக அழைத்தார்.

 

ராமலிங்கத்துக்கு அருகே காலியாக கிடந்த மோடாவில் அமர்ந்தார் ராகவன்.

 

இருவருக்கும் இடையே நேரம், ஒரு சில நிமிடங்கள் மவுனமாக கரைந்தது.

 

‘‘நல்லா இருக்கீங்களா?’’ என்று ராகவன் கேட்க, அதே நேரத்தில், ராமலிங்கமும் அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.

 

‘‘நான் இருக்கேன்… வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?’’ என்றார் ராகவன்.

 

‘‘ம்… எல்லாரும் நல்லா இருக்காங்க… அங்க ஊருல எல்லாரும் சவுரியமா?’’ என்றார் ராமலிங்கம்.

 

அதற்குள் வீட்டுக்கு உள்ளே இருந்து ராமலிங்கத்தின் மனைவி, பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்து, ராகவனை பார்த்ததும், ‘‘வணக்கம் மாமா…’’ என்றாள்.

 

‘‘வணக்கம்மா…’’ என்றார் ராகவன்.

 

அவர் உள்ளே சென்ற சில நொடிகளில் மீண்டும் மவுனம் அங்கு காய்ந்தது.

 

திடீரென ராகவன், ராமலிங்கத்தின் காலில் விழுந்தார்.

 

‘‘ராமலிங்கம்… எனக்கு வேறு வழி தெரியலை…. என்னை காப்பாத்துப்பா’’ என்று கதற ஆரம்பித்தார்.

 

‘‘ராகவன் என்ன இது… எந்திரிங்க…’’ என்று தோள்பட்டையை தூக்கி எழுப்பினார்.

 

தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து கண்ணை துடைத்துக் கொண்டார் ராகவன்.

 

தன் குடும்ப ரத்தம் கதறுவதை பார்த்து பொறுக்காமல், ‘‘என்ன ராகவன் என்ன பிரச்னை?’’ என்று ஆறுதலாக கேட்டார் ராமலிங்கம்.

 

‘‘பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் நிச்சயமாயிடிச்சு… ஆன கையில பெருசா ஒண்ணும் இல்ல… என்கிட்ட இருக்கிற ஒரே ஆதாரம் என் இடம்தான். அதுவும் கேஸ்ல இருக்கிறதால ஒண்ணும் பண்ண முடியாம இருக்கு… அந்த இடத்தை நீங்களே கூட எடுத்துக்கோங்க… எனக்கு பணம் ஏற்பாடு பண்ணிக்குடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்…’’ என்றார் மெல்லிய குரலில்.

 

‘‘வயசு முறுக்கில போட்ட கேஸ்பா அது… இப்போ எனக்கும் வயசாயிடிச்சு… என் மக கல்யாணத்தில நான் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். என்ன எனக்கு ரெண்டு பசங்க… அவங்க நல்லா சம்பாதிக்கிறதால… எனக்கு பணம் பிரச்னையா இருக்கல… ஆனா, அது உரிய நேரத்தில வந்து சேர்றதில தான், மனக்கஷ்டம் ஆயிடிச்சு… எனக்கே இந்த நிலைமைனா… நிச்சயம் நீங்க என்ன பாடு படுவீங்கன்னு என்னால நல்லாவே உணர முடியுது… கவலைப்படாதீங்க… அந்த நிலத்தை நானே எடுத்துக்கிறேன்… இன்னைக்கு ரேட்டுக்கு உங்க நிலம் மட்டும் 3 லட்சத்துக்கு போகும்…’’ என்று நிறுத்திய ராமலிங்கம், ‘‘இதே வர்றேன்’’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

 

அதற்குள் ராமலிங்கத்தின் மனைவி, மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

 

வெயிலில் நடந்து வந்த களைப்புக்கு மோர், தொண்டைக்கு இதமாக இருந்தது.

 

உள்ளே இருந்து வந்த ராமலிங்கம், ‘‘இந்தாங்க… என்னால முடிஞ்ச உதவியா ஒரு லட்சம் சேர்த்து 4 லட்சமா குடுக்கிறேன்’’ என்று இரண்டாயிரம் ரூபாய் கட்டு இரண்டை நீட்டினார் ராமலிங்கம்.

 

மீண்டும் கதறிவிட்ட ராகவன், அவரது காலில் விழப்போனார்.

