12 June 2020

தேக்கு மேஜை

தேக்கு மேஜை

-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.

 

‘‘கெழத்துக்கு இதே வேலையா போச்சு… எல்லா பழசையும் வச்சுக்கிட்டு அறழும். இடம் அடைக்குதுன்னு, ரூம்ல கிடக்கிற மேஜையை விக்கலாம்னா… அது மாமனார் பயன்படுத்தினது… உசுருமாதிரின்னு ஏதாவது சொல்லி தடுக்குது… இதுக எல்லாம் இன்னும் எதுக்காக உயிரோட இருந்து, எங்க உசுர வாங்குதுகளோ…’’ வார்த்தைகளில் நெருப்பள்ளிக் கொட்டினாள் ரோசி.

 

கேட்டுக் கொண்டிருந்த கணவன் ஜோசப், ‘‘மெதுவா பேசுடீ… அம்மாவுக்கு கேட்டுட போகுது…’’ என்று மெதுவாக பேசினான்.

 

‘‘ஆமா… கேட்டுட்டாலும் அப்படியே… நாண்டுக்கிட்டு செத்துடப் போறாங்க… போய்யா… நீயும்… உன் நொம்மாவும்… இதப்பாரு… இன்னும் ரெண்டு மூணு நாள் தான் பார்ப்பேன். நீ என்ன பேசுவியோ, சமாதானம் பண்ணுவியோ எனக்கு தெரியாது. ரூம்ல அடைஞ்சு கெடக்கிற அந்த ஐந்தடி மரமேஜையை உடனடியா வித்துடு. இல்லாட்டி, பழைய சாமான்காரன்கிட்ட கூப்பிட்டு சும்மாவே குடுத்திடுவேன்…’’ என்று கூட்டிக்கொண்டிருந்த விளக்குமாற்றை இடதுகையால் தட்டிக்கொண்டே முறைத்தாள் ரோசி.

 

அவளைப்பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் ஜோசப்.

 

உள்ளே உட்கார்ந்திருந்த மேரிக்கு, மருமகளின் பேச்சும், அவளை அடக்க முயலும் மகனின் பேச்சும் கேட்காமல் இல்லை.

 

தேக்கு மேஜை அருகே உட்கார்ந்திருந்த மேரி, மெதுவாக அதை தொட்டுப்பார்த்தாள். பழைய நினைவுகள் ஏனோ நிழாலடின.

 

‘‘மேரி… ’’ என்று கணவர் மைக்கேல் கத்தும் சத்தும்கேட்டு ஓடோடி வந்தாள்.

 

‘‘இந்த மேஜையில யார் பிளிச்சின் பாக்கெட்டை வச்சது?’’ என்று மீண்டும் கத்தினார்.

 

‘‘நான்தாங்க…’’ என்று மென்று விழுங்கினாள் மேரி.

 

‘‘அறிவிருக்கா உனக்கு… இது என் உசுரு மாதிரி… இதுல போய் பிளிச்சின் பாக்கெட்டை வச்சிருக்கே… எங்க வீட்டுல எழுதுறதுக்கு ஒரு டேபிள் கூட கிடையாது. அதனால சின்ன வயசில இருந்தே வைராக்கியமா இருந்து முதல் மாச சம்பளத்தில ஆசை, ஆசையா செஞ்சு வாங்கின மேஜை இது. அதை கவுரப்படுத்த முடியலேன்னா கூட பரவாயில்ல. இந்த மாதிரி பிளிச்சின் பாக்கெட், பாத்ரூம் கழுவுற பிரஸ்னு வச்சு, என் டேபிளோட மரியாதைய கெடுக்காதே… திரும்பவும் சொல்றேன், அது என் உசுரு மாதிரி. புரியுதா…?’’ என்று கத்தினார்.

 

புரிந்தது என்பதுபோல் தலையை ஆட்டினாள் மேரி.

 

அதில் இருந்தே மேரிக்கும், அந்த டேபிள் மரியாதைக்குரிய ஒரு விஷயமாகி போயிருந்தது. கணவர் வெளியே போயிருக்கும் நேரத்தில் துடைத்து சுத்தப்படுத்தி வைப்பாள்.

 

பத்திரிகையாளனாக வேலைப்பார்த்த அவளது கணவர், அந்த டேபிள்தான் கதை, கட்டுரைகளை எழுதுவார். அவர் இருந்தவரையில் அந்த டேபிளுக்கும் மிக கவுரவம் இருந்தது. அதன்பின்னர் மரியாதைக்குரிய அலங்காரப் பொருளாக மாறினாலும், மருமகள் வந்த பின்னர் தினமும் அதற்கு அர்ச்சனை விழுவது என்பது வாடிக்கையாகிவிட்டது.

 

ஐந்தடி நீளம், மூன்றடி அகலத்தில் பிரம்மாண்டமான டேபிள் அது. அறையில் அது இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால், கணவர் உயிராய் மதித்த ஒரு பொருள், மெல்ல, மெல்ல தன் உயிரிலும் கலந்துவிட்ட ஒரு பொருளை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுத்தர மேரிக்கு முடியவில்லை.