 

‘‘அட என்னப்பா… இது கால்ல எல்லாம் விழுந்துட்டு, நல்லபடியா கல்யாணத்த நடத்து…  எங்களுக்கும் பத்திரிகை வை நாங்களும் குடும்பத்தோட வர்றோம்… இத்தோட நம்ம பகையும் ஒழியட்டும்’’ என்றார் ராமலிங்கம்.

 

கையெடுத்து கும்பிட்டுவிட்டு, பணத்தை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

 

ராமலிங்கம் எவ்வளவோ சாப்பிட வற்புறுத்தியும், கல்யாண வேலை இருப்பதாகக் கூறி சென்னைக்கு கிளம்பினார் ராகவன்.

 

நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.

 

ஒரு வழியாக பிஎப் பணம் வந்து சேர்ந்திருந்தது.

 

சிவகாமி சொன்னபடி, பங்கஜம் மாமியின் கணவரின் உதவியுடன், கொஞ்சம் பெயர் வாங்கியிருந்த ராஜா கல்யாண மண்டபத்தை புக் செய்துவிட்டார்.

 

இதோ இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்.

 

முடிந்த வரையில் பணம் பிரட்டியும் கூட, கடைசி நேர செலவுகள் சற்று அதிகரிக்கத்தானே செய்யும்.

 

என்ன செய்வது என்று தெரியாமல் அறையில் அங்கும், இங்கும் நடந்து கொண்டிருந்தார் ராகவன்.

 

கணவரை பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, உள்ளறைக்கு சென்றுவிட்டு, சில நிமிடங்களில் திரும்பி வந்தாள்.

 

வந்தவள் கணவனிடம் தன் தாலியை எடுத்து நீட்டினாள்.

 

‘‘என்னது…?’’ என்று புரியாமல் விழித்தார் ராகவன்.

 

‘‘நீங்க பணத்துக்கு படுற கஷ்டம் எனக்கும் தெரியுங்க… இந்த தாலிச்சரடு நாலு பவுன்… எங்கம்மா எனக்கு செஞ்சு போட்டது… இதை வித்தா இன்னைக்கு காசுல எப்படியும் ஒரு லட்சம் தேரும்… பேசாம வித்துட்டு வந்துடுங்க… நமக்கு பின்னாடி எல்லாம் நம்ம பொண்ணுக்குத்தானேங்க… இது வயசான என் கழுத்தில இருக்கிறதை காட்டிலும், அவ கல்யாணத்துக்கு உதவினா எனக்கு சந்தோஷம் தாங்க…’’ என்றாள் சிவகாமி.

 

அது சந்தோஷமா… சிவகாமியின் மீதான பாசமா என்று தெரியவில்லை. டக்கென்று சிவகாமியை கட்டிப்பிடித்துக் கொண்டார் ராகவன்.

 

கல்யாண ஜாம், ஜாமென்று நடந்தது.

 

‘‘ராகவன் கல்யாணத்தை ஜமாய்ச்சுப்புட்டீங்க… சபாஷ்’’ என்று வந்து அமர்ந்தார் ராமலிங்கம்.

 

‘‘எல்லாம் நீங்க பண்ண உதவிதாங்க… அன்னைக்கு பெருந்தன்மையா உடனடியா வழக்கை வாபஸ் வாங்கிக்கிறதுக்கும், இடத்தை நீங்களே வாங்கிக்கிறதுக்கும் ஒப்புக்கிட்டு பணம் குடுக்காம இருந்திருந்தா… இந்நேரம் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல…’’ என்று தழுதழுத்தார் ராகவன்.

 

‘‘ஆ… ஊன்னா… மறுபடியும், மறுபடியும் அதை ஆரம்பிச்சுடுவியே… அத விடுப்பா… நான் சொல்ல வந்தது வேற…’’ என்று ராமலிங்கம்.

 

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார் ராகவன்.

 

‘‘உங்களோட இடம் நாலு லட்சம் ரூபாய்க்குதான் போகுது… நான் ஒரு லட்சம் குறைச்சு சொல்லி, ஒரு லட்சத்தை சேர்த்து தர்ற மாதிரி 4 லட்சத்தை குடுத்தேன்…’’ என்றார் ராமலிங்கம்.

 

‘‘எப்படியோ… நீங்க கரெக்ட்டாதானே குடுத்திருக்கீங்க… அதுவும் சரியான நேரத்தில…’’ என்றார் ராகவன்.

 

‘‘அதில்லப்பா… கல்யாணத்தில எவ்வளவு காசிருந்தாலும் கரைஞ்சிடும். அது ஏழையில இருந்து பணக்காரன் வரைக்கும் எல்லோருக்கும் நடக்கிற விஷயம்தான். அதனாலத்தான் என்னோட ஒரு லட்சத்தை கல்யாணத்துக்கு அப்புறமா குடுக்கலாம்னு நினைச்சிட்டு, உங்ககிட்ட மாத்தி பேசினேன். இந்தாங்க… கல்யாணத்துக்கு என் மொய்யா நினைச்சிக்கிடுங்க…’’ என்று ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார் ராமலிங்கம்.

 

ராகவனுக்கு கண்ணீர் விடுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

-         ஜே.எஸ்.கே.பாலகுமார்.

07 June 2020

கோதுமை தோசை



கோதுமை தோசை சாப்பிட்டுள்ளீர்களா என்றால், பலரும் உடனே தலையாட்டுவார்கள்.
காரணம் பெரும்பாலான வீடுகளில், இட்லி மாவு அல்லது தோசை மாவு தீர்ந்துவிட்டிருந்தால், இன்ஸ்டன்ட்டாக செய்யப்படுவது மைதா தோசை அல்லது கோதுமை தோசை.
மைதா தோசைதான் பெரும்லான வீடுகளில் செய்யப்படும் . ஆனால், இது ரசித்து, ருசித்து சாப்பிடும் கோதுமை தோசை. பால்கோவா காகிதத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்சம் நஞ்சம் பால்கோவை விட்டு வைக்க மனம் இல்லாமல்,  சின்னவயதில் அப்படியே காகிதத்தை மடித்து, சாப்பிட்டு காகிதத்தை துப்பிவிடும் அளவுக்கு சுவையான ஒரு தோசை.
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே இருக்கும் ரோட்டோரக் கடைகளில் இது 2000ல் மிகப் பிரபல்யம். அல்வா துண்டுப்போல் அப்படியே நெஞ்சுக்குழாயில் வழுக்கிக் கொண்டு செல்லும். அதற்கு வழங்கப்படும் சட்னிகள் இன்னும் விசேஷம். அப்படியே பளீர் கதராடை வெள்ளையில் தேங்காய் சட்னியும், அடர்காவி நிறத்தில் தரப்படும் வெங்காயச் சட்னியும் அட, அட… ஜிகர்தண்டாவே ருசிக்கும். அதில் பாலாடை ஐஸ் போட்டால்… அப்படியிருக்கும் இந்த கோதுமை தோசை.
கோதுமை தோசையில் என்னய்யா… பெரிய வர்ணனை என்று பொதிகையில் செய்தி வாசிப்பதை நிறுத்திவிட்டு அருள்செல்வி மேடம் கேட்பது புரிகிறது. இப்போ வேண்டாம் கடைசியில் சொல்லுங்கள். இது ருசியா… இல்ல வெறும் தூசியா என்று…
கோதுமை தோசைக்கு, நல்ல சம்பா கோதுமையை எடுத்து மாவு செய்து அதில் தோசை  பதத்துக்கு தண்ணீர் ஊற்றி கொஞ்சம் நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் சூடு இறங்கி மாவு இளகும். என்னது மாவுல சூடா… என்று கத்தாதீர்கள். அது தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் மெல்லி ஹீட்தான். அதை வெளியேற்றத்தான் இந்த தண்ணீர் குளியல். குற்றாலத்தில் குளித்தவர்களுக்குத்தான்  உடல்சூடு எந்த அளவுக்கு இறங்குகிறது என்பது அனுபவப்பூர்வமாக உணர முடியும் (அதுக்காக குற்றாலத்துக்கு போய் குளிச்சிட்டாயா வர முடியும்…?).
அது ஊறும் வேளையில் சட்னியை தயார் செய்துவிட முடியும். தேங்காய் சட்னி என்றால், தும்பைப்பூ வெள்ளையில் இருக்க வேண்டும். அது எப்படிய்யா… நானும் பல தடவை முயற்சி பண்றேன்… அது எப்பவுமே கொஞ்சம் வெளிர் பச்சை நிறத்தில்தான் வருதுன்னு பல பேர் சொல்வார்கள். நீங்கள் மிக்சியில் அரைப்பதால் வரும் வினை இது. இதுக்கும் வழி இருக்கிறது.