 

தினமும் ஏசு படத்துக்கு முன்பு அமர்ந்து, ‘‘இவர்கள் செய்யும் பாவங்களை மன்னித்துவிடும் எம் தந்தையே. விரைவில் உங்கள் காலடியில் எனக்கு இடம் தாருங்கள்’’ என்று மனமுருக வேண்டுவாள்.

 

அன்று மருமகளின் பேச்சில் ஆத்திரம் எல்லை மீறியிருந்ததை மேரி கவனிக்க தவறவில்லை. இனி இந்த மேஜைக்கு அவள் எப்படியும் இடம் தரமாட்டாள் என்று புரிந்து போனது.

 

ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் எழுந்தாள். கணவரின் கதைகளுக்காக வரும் ராயல்டி தொகைதான் அவ்வப்போது அவளது செலவுக்கு உதவிக் கொண்டிருந்தது. அதை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள். வழக்கமாக இந்த நேரத்தில் அவள் சர்ச்சுக்கு செல்வது வழக்கம். சர்ச்சுக்கு சென்றுவிட்டு, அப்படியே இமானுவேல் ஆசாரியை பார்த்துவிட்டு வந்தாள்.

 

அவள் சொல்லி வைத்ததுபோல், அன்று மாலையே இமானுவேல் இரண்டு ஆட்களுடன் வந்தார்.

 

‘‘அம்மா… கட்டாயம் எடுத்துட்டுத்தான் போகணுமா?’’ என்றார்.

 

‘‘அய்யாவுக்காக நானே ஆசையா பண்ணிக்குடுத்ததும்மா… அவருக்கும் எனக்கும் ஒரு ரெண்டு, மூணு வயசுதான் வித்தியாசம். அவர் எழுதுறதுக்குன்னு ஆசையா வந்து கேட்டப்போ… அவருக்காகவே ஆணியே அடிக்காம பண்ணிக்குடுத்த மேஜைம்மா அது’’ என்றார் இமானுவேல்.

 

கண்ணில் வடியும் கண்ணீருடன், மேஜையை நோக்கி கைக்காட்டி எடுத்துப்போகுமாறு சைகை காட்டினாள் மேரி.

 

பார்த்துக் கொண்டிருந்த ரோசிக்கு சந்தோஷமாக இருந்தது. ‘‘கெழவியே ஒரு வழியா ஆசாரிக்கிட்ட வித்துடுச்சுபோல… எப்படியோ ஒழிஞ்சா சரி’’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

பேரன் பிரான்சிஸ்தான் அழுதான். ‘‘அம்மா… நான் ஹோம்ஒர்க் செய்யணும்னா… அதுல தான உட்கார்ந்து செய்வேன்… அதைப்போய் எடுத்துட்டு போறாங்களேம்மா…’’ என்று கத்தினான்.

 

ஆனால், அவனை முதுகில் அடித்து உள்ளே கூட்டிக் கொண்டு போனாள் ரோசி.

 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

 

பிரார்த்தனைக்கு குடும்பத்தோடு அதிகாலையில் கிளம்புவது வழக்கம். எல்லோரும் தயாராக இருக்க, அம்மாவை காணாத நிலையில், ஜோசப் அம்மாவின் அறைக்கு சென்றான். அங்கு ஏசுவின் படத்துக்கு முன்பு ஜெபமாலையுடன் தூங்கிக் கொண்டிருந்தாள் மேரி.

 

‘‘அம்மா…’’ என்று தோள்பட்டையில் தட்டினான்.

 

ஆனால், அவள் தலை சாய்ந்து தொங்கியது கண்டதும், பதறிவிட்டான் ஜோசப். டாக்டரை அழைத்து சோதித்துபார்த்தான். எல்லாம் முடிந்துவிட்டிருந்தது. இரவு முழுவதும் ஜெபம் செய்துக்  கொண்டிருந்த நிலையிலேயே தாயின் உயிர் பிரிந்துவிட்டது தெரியவந்தது.

 

சொந்தபந்தங்கள் எல்லாம் வந்து பார்த்தாகிவிட்டது. இதோ எல்லாம் ஆகிவிட்டது.

 

குழிக்குள் மேரியின் உடல் அடங்கிய பெட்டி இறக்கப்படுவதற்கு முன்பு புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மா எப்போதும் ஆசையாக வைத்திருக்கும் கையடக்க பைபிளையும், அவளது ஜெபமாலையையும் தாயின் உடலின் மீது வைத்தான் ஜோசப்.மூடி மூடப்பட்டது.

 

அதன் மேலே, ‘‘அம்மாா, அப்பாா’’  என்று குழந்தையின்  கையால் செதுக்கப்பட்ட எழுத்துக்களும், கோட்டோவியமும் இருந்தது.

 

அது சிறு வயதில் தன் கையால் காம்பஸ் கூரால், வீட்டில் இருந்த அப்பாவின் மேஜையில் தான் எழுதிய எழுதுக்கள்.

 

அருகில் இருந்த இமானுவேல் தலையில் அடித்துக்கொண்டு அழுதுக் கொண்டிருந்தார்.

 

ஜோசப்பின் கதறல் விண்ணை பிளந்துக் கொண்டிருந்தது.

-          ஜே.எஸ்.கே.பாலகுமார்.


No comments:

Post a Comment

Thanks