தேங்காயை சட்னி செய்யும்போதுதான் உடைக்க வேண்டும் (இப்போ உன் மண்டையிலேயே உடைக்கப்  போகிறேன் என்று கத்தாதீர்கள். பலர் பிரிட்ஜில் வைத்திருப்பதை உபயோகிப்பார்கள். அவங்களுக்காக பாஸ்…). உடைத்த தேங்காயை பத்தை போட்டு அதன் பின்புறத்தில் உள்ள கருப்பு நிற தோலை கத்தியைக் கொண்டு சீவி விடுங்கள். அரை முடி தேங்காய் போட்டால், உள்ளங்கையில் அள்ளி சாப்பிடும் அளவுக்கு மட்டுமே பொட்டுக்கடலையை போட வேண்டும். அதிகம் போட்டால் சுவை, வனவாசம் போய்விடும். கொஞ்சமாக போட்டு மூன்று முதல் நான்கு பச்சை மிளகாயை  போடலாம். அத்துடன் ஒரு துண்டு இஞ்சி. போட்டுவிட்டு ஒரு சில ஐஸ் துண்டுகளை போட்டு மிக்சியில் ஆட்டுங்கள். நடுவில் மூடி திறந்து, தேவையான அளவு உப்பை கையில் எடுத்து போடுங்கள். சமையல் என்பது புடிச்சு செய்யும் விஷயம். அப்படி புடிச்சு செஞ்சா… புடிச்சவங்ககிட்ட இருந்து, புடிச்சது கிடைக்கும். இல்லாட்டி, திட்டுதான் கிடைக்கும். உப்பு என்பது லட்சுமிக்கு சமம். அதனால் தெய்வத்தை மதித்து கையில் எடுத்து போட வேண்டும். அப்போதுதான் சுவையும் கூடும். பச்…னு சுவையாகவும் கிடைக்கும்.
பழங்காநத்தம் பகுதியில் ஆபிஸ் எதிரே ஒரு டீக்கடையில் தினமும் ஒரு மாஸ்டர் காராச்சேவு மற்றும் பக்கோடா 5 கிலோ என்ற அளவில் போடுவார். ஒரு டீயும் 2 ரூபாய் காராச்சேவும் வாங்கிச் சாப்பிட்டால், சும்மா அப்படி இருக்கும். அவர் போடும் அத்தனை சேவும், பக்கோடாவும் ஒரு பொட்டு இல்லாமல் தீர்ந்துவிடும். கடைசியில்  மிஞ்சும் கருகிய பக்கோடாவை வாங்குவதற்கு கூட தேடி வருவார்கள் என்றால்  எவ்வளவு ருசியாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
அவரிடம் ஒரு முறை கேட்டேன். ‘‘அது எப்படி உங்கது மட்டும் இவ்வளவு ருசி. பக்கத்து கடையிலும் போடுறாங்க… ஆனா விக்க மாட்டேங்குதே…’’ என்று கேட்டேன்.
படாரென்று மனுஷன் உப்பு பாக்கெட்டை தூக்கி காண்பித்தாார். ‘‘இதுதான் தம்பி காரணம். இந்த லட்சுமியை கரெக்ட்டா போட்டா சாதாரணமாக இருக்கும். திட்டு கிடைக்காது. பாராட்டும் கிடைக்காது. ஆனா, கரெக்ட்டான ருசியை விட ஒரு சிட்டிகை கூடப்போட்டோம்னு  வச்சுக்கோங்க… அம்புட்டு ருசியா இருக்கும். ஸ்வீட்லயும் இதுதான் காரணம். இந்த சிட்டிகையை கூடுதலா போடுறதிலதான் பலபேர் கோட்டை விட்டுடுறாங்க… லட்சுமி கையில அள்ளிப்போட்டா… நமக்கே தெரியும்… இல்ல… இன்னும் கொஞ்சூண்டு போடலாம்னு அதுவே நமக்கு சொல்லும்…. இனிமே வீட்டு நீங்க செய்றப்போ போட்டுப்பாருங்களேன்…’’ என்றார்.
இன்று வரையில் மாஸ்டர் சொன்னதைதான் பின்பற்றுகிறேன்.
அப்புறம் விஷயத்துக்கு வருவோம். ஏன்யா.. சட்னியில ஐஸ் போட்டேன்னு ஸ்ரீதர் கேட்கிறார். மிக்சி சூட்டில தேங்காய் லேசா வெந்தாலும் அதுல இருந்து எண்ணெய் வெளியே வந்துடும். அது வராம தடுக்கவே இந்த ஐஸ். ஜல்ப் பிடிக்கும் என்று  நினைப்பவர்கள் மிக்சியை சிறிது, சிறிது நேரமாக அரைத்தாலும் தகும்.
அடுத்தது வெங்காயச்சட்னி. நாலு வெங்காயம் மூணு தக்காளி, பளிங்கு சைசில் புளி, 4 மிளகாய், கொஞ்சூண்டு வெல்லம், 4 பத்தை தேங்காய் போட்டு ஐஸ் போட்டு அரைத்தால் வெங்காயச் சட்னி ரெடி. தமன்னாவையும், டயானா ஹெய்டனையும் பார்த்த மாதிரி இருக்கும் (சும்மா கொளுத்திப்போடுவோம்). இதில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு, ஒரு மிளகாய் (ரெண்டு மூணாக ஓடித்தது), கறிவேப்பிலை, உளுந்து போட்டு தாளித்து சமமாக இரு சட்னியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
அது வெங்காயம். ரேஷன் கடை அரிசியை என்றைக்காவது வடித்திருக்கிறீர்களா? (யோவ்… வர , வர உமக்கு ரொம்ப குசும்பு ஆயிடிச்சு… நான் ஏன்யா ரேஷன் கடை அரிசியை வடிக்கணும்னு… சைதாப்பேட்டையில் இருந்து கீதா அவர்கள் கத்துவது கேட்கிறது…) வடித்து பார்த்தவர்களுக்கு தான் அது எவ்வளவு பெரிய சைசில் இருக்கும் என்பது தெரியும். அந்த அளவில் பெரிய வெங்காயத்தை மிக  பொடியாக சோறு சைசில் அரிந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல் ஏற்கனவே தோசைக்கு பழகிய கல்லாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் நான் ஸ்டிக்காக இருக்க வேண்டும். சாதாரண தோசை  அளவில் சுட்டால், அது ஸ்பெஷலாக இருக்காது. இது தவா முழுவதும் பரவும் அளவில் பெரிய தோசையாக இருக்க வேண்டும். அப்படி சுட்டு கொஞ்சம் வெந்து வரும்போது வெங்காயத்தை ஒரு இன்ச் தோசையில் நான்கு முனைக்கு நான்கு நடுவில் என்ற அளவில் சரியாக எல்லாப் பகுதியிலும் தூவப்பட்டு, தோசைக்கரண்டியால் மிக லேசாக அழுத்திக் கொடுங்கள். காதலியின் கன்னத்தை தொடுவதுபோல் (இப்போ நான் காதலிக்கு எங்கேய்யா… போவேன்…?)
நெய் அல்லது நல்லெண்ணெய்யை சுற்றிலும் ஊற்றி, நடுப்பகுதியிலும் கொஞ்சம் தெளித்து விட வேண்டும். ரூ.1000 வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டவர்களுக்கு நெய்யும் கிடைக்காது, நல்லெண்ணெய்யும் கிடைக்காது. இது சாபம் அல்ல. விதி. நேர்மையாக இருப்பவர்களுக்கு மட்டுமே நல்லது வாய்க்கும். இல்லாட்டி தரங்கெட்ட பாமாயில்தான்.
மாவு உறைந்து வெள்ளை மாறும்போது அப்படியே அலேக்காக வலிக்காத அளவுக்கு தூக்கி திருப்பி போட்டு மீண்டும் ஒரு முறை திருப்பி போட்டு சில விநாடிகள் மட்டும் விட்டு தட்டி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு விள்ளலாக கிள்ளி அதை தேங்காய் சட்னி மற்றும் வெங்காயச் சட்னியுடன் தொட்டு வாயில் போடுங்கள். தேங்காய்ச் சட்னியின் இதமான சுவை நாக்கில் பட்டு உணரும்போதே… சுர்ரென்று வெங்காயச் சட்னியின் காரம் சற்றே உணர்வீர்கள். அதற்குள் உங்கள் நாக்கு தோசை, மாவு மில் இயந்திரம்போல் முன்னும்  பின்னும் இயங்கி தோசை பல்லுக்கு கீழே தள்ளிவிட்டிருக்கும். அந்த பல்லியில் இடுக்கில் தோசை அழுத்தப்படும்போது, அதில் இருக்கும் வெங்காயம், வெளியே தள்ளப்பட்டு,  நாக்கால் இடதுபுறம் தள்ளப்படும். அங்கு வெங்காயம் அரைபடும். அந்த தருணம் இருக்கிறதே… உணர்ந்தவர்களுக்குத்தான் தெய்வம்.
- ஜே.எஸ்.கே.பாலகுமார்.